4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

ஹாங்காங்கில் பாரதியின் சுவடுகள் (Bharathi in Hong Kong) - முனைவர் .சித்ரா

 

ஹாங்காங்கில் பாரதியின் சுவடுகள்

(Bharathi in Hong Kong)

முனைவர் .சித்ரா,

விரிவுரையாளர், SCOPE,

City University of Hong Kong,

ஆங்காங்.

நெல்லை அருங்காட்சியகம் மற்றும் பொதிகை தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும், இந்தநூற்றாண்டு கடந்தும் பாவாண்டு நிற்கும் பாரதிஎன்ற நிகழ்ச்சியில்ஆற்றிய உரையின்கருத்துப்பொருண்மைகள்.

நான் 25 ஆண்டுகளாக ஹாங்காங்கில் வசித்து வருகிறேன். இந்த 25 ஆண்டுகளில், ஹாங்காங்கில் பாரதியின் சுவடுகள்என்ற தலைப்பில், நாங்கள் பாரதியை எப்படி கொண்டாடினோம் என்பதை பற்றி தான், இந்த நிகழ்ச்சியில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை கொடுத்து விட்டு, பிறகு என்னுடைய பேச்சிற்கு செல்லலாம் என்று எண்ணுகிறேன். நான் பிறந்தது காந்திகிராமம் அருகே இருக்கும் சின்னாளப்பட்டி என்ற சிற்றூரில். என் தந்தை மெய்யப்பன் அவர்களுக்கு தமிழ் மேல்அதிக பற்றுஉண்டு.பலசிறுகதை நூல்களையும்,நாவல்களையும், நாடகங்களையும், திரைக்கதைகளையும், பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். அதன் காரணமாக எனக்கும் தமிழ்ப் பற்று சிறிது தொற்றிக்கொண்டது என்றே சொல்லலாம்.

பள்ளி நாட்களில் நான் தமிழை மிகவும் விரும்பிப் படித்தேன். பாரதி எனக்கு அறிமுகமானது பாடநூல்கள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும், மேலும் குறிப்பாகச்சொன்னால்சேர்ந்திசைப் பாடல் மூலமாகவும் தான். பள்ளி விழாக்களின் போது, எப்போதுமே ஓடி விளையாடு பாப்பா பாடல், அரசு சேர்ந்திசை குழுவின் மூலமாக பாடப்பட்ட பாடலானதுபள்ளி முழுவதும் எதிரொலிக்கும். அதைக் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். இன்றும் கூட அந்தப் பாடல் என் நினைவில் அடிக்கடி வந்து போகும். 

பள்ளி நாட்களில், நான் எப்போதும் மிகவும் அமைதியாக இருக்கும் பெண். திடீரென்று எனக்கு பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. அதற்கு என் தந்தை முழு ஒத்துழைப்பு கொடுத்தார். உரைகளை எழுதிக் கொடுத்துஅதை எப்படி பேசவேண்டும் என்று கற்று கொடுத்தவரும் அவரே. பள்ளி இறுதி ஆண்டுகளில் தான் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ள துவங்கினேன். 

அந்த நேரத்தில்தான் பாரதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நடந்தது. அதற்கான பேச்சுப்போட்டிகள் பல இடங்களிலும் நடந்தன. அரசு நடத்தும் பேச்சு போட்டியில் கலந்து கொள்ள முதல் முதலில் சென்றேன். உரையினை தயார்படுத்திக் கொண்டு போட்டிகளில் பங்கு பெற்றுக் கொண்டிருந்த நான், அன்று தான் முதன் முதலில்,ஆயத்தம் இன்றிபோட்டியின் போது கொடுக்கப்படும் தலைப்பில் பேசும்போட்டியில் கலந்து கொள்ள தைரியத்துடன் சென்றேன். அவர்கள் கொடுத்த தலைப்பில் எப்படியோ தைரியத்துடன் பேசி முடித்தேன். அதில் எனக்கு பரிசும் கிடைத்தது. என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. முதல் முயற்சியே வெற்றி என்றால் அது யாருக்குத்தான் இனிக்காது. அன்றிலிருந்து எனக்கு பாரதி நிச்சயம் ஒரு உத்வேகம் தரும் கவிஞராகவே இருந்தார்.

இந்த மனப்பதிவுகளையெல்லாம் நான் ஏன் தங்களிடம்கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். என்னுடைய இந்த ஆர்வமும் வெற்றியும் தான் ஹாங்காங்கில் வாழும் போது பாரதியின் பாடல்களையும் தமிழ் கலைகளையும் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கற்றுத் தந்து அரங்கேற்றுவதற்கு வித்தாக அமைந்தது என்றே சொல்லலாம்.  

அங்கு நானும் என்னுடன் அங்கு வசித்து வந்த அனைத்து தமிழ் மக்களும் மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு பல வகைகளில் அஞ்சலி செலுத்தி வந்திருக்கிறார்கள்; செலுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 50 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுக்கு சிறப்பான பணிகளை செய்துவரும் தமிழ் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங்கில் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு கழகம். ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அப்போது குழந்தைகளும் பெரியவர்களும் அதில் பங்கு எடுத்துக் கொண்டு, தமிழைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை தருவார்கள்.

எனக்கு முதன்முதலில் அதில் கலந்துக்கொள்ளும்வாய்ப்பு கிடைக்க போது, நான் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பேசினேன். அதன் பிறகு என்னுடைய குழந்தைகளையும், நாங்கள் வாழ்ந்த பகுதியில் இருந்த குழந்தைகளையும் வைத்து, குழந்தைகள் கலைக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி, நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு நிகழ்ச்சி தமிழார்வம். தமிழ்ப் புலவர்கள் பலரையும் அறிமுகப் படுத்தும் நிகழ்வு. திருவள்ளுவர், ஆண்டாள், கம்பர், ஔவையார், வள்ளலார்போன்றோருடன்பாரதியும்அறிமுகப்படுத்தப்பட்டார்.  இப்படித்தான் எங்கள் பகுதியில் இருந்த தமிழ் குழந்தைகளுக்கு பாரதியைப் பற்றி நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.பாரதி வேடமிட்டு ஒரு சிறுவன் பாரதி பாடலைப் பாடிய வண்ணம் வந்தான். அதன் பிறகு வந்த பல மாறுவேட நிகழ்ச்சிகளில் பாரதி இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடந்தது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதேபோன்று பாரதி பாடல்கள் இல்லாத ஒரு தமிழ் நிகழ்ச்சியும் இல்லை என்றே கூற வேண்டும்.  

அடுத்த மிகப்பெரும் நிகழ்ச்சி, விதியோ கணவரேஎன்ற தலைப்பில் பாரதியின் பாஞ்சாலி சபதம் பாடல்களைக் கொண்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றியதுதான். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற இந்திய தூதரக அதிகாரியான திரு ஸ்ரீதரன் அவர்களின் மேற்பார்வையில், திரு மு. ராமநாதன்அவர்களது தயாரிப்பில் உருவானதுதான் விதியோ கணவரே என்ற நாடகம். தமிழ்ப் பற்றாளர்கள் இணைந்து, பாடல்களை மணனம் செய்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தித்தந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். நான் இந்த நாடகத்தில் நடிக்க வில்லை என்றாலும் என்னுடைய கணவர் பீஷ்மர் ஆகவும், தங்கை பாஞ்சாலி ஆகவும், அவளது கணவர் துணை நடிகராகவும், நடித்த காரணத்தால், அந்த நாடக தயாரிப்பில் முழுமையாக இருந்ததன் காரணமாக, இன்றும் அது என்னுடைய நினைவில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது.

பயணி என்ற திரு ஸ்ரீதரன் அவர்கள் திண்ணை இணைய இதழில் இந்த நாடகத்தைப் பற்றி கூறியதாவது: பாரதியின் பாஞ்சாலி சபதம், 'விதியோ கணவரே?'என்ற தலைப்பில்மு இராமனாதன் இயக்கத்தில் ஹாங்காங் தமிழ்ச் சங்கத்தின் 14 டிசம்பர் 2002 அன்று நிகழ்ந்த பாரதி விழாவில் மேடையேற்றப்பட்டது. சூதாட்டத்தில் துவங்கி, பாஞ்சாலியின் சபதம் வரையிலான கதை சொல்லப்பட்டாலும், 'நம்பி நின்னடி தொழுதேன் - நாணழியாதிங்குக் காத்தருள்வாய்'எனப் பாஞ்சாலி கண்ணனை வேண்டுவதும், அவனருளால் 'பொன்னிழை பட்டிழையும் - பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய் ' சேலைகள் வளர்வதும் இல்லை. அர்ஜுனன் மற்றும் பீமனின் சபதங்களும் இல்லை. வெறுப்பும் கோபமும் திமிர்ந்த பாஞ்சாலியின் கேள்விகளே நாடக இறுதியை நிறைத்தனஎனலாம்.

பாரதியின் வாழ்க்கையை பற்றி குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது, அதை பேச்சின் மூலம் இல்லாமல் சுவையாக தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஒரு கதாகாலட்சேப நிகழ்ச்சியை நடத்திக் காட்டினோம்.  




பாரதியின் பிறந்த நாளையொட்டி, 2003ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி, தமிழ் பண்பாட்டுக் கழகம் மூலமாக, பாரதி விழா ஏற்பாடானது. அந்த நிகழ்ச்சியை என்றுமே என்னால் மறக்க முடியாது. காரணம், அதில் பல சுவையான நிகழ்ச்சிகள் இருந்தன. பாரதியின் பாடல்களில் பலவும் நடனங்களாகத்தரப்பட்டன.

பாரதி நாட்டியம் என்ற பெயரில் பொழுது புலர்ந்தது என்ற  பாடலையும் வெடிபடு மண்டத் தாளம் போட என்ற ஊழிக்கூத்து பாடலையும் திருமதி அனிதா ரால்ப் மற்றும் திருமதி அனுராதா முகுந்தன் என்ற இருவரும், எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் என்ற பாடலை திருமதி ரஞ்சனி மேனன் அவர்களும் நடனத்தின் மூலமாக படமாக்கி காட்டினார்கள். மேலும், ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, என்று வரும் பாரதிபாடல்களை, ஹாங்காங்கில் இருந்த சிறந்த நடன மணிகள் நாட்டியத்தில் கொண்டு வந்தார்கள்.  காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற பாடலுக்கு திரு ராஜேந்திரன் அவர்களும், திக்குகள் எட்டும் சிதறி என்ற பாடலுக்கு திருமதி அனிதா ரால்ப் மற்றும் திருமதி அனுராதா முகுந்தன் அவர்களும், அக்னிக் குஞ்சொன்று கண்டேன் என்ற பாடலுக்கு திரு ராஜேந்திரன் அவர்களும், உயிரே நினது பெருமை என்ற பாடலுக்கு திருமதி ரஞ்சனி மேனன் அவர்களும் நடனமாடி, பாரதியின் பாடலுக்கு சுவைக் கூட்டினர். இப்படி ஐம்பூதங்களின் பொருண்மைக்குப் பாடலை எடுத்து நடனமாடியது, இன்றும் என் நினைவில் நின்றிருக்கிறது.

மீண்டும், பாரதியை நினைவு கூறும் வகையில் 2007இல் பிப்ரவரி 10ஆம் தேதி  மற்றொருபாரதி விழா நடத்தப்பட்டது. அதில் குழந்தைகளின் பாரதி பாடல்களும், பாரதி பற்றிய பேச்சுக்களும், பாரதியின் பாடல் வரிகளுக்கான நடனங்களும் இடம் பெற்றன. இதுவும் நெஞ்சில் நின்ற விழா. ஏனெனில், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தியை தினமலர் நாளிதழுக்கு அனுப்பி அது என்னுடைய முதல் செய்தியாய் அந்த நாளிதழில் வெளி வந்தது. அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் நான் தினமலர் செய்தியாளராக இருந்து வருகிறேன்.

மற்றொருநிகழ்ச்சியில் தரங்கிணி சேர்ந்திசை குழுவின் உறுப்பினரான உதய் ஜெயராம் என்ற சிறுவன் பாரதியின் காக்கை சிறகினிலே என்ற பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தான்.


பின் வந்த ஆண்டுகளில் பாரதியை சிறப்பிக்கும் வண்ணம் தமிழ் பண்பாட்டுக் கழகம், பாரதியின் உருவத்தை தன்னுடைய கழகத் சின்னமாக ஆக்கிக் கொண்டது.


