4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

ஆங்காங்கில் தமிழ் மரபு சார் முன்னெடுப்புகள் - முனைவர் சித்ரா

 

ஆங்காங்கில் தமிழ் மரபு சார் முன்னெடுப்புகள்

முனைவர் சித்ரா

முன்னுரை

சீனாவின் ஓர் அங்கமாய் விளங்கும் ஆங்காங் ஓர் பன்னாட்டுநகரம்.  உலகின் பல நாடுகளின் மக்கள் சீனர்களுடன் ஒன்று சேர்ந்து வாழுமிடம்.  இருக்கும் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களில் 3000க்கும் கூடுதலானத் தமிழர்கள் கொண்ட இடம்.  தமிழன் எங்குச் சென்றாலும் தன் மரபு சார்ந்த வழக்கங்களை எப்போதும் கடைப்பிடிக்காமல் விட்டதில்லை. அத்தகைய மரபு சார் பழக்க வழக்கங்கள் எப்படிப் பல ஆண்டுக்காலம் ஆங்காங்கில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன, மற்றும் பல ஆண்டுக்காலம் என்னென்ன செய்துள்ளார்கள் என்பதைப் பற்றிய கட்டுரையே இது.

இந்தக் கட்டுரையை இரண்டு பிரிவாய் தர விழைகிறேன். முதலாய்,இங்கு உள்ள சங்கங்களும் கழகங்களும் தமிழ்மரபுசார் வழக்கங்களை எப்படி முன்னெடுத்துச் சென்றுள்ளார்கள் என்பது. இரண்டாவதாய்,தமிழ் மரபு சார்ந்த விழாக்களை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது.

நான் வாழ்ந்துவந்த இந்த 25ஆண்டுகளில் இங்கு நடந்தவற்றை என் நினைவலைகளிலிருந்தும், இங்கு வாழ்ந்த மற்ற தமிழர்களிடம் கேட்டுப்பெற்ற கருத்துக்களையும் இந்தக் கட்டுரையில் தந்துள்ளேன். 25ஆண்டுகளுக்கு முன்பாய் நடந்தவற்றை, இங்கு 40-50ஆண்டுகளாய் வாழ்ந்தோரிடம் கேட்டு, அதையும் தந்துள்ளேன்.

சங்கங்கள்

ஆங்காங்கில் பல காலமாய் சங்கங்கள் அமைக்கப்பட்டு தமிழர்கள் ஒன்றுகூடி வருகிறார்கள்.  அந்தச் சங்கங்கள் இன்று வரையிலும் தமிழர் கலை, இசை, பழக்க வழக்கங்கள், விழாக்கள், விளையாட்டுகளை உயிர்ப்புடன் வைத்துள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

ஆங்காங்கில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் 1967இல் தொடங்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடவும், தமிழர்கள் இணைந்து சுற்றலா சென்று வரவும், பட்டிமன்றங்களை நடத்தவும், ஆங்காங்கிற்கு வருகைதரும் தமிழ் அறிஞர்களுக்குச் சிறப்புச் செய்யவும் என்று பல கொள்கைகளுடன் தொடங்கப்பட்ட சங்கம் இது. தொடக்கத்தில், பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களும் சில தமிழக வணிகர்களும், வங்கி நிர்வாகிகளும் உறுப்பினர்களாய் ஆனார்கள். காலப்போக்கில் தொழில் நிமித்தமாகவும், பொறியியல் வல்லுநர்களும், கணிப்பொறி வல்லுநர்களும் என்று பல தமிழர்கள் ஆங்காங்கில் குடியேறினார்கள். அவர்கள் அனைவருக்கும் கழகம் தமிழ் மக்களுடன் கலக்க உறுதுணையாய் இருந்ததுடன், தமிழ்சார் பழக்கங்களை முன்னெடுத்துச் செல்லவும் உதவியது. கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாய் பல கலைநிகழ்ச்சிகள் மூலமாய், இன்று வரையிலும் மூத்த சந்ததியினருக்கும் தற்போதுள்ள சந்ததியினருக்கும் தமிழ்மரபுகளை நினைவுப்படுத்தும்படியாய் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாய் தமிழர் விளையாட்டான கபடிப் போட்டியையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மரபு தானியங்களான தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வகையில், அவற்றைக் கொண்டு உணவு சமைக்கும் போட்டிகளையும் நடத்தி வந்துள்ளது. தமிழ்ப் பாரம்பரியக் கோலம், அடுக்குமாடி வீடுகளில்போட இயலாவிட்டாலும், ஆர்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பெரியவர்களுக்கான கோலப்போட்டிகளை, இன்றுவரை நடத்திவந்துள்ளது. இதன் காரணமாய், அதை இங்குப் பிறந்து வளர்ந்துவரும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியும் வந்துள்ளது. தமிழக ஆடை அணிவகுப்பினை நடத்தி விதவிதமானஅலங்கார ஆடைகளையும் இங்கு வாழும் தமிழ்மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

தமிழகத்திலிருந்து கலைஞர்களைக் கொணர்ந்து, இசை, நடனம், சொற்பொழிவு, பேச்சு, நகைச்சுவை கொண்ட விழாக்களை நடத்தி, தமிழ்மரபைக் காக்க உதவி வருகிறது. 

இன்றைய சந்ததியினருக்குத் தமிழ்க்கலைகள் அறியும் வண்ணம், அவர்கள் பங்கு கொள்ள என்று தனித்ததொரு நிகழ்ச்சி, ‘அரும்புகள்’ நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாய் நடத்திவருகிறது. தமிழ்ப்பேச்சு, திருக்குறள் கூறும் போட்டி என்று பலவிதமான போட்டிகளை நடத்திச் சிறப்பிக்கிறது. அரும்புகள் பங்குபெறும் மாறுவேட நிகழ்ச்சியோடு கூடிய கலைநிகழ்ச்சி விழாவும் இன்று வரையிலும் போற்றத்தக்க வகையில் நடத்திவருகிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பு (UNESCO) நடத்தும் உலக அமைதிக்கான விழாவில், பன்னாட்டு அரங்கங்கள் எப்போதும் அமைக்கப்படும். அதில் கடந்த சில ஆண்டுகளாய், நம் தமிழ்க் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாய் அரங்கத்தை அமைத்து, நம் தமிழர் உணவுகளை அறிமுகப்படுத்தியும் வருகிறது.

பன்னாட்டு அளவில் நடத்தப்படும் சீனப் புத்தாண்டு கோலாகல ஊர்வலத்தில், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், நம் தமிழ் மரபு சார்ந்த பரதம், யோகம் மற்றும் சிலம்பாட்டத்தை நடத்தி, கண்ணுற்ற இலட்சக்கணக்கான மக்களுக்கு தமிழர்கலைகளை  அறிமுகப்படுத்தியது, கழகவரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை என்றே சொல்லலாம்.  அதற்கு முக்கிய காரணமாய் விளங்கியவர் அந்த ஆண்டின் தலைவரான திரு. திருப்பதி நாச்சியப்பன் அவர்கள்.

திருப்புகழ்ச் சங்கம்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாய்,தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கின்ற கடவுளான, முருகக் கடவுள்மேல் பாடப்பட்ட திருப்புகழ்ப் பாடல்களைப்பாடி, முருகக் கடவுளுக்கு உரித்தான அனைத்து விழாக்களையும், சஷ்டி, தை பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் என்று அனைத்தையும் சிறப்பாய் நடத்தி, அனைத்து வயதினரையும் தமிழ் மரபு சார்ந்து வாழ உதவி வருகிறது. தைப்பூசத்தன்று பால் குடம், காவடி எடுக்கும் பழக்கமும் கடந்த சில ஆண்டுகளாய் நடந்து வருகிறது. முருகக் கடவுளின் திருவுருவச் சிலை, ஹேப்பிவாலி (Happy Valley) இந்துக் கோயிலில் அமைக்கப்பட்டு, நாள்தோறும் பூசைகள் செய்யப்பட்டு, நவம்பர் மாதம் நன்முறையில் சஷ்டிவிரதம் ஏற்று, சூரசம்ஹாரம் நிகழ்ச்சியினை இந்தக் குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இதன் மூலம் இன்றைய குழந்தைகள் முருகக்கடவுளுக்காகச் செய்யப்படும் விழாக்கள் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. திருமுருகனின் திருக்கல்யாணம் வள்ளி தெய்வானையோடுகோலாகலமாய் பல விதமான சீர்வரிசைகளோடு நடத்திக் காட்டப்படுவது, தமிழகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு, தமிழகத்திலேயே வாழும் உணர்வினை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

கடந்த இருபது ஆண்டுகளாய், மெய் பூ மற்றும் துங் சுங் பகுதிகளில் வாழந்த தமிழர்கள்குழுவாய், தமிழர் திருநாளையும் புத்தாண்டினையும் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் தினத்தன்று அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து கதிரவனை வணங்குவதோடல்லாம், ஒருவர் மற்றவருக்குப் பொங்கலைப் பகிர்ந்து கொண்டாடுவர். மேலும், அந்த வார முடிவிலோ அல்லது வாரத்தொடக்கத்தில் வரும் விடுமுறை நாளில், தமிழர்கள் பலரும் ஒன்று கூடி, தமிழர் விளையாட்டுகளை விளையாடி, தங்கள் திறன்களைக்காட்டி, சுவையான அறுசுவை உணவினை, வடைப் பாயசத்தோடு உண்டு, தமிழர்மரபினைக் காத்து வருகின்றனர். தட்டாங்கல், உறியடி, கோலி, ஒத்தையா இரட்டையா, கும்மி, கோலப் போட்டி போன்றவை மூலம், நம் மரபுகளை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.பல ஆண்டுகள் பெயரிடப்படாத இந்தக் குழுவிற்கு, தற்போது தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் என்று பெயரிட்டுஅழைக்க விழைகிறேன்.

குழந்தைகள் கலைக் குழு

குழந்தைகள் கலைக்குழு நிறுவி 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆங்காங் அரசும், தன்னார்வக் குழுக்களும் பல பன்னாட்டுக் கலைநிகழ்ச்சிகளையும், கண்காட்சி அரங்கங்களையும் ஏற்பாடு செய்து நடத்தும் விழாக்கள் பல உண்டு. அதில் குழந்தைகள் கலைக்குழு உறுப்பினர்கள் (தமிழ் மற்றும் இதர மாநிலத்தவர்கள்) பங்கேற்று, தமிழ்க்கலைகளான தட்டாங்கல், ஒத்தையா இரட்டையா, கோலம் போடுதல், பல்லாங்குழி ஆகியவற்றை ஆங்காங்கில் வாழும் சீனர்களுக்கும் இதர நாட்டினருக்கும் அறிமுகப்படுத்தி வந்துள்ளது. மேலும் தன்னார்வக் குழுக்கள் நடத்தும் பன்னாட்டுச்சமையல் போட்டிகளில், தமிழ்ப் பாரம்பரிய உணவுகளான தோசை, இட்லி, பொங்கல் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, போட்டிகளில் வெற்றி பெற்ற நிகழ்வுகளும் உண்டு.

பல ஆண்டுகள் குழந்தைகளுக்குத் தமிழ் வகுப்புகள் நடத்தியபோது, நம் பாரம்பரிய விழாக்காலங்களில் அதன் தன்மைகளை எடுத்துக்கூறி வந்துள்ளது. இந்தியத் தூதரகம் நடத்தும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் தமிழ் தேசியப் பாடல்களைப் பாடி தமிழுணர்வினை நிறுவிய நிகழ்வுகளும் உண்டு.

இளம் இந்திய நண்பர்கள் குழு (வய்.ஐ.எப்.சி கல்விக் கழகம்)

இளம் இந்திய நண்பர்கள் குழு தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாய் ஆங்காங்கில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி, சிறப்பாய் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நம் தமிழர்மரபு காக்கப்பட்டு வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது. ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாவின்போது, தமிழ் பற்றிய பொருண்மைகள் கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நம் பாரம்பரிய நடனங்கள், நாடகங்கள், பாடல்கள், வில்லுப்பாட்டு, பேச்சு என்று குழந்தைகள் மேடையில் பங்கேற்று வழங்கும் நிகழ்ச்சிகள், அயலகத்தில் இன்னும் தமிழ் வாழ்ந்து கொண்டு இருப்பதை உறுதிப்படுத்தும்.

தமிழ் இளைஞர்கள் தமிழ் மரபுகளை எடுத்துக்கூறும் 13 வார வானொலி நிகழ்ச்சியையும் சிறப்புடன் நடத்திக்காட்டியது, அவர்களின் திறன்களைப் பறைசாற்றவும் வளர்க்கவும் உதவியது.

விழாக்கள்

தமிழ் நாட்டில் நமக்கென்று தனித்தன்மையோடு பல விழாக்கள் உள்ளன. அவை அனைத்தையும் சீரும் சிறப்புடன் எப்போதும் ஆங்காங் தமிழ் மக்கள் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்குத் தர விரும்புகின்றேன்.

கார்த்திகைத் தீபம்

திருவண்ணாமலை மகாதீபத்தன்று, ஆங்காங் வீடுகளில் தீப அலங்காரங்கள் செய்து வழிபடுவது வழக்கம். அழகிய கோலமிட்டு, நடுவே குத்துவிளக்கேற்றி, சிறு அகல் விளக்குகளை ஏற்றி, அழகிய முறையில் அமைத்து, தீபத்திற்கு உகந்த பலகாரங்களைச் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். அண்மைக்காலங்களில் இவற்றைக் கைப்பேசியில் அழகிய புகைப்படங்களாய் எடுத்து சமூக வலைத்தளங்களில் இட்டு மகிழ்கின்றனர்.

தீபாவளி

அல்லற்படுத்திய நரகாசுரனைக் கொன்ற விழாவான தீபத் திருநாளான தீபாவளி, பட்டாசுகள் இல்லாமலேயே இத்தனை ஆண்டுகளாய் சிறப்பாய் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. தீபாவளி தினத்தன்று வீடுகளிலே தமிழ்மரபுப்படி அனைத்து வழிபாடுகளும் நடக்கும். புத்தாடைகள் அணியப்படும். தீபாவளி வரும் மாதம் முழுவதும் பல இடங்களில் குழுக்களாய் தீபாவளியை அழகிய ஆடைகளை அணிந்து, பலகாரங்கள் உண்டு, இசை, நடன, விளையாட்டு நிகழ்வுகளோடு மகிழ்வது எப்போதும் நடக்கும். இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் உணர்வினை ஏற்படுத்தும் விதமாய்,கடந்த சில ஆண்டுகளாய் சிலர் மத்தாப்புகளைக் கொளுத்தியும் கொண்டாடி வருகின்றனர்.

நவராத்திரி

பண்டிகைகளிலேயே மிகவும், சிறப்பானதும், பல நாட்கள் நடப்பதுமான, ஒன்பது நாட்கள் வழிபாடுகளுடன் நடக்கப்படும் பண்டிகை நவராத்திரி.  கடந்த பல ஆண்டுகளாய் தமிழர்கள் வீடுகளில் கொலுப்படிகளை அமைத்து, அழகிய தமிழ் மரபு பொம்மைகளை வைத்து, நண்பர்களை வீட்டுக்கு அழைத்து, சிற்றுண்டி பரிமாறி, மஞ்சள் குங்குமம், பாக்கு, கச்சை துணி, சிறுபரிசு கொடுத்து, கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. கொலு வைப்பது மட்டுமில்லாமல், ஒன்பது நாட்களும் காலையில் 7 மணி அளவில் தினந்தோறும், ஒரு வீட்டில், பாடல்கள் பாடி, பூசனைகள் செய்து, காலை உணவு கொடுக்கப்பட்டு, பின் அலுவலகம் செல்வதும் வழக்கமான ஒன்று. கடந்த சில ஆண்டுகளில் வீடுகளில் பூசை ஏற்பாடுகள் செய்வோர் மிகுந்துவிட்டதால், மாலைநேரத்திலும் ஒன்பது வீடுகளில் பூசை செய்யப்பட்டு வருவது மேலும் குறிப்பிடத்தக்க ஒன்று. பெண்களையும் குழந்தைகளையும் அழைத்து, சிறுபரிசுகள் கொடுப்பது, குழந்தைகள் மத்தியில் பிரபலமான ஒன்று. தமிழ்ப் பெண்டிரும் குழந்தைகளும் அழகிய தமிழக உடையிலும் பாவாடையிலும், தாவணியிலும் வலம் வருவதை அப்போது மிகுந்து காணலாம்.

நவராத்திரி விழாவில் வரும் சரஸ்வதி வழிபாடும் மிகவும் சிறப்பானது. ஆங்காங் நகரில், அன்றைய தினம் சீனப் பண்டிகையானபடியால், பொதுவிடுமுறை. அதன் காரணமாய் கோயிலிலே சிறப்பான விளக்குபூசைக்கு ஏற்பாடு செய்து, அதிலும் பலர் கலந்துகொண்டு, இறையருளைப் பெறுவதும் வழக்கமாகி விட்டது.

ஆயுதபூசையும் வீடுகளிலே சிறப்பாய் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்து வரும் விஜயதசமி அன்று, கலைபயிலும் மாணவர்களுக்குச் சிறப்பான தினம். நடனம், இசை கற்கத் துவங்குவதும், துவங்கியவர்கள் குருவிற்கு மரியாதைச் செய்வதும் இந்த நாளில் நடைபெறும்.

ஐயப்பன் பூசை

வருடந்தோறும் ஐயப்பனுக்கும் தவறாமல் விழா எடுக்கப்படுகிறது. பதினெட்டுப் படிகளை அமைத்து, ஐயப்பன் படத்திற்கு மாலையிட்டு, மலர்களால் கோலமிட்டு, அழகிய விளக்குகளை அமைத்து, பூசை செய்வது மனதில் நீங்காத நினைவினை ஏற்படுத்தும் விழா. ஐயப்பனின் மேல் பக்திப் பாடல்களைப்பாடி, விரதம் இருந்து சபரிமலை செல்வோர், சென்று வந்தோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதர விழாக்கள்

தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் பலபல. வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, காரடையான் நோன்பு, மகாளயஅமாவாசை, வரலட்சுமி விரதம், சிவராத்திரி, ஆவணி அவிட்டம், விநாயக சதுர்த்தி, கோகுலாட்டமி, வைகுண்ட ஏகாதசி என்று அனைத்து விழாக்களையும் இங்கு வாழும் தமிழர்கள் பலரும் தத்தம் இல்லங்களில் செய்து, தங்கள் நண்பர்களுக்கு இனிப்புப் பலகாரங்கள் கொடுத்து மகிழ்கின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழர்மரபு என்று சொல்லப் புகும்போது, ஜல்லிக்கட்டிற்குச் சிறப்பான இடமுண்டு. ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னையில் நடந்தபோது, ஆங்காங் தமிழர்களும் இதில் பங்கேற்கும் விருப்பத்தில், இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் ஒன்றுகூடி, தங்கள் ஒத்துழைப்பினைத் தெரிவித்தது, தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ்மரபோடு இருக்கின்றனர் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்தது.

மார்கழி விழா

ஆங்காங் தமிழர்களுக்கும், இங்கு பிறந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும், ஆண்டாளின் திருப்பாவையை அறிமுகப்படுத்தும் வகையில், மருத்துவர் கீதா பாரதி அவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மார்கழி விழாவினை நடத்திக் காட்டினார்.

முடிவுரை

ஆங்காங்கில் வாழும் தமிழர்கள் தங்கள் மரபுகளைக் காப்பதில் கெட்டிக்காரர்கள்.  இன்று வரையிலும் மேற் கூறியவாறு அனைத்து விழாக்களையும் வருடந்தோறும் நடத்தி, எதிர்வரும் சந்ததியினரும் அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் வகையில் சிறக்கச் செய்கின்றனர்.

தமிழ் மரபினைக் காப்போம்!!! தமிழர் பண்புகளைப் போற்றுவோம்!!!

குறிப்பு:

பின்னிணைப்பில் தரப்பட்டுள்ள பொருண்மைகள் அனைத்தும் ஆங்காங் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

மரபுசார் பொருண்மைகள்

விழாக்கள்: பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம், புத்தாண்டு, விநாயகசதுர்த்தி, வரலட்சுமிபூஜை, கோகுலாட்டமி, ராமநவமி, நவராத்திரி, சரஸ்வதிபூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகைத்தீபம், சஷ்டி, சபரிமலை ஐயப்பன் விழா

நடனம்: பரதம், நாட்டுப்புற நடனம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம்

இசை: கர்நாடக இசை, தமிழிசை, நாட்டுப்புற இசை, தேசப்பற்று பாடல்கள், வில்லுப்பாட்டு

தற்காப்புக் கலைகள்: சிலம்பாட்டம், சுருள் கத்தியாட்டம்,

விளையாட்டு: கபடி, கயிறு இழுக்கும் போட்டி, பல்லாங்குழி, தட்டாங்கல், ஒத்தையா இரட்டையா, கோலி ஆட்டம், உறியடி

உணவு: தினை, வரகு, சாமை, கம்பு, குதிரைவாலி, இட்லி, தோசை, பொங்கல், முறுக்கு, கடலை உருண்டை, பொரி உருண்டை