4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

புறநானூற்றில் சமுதாய நிலைக்களன்கள் - முனைவர் மு. சுமதி

 

புறநானூற்றில் சமுதாய நிலைக்களன்கள்

                        முனைவர் மு. சுமதி.,எம்.ஏ., எம்ஃபில்.,பிஎச்.டி

தமிழ்த்துறைத் தலைவர்,

இசுலாமியா மகளிர் கலை மற்றும் அறிவியல்  கல்லூரி

நியுடவுன் வாணியம்பாடி 635-752.

கைப்பேசி: 9994323228.

முன்னுரை

நாகரிகம் தோன்றாத காலத்தில் மனிதன் இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்தான் பின்பு உணர்வின் உந்துதலால் பல்வேறு திறன்களைப் பெற்று நாடோடி வாழ்க்கையை விடுத்து விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டும் நிலையான வாழ்க்கையை வாழத் தலைப்பட்டான். உணர்வின் எல்லையில் நின்று பிறரோடு கூடி வாழ்ந்தனர். பின்பு குலமாகவும், குடியாகவும், குழுமங்களாகவும் வாழ்ந்து பல்வேறு நிலைக்களன்களைக் கடந்து நிலையான சமுதாயத்திற்குள் நுழைந்தனர்

இத்தகைய சமுதாயம் தோன்றுவதற்கு நிலைக்களனாக அமைபவை மக்கள், குடும்பம், வீடு, உறவு, இனம், நாகரிகம், பண்பாடு, அரசு ஆகியவை ஆகும். இவை ஒன்றோடொன்று இணைந்துதான் சங்ககால மக்கள் மகிழ்ச்சியுடன், நேர்மையான சமுதாய வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் போது நிலையான இடத்தை சமுதாயம் பெறுகிறது.

நானிலத்தையே தொல்காப்பியர்.

                                    மாயோன் மேய காடுறை உலகமும்

                                    சேயோன் மேய மைவரை உலகமும்

                                    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

                                    வருணன் மேய பெருமணல் உலகமும்

                                    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய  முறையால் சொல்லவும் படுமே”1 (அகத்திணையியல் - 951)

இத்தகைய நிலத்தை அடிப்படையாகக் கொண்டே மக்கள் சமூகமாகவும், சமுதாயமாகவும் வாழத் தலைப்பட்டனர்.

நிலைக்களன்

நிலைக் களன் என்பது நிலையான இடத்தைப் பெறுபவை. அந்த வகையில் அகப்பாடல்களில் உள்ளுறை அமைக்க நிலக்களன் என்னனென்ன என்பதை தொல்காப்பியர்

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்

கொள்ளும் என்ப குறி அறிந்தோரே”2   (தொல் - அகத் - 996)

என்று கூறியுள்ளார். எனவே உள்ளுரை என்பது குறிஞ்சி முதலிய திணைப் பாடல்களில் அமைக்கும் போது தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை நிலக்களனாக கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியர்.

சமுதாயம்

சமுதாயம் என்பது ஒவ்வொருவரின் நன்மைக்காகவும், ஒன்று கூடி வாழும் தனி மனிதர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி சமுதாயம் என்ற சொல்லுக்கு கூட்டம், சங்கம், திரள். பொது, சமாதானம்என்ற பொருள்களைக் குறிப்பிடுகின்றது.”3 இதன் அடிப்படையில் சமூகம் சமுதாயத்தில் அடங்கும்.

மக்கள் ஒன்றிய நிலையில் சமூகமாகவும், செயல் குறித்த பொதுப் பண்புகளில் சமுதாயமாகவும் மிளிர்கிறது. ஒருவன் தன்னைப் பற்றி உணரச் சமூகத் தொடர்பு அடிப்படையாகிறது. மனவளர்ச்சி பெறவும், அறிவு வளர்ச்சி அடையவும், உணர்ச்சி பக்குவப்பட்டு நெறிப்படவும் சமூகம் அவசியமாகிறது. அவனுடைய உடல், உள்ளம், சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், ஆளுமையை வளர்த்துக் கொள்ளவும் சமூகம் அவசியமாகிறது. இவ்வுணர்வோடு ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந்திரளான மக்களை சமூகம் என்று சமூகவியலார் குறிப்பிடுவர்”4 எப்படியிருப்பினும் மக்களின் கூட்டமே சமூகமாகவும், சமுதாயமாகவும் மிளிர்கிறது.                

குடும்பம்

சமுதாயத்தின் அடிப்படை அங்கம் குடும்பமாகும். குடும்பம் என்ற சொல்லிற்கு உறவு ஒரு குடியில் உள்ளார். மனைவி, வீடு, சம்சாரம், உறவினர், குலம், குடி, இனத்தார் ஒரு குடிசையிலுள்ளார்”5 என்று அகராதி பொருள் விளக்கம் தருகின்றது. குடும்பம் என்பது சமூகத்தின் சிறிய அலகாகும் மனிதத் தேவைகளை அடைய சமுதாயத்தாலல் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பே குடும்பமாகும் என்பர்”6 ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து வாழும் அமைப்பாகத் திகழ்ந்து நாளடைவில் அவரவர் செய்ய வேண்டிய பங்குகள், கடமைகள் ஆகியவற்றை வரையiறுக்கின்றது.

ஒரு சமுதாயம் செம்மையுற விளங்க இரண்டு அமைப்புகள் சீராக இயங்க வேண்டும். ஒன்று பொருளாதார அமைப்பு, மற்றொன்று குடும்ப அமைப்பு இதன் அடிப்படையில் வறியோர், செல்வந்தர் என்ற வேறுபாடு இருந்தது என்பதை,

“ - - - - வறுமை யாழ்ப் பாணர்”7 (குறுந். 19)

பெருமுது செல்வமுடையவர்”8 (குறுந். 337)

என்ற இருவகையான குடும்ப அமைப்புகளை குறுந்தொகை எடுத்துரைக்கிறது.

குடும்ப உறவு        

குடும்ப என்ற அமைப்பு பல்வேறு உறவுகளை பின்னிப் பிணைந்திருக்கும் தொகுதியாகும். உறவு என்பது அன்பின் வெளிப்பாடு பண்பின் செயல்பாடு. நல்ல உணர்வு முறைகளுமே ஆறறிவு உருவத்தை மனிதனாக்கும். ஒன்று பிரிதொன்றைச் சார்ந்துதான் வாழ வேண்டும் அந்த சார்பு நடுநிலையில் ஒழுங்கு அமைய வேண்டும் அதுதான் மனித உறவாகும்”9

மனித உறவுகள்

 வாழ்விற்கு அடிப்படை உறவுமுறைகள், தனிமனிதனாக இருந்தாலும், குடும்பமாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும், மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் உறவு கொண்டே வாழ்ந்தாக வேண்டும். அதுதான் மனித வாழ்விற்கும் மிருக வாழ்விற்கும் உள்ள வேறுபாடு, மனித வாழ்வில் மட்டுமே உடைய உயரிய உறவுமுறைகள் செம்மையாக அமைந்தால் மட்டுமே வாழ்க்கை அறமுடையதாக அமையும்”10

குடும்பத்திற்குள் நடக்கும் அகநிலை உறவுகளும், சமுதாயத்திற்குள் நடக்கும் புறநிலை உறவுகளும் என்ற இரண்டு நிலைகளில் உறவுகள் அமைகின்றன. குடும்பத்திற்குள் நடக்கும் அகநிலை உறவு என்பது தாய், தந்தை, தங்கை, தமையன், சுற்றத்தார் என்ற முறையிலும், புறநிலை உறவு என்பது அரசன் முதல் ஆண்டி வரையிலும் உள்ள எல்லா மனிதர்களையும் பற்றியதாக அமைந்துள்ளது. இதனை குறுந்தொகையில்,

                                    அன்னையும் அத்தனும் அல்லரோ”11 (குறுந்.93)

ஊர்

குடும்பங்களில் தோன்றும் உறவு முறைக் குழுக்கள் இணைந்தே ஊர்களாகவும், நாடுகளாகவும் வளர்ச்சியுற்றன.                            

நாடு

ஊர்களாய் மட்டுமே இருந்த நிலையில்  அவை நாடு என்று அழைக்கப் பெறவில்லை குறுநில மன்னரும், வேந்தரும் சிறு சிறு ஊர்களை ஆண்ட நிலமகள் மாறிப் படையெடுத்து பல்வேறு ஊர்களையும் பகுதிகளையும் கவர்ந்து ஆளும் நிலைகள் உருவாகியதால் அவை நாடு என்று அழைக்கப்பட்டன.

குடி. நாடு என்ற சொல்லை அடையாளப்படுத்த வள்ளுவர் தனி அதிகாரம் அமைத்துள்ளார். இதில் நாடு என்பது

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ் இலாச்

செல்வரும் சேர்வது நாடு”12(குறள்.73)

என்ற குறளின் மூலம் தேவையான எல்லாப் பொருளும் குன்றாது வழங்குவதாயம். தகுதியான அறிஞரும், கேடில்லாத செல்வமும் உடையதே நாடாகும் என்பதிலிருந்து வளர்ச்சியடைந்த நீர்பாசன வசதியுள்ள நிலப்பகுதியையே இது சுட்டி நிற்கிறது

எல்லோரும் கூடி உழைத்தனர். உழைப்பின் விளைவைக் கூடிப் பகிர்ந்து கொண்டனர். சமூகத்தில் குறைந்த அளவிற்கே வேலைப் பிரிவினைகள் இருந்த போதிலும் சமூகம் பிளவுபடவில்லை. இயற்கையோடு இவர்கள் இணைந்திருந்தனர்”13

அரசு

தமக்கென தாமே உழைத்து வாழ்ந்த இனக்குழு சமுதாய அமைப்பு மாறி பிறருக் கென உழைக்கும் நிலையில் அரசு உருகிறது. இனக் குழுக்களை வெற்றி கொள்ளும் போது கிடைத்தவற்றைப் பகிர்ந்து கொள்வதில் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிலவின. தலைவர்கள் நாளடைவில் அரசர் அல்லது வேந்தர் என அறியப்படுகின்றனர்.          

அரசு என்பது நிலையான படையுடன் தொடர்புடையது. நால்வகைப் படையுடனேயே முழுமை பெறுகிறது. எனவேதான் தொல்காப்பியர் மரபியலில் அரசனுடைய அடையாளச் சின்னங்களைப் பற்றி குறிப்பிடுகையில்,

                                    படையும் கொடியும், குடையும், முரசும்

                                     நடை நவில் புரவியும் களிறும் தேறும்

                                     தாரும் முடியும் தேர்வன பிறவும்

                                     தெரிவு கொள் செங்கோல் அரசர்க்குரிய”13

 

என்ற பாடல் மூலம் அறியலாம். இதனையே குறுந்தொகையிலும் செங்கோல் அரசர்க்குரியது. என்பதை,

முறையுடை அரசன் செங்கோல் அவையத்து”14

என்ற பாடல் வரியின் மூலம், நீதியை தவறாத அரசனுடைய அறங்கூறும் அவை இருந்தது. என்பதை உணரமுடிகிறது. இவ்வாறான அரசானது மக்களின் கூட்டு முயற்சியால் உருவான தலைமைப் பண்பு ஆளுமைத்திறனால் செயல்படும் போது அரசாங்கமாகிறது.

முடிவுரை

சங்க கால மக்களின் சமுதாய அமைப்பை அவர்கள் இயற்றியுள்ள இலக்கியங்களின் வழியாகவே அறிந்து கொள்ளலாம். மனிதன் ஒரே இடத்தில் இல்லாமல் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் விதத்தில் பல இடங்களுக்குச் சென்று குடிபெயர்ந்து வாழத் தொடங்கினான். இவ்வாறு மனித சமுதாயம் சிறிது சிறிதாக முன்னேறி நாகரிக வாழ்க்கைக்குள் நுழைந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் அறிவுறுத்துகின்றன.

சமுதாயத்தின் நிலைகளனாக மக்கள் இருந்தனர். அவர்கள் கூடி வாழ்ந்து உறவுகளாகவும், குடும்பங்களாகவும் சமூகத்தில் வாழ்ந்தனர். அவ்வாறு வாழ்ந்த மக்களின் ஊர்களையும், நகரின் வளங்களையும் சிறப்பாக குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புகள்

1.         குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு மனோன்மணி சண்முகதாஸ், ப.98.

2.         பண்டை தமிழ் சமூகம், கார்த்திகேசு சிவத்தம்பி, ப.18.

3.         நம்பி அகப்பொருள், வ.த.இராமசுப்பிரமணியன், .22.

4.         தமிழ் ஆங்கில அகராதி, ப. 107.

5.         தொல்காப்பியம், ஞா. மாணிக்கவாசகன்.ப.355.

6.         தமிழ் பேரகராதி, கதிரை வேல்பிள்ளை, ப.395.

7.         சமூக நோக்கில் சங்க மகளிர், கே.பி.அழகம்மை, ப.76.

8.         குறுந்தொகை, உ.வே.ச, ப.46

9.         மேலது, ப.609.

10.       தமிழ் இலக்கியங்களில் மனித உறவுகள், முனைவர்.மு. சற்குணவதி, ப.2.

11.       மேலது, பக். 44,45.

12.       அகநானூறு, 272.-19

13.       குறுந்தொகை 73.

14.       தொல்காப்பியம் மரபியல், 1562.