4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

புறநானூற்றில் வானியல் - செல்வி நிதுஷாளினி மனோகரன்

 

புறநானூற்றில் வானியல்

செல்வி நிதுஷாளினி மனோகரன்

manonithu8@gmail.com

 

ஆய்வுச் சுருக்கம்

இன்றைய அறிவியலின் உச்ச வளர்ச்சியால் விண்வெளிக்குக் கலங்களை அனுப்பி தட்ப வெப்பநிலைகளையும், வானியல் மாற்றங்களையும் அறியத் தலைப்பட்டு விட்டனர் ஆராய்ச்சியாளர். அணுவில் தொடங்கி அண்டம் வரையிலான அறிவியல் கருவூலங்கள் அனைத்தையும் ஆராய்ந்தனர் நம் சங்கத் தமிழர். நமது முன்னோர்கள் பண்டைக் காலந்தொட்டு வானை இரவும், பகலும் உற்று நோக்கி இன்றைய நவீன விஞ்ஞானத் தொழில்நுட்ப அறிவாராய்ச்சிக்கு நிகராக அண்டத்தின் தோற்றம், சூரியன், சந்திரன், விண்மீன்கள் மற்றும் கோள்கள், எரிகற்கள், பருவ காலங்கள் மற்றும் வானியல் ஆய்வுக் கருவிகள் பற்றி அறிந்து அதனை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி இலக்கியங்களில் குறித்து வைத்துள்ளனர். கி.பி.16ஆம் நூற்றாண்டில் கலிலியோ கலிலி தொலைநோக்குக் கருவியைக் கண்டுபிடித்த பின்னரே அறிவியல் உலகில் 'வானியல்' என்பது தனியொரு துறையாக எல்லோராலும் அறியப்படுகின்றது. ஆனால் பண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வானியல் ஆராய்ச்சி பற்றிய அறிவை மக்கள் பெற்றிருந்தமைக்கு அக்கால இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. அந்தவகையில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு எனும் இலக்கியத்தில் காணப்படும் வானியல் தொடர்பான செய்திகளை வெளிக்கொணரும் நோக்கில் இவ்வாய்வு மேற்க்கொள்ளப்படுகிறது.

திறவுச் சொற்கள் : வானியல், புறநானூறு, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள்

நூல் அறிமுகம்

பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் நுட்பங்கள் எனப் பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்வதற்கு உதவும் எழுத்து மூல ஆவணங்களாக விளங்குபவை அக்காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்களாகும்.

பல்லாயிரம் ஆண்டு காலப் பழமையான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட மொழியாக தமிழ்மொழி விளங்குகின்றது. அதனால் அம்மொழி நீண்டகால இலக்கிய வரலாற்றினைக் கொண்டிருக்கின்றது. இதில் முதன்மையான இலக்கிய ஆதாரமாக விளங்குவது சங்க இலக்கியங்களாகும். சங்க காலமென்பது கி.மு.300ஆம் ஆண்டு தொடக்கம் கி.பி.300ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியாகும். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர்.

அந்தவகையில் சங்க இலக்கியங்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் என நோக்குவர். இவற்றில் எட்டுத்தொகை நூல்களின் வரிசையில் புறப்பொருளைப் பற்றி பேசுகின்ற நூல்களில் புறநானூறு சிறப்பிடம் பெறுகின்றது. இந்நூல் நான்கு அடி முதல் நாற்பது அடிகள் வரையான அமைப்பை உடையது. நானூறு பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல் என அறியப்பட்டாலும் முன்னூற்றித் தொண்ணூற்றி எட்டுப் பாடல்கள்(398) மட்டுமே புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. இப்புறப்பாடல் எனும் நூலை தொகுத்தவர் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. இந்நூல் புற இலக்கியமாக தோற்றம் பெற்றாலும் அறிவியல் கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கி அமைந்துள்ளதைக் காணலாம். அந்தவகையில் வானியல் கருத்துக்களும் சிறப்பிடம் பெறுகின்றன.

வானியல் அறிமுகம்

வானியல் அறிவாராய்ச்சி என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. வானத்தில் இயங்கும் கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள் பற்றி ஆராயும் துறையே வானியல் எனப்பெறும்.  ஆதிவாசியாக வாழ்ந்த மனிதன் சூரியன், சந்திரன் பற்றி அறிய முற்பட்டதன் விளைவே சங்க காலத்தில் வானியல் நுட்பம் தோன்றக் காரணமாகியது எனலாம். தமிழர்களிடையே வானியல் தொழில்நுட்பம் பெற்றிருந்த சிறப்பினை பல்வேறு ஆதாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது. 'தமிழர் வான ஆராய்ச்சியில் தேர்ந்திருந்தனர். மொகஞ்சதாரோ முத்திரைகளிற் கிடைத்த குறிப்புக்களால் தமிழர் தொன்மையான வான சாத்திரத்தை அறிந்திருந்தனர் எனப் புலனாகிறது' எனும் கூற்று வானியலின் சிறப்பைக் காட்டுகின்றது. (கந்தையாபிள்ளை.ந.சி.,  தமிழர் சரித்திரம், 1939, ப.162)

