4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

உவமை வழி இலக்கிய மெய்ப்பாடு - கி.ச.புனிதவதி

                        உவமை வழி இலக்கிய மெய்ப்பாடு


கி..புனிதவதி,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழியல் துறை,

காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும்

ஆராய்ச்சி நிறுவனம்,

புதுச்சேரி-8.

vathivel@gmail.com

999 419 111 4

 


இலக்கியம் என்பது வாழ்க்கையின் உயிர்ப்பு. படைத்தோன் காலம் மாறினாலும், படிப்போன் காலத்தில் உணர்ச்சியின் ஈர்ப்பால் இன்பம் பெறுவது இலக்கித்தில்தான். அப்படிப்பட்ட இலக்கியத்தின் உயிர்ப்பு நிலைக்கு உந்துதலாக இருப்பது உணர்ச்சி. அவ்வுணர்ச்சியினைத் தொல்காப்பியர் மெய்ப்பாடு எனச் சுட்டுகிறார். அவர் முப்பத்தி நான்கு செய்யுள் உறுப்பில் மெய்பாட்டினைச் சுட்டுவதுடன், அம்மெய்ப்பாட்டிற்கென தனி இயலை வகுத்து, அவை எவ்வாறு உவமை மூலம் உணர்த்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார். இவ்வாறு இலக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த மெய்ப்பாடும், மெய்ப்பாட்டிற்கு அடிப்படையான உவமையும் ஒன்றையொன்று கலந்திருக்கக் கூடிய தன்மையினைஉவமை வழி இலக்கிய மெய்ப்பாடுஎனும் தலைப்பில் ஆராய்கிறது இக்கட்டுரை.

கலைச்சொற்கள்: மனித வாழ்க்கை, இலக்கியம், மெய்ப்பாடு, உவமை, உணர்வு வெளிப்பாடு 

 

முன்னுரை

இலக்கியம் மனிதனின் மனத்தில் தேங்கிக் கிடக்கும் உணர்வுகளின் வெளிப்பாடாகும். அது தான் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்த முனைகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள உணர்வுகளை இலக்கியங்களின் வாயிலாகக் கொடுக்கும் போது படிப்போர் உள்ளத்தையும் சிந்தனையையும் தூண்டுபவையாக உள்ளன. அகத்துறுப்பு உள்வாங்கிய உணர்வை தன் புற உறுப்பின் மூலம் வெளிப்படுத்தல் மெய்ப்பாடு எனத் தொல்காப்பியர் குறிக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள மெய்ப்பாடு இலக்கியத்திற்கானது. செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகவும், உவமைகள் மூலமும் உணர்வை வெளிப்படுத்திப் பொருளை உணர்ந்திட வைப்பதே இலக்கிய மெய்ப்பாடாகும். சங்க அகப்பாடல்களில் வெளிப்படும் இலக்கிய மெய்ப்பாட்டினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலக்கியம்

            இலக்கியத்தின் அடிப்படை வாழ்க்கை. இலக்கியத்திற்கான வரையறை காலந்தோறும் மாற்றத்திற்குட்டவையாக உள்ளன. ‘இலக்கியம்என்ற சொல் இலக்கு+இயம் எனும் இருசொற்களால் ஆனது. ‘இலக்குஎதன்பற்குநோக்குஅல்லதுகொள்கைஎனவும், ‘இயம்என்பதற்குதன்மைஅல்லதுபண்புஎனவும் பொருள் கொள்வர். ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மொழிப்படைப்பை இலக்கியம் என்று கூறலாம். இலக்கியத்தை நால்வகைப் பண்புகளாகத் தெளிவுறுத்துவர். அவை உணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம் ஆகியவையாகும். இலக்கியத்தின் வடிவம்உடலாகவும், அதன் உயிர்உணர்ச்சியாகவும், கற்பனையைஇதயமாகவும், அதில் இடம்பெறும் கருத்துக்கள் அறிவுத் திறனை அடிப்படையாகக் கொண்டவை, எனவே கருத்தினை இலக்கியத்தின்மூளையாகவும் போற்றுவர்.

             தமிழின் இலக்கிய மெய்ப்பாடு பற்றியச் சிந்தனை எவ்வாறு இருந்துள்ளது என்பதை ஆராயும் இவ்வாய்விற்கு இலக்கியம், இலக்கணம் என்பன சமுதாய உருவாக்கத்தின் அங்கங்கள்  (பெ. மாதையன், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி வளர்ச்சி வரலாறு, .v) எனும் பெ.மாதையன் கருத்து அரணாகிறது.

            மானிடர் வாழ்வுக்கானத் தரவுகளில் இலக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது. இலக்கியம் உருப்பெற உணர்வு அடிப்படை. இங்குப் பொருட்புலப்பாட்டிற்கு உவமை கருவியாக அவ்வுணர்வு மெய்ப்பாடாகிறது. 

மெய்ப்பாடு

மெய்ப்பாடு என்பதற்கான விளக்கத்திற்கு அறிஞர்களிடையே கருத்து முரண் இருந்தாலும், ‘உணர்வு வெளிப்பாடுஎன்பதில் கருத்தொற்றுமை உடையவர்களாக உள்ளனர்.

மெய்ப்பாடுஎன்பதுமெய்ப்படுஎன்பதன் திரிந்த வடிவமாகும். ‘படுஎன்பது தொழிற்பெயர். அதுபாடுஎன நீண்டு முதனிலை திரிந்த தொழிற்பெயராயிற்று.

மெய்+படு = மெய்ப்படு (மெய்ப்பாடு)

உடல்+தோற்றுதல் = உடல் தோற்றம்

மெய் என்பது பொருட் பிழம்பு; பாடு என்பது தோன்றுவது, கவிதைதான் மெய்யாகிய பொருட் பிழம்பைத் தோற்றுவிக்கிறது; அங்ஙனம் பொருள் கண் கூடாகுமாறு அக்கவிதை செய்யுள் படைக்கப்படவேண்டும். மெய்ப்பாடு என்பது சொல்லவந்ததை அப்படியே கண்ணாற் கண்டது போல், காதால் கேட்டது போல் உருவாக்கிக் கண் முன்னர் நிறுத்துவதே, படைப்பதே மெய்ப்பாடுஎன்பார் தமிழண்ணல்.

கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதின் உணரும்

உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்

நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே” (தொல்.மெய்.நூ.266)

என்ற நூற்பா வழி தொல்காப்பியர் மெய்ப்பாடு தோன்றும் வழி கண்ணால் கண்டும், சொல்லும் பொருளிலுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டும் அவற்றின் பொருளை நுண்ணுக்கமாக உணர முடியும் என்கிறார். அத்துடன் எல்லோராலும் இவற்றை உணர்ந்திட இயலாது, பொருளின் புலப்பாட்டைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையவராலேயே உணர்ந்து கொள்ள முடியும் என்றும் குறித்துள்ளார்.

உவமை வழி இலக்கிய மெய்ப்பாடு

உவமை என்பது தெரிந்த ஒன்றை கொண்டு தெரியாத ஒன்றை விளக்குவதாகும். இலக்கியத்திற்கு உவமைகள் அழகூட்டுவன. உவமை இல்லாத இலக்கியம் வண்ணம் பூசாத சுவர் போல என்பர். பொருளை விளக்க வந்த உவமை பின்னர் பொருளைப் புனையவும் பயன்பட்டது.

செய்யுள் சிறந்த சுவையுடையதாகவும், பொருளை விளக்கும் முகமாகவும் அமைய உவமை என்னும் ஓர் அழகியல் வேண்டும் என்பதைத் தொல்காப்பியர் தம் நுண்ணறிவால் கண்டுள்ளார். உவமை என்பது தாம் சொல்ல வந்த கருத்திற்கு அழகூட்டவும், புரிந்து கொள்ளவும், மன மகிழ்ச்சி கொள்ளவும் அமைக்கப்பட வேண்டும்.

பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பாடு எட்டன்

வழிமருங்கு அறியத் தோன்று மென்ப” (தொல்.உவம.நூ.294)

எனக் கூறுவதன் மூலம் மெய்ப்பாட்டியலை உணர்த்த உவமைத் தோன்றும் என்பது புலனாகிறது. எனவே மெய்ப்பாட்டியலை வைத்து அடுத்த உவமவியலை சுட்டுகின்றார். இக் கருத்திற்கு அரண் சேர்ப்பதாய் பின்வரும் தமிழண்ணல் கருத்துக்கள் உள்ளன.

            உவமை அல்லது அணிக்கோட்பாடு என்பதாக, ‘போலச் செய்தல்என்னும் உள்ளுணர்வால் உருவாவனவே கலைகள் என்பர். இலக்கியம் வாழ்வையும் கலைகளையும் பார்த்து  அவைபோலத் திரும்பவும் படைக்க முயல்வதால் தோன்றும் நுண்கலையாகும். இதனால் இலக்கியத்தில் உவமைத்தன்மை ஒன்றி இணைந்து காட்சி அளிக்கிறது.” (தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு இலக்கியக் கொள்கைகள், .49-50)

என்றும்,

          இலக்கியத்தை அழகுபடுத்தும் முதல் அணி அல்லது தாயணி உவமையேயாகும். அது காலத்தால் மிகவும் முற்பட்டதுமாகும். தொல்காப்பியர்உவமவியல்என ஓரியலே வகுத்திருப்பதுபோலச் சங்கப்பாடல்களிலும் ஏறத்தாழத் தொண்ணூறு விழுக்காடு உவமையே இடம்பெறுகிறது. ஏனைய பத்து விழுக்காடு பிற அணிகளும் இடம்பெறுகின்றன என்றாலும் அவற்றுள்ளும் பல உவமையின் வழிப்பட்டனவேயாகும்.” (தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு இலக்கியக் கொள்கைகள், .52-53)

என்றும் குறிப்பது உவமையின் சிறப்பை உணர்த்துவனவாகும்.

உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளான்

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்” (தொல்.செய்யு. நூ .516)

எனவே குறுந்தொகை, நற்றிணை, அகநானூற்று பாடல்களில் வெளிப்படும் மெய்ப்பாட்டின்  பொருட்புலப்பாட்டிற்கு உவமையின் பங்களிப்பை எடுத்துரைக்க இக்கட்டுரை முயல்கிறது.

வெறியாட்டில் உவமை வழி மெய்ப்பாடு

குறிஞ்சித்திணையில் மிக முக்கிய நிகழ்வு வெறியாட்டு. 

திணைக்குடி வழிபாட்டில் முருகன் முக்கிய தெய்வமாக இருந்திருக்க வேண்டும். இவன் பலியை ஏற்பவன். பாட்டு ஆட்டம் விரும்புபவன். இவனுக்குப் பிடித்த வெறியாட்டு அயர்தல் என்பது முற்பட்ட வழிபாட்டுக் கூறுகளைக் கொண்டது. ஆண் அல்லது பெண்மீது ஏறி வருவது வெறியாட்டு. இது அகாலமரணத் தொடர்பால் தோற்றம் பெற்ற தெய்வம் அல்ல காலங்காலமாய் நம்பப்பட்டு வந்த தெய்வம்.”  (.கா.பெருமாள், தமிழகப் பண்பாடு சங்ககாலம் முதல் பிற்காலச்சோழர் காலம் வரை, .73)

எனும் .கா.பெருமாள் கருத்து முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்தும் தாயின் மனத்திற்கு ஆறுதல் தரும் நம்பிக்கையாகக் கொள்ளலாம்.

தலைவன் தலைவி களவு வாழ்க்கையின் உணர்வு வெளிப்பாடு உள்ளக்கிளர்ச்சி வழி மெய்யில் பசலையாக வெளிப்படுகிறது.  இவ் வுடல் மாற்றம் தலைவிக்கு முருகனால் வேறுபாடு நிகழ்ந்தது என்று தாய் வெறியாட்டு நிகழ்த்துகிறாள். அச் செயல் உவமை வழி மெய்ப்பாடாய் வெளிப்படுகிறது.

குறுந்தொகை குறிஞ்சித்திணையில் வரும் தோழி கூற்று பாடலில், வரைவு நீட்டித்த தலைவனால் தலைவி மேனியில் பசலைப் பாய்ந்தது. ஆனால் இது வேலனால் நிகழ்ந்ததோவென எண்ணி அன்னை வெறியாட்டு நிகழ்த்தினாள். இதைச் சிறைப்புறமாக நிற்கும் தலைவன் கேட்பத் தோழி சொல்கிறாள். நம் இல்லத்தாரின் செய்கையைக் கண்டு தலைவன் பெருநகை புரிவான் என்று கூறினாலும், ‘பெருநகை புரிவான்என்பதில் தலைவன் வரைவு நீட்டித்தவழி அவனைக் கண்டு எள்ளி நகைத்தல் என்பது உட்பொருளாகக் கொள்ளப்படுகிறது. தலைவன் தன் கடமையைச் செய்யாது. தலைவியைச் சந்தித்துச் செல்லுதல் பெரும் நகைப்புக்குரிய செயலே. இங்கொரு வினா எழலாம், தலைவியின் துன்பம் தோழிக்கு இன்பத்தைத் தருமாவென்று. ‘இடுக்கண் வருங்கால் நகுகஎன்பது போல மிகுதியானத் துன்பம் இருக்கும் வேளையில் தன் உணர்வை வெளிப்படுத்தாமல் தலைவியின் நிலையைத் தலைவனுக்கு உரைக்க நகை மெய்ப்பாட்டினைப் புலவர் தோழி வழிப் புலப்படுத்தியுள்ளார்.

 மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன்

வென்றி நெடுவே ளென்னு மன்னையும்

அதுவென வுணரு மாயி னாயிடைக்

கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன

கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்

வல்லே வருக தோழிநம்

இல்லோர் பெருநகை காணிய சிறிதே” (குறுந்:111)

தலைவியின் உடல் மாற்றத்தை இல்லத்தார் கண்டு பின் அதற்குரிய மருத்துவம் என வெறியாட்டினை நிகழ்த்துவர். இங்கு யாரால் எதனால் இம்மாற்றம் வந்ததோ அவர் உணரவில்லை. எனவே தோழி வாயிலாக, இல்லத்தார் செயலைக் கண்டு நகுவான் தலைவன் என்று கூறுவாள். இந்நகை தலைவனிடம் உண்டாகாது. காரணம் தான் வரையாது ஒழுகுதல் தலைவிக்கு எவ்வளவு துன்பம் தந்துள்ளது என்று வெட்கியே தலைகுனிந்து விரைவில் வரைவினை மேற்கொள்ள வேண்டும் என்று விரைந்து செல்வான். இப்பாடலில் தலைவனிடம் கருத்தைத் தெரிவிக்க தோழி இல்லோரைக் கண்டு நகைப்பதாய் நகை மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

இற்செறிப்பில் உவமை வழி மெய்ப்பாடு

            தலைவியின் பசலை நோய் வெறியாட்டினாலும் தீராதபோது, ஊரார் அலர் தூற்றுவதினால் தலைவி இற்செறிக்கப்படுகிறாள். தலைவன் இரவுக்குறியின் பொருட்டு  சிறைப்புறமாக நிற்க, தலைவி காப்பு மிகுதியில் உள்ளாள் என்பதை,

மண்ணிய சென்ற வொண்ணுத லானவை

புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்

கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை

பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்

பெண்கொலை புரிந்த நன்னன் போல

வரையா நிரையத்துச் செலீஇயரோ வன்னை

ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்

பகைமுக வுற்று றுஞ்சலோ விலளே.” (குறுந்:292)

எனத்  தோழி கூறுகிறாள். தலைவன் விருந்தினர்களோடு ஒருவனாக வந்தபோது தாய் அவனை அறிந்து கொண்டாள் அதுமுதல் தலைவிக்குக் காவல் மிகுதியாயிற்று. தோழிக்குத் தாய் மீது கடுங்கோபம் உண்டாக, நன்னனைப் போல் தாயும் நீக்குதல் இல்லாத நரகத்தின்கண் சென்று துன்புறுவாளாக என்று கூறுகிறாள்.

நன்னன் என்பவன் சிற்றரசன். ஆற்றங்கரைத் தோட்டத்தில் வளர்ந்த அரியதொரு மாமரத்தின் காயொன்று அவ்வாற்றிலே வீழ்ந்து மிதந்துவர, அதனை ஆற்றிற்கு நீராடச் சென்ற பெண்ணொருத்தி எடுத்துத் தின்றாள். அதுகண்ட காவலர் அவளை நன்னன் முன் கொண்டு நிறுத்த. அவன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். அதனையறிந்த அவள் தந்தை அவளது நிறைக்கேற்ற பொன்னாற்செய்த பாவையையும், எண்பத்தொரு களிற்றையும் தண்டமாகக் கொடுப்பதாகக் கூறவும் நன்னன் அதற்கு உடம்படாமற் கொலை புரிந்தான். அந்நிகழ்வு முதல் அவன் பெண்கொலை புரிந்த நன்னன்என்று பேசப்படலானான்.

இதைப்போல் காவல் மிகுதி செய்யும் நம் தாயும் நன்னன் போல நரகத்தின்கண் சென்று துன்புறுவாளாக என்று பழித்துரைக்கின்றாள் தோழி. தலைவன் மீது கொண்ட அன்பானது, தாயை நரகத்திற்கே கொண்டு செல்ல துடிக்கின்றது. உள்ள வெறுப்பு தன்குடிப்பிறந்தர்க்குப் பழிசூழும் அளவிற்கு குடிகோள் வரலாற்றோடு வெகுளி மெய்ப்பாடாய் தோன்றி இணைக்கப்படுகிறது.

வரைவு நீட்டிப்பில் உவமை வழி மெய்ப்பாடு

குறிஞ்சித்திணையின் வாழ்வியல் கூறுகள் குறித்த துரை.சீனிச்சாமி அவர்களின் கருத்து பின்வருமாறு.

நிலம் என்பது மண்ணின் ஓர் அடையாளம். மலைகளும் மலைகள் சார்ந்த இடமும், அங்கு வாழும் மக்களும், அங்குள்ள பயிரினங்களும், உயிரினங்களும், அங்கு நடைபெறும் தொழில்களும் எனக் குறிஞ்சி நிலத்தின் வாழ்வியல்-இயற்கை சார்ந்த சூழலாகும். இந்த நிலத்தைப் பின்னணியாகக் கொண்டு ஓர் உணர்வுடன் அல்லது ஒரு முக்கிய வாழ்வுச் செயலுடன் எழுதப்படும் இலக்கிய முறைமை குறிஞ்சித்திணையாகும். இந்த வாழ்வுச்செயல் குறிப்பிட்ட ஒரு நிலப்பின்னணியில் மட்டும்தான் காட்டப்படவேண்டும். இவ்வாறு காட்டும் முறையே திணை இலக்கிய முறைமை குறிஞ்சித்திணை என்பது, அதன் நிலப்பின்னணியோடு ஆணும், பெண்ணும் சேரும் உடலுறவு அல்லது கூடல் என்பது இணைந்தது. குறிஞ்சித் திணை என்றால் அது கூடல் திணை.” (துரை. சீனிச்சாமி, இலக்கியத் திறனாய்வியல் சமூகவியல் அணுகுமுறை, .218)

மேற்கூறிய சங்க இலக்கிய குறிஞ்சித்திணையில் ஒத்த அன்புடைய தலைவன் தலைவி சந்திப்புக்குப் பின் களவு வாழ்க்கையில் நாட்டமுடைய தலைவன் வரைவில் நாட்டமின்றி இருக்கும் சூழலில் தலைவியின் நிலையை எடுத்துரைக்கும் பாடலில்,

யானே யீண்டையேனே; யென்னலனே,

ஏனல்  காவலர் கவணொலி வெரீஇக்

கான யானை கைவிடு பசுங்கழை

மீனெறி தூண்டிலி னிவக்கும்

கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.” (குறுந்.54)

 என உவமை வெளிப்பட்டுள்ளது. இங்குத் தலைவன், என்னோடு ஒன்றிருந்த பெண்மைப் பொலிவானது, தினைப்புனம் காப்பவர் வீசிய கவண் கல்லின் ஒலிக்கு அஞ்சிக் காட்டு யானை இழுத்துக் கைவிட்ட மூங்கிலானது, மீனைக் கவர்ந்த தூண்டிலைப் போல மேலே விரைவாகச் செல்லுதலைப் போல, காட்டிற்குட்பட்ட நாடனொடு அவன் பிரிந்த அப்பொழுதே நீங்கிப் போயிற்று.

தலைவன் பிரிவால் பெண்மை நலன் இழந்தேன் என்பதற்கு உவமையாக யானை வளைத்துவிட்ட மூங்கிலைப் போன்று முன்பு நெருங்கி உறவாடியவன் இப்பொழுது பிரிந்து விலகியுள்ளான். மீன் சிக்கிய தூண்டிலை விரைவாக மெலே இழுப்பதைப் போன்று விரைந்து பிரிந்தான் என்று தன்னிலையில் தாழ்ந்திருக்கும் அசைவு நிலையில் அழுகையை வெளிப்படுத்தும் தலைவியின் மெய்ப்பாட்டினை இவ் உவமை வழி விளக்கியுள்ளார் புலவர்.

பிரிவில் உவமை வழி  மெய்ப்பாடு

மாலை வேளை மகிழ்ச்சி தரக்கூடியது. பிரிந்துள்ள தலைவன் தலைவிக்கு துயரம் கொண்டது. உவமை, சூழல் வழி வெளிப்படுகிறது.

பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்

புன்றலை மன்ற நோக்கி மாலை

மடக்கட் குழவி யணவந் தன்ன

நோயே மாகுத லறிந்தும்

சேயர் தோழி சேய்நாட் டோரே” (குறுந்.64)

 மாலை பருவம் கண்டு தலைவி தோழியிடம் கூறுகிறாள். பசுக்கள் நெடிய வழியின்கண் நீங்கிச் சென்ற பின், மாலை நேரத்தில் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள் தலையைத் தூக்கி  அவை சென்ற வழியைப் பார்த்து ஏங்குவதைப் போல நாம் தலைவருக்காக ஏங்கியிருக்கின்றோம். ஆனால் தலைவர் இன்னும் வரவில்லை. இங்குத் தலைவியின் ஏக்கத்தை மாலை வேளையில் பசுவை எதிர்ப்பார்த்து ஏங்கி தவிக்கும் கன்றைப் போல தலைவி ஏங்கி இருக்கிறாள் என்ற உவமை வழி அழுகை மெய்ப்பாட்டை புலவர் எடுத்துரைக்கின்றார்.

காரும் மாலையும் முல்லை எனும் முதற்பொருளுக்கு ஏற்ப, பிரிவிலுள்ள தலைவிக்கு மாலைப்பொழுது துயரத்தைத் தருகின்றது.

வெஞ்சின வேந்தன் வியன்பெரும் பாசறை,

வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;

யாதுசெய் வாம்கொல்? தோழி! - நோதகக்

கொலை குறித் தன்ன மாலை

துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே! ” (அகம்.364:10-14)

என்று கூறுகிறாள். தலைவன் அரசனுக்குத் துணையாக வேண்டி கார்காலத்தே வந்து விடுவேன் என்று பிரிந்து சென்றான்.  கார்காலம் வந்துவிட்டது தலைவன் வரவில்லை. தோழி ஆற்றியிருக்க வேண்டும் என்கிறாள். தலைவி என்னால் எப்படி முடியும் என்று கேட்கிறாள். நோதகக் கொலை குறித் தன்ன மாலை கார்காலம் தொடங்கிவிட்டதால் முல்லைப்பூத்து அறிவித்துவிட்டன. தலைவர் பகைவரை வெல்லலாம். ஆனால் கொல்லன் களத்திற் கொலைஞர் வருவது போல எம் உயிரை உண்ணுதற்கு வருகின்ற மாலைப் பொழுதை எவ்வாறு வெல்வது என்று கேட்கிறாள். கார்காலத்து மாலை இன்பமுடையது. வேந்தன் பொருட்டு பிரிந்து வாடும் தலைவிக்கு, கொலைபுரியும் கொலைஞர் போல மாலை உள்ளதாக உவமைப்படுத்தி தலைவியின் அழுகை மெய்ப்பாட்டை வெளிப்படுத்துகிறார் புலவர்.

