4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

வேளாண்மை கலைச்சொற்கள் - முனைவர்நா.குமாரி

 

வேளாண்மை கலைச்சொற்கள்

முனைவர்நா.குமாரி

உதவிப்பேராசிரியர்

அக்சிலியம் கல்லூரி

வேலூர்-6


ஆய்வுச்சுருக்கம்                                

             வேளாண்மை என்பது தமிழர்களுக்கு தொழில் அன்று வாழ்க்கை என்பதற்கு பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பல சான்று பகர்கின்றன .அக்கால மக்களின் வாழ்க்கையில் மொழிப்பயன்பாடு ஒரு சிறப்பான இடம் வகித்துள்ளதனை அவர்களின் தொழில் சார்ந்த சொல் உருவாக்கத்தில் காணமுடிகிறது. தொழில் பலவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கலை ,அறிவியல், வரலாறு என்று பல்துறைகள்காணப்பட்டுள்ளன. .இவைகள் யாவும் தமக்கே உரிய சிறப்பு வாய்ந்த சில சொற்களை கொண்டுள்ளன. சிறப்பு சொற்களை' துறை சார்ந்த சொற்கள் 'அல்லது கலைச்சொற்கள் எனலாம்.

   கலைச்சொல் என்பது பொதுவாக வழங்கும் சொற்களைப் போல் அல்லாமல் குறிப்பிட்ட கலையில் மட்டும் சிறப்பாக வழங்கப்படும் சொற்கள் கலைச் சொற்கள் எனப்படும் என்று பா.பொன்னப்பன் எளிமையான தெளிவான பொருள் பொதிந்த விளக்கம் தருகிறார்.இத்தகைய சொற்கள் அந்தந்த குறிப்பிட்ட துறையின் இயல்பையும் சிறப்பையும் வெளிப்படுத்தும் கருவி எனலாம். ..அவ்வகையில் வேளாண்மைத்துறையில் மக்கள் வழங்குகின்ற கலைச் சொற்களை தொகுத்து விளக்கம் தர முயல்கிறது இக்கட்டுரை.

திறவுச்சொற்கள்

   பொன்னேறு, தொளி, பரம்படித்தல், கங்களவு, கொழைமிதித்தல், கவாத்து செய்தல், கிடங்கு வெட்டுதல், கிடைமறித்தல்

வேளாண்மை

  வேளாண்மை என்ற சொல் இலத்தீன் மொழியில்Agri என்று வழங்கப்பட்டது. பிறகு Agriஎன்றும் Soil மற்றும்Cultureஎன்றும் விளங்கி காலப்போக்கில் Agriculture  என்ற கலைச்சொல்லாக வடிவம் பெற்றது. வேளாண்மைத் தொழிலே இன்று மக்களின் முதன்மையான வாழ்க்கை பொருளாதாரமாக விளங்குகிறது .வேளாண் முறை என்பது உழும் கருவிகளைக் கொண்டு பெரும் பரப்பில் பயிர் வகைகளை விளைவிப்பதாகும். நில அடிப்படையிலான தொழில் உழவு ஆகும். இதனை தொல்காப்பியர்,

 " வேளாண் மாந்தர்க்கு உழுதூண்அல்லது 

இல்நென மொழிப பிறவகை நிகழ்ச்சிண"

என்று கூறியுள்ளார் 

மழைநீர்

 வேளாண்மை செய்வதற்கு மிகவும் வேண்டபடுவது நீராகும். நிலத்திற்கு தேவையான நீரை மழையின் மூலமே பெற முடியும் எனவே ஈரம் இருந்தால்தான் உழவு செய்ய முடியும். மழை பெய்தவுடன் வயலை நன்கு உழவு செய்ய ஆரம்பிக்கின்றனர். புரட்டாசி ,ஐப்பசி ,கார்த்திகை போன்ற மாதங்களில் இப்பகுதியில் பருவ மழை பெய்கிறது.

    "  ஐப்பசி அடை மழை கார்த்திகை கன மழை

 புரட்டாசி மழை புரட்டிப் புரட்டி எடுக்கும் "

என்பர்

குடித்த பின்னர் நீரும் சேரும் ஆக இரண்டறக் கலந்து உள்ள நாற்றங்காலில் விதைப்புக்கு ஏற்ற வகையில் பக்குவப்படுத்தி விடும்" மேலும்,

 ஆடி, ஆவணி போன்ற மாதங்களில் சாரல் பெய்கின்றது .