               தமிழர்கள் கண்டறிந்து வழக்கிலுள்ள வானியல் செய்திகளை உலக பேரறிஞர் பலர் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். அதாவது இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் ஐசாக் நியூட்டன் தனது சாதனைகளைப் பற்றி தன்னடக்கத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

         'நான் அதிகத் தொலைவு பார்த்திருக்கிறேனென்றால் (கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தியிருக்கிறேனென்றால்) அதற்குக் காரணம் மிகப்பெரும் மனிதர்களின் தோள்களின் மேல் (நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அடிப்படைக் கருத்துக்களின் மேல்) நின்று பார்த்ததுதான்' என்கிறார். (முனைவர் ஐயம்பெருமாள்.ப, 2006, தமிழக வானவியற் சிந்தனைகள் ப-6-8)

        மேலும் 'தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது' என டாக்டர். சிலாட்டர் (Mr.Slater) கூறியுள்ளார். (கந்தையாபிள்ளை.ந.சி., தமிழர் சரித்திரம், 1939, ப.163) ஆகவே பண்டைத் தமிழர்களின் அடிப்படை ஆய்வுகளின்படி முன்னேற்றம் கண்டதே தற்கால வானியல் அறிவு என்பது தெளிவாகிறது.

     பரதவ மக்கள் சந்திரனின் இயக்கத்தை வைத்துக் கொண்டு காலத்தைக் கணித்தனர். சமவெளியில் பயிரிடும் மக்கள் பருவ காலங்களையும், சூரிய இயக்கத்தையும் அறிந்திருந்தனர். பிராமணர்கள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்னரே தமிழன் தெளிவான வானியல் அறிவைப் பெற்றிருந்தான். 'வியாழன் இராசி வட்டத்தை ஐந்து முறை சுற்றி வருதலாகிய அறுபது வருடங்களைக் கொண்ட கால அளவை ஆரியருக்குரியதன்று' என மக்லீன் என்பவர் குறிப்பிடுவதும் அக்கால வானியல் ஆராய்ச்சிக்கான சான்றாகும். (கந்தையாபிள்ளை.ந.சி., தமிழர் சரித்திரம், 1939, ப.164)

      வானியலைப் பற்றி மட்டுமே கூறுகின்ற தமிழகத்தில் தோன்றிய முதல் தமிழ் நூல் கணிநூல் வேதாங்க சோதிடம் என்பதாகும். இன்று தமிழில் கிடைக்கக் கூடிய முதல் நூலான தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களிலும் காணப்படும் வானியல் செய்திகள் இன்றைய அறிவியல் உலகையே வியக்க வைக்கின்றன. சங்கத் தமிழர்கள் வானத்தையே தம் வீட்டின் கூரையாகக் கொண்டவர்கள். நாள்தோறும் வானில் நிகழும் வானியல் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் கூர்ந்து ஆராய்ந்து வானியல் தொடர்பான சிந்தனைகளை எடுத்தியம்பினர்.

      வானியல் தொடர்பாக சங்க காலத்தில் ஆய்வில் ஈடுபட்டோரை சங்க இலக்கியங்கள் கணியன் என்று சுட்டுகின்றன. வானில் வலம் வரும் கோளின் அசைவுகளைக் கொண்டு காலத்தைக் கணித்து நன்மை, தீமைகளைக் கூறுவோராக கணியர் திகழ்ந்தனர். சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்ற கணியன் பூங்குன்றனார், கணி மேதாவியர், பக்குடுக்கை நன் கணியார் என்போரின் பெயர்கள் இதற்குத் தக்க சான்றாகின்றன.

புறநானூறு கூறும் வானியல் செய்திகள்

          புறநானூற்றின் முதல் பாடலே 'நிலவின் இளம்பிறை' என வான்பொருளின் பெயரால் ஆரம்பிக்கின்றது. அதன் முடிவுப் பாடலும்

'மா விசும்பின் வெண் திங்கள் மூ வைந்தான்…’

என வானியல் செய்தியையே கூறுகின்றது. பழங்காலத் தமிழருக்கு வானமே காலம் காட்டும் கடிகாரமாக விளங்கியது என்பது புலனாகின்றது. புநநானூற்றில் 109,129, 229, 270, 297, 396, 398 ஆகிய பாடல்களில் அதிகளவில் வானியல் ஆராய்ச்சி பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன. வான் இயக்கம், கோள்களின் பெயர்கள், மழை கணிக்கும் முறை, நிலம் தோன்றிய முறை, ஐம்பூதங்களின் இயக்கம், உலகம் இயங்குதல் போன்ற பல்வேறு வானியல் சார்ந்த அம்சங்கள் புறநானூற்றுப் பாடல்களில் காணப் படுகின்றன.

