4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

பெரும்பாணாற்றுப்படை காட்டும் மக்களும் அவர்களின் வாழ்வியலும் - பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்

 

பெரும்பாணாற்றுப்படை காட்டும் மக்களும்  அவர்களின் வாழ்வியலும்

பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்

கிழக்குப்பல்கலைக்கழகம் இலங்கை

 

ஆய்வுச்சுருக்கம்

பெரும்பாணாற்றுப்படை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் என அழைக்கப்படும் கி.மு இரண்டாம் நுர்ற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்கு உரியது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய .ஆற்றுப்படை பெரும்பாணாற்றுப்படையாகும். கடியலூர் உருத்திரங்கண்ணாரின் வேறு இரண்டு பாடல்கள்; குறுந்தொகையிலும் அகநானூற்றிலும்  உள்ளன.

ஆற்றுப்படுத்தல் என்பது வழிப்படுத்தல் என்ற பொருள்படும். ஆங்கிலத்தில் ((Guidance and counselling) என்று கூறலாம். சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படுத்தல் என்பது வறுமையால் வாடும் ஒரு கலைஞர் குழுவை (அதாவது இரவலரை) தம் பசி தீர்க்கக் கூடிய ஒரு புரவலனிடம் அதாவது வேந்தன், குறுநிலமன்னன், நிலக்கிழான் போன்றோரிடம் தமது வறுமை நீங்கப் பாடிப் பரிசில் பெற்ற பரிசிலர் தாம் பெற்ற பரிசிலைப் பற்றி எதிரில் இருக்கும் பாணரிடம்  கூறி வேந்தரிடம் சென்று தாம்  பெற்ற  பரிசிலை அவர்களையும் அவனிடம் சென்று பெறும் படி கூறி ஆற்றுப்படுத்தியதைக் குறிக்கும்.

இந்த ஆற்றுப்படை அதன் இயல்பு காரணமாக அக்கால மக்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் தெளிவாகக் கூறுகிறது. சங்ககால மக்களின் வாழ்வியல் பற்றி தெளிவாக அறிவதற்கு இக்கட்டுரை ஏதுவாகும்.

Abstract

People and their life in perumpanatruppadai

The period of Perumpanatruppadai is identified as from 2nd century BC to 3rd century AD. It was written about Thondaiman ilanthirayan by Kadiyalur Uruthirankannanar

Aatrupadai means Guidance and Counselling. In Sangam literature Aatrupadai used to honour the king who has given food dress and wealth to Panar Pulavar  Kuthar etc. Here A pulavan advised to a panar Group ti goto that king and get the wealth from him. When he describes the way to arrive the kings place pulavan will tell the map and the peoples life. Through this description wi will explre the life of the people of that period.

திறவுச்சொற்கள்

பெரும்பாணாற்றுப்படை, ஆற்றுப்படுத்தல் புரவலன், வாழ்வியல் சங்க இலக்கியம், பாணர்.

பாடாண் திணைக்குள் கூறப்பட்ட ஒரு துறையாகிய ஆற்றுப்படைக்கு தொல்காப்பியர் பின்வருமாறு இலக்கணம் கூறினார். 

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்  (தொல்: பொருள்: இளம்: சூ.88: 3-6)

அதாவது கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்றோர் தாம் செல்லும் வழியிலே ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அவர்களுள் பொருள் பெற்று வந்த  குழுவினர் அவ்வளத்தைப் பெறாது வறுமையுடன் இருக்கின்ற  குழுவினருக்கு தாம் பெற்ற வளத்தைக் கூறி அதனை தமக்கு அளித்த மன்னனிடம் செல்லுமாறு கூறுதல் ஆகும்.

பரிசில் பெற்ற பாணர் குழு பரிசில் பெறாத பாணர்குழு ஒன்றை தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துவதாக பெரும்பாணாற்றுப்படை   அமைந்தது. இதில்  வரும் பாணர் கையில் பேரியாழை வைத்திருந்தனர். அதனால் பெரும்பாணர் என அழைக்கப்பட்டனர்.

பெரும்பாணாற்றுப்படை அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு இனக்குழு மக்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் தருகிறது. ஒருமானிடவியல் ஆய்வாளனுக்கு சிறப்பாகப் பயன்படக்கூடியது என்பர் கமில் ஸ்வலபில்.

