4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

பேரவா - முனைவர் ம.தனப்பிரியா

 

பேரவா

முனைவர் ம.தனப்பிரியா,

உதவிப்பேராசிரியர்,

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி,

பேரூர், கோவை- 641010.

tamilpriyacbe@gmail.com

9786715537


 

வறுமைப் பிடியில் அகத்தின் ஈரமும் வற்றிப்போக

வெடிப்புமிகு பாதத்தில் குருதிவழிந்த பாதச் சுவட்டில்

உறவாடிய உறவுகளும் உணர்விழந்த வழியின்

ஓலத்தினூடே நிதம் உலவிக் கொண்டு

பணம் தேடும்  பிணமூட்டைகளாய்க்

காதலும் காவலும் மறந்த பரவெளியில்

பேரவாக்களுக்கு மத்தியில் வரன்மிகு வெறியாட்டத்தில்

வனமது அழித்து மண் வளம் கரைத்து மனைவளம் பெருக்கி

இயற்கைதனைச் சூறையாடி மனித உழைப்பதனைச் சுரண்டி

மனிதப் பண்பொழித்துப் பணமது பெருக்கும்

மனித அச்சுறுத்தலுக்கு ஆளாகி வாழ்ந்திடுதல்

கொடிது கொடிது மானிடராய் வாழ்தல் கொடிது...

உணவு தேடலும் அன்பின் பகிர்வுமே வாழ்வின் விழுமியமாய்க்

கவலையின்றிக் கருத்தியலற்றுப் பொருள் தேடும் பேரவாவொழித்துக்

காலை இளம்பரிதியிலே கானம் இசைத்து மென்சிறகசைத்து

வானம் அளந்திடும் பட்சியாக...

காதல் இணையோடு காடுளவி நீர்பருகி

உணவுண்டு உறவாடிக் களித்திடும் மாவுமாகப்

பிறந்திருந்தால்...

தேவதைக் கரங்களில் அவள் இறகின் கதகதப்பில்

பூவுலகம் என்றும் உயிர்ப்போடு சுழன்றிருக்கும்...

 (24.02.2022 - இலக்கியச்சுடர் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை)

 .  .  .  .  .  .  .  .  .  .