4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

கைகேயி பாத்திரப்படைப்பில் காணும் தனிப்போக்கு கம்பராமாயணம் மற்றும் இராமர் அம்மானையை அடிப்படையாகக் கொண்ட ஒப்பீட்டாய்வு - ஓசாநிதி சந்திரமேகன்

 

கைகேயி பாத்திரப்படைப்பில் காணும் தனிப்போக்கு கம்பராமாயணம் மற்றும் இராமர் அம்மானையை அடிப்படையாகக் கொண்ட ஒப்பீட்டாய்வு 

ஓசாநிதி சந்திரமேகன்

ஆராய்ச்சி உதவியாளர், RIC AHEAD Project

கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை.

ஆய்வு அறிமுகம்

இராமாயணத்தை மூலமாகக்கொண்டு கம்பரால் இயற்றப்பட்ட நூல் கம்பராமாணயம் ஆகும். இது 06 காண்டங்களையும், 125 படலங்களையும் கொண்டு இராமனது வரலாற்றைக்கூறும் காப்பியமாகக் காணப்படுகின்றது. கம்பராமாயணத்தைப் போன்றே இராமர் அம்மானையும் 3800 தொடக்கம் 4000 வரிகளிலமைந்து இராமனின் வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது. கம்பராமாயணத்தில் தசரதனின் கோசலை, கைகேயி, சுமித்திரை என்னும் மூன்று மனைவியர்களுள் ஒருவராக கைகேயி காணப்படுகிறாள். இராமன் கோசலையின் மகனாக இருந்தாலும் இராமன்மீது அன்பு கொண்டிருந்தவள். இருப்பினும் இராமனுக்கு முடிசூட்டு விழா என்பதை அறிந்த மந்தரை தனது சூழ்ச்சியால் கைகேயின் மனதை மாற்றியுள்ளதோடு மனம்மாறிய கைகேயியை கம்பராமாயணத்திலும், இராமர் அம்மானையிலும் கவிஞர்கள் தசரதனின் ஏனைய இரண்டு மனைவியர்களைக் காட்டிலும் ஒரு தனித்த போக்கிலே வெளிக்காட்டியுள்ளனர். ஆகையால் தசரதனின் ஏனைய இரு மனைவியர்களிடமும் இருந்து கைகேயி எவ்வாறு தனித்த போக்கில் காணப்படுகிறாள் என்பதை கம்பராமாணத்தில் பாலகாண்டம் மற்றும் அயோத்தியா காண்டத்தையும் இராமர் அம்மானையையும் அடிப்படையாகக் கொண்டு ஒப்பீட்டு நோக்கில் ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது.  

திறவுச் சொற்கள்: கம்பராமாணயம், இராமர் அம்மானை, கைகேயி

ஆய்வு முறையியல் 

கைகேயி என்னும் பாத்திரப்படைப்பின் போக்கு தசரதனின் ஏனைய இரண்டு மனைவியர்களிடமும் இருந்து எவ்வாறு தனித்தன்மை பெற்றுள்ளது என்பதை கம்பராமாணத்தின் பாலகாண்டம், அயோத்தியா காண்டம் என்பவற்றையும் இராமர் அம்மானையையும் ஒப்பிட்டு ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது

முதநிலைத் தரவுகள்

முதநிலைத் தரவுகளாக கம்பராமாணயத்தின் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், இராமர் அம்மானை என்பன ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன

இரண்டாம் நிலைத் தரவுகள் 

கைகேயி பாத்திரப்படைப்பு தொடர்பாக வெளிவந்துள்ள கட்டுரைகள் மற்றும் இணையதள முகவரிகள் என்பன இரண்டாம் நிலை; தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன

 

ஆய்வின் உள்ளடக்கம்

கம்பன் கம்பராமாயணத்தின் முதலிரு காண்டங்களிலும் கைகேயின் பாத்திரவார்ப்பு முறையில் தனிப்போக்குகளைக் கையாண்டுள்ளார். அதாவது பாலகாண்டம் மற்றும் அயோத்தியா காண்டம் ஆகிய இரண்டு காண்டத்திலும் கைகேயி பற்றியமைந்துள்ள குறிச்சொற்கள் முதலாவதான தனித்த போக்காக அமைந்துள்ளது. இராமனின் முடிசூட்டு விழாவை அறிந்த மந்தரையின் சூழ்ச்சியால் இராமன்மீது கைகேயி வைத்திருந்த அன்பு வெறுப்பாக மாறுகின்றது. இவ்வாறு கைகேயின் வெறுப்பிற்குக் காரணம் இராமாயணம் என்னும் ஒரு காப்பியம் எழ வேண்டும் என்றும் சீதையின்   (பெண்களின்) பெருமை உலகிற்கு வெளிப்பட வேண்டும், இளவரசியாகிய கைகேயி சாதாரண ஒரு மந்தரையின் சூழ்ச்சியால் மனம்மாறக் கூடியவள் அல்ல என்றும் வெளிப்படையான கதைப்போக்குடன் அமைந்த செய்தி கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை பின்வரும் செய்யுட்கள் மூலம் அறியமுடிகிறது

                'தீயமந்தரை.... செப்பலுந்தேவி

                தூய சிந்தையுந் திரிந்து சூழ்ச்சியினிமையோர்

                மாயையும் மவர் பெற்றுள வரமுண்மையாலும்

                ஆயவந்தண ரியற்றிய வருந்தவத் தாலும்'

                'அரக்கர் பாவமு மல்லவ ரியற்றிய வறமும்

                துரக்க நல்லறந் துறந்தனன் மொழி மடமான்

                இரக்க மின்மையன்றோவின்றிவ் வுலகங்களிராமன்

                பரக்குந் தொல்புக ழமுகினைப் பருகுகின்றதுவே'

                                                (மந்தரை சூழ்ச்சிப் படலம்: 77-78 ஞான சம்பந்தன், , ., பதி)

இவ்வாறு கூறப்பட்டுள்ள கதைப்போக்குடனான கைகேயியின் மனமாற்றத்திற்கான காரணம் இராமர் அம்மானையில் இடம்பெறவில்லை. மேற்கூறப்பட்டடுள்ள செய்யுட்கள்மூலம் கைகேயின் மனமாற்றத்திற்கான காரணம் வெளிப்படையான கதைப் போக்குடன் காணப்பட்டாலும், கைகேயின் மனமாற்றத்திற்கு இரண்டு காரணங்கள் கம்பராமாணத்திலும், இராமர் அம்மானையிலும் வெளிப்பட்டுள்ளன. அவையாவன பரதனின் இழிநிலை, மற்றையது கேகய நாட்டின் எதிர்காலம் என்பனவாகும். இதனை முறையே பின்வரும் பாடலடிகள் மூலம் வெளிப்படுத்தலாம்

                'நீதுயர்ப் படுக, நான் நெடிது உன் மாற்றவள்

                தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்' (மந்தரை சூழ்வினைப் படலம்: 1460)

                'எண்ணுறப் பிறந்திலன் இறத்தல் நன்று' (மந்தரை சூழ்வினைப் படலம்: 1464)

இராமன் முடி சூடினால் கைகேயி கோசலைக்குப் பணிவிடை செய்யும் பெண்ணாகவே இருப்பாள் என்றும், பரதன் நாடாளாவிட்டால் அவன் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று மந்தரை கைகேயிக்குக் கூறுவதன் மூலம் பரதனின் இழிநிலையும் கேகய நாட்டின் எதிர்காலமும் வெளிப்பட்டுள்ளன. அதேபோன்று இராமர் அம்மானையில்,

              'சக்களத்தி பிள்ளை தகுமோடி வையகத்தில்

                மக்களிருக்க வளர்ப்பார்களோ மாற்றானை

                கன்னி வந்து நீலி கடும்பாவி நெட்டூரி

                என்னும் தெசரதனை என்ன வென்று கேட்பேன் நான்

(இராமர் அம்மானை: 337-340 வரிகள்)

இவ்வாறு இடம்பெற்றுள்ளதனூடாக கைகேயின் மனமாற்றத்திற்கான காரணங்கள் வெளிப்பட்டுள்ளன. கைகேயி தனக்கும், தன் மகனுக்கும், தான் பிறந்த வீட்டிற்கும் அயோத்தியில் இடம்பெறும் அரச மாற்றமானது தனக்கு இழுக்கை ஏற்படுத்தும் என நினைத்து மனம் மாறியதால் தசரதனின் ஏனைய இரண்டு மனைவியர்களிடமும் இருந்து தனித்த போக்கிலே காணப்படுகிறாள்

பாலகாண்டத்தில் கைகேயின் அறிமுகப் போக்கு ஒரு தனித்த தன்மையைப் பெறுகின்றது. கவிஞர் கோசலை, சுமித்திரை ஆகிய இருவரையும் குறிப்பிடும்போது தத்தம் பெயர்களைச் சுட்டியும், வேறு சில குறிப்புப் பெயர்களைச் சுட்டியும் குறிப்பிடும் அதேவேளை, கைகேயியைக் குறிப்பிடும்போது ஒரு தனித்த போக்கைக் காணக்கூடியதாக உள்ளது

கோசலை பற்றிய குறிச்சொற்கள் பாலகாண்டத்தில் ஆறு இடங்களில் வந்துள்ளன. அவையாவன அன்னை, கவுசலை, செங்கனிவாய்க் கவுசலை, திறங்கோள் கவுசலை, தூயமென் சுரி சூழற்றொண்டைத் தூயவாய் காமரொண் கௌசலை, வள்ளலைப் பயந்த நங்கை என்பனவாகும். இதனை முறையே பின்வரும் பாடல் வரிகளினூடாக அறியமுடிகிறது

                                'ஆயதன் அன்னை அடித்துணை சூடி' (கடி: 94)

'தாழ்குழல் கவுசலை தயரதன் எனவே' (திரு: 132)

'கருங்கடலைச் செங்கனிவாய்க் கவுசலை' (குலமுறை: 20)

'திரு உறப் பயந்தனள் திறம்கொள் கவுசலை' (திரு: 103)

'தூமென் சுரி சூழற்றொண்டைத் தூயவாய் காமரொண் கௌசலை' (திரு: 88)

'வள்ளலைப் பயந்த நங்கை வானவர் வணங்க'(எழு 65)

இவற்றுள் நான்கு இடங்களில் கோசலை என்னும் பெயர் கௌசலை, கவுசலை என்ற பெயரில் வந்துள்ளது

அதேபோன்று இராமர் அம்மானையில் கவிஞர் கோசலைக்கு கவுசலை என்ற குறிச்சொல்லை மாத்திரமே பயன்படுத்தியுள்ளார். இதனை பின்வரும் இராமர் அம்மானை வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

                                'கந்தனறுங் குழலாள் கவுசலையாள்' (இராமர் அம்மானை:171 வரி)

                                'கந்தக் குழலாள் கவுசலையாள்' (இராமர் அம்மானை:332 வரி

கோசலையைப்போன்றே சுமித்திரையையும் கவிஞர் மூன்று இடங்களில் அடையுடனும், இரண்டு இடங்களில் அடையின்றியும், தசரதனின் இளைய மனைவி சுமித்திரை என இரண்டு இடங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். சுமித்திரை பற்றிய குறிச்சொற்கள் பாலகாண்டத்தில் ஏழு இடங்களில் காணப்படுகின்றது. அவையாவன இருவர்க்கிளையாள், இருவரைப் பயந்த நங்கை, இளைய மென்கொடி, சுமித்திரை, சுமித்திரை, தூய சுமித்திரை, விடங்கிளர் விழியினாள் என்பனவாகும். இதனை பின்வரும் பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது

                                'இருவர்க்கிளையாளும் ஈன்று எடுத்தாள்' (குலமுறை: 22)

                                'இருவரைப் பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள்' (எழு:64)

                                'இளவயற் பயந்தனள் இளைய மென்கொடி'(திரு: 105)

                                'சுமித்திரைக்கு அளித்தன்'(திரு:90)

                                'சுமித்திரை தனக்கு நல்கினாள்'(திரு: 91)

                                'தூய சுமித்திரை தாழ் தொளலோடும்'(கடி 94)

                                'விடங்கிளர் விளியினள், மீட்டும் ஈன்றனள்'(திரு :106)

 

இராமர் அம்மானையில் சுமித்திரையை சிமித்திரை என கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார். இதனை பின்வரும் பாடல் வரி வெளிப்படுத்தியுள்ளது

'செவ்விளநீர் கொங்கை சிமித்திரையாள்'( இராமர் அம்மானை வரி: 181)

ஆனால் கைகேயியைப் பற்றிக் கம்பராமாயணத்தின் பாலகாண்டம் மற்றும் அயோத்தியா காண்டத்தில் குறிப்பிடும்போது கேகயன் மகள், கேகயன் மாமகள், கைகயர் வேந்தன் பாவை, கைகயன், மாசறு கேகயன் மாது என்றே குறிப்பிட்டுள்ளார். இதனை பின்வரும் பாடல் வரிகள் வெளிப்படுத்தியுள்ளன