அதன் அடிகளின் எண்ணிக்கையும் யாப்பமைதியும்

பெரும்பாணாற்றுப்படை 500 அடிகளைக் கொண்டது. அகவல் பாவினாலானது. அகவல் என்றால் அழைத்துச் சொல்லுதல் என்ற பொருள்படும் கலி,பரிபாடல் தவிர ஏனைய சங்க இலக்கியங்கள் யாவும் அகவற் பாவிலேயே அமைந்தன. சில அகவலுடன் வஞ்சியும் கலந்து அமைந்துள்ளன. பெரும்பாணாற்றுப்படையில் அகவல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாணாற்றுப்படையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள்

இயற்கையும் வறுமையும்

1-22 அடிகளில் பாணர் பற்றிய விபரணமும் பாணரை விளித்தலும் சொல்லப்படுகிறது,வேனிற் காலம் பற்றிய அறிமுகத்துடன் பெரும்பாணாற்றுப்படை ஆரம்பிக்கிறது. அதாவது பாணரின் வறுமையைப் பாடப்புகுந்த புலவர் வரட்சியான காலநிலையுடனேயே பாடலை ஆரம்பிக்கிறார் என்பது குறிபிபிடற்குரியது.

எல்லாப் பொருளும் அகன்று விரிதற்கு காரணமான வானம், அவ்வானத்தில் பரந்து விரிந்த இருளைப(;பருகி) விலக்கி, ஞாயிறு கடும் பகல் பொழுதை தோற்றுவித்த வெங்கதிர் சினம் கொண்ட வேனிற்காலம். என அந்த வருணனை அமைகிறது.

பாணரின் வறுமை

பாணரின் வறுமை பற்றி கூறும் போதும் இயற்கையின் வரட்சியைப் பற்றிப் பேசுகிறான இவை இரண்டுமே மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பவை. புலவன்; பாணனின் வறுமையை இவ்வாறு விபரிக்கிறான்.

வெந்திறற் கனலியோடு மதிவலம் திரிதரும்

தன்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது

பொழிமழை துறந்த புகைவேய்; குன்றத்து

பழுமரம் தேரும் பறவை போல

கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்

புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண

அதாவது ஞாயிறும் திங்களும் வலம் வருகின்ற கடல் சூழ் உலகிலே மழை வறந்தமையால் புகை எழுகின்ற மலையின் கண் நின்னைப் புரப்பாரைப் (பாதுகாத்து கொடையளிப்பாரை) பெறாமையால் பழுத்த மரங்களை நாடித் திரியும் பறவை போன்று அழுது புலம்பித் திரியும் சுற்றத்துடன் ஓரிடத்தில் இராமல், பயனின்றி ஓடித் திரிகின்ற பொழிவிழந்த வடிவையும் நீ கற்ற கல்வியையும் வெறுத்துப் பேசுகின்ற பாணனே (புலவு வாய்ப்பாண) என்று அழைக்கப்படுகின்றான்.பாணனின் நீண்ட நாளைய வறுமையும் அவன் தன்னையும் சுற்றத்தினரையும் புரப்பாரைத் தேடி அலைந்து திரிகின்ற நிலைமையும் இங்கு பேசப்படுகிறது. இயற்கையின் வெம்மை புலவனின் வறுமைக்கு ஒப்பாகிறது.

மழையும் கொடையும்

பொதுவாக மழை மனிதர்களுக்கு வளத்தைக் கொடுப்பது; பயிர்களுக்கும் வளர்ச்சியைக்கொடுப்பது விலங்குகளுக்கும் புல்பூண்டை வளரச்செய்து உணவளிப்பது. மன்னனின் கொடையைக் கூறும் போது மழையின் வருகையையும் சேர்த்துச் சொல்கிறான் புலவன்.  உதாரணத்தைப் பார்க்கலாம்.

இரவலரிடம் தாம் பெற்ற பரிசில் பற்றி அடுத்துக் கூறும் புலவன்        மழையை அதற்கு உவமிக்கிறான்.

பெருவறம் கூர்ந்த கானம் கல்லென

கருவி வானம் துளி சொரிந்தாங்கு

பழம்பசி கூர்ந்த இரும்பேர் ஒக்கலொடு

வழங்கத் தவாஅப் பெரும் வளன்எய்தி

வால் உளைப் புரவியொடு வயக்களிறு முகந்து கொண்டு

யாம் அவணின்றும் வருகுதும் (23-28 அடிகள்)

