4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

என் கனவினைக் கேள் நண்பா - கவிஞர் வ.வெ. இராஜாமணி

 

       என் கனவினைக் கேள் நண்பா

           

என் நண்பன் அருகிருக்க என் கனவைக் கேளென்றேன்

பாதியில் உறக்கமெனைத் தழுவியதும் நானறியேன்

பாரதியின் தமிழ்த் தாயோ என் கனவில் வந்தமர்ந்தாள்

எதுவெனினும் கேளென்று எனக்கொரு வரம் தந்தாள்

 

தமிழ் உலகப் புகழ் பெறவே உதவிடுக எனக் கேட்டேன்

தமிழ் உலகில் புகழ் பெற்று வெகு நாட்கள் ஆனதென்றாள்

தமிழ் இசையும் இசையரங்கில் ஒலித்திடவே செய் என்றேன்

தமிழ் இசையும் இசையரங்கில் இணைந்ததுவே காண் என்றாள்

 

பாரதத்தைப் பாரினிலே ஏற்றமுறச் செய் என்றேன்

விண்வெளியில் சாதித்து ஏற்றமதைப் பெற்றதென்றாள்

பாரதத்தின் ஒற்றுமையை உலகறியச் செய் என்றேன்

பல உலக நாடுகளில் சென்று நீ பார் என்றாள்

 

மொழிகளிலே வேற்றுமையை வேரறுக்க வேண்டுமென்றேன்

வேற்றுமையே ஒற்றுமையாய் விளங்குதலைப் பாரென்றாள்

பணம் படைத்தோர் ஏழையெனும் பாகுபாட்டை ஒழி என்றேன்

பாடுபட்டு உழைத்தே பலர் பணம்படைத்தோர் ஆனார் என்றாள்  

 

குடி கெடுக்கும் குடி தனையே ஒழித்திடுவாய் என்றேன் நான்

தமிழ்த்தாயோ மவுனத்தைத் தனதாக்கி அமர்ந்திட்டாள்

தன் கண்ணில் நீர் சொரிய தலை கவிழ்ந்து தவித்திட்டாள்

சட்டென்று மறைந்திட்டாள் என் கனவைக் கலைத்திட்டாள்

 

கனவுதனைக் கேட்ட நண்பன் கண் கலங்கித் தவித்திட்டான்

குடி மக்கள் நலம் பெறவே குடி என்றும் விலகிடவே

குடியாட்சி நடத்துவோர் தம் மனம் இறங்க வழி செய்ய

இறையருளே கதியென்று கரம் கூப்பி வணங்கி நின்றான்

 

குடி கெடுக்கும் குடிதனையே ஒழித்திடுவோம் என்றென்றும்

குடியில்லா நாடென்று கூறிடுவோம் கூவிடுவோம்

 

கவிஞர் .வெஇராஜாமணி