4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

வள்ளுவப் பிரகாசர் - முனைவர் மு.துர்க்கா

 

 

வள்ளுவப் பிரகாசர்

முனைவர் மு.துர்க்கா

உதவிப்பேராசிரியர்- தமிழ்த்துறை

சோனா கலை அறிவியல் கல்லூரி

சேலம் - 636 005

6384191957 

durga2906@gmail.com 

முன்னுரை

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை

சிவத்தின் மேல் வேறு தெய்வம் இல்லை

என்னும் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர். ஒருவர் தென்திசையில் ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் தோன்றிய குமரகுருபரர். மற்றொருவர் வடதிசையில் காஞ்சிபுரம் என்னும் ஊரில் தோன்றிய சிவப்பிரகாசர். இவர்களின் சமயப்பணியும் தமிழ்ப்பணியும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சிறப்பித்துக் கூறலாம். 

இவர்களுள் இரண்டாமவராகிய சிவப்பிரகாசர் தமிழ் வடமொழி,கன்னடம், தெலுங்கு ஆகிய பன்மொழிப்புலமை கொண்டவராகவும் பல்துறை வித்தகராகவும் விளங்கிய பெருமைக்குரியவர். எந்நாட்டவர்க்கும் ஏற்ற அறிஞரான வள்ளுவரின் கருத்துக்களில் மனம் வைத்தவர் வீரசைவ மரபில் தோன்றிய சிவப்பிரகாசா.; அவர்தம் படைப்புகளில் திருக்குறளை மிகுதியும் பயன்படுத்திய சிறப்பினை இக்கட்டுரை எடுத்தியம்புவதாக அமைகிறது.

வள்ளுவரை ஆராதிக்கும் திறம்

                வள்ளுவரைப் புகழாத புலவன் இல்லை. அவ்வகையில் துறவுநெறி நின்ற சிவப்பிரகாசர், இல்லறநெறி நின்ற வள்ளுவர் பற்றித் தம் நூல்களின் வாயிலாகப் பின்வருமாறு பல பெயர்களால் நாவாரப் போற்றுகிறார்.

புலவர்’ (திருவெங்கைக் கோவை, பா.386)

தெய்வப் புலமை திருவள்ளுவனார்’ (நால்வர் நான்மணி மாலை, பா.28)

அறஞ்சூழ்ந்தோர்’ (பிரபுலிங்கலீலை, மாயையின் உற்பத்தி, கதி.14)

பெரியோர்’ (பிரபுலிங்கலீலை, அக்கமாதேவி உற்பத்தி, கதி.20)

கற்றுணர் பழையோர்’ (பிரபுலிங்கலீலை, சித்தராமையர், கதி.42)

ஆற்றல் பெரியோர்’(சிவஞான பாலைய தேசிகர் பிள்ளைத்தமிழ், தாலப்பருவம்,பா.1)

அறத்தூய்மை உணர்ந்தவர்’ (திருவெங்கைக்கோவை, பா.211)

இணையில் திருவள்ளுவப் பெயர்கொள் எம்மான்

(சிவஞான பாலைய தேசிகர் பிள்ளைத்தமிழ், முத்தப்பருவம், பா.4)

வாய்மையால் சிறப்பவர்’ (பிரபுலிங்கலீலை, சித்தராமையர், கதி.27)

என்னும் பல சிறப்புப்பெயர்களால் திருவள்ளுவரைப் போற்றுகிறார்.        

திருக்குறளைப் போற்றுதல்

     தமிழ் மறையாகிய திருக்குறளைச் செஞ்சொல் என்றும், நவத்தமிழ் வேதம், என்றும் கூறுகிறார். 

                தமிழுலகில் இதுவரை இவரைப்போல் திருக்குறறைக் கையாண்டதில்லை.  ஏறத்தாழ 70 இடங்களில் தாம்பாடிய இலக்கியங்களில் இடம்பெறச் செய்துள்ளார்.  

சிவனின் திருவடி

                சிவப்பிரகாசர் திருக்குறளில் காணலாகும் குறளமைப்பினைக்கண்டு தம் கற்பனை சிறக்கப் பாடுகிறார்.  முதலடியால் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் திகழ்வதனை உற்றுநோக்கிய சிவப்பிரகாசர் சைவப்பற்றின் மிகுதியால் தாம் போற்றி வழிபடும் உமையொருபாகனின் திருவடியாகக் காண்கிறார். வள்ளுவரை என்னடிகள்என்று உரிமையுடன் சுட்டியிருக்கிறார் என்பதைத் திருவெங்கைக் கலம்பகம் உணர்த்துகிறது.

என்னடிகள் வெண்குறணே ரடியி ரண்டு மென்தலையி

        லிருத்துமிறை வெங்கை நாட்டின்

முன்னடிக ளிரண்டுநெடி லடிகள் பின்னர்

   முயங்கடிக ளிரண்டுநே ரடிக ளாகப்

பன்னடிக ளொருநான்கு கொடுந டக்கும்

   பழுதகல்வெண் டுறைபோலப் படரீத லாலே

பின்னடிக ளெங்கடிரு வடிகன் முன்னர்

   பெயர்ந்தவடி முயழிலிளஞ்சே யடிக ளாமே1.

திருமாலின் அவதாரங்கள்

                பூமலி உலகில் தவமும் அறமும் நிலைக்கவேண்டியும் அதர்மத்தை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அடியார்களைக் காத்து அருள்புரிவதற்காகவும் காக்கும் கடவுளாகிய திருமால் கடவுள் நிலையிலிருந்து பல்வேறு உயிரினங்களின் தோற்ற வடிவமாகத் தோன்றுகிறார்.  அவ்வகையில் பத்துநிலைகளில் உலகத்து உயிர்களை உய்விப்பதற்காகத் திருமால் பத்து அவதாரம் மேற்கொண்டார். பலவகையான அவதாரங்கள் இருந்தாலும் பத்து அவதாரங்கள் மட்டுமே மிகச் சிறப்பாக  அனைவராலும் போற்றப்படுகின்;றது.

                மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம் பரசுராம அவதாரம் ராம அவதாரம் பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் கல்கி அவதாரம் முதலிய பத்துஅவதாரங்களாகும்.

                ஒரு கருத்தை நிலைநிறுத்த பத்துக் குறட்பாக்களைக் கூறினார். அதுபோல உலக உயிர்களைக் காப்பாற்ற, காக்கும் கடவுளாகிய திருமால் பத்து அவதாரம் எடுத்துக் காட்டியதைச் சிவப்பிரகாசர் தாம் பாடிய நூலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.  

வற்புறுத்த ஓர்பொருளை வள்ளுவனார் பத்துமுறை

சொற்பொருத்தி ஓதும் துணிவுபோல் - தற்பதத்தால்

ஓதும் பிரமனொரு தானென்ப தொன்றனைமால்

காதுபவம் பத்தெடுத்துக் காட்டினோன்”2.

என்னும் அடிகளில் பத்துக்குறள்களையும் திருமாலின் பத்து அவதாரங்களாகக் குறிப்பிடுகிறார்.

குறள் ஆளுமை

                திருவள்ளுவரின் மீதும் திருக்குறளின் மீதும் அளவுகடந்த பற்றினால் தாம் பாடிய நால்வர் நான்மணிமாலையில்  ஓர் அதிகாரத்தில் இடம்பெறும் முழுக்குறளை  அப்படியே முழுமையாகக் கையாண்டுள்ளார்.  குறிப்பாக கயமை என்னும் அதிகாரத்தில் இடம்பெறும் நன்றறிவாரில் என்னும் திருக்குறளை, சமயக்குரவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் இடத்தில் முழுக்குறளையும் சிதைவுபடாமல் கருத்தொன்றும் வகையில் பாடியிருப்பது போற்றத்தக்கது. அப்பாடல்

தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்

 நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்

 நெஞ்சத் தவல மிலரெனும்

 செஞ் சொற் பொருளின் தேற்றந் தேனே” (பா.28)

 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

 நெஞ்சத் தவல மிலர்  (குறள் 1072 )

என்பது குறட்பா.

குறளின் தொடர் ஆளுமை

                திருவள்ளுவத்தில் மனம் ஒன்றிய சிவப்பிரகாசர், முழு குறளை முழுதும் எடுத்தாண்டது போல, குறளில் இடம்பெறும் தொடரையும் பயன்படுத்தியுள்ளார். இத்தொடரைக் கையாளும்போது கருத்தும் குறள் தொடரும் பொருத்தமாகும்படி பாடுவதில் இவருக்கு நிகர் இவரே ஆவார்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளத்து ஒருநோக்கு

நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து” (குறள். 1091)

என குறிப்பறிதல்சிவப்பிரகாசர்,

பாயும் மலர்த்தண் பொழில்சூழம் வெங்கைப் பழமலைசீர்

ஆயும் முனிவரர் தாமே முனிவுஅருள் ஆக்குதல் போல்

நோயும் அந்நோய்க்கு மருந்தும் தராநிற்கும் நூற்பகவின்

நோயும்மருங்குல் பெருமலை மாதர்திருக்கண்களே3.(திருவெங்.கோவை, பா.5)

என்கிறார்.

