4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

அன்பின் வழியது உயிர்நிலை! - கவிஞர் மாலதி இராமலிங்கம்

 


 

அன்பின் வழியதே உயிர்நிலை எனப்படும்!

அஃதில்லையெனில் எலும்புத் தோலுடன் கூடாகும்!

அறத்துப்பாலில் அன்புடைமை சொல்லும் குறளாகும்!

அறஞ்சொன்ன வள்ளுவரின் அன்புக் குரலாகும்!

 

அன்பு என்பது மூன்றெழுத்து கவிதை!

அதுவே மனிதத்தை உயிர்ப்பிக்கும் விதை!

அன்பே நமையீர்த்து உறவைக் காப்பது!

அஃறிணைகளிளும் அதுவே கலந்து நிற்பது!

 

அன்பின் பரிமாணங்கள் பலவாய் உண்டு!

அன்பிற்கு மாற்றுப் பெயர்களும் உண்டு!

அன்பின் அறிகுறிகளும் பலவிதத்தில் உண்டு!

அன்பிற்கு எல்லையற்ற விளக்கங்களும் உண்டு!

 

அவரவர் நம்பிக்கையில் தெய்வத்தின் அருளில்!

அன்பென்பது அங்கே பக்தியெனும் நிலையில்!

அன்னையவள் காட்டுவது தாய்மையின் வடிவில்!

அவள் கொண்ட சேய்க்கோ கடவுளுருவில்!

 

அப்பாவின் குருதியில் அறிவுக் கடலில்!

அவரே தோழனாகி நடத்தும் வழியில்!

அகரம் கற்கும் நாளிலிருந்து நட்பாய்!

அகவைகள் கடந்தும் நிற்கும் உன்னதமாய்!

 

அகிலத்தைக் காட்டும் ஆசானின் வழியில்!

அனைவரும் போற்றும் அன்பு வாழ்த்துகளில்!

அமிழ்தினும் இனிய தமிழின் மொழியில்!

அகவிருள் நீக்கும் ஞானத்தின் உறைவிடத்தில்!

 

அன்பே காதலென இளம்பருவத்தினர் இடையில்!

அதுவே இணையருக்கு முதலான உரிமையில்!

அனைத்து உறவுகளிடத்தில் பந்தமெனும் பெயரில்!

அடுத்தடுத்த பருவத்தில் நட்பெனும் இணைப்பில்!

 

அன்பே வளர்க்கும் மனிதருக்குள் நேயத்தை!

அனைத்து மதங்களும் சமயங்களும் போதிப்பவை!

அகலாதப் பாசமும், இரக்கமுமே அன்பாகிறது!

அதனால் பெருகும் கருணையே ஊற்றாகிறது!

 

அன்பே மன்னிப்பை கொடுக்கும் பண்பு!

அத்துடன் மனிதனின் உயர்ந்த மாண்பு!

அடுத்தவருக்காக சுயநலம் இன்றி பழகுவது!!

அனைவரின் உள்ளத்தில் என்றும் நிறைவது!

 

அதுவே என்றும் தன்னம்பிக்கையைக் கொடுப்பது!

அளவற்ற இன்பத்தைக் கொடுக்கும் பொதியது!

அன்பானத் தமிழுறவுகளாக நம்மை இணைத்தது!

அழகுத் தமிழுக்கே உரியதானச் சிறப்பானது!

 

கவிஞர் மாலதி இராமலிங்கம்,

புதுச்சேரி.