4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

தாவோ தேஜிங் புனித நூலும்,தாவோ மதமும் - முனைவர் மெய் சித்ரா

 

தாவோ தேஜிங் புனித நூலும்,தாவோ மதமும்

(Tao De Jing and Taoism)

 

முனைவர்  மெய் சித்ரா (SCOPE, City University of Hong Kong)

 

லாவோட்சு என்ற தத்துவ ஞானி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாய்  வரலாற்றாளர்கள்  வரையறுக்கின்றனர்.  அவர் பல கோட்பாடுகளை உருவாக்கினார். அந்தக் கோட்பாடுகள் 5000 சீன எழுத்துக்கள் கொண்ட 81 அத்தியாயங்கள் கொண்ட  நூலாய்,  லாவோட்சு அவர்களுக்குப் பின் வந்தவர்களால் வெளியிடப்பட்டது. அதை தாவோ தேஜிங் என்று அழைத்தனர்.அவர் கூறிய கோட்பாடுகளை, நெறிகளைப் பின்பற்றுவோரை தாவோ மதத்தினர் என்று அழைத்தனர்.  தாவோ தேஜிங்,  தாவோவியம் (Daoism) என்ற சமயத்தின் அடிப்படை நெறி நூல் ஆனது.  இந்த நூல் சீன செவ்வியல், மெய்யியல் நூல்  என்று கருதப்படுகிறது. 

 

அந்த நூலின் ஒரு படியை,  கி-மு இரண்டாம் நூற்றாண்டில் மாவாங்குதுய்(Mawangdui)என்ற பகுதியில் இருந்த சமாதியிலிருந்து எடுத்ததன்காரணமாய்  இந்தநூல்,  இந்தக் காலத்திற்கும் முந்தையது என்று கருதப்படுகிறது. 

 

அரசனும் சாமானிய மக்களும் எப்படி வாழவேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

 

இந்த நூல் வந்த பின்புலத்தை அறிந்து கொண்டால் அதில் இருக்கும் கருத்துக்கள் அந்தக் கால சூழலுக்கு ஏற்ப இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

 

சீன வரலாற்றில் போரிடும் அரசுகளின் காலமான (Warring States) கிமு 476 முதல் கிமு 221 வரையிலான காலத்தில் தாவோ தேஜிங் நூல் படைக்கப்பட்டது என்று வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இக்காலகட்டத்தில் சமூகத்தில் பெரும் குழப்பங்களும், சிற்றரசர்கள் இடையே தொடர்ச்சியான போர்களும், நாடு பிடிக்கும் கொள்கைகளும் நிலவின.

 

தாவோ தேஜிங்கை பற்றியும் அதனை எழுதிய லாவோட்சு பற்றியும் கூறும் போது, வரலாற்றாளர் சேமாசியன் (Sze-Ma Ch'ien),   சௌ (Chau) அரச மரபில் அரசாங்க ஆணை காப்பகத்தில் லாவோட்சு வேலை செய்து வந்தார்.  சௌ அரச மரபின் அழிவு காலம் தொடங்கியதை கண்டதால், நாட்டினை விட்டு வெளியேறினார். நாட்டின்  எல்லையின் அருகே வரும்போது, எல்லைக் காவலர் Yin-Hi என்பவர் மக்களுக்காய்  ஏதேனும் எழுதித்தர கேட்டுக் கொண்டதற்காய்  5000 சித்திர எழுத்துகளில் ஒரு நூலை கொடுத்துவிட்டு சென்றார்  என்று குறிப்பிட்டுள்ளதாய்  சீன நூல்கள் கூறுகின்றன.

 

சீன நாட்டில்  முறைமைகள், பண்புகள் சரியாய்  வரையறுக்கப்படாத காலத்தில், நாட்டு மக்களை நெறிப்படுத்த வழங்கிய நூலாக,  தாவோ தேஜிங் நூல் கருதப்படுகிறது. இந்நூல் நெறிகளை, தாவோ என்று குறிப்பிடுகிறது.  மறையவர்கள்,  சித்தர்கள் எப்படி நல்வழியில் நடப்பர் என்று கூறி, மக்களை நெறிப்படுத்த முயல்கிறார் லாவோட்சு. 

 

தத்துவ நூலாய்   படைத்திருந்தாலும், அவர் கால சமூக  தகவுளை  அதன்வழி கொடுத்துள்ளார். இந்த நூல் அறம், பொருள் பற்றி குறிப்பிடுகிறது.குடும்பம், அரசு, சமுதாயம் என்று அனைத்துப் பொருட்களையும் கையாண்டுள்ளார். ஆளுமை பற்றி பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. நெறி, அறம், ஒழுக்கம், மறையோர், அரசாண்மை, அறிவு, வாழ்க்கை, வானகம் வையகம், பற்று, காலம், மொழி, பொருளியல்,  அரசியல், உறவு பற்றி கருத்துகள் காணப்படுகின்றன.பல கருத்துக்களை உவமைகளுடன் விளக்கியுள்ளார்.

 

சீன மொழியின் தாவோ தேஜிங், தமிழிலே அறநெறி நூல்  என்று மொழிபெயர்க்கப்படலாம்.

 

இந்து மதம் போன்று தாவோ மதமும் வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறுகின்றது.  தாவோவியம் ஒரு மதமாய்  ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும்,அதை பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் இருக்கின்றனர்.  அவர்கள் கோயில்களுக்குச் சென்று வணங்குகின்றனர்.  கோயிலில் சிலைகளை வைத்து அவர்கள் அந்தச் சிலைகளுக்கு ஆராதனைகள் செய்து வணங்குகின்றனர்.  

 

இந்த மதத்திலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட கடவுளர்கள் இருப்பதாய்  கூறப்படுகிறது.மதத்தின் முக்கிய கடவுள் ஒரு பெண் கடவுள்.  அவரை அவர்கள் அம்மா’ (Ama) என்று அழைக்கின்றனர்.  அவருக்கு பல பெயர்களில், டின் ஹவ் (Tin Hau) என்றொரு பெயரும் உண்டு.  மேலும், கல்விக்கான கடவுள்,செல்வத்திற்கான கடவுள், வீரத்திற்கான கடவுள், என்று பல கடவுளர்களையும் அவர்கள் வணங்குகின்றார்கள். 

 

இதுவரை தாவோ தேஜிங் பல மதங்களின் கோட்பாடுகளுடன் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. கன்பியூசியஸ் மதக் கோட்பாடுகள் (Analects), இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதை,  கிறிஸ்துவ மதத்தின் புனித நூலான விவிலியம்,  இஸ்லாமியர்களின் புனித நூலான குரான், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்தம், இந்துக்களின் மனு ஸ்மிருதி என்று பல்வேறு கோட்பாடுகளுடன் பல தலைப்புகளில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

 

தமிழகக் கோயில்களில் காணப்படும் குறியீடு சீனாவில் இன்  யாங் என்றுஅழைக்கப்படுகிறது.  ஆண்-பெண், கடவுள்-மனிதன், காலை-மாலை, இரவு-பகல், வெப்பம்-குளிர்ச்சி போன்றஎதிர் விளைவுகளைக் காட்டும் குறியீடே இந்த இன்  யாங் குறியீடு என்றும் அது தாவோ தேஜிங்  என்ற நூலில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குறிப்புகளும் உள்ளன. இது தாவோ மதத்தினரின் புனித குறியீடாகவும் உள்ளது.



 

லாவோட்சு அவர்கள் தமிழகத்தின் போகர் சித்தரின் மறுபிறப்புஎன்ற குறிப்பையும் நம்மால் காண முடிகிறது. தாவோ மதத்தினர் வணங்கும் முறைகளைக் காணும்போது இந்த மதத்திற்கு, தமிழகப் பின்புலம் நிச்சயம் இருக்கலாம் என்று தோன்றுகிறது.