                                'கேகயர் கோன் மகள் பயந்தாள்' (குலமுறை: 21)

          'கேகயன் மாமகள் கேழ் கிளர்பாதம்' (கடி: 94)

          'அன்னம் என்ன கைகயர் வேந்தன் பாவை' (எழு: 64)

          'கைகயன் தனையைதன் கரத்தும்' (திரு: 89)

          'மாசறு கேகயன் மாது மைந்தன்' (திரு: 104)

இங்கு கேகய நாட்டு அரசன் மகள் எனப் பொருள் தரும் கைகேயி என்ற அவளது சுருக்கப் பெயர் சுட்டப்படவில்லை. ஆனால் அவள் கேகயனுடைய மகள் என விரிவாகப் பல அடைச் சொற்களுடன் இங்கு குறிக்கப்படுகிறாள். வேறு பல நிலைகளில்  (பரதனின் தாய், தசரதன் மனைவி, இராமன் சிற்றன்னை) அவளைப் பற்றிய குறிச்சொற்கள் அமையாமல், கேகய நாட்டுடனே அவளை இணைத்துக் கூறும் சொற்களே அமைக்கப்பட்டுள்ளமை கூர்ந்து நோக்கத்தக்கது

அயோத்தியா காண்ட கைகேயி சூழ்வினைப் படலத்தில், கைகேயி பற்றிய வசைச் சொற்களே அதிகம் காணப்படுகின்றன. உதாரணமாக பரதன் கைகேயியை கடியவள் எனக் கூறுகின்றான்

                                'கொடிய கோபத்தால் கொகித்த கோளரி

                                கடியவள் தாய் எனக் கருதுகின்றிலேன்'(கம்பராயமணம், இராஜம்,  எஸ்,(பதி), :2171)

இராமர் அம்மானையில் கைகேயி என்னும் குறிச்சொல் கையாளப்பட்டுள்ளது. இதனை பின்வரும் பாடல் வரி வெளிப்படுத்தியுள்ளது.

                                'கார் சொரியும் பூங்கூந்தல் கைகேயி'(இராமர் அம்மானை வரி:177) அத்தோடு பரதன் கைகேயியை பாவி எனக் குறிப்பிடுகிறாள். இதனை 'அன்னையே நீ எனக்கு அரும்பாவி' (இராமர் அம்மானை வரி: 372) இதனை நோக்குகின்றபோது கம்பராமாயண பாலகாண்டம், அயோத்தியா காண்டம் என்பவற்றிலும் இராமர் அம்மானையிலும் தசரதச் சக்கரவர்த்தியின் ஏனைய இரண்டு மனைவியர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு தனித்த போக்கைக் காட்டுவதை கவிஞர்களின் வாயிலாக அறிய முடிகின்றது

ஆய்வின் முடிவு

கைகேயி பாத்திரப்படைப்பின் தனித்த போக்கு கம்பரின் கம்பராமாணத்தின் பாலகாண்டம் மற்றும் அயோத்தியா காண்டம் என்பவற்றில் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ள அதேவேளை ஏட்டில் அமைந்துள்ள இராமர் அம்மாiனையைப் பாடிய கவிஞரும் அதன் தன்மைக்கேற்ற வகையில் கைகேயின் தனித்த போக்கை பெரும்பாலும் கம்பராமாயணத்தோடு இணைந்த வகையில் வெளிப்படுத்தியுள்ளார்

 

உசாத்துணை நூல்கள்

1. இராமர் அம்மானை ஏட்டுச் சுவடி, மட்டக்களப்பு.

2. இரகுபரன், ., (பதி), 1995, கம்பமலர், அகில இலங்கை கம்பன் கழகம் 5வது ஆண்டு நிறைவு மலர்.

3. இராஜம், எஸ்,(பதி), 1958, கம்பராமாயணம், கோவை அறநிலை, சென்னை.

4. ஞானசம்பந்தன்,,., கம்பராமாயணம் பாலகாண்டம் (பதி), கம்பன் அறநிலை, சென்னை.

5. ஞானசம்பந்தன்,,., கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் (பதி), கம்பன் அறநிலை, சென்னை.

6. ஆய்வுக்கோவை, 1970, சென்னை.

இணையதள முகவரிகள்

1. மகாலெட்சுமி, ., 2018, கம்பனின் படைப்பில் கைகேயின் மனம், www.vallamai.com.