ஹாங்காங்கில் பல்வேறு இடங்களில் நடக்கும் பன்னாட்டு நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் கலந்து கொள்ளும் போது அங்கே அமைக்கப்படும் அரங்குகளில் பாரதியின் படம் கொண்ட பதாகை அவசியம் இருக்கும்.



ஹாங்காங்கில் வாழும்தமிழர்களில் பலர் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அவர்கள் தமிழ் மேல் இருந்த பற்றினால், இலக்கிய வட்டம் என்ற ஒரு குழுவை  2002 இல் தொடங்கினார்கள். தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு முறையான மேடையாய் அது அமைந்தது. இலக்கிய வட்டத்தை நிறுவியவரும் அதன் ஆரம்பகால ஒருங்கிணைப்பாளரும் திரு எஸ் நரசிம்மன் ஆவார். சமயம் வாய்க்கும்போது கூடுவதும், படித்து ரசித்ததை அனுபவித்ததை பகிர்ந்து கொள்வதும், வட்டத்தின் எளிய செயல்திட்டம் ஆக இருந்தது. விருப்பமுள்ளவர்கள் வரலாம்; பேசலாம். 3, 4 கூட்டங்களுக்கு பிறகு தமிழ் இலக்கியம் மட்டுமன்றி பிற மொழி இலக்கியங்களை குறித்தும் வாழ்வனுபவங்கள் குறித்தும் இலக்கிய வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆனது. 

அந்த இலக்கியக் கூட்டத்தில் பதின்மூன்றாம் கூட்டம்  3 ஜனவரி 2005 இல் நடந்தது அன்று திரு பா குருநாதன் அவர்கள்பாரதி என்ற தலைவன் தந்த தாரக மந்திரம்என்ற தலைப்பிலும்,திருமதி கவிதா குமார் அவர்கள்பாரதியின் கனவு சமுதாயம்என்ற தலைப்பிலும் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவர் திரு மு. ராமநாதன் அவர்கள்.

ஒப்பற்ற இலக்கியவாதியாக, மகாகவியாக, தேசியவாதியாக, பத்திரிக்கையாளராக, சிந்தனையாளராக, ஞானியாக, மனிதாபிமானியாக அவர் என்றும் அறியப்பட்டவர், அறியப்படுகிறார். ஆனால், அவர் ஒரு தன்னிகரில்லா தலைவராகவும் இருந்திருக்கிறார் என்பது வெகுவாக அறியப்படாத பேசப்படாத ஒன்று என்று கூறி ப. குருநாதன் பாரதி என்ற தலைவனை தன்னுடைய பேச்சிலே அறிமுகப்படுத்தினார். 

ஒரு தேச தலைவனுக்கு தொலைநோக்கு பார்வை வேண்டும். சீரிய தெளிவான சிந்தனை வேண்டும். எண்ணம் வேண்டும். பரந்த மனதும் விரிந்த பார்வையும் வேண்டும். பாசாங்கில்லாத நேயம் வேண்டும். எண்ணியதை சொல்கின்ற செயல்படுத்துகின்ற துணிவும் திறனும் வேண்டும். சொல்லுவதை செய்ய வேண்டும். செய்யக் கூடியதை மட்டுமே சொல்லவேண்டும். சொல்லுவதை தானே செய்து காட்ட வேண்டும். கடைபிடிக்க வேண்டும். ஆக்கமும் ஊக்கமும் வேண்டும். பகுத்தறிவும் பட்டறிவும் கொண்டு திட்டம் தீட்டித் தருதல் வேண்டும். தன்னலமில்லாத தன்மை வேண்டும். பின்னிலிருந்து தள்ளாமல் முன்னின்று வழி நடத்துதல் வேண்டும். துணிவு மட்டுமின்றி பணிவும் கனிவும் கூடவே வேண்டும். இப்படி ஒரு தலைவனுக்கு உள்ள குணநலன்களை அடுக்கியவர் பாரதியிடம் எப்படி இவை எல்லாமே இயல்பாக இருந்தது என விவரித்தார். 

பாரதியின் கனவு சமுதாயம் என்ற தலைப்பில் திருமதி கவிதா குமார் பேசிய போது, பாரதி கனவு கண்ட பெண்கள் முன்னேற்றம், விஞ்ஞான முன்னேற்றம், கல்வித் துறை தொழில்துறை முன்னேற்றம் போன்றவையே அவரது கனவு சமுதாயம் என்று பேசினார்.

தமிழை தமிழனுக்கு மீட்டெடுத்து கொடுத்த தமிழுக்கும் நாட்டுக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மகாகவி பாரதியின் 125ஆம் ஆண்டு விழா இலக்கிய வட்டத்தின் 19வது கூட்டமாக, ஜனவரி 27 2007 அன்று, பாரதி 125 என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. கேட்ட வரம் தருவாய் என்ற பாரதியின் பாடலை மழலைச் செல்வங்கள் பண்ணிசைக்க, விழா ஆரம்பித்தது. திரு செந்தில்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 

எந்த ஒரு மனிதனுக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர், ஆசிரியர், நூல்கள், இயக்கங்கள் போதிக்கின்ற கொள்கைகள் என ஏதாவது ஒரு வகையில் தாக்கங்கள் ஏற்படும். அந்த வகையில் பாரதியின் படைப்புகளில் ஆங்கிலக் கவிஞர் செல்லியின் தாக்கம் நிறைய உண்டு என்பதைபாரதியின் படைப்புகளில் செல்லியின் தாக்கம்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் திரு ராஜேஷ் ஜெயராமன் அவர்கள். 

திரு ப. குருநாதன் அவர்கள், தோழர் பாரதிஎன்ற தலைப்பில் பாரதியின் 3 தோழர்களைப் பற்றி குறிப்பிட்டார். பாரதிதாசனிடம் கொண்ட கவித்துவம் நிறைந்த தோழமை, எந்நேரமும் உடனிருந்து சேவகம் புரிந்து படித்து மகிழ்ந்த குவளைக் கண்ணனின் அன்பு, இறைவனான கண்ணபிரானே தோழனாக வரித்து பாதித்த மெய்யன்பு பற்றி பேசினார்.  

கடைசியாக எழுத்தும் வாழ்க்கையும் என்ற தலைப்பில், எழுத்தையே வாழ்க்கையாக கொண்டு தமிழை மூச்சாக கொண்டு,  கவிதையை தொழிலாகக் கொண்டு வாழ்ந்த பாரதி, அதனால் வாழ்க்கையில் அல்லலையும் அந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அவரது கடிதங்கள் இருந்தன என்றும் பேசினார் திரு மு. ராமநாதன் அவர்கள்.

நிறைவாகப் பேசிய திருசே முகமது யூனூஸ்அவர்கள், பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாரதியை புகழ்ந்து பாடியது தமிழுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாகத்தான் என்றார். பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பதை நாம் உலகறியச் செய்ய வேண்டும், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும், தமிழர்களாகிய நாம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் வளர செய்வோம் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் பாரதி பாடல்களை கிருஷ்ணப்ரியா, ராதிகா, ரேணுகா, சாக்ஸி,அகில், மாதவ் என்றசிறுவர் சிறுமியர்,பேச்சுக்களின் இடை இடையே பாடி சிறப்பித்தார்கள். 

நான் எப்படி இந்த நிகழ்ச்சியைப் பற்றி இவ்வளவு துல்லியமாக சொல்கிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதற்கு காரணம் இலக்கிய வட்டம் நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள் கொண்ட இலக்கிய வெள்ளி என்ற நூல் வெளியிடப்பட்டது. அதன் காரணமாக எனக்கு அந்த நிகழ்வுகளில்நடந்த அனைத்துவிஷயங்களும் பதிவாக கிடைத்தது. எனக்கு பயன்படும் வகையில், அதை தொகுத்துக் கொடுத்த திரு மு. ராமநாதன் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



ஹாங்காங்கில் இருக்கும் தமிழ் குழந்தைகள் தமிழ் மொழியை படிக்க கற்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு  2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட YIFC தமிழ் வகுப்புகளிலும், பாரதியைப் பற்றி, பல குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது ஆண்டு விழாவின்போது பாரதியின் பாடல்கள் பாடப்பட்டன. ஒருமுறை சிந்து நதியின்மிசை என்ற பாடலுக்கு நடனமும் கற்றுக் கொடுக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. மாறுவேட நிகழ்ச்சிகளில் பாரதி நிச்சயம் இடம் பெறுவார்.

