4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

திருநாவுக்கரசரின் சமுதாயச் சிந்தனைகள் - முனைவர் வேல்.கார்த்திகேயன்

 

திருநாவுக்கரசரின் சமுதாயச் சிந்தனைகள்

 

 முனைவர் வேல்.கார்த்திகேயன்

                                                                                                                இணைப்பேராசிரியர் - தமிழ்த்துறை

                         காஞ்சிமாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு

     மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி-605 008.

        9444220163 dr.vel.karthikeyan@gmail.com

முன்னுரை 

          அமிழ்தினும் இனிய நம் தமிழ்மொழியின் ளர்ச்சிக்கு வித்திட்ட இலக்கியங்களின் வரிசையில் சமய இலக்கியங்களின் பங்கு பெரும்பங்காகும்.  சமயங்களை ஒரு கூறாகக் கொண்டு தனிமனித வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் சமயநெறியாளர்கள் தமிழ்மொழியின் வாயிலாகச் சமுதாய மேம்பாட்டிற்காகப் பற்பல நற்சிந்தனைகளை எடுத்தியம்பியுள்ளனர். அவ்வகையில் சைவத் திருமுறைகளில் 4,5,6 ஆகிய திருமுறைகளைப் பாடியவரும் சைவத்திலிருந்து சமணம் சென்று மீண்டும் சைவசமயம் சார்ந்தும், ஏழாம் நூற்றாண்டில் சமயத்தின் வழியாக சமுதாயப்புரட்சி செய்தவருமாகிய அருளாளர் திருநாவுக்கரசர்.  அவர் பாடிய பாடல்களிலிருந்து சமுதாய மேம்பாட்டிற்கான சிந்தனைகளை எடுத்தியம்புவதே இவ்வாய்வின் நோக்கம்.

மனிதன் தாம் வாழும் சமுதாயத்தில் சாதிவேறுபாடு கூடாது, நோயாளிகளை ஒதுக்கக்கூடாது, தீண்டாமை கூடாது, நாம் யார்க்கும் அடிமை கிடையாது, மதமாற்றம் கூடாது என்பன போன்ற பல செய்திகளை எதிர்மறை நிலையிலும், திருக்கோயில் தூய்மை, சுற்றுப்புறத்தூய்மை, அன்புநெறி, அறநெறி, அருள்நெறி தொண்டு நெறியாகிய உழவாரப்பணி முதலான பல செய்திகளை உடன்பாட்டு நிலையிலும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

 

சாதி வேறுபாடுகள் கூடாது

      சமுதாயத்தில் சாதி, மதம், இனம் முதலானவற்றின் அடிப்படையில் மனித வாழ்க்கை செயல்பட்டது. நீதி இலக்கியங்கள் பெரிதும் வலியுறுத்தியும், சாதி வேறுபாடுகளை நீக்காமல் வாழ்ந்துவந்த மக்களைச் சமயநெறி நின்று சமுதாயத்தைத் திருத்த முற்பட்டார் திருநாவுக்கரசர்.

  சமயத்தில் கூறப்பட்டுள்ள சித்தாந்தங்கள் பலவற்றைப் பேசிக் கழித்திடும் தீய சிந்தனையாளார்களையும், கோத்திரம், குலம் முதலானவற்றைக் கருத்தாகப் பேசுகின்றவர்களையும் நோக்கி, இதனால் பயன் விளையப்போவது ஒன்றுமில்லை, பேசுவதற்கும் பணிவதற்கும் உரியவன் சிவபெருமானே என்று உணர்ந்து வழிபடுங்கள்.  வழிபட்டால் சாதி மதம் முதலியன பொய்யானவை என்பதனை உணர்வீர்கள் என்று கூறினார்.  இவ்வாறு பலமுறை கூறியும் திருந்தாத மக்களை நோக்கிச்சழக்கர்காள்என்று விளிக்கின்றார்.

 

                சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்

                கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர்

                பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் (5-60-3)

 

சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேன்1

 

எனவரும் திருவாசகத் தேன்துளிகள் சாதி மதம் முதலானவற்றால் பேதம் கற்பிப்பது அறிவற்ற செயலாகும் என்பதையும், இறைவன் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதையும் பற்றி வலியுறுத்துகின்றன.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்2 என்ற வள்ளுவனின் வாய்மொழியும்சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்3 என்னும் மகாகவியின் வாக்கும் ஈண்டு ஒப்பவைத்துச் சிந்திக்கத் தக்கனவாகும்.

        இன்றைய காலத்தைப்போல, அன்றைய காலத்திலும், சாதிமத பேதங்களும் அவற்றால் உயர்வு தாழ்வுகளும் நிகழ்ந்துள்ளன என்பதனையும் அவற்றை ஒழிக்கும் புரட்சியாளராக அப்பரடிகள் திகழ்ந்துள்ளார் என்பதனையும் இப்பாடல் நமக்கு உணர்த்துகின்றது.  வாழும்போது மக்களிடையே சாதிமத பேத உணர்வுகள் வரக்கூடாது என்ற கருத்து ஆணித்தரமாக இங்கு வலியுறுத்தப் பெறுகின்றது.

வேசையர் உறவு கூடாது

   ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் இயல்பினர் இல்லற மகளிர், இல்லக்கிழத்தி இருந்தாலும் தலைவன் தனக்கெனக் காமக்கிழத்தியை நாடிச் செல்லுமிடம் பரத்தையர் இல்லமாகும். இல்லக்கிழத்தி, தம் தலைவனின் பரத்தைமை ஒழுக்கம் குறித்து அறிந்தவளாக இருந்தாள். அவளை எங்கை (என் தங்கை) என்று அழைத்தார் 

                கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி

                அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்

                காதல் எங்கையர் காணின் நன்றென

மாதர் சான்ற வகையின் கண்ணும்4

எனவரும் தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கிறது.  தலைவி, பரத்தையரை எங்கை என்று அழைத்ததன் காரணம் தலைவனோடு மட்டுமே, உறவு கொண்டிருந்தனர் என்ற கருத்தினை வலியுறுத்துவதாக அமைகின்றது என்பர்.5 இப்பரத்தையாரினும் வேறானவர்கள் பொதுமகளிர் ஆவர்.  இவர்கள் தமக்கென தனித்தலைவன் இன்றி, பொருளுக்காகத் தம் கற்பு நெறியிலிருந்து நீங்கி, பலருடன் சேர்ந்து இன்பந்தருவர். இவர்களைப் பொருட்பெண்டிர், பொதுமகளிர், இருமனப்பெண்டிர், விலைமகளிர் எனப்பல பெயர்களால் இட்டு அழைப்பர்.

     சங்ககாலத்தில் நிலவிய விலைமகளிர் தொடர்பினை நீதி இலக்கிய காலத்தில் மிகவும் கடிந்தும், நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் பல நீதி நூல்கள் எழுந்தன.  அவற்றுள் தலையாயதாக விளங்கும் திருவள்ளுவத்தில 

                பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

                ஏதில் பிணந்தழீஇ யற்று6

என மிக வன்மையாகக் கடிந்துரைக்கப்பட்டுள்ளமையைக் காணலாம்.  எனினும் பக்தி இலக்கிய காலத்திலும், சமுதாயத்திலும் இம்மரபு நீடித்திருந்தது. இதனைக்கண்ணுற்ற நாவுக்கரசர் மிகவும் வருந்தித் தம்பாடல் மூலம் எடுத்துரைக்கின்றார்.  இவர்களால் பக்தி நெறியும், இல்லற மாண்பும், சமுதாயக் கட்டுக்கோப்பும் தளர்ந்து தீயநெறியிலும், பாழ்பட்ட சமுதாயமாக மாறி வருவதனைக் கண்டு வருந்தித் தாம் வாழும் சமுதாயத்திற்கு இதன் கொடுமையைக் கூறி எச்சரித்து அறிவுறுத்தினார் 

   பெண்களின் பின்னால் சுற்றிச் சூழ்ந்து கேலியும், கிண்டலும் செய்து பின் தொடர்ந்து அவர்களது அழகில் மயங்கி நோயினையும் துன்பத்தினையும் அடைவார்கள் என்பதனை திருநாவுக்கரசரே  கூறுகின்றார்.

                ……     ……..பஞ்சின்மேல் லடியினார்கள்

                                பாங்கர யவர்கள் நின்று நெஞ்சில் நோய்

 பலவுஞ் செய்து நினையினும் நினையஒட்டார்   -4-53-3

வாராண்ட கொங்கைசர் மனையிற் சேரோம்   -6-98-3

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்

                தொழுதுபோற்றிநின் றேனையும் சூழ்ந்துகொண்டு   -5-90-8

இத்தகைய பொதுமகளிரையே எப்போதும் நினைத்துக்கொண்டும், அவர்களின் அழகு நலன்களைச் சொற்களால் புனைந்து போற்றிக் கொண்டும் அவர்களால் அடையும் சிற்றின்பமாகிய வலையில் வீழ்ந்து காலம் கழிப்பார்கள்.

பிறவியை நீக்க வேண்டிய நாம் மேன்மேலும் பிறந்து தவிப்பதற்கே வழிப்படுத்துவதாகிய இத்தகு பெண்ணாசையை விடவேண்டும் என வற்புறுத்துகிறார். 