"ஆடி அடை சாரல் ஆவணி முச்சாரல்"

என்பது நாட்டுப்புற மக்களின் வழக்காறு ஆகும். காலம் தவறாமல் பெய்யும் மழை நீரால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்புகிறது .விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது .வேளாண்மை மழைப்பொழிவை நம்பியுள்ளது .நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது வேளாண்மையே ஆகும்.

பொன்னேறு கட்டுதல்

   மழைப்பொழிவுக்குப் பின்னர் உழவுத் தொழில் தொடங்கும் நாளில் நாற்று விதைக்கும் குறிப்பிட்ட இடத்தில் நாற்றங்கால் தயார் செய்யப்படும். நாற்றங்கால் தயாரிப்புக்காக முதன்முதலில் உழவர்கள் உழத்தொடங்குவர் .நல்ல நாளில் சகுணம் பார்த்து முதன்முதலாக ஏர்பூட்டத் தொடங்கும் இந்நிகழ்வுக்கு பொன்னேர் பூட்டுதல் அல்லது நாளேரிடல் என்னும் சொல் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

தொளி கலக்குதல்

      ஏர்பூட்டிஉழுத பின்னர் நீரும் சேறுமாக ஆக இரண்டறக் கலந்து உள்ள நாற்றங்காலினை நெல் விதைப்புக்கு ஏற்ற நிலையில் பக்குவப்படுத்தப்படும் இந்நிகழ்வைத் தொளி கலக்குதல் என்பர்.தொளியடித்தல்,சேறு கலக்குதல் ஆகிய சொல்லால் வழங்கி உள்ளனர் .சேறு எனப் பொருள்படும் தொளி என்பது பழமையான பொருளாட்சி என்று ந.வீ.ஜெயராமன் குறிப்பிடுகின்றார்.

 பரம்படித்தல்

நீரும் மண்ணும் கலந்து செம்புலப் பெயல் நீர் போல காணப்படும் சேற்று நிலமாகிய வயலினைப்பரம்பு என்னும் பெயர் கொண்ட நிலமட்டப்பலகையைக் கொண்டு வயல் முழுவதும் ஒரே சீராக சமப்படுத்தும் இம்முறைக்கு பரம்படித்தல் என்பர். நிலத்தினை சமப்படுத்தும் போது மரப்பலகைக்கு மாற்றாக வாழைமரத்தை பயன்படுத்தும் முறையும் உண்டு.இதனை வாழை இழுத்தல் என்கின்றனர் கரூர் பகுதி மக்கள்.

நாற்றுப்பரவுதல்

      உழுது, தொளி கலக்கி பரம்படிக்கப்பட்ட வயலில் விதைகள் விதைக்கப்படுகின்றன .விதைத் தானியத்தினை ஒரு பெட்டியில் வைத்து நெருக்கமாக வயலில் தெளிக்கும் செயலை விதை தெளித்தல் என்பர்.நாற்றங்காலில் விதை  இடுவதை நாற்று பரவுதல் நாற்று விடுதல் ஆகிய கலைச் சொற்களால் அறியலாம் .

கங்களவு நீர்பாய்ச்சுதல்

    நீர் பாய்ச்சுதல் வேளாண்மை தொழிலில் சிறப்பிடம் பெறுகிறது.கங்களவு என்பது அனைத்து பயிர்களுக்கும் நீர் பாய்ச்சும் செயல் அல்ல. குறிப்பாக நாற்றுக்கு முளைக்குத்தண்ணீரை அடைத்திட்டான் என முக்கூடற்பள்ளு (122),அளவாய் முளைத்த பின்வு நீரைப் பாய்ச்சினேன்(114)என விநாயகர் பள்ளும் முளைக்கும் கங்களவு நீர் நிறைத்தான்(170)என வையாபுரிப் பள்ளும் நாற்றங்காலில் நாற்று முளைக்க ஏற்றவாறு நீர் பாய்ச்சும் இம்முறையை இலக்கியங்கள் குறிப்பிடுவது வேளாண்மையின் தொன்மையை எடுத்துக் காட்டுகிறது .கங்களவு.நீர் பாய்ச்சுதல் என்பது நாற்று முறையில் அளவுக்கேற்ப சீராக நீர் பாய்ச்சப்பபடும் முறை ஆகும்.

சேடை பாய்ச்சுதல்

   நடவுக்கு உரிய வயல்களை முதல்முறையாக உழுவது சற்று கடினமாக இருக்கும்.அத் தன்மையை போக்கும் விதமாக வறண்டு கிடக்கும் தரிசு நிலத்தில் நீர் பாய்ச்சுதல் சேடை பாய்ச்சுதல்,சீடை பாய்ச்சுதல் ஆகும் .

