4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

நேரிசை ஆசிரியப்பா - மு.முனீஸ்மூர்த்தி

 

மு.முனீஸ்மூர்த்தி

தமிழ் உதவிப் பேராசிரியர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 620 017

96778 21364

Moovendhan1887@gmail.com

 

(நேரிசை ஆசிரியப்பா)

பெண்ணுக்கு ஞானம் வைத்தான் புவிதனைப்

பேணி வளர்த்திடும் ஈசனென உன்னை

நம்பி யுரைத்தானே நற்கவி பாரதி!

உலகத் தாயின் உயிரும் உடலும்

உருகி மெலியுது உன்முன் காணாய்!

ஆக்கப் பிறந்தாயே! காக்கப் பிறந்தாயே!

அகில உயிர்க்கு மருத்துவி நீதாயே!

நிலனும் நீரும் தீயும் வளியும்

முல்லையுங் குறிஞ்சியும் மருதம் நெய்தலும்

நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவங் கொளவுள்ள

கோலக் கொடுமை காணவும் நேருமோ?

அதிகாரம் கொண்ட ஆணினத்தை நம்பாதே!

சதிகார கும்பலாம் ஊடகத்தை நம்பாதே!

ஆணினத்தின் கையிலுள்ள ஆன்மிகத்தை நம்பாதே!

பேசாதன பேசிப் பொழுதைக் கழிக்காதே

ஓசோன் அடுக்கினை உடன்பிறப்பாய் எண்ணிடு

மண்ணை வானை மழையை சுடரை

பெண்ணைத் துணையாய்க் கொள்நீ

திண்ணிய உலகம் உயிர்ப்புடன் உய்யவே!

 

 .  .  .  .  .  .  .  .  .

 (24.02.2022 - இலக்கியச்சுடர் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது)