6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

செவ்விலக்கியங்களில் தமிழர் பண்பாடு - முனைவர்.க.முத்தழகி

செவ்விலக்கியங்களில் தமிழர் பண்பாடு

முனைவர்..முத்தழகி

உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி.

தஞ்சாவூர்.

செல்: 9894819327

muthazhahig@gmail.com

       மக்களின் தொகுப்பே சமுதாயமாகும். இச்சமுதாயத்தில் வாழும் மக்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது பண்பாடு ஆகும். உலக நாடுகளிலே இன்றளவும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஒரே நாடு இந்தியா மட்டும் தான். இன்று உலக நாடுகள் நமது பண்பாட்டைப் பெருமிதத்துடன் திரும்பிப் பார்க்கிறது. அந்த அளவிற்க்கு ஆண்டாண்டு காலமாகப் பண்பாட்டைக் கடைபிடித்து வருகிறோம். வட மாநிலங்களைவிட, தென் மாநிலங்களில் தலைச்சிறந்தாதாகப் பின்பற்றப்படுகிறது. இதனைச் செவ்விலக்கியங்களின் வாயிலாகப் பண்பாட்டை ஆராய்ந்து அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பண்பாடு  விளக்கம்

பண்பாடு என்ற சொல் திருத்தம் பெறுதல், பக்குவப்படுதல், பண்படுதல் பண்பாடு ஆகும். ஆங்கிலத்தில் “culturel” என்று வழங்குவர். பண்பாடு என்ற சொல்லுக்குக் கிரியாவின் தற்கால தமிழ் அகராதியில் குறிப்பிட்ட இடத்து மக்களின் பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும், கலைகளும் சிந்தனையை வெளிப்படுத்தும் முறைகளும்” (பக்கம் 669) பண்பாடு என்கிறது.

இதனேயே வள்ளுவ பெருந்தொகை பண்புடையார் பட்டுண்டு உலகம் உலக வழக்கத்திலும் சமுதாய வழக்கத்திலும் மனிதன் ஓரு ஒழுங்கு முறையுடன் வாழ வேண்டும் என்கிறார். இச்சொல் குறிக்கும். விலங்கில் இருந்து வேறுப்பட்டு வாழ்தலை மனிதனே பெற்றுள்ளான். அது தான் பகுத்தறிவு. அவற்றைப் பின்பற்றி ஒருவன் செம்மையாக வாழ்தலையே பாண்பாடு என்பர் நம் முன்னோர்கள். பண்பென்படுவது  பாடறிந்து ஒழுகுதல்என்பர். பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கம், சட்டம், என்ற வழிகளில் பின்பற்றப்படுகிறது.

ஒற்றுமை

தமிழர்கள் உலகளாவிய நோக்கில் பரந்துபட்ட மனம் படைத்தவர்கள். தமிழர்கள் அகப்பண்பாட்டைப் போற்றும் அன்பு மனம் படைத்தவர்கள். அதனையே புறனானூற்றில் கணியன் பூங்குன்றனார்

                                யாதும் ஊரே யாவரும் கேளிர்

                        தீதும் நன்றும் பிறர்தரவாரா” (புறநானூறு -192 )

என்பதில் எல்லா ஊரும் எங்களுடையதே. எல்லா மக்களும் ஓரினம், அனைவரும் உறவினர்களே, அவர்கள் வாழும் ஊரும் நமது ஊர்களே என்ற உறவு முறைகளுடன் வாழ்ந்ததை உணர்த்துகிறார்.

உறவினர் ஒற்றுமையுடன், ஊரின் ஒற்றுமையுடன், நாட்டின் ஒற்றுமையுடன் உலகின் ஒற்றுமையை  உயர்த்திக்காட்டும் தமிழரின் பண்பாட்டினை இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே புலவர்கள் பாடியிருப்பதை அறியமுடிகிறது.