நாள் கோள் படி வானியல் கணிப்பு (விண்மீன் மண்டலம்)

      விண்மீன் மண்டலங்களிடையே சந்திரனும், சூரியனும் பயணிப்பது போல தோன்றும் பகுதிகளில் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாக (பாதங்கள்) பிரிக்கப்பட்ட இருபத்தியேழு விண்மீன்களும் (108 பாதங்கள்), பன்னிரெண்டு இராசி மண்டலங்களும் இருப்பதாக நம் முன்னோர்கள் அறிந்தனர். அத்தோடு கோள்களின் நகர்வையும் கண்காணித்தனர்.

         வான மண்டலத்தில் பல்வேறு கோள்கள், விண் மீன்கள் விளங்கியமை புறநானூற்று புலவர் நூலில் பதிவாக்கினர். அதனடிப்படையில் வானத்தில் இயங்குபவற்றை கோள்கள், விண்மீன்கள் எனப் பகுக்கலாம். விண்மீன்களின் இருப்பிடத்தை அறிந்து இரவில் நேரம் அறியும் ஆற்றலும் பண்டைய மக்களிடையே காணப்பட்டது.

'செஞ்ஞா யிற்றுச் செலவும்

அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,

பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,

வளி திரிதரு திசையும்...'

( புறம் 30 1-7)

எனும் பாடல் ஞாயிற்று மண்டலத்தில் உள்ள கோள்களைக் குறிப்பதாக அமைகின்றது. புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இன்றைய விஞ்ஞான உலகை ஆச்சரியப்படுத்தும் வகையில்  கூறுகிறார். அதாவது சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடியதாக இருக்கிறது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை எப்படி இருக்கும். ஈர்ப்பு சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேல் அண்டவெளியும் உண்டு. இதில் ஈர்ப்பு விசையும் இல்லை. இவ்வாறெல்லாம் நேரில் சென்று அறிந்தோர் இன்றுரை இல்லாத போதும் அது பற்றிய அறிவைப் பெற்ற அக்கால மக்களின் வானியல் அறிவு சிறப்பிற்குரியதே ஆகும்.

      அறிவிலின்படி வானில் இருபத்தியேழு நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவை பன்னிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை ஆராய்ச்சிக் கூற்றுக்கள் உறுதி செய்கின்றன. இத்தகைய அறிவியல் செய்தியை அன்றைய புறநானூற்றிலும் காணலாம். பண்டைய தமிழ் மக்கள் மகம், அக்கினி, திருவாதிரை, அனுட்டம், புனர்பூசம், கேட்டை, உத்தரம் போன்ற நட்சத்திரங்கள் பற்றியும் அறிந்திருந்தனர். மேலும் புதன், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கோள்கள் பற்றியும், வால்மீன்கள் மற்றும் எரி நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களையும் கூடலூர்க் கிழார் பின்வரும் பாடலில் சுட்டியுள்ளார்.

'ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்…..

…..அளக்கர்த் திணை விளக்காகக்...'

(புறம் 229  1-10 கூடலூர் கிழார் )

அதாவது சேரமான் மன்னனின் உயிருக்கு கேடு என்பதை வானியல் ஆய்வின் ஊடாக அறிந்து சோதிடம் கூறுவதாய் இப்பாடல் அமைகின்றது. பங்குனி மாதம் வானில் இருந்து தீப்பிழம்பு போன்ற ஒளியுடன் ஒரு நட்சத்திரம் எரிந்து விழுந்தால் அரசனின் உயிருக்குக் கேடு வரும் என்பதை கூடலூர்க் கிழார் அறிந்திருந்தனர். அந்த விண்மீன்கள் எரிந்து விழுந்ததாகவும், அதன் நிலை பற்றியும் ஆராய்ந்து ஏழு நாட்களில் மன்னன் சேரன் இறப்பான் என்று கூறியவாறே நடந்தது. இதனால் ஏற்பட்ட தீய நிகழ்வுகளும் பல என்றார். இதனூடாக வானியல் அறிவில் பெற்றுக் கொண்ட புலமையைக் குறிப்பிட்டு அதன் மூலம் சோதிடம் பற்றிய சிந்தனையும் அக்கால மக்களிடையே தென்பட்டது.

'மாண்ட சேர மன்னன் சேரமான் யானைக்கட்

சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை...'

கோள்களின் இயக்கத்திற்கும் உயிர்களின் வாழ்வுக்கும் இடையேயான நெருக்கமான தொடர்பைக் கண்டறிந்து காலத்தைக் கணித்த தமிழனது ஆற்றலுக்கு சிறந்த சான்றாக அப்பாடல் அமைகின்றது.

சூரிய மண்டலம்

      சூரியனை மையமாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன எனும் வானவியல் கூற்றினை கி.பி.1543இல் கொப்பனிக்கஸ் கண்டறிந்தார். ஆனால் அதற்கு முன்பே அத்தகைய தன்மையை புறநானூற்றுப் புலவர் பாடியுள்ளனர். இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவும் ஐம்பூதங்கள் பற்றிய அறிவும் தமிழருக்கு மிகுந்திருந்தது.

