4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

அவனியில் தலைவன் - சுரேஜமீ, மஸ்கட்

 

அவனியில் தலைவன்!

 

காலத்தின் கைகளில் குழந்தையாய் இருந்துநீ கொள்வதே வெற்றி கண்ணே - அதில்

கண்களை மூடியே கணங்களை நகர்த்திடு காலமுன்னை நகர்த்தும் நன்றே!

 

ஞாலத்தில் நன்றெது தீதெது நாள்தரும் அனுபவம் உணர்ந்து கொண்டால் - பின்

நடப்பதும் நடந்ததும் நடந்திடும் நன்மையாய் நானிலம் போற்று மன்றோ!

 

நாடக மேடைபோல் நடிப்பதே சுகமென வாழ்ந்திடும் வாழ்வி லென்ன? - அட

நாயகன் அவனிடம் நாளுமே சரண்புக நமக்கேதும் கவலை உண்டோ?

 

ஆடிடும் ஆட்டத்தில் அடிபடும் காய்களும் அதுதானே வெற்றி என்பார் - அதை

ஆட்டியே வைப்பவன் அன்றாடம் காப்பவன் அவனியின் தலைவன் தானே!

 

சுரேஜமீ (மஸ்கட்)