4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

திருக்குறள் விளக்கம் - கவிஞர் சுரேஜமீ

 

திருக்குறள் விளக்கம்

கவிஞர் சுரேஜமீ

மஸ்கட்

நலந்தானேநலமே விளைக நாளும்! அறன் வலியுறுத்தல் எனும் முக்கியமான அதிகாரத்தைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். 

·          அறம் என்றால் என்ன?

·          அதை எப்படிச் செய்ய வேண்டும்?

·          செய்தால் விளையும் பயன் என்ன?

என்பதை எல்லாம் மிக எளிமையாகமிக வலிமையாகத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் நமக்குச் சொல்கிறார்.அந்த வகையில் இதுகாறும் ஏழு குறட்பாக்களைப் பார்த்த நாம்,இந்த இதழில் மீதமுள்ள குறள்களைப் பார்ப்போமா? 

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல். (38)

அறம் செய்யா நாளே இல்லை எனுமாறு ஒருவன் அறத்தைத் தொடர்ந்து செய்வானாயின்,அஃது அவனுக்கு அடுத்தடுத்து வரும் பிறப்பை அடைக்கும் கல்லாக அமையும்.சரிதொடர்ந்து வரும் பிறப்பை அடைக்கும் கல்லாக அறம் விளங்குகிறது.அஃதாவது வீடு பேறு அளிக்கக் கூடியது.

·          வாழ்நாள் என்று குறிப்பது என்ன?

·          வாழ்நாள் வரக் காரணமாவது எது?

வழியை அடைக்க உபாயம் சொன்ன வள்ளுவர்,வழிக்குக் காரணமானவற்றை ஏன் நமது சிந்தைக்கு விட்டு விட்டார்நம் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையாக எடுத்துக் கொள்வதா?  இல்லைஅவர் மீது அளவு கடந்த மரியாதை கொண்ட பரிமேலழகர் நமக்குச் சொல்லட்டுமே என நினைத்தாரா?

பரிமேலழகரிடம் கேட்போமா?

வாழ்நாள் என்பது ஒவ்வொரு பிறப்பிலும் நம் வினைகளால் நாம் அடையும் பயன் என்ற போதும்அதற்குக் காரணிகளாக ஐந்து விஷயங்களைச் சொல்கிறார் பரிமேலழகர்.அவையாவன;

·          அவிச்சை (அறியாமை)

·          அகங்காரம் (அகந்தை)

·          அவா (பேராசை)

·          விழைவு (விருப்பு)

·          வெறுப்பு

மேற்கூறியவற்றை வடமொழியில் பஞ்ச கிலேசங்கள் என்பார்கள். கிலேசம் என்றால் வருத்தம் தரக்கூடியவை.சிந்தித்துப் பார்த்தால்நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்குக் காரணமாக இருப்பவைதான் அவை.அவற்றால் விளைவதே இருவினையும்இருவினையின் பயனே இன்பமும்துன்பமும்.இன்பமும் துன்பமும் வாழ்விற்குக் காரணமாகிறது;இதனை அடைக்கும் கல்லாவது அறம் எனக் கிளிப் பிள்ளைக்குச் சொல்வது போல,வள்ளுவர் நமக்கு அறிவுறுத்த,அவர்பால் நின்று பரிமேலழகர் நம்மை வழி நடத்துகிறார்.இப்பொழுது சொல்லுங்கள்…..அறத்தை அன்றாடம் செய்ய உங்கள் மனம் உங்களை அறிவுறுத்துகிறதாஇல்லையா?மனத்தே அசைபோடாமல் ஒன்றை செய்யாதீர்கள் நண்பர்களே!மனிதன் என்ற பெயரே மனத்தால் வருவது. இது வேறு உயிரினங்களுக்குக் கிடைக்காத பேறு. அதன் வழி செல்லபுத்திக் கூர்மையாகும்புத்திக் கூர்மையாகவாழ்வு புரியும்வாழ்வு புரிந்தால் வாழ்நாள் அடைக்கும் வழி தெரியும்.

எது நமக்கு இன்பம் தரும்இது நம் எல்லோர் முன்னும் நிற்கும் கேள்வி!இவ்வுலகில் யாரும் துன்பத்தை அனுபவிக்கத் தயாராய் இல்லை.அப்படியிருக்க,இன்பத்தின் வாயிலை வள்ளுவம் சொல்கிற குறள் தான் அடுத்து வருவது;

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில. (39) 

இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாகும்மற்றவையெல்லாம் இன்பமாக இருப்பினும்துன்பத்தையே தரும். அத்தகைய செயல்களால் புகழும் இல்லை.இதுகாறும் அறம் பற்றித்தானே சொல்லிக் கொண்டு வந்தார்திடீரென இன்பத்தைச் சொல்லும் இடத்துஇல்லறம் என வருவித்துப் பொருளுரைப்பது எதனால் எனும் வினா உங்களுக்கு வருவது இயல்பு.

 எனக்கும் அந்த வினா வருகிறது.அதற்கான விடையை அலசுவோம்!

இன்பம் என நாம் நினைப்பது காம நுகர்ச்சி என்றால் மிகையல்ல. இவ்வுலக உயிர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு இன்ப நுகர்வு இருக்குமாயின் அது காமம் மட்டுமே.அத்தகைய இன்பம் எப்படி வரவேண்டும் என்ற ஒழுக்கத்தை வலியுறுத்தவே இந்த இடத்தில் அறத்தை வலியுறுத்தி இன்பத்தை வருவிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.காமத்திற்கான ஒழுக்கமாக இருப்பது ஒருவனுக்கு ஒருத்தி எனும் இல்லற மாண்பு.அலைபாயும் மனது புறத்தையே நாடுவதால்,அறத்தால் வருவதே இன்பம் என அறுதியிட்டுச் சொல்கிறார்!மற்றவை துய்க்கும் போது இன்பமாக இருக்கலாம்ஆனால்அதனால் துன்பமே மிஞ்சும்.அறம் துறந்து வரும் செயல்களால்தற்காலப் புகழ்ச்சி இருப்பினும் காலத்திற்கும் இகழ்ச்சியே நிற்குமே அன்றி புகழ் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லும் குறளே இதுவாகும்.

    மாறாக நல்ல உருவத்தையும்அழகையும்முகப் பிரகாசத்தையும்புகழையும்பகைவரை வெல்லும் திறனையும்நல்ல சிந்தனையையும்நற்பொருளையும்இன்பத்தையும் தர வல்லது அறமேயாம் எனக் கீழ்க்கண்ட பாடல் சொல்கிறது;

உருவமும் அழகுநல் ஒளியும் கீர்த்தியும்

செருவுடை வெல்வலத் திறலும் சிந்தைசெய்

பொருளவை வருதலும் போகமும் நல்ல

திருவுடை அறத்தது செய்கை என்றனன்!  - (மேருமந்திரம் - 447)

அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் நிறைவுக் குறளாக வருவது

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி. (40)

ஒருவன் செய்யவேண்டியது அறம்ஒழிக்க வேண்டியது வசை!இவ்வளவு எளிதாக அறத்தை வலியுறுத்தும் கட்டளை வேறு எந்த நீதி நூலிலாவது இருக்குமா என்பது தெரியவில்லை.

ஆம் நண்பர்களே!

வாழ்வில் ஒருபோதும் தீவினையைச் செய்யக் கூடாது என்றும்நல்வினையை நாள்தோறும் செய்ய வேண்டும் என்றும் நிறைவாகச் சொல்லிஅறன் வலியுறுத்தல் அதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்!பாயிரத்தின் முத்தாய்ப்பாக அமைந்த இந்த ஒரு குறளையாவது மனத்தில் வைத்து,நாளும் பழக்கிநன்மை பெறுவோம் என்று சொல்லி இந்த இதழின் சிந்தனையை நாமும் நிறைவு செய்வோம்!

அடுத்த இதழில் தொடர்வோம்!