தழை மிதித்தல்

  உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் உரமாக ஆடாதொடை, எருக்கு ஆமணக்கு ,கொழிஞ்சி ,ஆவாரை போன்ற செடிகளை வெட்டி வயலில் இட்டு மிதித்து இரண்டு ,மூன்று நாள் கழித்து நடவுசெய்வர் .இம்முறையை தழைமிதித்தல் ,கொழை மிதித்தல்என அழைப்பர்.

நாற்று நடுதல்

     பயிர் செய்யும் முறையில் பயிர்களை கவனமாக வரிசை முறையில் இடைவெளிவிட்டு நடவு செய்தல் வேண்டும். நடவுஎன்பது வயலில் பயிர்கள் எதுவாக இருந்தாலும் அந்தந்த வயலில் கைகளால் பள்ளம் செய்து நாற்று அல்லது விதைகளை இடுதல் நடுதல்ஆகும். நாற்று நடுதல், நாற்று பகிர்தல் விதை நடுதல் போன்ற கலைச்சொற்கள் இவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

களை எடுத்தல்

        விதைபயிற்றினை வளர விடாது செய்யும் தேவையற்ற பயிர்களைக் களைந்து பயிர் நன்கு வளர செய்தல் களை எடுத்தல் என்பர் .இதனை களைகொத்துதல் ,களை பறித்தல் ,கலைப்பறிப்பு ,காடு கொத்துதல் என்று பல்வேறு வகையான கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன .

வெட்டிக் கட்டுதல்

   வேளாண் முறையில் அக்கால மக்கள் ஒரு ஒழுங்கு முறையை கையாண்டு வந்துள்ளனர் .பயிர்செய்யும் வயல்கள் மேடு பள்ளம் இல்லாமல் ஒரு சீராக அமைக்கப்படும் தொழில் முறைகளில் வெட்டிக் கட்டுதல் என்பதும் ஒன்று வரப்பு வெட்டிக் கட்டுதல் என்பதும் இதில் அடங்கும். மேலும் ஓரம் பாரம்வெட்டுதல் என்று குறிப்பிடுவது திண்டுக்கல் வட்டார வழக்கு.

கவாத்து செய்தல்

    தென்னை ,மா ,கரும்பு, தேக்கு போன்றவற்றின் பக்க கிளைகளையும் தேவையில்லாத வற்றையும் நீக்குவது கவாத்து செய்தல் ஆகும் .பக்கக் கிளைகளை வெட்டுவது இதனை பழுதுபார்த்தல்,செரை எடுத்தல்,சருகு..பார்த்தல்,பாலை வெட்டுதல் என்றும் குறிப்பிடுவர்.

கிடங்கு வெட்டுதல் 

      வேளாண் முறைகளில் ஒவ்வொரு விளைபயிர்களுக்கும் நீர் வெவ்வேறு முறைகளில் நீர் பாய்ச்சுதல் அவசியம் .நீர் பாய்ச்சுதலுக்கு ஏற்ற வகையில் பார், பாத்தி அமைப்பர் .கரும்பு, வாழை வெற்றிலை இவற்றிற்கு அகலமான கரைகள் கொண்ட பாத்திகள் அமைத்து அவற்றின் இடையே நீர் பாய்ச்சுவர்  .இவற்றிற்கு அகலமான கரைகள் கொண்ட பாத்தி அமைத்து அவற்றின் இடையே நீர் பாய்ச்சுவர்.இம்முறையான பார் மற்றும் பாத்தி அமைப்பதனைக் கிடங்கு வெட்டுதல் என்று அழைப்பர் .

கதிர் அடிப்பு 

 விளைந்த பயிர்களை பயிர் செய்த நிலத்தில் இருந்து நீக்குவதற்கு அறுவடை என்று பெயர். அவ்வாறு அறுவடை செய்த கதிர்களை பயன்படும் பொருள், பயனற்ற பொருள் எனப் பகுத்து பிரித்து எடுக்கும் முறையை கதிர் அடிப்பு என்று அழைக்கின்றனர் .கதிர்கள் இருக்கும் தானியத்தை மீண்டும் பிரித்து எடுக்கும் தன்மையும் உண்டு .அவ்வாறு இரண்டாவது முறையாகப் பிரித்து எடுக்கும் முறையினை தாழ் அடித்தல் ,சூடு அடித்தல் தழுக்கு அடித்தல் என்பன போன்ற கலைச்சொற்கள் கொண்டு வழங்கப்படுகின்றன. பிறகு அதனை காற்றில் வீசி சருகு,தூசி,பதறு இவற்றினை நீக்குவதும் வேளாண்மை முறையில் காணப்படுகிறது .இதனை தூற்றுதல் என்கின்றனர்.

போர் போடுதல்

    தானியம் வேறாகவும் தட்டை ,புற்வேறாகவும் பிரித்துஎடுத்த பிறகு தானியத்தினை வீட்டிற்கும் அவற்றின் கழிவுகளை விலங்குகளுக்கு உணவாகப் பல நாட்கள் பயன்படுத்தும் வகையில் மழை,காற்று,வெயில், இவற்றில் இருந்து பாதுகாக்க ஒரு சிறந்த முறையினைச் செயல்படுத்தி உள்ளனர்.சோளம் மற்றும்நெல் இவற்றின் கழிவுகளை கத்தையாக கட்டி அவற்றினை வரிசைப்படி அடுக்கி மேலே நெல் புற்களை மூடி வைக்கும் முறை போர் போடுதல்.

தரிசடித்தல்

     பயிர் செய்யும் வயலை இரண்டு,மூன்று முறைக்கு மேல் உழுது நிலத்தினை நன்கு பயன்படுத்துவர்.பயிர் செய்யும் வயல்களை முதன் முறையாக உழுவது தரிசடித்தல் என்பர்.தரிசடித்தலுக்கு பின்னர் இரண்டாம், மூன்றாம் நான்காவது முறைகளும் உழப்படும்.இரண்டாம் முறை உழுதல் மறித்தடித்தல்,இரட்டடித்தல் எனவும் மூன்றாம் முறை உழுதல் முச்சாலடித்தல்(மூவோட்டு)என்றும் நான்காம் முறை உழுதல் நாலாம் உழவு(நாலுழவு)எனக் குறிப்பிட்டுள்ளார் ந.வீ.செயராமன்.திண்டுக்கல் பகுதிகளில் இத்தகைய முறைகளை ஒரு ஓட்டு,இரண்டு ஓட்டு,மூஓட்டு என்று வழங்குவதையும் அறியமுடிகிறது.

கிடைமறித்தல்

     பயிர் செய்கின்ற நிலத்தில் அறுவடை காலம் முடிந்து தரிசாக கிடக்கும் வயல்களில் அடுத்த நடுவு தொடங்கும்முன் நிலத்துக்கு வளம் சேர்க்க உரம் வைத்தல் வேளாண்மையின் மரபு. ஆடுமாடுகளை கிடை வைத்துள்ளனர் சங்க கால வேளாண் மக்கள் என்பதற்கு ஆடும் பசுவும்நிரக்க நிறுத்தல் எனவரும் திருமலை முருகன் பள்ளு சுட்டுவதாக நவீ.செயராமன் குறிப்பிட்டுள்ளார்.

    இன்றும் விளை நிலத்தில் ஆடு மாடுகளை கூட்டமாக கொண்டுவந்து வயல்களில் சில நாட்கள் மறித்து வைப்பதும் காணப்படுகிறது .இதன் மூலம் ஆடு மாடுகளின் கழிவுகளை நிலத்தில் நேரடியாக செலுத்தப்படுகிறது .இதன் மூலம் நிலம் வளம் பெறுகிறது. .இச்செயல் கிடை மறித்தல் ஆகும் .சில இடங்களில்கிடை போடுதல் என்றும் சுட்டுவர் .

நிலம் சார்ந்த கலைச் சொற்கள்

          நிலத்தினை வேளாண் தொழில் செய்கின்ற மக்கள் பல நிலைகளில் பாகுபடுத்தி உள்ளனர். சங்க கால மக்கள் குறிஞ்சி ,முல்லை, மருதம் ,நெய்தல் எனவும் பிற்காலத்தவர் நன்செய் ,புன்செய் நிலம் எனவும் காடு, தோட்டம், வயல் வெளி எனும் வழக்குகள் காணப்படுகின்றன .இத்தகைய நிலம் சார்ந்த நிலைகளில் பல்வேறு கலைச் சொற்கள் உள்ளன .

பயிர் வளர்ச்சி சார்ந்த-கலைச்சொற்கள்

      வேளாண் செய்த பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு உரிய காலம் வரும் வரை வளரும் பயிர்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு சொற்களால் சுட்டப்படுகின்றன .வேளாண் பெருமக்கள் பயிர் வளர்ச்சியின் நுட்ப வேறுபாடுகளை தங்களின் மதிநுட்பத்தால் கலைச் சொற்களை அமைத்து உள்ளனர் என்பது கலைச்சொற்களை காணும்போது உணரமுடிகிறது .

  பயிர்கள் நட்டபின்னர் மண்ணில் வேர்பிடித்து உறுதியாதலை வேரூன்றல்வேர்விடித்தல் என்றும்அப்பயிர்கள்சிறிது பசுமை அடைவதனைப் பப்பேறுதல் பசுப்பேறல் என்றும் கூறியுள்ளனர். பயிர்கள் பல்வேறு கிளைகளாகக் கிளைப்பதனைச் சிம்பு வெடித்தல் கிளை கிளைத்தல் என்ற சொற்களால் குறித்தனர்.

  நெல் போன்ற பயிர்களில் கதிர் தோன்றுவதனை பூட்டு வாங்குதல் என்னும் சொல் கொண்டு வழங்கிவந்துள்ளனர் .கதிர்கள் சூல் கொண்டு மெல்ல தலை நீட்டி வெளிவந்த கதிரில் மணிகள் பால் பிடிக்கும் நிலையைச் சுட்ட பால் ஏறுதல் ,பால் பிடித்தல் பால் கொள்ளுதல் என்ற சொற்களால் வழங்குகின்றனர் .

வேளாண் கருவிகள் சார்ந்த -கலைச்சொற்கள்

     உலகம் நிலைத்து வாழ ஒரு குடையின் கீழ் வாழும் மனிதர்கள் ஆகிய உணவுப் பொருள் வழங்குபவர் என்று குறிப்பிடும் வேளாண் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த பயன்பாட்டு கருவிகள் பல உள்ளன இத்தகைய கருவிகள் யாவும் அவற்றின் பயன்பாட்டை கொண்டு பெயரிட்டு வழங்கிவந்துள்ளனர் கருவிகளின் பெயர்கள் சார்ந்த கலைச் சொற்களாக இன்று கருதப்படுகின்றனவேளாண் கருவிகள் பொதுவாக ஆரம்பகால கருவிகள், இடைக்கால கருவிகள், இக்காலக் கருவிகள் என மூன்று பெரும் பகுப்பாக பகுக்கலாம்வேளாண் தொழிலில் நிலத்தினை உழுதல் ,நீர் இறைத்தல் ,அறுவடை செய்தல் என்று பல படிநிலைகள் உள்ளன. இவற்றில் ஆரம்ப காலத்தில் நீர் இறைப்பதற்கு ஏற்றம், கமலை ,கவலை போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    நிலத்தை உழுவதற்கு ஏர் ,கலப்பை பரம்பு ஆகியனவும் இவற்றுடன் நுகத்தடி ,மேலி, வடக்கயிறு, வால்கயிறு ,உருனை ஆகியனவும் பயன்படுத்தி பல நிலைகளில் தொழில்செய்துள்ளனர்.

  மேலும் மண்வெட்டி ,களைக்கொத்து, தார் குச்சி விதையினை கொண்டுசெல்லும் விதைப் பெட்டி சிலவேளைகளில் கன்றுகளுக்கும் மாடுகளுக்கும் பயன்படுத்தும் நிலையும் காணப்பட்டுள்ளது.

 

தொகுப்புரை

 

            இக்கட்டுரையின் மூலம் வேளாண் மக்களிடையே வழங்கிவரும் கலைச்சொற்களை அறியமுடிந்தது.

     "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு

 தேக்கிய நல வாய்க்காலும் வகைப் படுத்தி

 நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும்

நிறையுழைப்பு தோள்கள் எல்லாம் எவரின் தோள்கள்

       எனப் பாவேந்தர் கூறும் உழவரின் வாழ்க்கை சிறப்போடு ,தமிழ் கலைச் சொற்களும் இன்றளவு வரை பயன்படுத்தப்பட்டும் பாதுகாக்கப்பட்டும்வருவது போற்றுதற்குரியதாகும்.

 

துணைநூற்பட்டியல்

 

1.    .செ.கந்தசாமி, தமிழர் வேளாண்மை மரபுகள்,கலைச்செல்வம் பதிப்புகள்-1987.

2.    நா.வானமாமலை, தமிழர் நாட்டுப்பாடல்கள்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.சென்னை-1964.

3.    .வு.செயராமன், தமிழ் இலக்கியத்தில் வேளாண்மை அறிவியல்.சென்னை-1986

4.    இரா.மனோகரன், நாட்டுப்புற வேளாண்மை, தன்னானே பதிப்பகம்,பெங்களூர் பதிப்பு-2001

5.    இராதா செல்லப்பன், கலைச்சொல்லாக்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

6.    சண்முகம்.செ.வை. அறிவியல் தமிழாக்கம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.சென்னை.