4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

காலமும் கவிதையும்- மைத்திரிஅன்பு

 

காலமும் கவிதையும்

காலம் கட்டப்பட முடியாததாய்

கடந்து போகிறது கவிதையிலிருந்து…..

 

காலத்தோடு பேசுவதைக் காட்டிலும்

கவிதைப் பேசுவதில்

ஆபத்துக் குறைவானதால்…

நான்

கவிதை பேசுகிறேன்

காலத்தில் நின்று!

 

கவித்துவ

உருவங்கள் அற்றது காலம்.

 

உறுதியான

திடகாத்திரங்களைக் கூட

மாற்றியமைக்கிறது காலம்.

 

காலம்

எல்லோரையும் எல்லாவற்றையும்

தீண்டுகிறது.

காலத்தைத்தான் யாராலும் 

தொடமுடிவதில்லை

முயற்சிப்பவர்கள்

குற்ற உணர்ச்சிக்குள்ளாகிறார்கள்!

 

காலக்கண்ணாடி உண்டு

காலம்

கண்ணாடியானதில்லை.

 

காலம்

தன்னை யாரும் புரட்டிப்பார்க்க

அனுமதிப்பதாக இல்லை.

 

காலத்தில் உண்மையிருப்பினும்

உண்மையில்

காலத்திடம் அஃதில்லை.

 

காலத்தின் அடையாளம்

கவிதையல்ல

காலம் கவிதை.

 

 

கவிதை உரையாடல் என்பதால்

காலத்தின் அடையாளம்

கவிதைக்குள் இல்லை போலும்.

நம்பிக்கையற்றது காலம்

அதை யாரும் பார்க்க முடியாது

அதுவும் தன்னைப் பார்க்க

யாரையும் அனுமதித்ததில்லை.

 

கலவரம் – சாந்தம்

எஃகு – மலரினும் மென்மை

உருமாற்றம் – தீர்க்க தரிசனம்

கொள்கை என்னும் பிரகடனம்

எதார்த்தம்

என:

அதிகாரம் அத்தனையும் காலத்தினூடானது.

 

கடந்த சம்பவங்கள்

துயரின் நிழலைத் துகிலுரிப்பதால்….

காலத்துக்குக் கடந்த காலங்கள்

இல்லாமல் போயின.

 

காலம்

மெதுவாக நகர்ந்துச் செல்லும்

விரைவுந்து!

 

காலம்

யாரையும் பின்தொடர அனுமதிக்காத

சூறாவளி!!

 

காலம்

கேள்விகளின் கூடாரமாகக் கிடக்கிறது

காலம் - ஒரு பெரிய மௌனப்புதர்.

காலம் - மூடப்பட்ட துருநாற்றம்.

 

மர்மம்

தொல் – தொன்மம்

முதல் இடை கடையென

எல்லாக் காலத்திலும் அஃது அப்படியே…!

 

கனவுகள்

காலத்தின் நிழற்படங்கள்!

நினைவுகள்

காலத்தின் நீர்குமிழிகள்!!

காலம்

கனவுகளால் நிரம்பியது.

நினைவுகளை நீர்த்துப்போகச் செய்வது.

 

உறக்கம்

காலத்தின் பிறப்பிடம்.

இருப்பிடமும் கூட!

சிரிப்பு

அதன் நிலையாமை

பிரக்ஞை

அதன் உயிர் நிகழ்வுகள்

அதன் நினைவுக் கூடங்கள்.

 

காலத்தில்

பல கட்டிடங்கள் இருந்தாலும்,

காலத்தின் கட்டிடமாக

அது

கல்லறையை மட்டுமே

பறைச் சாற்றிக்கொள்கிறது.

 

குற்ற உணர்ச்சிகளாலான

எதார்த்தத்தில்

மனிதர்களுடனான சகோதரத்துவத்தை

இழக்கிறது காலம்!

 

காலம்

எதையும் பதிவாக்கவில்லை

தானும் பதிவாகவில்லை

வரையறைகளுக்கு அப்பார்ப்பட்டு

வாழத் தலைப்பட்டவர்களைக்

காலம்

தொடர்ந்து அழச்செய்கிறது.

 

வழக்கத்துக்கு மாறாக

காலம்

அடிக்கடி

நிர்வாணத்தை எடுத்து உடுத்திக்கொண்டு

தற்கொலைகளைத் தூண்டிவிக்கிறது.

 

உண்மைகள் ஏதுமற்ற

ஈரப் பிசுப்பிசுப்பாலான

உரைநடையினூடாக….

இன்னும் இன்னும்

என்னால்

காலப் படிமங்களை

உடல்மொழி எழுத்துக்களைப் போல

எழுத வாய்க்கவில்லை.

 

இருந்தும்

காலம்

கவிதையிலிருந்து கடந்துபோகிறது.

 

-    மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்