வரைவில் உவமை வழி மெய்ப்பாடு

தலைவன் தலைவியை காண இரவுக்குறி வந்தான். சிறைப்புறமாக நின்ற தலைவனை காணாதாள் போல் தோழி கூறுகிறாள். அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் போன்றவை வரைவுக்கு வழி வகுக்கும் மெய்ப்பாடுகள் ஆகும். அகப்பொருள் நுட்பத்திற்கு ஏற்ப இயற்கைச்சூழலான முதல் கருப்பொருள் வழி உரிப்பொருளை உணர்த்திட உவமைகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனை,

குருங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை

பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்

தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு அடூஉம்

கல்லக வெற்பன் சொல்லின் தேறி

யாம்எம் நலனிழந் தனமே யாமத்து

அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்

புரைஇல் தீமொழி பயிற்றிய உரையெடுத்து

ஆனாக் கௌவைத்து ஆகத்

தானென் இழந்தது இவ்வழுங்கல் ஊரே” (நற்:36)

பெரிய ஆண்புலியானது, வலிய பெண்யானை புலம்பும்படி ஆண்யானையைக் கொன்றுவிடும் நாட்டை உடையவன் தலைவன். உன்னை என்றும் பிரியேன் என்று கூறி, நம் நலன் அழிய காரணமாகிவிட்டான். அத்துடன் இவ் வூரில் உள்ள பெண்டீர் அலர் தூற்றவும், அம்பல் பேசவும் ஏதுவாகிவிட்டது. இதனால் நான்தான் உறங்காது உள்ளேன் என்றால், ஏனோ இவ்வூரும் இழந்தது என்ன ஏன் உறங்காமல் உள்ளதோ? என்கிறாள் தோழி.

தலைவி படும் துன்பத்தைத்தானென் இழந்தது இவ்வழங்கல் ஊரேஎன்று கூறுவதிலிருந்து தான் படும் துன்பத்தை புலம்பும்; முகத்தான் தோழி தலைவனுக்கு உணர்த்துகிறாள். தலைவன் வரும் வழியின் அச்சம் காரணமாய் தலைவியின் துன்பம் மிகுகிறது. விரைவில் திருமணத்தை மேற்கொள்ளதே தலைவன் தலைவிக்கு இருவருக்கும் நலம் என்பதை, அச்ச மெய்ப்பாட்டின் வழி அழாமல் உள்ளம் அழுதுகொண்டிருப்பதை மெய்ப்பாடாய் வெளிப்படுத்துகிறார் புலவர்.

ஆறுதலில் உவமை வழி மெய்ப்பாடு

வரைவிடை வைத்து பிரிந்தான் தலைவன். பிரிவால் வாடும் தலைவியை தோழி தேற்றுவது என்பது,

காமுறு தோழி காதலம் கிளவி

இரும்பு செய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த

தோய்மடற் சில்நீர் போல

நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாம் சிறிதே” (நற்:133:8-11)

விருப்பம் மிக்க தோழி! அன்பு மிகுந்த இச்சொல், இரும்பு வேலை செய்கின்ற கொல்லன், தான் வெய்ய உலையிலே தெளித்த பனை மடலாலே தோய்த்தலை உடைய சிலவாய நீர் அவ்வுலையைச் சிறிது அவிக்குமாறு போல, நோய் மிகுந்த உள்ளத்திற்கு சிறிது தணித்துக் காவலாய் நிற்கின்றது என்கிறாள். நெஞ்சம் வெந்துள்ளதை இரும்பு உலை சுட்டுகிறது. தோழியின் சொல் ஆறுதல் அளிப்பதை பனை மடலின் தெளித்த நீர் போல உள்ளது. ஆனாலும் தலைவியின் உள்ளம் இரும்பு உலையாய் கனன்று கொண்டிருக்கும் அழுகை மெய்ப்பாட்டை வெளிப்படுத்துகிறார் புலவர்.

முடிவுரை

இவ்வாய்வின் வழி பெறப்படுவன.

·      தொல்காப்பியர் மெய்ப்பாடு குறித்து மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் ஆகிய மூன்று இயல்களில் கூறியுள்ளார்.

·         உள்ளுணர்வினை வெளிப்படுத்துவதற்கு இலக்கியம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது.

·         மெய்ப்பாட்டினை அறிந்து கொள்ள அனைவராலும் முடியாது, ஒருவரின் உணர்வினை கண்ணால் அறிந்து, காதால் உணர்ந்து மனஉணர்வினை அறிந்து கொள்ளும் திறம்படைத்தவரால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் என்பதையும் சுட்டிச்செல்கிறார்.

·    பொருட்புலப்பாடு பொருண்மை இலக்கியம் என்பது வாழ்க்கையோடு இணைந்தவை. வாழ்க்கை உணர்வுடன் இணைந்தவை. உணர்வு மெய்யுடன் கலந்தவை. இப்படி இலக்கியம் இயற்றுவதற்குப் புலவன் தன் புலமையை நிலைநாட்டிட உவமை வழி உணர்வுகளைப் படைக்கின்றார். உவமைகள் தோன்றும் பின்புலம் திட்ப நுட்பத்திற்கு ஏற்பப் படைக்கப்படும்.

·    அனைத்தும் இலக்கியம் என்றாலும், படிக்குந்தோறும் இன்பம் பயக்கக்கூடியதாய் இருப்பது மட்டுமே உயர்ந்த இலக்கியம் என்றும், காலத்தால் அழியாத இலக்கியம் என்றும் போற்றப்படுகிறது. அவ்விலக்கியத்திற்கு அடிப்படை உணர்வாகும்.

·         சங்க அகப்பாடல்கள் உவமைகள் பின்புலத்தில் தோன்றும் மெய்ப்பாடுகள் அறிந்தும் தெரிந்தும் புரிந்தும் பொருட்புலப்பாடாகிறது.

·         சங்க அக இலக்கிங்களில் தலைவன் தலைவியரின் அக உணர்வினை உவமையின் வாயிலாக படிப்போருக்கு மெய்ப்பாட்டு உணர்வினை வெளிப்படுத்தியுள்ள திறத்தினை மேற்கண்ட ஆய்வின் வழி பெறப்படுகிறது.

பார்வை நூல்கள்:

[1].சாமிநாதையர் டாக்டர் .வே. குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் .வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.

[2].சீனிச்சாமி, துரை. இலக்கியத் திறனாய்வியல் சமூகவியல் அணுகுமுறை, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098. முதற்பதிப்பு: ஜூலை, 2018.

[3].செயபால் இரா.முனைவர் (.) சங்க இலக்கியம் அகநானூறு (புத்தகம் 2) (மூலமும் உரையும்) நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,     அம்பத்தூர், சென்னை - 600 098. நான்காம் அச்சு: அக்டோபர், 2011.

[4].தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் பாகம்:1, செல்லப்பா பதிப்பகம், மதுரை. இரண்டாம் பதிப்பு.2011.

[5].தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு இலக்கியக் கொள்கைகள்,            மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625 001. முதற்பதிப்பு: 2014.

[6].பெருமாள், .கா. தமிழகப் பண்பாடு (சங்ககாலம் முதல் பிற்காலச்சோழர் காலம் வரை), நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098. முதற்பதிப்பு: டிசம்பர்: 2018.

[7].பேராசிரியம், தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை-600 014. முதற்பதிப்பு 2018.

[8].மாணிக்கம், .சுப. தமிழ்க்காதல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம் - 608 001. முதற்பதிப்பு: மே, 2002.

[9].மாதையன், பெ.  தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி வளர்ச்சி வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 014. முதற்பதிப்பு: டிசம்பர், 2017.

[10].வேங்கடராமன் வித்துவான் டாக்டர் ஹெச். (பதி) நற்றிணை மூலமும் உரையும்,        .வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.