        சூரியனில் இருந்து சிதறும் துகள்களே எரி கற்கள் என்பதும் புலவர் அறிந்த செய்தியாகும். இதனையே

'தண்ணிலவும் வெங்கதிரும் கனலி துற்றும்...'

(புறம் 6)

என்கிறது புறநானூறு.

பஞ்பூதங்களின் செயற்பாடு

        தற்கால வானியலாளர்கள் விஞ்சும் அளவிற்கு பஞ்ச பூதங்களின் இயற்கை அமைப்பினைக் கண்டறிந்து கூறுமளவிற்கு ஆற்றல் அக்கால புலவரிடையே காணப்பட்டது. இதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பின்வருமாறு பாடியுள்ளார்.

'மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்...'

(புறம் 2: 1-6)

அதாவது முதலில் விசும்பு தான் இருந்தது. அங்கே சூரியக் குடும்பங்கள் தோன்றின. அவை சூழலும் போது தீயும் அதிலிருந்து ஒளியும் உண்டாயிற்று. சூரியக் குடும்பங்களின் உதிர்ந்த தீப்பிழம்புகள் கோள்கள் ஆனது. அவை சூழலும் போது காற்றும், காற்றோடு கலந்த கோள்களில் நீரும் கிடைத்தது. அக்கோள்கள் குளிர்ந்த பின் மண் உண்டாயிற்று என புறநானூற்றின் 2ஆவது பாடலில் கூறப்பட்ட செய்தியை இன்றைய வானியலாளரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

         புற இயற்கைக்கு மட்டுமன்றி மனித உடலுக்கும் இந்த ஐம்பூதங்களே அடிப்படை என்பதை 'அண்டமே பிண்டம்' என திருமந்திரமும் சித்தர்களும் அன்றே கணித்தனர். இத்தகைய அடிப்படை அறிவைக் கொண்டே 20ஆம் நூற்றாண்டில் அண்டவெளி விரிவடைந்து வருகிறது எனும் உண்மையை மேற்குலக அறிவியல் அறிந்திருந்தது.

சூரிய கிரகணம்

            விண்வெளியிலுள்ள பருப்பொருளின் தோற்றத்தை வேறொரு பொருள் இடையில் நின்று தடுத்தல் அல்லது அதன் ஒளியைக் குறைப்பதையே கிரகணம் என்பர். பூமியையும், சூரியனையும் இணைக்கும் நேர்கோட்டில் சந்திரன் எக்லிப்டிக்(அதாவது பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை) தளத்தைக் கடக்கும் போது சூரியன் மறையும் இதுவே சூரிய கிரகணம் எனப்படும். சூரிய கிரகணம் பற்றி புறநானூறு பாடல் எண் 174இல் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்.

'அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்

சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது

இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து...'

(புறம் 174)

சந்திர கிரகணம்

        பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியைப் பெற முடியாமல் நிலவின் ஒளி குறைவடையும். இதனையே சந்திர கிரகணம் என்பர். சங்கத் தமிழ் இலக்கியங்களில் அதிக இடங்களில் சந்திரனை ராகு எனும் பாம்பு விழுங்கும் என்று குறிப்பிடுவது சந்திர கிரகணமேயாகும்.

'...வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து

வையகம் புலம்ப வளைஇய பாம்பின்...'

(புறம் 260: 15-16)

தன்னை விழுங்கிய கூர்மையான பற்களையுடைய பாம்பின் வாயிலிருந்து திங்கள்(சந்திரன்) மீண்டது எனக் குறிப்பிடுவது சந்திரகிரகணம் பற்றிய செய்தியே ஆகும்.

கோள் மீன், நாண் மீன் பற்றிய செய்திகள்

            இன்றைய விண்ணியல் ஆராய்ச்சியின் ஊடாக கருவிகளின் வாயிலாக மட்டுமே உற்று நோக்கி அறிந்து கொள்ளக் கூடிய விண்மீன்கள், கோள்மீன்கள் பற்றி அன்றே புறநானூறு தெளிவுபடுத்துகின்றது. விண்மீன்களை நாண் மீன்கள் என்றும் கோள் மீன்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர். இயற்கை ஒளி கொண்டது நாண்மீன் என்றும் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றுக் கொள்வது கோள்மீன் என்றும் சுட்டப்படுகின்றது. அதன்படி சூரிய ஒளியைக் கொண்டு ஒளிர்வனவாக திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பன சுட்டப்படுகின்றன. சூரியனைச் சுற்றி வரும் திண்மப் பொருள் கோள் மீன் ஆகும். இது ஞாயிற்றிடம் இருந்து ஒளியைப் பெற்றுக் கொள்ளும். இதனைக் கிரகம் என்றும் சுட்டுவர்.

'கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ'  (புறம் 392: 11)

            கோளாகிய மீன் போன்ற பொலங்கலத்தில் பெய்து உண்ணும் முறைப்படி அளிப்பது என்றும், நாள்மீன்களின் ஒளியைக் கொண்டு விளங்குவதால் இவை கோள்மீன் எனப்பட்டன. இதனை,

'நின்று நிலைஇயர் நின்னாண்மீ னில்லாது

படாஅச் செல்இயர் நின்பகைவர் மீனே'

(புறம் 24: 24-25)

காற்று நுழைந்து செல்ல முடியாத காற்று அற்ற வெளி வானம். அதன் தன்மையில் அதில் அமைந்துள்ள சூரியன், சந்திரன்  போன்றனn வானம் சார்ந்த. அறிவு  நுட்பத்தை  சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கோள்மீன்கள் பற்றிய புறநானூற்றுச் செய்தி

      இரவு வானில் ஒன்றன்பின் ஒன்றாக நகரும் விண்மீன்களிடையே மாறுபட்டு சுற்றித் திரிபவையே கோள்கள் எனப்பட்டன. நம் கண்களுக்குப் புலப்படுகின்ற புதன், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கோள்களும் சந்திரனும் வானில் விண்மீன் கூட்டத்துடன் இருந்த நிலை பற்றியும் புறநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

v  சந்திரன்

பூமியிலிருந்து சுமார் 3இலட்சத்து 85 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்திரனை சோமன், திங்கள் எனும் சொற்களால் புறப்பாடல்கள் சுட்டுவதும் அக்கால வானிலை ஆராய்ச்சி பற்றியே எடுத்துரைக்கின்றது. சந்திரன் பதினைந்து தினங்கள் தேய்ந்தும், பதினைந்து தினங்கள் வளர்ந்தும் வருகின்ற பௌர்ணமி, அமாவாசை தினங்கள் பற்றிய வானியல் ஆராய்ச்சி பற்றியும் இக்காலத்தில் மக்கள் அறிந்திருந்தனர். நாள்  (திதி) என முன்னோர் குறிப்பிடுவது சந்திரனின் பிறையின் அளவை வைத்து தான். அதாவது,

'மாக விசும்பின் வெண்திங்கள்

மூவைந்தான் முறை முற்ற'

(புறம் 400)

என்ற பாடலில் சந்திரன் பற்றிக் கூறியதிலிருந்து ஈராயிரம் வருடங்களுக்கு முன்பே சந்திரன் பற்றிய வானியல் ஆராய்ச்சி பழந்தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டமை புலனாகிறது.

          கதிரவனோடு சேர்வதும் பிரிந்து எதிர்ப் பக்கமாகச் செல்வதும்; நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும். பதினைந்து நாள் வளர்ந்து முழுமையாக காணப்பட்ட திங்கள் பற்றி,

'மாசு விசும்பின் வெண்டிங்கள்...'

(புறம் 400)

எனும் பாடல் சுட்டுவதிலிருந்து பௌர்ணமி தினம் தொடர்பான அறிவினை பெற்றிருந்த தன்மை புலனாகின்றது. திங்கள் பதினைந்து நாளில் வளர்ந்து தேய்வதாகும். அதன் பின் எட்டாம் நாள் பிறை நிலவு தோன்றும். இது பற்றியே,

'எண்ணாட்டிங்கன்'   (புறம் 118)

என புறப்பாடல் சிறப்பிக்கின்றது. மேலும் கடலின் நடுவில் திருவாதிரை நட்சத்திர நாளில் வான உச்சியில் முழுமதி தோன்றுகின்ற சிறப்பினை,

'முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலச்

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்

உச்சி நின்ற உவவு மதி கண்டு'

(புறம் 60)

எனும் பாடல் தெளிவுபடுத்துகின்றது. முழுநிலாவை 'உவவுமதி' என்றனர். முழுமதி நாளில் கதிரவனும் திங்களும் எதிரெதிராக இருக்கும். இதனை,

'உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து

இருசுடர் தம்முள் நோக்கி யொருசுடர்

புண்கண் மாலை மறைந்தாங்கு'

(புறம் 65)

என்ற பாடல் புலப்படுத்துகின்றது.

v  செவ்வாய்

பூமியிலிருந்து நோக்கும் போது செந்நிறமுடையதாக இருப்பதைக் கொண்டு இக்கோளை வானியலாளர் செவ்வாய் என்றனர். கடலின் மேல் தோன்றுகின்ற சிறிய திடலின் மீது ஏற்றப்பட்ட சிறு விளக்கு போல் செவ்வாய் தோன்றுகிறது என்பதையே,

'முந்நீர் நாப்பன் திமிற்சுடர் போல

செம்மீன் இமைக்கும் மாவிசும்பின்...'

(புறம் 60: 1-2)

என மருத்துவன் தாமோதரனார் எனும் புறநானூற்றுப் புலவர் கூறுகிறார்.

v  வியாழன்

'பொன்னிறமானது', 'பொன்னிறமுடையது' என வரும் புறநானூற்றுப் பாடலடியைக் கொண்டு சங்க காலப் புலவர் வியாழன் பற்றிய அறிவைப் பெற்றிருந்தமை புலனாகிறது.

'தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்

கோன்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ'

(புறம் 392)

அதாவது பொலங்கலம் உள்ள கள் என்பதற்கு உவமையாக கோள்மீன் சுட்டப்படுவதால் அது வியாழன் என்பர்.

v  வெள்ளி

கிரகங்களில் மிகவும் பிரகாசமான சுக்கிரன் வெள்ளை நிறமுடையதால் வெள்ளி எனப் பெற்றது. இது வான் வெளியில் காலை அல்லது மாலையில் தான் தென்படும். அதிகாலையில் காட்சிப்படுவதை விடிவெள்ளி என்று சுட்டுகிறது வானியலாராய்ச்சி.

'வெள்ளி தோன்றலப் புள்ளுக் குரலியம்பப்

புலரி விடியல்'

(புறம் 385)

 

'வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

உயர்சினைக் குடம்பைக் குரல் தோன்றினவே'

(புறம் 397)

அதிகாலையில் வெள்ளி எனும் கோளின் வரவை இயற்கை நிகழ்வுகளுடன் கலந்துரைக்கிறது. வெள்ளியின் செயற்பாட்டை வைத்தே மழை அறியப்படுவது வானியலின் தன்மை. இம்முறையை புறப்பாடல்களும் எடுத்துரைக்கின்றன.

v  சனி

சனி எனும் கோள் புகைக்கின்ற போதும் அதாவது இராசிகளான இடபம், சிங்கம், மீனம் என்பவற்றில் நுழைகின்ற போதும் தூமம் எனும் வால் வெள்ளி தோன்றுகின்ற போதும் தென்திசை நோக்கி வெள்ளி ஓடினாலும் பெரும் தீங்கு விளையும் என்பது பழந்தமிழர் நம்பிக்கையாகும்.

இக்கோளை மைம்மீன் என்று சங்க நூலோர் சுட்டுவர். மைம்மீன் என்பது கருமையான கோள் என்று பொருள்படும்.

'மைம்மீன் குகையினும் தூமம் தோன்றினும்

தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

வயல் அகம் நிறையப் புதற்பூ மலர

மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்...'

(புறம் 117)

என்கிறார் கபிலர். கி.பி.16ஆம் நூற்றாண்டில் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே சனிக்கோளுக்கு வளையம் உள்ளதென கண்டபிடிக்கப்பட்டது.

இவ்வாறு வான் மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்ற ஒன்பது கிரகங்கள் பற்றிய செய்தி எவ்வாறு வானியலில் இன்று முக்கியத்துவம் பெறுகின்றதோ அவ்வாறே சங்ககாலத்திலும் விளங்கியமை புலனாகின்றது.

நாள் மீன் பற்றிய புறநானூற்றுச் செய்தி

ஒருவர் பிறக்கும் நாளில் விண்ணில் நிலவு நிற்கின்ற இடமே நாள் மீன் எனப்படும். இத்தகைய அம்சமே இன்று பிறந்த நட்சத்திரம் என்று கூறப்படுகின்றது. புறப்பாடல்கள் ஓரை எனும் சொல்லினால் இராசியை சுட்டுகின்றன. பொன்னால் செய்யப்பட்ட சிறிய கலங்கள் நிலவுடனிருக்கும் நாள் மீன்களை ஒத்ததாகக் காணப்படும்.

'மதிசேர் நாள்மீன்போல நவின்ற

சிறுபொன் நன்கலம்'

(புறம் 160)

இதன்படி ஒருவரின் பிறப்பின் போது எந்த நாள்மீன் அமைந்துள்ளதோ அதன் அடிப்படையில் தான் வாழ்வில் நன்மை, தீமை ஏற்படும் எனும் சோதிடம் கணிக்கும் முறையும் பண்டைத் தமிழரிடையே காணப்பட்டது. மாங்குடிக்கிழார் எனும் புலவர் நெருஞ்செழியனை வாழ்த்தும் பொழுது,

'நின்று நிலைஇயர் நின் நாள்மீன் நில்லாது

படாஅச் செலீயர் நின் பகைவர்மீனே'

(புறம் 24)

அதாவது ஒரு விண்மீனின் அருகே நீண்ட காலம் சந்திரன் இருக்குமானால் நேரம் குறிக்கப்படும். நேரத்தை குறிக்க கிழக்கில் உதிக்கும் விண்மீன் மண்டலத்தை குறித்தனர். இது லக்கினம் என இப்போது குறிப்பிடப்படுகின்றது.

வானவூர்தி

அறிவியல் உலகில் வானியல் ஆராய்ச்சிக்கும் வான்வெளிப் பயணங்களுக்கும் வானவூர்தியின் பயன்பாடு சிறந்த துணைக்கருவியாக அமைகின்றது. இத்தகைய கருவியின் பயன்பாடு பற்றிய செய்தியை ஈராயிரம் நூற்றாண்டிற்கு முன்பு எழுந்த புறநானூற்றிலும் அறியப்படுவது அக்கால வானியல் ஆய்வின் சிறப்பைக் காட்டுகின்றது. காற்றில்லாத அண்டவெளியில் விமானம் செலுத்தப்பட்டதை பற்றி,

'வறிது நிலைஇய காயமும், என்றாங்கு...'