                 சாபமும் சாப நீக்கமும் முனிவர் செய்வதுபோல தலைவியின் கண்கள் துன்பமும், துன்பத்தைப் போக்கும் மருந்தாக இருக்கிறது என்று விளக்குகிறார்.

 வான்நோக்கி வாழும் உலகு’4. என்று வள்ளுவர் கூறியிருப்பதைச் சிவப்பிரகாசர் வான்நோக்கி நிற்கும் பைங்கூழ்’ (திருவெங்கைக்கோவை, பா.41) என ஆண்டுள்ளார்.

                அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

                அடிக்கு நெருஞ்சிப் பழம்’(குறள்.1120)

எனவரும் மாதரடியின் மென்மையினை,

                அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிமலர்க்குச்

                சனித்த நெருஞ்சிப் பழம்’ (திருவெங்கைக்கோவை, பா.310)

என்று சிவப்பிரகாசர் காட்டுகிறார்.

திருக்குறளின் கருத்தைக் கூறுதல்

                கருத்து, கற்பனை, வடிவம், உவமை முதலான செய்திகள் ,புலவர்கள் தாம் இயற்றும் இலக்கியத்திற்கும் அல்லது பாடல்களுக்கும் இன்றியமை யாதவைகளாகின்றன. பாடுகின்ற பாடலுக்கு அரண் சேர்க்கும் வகையில் வள்ளுவரின் கருத்துக்களை அப்படியே பயன்படுத்தியுள்ளார். இத்தகு சீர்மையைச் சிறப்புறப் பாடுவதில் சிவப்பிரகாசர் ஒருவரே என்பது தமிழுலகம் நன்கறியும்.

                இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண,

நன்னயம் செய்து விடல் (குறள் 314 )

                தீமை செய்தவருக்கும் நன்மை செய்’ (குறள்.314)

என்னும் கருத்தை

                மின்னா கிய செஞ்சடையார் திருவெங்கை வெற்பிலுனை

                யுன்ன தகன்றவர் வந்தார்  அவர் செயல் உன்னலை நீ

இன்னா செய்தாரை யொறுத்திடின் நன்மை யியற்றுகெனச்

சொன்னார் புலவர்  அறிந்திலை யோபொற்; சுடர்த்தொடியே   (திருவெங்கைக்கோவை, பா.387)

என அழகுற அமைத்திருக்கிறார்.

                கண்ணுடையர் என்பவர் கற்றோர்’ (குறள். 393) என்பது குறள். தலைவன் ஓதற்பிரிவு மேற்கொண்டதைச் சிவப்பிரகாசர்

 கண்ணுடை யார்கற் றவரேகல் லார்கள் முகத்திரண்டு

  புண்ணுடை யாரெனக் கூறிநம் காதலர் போயினரே’ (திருவெங்கைக்;கோவை, பா.409)

நட்பின் (குறள். 788) முக்கியத்துவத்தை,

கடுக்கை யணிந்த முடியோன் திருவெங்கைக் காரிகையாய்

உடுக்கை யிழந்தவன் கையோர் பொருளை ஒழித்ததனைத்

தடுக்கை விரைந்தது போல்நட்ட வேந்தன் தனக்குதவி

அடுக்கை விழைந்து நினைவிடுத் தார்நட் பறிந்தவரே   (திருவெங்கைக்கோவை, பா.417)

என புலப்படுத்துகிறார்.

                இதே கருத்தைப் பிரபுலிங்க லீலையில்,           

                பொடிய ணிந்தெழில் பொங்குறும் அல்லமன்

                அடியர் தங்கள் அகத்தின் துயரினை                

                உடையிழந்த ஒருவன் கரமெனக்

                கடிதடைந்து களைந்தருள் செய்யுநாள்’(முத்தாயியம்மை கதி, பா.2)

 

புலவர்கள் பன்னூற்புலமையும் இலக்கிய ஆளுமையும் கொண்டவராகத் திகழ்வார்கள் என்பது யாவரும் அறிந்ததே.  அவ்வகையில் சிவப்பிரகாசர் திருவள்ளுவரின் திருக்குறளை முழுமையாகவும் தொடராகவும் கருத்தாகவும் எடுத்தாண்டு தமிழுக்குப் பெருமை சேர்த்தார். அதுமட்டுமல்லாமல்திருக்குறளில் இடம்பெறும் சொல்லையும் பொருளையும்  குறளுக்கு உரை வழங்குபவரின் திறனையும் எடுத்தாண்டு, புதுவிதமான தாக்கத்தையும் புதிய மாற்றத்தையும் படைத்துள்ளார். 

