4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

கவிஞராய் நான் - பூர்ணிமா சங்கர்

    
                கவிஞராய் நான்
 
அன்பென்ற உந்துசத்தி அறிமுகமும் செய்விக்க
அன்னையவள் இன்தமிழும் அணைத்திட்டாள் பிள்ளையென்றே
மின்னலென பாய்ந்துவரும் மிளிர்கின்ற நினைவுகளால்
பன்முகமாய் விரிந்திருக்கும் பாக்களுக்குள் நான்புகுந்தேன்
 
புத்தகங்கள் படித்ததில்லை புரிகின்ற வார்த்தைகளை
தத்தெடுத்து நான்தொடுக்க தனிச்சிறப்பும் செய்தனரே
முத்தான கவியென்றே முத்தாய்ப்பும் சூடினரே

சத்ததுவும் பிறந்ததனால் தமிழோடு நடைபயின்றேன்

 
மரபுவழி பாப்படைக்க மனதிற்குள் பெருமேக்கம்
வரவான சிலநட்பால் வழியதுவும் கிடைத்ததுவே
தரமாக தமிழுக்கே தகவாக தொண்டாற்றும்
அரிதான ஆசானால் ஆற்றலதும் வளர்த்திட்டேன்
 
புத்தாக்கம் செய்வித்து புதுபதிப்பாய் உருவானேன்
புத்தகங்கள் வாசித்து புதுவுலகில் கால்பதித்தேன்
மொத்தமாக எனைமாற்றி மோகனமாய் தமிழிசைக்க
சித்தத்தில் கவிகளையே தினந்தோறும் யாசித்தேன்
 
உறங்காத இரவுகளில் உற்றதுணை தமிழிருக்க
துறந்திடவே சொல்லியதே துன்பத்தை பாவடித்து
பிறக்கின்றேன் நாள்தோறும் பீடுதமிழ் சுவாசிக்க
மறந்திட்டேன் மனக்கவலை மாமருந்தும் தமிழ்தானே
 
வலிகளுக்கு வடிகாலாய் வாய்த்ததுவும் கவிபெண்ணே
பொலிவதனை கூட்டியதும் பொழிகின்ற கவிமழையே
ஒலிக்கின்ற பெருமிரைச்சல் ஒடுக்கிடாமல் மீண்டுவந்து
சிலநேரம் மௌனித்து சிலாகிப்பேன் தமிழோடு
 
 
பூர்ணிமா சங்கர் 
கோயமுத்தூர்