(புறம் 20: 4)

என குறுங்கோழியூர் கிழார் சுட்டியுள்ளார்.

மேலும் சோழன் நலன்கிள்ளி ஆட்சியில் மாலுமி இல்லாது தானே இயங்கும் வானவூர்தியின் பயன்பாடு அன்றே நிலவியது என்ற செய்தியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எனும் புலவர் பாடியுள்ளார்.

'...புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப என்ப...'

(புறம் 27: 7-9)

அதாவது வலவன் ஏவா வான ஊர்தி என்பது ஆளில்லாமல் பறக்கும் செயற்கைக் கோள் பற்றிய குறிப்பாகும். ஆளில்லா விமானத்தை ரைட் சகோதரர்கள் கண்டறிவதற்கு முன்னரே புறநானூற்றில் அக்காலத்தில் இருந்த வானவூர்தி பற்றிய குறிப்பு இடம்பெறுவது பண்டைய தமிழ் மக்களின் வானியல் அறிவின் வளர்ச்சியை தெளிவுபடுத்தி நிற்கின்றது.

 

மழை

வேளாண்மைத் தொழிலுக்கு அடிப்படையாக இருப்பது சூரியனது ஆற்றலும் அதனால் பெறப்படும் மழையுமேயாகும். இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கருவிகளின் உதவியோடு மழை, புயல் பற்றிய செய்திகளை வானியலாளர் முன்வைக்கின்றனர். ஆனால் அக்கால மக்கள் தமது அனுபவங்களின் மூலம் இயற்கையை வைத்து மழை பெய்வதற்கான அறிகுறிகளை பதிவுசெய்துள்ளனர்.

'பொய்ய எழிலி பெய்விடம் நோக்கி

முட்டை கொண்டு வன்புலம் சேரும்

சிறுநுண் எறும்பின் சில்லுழுக்கு ஏய்ப்ப'

(புறம் 170)

மழை பெய்யும் காலத்தை அறிந்து சிறிய எறும்புகள் முட்டைகளை கொண்டு மேட்டு நிலத்தை அடைகின்றன. இவ்வாறு எறும்புகளின் நிகழ்வைக் கொண்டு மழை பெய்யும் என அறிந்திருந்தனர்.

மழை பொழிவதற்கும் வானத்திலுள்ள கோள்களின் இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை புறநானூற்றுப் புலவர்கள் எடுத்துரைப்பதும் வானியல் சார்ந்து அவர்கள் கொண்டிருந்த புலமையே ஆகும். கோள்கள் பொருந்துகின்ற சூரியனின் விரிகதிர் கடுமையான ஒளி உடையது. இதனால் முதுவேனில் பருவத்தின் பின் வருகின்ற கார்காலத்தில் மழை பெய்யும் எனும் வானியல் சிந்தனையை நம்முன்னோரும் பெற்றிருந்தமையை புறநானூற்றுப் பாடல்களில் புலனாகின்றது. விண்ணிலிருந்து மழையை மண்ணிற்கு எடுத்து வருவதற்கு உதவுவது வெள்ளிக்கோள் ஆகும். வெண்பொன் எனும் வெள்ளி தென்திசை நோக்கிச் சென்றால் மழை பெய்யாது தீங்கு உண்டாகும் என்பது அக்கால வானியலாளரின் கணிப்பாக அமைகின்றது. இதனையே,

'இலங்கு கதிர் வெள்ளி

தென்புலம் படரினும்'     (புறம் 35)

என்றும்,

'தென்திசை மருங்கில்

வெள்ளியோடினும்...'          (புறம் 117)

என்றும்,

'வெள்ளி தென்புலத்துறைய

வளைவயல்...'         (புறம் 388)

என்றும் நம்முன்னோர்கள் அறிந்திருந்தமையை புறநானூறு சுட்டுகின்றது. இவ்வாறு மழை பொழியும் தன்மை, வானியல் சூழல் பற்றியும் அக்கால மக்கள் அறிந்திருந்தனர். இங்கு மழை முக்கிய தேவை என்பதாலும் அதன் அவசியம் உணர்ந்து பாடப்பட்டுள்ளது.

'நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்து கொண்டு,

ஈண்டு செலல் கொண்மூ வெண்டுவமின் குழீஇ,

பெரு மலை அன்ன தோன்றல், சூல் முதிர்ப்பு,

உரும்உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து,

வள மழை மாறிய என்றூழ்க் காலை...'

(புறம் 161)

என பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார். அதாவது மேகமானது கடல்நீரை முகந்து விண்ணிற்கு எடுத்துச் சென்று இடியுடன் கூடிய மழையைப் பொழியும் தன்மை பற்றிச் சுட்டுகிறார். இவ்வாறு மழை பெய்யும் முறை தொடர்பான வானிலை அறிவையும் புறநானூற்றில் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.

