4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

இராமானுஜரும் ஆழ்வார்களும் - முனைவர் மு.துர்க்கா

 

இராமானுஜரும் ஆழ்வார்களும்

முனைவர் மு.துர்க்கா

உதவிப்பேராசிரியர்- தமிழ்த்துறை    

சோனா கலை அறிவியல் கல்லூரி   

சேலம் - 636005                                                 

                தமிழுலகில்  திருமால் நெறியினை வளர்த்த பெருமை ஆழ்வார்களையும் ஆச்சார்யார்களையும் சாரும்.  திருமாலைப் பரம்பொருளாகக்கொண்டு ஆழ்வார்கள் தமது பாசுரங்களால் வைணவ சமயத்தை வளர்த்தனர்.  ஆழ்வார்களுக்குப் பின்னே வந்த ஆசாரியார்கள் வைணவத் தத்துவங்களையும் சமய உண்மைகளையும் நெறிப்படுத்தினர்.   ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைக்கூறி விளக்கம் செய்தனர். வடமொழி வேதங்களும் திராவிட வேதமாகிய திவ்வியப் பிரபந்தங்களும் இறைநெறியில் உயிர்களை அழைத்துச் செல்லும் என மக்களிடையே உலவச் செய்து வைணவ சமயத்தை மேம்பாடு அடையச்செய்தனர். அவ்வைணவ சமயத்தைப் பரவச் செய்த ஆச்சார்யார்களுள் ஒருவராகவும்  வைணவ சமயத்தின் விடிவெள்ளி என்று போற்றப்பெறும் இராமானுஜர் பிங்கள ஆண்டு சித்திரைத் திங்கள்  சுக்கில பட்சம் பஞ்சமி திதியில் வியாழக்கிழமையன்று திருவாதிரை நட்சத்திரத்தில் கேசவ சோமாஜியாருக்கும் காந்திமதி அம்மையாரும் நற்புத்திரராக இராமானுஜர் மண்ணுலகம் தழைக்க அவதரித்தார். 

                பெரிய திருமலைநம்பி தன்சகோதரியின் மகனைப்பார்த்ததும் இராமனின் தம்பி இலட்சுமணன்போல இருப்பதால் இளையாழ்வார் இராமானுஜர் என்னும் பெயரை அக்குழந்தைக்குச் சூட்டினார். பெரிய பெருமாள்,  உடையவர் என்ற பெயர் சூட்டினார்.  திருக்கோட்டியூர்நம்பி எம்பெருமானார் என்ற பெயர் தந்தார். சூடிக்கொடுத்த நாச்சியார் கோயிலண்ணன் என்ற பெயரைச் சூட்டினாள்.  தம் பெருமையினால் நூற்றாண்டு விழாக் கண்டருளப் பெற்றதால், யதிராஜர் என்னும் பெயர் பெற்றார்.  வைணவத் தத்துவங்களையும் சமய உண்மைகளையும் நெறிப்படுத்தியதால் ஆசாரியார் என்றும் திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை செய்து தனிவுடைமையாக இருந்ததைப் பொதுவுடைமையாக்கியதால் அங்கீகாரம் பெறாத உரைகாரர் என்றும் அழைக்கப்பட்டார்.  வைணவ உரை முன்னோடி எனவும் இவரை அழைப்பர்.

               

 

 

                இராமானுஜர் ஆழ்வார்கள் பாடியருளிய திவ்வியப்பிரபந்தங்களில் மிகுந்த நாட்;டமுடையவராக இருந்தார் என்பதை வெளிப்படுத்தும்படியாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகின்றது. தமிழ்ப்பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் எழுதிய வைணவ உரைவளம் என்னும் நூலே அடிப்படை ஆதாரமாகத் திகழ்கின்றது.1

திவ்வியப் பிரபந்த ஈடுபாடு

                இராமானுஜர்,                 ஆழ்வார்கள் பாசுரங்களைச் சிந்தித்தவாறே இருந்தார் என்பதற்குச் சான்றுகள் உரைகளில் காணப்படுகின்றன.

                ஸ்ரீ இராமானுசர்  ஆழ்வார் திருநகரிலிருந்து மதுரகவியாழ்வாரின் ஊராகிய திருக்கோளுூருக்குப் போய்;க் கொண்டிருந்தார். ஒரு பெண் எதிரே வந்தாள். உடையவரைக் கண்டதும் நமஸ்கரித்து நின்றாள்.  புகுந்த ஊர் திருக்கோளுரே என்றாள்.  நீ அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறாயா? என்று கேட்டார். அதனைக் கேட்டு அவ்வூரில் புக்க பெண்களும் வெளியே  செல்ல ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்களோ? என்றார்.  அதற்கு அவள் முயல் புழுக்கை வயலில் கிடந்தால் என்ன ? வரப்பில் கிடந்தால் என்ன ? ஞானமில்லாத அடியேன் (நான் ) கோளுரில் இருந்தால் என்ன ? வெளியே இருந்தால் என்ன ? என்று பதில் சொன்னாள்? இதனால் திருக்கோளுரில் அவருக்கிருந்த ஈடுபாடும் அவர் நினைவில்  திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளுரே என்னும் திருவாய் மொழி இருந்தமையும் வெளிப்படுகின்றன.

      வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி

                                 கொத்தவர் பொழில்கூழ் குருகூர் சடகோபன் சொன்ன      

 பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளுர்க்கே

                சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே2

                                               

திருப்பாவை ஜீயர்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்

வந்து எங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தர்மேல் பல்கால் குயில்இனங்கள் கூவினகாண்

பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து வாய்திறவாய் மகிழ்ந்தே லோர்எம்பாவாய்3 

இஃது ஆய்ச்சிறுமிகள் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகின்ற பாசுரம்.

                இராமானுசரைத் திருப்பாவை ஜீயர் என்று பெருமையாகக் கூறுவதுண்டு. காரணம், ஆண்டாளின் திருப்பாவையின்மீது இவருக்குத் தனி ஈடுபாடுதான். .  இவர் மடாதிபதியாக இருந்தபோதும் கூட தாம் மேற்கொண்டிருந்த துறவு நெறிக்கு இணங்க பிச்சை எடுத்துப் பசிதீர்த்துக் கொள்வார்.  பிச்சை எடுக்கப் போகும்போது திருப்பாவைப் பாசுரங்களை களிற்றன் என்ற மேற்குறிப்பிட்ட திருப்பாவைப் பாசுரத்தை ஓதியவண்ணம் பெரிய நம்பிகளின் திருவாசலை நெருங்கி வந்தார்.  அங்கு வருவதற்குமுன் பாசுரத்தில் பாதிக்குமேல் ஓதி முடிந்தது. 

                பந்தார் விரலி உன்

                   மைத்துனன் பேர்பாடச்

                செந்தா மரைக்கையால் சீரார்

                   வளையொலிப்ப வந்து திறவாய்   (திருப்பாவை 18 )

என்ற பாசுரப் பகுதி இவர் வாயினின்று மிடற்றொலியாக வந்து கொண்டிருந்தபோது இவர் நம்பிகளின் வாசலுக்கு நேரே வந்துவிட்டார். 

                இந்த சமயத்தில் இல்லத்தினுள்ளே பந்தும் கையுமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.  திருமணமாகாத அந்;துழாய் என்ற பெரிய நம்பிகளின் திருமகள்.  கதவு தாளிடப் பெற்றிருந்தது.  பந்தார் விரலி …..வந்து திறவாய் என்ற பாசுர அடிகள் காதில் விழுந்ததும் பந்தும் கையுமாக இருந்த அந்;துழாய் பளிச்சென்று திருக்காப்பு நீக்கினாள்.( கதவைத் திறந்தாள் ) யாரோ பாடிக்கொண்டு வருகிறாரே என்று பந்தார் விரலி என்ற பாசுரம் வர்ணிக்கும் அதே கோலத்தோடு மணிக்கதவம் தாள் திறந்த பெண்மணி இராமானுசரின் திருக்கண்களுக்கு அந்தப் பாசுரத்தில் வரும் நப்பின்னைப் பிராட்டியாகவே இலக்காயினாள்.

                மலரடி பெயர்;த்து வந்து, மெல் விரல்கள் சிவப்பெய்தத் தாள் திறக்கின்றாள் நப்பின்னை என்ற ஆனந்தக் காட்சிக்கு இராமானுசர் உள்ளம் திறை கொடுத்தது.  அந்த வாசலில் தம் பொன்னொத்த மேனி புழுதிபடியத் தெண்டனிட்டார்.  அவளை நப்பின்னைப் பிராட்டியாகவே கருதி, இந்நிலையில் அத்துழாய் பரபரப்புடன் ஓடி நம்பிகளினடம் ஜீயர் என்னைக் கண்டதும் மூர்ச்சித்து விழுந்தார் என்று தெரிவி;த்தாள்.  உடனே நம்பிகள் உந்து மதக்களிறு அநுசந்தமாயிருக்கும் என்றார்.  பிறகு வாசலுக்கு வந்து எம்பெருமானாரைக் கண்டு  வாரும் திருப்பாவை ஜீயரே நானும் ஓதி உணர்ந்திருக்கின்றேன்.  இப்பாசுரத்தை ஆனால் உம்மைப்போல் அனுபவித்ததே இல்லை என்று இராமானுசரின் பக்தியைப் பாராட்டினார்.

திருநாராயணபுரம்

                நூற்றியெட்டு ஸ்ரீவைணவ திவ்விய தேசங்களில் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டை மிகப் பெருமை வாய்ந்த ஒன்றாகும்.  இது தெற்கு பத்ரிகாச்சரமம் என்று அழைக்கப்படுகின்றதுஃ  ஸ்ரீ வைணவ திவ்விய தேசங்களில் முதன்மையானவை திருவரங்கம். திருப்பதி, காஞ்சிபுரம், மற்றும் திருநாராயணபுரம் என்ற நான்கு தலங்களாகும். திருநாரா யணரின் கோபுரம் நான்கு பக்கங்களிலிருந்தும் ஒரே மாதிரியாக காட்சியளிக்கும் சதுர்முக கோபுரமாகும்.  இக்கோயிலின் சுக நாஸி வரை இராமனுஜர் காலத்தில் கட்டப்பட்டது. 

நம்மாழ்வார் பாசுரம்

                ஆழ்வார்கள் பன்னிருவரில் திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் இத்தலத்துத் திருநாராயணனைப் போற்றிப் பாசுரங்கள் இயற்றியுள்ளனர்.  நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் ஒரு நாயகமாய் என்று தொடங்கி பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ளார்.  இந்த உலகம் ஐஸ்வர்யம், அதிகாரம் எல்லாம் அழியக்கூடியவை.  அதனால் திருநாராயணன் தாள்களைப் பற்றி மோட்சம் பெறுங்கள் என்பது இப்பாடல்களின் சாரமாகும்.

                ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்

                கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்

                பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்

                திருநாராணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ4

                ஒரு காலத்தில் சிறந்த செல்வச் செழிப்புடன் இருந்தவர்களும், காலச்சுழற்சியாலும் பேதத்தாலும் அச்செல்வத்தை இழந்தவர்களாகித் தமது நாடு நகரங்களைத் துறந்து, நாய் போன்று அலைவார்கள்.  எனவே ஸ்ரீமந் நாராயணனுடைய திருவருளை நாடி அப்பரமனின் திருவருளைப் பெறவேண்டும் எனச் சிந்தனைசெய்து உய்வீராக என்பது பாசுர விளக்கமாகும். 

                செல்வ நிலையாமையையும் கைவல்யத் தாழ்வையும் காட்டி, திருமால் அடிமைத் திறமே உயர்ந்தது என்பதே இப்பாசுரத்தின் மையக்கருத்தாகும்.

திருமங்கையாழ்வார் பாசுரம்

                திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்று பாடியுள்ளார்.  நாராயண நாமம் நல்ல குடிப்பிறப்பு ஐஸ்வர்யம் மற்றும் எல்லாவிதமான செல்வங்களையும் கொடுக்க வல்லது என்று இப்பாடல்கள்  குறிப்பிடுகின்றன.  தமிழ்நாட்டிலேயே திவ்வியப் பிரபந்தங்கள் மறைந்து போயிருந்த காலத்தில் திருநாராயணபுரத்தில் அப்பாடல்களைப் பாடி உயிர்ப்பித்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

                வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

                     பெருந்துயர் இடும்பையில் பிறந்து

                கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

                     அவர்தரும் கலவியே கருதி

                ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்

                    உணர்வு எனும் பெரும்பதம் தெரிந்து

                 நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்

                    நாராயணா என்னும் நாமம்5

                இப் பாடல் பெரிய திருமந்திரத்தின் பெருமையினைக் கூறுவதாகும்.  பெரும் துன்பத்துக்கு இடமாயும் காரணமாயும் உள்ள உடம்பில் நான் பிறந்து ஆத்மா அதில் பொருந்தும்படி கூடினேன்.  பிறகு இளமையான பெண்கள் தரும் இன்பத்தை எண்ணி அவர்கள் போனபடி தொடர்ந்து ஓடினேன் இவ்வாறு சிற்றின்பங்களில் மனத்தைச் செலுத்தி வருத்தமுற்று வாடினேன்  முடிவில் உய்வதற்குரிய செம்பொருளான ஞானத்தை இறைவன் திருவருளால் அறிந்து நன்று தீது உணர்ந்தேன்.  நாராயணா என்னும் திருமந்திரச் சீர்மையைக் கண்டு கொண்டேன்.

                இராமானுஜர் தமது பிரம்ம சூத்திர பாஷ்யமான ஸ்ரீ பாஷ்யத்தை திருநாராயண புரத்தில் இருந்தபோதே இயற்றினார் என்பதும் கூர்;ந்து நோக்கத் தக்கது.  

நம்மாழ்வார் பாசுரம்

                 ஒரு நாள் உலாவச் சென்றவர் பாதியிலேயே திரும்பிவிட்டார்.  திருமடத்தில் இருந்த எம்பார் கதவைத் திறந்தவாறே திருமாலிருஞ்சோலைமலைத் திருவாய்மொழி  திருவுள்ளத்தில் ஒடுகிறது போலும் என்று வினவ இவரும் ஆம்அப்படியே என்று கூறினார்.  அப்பாசுரம் பின்வருமாறு :                                                                                                                                                                                   

                நலம் என நினைமின் நரகு அழுந்தாதே 

                நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்

                மலம் அறு மiதி சேர் மாலிருஞ்சோலை

                வலம் முறை எய்தி மருவுதல் வலமே.6

பாசுரம் உணர்த்தும் பொருள்

                மனமே, பாவத்தைப் பெருக்கி நரகத்தில் அழுந்தாதே. வராக வடிவம் கொண்டு இடந்து பூமியைக் காத்தருளிய ஸ்ரீமந் நாராயணன் நித்திய வாசம் புரியும் கோயில் அஞ்ஞானத்தை நீக்கி ஞான ஓளியை நல்கும் திருமாலிருஞ்சோலையாகும்.  இத்திருத்தலத்தை வலம் கொண்டு மருவுதலே உறுதியைத் தரவல்லது.  அதனை நலமுடையது எனக்கொள்க எனமங்களாசாசனம் செய்துள்ளார் நம்மாழ்வார்.

                வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே

                வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்

                வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை

                வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே.7

                தேக நிலையில் வலிமையடைந்து அதனைப் பயனின்றிக் கழிக்காது.  மன்னுயிர்களுக்கு நன்மையைச் செய்யும் ஆயர்குல நாயகரான கண்ணபிரான் கோயில் கொண்டுள்ளதும், தேவர்கள் வலம் செய்து வணங்குவதுமான திருமாலிருஞ்சோலையை மருவி விளங்குக. அதனை நாள்தோறும் திருவலம் செய்து மகிழ்க எனப் பாடியருளியுள்ளார்.

காண்கின்றனகளும் பாசுரம்

                இராமானுஜர் திருமலைக்குப் போவதாக முடிவு செய்தமை கேட்டுத் தம் அகத்திற்குப் போய் கதவைத் தாழிட்டுக்கிடந்து  காண்கின்றனகளும் என்னும் பாட்டை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்.  பிள்ளை உறங்காவில்லிதாசர்.  இராமானுஜர் அவர் நிலையினைக் கண்டு வர ஒருவனை விடுத்தார்.  அவன் திரும்பிவந்து காண்கின்றனகளும்  என்னும் பாட்டைச் சொல்லிச் சோகித்துக் கிடக்கிறார் என்றான்.  அவனை நோக்கி, வண்பூ  மணிவல்லி யாரே பிரிபவர்தாம் ?  என்று சொல்லிவர உன்னால் முடியாமல் போயிற்றோ ? என்று கூறினார்.  தாம் அவரைப் பிரியாதிருக்க நினைத்திருந்ததனைத் திருவிருத்தத் தொடர் கொண்டு நயமாகச் சொல்லிய திறம் பாராட்டற்குரியது.  அப்பாசுரம் :

                காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில், இந்நாள்

                பாண்குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்

                மாண்குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடத்து உம்பர் நம்பும்

                சேண்குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே8

                தலைவன் பொருள்வயின் பிரிதலைத் தலைவி தோழிக்குக் கூறல் என்பது அகத்துறைப் பாடலாகும்.

                தோழீ குன்றுகளை உடைய நாட்டுத் தலைவரான என் காதலரிடத்தே காணப்படும் செய்கைகளும் பேச்சும், வெளிப் பூச்சாகத் தெரிகின்றன.  மலையைத் தூக்கிய கண்ணபிரான் தங்கியதும், நித்திய சூரிகள் விரும்புவதும் ஆன திருவேங்கடமலை சென்று பொருள் தேடப் போகிறார் போலும்.  அதற்காக அவர் கற்றுள்ள வலிய செயல்தான்.  என்னிடத்தே பேசும் பசப்பு வார்த்தை என்பதைத் தெரிந்து கொண்டேன் என்பது பாசுரத்தின் பொருளாகும்.

குறுக்கும் வகையுண்டுகொலோ

                இராமானுஜர் திருநாவாய் நோக்கிச் செல்லும்போது எதிர்வருபவரிடம் திருநாவாய் எவ்வளவு தொலைவு என்று கேட்க அவர்கள், “ குறுக்கும்என்று சொல்லக் கேட்டு அவர்களது பேச்சு மொழியில் குறுக்கும் வகையுண்டுகொலோ என்று ஆழ்வார் பாசுரம் புனைந்துள்ள தன்மையினை எண்ணி வியந்தார்.

 அப்பாசுரம்

                அறுக்கும் வினையாயின ஆகத்தவனை

                நிறுத்தும் மனத்தொன்றிய சிந்தையினார்க்கு

                வெறித்தண் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்

                குறுக்கும் வகையுண்டு கொலோ?  கொடியேற்கே.9

                எம்பெருமானைத் தனது உள்ளத்தில் நிறுத்தி ஒருமையுடன் சிந்திப்பவர்களுக்குத் தீவினை விலகும்.  அப்பெருமான் நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாவாய் என்னும் பதியில் விளங்க ஆங்கு அடைந்து சேவிக்கும் பேறு இத்தீவினையுடைய அடியேற்கு உள்ளதோ என்னும் பொருளில் நம்மாழ்வார் பாடியருளியுள்ளார்.

பெரியாழ்வார் பாசுரம்

செங்கண்மால் தான் கொண்டு போனான்

                இராமானுஜர் தம்மிடையே நெருங்கிப் பழகிய சீடராக விளங்கிய கூரத்தாழ்வான் மறைந்த போது துன்பம் தாங்காமல் பெரியாழ்வார் பாடிய பாசுரத் தொடர்களைச் சொல்லிச் செர்ல்லிக் கதறினாராம்.  ஆழ்வான் திருநாட்டுக்கு எழுந்தருளின போது , இராமானுஜர் விச்லேஷம் (பிரிவு) பொறுக்கமுடியாமல்

ஒருமகள் தன்னை யுடையேன்

என்றும்,

                உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்

என்றும்    

செங்கண்மால் தான் கொண்டு போனான்

என்றும் அருளிச்செய்தார்.

இந்த குறிப்புகள் மணவாள மாமுனிகள் உரைக்குறிப்பின் அறியப்பட்டது.

ஒருமகள் தன்னை யுடையேன்

   உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்

   செங்கண்மால் தான் கொண்டு போனான்

பெருமகளாய்க் குடிவாழ்ந்து

   பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமகளைக் கண்டு உகந்து

   மணாட்டுப் புறம் செய்யுங்கொலோ.10   

பாசுரத்தின் பொருளை நோக்கியுணரலாம். 

                ஒரே ஒரு மகளைப் பெற்றெடுத்தேன்.  உலக மக்களிடம் எங்களுக்கு உள்ள செல்வாக்கின் காரணமாக அவளை திருமகளை வளர்ப்பது போல வளர்த்தேன்.  அப்படிப் போற்றி வளர்க்கப்பட்ட எனது மகளை சிவந்த கண்களையுடைய திருமாலாகிய கண்ணன்தான் ( யாரும் அறியாமல் ) கொண்டு போய்விட்டான். ஆயர்குடிப்பெருமகளாகிய அரும்பெரும் செயல்களைச் செய்த அசோதை தனக்கு வரும் மருமகளை ( எனது மகளை ) கண்டு மகிழ்ச்சி அடைந்து மருமகளுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளைச் செய்வாளா அல்லது மாட்டாளா ?  என்று அருளியுள்ளார் பெரியாழ்வார்.

இராமானுஜர் திவ்வியப் பிரபந்தத்தில் மூழ்கியிருத்தல்:

                இராமானுஜர் திவ்விய பிரபந்தத்தில் மூழ்கிக் கிடந்த திறத்தை, பகலெல்லாம் பாஷ்யத்திலே அந்யபராhயிருப்பர்.  இரவமுது செய்து ( பால் அருந்தி ) பள்ளிக் கட்டிலிலே ஏறியருளினால், சந்தை சொல்ல வாராயோ  ? என்றழைப்பர்.  முந்துறச் சந்தை சொன்னால் புளகிதகாதராவர்.  இரண்டாஞ் சந்தைக்குச் சிதலராவர் என்று எங்கேனும் ஒருகால் புக்காராகில் நாலிரண்டு ஒலியல் ( மேலாடை கொண்டு பரிமாற வேண்டும் படியாயிற்று  கண்ணநீர் வெள்ளமிடும்படி என்று வரும் திருவிருத்த உரையால் உணரலாம்.  மேற்காட்டிய பகுதியினை வடுகநம்பியின் கூற்றாக அரும்பத உரை குறிப்பிட்டுள்ளது.

                நிறைவாக இராமானுஜர் வடமொழியிலுள்ள உபநிடதம், பிரம்மசூத்திரம் கீதை முதலியவற்றின் முடிபுகளையும் தமிழ் வேதமாகிய ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களையும்  சமரசப்படுத்தி ரிஷிகளும் ஆழ்வார்களும் ஒரே உண்மையைப் போதித்தவர்கள் என்பதை நிலைநாட்டிய பெருமைக்குரியவர் எனலாம். இராமானுஜரிடத்துத் தத்துவமும் அனுபவமும் ஒன்றாக  இணைந்து நின்றன. இராமானுஜர்  தமது  நூற்றாண்டிலேயே  பாரத நாடு  முழுவதும் சென்று மூன்றுவித அளவைகளால் பேதம் அபேதம் முதலிய சுருதிகளைச் சமரசப்படுத்தி. ஞானம். பக்தி இரண்டும் ஒன்றே என்று வற்புறுத்தி வைணவமதத்தை எங்கும் நிலைநாட்டினார்.

                சுருங்கக் கூறின்  பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய திவ்வியப் பிரபந்தங்களை மக்களிடையே  வளர்த்து எங்கும் பரப்பிய பெருமை ராமானுஜரையே சாரும்  எனில் மிகையாகாது

அடிக்குறிப்புகள்

1.                   வைணவ உரைவளம் தெ.ஞானசுந்தரம்

2.                   திருவாய்மொழி 6-7-11(3303)

3.                   திருப்பாவை-18

4.                   நம்மாழ்வார் நான்காம் பத்து  1 ஆம் திருவாய்மொழி  3231

5.                   பெரிய திருமொழி பா.1

6.                   திருமாலிருஞ்சோலை பா.7 நம்மாழ்வார் திருவாய்மொழி பா..2999

7.                   திருமாலிருஞ்சோலை பா.8 நம்மாழ்வார் திருவாய்மொழி பா..3000

8.                   நம்மாழ்வார் திருவிருத்தம் பா.8 

9.                   நம்மாழ்வார் திருவாய்மொழி ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி பா.1

10.                 பெரியாழ்வார் பெரிய திருமொழி எட்டாம் திருமொழி பாசுரம் : 4