குறளின் சொல் ஆளுமை

                இரக்க இரத்தக்கார்’ (குறள். 1051) என்பதற்கு வரந்தாழ் இயற்கண் மடமாது இரத்தக்கார்’ (திருவெங்கைக்கோவை, பா.6) என பயன்படுத்துகிறார்.

                ஐம்புலன்’ (குறள். 1101) களின் நுகர்ச்சியினை யாண்டும் பெறலரும் இன்பம் எல்லாம் ஐம் புலனும்’ (திருவெங்கைக்கோவை, பா.21) என எடுத்தாள்கிறார்.

                காலாழ் களரின் நரியும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு’ (குறள். 500)

என்ற குறளுக்கு

காலாழ் களரின் அழிந்தவெங் கோட்டுக் களிற்றையொரு

வேலால் ஏறியவர் போல யிதுவென் விதிவசமே’ (திருவெங்கைக்கோவை, பா.48)

என்று ஒத்தசொல்லைப் பொருத்தியிருக்கிறார்.

குறளின் பொருள் ஆளுமை

‘- - -  சென்றார்

                வரல்நசைஇ இன்னும் உளேன்         (குறள். 1263)

என்னும் பொருளுக்கு ஒப்பாகக்கூறும் பாடல்.

‘- - - காதலர் ஈங்கு

ஒருநாள் வருவார் என் றேநின்ற தாவி யுடலகத்தே (திருவெங்கைக்கோவை, பா.275)

பரிமேலழகரின் உரை ஆளுமை  

  திருக்குறளுக்கு உரைகண்டவர்கள் பல அறிஞர்கள்.  அவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க மாண்புடையவர்கள் பதின்மர். அவர்களுள் பரிமேலழகர் உரையைச் சிறப்புடையதாக யாவரும் போற்றினார்கள்.

                குறள் மட்டுமின்றி குறளுக்கு எழுந்த பரிமேலழகரின் உரையையும் சிவப்பிரகாசர் உணர்ந்து தம் நூலில் கையாண்டுள்ளார்.

                 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

                 சான்றோன் எனக்கேட்ட தாய்’ (குறள். 69)    

என்னும் குறளுக்கு மக்கட்பேறுஎன்று கூறிய, அதிகாரப் பெயரை புதல்வரைப் பெறுதல்என்று பரிமேலழகர் பெயர் மாற்றியமைத்திருக்கிறார்.

நான்ற சடிலத் திருவெங்கை நாயகர் நல்குமொரு

கான்ற குருதிக் குடர்மாலைவேலுடைக் காளையெழில்               

போன்ற வுருவத் திறைவர் மென் தோளிடு பூந்தொடைகண்டு

ஈன்ற பொழுதிற் பெரிது வாநிற்கும் எம்மனையே’5

என்று பொருள்கூறிச் சிவப்பிரகாசர் சிறப்பித்திருக்கிறார்.

                உலகம் போற்றும் திருமறையாம் திருக்குறள்  தமிழ் இலக்கிய நூல்களுள் தன்னிகரற்ற நூலாகவும் நீதி இலக்கிய நூல்களில் தலைமை கொண்டதாகவும் விளங்குவது திருக்குறள். இந்நூலைத் தமிழுலகம் ஏற்றிப் போற்றிக் கொண்டாடக்கூடியதாகத் திகழ்கின்றது.  இருப்பினும் இந்நூலில் உள்ள கருத்துக்களை பெரும்பான்மையான புலவர்கள் படிப்பதோடு நிறுத்தி விடுவார்கள்.

சிலர் மேற்கோளாகவும் முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருப்பதை மட்டும் எடுத்துக்கூறுவார்கள்.

 தெய்வப்புலமை கொண்ட திருவள்ளுவரின் திருக்குறளை நூலில் உள்ளவற்றை மொழி பிறழாமல் அடிபிறழாமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்தினை உடையவர்களே மிகுதி.  ஒருசிலர் திருக்குறளை ஆராய்ந்து பார்க்கக்கூடாது என்பர். ஆனால் சிவப்பிரகாசரோ உலகப்பொதுமறையாகிய திருக்குறளின் கருத்தை தம் நுண்மாண் நுழைபுலத்தால் நுண்ணிதின் ஆராய்ந்து பார்த்தவர். அவரின் கருத்துக்களை ஏற்கும் இடத்தைச்  சுட்டிக்காட்டியும்  குறள் கூறும் கருத்துக்களையும் குறளையும் கூட மறுத்துரைப்பதனைத் தாம் பாடிய பாடல்களி;ன்வழி எடுத்துக்காட்டியும் புலப்படுத்தியவர்.

முடிவுரை

                மேற்காணும் செய்திகள்வழி முன்னோர் மொழிபொருளைப் பொன்னே போல் போற்றுவோம் என்னும் முதுமொழியினைப் பின்பற்றியவர் சிவப்பிரகாசர் எனலாம். இவர் தெய்வப்புலமை கொண்ட திருவள்ளுவர் மீதும் உலகப்பொதுமறையாகிய திருக்குறளின்மீதும் அளவுகடந்த பற்று கொண்டவர் என்பது அவர் பாடிய 34 நூல்களில் 17 நூல்களில் மட்டும் ஏறத்தாழ 80 இடங்களில் கையாண்டுள்ளார் என்பதன்மூலம் அறிந்துணரலாம். 

     அந்நாளில்  தலைசிறந்த புலமையை யாவர்க்கும் பொதுச்செல்வமாக ஆக்கும் பரந்த நோக்கமே புலவர்களிடமும் அறிஞர்களிடமும் இருந்துள்ளது.  யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயரிய குறிக்கோளை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

                வான்புகழ் வள்ளுவரையும் வையகம் சிறக்கப்பாடிய திருக்குறளையும் மிகுதியாகப் பாடிய சிவப்பிரகாசரைப் பிற்காலப் புலவர்கள் அவரைப் பாராட்டியும் சிறப்பித்தும் பாடியுள்ளார்கள். அப்பாடலடிகள்

                  சவிகொள் சங்கத்தமிழ்க் குழவிக்கொரு

                  செவிலியென்ற சிவப்பிர காசனே

                வள்ளுவரை ஆராதித்து, குறளைச் சிவனின் திருவடி என்றதுபோல பத்துக் குறள்களையும் திருமாலின் பத்து அவதாரங்கள் என்று சிவப்பிரகாசர் குறளுக்கு முதலிடம் தந்து உவமித்துள்ளார்.           வள்ளுவரின் குறள், தொடர், சொல், பொருள், தொடர்களைச் சிவப்பிரகாசர், தாம் படைத்த 34 நூல்களில் மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார். திருவெங்கைக்கோவையில் மட்டும் இருபது இடங்களில் கையாண்டுள்ளார்.                 மேலும், குறளின் உரைமுன்னோடியான பரிமேலழகரின் உரைத்திறனையும் ஆளுமைக்குட்படுத்தியுள்ளார்.     மேலே குறித்து நின்ற செய்திகள் யாவும் அவரின் அறிவுத்திறத்தை அறிந்துணர்வதற்கு உற்ற துணையாகும். 

                சிவப்பிரகாசருடைய நெஞ்சில் நிலைத்திருந்த திருக்குறட்பற்று மற்றும் திருவள்ளுவரின் ஆளுமைப் பற்று ஆகிய இவ்விரண்டுமே  அவரது நூல்களில் பெயராக குறிப்பிட்டுள்ளார்.  அவரது முப்பால்  கருத்துகள் அவரது நினைவில் நிறுத்தியதை நூல்களில் எடுத்தாளும் நோக்கில் கண்டறியலாம்.  சுருங்கக்கூறின் சிவப்பிரகாசருடைய பெருந்தன்மையும் நன்றியறிதலும் எடுத்துக்காட்டுவதனை நன்குணரலாம்.

                பிற்காலத்தில் வள்ளுவத்தைச் சிவப்பிரகாசர் போல ஆண்டவர்கள் இல்லை. ஆகையால் வள்ளுவரால் சிவப்பிரகாசரும் சிவப்பிரகாசரால் வள்ளுவரும் ஏற்றம் ;பெற்றுள்ளனர். இத்தகு சிறப்புகளால்  சிவப்பிரகாசரை வள்ளுவப் பிரகாசர்என்று பாராட்டித் தமிழுலகம் போற்றப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

அடிக்குறிப்புகள்

1.திருவெங்.கலம்பகம், பா.42

2.திருவெங்கையுலா கண்ணி – 172

3. திருவெங்.கோவை, பா.5

4. குறள்.542

5. திருவெங்கைக்கோவை, பா.285

துணைநூற்பட்டியல்

1.     சிவப்பிரகாசர், திருவெங்கைக்கலம்பகம், திருவெங்கையுலா,  திருவெங்கைக் கோவை, சிவப்பிரகாசர் பனுவல் திரட்டு, கழக வெளியீடு, சென்னை, பதிப்பு 1967. 

2.     திருவள்ளுவர், திருக்குறள் பரிமேலழகர் உரையுடன், பூம்புகார் பதிப்பகம், 63,பிராட்வே, சென்னை -600 108, பதிப்பு : டிசம்பர் -1986.