வானவில்

கதிரவனில் எனும் வர்ணங்கள் உண்டு என்பது இன்றைய அறிவியலாளர்களின் கூற்று. மழை பெய்ய முன்னும் பின்னும் சூரியனின் வெண்மையான ஒளிச் சிதறலின் காரணமாக வெண்ணிற ஒளிக்கதிர்கள் ஏழு வர்ணங்களாகப் பிரிந்து காட்சியளிப்பதையே வானவில் என்பர். இத்தன்மை பற்றி அன்றே நம்முன்னோர் அறிந்திருந்தனர்.

நீரைச் சுமந்து வரும் மேகத்திலே நீர்த் திவலைகள் இருக்கின்றது. கதிரவனின் ஒளி அந்த நீர்த்திவலைகளின் உள்ளே சென்று வெளியேறும் போது ஏழு வர்ணங்கள் நிரம்பிய வானவில்லாகக் காட்சியளிக்கின்றது என்பதையே,

'இரு முந்நீர்க் குட்டமும்,

வியன் ஞாலத்து அகவலமும்…..

…..சோறு படுக்கும் தீயோடு

செஞ் ஞாயிற்றுத் தெறல்...'

(புறம் 20)

எனும் பாடல் தெளிவுபடுத்துகின்றது. இதனையே அறிவியல் அறிஞர்கள் பூரண பிரதிபலிப்பு என்றனர்.

வானியல் கருவிகளின் பாவனை 

தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக வானியல் ஆராய்ச்சி தொடர்பாக பல்வேறு கருவிகளை துணையாகக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இத்தகையை முறை பண்டைய மக்களிடமும் நிலவியமை பற்றி புறப்பாடல் கூறுகின்றது. அதாவது,

'...தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர்

...இமயம் சூட்டிய ஏமவிற்பொறி..'

(புறம் 9: 6 15)

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சியில் வானியல் கருவிகளாக தூங்கு எயில், இமயத்தில் பொறித்த விற்பொறி போன்ற கருவிகளின் பயன்பாடு காணப்பட்டமை பற்றி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியுள்ளார்.

வானியல் ஆராய்ச்சி சிறப்பு

வானியல் ஆராய்ச்சி பற்றிய சிறப்புக்களும் புறப்பாடலில் தென்படுகிறது. 'ஞாயிறு போன்ற கொடையும் திங்கள் போன்ற அருளும், மழை போன்ற கொடையும் உடையவனாக நீ விளங்குக! என்று மதுரை மருதன் இளநாகனார் பாடினார். அதாவது சூரியன், சந்திரன், மழை என்பவற்றுடன் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்ற மன்னனின் செயலை ஒப்பிட்டு பாடிய இப்பாடலும் வானியல் அறிவாராய்ச்சியின் சிறப்பினையே காட்டுகின்றது. அதனையே,

'...ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்

திங்கள் அன்ன தண்பெறுஞ் சாயலும்...'

(புறம் 14-19)

என்கிறது. இதனூடாக சூரியனுக்கு அனைத்தையும் ஈர்க்கும் ஆற்றல் உண்டு என்றும், வானில் காற்றில்லாத வெற்றிடம் இருப்பதையும் நம் முன்னோர் சுட்டி வானியல் அறிவில் சிறப்பிடம் பெறுகின்றனர்.

முடிவுரை

ஆதிவாசியாக இருந்த மனிதன் விண்ணுக்குச் சென்று கால்தடம் பதிக்கும் அளவிற்கு முன்னேறியிருப்பது இன்றைய அறிவியலின் வளர்ச்சியாகும். கோள்கள், விண்மீன்கள் பற்றிய அக்கால மக்களின் ஆய்வுகளே இன்றைய வானியலாய்விற்கு ஆதாரமாகின்றன. அந்தவகையில் இன்றைய வானியல் ஆய்வுகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் புறநானூற்றுப் பாடல்கள் வானியல் செய்திகளை எடுத்தியம்புகின்ற தன்மையை இவ்வாய்வு வெளிப்படுத்துகின்றது.

உசாத்துணை நூல்கள்

1.        அகளங்கன் (தர்மராஜா.நா)., 2018, சங்கமும் தமிழரும், வாணி கணினிப் பதிப்பகம், வவுனியா, இலங்கை

2.        கந்தையாபிள்ளை.ந.சி., 1939, தமிழர் சரித்திரம், ஒற்றுமை பதிப்பகம், சென்னை

3.        புலியூர்க்கேசிகன், 2010, புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை

4.        முனைவர் ஐயம்பெருமாள்.ப, 2006, தமிழக வானவியற் சிந்தனைகள், உலக தமிழாராய்ச்சி   நிறுவனம்,ப-6-8

5.        முனைவர் பலராமன்.க., 2009, பழந்தமிழில் அறிவியல்', உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.