ஹாங்காங்கில் குழந்தைகளுக்கு இந்தியாவைப் பற்றியும் தமிழகத்தை பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு  2000 ஆம் ஆண்டில், தொடங்கப்பட்டது குழந்தைகள் கலைக்குழு. அதன் குழந்தை உறுப்பினர்கள் தமிழ் பண்பாட்டுக் கழகத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு தமிழைப் பற்றி தமிழ்மொழியின் சிறப்பை பற்றி அறிந்து கொண்டார்கள்.  

இந்திய தூதரகம் நடத்தும் சுதந்திர தின விழாவிலும் குடியரசு தின விழாவிலும் தமிழ் பாடல்களை பாடி சிறப்பித்தார்கள். ஓடி விளையாடு பாப்பா, வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் ஆகிய பாடல்களை அவர்கள் கற்று பாடியது பாரதியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது எனலாம்.  

மேலும் குழந்தைகள் கலைக் குழு நடத்திய தமிழ் வகுப்புகளில் பாரதி பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் நினைவுகூரப்பட்டு அவரைப் பற்றி பேசப்படும்.

ஹாங்காங் அமைப்பு நடத்திய சர்வதேச திரைப்பட விழாவின் போது, ஒருமுறை பாரதியார் திரைப்படம் ஹாங்காங்கில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் அரசு ஹாங்காங்கில் வசிக்கும் பிற நாட்டவர்கள் தங்களது பண்பாட்டை எடுத்துக் கூறும் வாய்ப்பினை நல்கும் வகையில் CIBS என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. அந்த சேவையில் 13 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சியை ஒரு குழு தர வேண்டும். அப்படிப்பட்ட தொடர் நிகழ்ச்சிகளில் Let’s Talk in Tamil என்ற மூன்றாம்தொடரில், ஒரு முறை திரு ராம் என்கிற வெங்கட்ராமன் அவர்கள் தயாரித்த நிகழ்ச்சியில் பாரதியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியும் தரப்பட்டது. ஹாங்காங் மக்களுக்கு பாரதியை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிட்டியது.



சென்ற மாதம் பாரதியின் பிறந்தநாள், அன்று திரு ராம் அவர்களின் முன்னெடுப்பால், பாரதி பற்றிய ஒரு இணைய வழி விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமதி ரூபா சாஸ்திரி அவர்களின் ஏற்பாட்டில்பாரதியின் குடும்பத்தின் வழிவந்தசூர்ய பாரதி, அமிர்தா பாரதி மற்றும்பாரதி ராஜகோபால்ஆகியோரின்பங்கேற்பும், அவரது பாடல்களை அவர்கள்பாடி சிறப்பித்ததும்குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில்ஹாங்காங்கில் வாழும்தமிழ் ஆர்வலர்கள் பலரும்,பாரதியின் பாடல்களைப் பாடியும், பாரதியைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்தும் கொண்டனர்.

ஹாங்காங்கில் வெளி வரும் சந்தேஷ் பாரதி (Sandesh Bharathi) என்ற ஆங்கில இதழ், ஒருமுறை பாரதியைப் பற்றிய அட்டைப்பட கட்டுரையை தாங்கி வந்தது. அதை ஒரு வட இந்தியரான திரு நிர்மல் என்பவர் எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.




பள்ளி நாட்களில் எனக்கு போட்ட தமிழ் ஆர்வத்தின் வித்து என்னை இதுவரையில் கொண்டு வந்திருக்கிறது. இதுவரை என்னுடைய நினைவில் நின்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்வாழ்ந்த நாம், நமக்கு பாரதி பணித்த பணிகளை செய்து, தமிழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது என் கருத்து. அதை சிறந்த முறையில் செய்து வரும் இந்த அமைப்பினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தற்போது நான் செய்யும் ஆய்வு பணி, பாரதி காட்டிய வழியில், வெளிநாடுகளில் பண்டையத் தமிழர்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்,  என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, எடுத்துச் சொல்வதாகும். 

 

இப்படியாக என்னுடைய 25 ஆண்டு ஹாங்காங் வாழ்க்கையில், பாரதியை நாங்கள் என்றுமே மறக்காமல், நூற்றாண்டு கடந்தும் பாவாண்டு நிற்கும் பாரதிக்கு சிறப்பினைச் செய்து கொண்டு இருக்கின்றோம்.