4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் - முனைவர் பீ. பெரியசாமி

 

தமிழ் இலக்கண உரையாசிரியர்கள்

முனைவர் பீ. பெரியசாமி

தமிழ்த்துறைத்தலைவர்,

டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விளாப்பாக்கம் – 632521.

முன்னுரை

பல ஆண்டுகளுக்கு முன் பாடல் வடிவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் பொருளை உரைவடிவில் விரித்து எழுதியவர்கள் தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் ஆவர். மொழிகள் காலப் போக்கில் மாற்றம் அடைகின்றன. பழைய சொற்கள் வழக்கிழப்பதும், புதிய சொற்கள் தோன்றுவதும் இயல்பு. இவற்றைவிட இலக்கண மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. இதனால் ஒரு காலத்தில் ஆக்கப்பட்ட நூல்களைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருவோர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இது மட்டுமன்றி குறிப்பிட்ட ஒரு காலத்தில் நூல்களை ஆக்குவதற்குப் பயன்பட்ட இலக்கிய வடிவம் பரவலாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்றதாக இல்லாமலும் போகக் கூடும்.

இந்த அடிப்படையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை கொண்ட இலக்கியத்தைக் கொண்ட  தமிழும் இதற்கு விதி விலக்கு அல்ல. சங்க காலத்திலும், அதன் பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள் மொழியில் ஏற்பட்ட மாறுதல்களால் புரிந்து கொள்ளப்படாமல் போனது ஒரு புறம் இருக்கப்  பா வடிவில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விடயங்களை விரிவாக விளக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டதனால் பிற்காலங்களில் இவற்றுக்குப் பல உரை நூல்கள் எழுந்தன.

இதனால் காலத்துக்குக் காலம் இத்தகைய நூல்களுக்கு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில்  உரைகள் எழுதப்படுவதும், மேலும் காலம் செல்ல அந்த உரைகளே புரிந்து கொள்ளப்படாது போகப் புதிய உரைகள் எழுதப்படுவது வழக்கமாக நிகழ்வதே.கி.பி.9-ஆம் நூற்றாண்டு முதல் 13- ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம் உரைகள் மேலோங்கிய காலம் எனலாம். இவ்வாறு வளர்ந்த இவ்வுரைகள் எழுதிய உரையாசிரியர்களின் காலம் கி.பி. 12 முதல் 18-ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது.

உரையாசிரியர்களும் திறனாய்வாளர்களே

உயர்தர நூல்களெல்லாம், அறிவென்னும் செம்பொன்னால் ஆக்கப்பட்டு இயல்பான உரையாணியால் ஒளி வீசப்படுவன. நூலின் மாற்றினைக் காண்பதற்கு நல்லாசிரியர்கள் உரைகல் வேண்டினர். அவ்வுரைகல்லே தமிழில் மதிப்பீடு அல்லது மதிப்புரை எனப்படுகின்றனது.” (புலமை நூல் (1752) பக்.208)

உரையாசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் (திறனாய்வில்) மிக மேம்பாடுற்றனர். அன்னார், பயில்வார்க்குத் தம் கருத்துக்களை அறிவியல் வழி காட்சியளித்தும், பலவேறு கருத்துக்களில் துணிவான கருத்துக்களைக் கூர்ந்தறியும் நெறிமுறைகளைச் சுட்டிக் காட்டியும் மதிப்பீட்டுக் கோட்பாடுகளை (Principles of Criticism)  உலகறிந்து வியக்கச் செய்தனர்.” (புலமை நூல் (1752) பக்- 214)

இலக்கியம் தோன்றியவுடனே ஆராய்ச்சியும் தோன்றியது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பழமையானது. இலக்கிய விருந்தை நம் முன்னோர்கள் வாரி வழங்கியுள்ளனர். தலைமுறை தலைமுறையாகவழிவழியாக அதை நாம் பார்த்து நுகர்ந்து வருகிறோம். எழுத்தினால் எழுதிவைக்கும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதே என்றாலும், ஆராய்ச்சி தொன்று தொட்டு இருந்து வருகிறது. பாட்டை, ஆராய்ச்சியாளர் புகழ்ந்தனர். அதை உலகிற்கு விளம்பரப்படுத்த முயன்றனர். உரையாசிரியர்கள் ஒருபடி முன்னே போய் இது தங்கள் கருத்து, இது இதன் கருத்து என்று காட்டினர்.” (தமிழ்த் தாத்தா (1959)பக்.64.)

 

உரையாசிரியர்கள் கையாண்ட உத்திகள்       

உரையாசிரியர்கள் வெறும் சொற்பொருள் விளக்கம் தருவதோடு நின்று விடாமல் இலக்கணக் குறிப்புத் தருதல், எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குதல், திறனாய்வு முறையில் விளக்குதல், வினாவிடை முறையில் விளக்குதல், எதனையும் வரிசை முறைப்படியும் ஒழுங்கு முறையிலும் எழுதுதல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டு விளக்கம் செய்வர். இவ்வுரையாசிரியர்களின் நடை ' விளக்க நடை' என்று கூறப்படுகின்றது. சிலபோழ்துகளில் மூல நூலை விட உரைநூல் சிறப்பாக அமைவதும் உண்டு. இவ்வாறான உரை நூல்களை எழுதிய உரை ஆசிரியர்களை இலக்கிய உரையாசிரியர்கள், வைணவ உரையாசிரியர்கள்,  சைவ சித்தாந்த உரையாசிரியர்கள் எனப் பகுத்துக் காண்பர்.

இலக்கண உரையாசிரியர்கள்

இலக்கண நூல்களுக்கு உரை எழுதியோர் இலக்கண உரையாசிரியர்கள் ஆவர். அவர்களுள் மிகவும் பெருமைக்குரியோர் சிலர், நக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், குணசாகரர், கல்லாடர், மயிலைநாதர், ஆறுமுக நாவலர் ஆகியோர்.

நக்கீரர்

இறையனார் களவியல் என்னும் நூல்  பற்றிக் கூறும் இலக்கண நூல். இதனை இறையனார் அகப்பொருள் என்றும் குறிப்பிடுகிறோம். தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. இதற்கு  நக்கீரர் என்பவர் உரை எழுதியுள்ளார். இதனை இறையனார் களவியல் உரை என்கிறோம். 13 ஆம் நூற்றாண்டுப் பவணந்தி முனிவர் இவரது உரையைத் தழுவி நன்னூல்  என்னும் இலக்கண நூலைச் செய்திருப்பதாலும், அதே 13 ஆம் நூற்றாண்டு  சேனாவரையர் தம் உரையில் இவரது உரையை மேற்கோள் காட்டுவதாலும், 12 ஆம் நூற்றாண்டு அடியார்க்கு நல்லார் இவரது பெயரைச் சொல்லிப் பாராட்டுவதாலும், இவர்களின் காலத்துக்கு முற்பட்டவர். இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு. இவரது உரையில் காதல் வாழ்க்கை பற்றி விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.  முச்சங்க வரலாறு பற்றிய தொகுப்புக் குறிப்பினை முதன்முதலில் தந்த உரையாசிரியர் இவர். உரைநடை வளர்ச்சியில்  சிலப்பதிகாரத்தில் வரும் உரைப்பாட்டு டை என்னும் பகுதிக்குப் பின்னர் தமிழில் காணப்படும் உரைநடை இந்த உரைநூல்.

நக்கீரர் இயற்றியதாக உரை தோன்றிய வரலாறு குறிப்பிடுகின்றது. இவ்வுரையைப் படிக்கும் போது, இலக்கண உரையைப் படிக்கின்றோம் என்ற நினைவே எழுவதில்லை. இனிய இலக்கியம் போல், தொட்ட இடமெங்கும் இவ்வுரையில் இலக்கியச்சுவை தேங்கிக் கிடக்கின்றது. எண்ணுந்தோறும் இனிக்கின்ற உவமை, எளிதில் பொருளுணர்ந்து மகிழத்தக்க வகையில் அமைந்த தெளிவான போக்கு, அளிவிற்கு விருந்தாய் உள்ள சிறந்த மேற்கோள், வாகை சூடி வெற்றிப் பெருமிதத்துடன் நடந்து செல்லும் வீரனின் பீடு நடை ஆகியவை  இவ்வரையில் உண்டு. (உரையாசிரியர்கள் - 155)

பளபளப்பான பல நிறச் சலவைக் கற்கள் அழுத்திப் பொன் மினுக்குப் பூசிப் பல பல அடுக்கு மாடங்கள் உடைத்தாய் வான்முகடு அளாய், காண்பார் கண்ணுங் கருத்தும் கவரும் நீர்மைத்தாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம்போல், ஆசிரியர் நக்கீரனாரது உரை நிவந்து நிற்றலும், அம்மாடத்தின் அருகே புல் வேய்ந்த குடிலும், ஓடு மூடியதொரு சிற்றில்லும் ஏழைமைத் தோற்றமும் உடையவாய்த் தாழ்ந்து நிற்றல்போல் இளம்பூரணர் பேராசிரியர் உரைகள் பீடு குறைந்து நிற்றலும் பிரிந்து இனிது விளங்கா நிற்கும்” (மணிவாசகர், வரலாறும் காலமும்பக்.628)

தமிழறிஞர் க.வெள்ளை வாரணனார், இவ்வுரையைச் சிறந்த உரை நடை இலக்கியம் என்று பாராட்டுகின்றார். (இலக்கணச் சிந்தனைகள் (1973) பக். 142, 145.)

இவ்வுரையாசிரியர், பின்வந்த உரையாசிரியர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றார். பெரும்பாலும் எல்லா உரையாசிரியர்களும் பாயிரம் பற்றி இவர் கூறிய கருத்துக்களையே, இவர் கூறிய முறையிலேயே கூறுகின்றனர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், மயிலை நாதர் ஆகியோர், தாம் எழுதிய உரையின் தொடக்கத்தில் எழுதும், பொதுப் பாயிர விளக்கங்களில் இவ்வுரையாசிரியர் குரலின் எதிரொலியே கேட்கின்றது. இவர் கூறிய பல உவமைகளும் சொற்பொருள் விளக்கமும் பிற்கால உரைகளில் சென்று பரவிச் செல்வாக்குடன் பொலிகின்றன. (உரையாசிரியர்கள் – 156)

உரை தோன்றிய கதை

அரசனும் இது சொல்லினான், யாம் காரணிகளைப் பெறுமாறு என்னை கொல்? என்று சிந்திப்புழி, சூத்திரஞ் செய்தான் ஆலவாயில் அவிர்சடைக் கடவுளன்றே, அவனையே காரணிகளையும் தரல் வேண்டும் எனச் சென்று வரங்கிடந்தும் என்று வரங்கிடப்ப, இடை யாமத்து, “இவ்வூர்  உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான் பைங்கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப் பிராயத்தான், ஒரு மூங்கைப் பிள்ளை உளன், அவனை அன்ன்ன் என்று இகழாது கொண்டு போந்து, ஆசனத்தின் மேல் இரிஇக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைத்தாற் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும், மெய்யாயின உரை கேட்டவிடத்து, மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும். அவன் குமார தெய்வம், அங்கோர் சாபத்தினால் தோன்றினான் என முக்கால் இசைத்த குரல் எல்லார்க்கும் உடன் பாடாயிற்று. ஆக எழுந்திருந்து, தேவர் குலத்தை வலங்கொண்டு போத்து, உப்பூரி குடி கிழாருரைச் சங்கமெல்லாம் சென்று இவ்வார்த்தை எல்லாம் சொல்லி, “ ஐயனாவான் உருத்திர சன்மனைத் தரல் வேண்டும்என்று வேண்டிக் கொடு போந்து, வெளியது உடீஇ, வெண்பூச் சூட்டி, வெண்சாந்து அணிந்து கல்மாப்பலகையேற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைப்ப எல்லாரும் முறையே பொருளுரைப்பக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிளநாகனார் உரைத்தவிடத்து ஒரோவிடத்துக் கண்ணீர் வார்ந்து, மெயம்மயிர் நிறுத்தி, பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்தவிடத்துப் பதந்தொறுங் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப, ஆர்ப்பெடுத்து, “மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு!“ என்றார். (உரையாசிரியர்கள் – 157-158)

முச்சங்கங்களின் வரலாற்றினைக் கூறி, இறையனார் அகப்பொருளும் அதன் உரையும், கடைச் சங்க காலத்தை அடுத்துத் தோன்றியவை என்று கூறுகின்றது இவ்வுரை. (உரையாசிரியர்கள் – 158).

ஆராய்ச்சியாளர் கருத்து

இறையனார் அகப்பொருள் உரையாசிரியரைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ள கருத்துகள் நம்மைமேலும் சிந்திக்கத் தூண்டுகின்றன. அவற்றைக் காண்போம். டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்,  இறையனார் அகப்பொருளுக்கு இப்பொழுதுள்ள உரை நக்கீரரால் இயற்றப்பட்டதன்று. சிலப்பதிகாரப் பாடல்கள் அதில் மேற்கோளாக வந்துள்ளன. ஆகையால், நக்கீரர் அதை இயற்றியிருக்க மாட்டாரென்று நினைக்கிறேன். அவர் மாணாக்கர் பரம்பரையில் உரை மட்டும் வந்ததென்று தோற்றுகின்றது. மேற்கோள்கள் பிற்காலத்து ஒருவரால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.” (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், பக் – 159)

உரைநடைப் பாங்கு

தானே அவளேஎன்று சொல்லப்பட்டது என்னும் இவ்வுரையும் பொருந்தாது. என்னோ காரணம் எனின், கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும் எனவே, தமியராய்ப் புணர்தல் முடிந்தது; இன்னும் ஒருகால் அப்பொருளையே சாலப் புணர்த்துமாம் என்பது. மற்று என்னோ உரையெனின், தானே அவளே என்பது, ஆண்பால்களுள் இவனோடு ஒத்தாரும் இல்லை, மிக்காரும் இல்லை, குறைபட்டார் அல்லது; எக்காலத்தும் எவ்விடத்தும் ஞானத்தானும் குணத்தானும் உருவினானும் திருவினானும் பொருவிலன்தானே என்பது; இவளும் அன்னள் எனவே, இருவரும் பொருவிறந்தார் என்பதனைப் பயக்கும். நின்ற ஏகாரம், ஐந்து ஏகாரத்துள்ளும் என்ன ஏகாரமோ எனின், ஆண்குழுவில் இவனையே பிரித்து வங்கினமையானும், பெண்குழுவில் இவளையே பிரித்து வங்கினமையானும் பிரிநிலை ஏகாரம் எனப்பட்டது; பலவற்றுள் ஒன்று பிரிப்பது பிரிநிலை ஏகாரம் எனப்படும் ஆகலான் என்பது.

தமிழ்நெறி விளக்கம்

தமிழ்நெறி விளக்கம் ஒரு தமிழ் இலக்கண நூல். இதன் பெரும் பகுதி இன்று மறைந்துவிட்டது. இதன் பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகிய அகப்பொருளின் களவியல் சார்ந்த 21 பாடல்கள் உட்பட மொத்தம் 25 பாடல்கள் மட்டுமே இப்போது கிடைத்துள்ளன. (இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009. பக். 228.)இது தோன்றிய காலம் 9 ஆம் நூற்றாண்டு. இறையனார் களவியல் உரை, யாப்பருங்கல விருத்தி உரை, சிலப்பதிகார அரும்பத உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை, களவியல் காரிகை உரை ஆகிய நூல்கள் தமிழ் நெறி விளக்கத்திலிருந்து பாடல்களை மேற்கோளாகப் பயன்படுத்தி உள்ளன. இந்நூலில் தற்போது கிடைத்துள்ள பகுதி முழுதும் ஆசிரியப்பாவினால்  இயற்றப்பட்டுள்ளது. இறையனார் களவியல் என்னும் முந்திய அகப்பொருள் நூலைச் சுருக்கி எழுதியதே இந்த நூல் என்று சொல்லப்படுகிறது. முற்சொன்ன நூலின் 60 பாடல்களில் சொல்லப்பட்டவை இதிலே 25 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. மிகவும் சிதைந்த நிலையில் கிடைத்த ஒரு ஏட்டுப் பிரதியில் இருந்து எடுக்கக்கூடியதாக இருந்த இந்த 25 பாடல்களையும் உ.வே.சாமிநாதையர்   1937 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.

தமிழ்நெறி விளக்கம் என்பது முன்னும் பின்னும் சிதைந்து அரைகுறையாகக் கிடைத்த நூல். இதனைப் பதிப்பித்தவர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். அவர் பதிப்பித்த நூலில் அகப் பொருளைப் பற்றிக் கூறும் 25 சூத்திரங்களே உள்ளன. (உரையாசிரியர்கள் – 626)

நூலாசிரியர் பெயரும் உரையாசிரியர் பெயரும் தெரியவில்லை. (உரையாசிரியர்கள் – 627)

உரையின் இயல்பு

உரை மிகவும் சுருக்கமாய் எளிமையாய் உள்ளது, (உரையாசிரியர்கள் – 628)                                                                                                                                                                                                                                                                                      தொடரும்……