4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

பட்டப் பகலில் ஒரு நெட்டைக் கனவு - சுரேஜமீ மஸ்கட்

 

பட்டப் பகலில் ஒரு நெட்டைக் கனவு

 

காலைக் கதிரோடு கானம் பேச

    கவலை பறந்தோடக் கனவு கண்டேன்

மாலை பறவைகளோ மயங்கல் இசைக்க

    மதியும் தனைமறைந்தே மறையக் கண்டேன்

சோலை மலர்களெலாம் சொக்கி நின்றே

    சுகந்தம் பரப்பிடவே நானுங் கண்டேன்

வாலைக் குமரியவள் வந்தாள் முன்னே

    வானம் வசப்படவே வளத்தைக் கண்டேன்

 

மறையோர் நெறிவழியே வாழக் கண்டேன்

     மறைகள் முழங்கிடவே நாளுங் கண்டேன்

முறையாய்த் தமிழ்வளர்க்கும் மூத்தோர் கண்டேன்

     முகிலும் முதிர்ந்திங்கே மொழியக் கண்டேன்

இறையின் அருளிங்கே இறங்கக் கண்டேன்

     இன்பம் விளைவதையே எங்கும் கண்டேன்

உறவில் திளைத்திங்கே உருகக் கண்டேன்

    உருவம் அனைத்திலுமே ஒருவன் கண்டேன்

 

வேலை வணங்குகின்ற மரபு கண்டேன்

     வேண்டும் வரங்களுமே விளங்கக் கண்டேன்

பாலை பசுஞ்சோலை ஆகக் கண்டேன்

     பசுமைத் திசையெங்கும் பரவக் கண்டேன்

வேலை மதிப்பிங்கே விளையக் கண்டேன்

     வீணர் இலையென்ற விதியும் கண்டேன்

கோலன் மரபுவழிக் கொளவே கண்டேன்

     கொடையும் சிறந்திங்கே ஓங்கக் கண்டேன்

 

கல்வி சிறந்தோங்கும் கலையைக் கண்டேன்

     கற்றோர் ஒழுங்காக நிற்கக் கண்டேன்

இல்லை எனுஞ்சொல்லே இல்லாக் கண்டேன்

     இன்னா நவிலாது இருக்கக் கண்டேன்

இல்லம் விழுதென்றே எண்ணக் கண்டேன்

      இனமும் எழுந்திங்கே இசைக்கக் கண்டேன்

செல்லும் வழியெங்கும் செழுமை கண்டேன்

      செல்லா விடத்தினிலும் சிறப்பே கண்டேன்

 

கவிஞர் குழாமிங்கே களிக்கக் கண்டேன்

     காதல் மணம்பரப்பும் கனியர் கண்டேன்

செவியின் திறனிங்கே சிலிர்க்கக் கண்டேன்

     செப்பும் மொழியெலாம் செந்தேன் கண்டேன்

தவிப்பே இலையிங்கே தகைமை கண்டேன்

     தாழ்வும் உயர்வுமிலாத் தன்மை கண்டேன்

புவியே புகழ்கின்ற புனிதம் கண்டேன்

     புதுமை படைத்திட்ட உலகைக் கண்டேன்

 

அள்ளக் குறையாத வளமே கண்டேன்

    ஆடி மகிழ்கின்ற மழலை கண்டேன்

வள்ளல் மனமதுவே வாழக் கண்டேன்

     வாழும் உயிர்களையே வணங்கக் கண்டேன்

துள்ளிக் குதிக்கின்ற பூவைக் கண்டேன்

     தூர ரசிக்கின்ற நாணல் கண்டேன்

 எள்ளி நகையாடா இயல்பைக் கண்டேன்

     இறைவன் இருக்கின்ற இடமே கண்டேன்!

 

பட்டப் பகலிதினில் நானுங் கண்ட

     நெட்டைக் கனவென்றே எண்ணி விடாதீர்

எட்டிப் பிடித்திடலாம் இவைகள் நாமே

     இயைந்தே இசைத்திட்டால் உலகில் இன்றே

கட்டி அணைத்திட்டே கயமை ஒழித்தால்

     கல்லும் கனிகின்ற நிலமும் இதுவே

தட்டிப் புகழ்சேர்ப்போம் தரணி செழிக்க

     தமிழர் நமைப்போற்றும் நாளும் வருமே!

 

சுரேஜமீ

மஸ்கட்