                                ……..   ………இலவினார் மாதர் பாலே

இசைந்துநா னிருந்து பின்னும் நிலவுநாள் பலவென்

றெண்ணி நீதனேன்  -4-54-6

கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்          

மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே   -5-70-1

கொந்தார்பூங் குழலி னாரைக் கூறியே காலம் போன  -4-41-7

காமத்துள் அழுந்திநின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே    -4-45-4

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்

பேரிதென்றுன் சிறுபமனத்தால் வேண்டி யீண்டு

வாசக் குழல்மட வார்போக மென்னும்

வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே      -6-42-7

   அக்காலச் சமுதாயத்தில் விலைமகளின் தொடர்பு மிகுதியும் காணப்படுவதனை உணரலாம்.  இக்காலத்திலும் கூட மேற்காணும் செய்திகளை யெல்லாம் ஆய்ந்து நுண்ணிதின் உணரும் கருத்தாவது சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் விலைமகளிர் தொடர்பை அறவே விலக்க வேண்டும் என்னும் கருத்துப் புலப்படுத்துகிறது.                                                                                                                   

நோயாளிகளை ஒதுக்கக் கூடாது

                மக்கள் கூடி வாழ்வதே சமுதாயம்.  அச்சமுதாயத்தில் பல தரப்பட்ட மக்களைக் காணலாம்.  சான்றாக நல்லவர், தீயவர்,ஆற்றல் உடையவர், ஆற்றல் இல்லாதவர், அறிஞர், அறிவிலார், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலானோர் கலந்திருப்பர்.  அவர்களுள் நலம் குன்றிய நோயாளிகளும் இருப்பார்கள்.  அவர்களைக் கண்டு அஞ்சிச் சிலர் ஒதுங்கிச் செல்வர்.  பலர் அவர்களை ஒதுக்குவதோடு மட்டுமல்லாமல் புறக்கணித்தும் விடுவார்கள்.

                இந் நிலையினைக் கண்ணுற்ற திருநாவுக்கரசர் அவர்களையும் மனிதராக மதிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படுத்தியவர், உறுப்புகள் அழிந்த நிலையில் நோயாளியாகக் காணப்படுபவர்களை ஒதுக்கலாகாது என்னும் உணர்வுடன் சிவனடியாராகக் கொண்டு மதித்துப் போற்றல் வேண்டும் என்ற சமநீதியை உருவாக்கினார்.  இச்சமுதாயப் புரட்சியைச் சமயத்தின் வாயிலாக, நிலைநாட்டிய பெருந்தகையாளர் திருநாவுக்கரசர் எனில் மிகையாகாது.  அச்செய்தியை உணர்த்தும் பாடலடிகள்,

                அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய்

                ………   ….. …   ….     ……

                கங்கைவார்ச் சடைக்கரந்தார்க் கன்பராகில்

                அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே  -  6-95-10

இப்பாடல் வழி தொழுநோயாளி, சிவனை வணங்கினால், அவனை நோயாளி என்று ஒதுக்காமல் சிவனடியாராகப் போற்றவேண்டும் என்னும் கருத்துப் பெறப்படுகிறது.  இக்கருத்தொப்ப வள்ளுவமும்,               

              “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்7

என வலியுறுத்த காணலாம்.

    வாழும்போது மக்களிடையே வேற்றுமை காணக்கூடாது என்றும், அவர்களை அன்போடு போற்றுதல் வேண்டும் என்றும் இருவகையான நெறிகள் உணர்த்தப்பெறுகின்றன 

தீண்டாமை கூடாது

                உலகில் மக்களிடையே குலம், தொழில் முதலான பல்வேறு காரணங்களால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது.  இக்காலத்தில் காணும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு திருநாவுக்கரசர் காலத்திலேயே இருந்துள்ளன.

பிறப்பு நிலையினும் தொழில் நிலையினும் வேறுபாடு காணக்கூடாது

                உணவின் அடிப்படையிலே உணர்வு அமைகிறது. பிற உயிர்களைக் கொன்று தின்பது பாவம்.  அதிலும் தெய்வ அம்சமாக இருக்கும் பசுவினைக் கொல்வது மிகுந்த பாவம். இத்தகு பாவத்தைச் செய்கின்றவர்கள், சமுதாயத்தில் மிக இழிவாகக் கருதப்படுவர்.  சிறந்த பிராணிகளின் புலாலைக் கொல்லும் தொழில் செய்வதனாலும், உண்பதாலும் இவர்களைப் புலையர் என்று சாதிப்பெயரால் கூறுவர்.8

       திருநாவுக்கரசர் சாதியை ஒழிக்க அரும்பாடுபட்டுப்பின் இறுதியில், அவர்கள் சிவனை வணங்கும் அன்பராக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்று ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இதனால் பிறப்பாலும், தொழிலாலும் வேறுபாடற்ற சமுதாயம் காணமுடியும் என்ற முடிவுக்கு வந்ததை அவர்தம் தேவாரப்பாடலடி உணர்த்துகின்றது.  அப்பாடலடிகள்,

 

                ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

                …..    …..   ….    ….

                கங்கை வார்ச் சடைக் கரந்தார்க் கன்பராகில்

                அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே 6-95-10

 

                இக்கருத்தொப்பதோர் நிகழ்ச்சி திருநாவுக்கரசரால் போற்றப்படும் நமிநந்தி அடிகள் வாழ்வின் மூலம் விளங்குவதனை உணரலாம்.

  வேதியராகிய நமிநந்தியடிகள் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டதால்தீட்டு தன்னைத் தொடர்ந்தது என்று கருதி வீட்டிற்குச்சென்று குளிக்க முற்படுகிறார். வந்த களைப்பால் தூங்க கனவில் சிவபிரான், திருவாரூர்ப் பிறந்தார் யாவரும் சிவகணங்களே என்று உணர்த்துகிறார்.      பின் தீண்டாமை கருத்தை நீங்கி யாவரும்ஒரே குலம் என்ற எண்ணத்தைப் பெறுகிறார்இதனைத் திருமூலர்,

                 ஒன்றே குலம் ஒருவனே தேவன்9

என்று உரைக்கிறார்.      மேற்காணும் செய்திகள் வழி ஈசன்மீது அன்பில்லாதவர்களே வேறுபாடு பேசுவார்கள்ஈசன்மீது அன்பு செலுத்தினால் உறவாவார்கள் என்று கூறுகிறார் திருநாவுக்கரசர். இதன்மூலம் மனிதகுல ஒருமைப்பாடு வலியுறுத்துகின்ற நெறியினை உணரலாம்.

மதமாற்றம் கூடாது

    நாம் நம் வாழ்க்கையில் கடைபிடிக்கும் சமயத்திலேயே தொடர்ந்து இருத்தல் வேண்டும். புறச்சமய உரைகளைக் கேட்கக் கூடாதுஅச்சமயங்களில்  புகக்கூடாது என்ற மெய்கண்ட உரைகள் உணர்த்தும், நாவுக்கரசர் ஒருவரைத் திருத்துவதற்குப் பழமொழி கூறித் திருத்துதல் சிறந்த முறையாகும்எளிதில் மனத்தில் பதியுமுறையாகும்இம்முறையைக் கொண்டு நம்மைத் திருத்துவதற்குக் கைக்கொள்கின்றார்.

     நல்ல கறவைப் பசுக்கள் வெளியிடத்தில் நிற்கின்றன. அவற்றைக் கறந்து நல்ல பசும்பால் குடித்து இன்சுவை நுகரலாம்அவற்றை விட்டு இருட்டறையில் கட்டப்பட்டிருக்கின்ற மலட்டுப் பசுவைக் கறத்தலில் பயனில்லைஅதனால் பிற சமயத்தைக் கைவிடுதல் பயனாகும். சைவம் விட்டுப் புறச்சமயம் புகுதல் பயனற்றது என்பதைக் குறிக்கும் பாடல்,

                பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு

                                தலையோடே திரிதர்வேனை

                ஒப்போடே ஒதுவித்து உள்ளத்தின்

                                உள்ளிருந்தாங் குறுதி காட்டி

                அப்போதைக் கப்போதும் அடியவர்கட்

                                காரமுதாம் ஆரூரரை

                எப்போதும் நினையாதே இருட்டறையின்

                                மலடு கறந் தெய்த்த வாறே     4-5-6

சைவ சமயமே சிறந்த சமயம் என்பதை உணரவேண்டும். பிற சமயங்களாகிய சமணம் பௌத்தம் முதலான நெறிகளில் சென்று உழன்று துன்பப்படாதவாறு நெறிப்படுத்துகிறார் நாவுக்கரசர்.

   இப்பகுதியில் உணர்த்தப்பெறும் நெறியாவது மதமாற்றம் அல்லது சமய மாற்றம் கூடாது என்பதாகும் 

நாம் யார்க்கும் அடிமை கிடையாது

        உலக மக்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கட்டுப்பட்டுக் கிடக்காமல் தங்கள் நலனுக்குகந்த ஆட்சி மலர வேண்டும் என்ற கருத்திற்காகவே போராடி வந்திருக்கிறார்கள். அந்தப் போராட்டத் தலைவர்களின் வரிசையில் திருநாவுக்கரசருக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

     காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், சைவ சமயம் திரும்பிய நாவுக்கரசர்மீது பொறாமையுற்ற சமணர்தம் கருத்துப்படி திருநாவுக்கரசரை அழைத்து வருமாறு ஆளனுப்புகிறான். அரசனின் ஆணையாயிற்றே என்று கருதி, அவர் மன்னனை நோக்கி ஓடவில்லை 

நாம் ஆர்க்கும் குடியல்லோம்    -4-11-21

எனத் துணிந்து பாடினார்.            

       நமக்காக ஆட்சியே அன்றி, ஆட்சிக்காக நாமல்ல என்று ஏழாம் நூற்றாண்டிலே அவர் உரிமை முழக்கம் செய்ததை அறிகிறோம். திருவாசகத்தில்,

                யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்10

என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.

                இந்நிகழ்வினைக் கருத்தில் கொண்டு அருள் நந்தி சிவாச்சாரியார்,

                எங்கும் யாம் ஒருவர்க்கும் எளியோம் அல்லோம்

                 யாவர்க்கும் மேலானோம் என்றிறு மாப்பெய்தித்

                திங்கள் அடி யார்அடியார் அடியோம் என்று

                 திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோரே11

எனப் பாடியுள்ளார்.