பெரிய வரட்சி சூழ்ந்த கானத்திலே ஆரவாரம் உண்டாகும்படி திடீரென மழை பொழிந்தது போல தொன்று பட்டு பழம் பசியாலே வருந்திய எம்முடைய பெரும் சுற்றத்தாரோடு பிறர்க்கு கொடுக்கக் கொடுக்கக் குறையாத அளவிறந்த செல்வத்தையும் ஒப்பனை செய்யப்பட்ட குதிரையையும் வலிமையுடைய களிறுகளையும் அவ்வள்ளல் வழங்க நாங்கள் வாரிக் கொண்டு அவ்வள்ளலின் ஊரினின்றும் வருகிறோம் என மன்னனிடம் பரிசு பெற்ற பாணன் தன் செல்வ நிலைக்கு மாறியமையை  நீண்டகால பெரிய வரட்சிக்கு உள்ளாகி இருந்த நிலத்திலே மழை திடீரென அதிகமாகப் பொழிந்தது போல என உவமித்துக் கூறுகிறான்

 

உப்புவணிகரும் வாழ்க்கையும்

புலவன் செல்லும் வழியிலே உப்புவணிகரைச்சந்தித்தான் அந்த உப்பு வணிகரைப்பற்றி சொல்லுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை பற்றி அறிய முடிகிறது.உப்புவணிகரின் வண்டி பற்றிய வருணனை இவ்வாறு அமைகிறது.

கொழுவிய வட்டையிலே செருகப்பட்ட ஆரம், மத்தளம் போன்று முழு மரத்திலே செய்யப்பட்ட உருளி,(சில்லு) கணைய மரங்களை இணைத்தாற் போன்ற வலிய பார், மழைக்காலத்தே மழை முகிலை சுமந்தாற் போன்ற கரிய தேர்த்தாளிப் பாயால் வேயப்பட்ட கூரை ஆகியவற்றை உடைய வண்டி வழியை ஊடறுத்துச் செல்லும்.

வண்டியில் இருக்கும் பொருள்கள்

அவ்வண்டியில் தினைப் புனத்தை யானை தின்னாமல் காவல் செய்வோர்  கட்டின குடிலை ஒப்ப சிறிதாக கட்டப்பட்ட கோழி கிடக்கும் கூடு வைக்கப்பட்டிருக்கிறது., அக்குடிலின் வாயிலில் மூங்கில் முளைபோன்ற கொம்பினை உடைய பெண் யானையின் முழங்காலை ஒத்ததும் துளையிடப்பட்ட அறையை உடையதுமான உரல் வைக்கப்பட்டிருக்கிறது.; நாடக மகளிர் களத்தில் ஆடுவதற்காக கொண்டு வரப்பட்ட வாரால் இறுக்கிக் கட்டிய மத்தளத்தை ஒப்ப காடி (பளிக்கவைக்கப்பட்ட கள்ஆகலாம்) வைத்த மிடா (பெரிய பாத்திரம்) வைக்கப்பட்டுள்ளது ,  வண்டியின் பாரில் கயிற்றால் வரிந்து கட்டப்பட்டுள்ளது.

பெண்கள் வண்டியோட்டுதல்

அப்பாரின் மீது குழந்தையுடன் அமர்ந்திருக்கும் உமணர் மகள் எருதுகளை முதுகிலே அடித்து அதனை ஓட்டுகிறாள்.

கழுதைச்சாத்துகள் (கழுதையில் பொருட்களை ஏற்றிச்சென்ற வணிகம் செய்தல்)

கழுதையில் பொருட்களை ஏற்றிச் சென்று விற்கும் வழக்கம் இருந்திருக்கிறது. என்பதை பெரும்பாணாற்றுப்படை காட்டும்   அச்சாத்துகளைக் கொண்டு செல்வோர் மெய்ப்பை அணிந்திருக்கிறார்கள்.மெய்ப்பை அணிந்தவர்கள் பற்றிய குறிப்பு யவனருடனேயே வருகிறது இவர்கள் யவன வணிகராகலாம். பலாப்பழம்போல வணிகரின் கழுதையின் இருமருங்கும் ஏற்றப்பட்ட   மிளகுப்பொதிகள் காணப்படுவதுபற்றி பெரும்பாணாற்றுப்படையில் கூறப்படுகிறது. (பக்240)

சுங்கச்சாவடிகள்

சுங்கச் சாவடிகள் சுங்கம் வசூலித்தமை பக்240, அவ்விடங்களிலே காவலர் நிறுத்தப்பட்டுள்ளமை போன்ற செய்திகளும் .காணப்படுவதுடன் பண்டமாற்று வணிகம்.(ஆயர் பெண்)காணப்பட்டமையையும் அறிய முடிகிறது.

எயிற்றியர் குடிசையும் குழந்தை பெற்ற பெண்ணும் 

குடிசையின் முற்றம்

நீண்ட அடிகளை உடைய இலவ மரத்தின். பசிய காய.; அக்காய் முதிர்ந்து முதுகு விரிந்து உள்ளிருக்கும் பஞ்சு தோன்றினாற் போன்ற வரியையுடைய அணில் பாய்ந்து திரிகிறது.,

குடிசையின் கூரை

அணிலுடன் எலியும் திரியாத படி ஆற்றின் மணலை ஒத்த முதுகையும் கொழுவிய மடலையும் வேல் போலும் நுனியையும் பொருந்த ஈந்தின்; இலையால(ஈச்சம் இலை); வேயப்பட்ட நெடிய மேட்டினையும்(முகடு) எயிற்பன்றியின் முதுகைப் போன்ற புறத்தினையும் உடைய குடில்.

குழந்தை பெற்ற பெண்

அந்த குடிலிலே மான் தோல் படுக்கையில் ஈன்ற குழந்தையுடன் முடங்கிக் கிடக்கிறாள்.

எயினர் கோட்டையும் வீடுகளும்

எயினர் கோட்டை பற்றிய விபரங்கள் அடுத்துக் கூறப்படுகின்றன. எயினரின் கோட்டை  உயர்ந்த மதிற்சுவர் கொண்டது.அது ஊகம் புல்லால் வேயப்பட்டிருக்கும். உள்ளே முள்வேலியாலும் அதன் புறத்தே காவற் காட்டாலும் சூழப்பட்ட அகன்ற வீடுகள் அங்கே காணப்படும். அவற்றின் வாயிலில் சங்கிலியாற் கட்டப்பட்ட நாய்கள் காவல் செய்யும். திரண்ட மரங்களினால் வீடுகளின் உட்கதவுகள் தாளிடப்பட்டிருக்கும் என அவற்றின் இயல்பும்   காவலும்  கூறப்படுகிறது.

ஆயரின் குடில் பற்றிய விபரணமும் இடையனும்

ஆடுகள் நின்று தின்னும் பொருட்டு அவற்றுக்குரிய தழைகளை கம்பால் கட்டிய குறிய கால்களை உடைய குடில். அக்குடிலினது சிறு வாயில் கழிpயால் செறிக்கப்பட்ட கதவினை உடையது.

வரகுக் கற்றையால் வேயப்பட்ட கழியாலான படுக்கையில்   தோல்பாயை விரித்து அவற்றுக்குக் காவலாக அதன் கண் துயிலும் இடையன காணப்படுகிறான்.;.

வலைஞர் குடியிருப்பு

வேழக்கோலை நிரல்பட வைத்து வெள்ளிய மரக்கொம்புகளை இடையிடையே கலந்து தாழை நாராலே கட்டி தருப்பைப் புல்லாலே  வேயப்பட்ட குறிய இறப்பையுடைய குடில்(குரம்பை).அவர்களுடையது

அந்தணர் இல்லங்கள்

அவ்வாறு செல்லும்போது அந்தணர் இல்லங்களிலே பசுக்கள் பசும்புற் தரைகளை தேடி மேய செல்ல அவற்றின் கன்றுகள் பந்தர்க்; கால்களில் கட்டப்பட்டிருக்கும்.

அங்கு கோழி நாய் போன்றவற்றைக் காண முடியாது. தரை சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும் வீடுகளில் வழிபடு தெய்வங்களின் உருவங்கள் காணப்படும். என அந்தணர் இல்லங்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

வணிகரிருப்பு

வணிகரிருப்பை நோக்கினால் மாடங்கள் உயர்ந்து நிற்கின்ற மணல் மிக்க தெருக்கள் காணப்படும். பரதவர் வாழும் பற்பல தெருக்கள் இருந்தன. அங்கே தொழில் செய்வோரால் காக்கப்படும் மிக உயர்ந்த பண்டக சாலைகள் காணப்படும். நாய்களும் கிடாய்களும் சூழ்ந்து திரிகின்ற நல்ல வீடுகளை உடையது  இப்பட்டினம்.

அவ்வீடுகளில் அணிகலன் அணிந்த மகளிர் பொற்சிலம்பு ஒலிக்க மேல்நிலை மாடங்களில் பந்தாடுவர். பந்தாடி இளைத்தாராயின் கழல் ஏந்தி ஆடுவர்.

உழவர் மனைகள்

தென்னையின் வாடிய மடலால்  வேயப்பட்ட குடிசைகள். மணலில் மஞ்சளை  உடைய முற்றம் காணப்படும் மணம் கமழுகின்ற தோட்டங்கள் சூழ தோப்புக்கள் தோறும் தனித்தனியாக உழவர் மனை அமைந்திருக்கும்.

காஞ்சிமாநகரமும் மக்களும்

சோலைகளில் பரிக்கோலை (அங்குசம்) கையிலே உடைய யானைப்பாகர் சோர்ந்திருக்கும் போது சூலுடைய மந்தி யானைக்கு நெய் கலந்து வைக்கப்பட்ட அரிசியை திருடிக்கொண்டு செல்லும் சோலைகள் நிறைந்தது காஞ்சிநகரம்என காஞ்சிநகரம் வருணிக்கப்படுகிறது.

தேரோடுதலால் தெருக்கள் குழிந்திருக்கும். வலிமைநிறைந்த மறவர்குடியிருப்புகள் அங்கே  காணப்படுகின்றன.

அங்கே வாழும் மக்கள் விற்றலும் வாங்குதலும் செய்வார்கள்.அந்த அங்காடிகள் இயங்கு வோரைத் தடைசெய்கின்றன. 

அம் மூதூர் பரிசிலர்க்கு அடையாத வாயில் உடையது பக்கங்களில் காவற்காடுகள் காணப்படுகின்றன.

.தாமரை மலரின் பொகுட்டினைப் போல  செங்கற்களால் இயற்றப்பட்டு விளங்கும் உயர்ந்த மதிலை உடையது அந்நகர்.

ஏனைய பழங்களை விட இனிமையும் பெருமையுமுடைய பலாப்பழம் போன்று காஞ்சி நகரமும் ஏனைய நகரங்களை விடச் சிறப்புடையது. . பல சமயத்தினரும் தொழும் விழாக்களை எடுக்கும் வெற்றிச் சிறப்புடையது. காஞ்சி மாநகரம்.

அக்காலமக்கள் வரகு, தினை, புல்லரிசி, செந்நெல், வெண்ணெல போன்றவற்றை உணவாக உண்டிருக்கிறார்கள்;

உணவு

. எயிற்றியர் தாம் சமைத்த புல்லரிசிச் சோற்றை கருவாட்டோடு சேர்த்து, அளிப்பர். விருந்தினருக்கு   தெய்வத்திற்கு பலியிடுமாறு போலத் தேக்கிலையில் குவித்துத் தருவர். சுற்றத்துடன், அவ்வுணவினை மிகுதியாகப் பெறுகுவீர.

.எயினர்கோட்டையில் ஈந்திpன் விதை போன்ற சிவந்த சோற்றை நாய்கள் கடித்து கொணர்ந்த அக்குமணி போன்ற முட்டையையுடைய உடும்பின் பொரியல்; மணக்குமாறு மனைகள் தோறும் பெறலாம்;.

.இடையர் மகள் உறைகின்ற மடித்த வாயையுடைய கோவலருடைய குடியிருப்பில் நண்டின் பார்ப்பை ஒத்த பசிய தினையால் ஆக்கிய சோற்றைப் பாலுடன் பெநலாம்

. வலைஞர் குடியிருப்பில் பெறும் உணவு. குற்றாத கொழியலரிசியை நல்ல களியாக துழாவி அட்டகூழில் தட்டுப்பிழாவில் இட்டு உலரும் படி ஆற்றி பாம்பு கிடக்கும் புற்றின் கண் கிடக்கும் பழஞ்சோற்றை போன்று பொலிவு பெற்ற நல்ல முளை நெல்லை இட்டு அதனை கலந்து அது இனிமை பெறும் வகையில் இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சட்டியில் இட்டு வெந்நீரில் வேக வைத்து நெய்யரியாலே வடிகட்டி விரலாலே அலைத்து  பிழியப்பட்ட நறிய கள்ளை பச்சை மீன் சூட்டோடு பெறுகுவீர்.

.அந்தணப் பெண்கள் கொடுக்கும் உணவு. அருந்ததியைப் போன்ற கற்புடைய நல்லொழுக்கமும் உடைய பார்ப்பன பெண்கள் பதமறிந்து ஆக்கிய பறவைப் பெயர் பெற்ற (கருடன் சம்பா) நெற்சோற்றையும் நறிய மோரின்கண் எடுத்த வெண்ணெயில் வெந்த மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் கலந்திட்ட மாதுளங்காய் பொரியலையும் (கொம்மட்டி மாதுளை ) மாங்காய் வடு ஊறுகாயோடு  பெறலாம்.

. கள் அருந்துமிடத்தில் பெறும் உணவு. கள் அருந்து மிடத்துக்கு செண்றால்; குழியிலே நிறுத்தி நெல்லையிடித்து மாவாக்கி அதை உணவாகக் கொடுத்து வளர்த்த ஆண்பன்றியின் தசையுடன் கள்ளைப்பெறலாம்

. தென்னந்தோப்பில் பெறும் உணவுகள்:  இனிய சுழைகள் கொண்ட பலாப்பழத்தையும் தெங்கின் இளநீரையும் பெண்யானையின் கொம்பை ஒத்த குழையிலே இருந்து முதிர்ந்து வளைந்த மெல்லிய வாழைப்பழத்தையும் பனையின் நுங்கையும் பல இனிய பண்டங்கள் பலவற்றையும் பெறுவீர். அவற்றை தின்று வெறுப்பீராயின்  முளையை புறத்தே உடைய வள்ளி முதலிய கிழங்குகளை உண்ணலாம்

.இளந்திரையன் கொடுக்கும் உணவு. இறைச்சியிற் கொளுவிய பல  தசைகளுடன் பெரிய செந்நெல்லரிசியால் ஆக்கிய திரண்ட நெடிய சோறும் அமிழ்தத்தை ஒக்கும் உண்டிகளும் பிறவும் ஆகிய  அடிசிலை   வெள்ளிக் கலங்களைப ;பரப்பி தாய் பிள்ளையைப் பார்ப்பதுபோல  உங்களைப் பார்த்து முகம் மலர்ந்து  இனிமையாக உபசரித்து தானே முன்னின்று விருப்பத்துடன் உண்ணச் செய்வான். இளந்திரையன்

தமிழ்நாட்டில் வௌ;வேறு இனக்குழுக்களிடையே அன்று காணப்பட்ட பல்வேறுபட்ட உணவு வகைகளையும் அவர்களது விருந்தோம்பல் முறையையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் புலவர்.

ஒவ்வோரு இனக்குழுவினரும் தமக்கு கிடைக்க்கூடிய தானியங்களையும் இறைச்சிவகைகளையும் உணவாகச் சமைத்து உண்டனர். உணவுகளைச் சமைத்தனர் என்பதும் இயற்கையாகவே பெறக்;ககூடிய உணவுகளையும் உண்டனர் என்பதும் இதில ;தெளிவாகும்.

தொழில்கள் என்ற பார்க்கும்போது எலவே குறிப்பிட்டபடி உப்புவணிகர் மிளகுவணிகர் வேட்டையாடுவோர் மந்தைமேய்ப்போர் உழவர் கள்விற்போர் பாணர் (-குளங்களில் மீன்பிடிக்கிறார்கள) ஆகியோரைக்காண முடிகிறது.

இயற்கையை இயற்கையாக மட்டும் பார்க்காது மக்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பது சங்க இலக்கியத்துக்குப் பொதுவான தன்மையாகும்.

ஐந்திணையும் பெரும்பாணாற்றுப்படையும்

சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரை முதற் பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பன  கவிதைகளுக்கு முக்கியமான விடயங்களாகு;ம்.

முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும் ஆகும் நிலத்தைப்பற்றிய தெளிவான குறிப்புகள் (திணைக்குறிப்புகள்) பெரும்பாணாற்றப்படையில்  கிடைக்கின்றன. பெரும்பாணாற்றுப்படையில் முதலில் வருவது பாலை நிலம் இதொல்காப்பியத்தில் பாலைக்குரிய பொழுதுகளாக நண்பகல் வேனில் என்பன குறுpப்பிடப்படுகினன்றன .

பெரும்;பாணாற்றுப்படையில் பாலைக்குரிய பொழுதுகளான  நண்பகலும் வேனிலும் குறிப்படப்படுகின்றனபெரும்பாணாற்றுப்படைப்  பாடலின் ஆரம்;பத்தில் வெம்மை பற்றிய குறிப்புகள் அடிக்கடி வருகின்றன

         1-3;

         15-18

         23 ஆகிய அடிகள் இதனைக்காட்டும்.

இது இரவலனின் வறுமையின் கொடுமையை குறிப்பாகச் சுட்டுவன.

இவ்வடிகளில் எதிரெதிரான உவமைகள் அழகாகக் கையாளப்படுகின்றன.(வெம்மையும் தண்மையும)

வரண்டிருந்த கானத்தில்; மழை துளிசொரி;ந்தது போல வறுமையுற்றிருந்த நாம் வளனெய்தியவர்களாக வருகிறோம். 

பசியைப் பழம்பசி என்னல் -தொன்றுதொட்டு வரும்பசி

பழுமரம் தேரும்; பறவை போல பாணர் இரவலரைத்தேடிச் செல்கிறார்கள்.

மக்கள் பின்வரும் தொழில்களைச ;செய்கிறார்கள்

பூப்பறிப்போர்

அந்தணர்

மறவர், விற்படை வீரர்கள்

வணிகர்

வலைஞர் போன்றோர் பற்றிய விவரணங்கள் இங்கே காணப்படுகின்றன.

பெண்கள் இல்லத்தரசிகளாக மட்டுமன்றி தங்கள் தொழில்களைச்செய்பவராகவும் காட்டப்படுகின்றனர் முக்கியமாக வண்டியோட்டும் பெண்களைப்பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. உமணப்பெண்கள் - வண்டிகளை ஓட்டிச்செல்லக் கூடியவர்கள்.

பெண்கள் பயமற்றவர்களாகக் காட்டப்படுகின்றனர் உதாரணம் எயிற்றியர்- இவர்கள் பயமற்றவர்கள் இடி இடித்தாலும் பாம்பு மேற்சென்றாலும் கலங்காதவர்கள்

ஆயர்குலப்பெண்கள் -தயிர் மோர் போன்றவற்றை விற்று பண்ட மாற்றாக பசுக்கன்றுகளை; வாங்குவாள்

உழவர் பெண்கள்

கள்விற்போர் கள் உற்பத்தியில் ஈடுபடுவோர்

விளையாடு;ம் இளம் பெண்கள் என பெண்கள் பல தொழில்களிலும் ஈடுபடுகின்றனர.

கோயில்கள்

திருவெஃகாதிருவேங்கடம் (திருமால்கோயில்கள்)ஆகிய கோயில்கள் பற்றிய குறிப்புகள் இங்கே காணக்கிடைக்கின்றன. முருகனது வீரம்  இளந்திரையனின் வீரத்துக்கு ஒப்பிடப்படுகிறது.

மன்னர் வாழ்க்கை

இங்கு புலவருக்கு கொடை வழங்கும் மன்னன் இளந்திரையன் ஆவான் இளந்திரையனின்  வீரமும் புகழும் சிறப்பாகப்பேசப்படுகிறது.

திரையனின் மரபு

திரையன் பெரும் நிலத்தை அளந்து கொண்டவனும், திருமகளை மார்பிலே கொண்டவனும், கடல் வண்ணனும் ஆகிய திருமாலின் மரபினன் ஆவான். கடல் அலைகளால் கரை சேர்க்கப்பட்ட சோழ மரபிலே வந்தவன்.

திரையனின் புகழ்

கடலில் பிறந்த சங்குகளிலே வலம்புரி சங்கையே உலகம் புகழுதற் போல பெரிய உலகத்தே நிலை பெற்று வாழும் உயிர்களை புரக்கும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை விட மிகுதியாக புகழப்பட்டவன். மறத்தைப்; போக்கி அறத்தை நிலை நிறுத்திய செங்கோலையும் பலவேற் படைகளை உடையோனாயும் விளங்கும் திரையன்பால் சேர எண்ணுவீராயின் அவ்வள்ளலின் தன்மையை யான் கூறக் கேட்பாயாக. கேட்ட மாத்திரத்தில் நின் மனக்கவலை கெட்டொழியும் என கூறுகிறான்.

(39-45 அடிகள்)            திரையனது ஆட்சிச் சிறப்பு

1.            வழிச்செல்வோர் அலறும் படி தாக்கி அவர்களுடைய கைப்பொருளை கவர்ந்து கொள்ளும் களவினை ஏர்த்தொழில் போன்று வாழ்க்கைக்கு தொழிலாக கொண்டுள்ள கொடியோர் அந்த நாட்டில் இல்லை.

2.            இடியும் இடிக்காது

3.            பாம்புகளும் கொல்லும் தொழிலைச் செய்யாது

4.            காட்டு விலங்குகள் கூட யாருக்கும் வருத்தம் செய்ய மாட்டாது ஆதலால் அவ்வறம் திகழுகின்ற நாட்டிலே விரும்பிய இடத்து அச்சமின்றி இளைப்பாறி நின்னை விரும்பியோரிடத்து செல்வாயாக உன் நெஞ்சம் இன்புற்று சிறக்குமாக என்று கூறுகின்றான்

அதுமட்டுமல்லாது நீ அவனைப் பார்த்து யானையைக் கொன்ற (அரிமா) சிங்கக் குட்டி பின்னர் அதனை விட வலிமையுடைய புலிக்குட்டியைக் கொல்ல விரும்பினாற் போல முதலில் புலவர் முதலியோருக்கு அணிகலன் முதலிய கொடுக்கும் கொடைக் கடன்களை ஆற்றி பின்னர்த் தன் பகைவர்களுடைய மதில்களை அழித்து  முடிக்கலம் முதலியவற்றை வெற்றி கொண்டு மேலும் மேலும் வலிய அரசரின் முடியைக் கொள்ளும்  வெற்றியையே விரும்புவாய். பகையரசர் சந்து செய்வித்துக் கொள்ள முயன்றவிடத்தும் அதற்கு மனம் பொருந்தாத வலிய வாளையுடைய கையினையும் பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோர் குடியில் வந்தவனே.

 தொண்டைக் கொடியைச் சூடிய மரபில் உதித்தவனே போர் மறவர் மதிக்கும் போர் வீரனே மறச்செயலுடையோர்க்கு மறவனாய் விளங்குபவனே. செல்வரும் மேம்பட மதிக்கும்செல்வமானவனே. போர்த் தொழில் வல்லவனே. வெண்திரையினை உடைய கடலிற் சென்று கடிய சூரனைக் கொன்ற  பசிய பூணினையுடைய முருகனைப் பெற்ற வயிற்றினையும் பேய்கள் ஆடும்  துணங்கைக் கூத்தையும் கொண்ட அழகிய இறைவியாகிய கொற்றவைக்கு   பேய்மகள் சில நொடி சொன்னாற் போல குறையாத கொடையுடைய நின்புகழிற் சிலவற்றைக் கூறிப் புகழ்ந்து வந்தேன்.பெருமானே நீ நெடிது வாழ்வாயாக என்று அவனைப்பாடினால் அவனிடம் பெற வேண்டியதைப் பெறலாம்.எனப்படுகிறது

இவ்வாறாக மக்களினதும் மன்னர்களினதும் வாழ்க்கை பற்றியும் அவர்களது பண்பாடு பற்றியும் வாழ்வியல் அம்சங்கள் பற்றியும் பெரும்பாணாற்றுப்படையினூடாக அறிந்து கொள்ளமுடிகிறது மக்கள்தங்கள  நிலத்துக்கேற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர். மன்னர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆடம்பரமாக வாழ்ந்தனர் என்பதை பெரும்பாணாற்றுப்படை காட்டுவதுடன் வர்க்கபேதம் மெல்ல மெல்ல அரும்புவதையும் இந்நுர்லினடியாக அவதானிக்கத் தக்கதாக உள்ளது ஒருவன் கொள்வோனாகவும் இன்னொருவன் கொடுப்போனாகவும்  இருப்பதும் குடில்களும எதிராக ;கோட்டைகளும் காணப்படுவதும் வேட்டையாடுதலும் வணிகமும்  சுங்கச் சாவடிகளும் ஒரே சமயத்தில் நிலை பெற்றிருத்தலும் இதனையே காட்டுகின்றன.

 

உசாத்துணை நூல்கள்

அம்மன்கிளி முருகதாஸ், 2006  சங்கக் கவிதையாக்கம் மரபும்மாற்றமும் குமரன் புத்தக இல்லம் கொழும்பு சென்னை

சிவத்தம்பி.கா. 2005 பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம் கொழும்பு சென்னை

தொல்காப்பியம் பொருளதிகாரம்-நச்சினார்க்கினியம் 1955 கணேசையர் பதிப்பு, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், இலங்கை

பத்துப்பாட்டு 1986  .வே.சா பதிப்பு தமிழ்ப்பல்கலைக்கழகம். தஞ்சாவூர்

 

Hart George .L 1971   Ancient Tamil poets, Princeton New Jercy

Hart George .L 1979   Poets of Tamil Anthologies ,Princeton, New Jercy

Kailasapathy .K 1968   Tamil Heroic Poetry , Clarinthon press ,Oxford

Marr,J.R, 1985     The Eight Anthologies,  Institute of south Asian studies,  Madras1985

Singaravelu 1966   Social life of the Tamils in the classical period ,  Kulalampur.

Sivathamby.K ,1981 Drama in Ancient Tamil Society ,NCBH, Madras

Sivathamby K, 1998 .Studies in Ancient Tamil Society NCBH  Madras

Thaninayagam .X,S, 1966  Landscape and Poetry,  London

Vaiyapurippillai  S.  1956  History of Tamil language and Literature

Zvelabil Kamil 1973  Smile of Murugan in Tamil literature  Leiden