நட்பு

நட்பு உண்மையானதாக இருப்பின் தன் உயிரையும் கொடுப்பார்கள், கோப்பெருஞ்சோழன்-பிசிராஞ்தையார், ஒளவையார் அதியமான், போன்ற புலவர்கள் பலர் அரசர்களுடன் நட்பு வைத்துள்ளனர். இதனையே நற்றிணையில் கூறுகையில்,

                                முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்

                        நஞ்சும் உண்பர்நனி நாகரிகர்”    (நற்றிணை - 355)

என்பதில் நண்பர் முன்னிலையில் இருந்து நஞ்சு கொடுத்தாலும் அதை ஆராயாமல் உண்பார்கள், அதுவே உண்மையான  நட்பு என்று போற்றப்பட்டுள்ளது. இதனையே வள்ளுவர் கூறுகையில்

நண்பற்றா ராகிநயமில செய்வார்க்கும்

பண்பாற்றா ராதல் கடை”   (திருக்குறள் - 998)

நட்பு என்பது நண்பு. ஆற்றுதலாவது நட்போடு ஒழுகுதல். பண்பு ஆற்றுதலாவது பண்பாளராக ஒழுகுதல். கரும்பை குறுத்திலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவது போல கற்றோருடைய நட்பு நாளுக்கு நாள் இனிமையாகும் என்கிறார்.

            “கருத்துணர்ந்து கற்றறிந்தோர்

கேண்மையெஞ் ஞான்றும்

            குருத்திற் கரும்புதின் றற்றேகுரத்திற்

            கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ வென்று

            மதர மிலாளர் தொடர்பு. (நாலடியார்.211)

நண்பர்கள் முன்னிருந்து ஒரு செயலை செய்கையில், அதில் நன்மையின் உண்மையையும், காணமல் கொண்ட நட்பின் புரிதலையும், கரும்பின் சுவை போன்று நட்பின் சுவையும் இனிமையுடையது என்பதை உணர்த்துகிறது

ஆடை

  ஒரு மனிதனை முழு மனிதன் என்று மதிக்க வைப்பது ஆடையே. “ஆள்பாதி ஆடைபாதி என்பது பொன் மொழியாகும். மனிதனுக்கு உணவை விட இன்றியமையாததாக ஆடைகள் பயன்படுகின்றன. இதனையே செந்நாபோதகர்

                                கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூம்

                        உண்பதூஉம் இன்றிக் கெடும்”    (திருக்குறள்- 166)

 சங்கஇலக்கியத்தில் கூறுகையில் குறிஞ்சி, முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், இழை, தழைகளை ஆடையாக கோத்து அணிந்திருந்தனர். இதனையே

தழை அணிந்து அலமரும் அல்குலதெருவின்”     (நற்றிணை (320)

உடுக்கும் தழை தந்தனனேயம் அஃது

உடுப்பின், யாய் அஞ்சுதுமே கொடுப்பின்”         (நற்றிணை 359)

கூழானாலும் குளித்துக் குடி

கந்தையானாலும் கசக்கி கட்டு

என்பது பொன்மொழி. மக்களின் வாழ்க்கையில் உணவு, உடை, உறைவிடத்திற்கு,ஆடை, முக்கியத்துவம் கொடுத்தமையை அறியமுடிகிறது.

களவு

தலைவன் தலைவியுடன் கொண்ட களவு வாழ்க்கை போற்றுதற்குரிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்தனர். தலைவன் தலைவியின் நட்பினைக் குறுந்தொகையில் கூறுகையில்

                                யாயும் ஞாயும் யாரா கியரோ

                        எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

                        யானும் நீயும் எவ்வழி அறிதும்

                        செம்புலப் பெயனீர் போல

                        அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே” (குறுந்தொகை 40) 

என்பதில்தலைவன், தலைவி இருவருக்கும் இடையே எவ்வித உறவு முறையும் இல்லை, நின் தந்தையும் என் தந்தையும் எவ்வித உறவு முறையும் இல்லை, ஆனால் நாம் கொண்ட அன்பு மழை நீர் அது பொழியும் இடத்துடன் ஒன்றுவது போல் பிரிக்க முடியாத உண்மையான அன்பாகும்.   இதனையே நற்றிணையில் கூறுகையில்