                திருநாவுக்கரசரின் அடியையொற்றித்தான் இருபதாம் நூற்றாண்டில் பாரதியார்,

                நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் இது

                நமக்கே hpமையாம் என்ப துணர்ந்தோம்

                பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் - பரி

                பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்12

என்று பாடினார்.

                சிவனடியார்கள், சிவனைத் தவிர வேறு எவர்க்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதும், நாம் தவறு செய்யாதபோது யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்னும் இரு வாழ்வியல் நெறிகளை அறிந்துணரலாம்.                                                                                                                                                                            

எல்லா வகையிலும் பிறர்க்கு உதவுதல் 

    சமுதாயத்தில் வாழும்போது நாம் மற்றவர்க்கு ஏதாவது ஒரு வகையில் உதவிபுரிதல் வேண்டும்.  எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றில் ஒரு நிலையிலாவது அறநெறி நின்று பிறரிடம் அன்புணர்வுடன் இரக்கங்காட்டி வாழ்தல்வேண்டும்.  இந்நெறிதயாமூலத்தன்ம நெறி எனப்படும்.

அன்புநெறி

     பக்திநெறியும் அன்புநெறியும் ஏறத்தாழ ஒன்றுதான், இரண்டிலும் தன்னலமற்ற இறைநலமே பேணப்படுகிறது. எனினும் அன்புநெறி, பக்திநெறியினும் மேம்படும்அன்பு இருந்தால் தன்னலம் மறையும்: பிறர்நலம் நாடி வாழ வைக்கும் தன்மையுடையதுஅன்பு, சமுதாயமே அன்பினால்தான் இயங்குகிறது. இத்தகைய சமுதாயத்தையே திருநாவுக்கரசர் காண விரும்பினார்.

   அன்பின் வழியது உயிர்நிலை13 என்ற குறள் நெறியும், அன்பும் சிவமும் இரண்டல்ல ஒன்றே14 என்னும் திருமூலரின் கருத்தும் ஒப்புநோக்கிச் சிந்தித்தற்குரியன.

அருள்நெறி

     அன்பின் முதிர்ச்சியே அருள் எனப்படுகிறதுஅருளென்னும் அன்பீன் குழவி15 என்பது வள்ளுவம்அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறும் அருளின் வெளிப்பாடே16 என்கிறார். மு. அருணாசலம்அருளானது பரந்த பரப்புடையதுதமக்குத் தொடர்பிலார் மாட்டும் ஏற்படக்கூடியது

    சமயக்குரவர்கள் மூவரும் அருள்வழி நின்றவர்கள். இவர்களின் அற்புத நிகழ்ச்சிகள் யாவும் அருளின் வெளிப்பாடு ஆகும்இயல்பாக அவரவர் தம் உள்ளத்தமைந்த அன்பே அருளாகிறதுஎல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்னும் அருள்நெறியே நமது வாழ்வு நெறியாகிறது.

 அறநெறி    

  அறம் என்பது நற்செயலாகும். ஒரு செயலைச் செய்கின்றபோது மற்றவர்க்குப் பயன் அளிக்கின்ற வகையிலும், அதனை எல்லோரும் பின்பற்றத்தக்க நிலையிலும் அமையும் செயலே அறமாகும்அறம் செய்வதற்குத் தகுதி, வயது, நிலை தேவையில்லைஅவரவர்களால் முடிந்தவரை அறச்செயல் புரியலாம் என்கிறது வள்ளுவம்,

                ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே

                செல்லும்வாய் எல்லாம் செயல்17

என வள்ளுவர் அறம் என்பது பிறர்க்கு உதவி செய்வது மட்டுமன்று, தன் மனத்தைத் தூய்மையாக்கி வைத்திருப்பதே எல்லா அறங்களைக் காட்டிலும் சிறந்த அறமாகும்.  என்கிறார்.

    மேற்காணும் செய்திகளை ஆராய்ந்து நோக்கின் அன்பு - தொடர்புடையவரிடம் வெளிப்படுத்துவதுஅருள் - தொடர்பிலார் மாட்டுக் காட்டுவது அறம் யாவர்க்கும் பயன்தருவது என்னும் கருத்துக்கள் பெறப்படுகின்றன.

   அன்பு - அருள் - அறம் ஆகிய மூன்றும் சேர்ந்த சொற்றொடரே அன்பு, அருளறம் () பெருங்கருணையாகும்இதனை வடமொழியில் தயாமூலத்தன்மம் என்பர்முதன்முதலில் இச்சொல்லாட்சியைப் பயன்படுத்திச் சமுதாயத்தில் செயல்முறைப்படுத்தியவர் நாவுக்கரசர் ஆவார். அப்பாடலடிகள்,

                சலங்கெடுத்துத் தயாமூலத் தன்மம் என்னுந்

                தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்

                நலங்கொடுக்கும் நம்பினை      -   6-20-6

                தயாமூலத் தன்மவழி எனக்கு நல்கி

                மனந்திருத்தும் மழபாடி வயிரத்தூணே.  6-40-6

    மேற்காணும் அன்பு அறம், அருள் மூன்றும் சேர்ந்த சொல் வடிவம் தயாமூலத்தின் தன்மம் என்பதையும், மனிதர்களாகப் பிறந்த நாம் சீரிய வாழ்வு வாழ்ந்திடத் தயாமூலத் தன்ம நெறியினைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் இதன்வழி அறிய முடிகிறது.

    சமுதாயத்தில் வாழ்பவர்கள் அன்பு, அருள், அறம் ஆகியவற்றைக் குறிக்கும் தயாமூலத்தன்ம நெறியைப் பின்பற்றி வாழ்வதே சிறந்த வாழ்வாகும் என்னும் வாழ்வியல் நெறிப் பெறப்படுகிறது.

 திருக்கோயில் தூய்மை

    சமயம் சார்ந்த கருத்தாயினும் சமுதாயத்தின் தேவையையும் முன்னேற்றத்தினையும் கருத்திற் கொண்டவர் நாவரசர்இறைவனை அடைவதற்கு முதல் படிநிலை சரியைசரியை என்பது உடலால் தொண்டு செய்வது. ஆண்டான் - அடிமை உறவிலிருந்து செய்யப்படுதலின் இதனை அடிமை நெறி ( தாசமார்க்கம் ) என்பர்இத்தொண்டின 

1.             திருக்கோவிலில் அலகிடுதல், மெழுகுதல்

2.             கோவிலை ஒட்டி நந்தவனம் அமைத்தல், மலர் பறித்துத் தார், மாலை, கண்ணி தொடுத்து இறைவனுக்குச் சார்த்துதல்.

3.             திருவிளக்கிடுதல்

4.             இறைவனைப் புகழ்ந்து பாடுதல்

5.             அடியவர்களைக் கண்டால் பணிந்து, அவர்க்குத் தொண்டு செய்தல் என விளக்குவர்.

உடலால் செய்யும் புறத்தொண்டினைச் சிவன் திருக்கோவிலுக்குச் செய்யும் புறத்தொண்டு என்றும் சிவனடியார்க்குச் செய்யும் தொண்டு என்றும் இருவகைப்படுத்தலாம்.  இங்கு கூறப்படும் உடலின்மூலம் நிகழும் தொண்டுகளை உண்மை அன்போடு செய்து வந்தால் சிவலோகம் சார்வதற்குத் தொடக்கநிலைப்பேற்றை அடைந்ததாகக் கொள்ளலாம்.  இறைவனைக் காண விரும்புபவர்களும் ஒவ்வொரு சைவனும் மேற்கொள்ளவேண்டிய தொண்டுகளை நாவுக்கரசர் பட்டியலிட்டுக் கூறுவதைக் கீழ்வரும் பாடலால் அறியலாம்.

நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா

                                நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

                தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்

சங்கரா சய போற்றி போற்றி யென்றும்

                அலைபுனல்சர் செஞ்சடையெம் ஆதீ என்றும்

                                ஆரூரா என்றென்றே அலறா நில்லே     நாவு.தேவா 6-31-3

இப்பாடல் தம் நெஞ்சை விளித்துக் கூறுவதாக அமைந்திருப்பினும், ஒவ்வொருவருக்கும் வற்புறுத்தும் பணிகளாகவே தொண்டுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

                மேலும் திருவலகால் தூய்மைப்படுத்தல், திருவிளக்கு ஏற்றல், மலர்தொடுத்தல், இசையுடன் பாடலைப்பாடுதல் முதலான தொண்டுகளைக் கூறி, அதனைச் செய்வதனால் அடைந்திடும் பயனையும் கூறுகின்றார் நாவுக்கரசர்.

இதனை உணர்ந்த அருளாளர்களாகிய சான்றோர்கள்  திருக்கோவில் வழிபாடு அவசியம் என்பதனை உணர்த்தினார்கள்.  அதனால்தான் சைவர்கள் இறைவனுக்குக் கோவில் அமைத்து வழிபாடு செய்வது பழங்காலந்தொட்டே நடைமுறையில் இருந்துவரும் ஒன்றாகும்.

 ஆலயம் தொழுவது சாலவும் நன்று என ஔவையாரும்

 ஆலயம் தானும் அரன் எனத் தொழுமேஎன மெய்கண்டாரும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சைவ வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலையினை ஓர் ஊர் பெற்றிருக்க வேண்டும்.  அதிலும் சைவத் திருக்கோவிலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பார். திருக்கோவில் இல்லாத ஊர் ஊரன்று காடு என்பார் திருநாவுக்கரசர்  இதனனதிருக்கோவில் இல்லாத திருஇல் ஊரும்என்று பாடுகின்றார்.

தன்னலமற்ற தொண்டு நெறி

      தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உள்ளதுஅவரவர்க்குரிய கடமையைச் செவ்வனே செய்தவதன்மூலம் சமுதாயம் நன்னிலை எய்தும்கடமை - குடும்பத்திற்கு ஆற்றுவது. தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது என விரிந்து கொண்டே செல்லும்இத்தகைய உயர்ந்த சிந்தனைகளைப் பின்பற்றி நமது ஆன்மீகச் சான்றோர்கள் தாமும் வாழ்ந்து. தாம் வாழும் சமுதாயத்தினரையும் வாழுமாறு வழிகாட்டியும் சென்றுள்ளனர்ஆனால் சிலர 

                தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

                சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்

                சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன் (பாரதிதாசன் கவிதை)

என்னும் சுயநலப்போக்குடன் வாழ்ந்து வருவதையும் காணலாம்.  இவர்களால் சமுதாயத்திற்குப் பயனேதுமில்லை.  மேலும் பிறரைப் பற்றிச் சிந்திக்கின்ற பொதுநலமும், உதவிடும் பரந்த உள்ளமும், பேராற்றல் மிக்க செயலும் அற்றவர்களாக ஆகிவிடுகின்றனர்.  மாறாகப் பட்டினத்தார், திருமூலர் போன்றோ துறவு நிலையிலும், உலக நன்மைக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துச் சென்றுள்ளனர். இத்தகைய அருளாளர்களுள் தன்னிகரற்றவராகத்  திகழும் திருநாவுக்கரசர்,

                என்கடன் பணி செய்து கிடப்பதே (நாவு.தேவா)

                தொண்டலால் துணையுமில்லை (நாவு. தேவா)

என்று அடக்கமாக அருள்மொழியினைக் கூறுகிறார்.  இவ்வரிகள் அனைவரது உள்ளத்தையும் தொட்டுநெகிழ வைத்த போதிலும் அவரது உள்ளக் கிடக்கையைப் பலரும் உணராதவர்களாகவே திகழ்கின்றனர்.

                கடன் - திரும்பச் செலுத்தவேண்டிய ஒன்று என்பது பொருள்.

                இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் அவ்விறைவனுக்குக் கடன்பட்டவர்களாவர்.  அக்கடனை இறைபணிகளால் செலுத்தலாம். அதற்கும் மேலாக இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலக உயிர்களுக்குச் சேவை செய்வதன் மூலமாகவும்  தம் கடனைத் தீர்க்கலாம்.  அவ்வாறு உலக உயிர்களுக்கு ஆற்றுகின்ற பணி தன்னலமற்றதாகவும், புகழ்ச்சியை விரும்பாததாகவும் இருத்தல் வேண்டும். இதனையே சேக்கிழார்,

                 வித்தகம் பேசவேண்டாம் பணிசெய வேண்டும் 1-5-41

என்று தடுத்தாட் கொண்ட புராணத்தில் குறிப்பிடுதல் நோக்கத்தக்கது.

                உலக உயிர்களுக்குத் தொண்டு புரிதல் வேண்டுமென்பதைத் தனிமனிதன் கடமையாகக் கொண்டால் மனிதநேயம் மண்ணில் மலரும்.

உழவாரப் பணி - சுற்றுப்புறத்தூய்மை      

    தொண்டு வழிபாடு என்பதுதான் உழவாரப் பணியாம்உடலால் கைகூப்பித் தொழுதலும், பாடித் தொழுதலும், வலம் வருதலுமாகிய செயல்களோடு மட்டுமின்றித் திருக்கோயிலையும் அதனைச் சார்ந்த திருக்குளத்தையும், மதில் சுவர்களையும் கோயிலுக்குச் செல்லும் பாதைகளையும் தூய்மைப்படுத்தித் தொண்டு செய்தல் வேண்டும்.

   உழவாரப்படையைக் கையிலேந்தி மற்றவர்க்கெல்லாம் முன்னோடியாகத் தாமே அத்தகு திருத்தொண்டுகளில் ஈடுபட்டவராகிய நாவுக்கரசர், மற்றவர்களும் இந்நெறியைப் பின்பற்றித் தூய்மையும், தெய்வீகத்தன்மையும் போற்றவேண்டும்என்னும் எண்ணத்தில் அறிவுறுத்துகின்றார்இதனைத் தம் தேவாரத்துள் என்கடன் பணிசெய்து கிடப்பதே எனப்பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

                திருவாரூர்ப் பெருமானின் அடிநிழற்கீழ்த் தொண்டுபட்டு உய்தல் வேண்டும் என நாவுக்கரசர் கூறுகின்றார்.

                ஆரூர் அமர்ந்தான் அடிநிழற் கீழ்த்

                தொண்டுபட்டுய்ம் மின்களே - 4-102-1

                இருபத்தோராம் நூற்றாண்டில் பெரிதும் பேசப்படும் சுற்றுப்புறத் தூய்மை, மாசுகட்டுப்பாடு முதலான செயல்பாடுகள் உழவாரப்படையின் மூலம் ஏழாம் நூற்றாண்டிலேயே செயல்படுத்தியவர்.  நாவுக்கரசர் எனில் மிகையாகாது.  எனவே இவரைச் சுற்றுப்புறத் தூய்மையின் முன்னோடி எனலாம்.

நிறைவுரை

                மேற்காணும் செய்திகளின்வழி மனிதச் சமுதாயம் சிக்கல் இல்லாமல் வாழவேண்டும்.  சமுதாயத்தினர் ஒவ்வொருவரும் வாழ வேண்டிய வழிமுறைகளை ஒத்த கருத்துடன் ஏற்றுப் பின்பற்றி நடத்தல் வேண்டும். அத்தகைய சமுதாயமே சிறந்த சமுதாயமாகத் திகழ்வதோடு அனைவரும் இன்புற்றிருக்கும் நிலையினையும் அடையமுடியும்.இதனால் சமுதாய மறுமலர்ச்சியும், சாதிசமய வேறுபாடுகள் அற்ற மனிதகுல ஒருமைப்பாடும் பெற்று சிறந்து விளங்கும் என்பது தெள்ளிதின் விளங்கும்.

அடிக்குறிப்புகள்

1. திருவாசகம், கண்டப்பத்து பா.5

2. குறள் - 972

3. பாரதியார் கவிதைகள், பாப்பா பாட்டு .235

4. தொல் பொருள் -நூற்பா 6

5. சிலம்பு நா. செல்வராசு, சமூகவியல் நோக்கில் தமிழ்மரபுகள் - .29.

6. குறள் 913

7. மேலது 972

8. சி.கே.சுப்பிரமணிய முதலியார், பெரியபுராண உரை தொகுதி 2 பக்.1363

9. திருமந்திரம் பா.2104

10. திருவாசகம் திருச்சதகம் பா.30

11. சிவஞானசித்தியார் நூற்பா -12 அதி-1-1

12. பாரதியார் கவிதைகள் சுதந்திரப்பள்ளு .65.

13. குறள் 80

14. திருமந்திரம் பா.270

15 .குறள் 757

16. மு.அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு 12 ஆம் நூற்றாண்டு .231

17. குறள் - 33

 

துணைநூற்பட்டியல்:

 

1.             சுப்பிரமணிய முதலியார், சி.கே               : பெரியபுராண உரை தொகுதி

                                                                                                  கோவைத் தமிழ்ச்சங்கம்

                                                                                                  கோயம்புத்தூர்.1935

2.             செல்வராசு.சிலம்பு. நா                                  : சமூகவியல் நோக்கில் தமிழ்மரபுகள்

                                                                                                  பாரி நிலையம், சென்னை.108

                                                                                                  பதிப்பு அக்டோபர் - 1989.

3.             அருணாசலம். மு.                                          : தமிழ் இலக்கிய வரலாறு 12 ஆம் நூற்றாண்டு

                                                                                                 காந்தி வித்யாலயம், மாயூரம்

                                                                                                 முதற்பதிப்பு - 1973.

4.             அருள்நந்தி சிவாச்சாரியார்                        : சிவஞானசித்தியார்

                                                                                                  திருவிடைமருதூர் ஆதீனம்

                                                                                                 திருவிடைமருதூர் - 612 104

                                                                                                 பதிப்பு - 1999.

5.             சுப்பிரமணிய முதலியார்,சி.கே                :பரியபுராண உரை தொகுதி

                                                                                                 கோவைத் தமிழ்ச்சங்கம்.

                                                                                                 கோயம்புத்தூர். 1935.

6.             செல்வராசு.சிலம்பு. நா                                   : சமூகவியல் நோக்கில் தமிழ்மரபுகள்

                                                                                                  நிலையம், சென்னை.108.

                                                                                                  பதிப்பு  அக்டோபர் - 1989.

7.             திருமூலர்                                                            : திருமந்திரம்  பன்னிரு திருமுறைப் பதிப்பு

                                                                                                  நிதி வெளியீடு

                                                                                                  ஸ்ரீ குமரகுருபரன் சங்கம்,

                                                                                                  ஸ்ரீ வைகுண்டம்

                                                                                                  பிப்ரவரி -1976.

8.             திருவள்ளுவர்                                                  :திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்

                                                                                                  பூம்புகார் பதிப்பகம், 63,பிராட்வே,

                                                                                                  சென்னை - 600 108.

                                                                                                 பதிப்பு : டிசம்பர் -1986.

9.             தொல்காப்பியர்                                                   :தொல்காப்பியம், சொல்லதிகாரம்,

  பொருளதிகாரம்

                                                                                                  அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு,

                                                                                                  அண்ணாமலை நகர்.

                                  பதிப்பு -1989.

10.           பாரதியார்                                                             : பாரதியார் கவிதைகள்

                                                                                                  பாரதி பதிப்பகம்

                                                                                                  126-108 உஸ்மான் சாலை,

  தி.நகர், சென்னை - 17.

                                                                                                  பதிப்பு: 2000.

11.           மாணிக்கவாசகர்                                      : திருவாசகம், எட்டாந்திருமுறை

                                                                                                  ஞானசம்பந்தம் பதிப்பகம்,

                                                                                                  தருமையாதீனப் பதிப்பு,

                                                                                                  மயிலாடுதுறை.  பதிப்பு-1997.