                                நின்ற சொல்லர் நீடு தோன்றும் இனியர்

                        என்றும் என்தோள்பிரிபறி யலரே

                        தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்

                        சாந்தின் தொடுத்த தீந்தேன்போலப்

                        புரைய மன்ற புரையோர் கேண்மை”(நற்றிணை பாடல் - 1)

 தலைவி தன்னை விட்டு ஒருபொழுதும்; பிரிய தலைவன் விரும்ப மாட்டான். தலைவனுடன் தான் கொண்ட நட்பானது, தாமரைப் பூவிலிருந்து எடுக்கப்பட்ட தீந்தேன் விலைமதிப்பு மிக்க சந்தன மரத்தில் கூடுகட்டுவது போன்று உயர்வானது, என்கிறாள். இத்தகைய அன்பானது அக வாழ்க்கையினை அழகுற உணர்த்துகின்றது.

விருந்தோம்பல்

     விருந்து என்றால் புதுமை என்பது பொருள். விருந்து என்றொரு புத்திலக்கிய வனப்பு வகை பண்டைய காலத்தில் இருந்தது.   இதனையே,

                                விருந்தே தானும்

                        புதுவது புனைந்த யாப்பின் மேற்றே”      (தொல்-செய்யுள்- 237)

 என்ற தொல்காப்பியர் காட்டும் விருந்து என்ற சொல் ஆகுபெயராக வீட்டிற்குப் புதியவர்களாக வரும் விருந்தினையும், அவர்களுக்கு பரிமாறும் புதிய உணவுகளையும் குறிக்கும்.

இருந்தோம்பி இலவாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

 வேளாண்மை செய்தற் பொருட்டு”(திருக்குறள் )

என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த இல்லறம் என்பது தன்னை நாடி வரும் விருந்தினரை உபசரித்தலே ஆகும். விருந்திடல் என்னும் பண்பாடு கணவரோடு இணைந்து நிறைவான வாழ்க்கை வாழும் குலமகளிருககே தகுதியானது. இதனையே

                                விருந்து  புறந்தரூஉம் பெருந்தன  வாழ்க்கையும்

                        வேறுபடு  திருவீன்  வீறுபெறக்  காண (சிலப்பதிகாரம்)

என்ற வரிகளில் இளங்கோவடிகள், சிலப்பதிகார மனையறம் படுத்த காதையில் விருந்தினரைப் போற்றும் இல்லற வாழ்க்கையைக் கோவலனும், கண்ணகியும்  வாழ வேண்டும் என்பதற்காகவே திருமணம் முடிந்தவுடனே தனிக்குடித்தனம் வைக்கப்பட்டதாகக் கோவலனின் தாய் கூறுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். சிறந்த இல்லறம் என்பது விருந்தினரை உபசரிப்பதே என்பதை இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றது.

தமிழர்களுடைய பழக்க வழக்கம் என்பதைச் செவ்விலக்கியங்களில், ஆராயும் பொழுது கடலில் முழ்கி முத்தெடுப்பது போன்று, முத்தான வாழ்வியல் செய்திகளை ஆராய்ந்து அறியமுடிகிறது.

துணைநூல் பட்டியல்

1.         தொல்காப்பியம் - மூலமும் உரையும். கு.வெ .பாலசுப்பிரமணியன்.

2.         கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.

3.         சங்க இலக்கியம் புறநானூறு புத்தகம்-1,2 (நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்)

4.         சங்க இலக்கியம் அகநானூறு புத்தகம் 1(நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்)

5.         சங்க இலக்கியம் நற்றிணை மூலமும் உரையும்.(நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்)

6.         திருக்குறள் உரை களஞ்சியம். மு.. ராமசுப்பிரமணி ராஜா.

7.             குறுந்தொகை கழக வெளியீடு. ஊரை பொ.வே. சோமசுந்தரனார்.

கருத்துகள் இல்லை: