4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

இலங்கைப் பௌத்தப்பண்பாட்டின் வளர்ச்சியூடாக அடையாளப்படுத்தப்படும் தமிழர்பண்பாட்டு வாழ்வியல் - செல்வி : சிவகணேசன் சிவதர்சிகா

 

இலங்கைப் பௌத்தப்பண்பாட்டின் வளர்ச்சியூடாக அடையாளப்படுத்தப்படும் தமிழர்பண்பாட்டு வாழ்வியல்

செல்வி : சிவகணேசன் சிவதர்சிகா

அரசடி வீதி

களுதாவளை – 01

மட்டக்களப்பு

shevatharsikka1994@gmail.com

+94741904839

இலங்கையானது சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஒரு நாடாகும். இலங்கையின் வரலாற்றை எடுத்துக்கொண்டோமானால் பல்வேறு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.  அவற்றுள் ஓர் முக்கிய நிகழ்வாகக் காணப்படுவது கி.மு.3ஆம் நூற்றாண்டளவிலே பௌத்த மதம் இலங்கையில் பரவலடைந்தமையும் அதனால் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களையும் குறிப்பிடலாம். இத்தகைய பண்பாட்டு மாற்றங்கள் இலங்கை வரலாற்றுப் போக்கினையே மாற்றியமைத்தன என்றால் மிகையாகாது. அதாவது இன்றுவரை இலங்கையானாது 'பௌத்த நாடு' என வர்ணிக்கப்படும் அளவிற்கு அதனுடைய தாக்கம் அமைந்துள்ளது. இந்த பௌத்த பண்பாட்டின் வளர்ச்சியூடாகத் தமிழ்ப் பாண்பாட்டு வாழ்வியலில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டன.

அவ்வகையில் பௌத்தப்பண்பாட்டின் வளர்ச்சியூடாக அடையாளப்படுத்தப்படும் தமிழர்பண்பாட்டு வாழ்வியலில் முக்கியமானதாக விளங்குவது தமிழ் பௌத்தம். அதாவது இலங்கைக்குப் பௌத்தம் அறிமுகமாகி பரவிய காலத்தில் இருந்தே தமிழர்களும் பௌத்தர்களாக இருந்துள்ளனர். பிற்காலத்தில் பௌத்த மத வளர்ச்சி பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இலங்கையில் தமிழர்களும் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்து காட்டியுள்ளனர். அத்தமிழ் பௌத்தர்கள் தமிழ்ப் பாண்பாட்டுடன் கூடிய வாழ்வியலை அடையாளப்படுத்தி நின்றனர்.

இலங்கை மற்றும் தென்னிந்தியா, குறிப்பாகத் தமிழகத்தில், நாகரிக வரலாறு திராவிட மக்களுக்குரிய பெருங்கற்கால மக்களுடன் தோன்றுவதை அண்மைக்காலச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. தென்னிந்தியாவில் கி.மு. 1000 ஆண்டளவில் தோன்றிய இப்பண்பாடு இலங்கையில் கி.மு.700 அளவில் அங்கிருந்து பரவியிருக்கலாம் என்பது பேராசிரியர் சிற்றம்பலத்தின் கருத்தாகும். இப்பெருங்கற்கால பண்பாட்டுடன் தான் மக்கள் மந்தை வளர்ப்பு, விவசாயம், இரும்பின் பயன்பாடு, கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களின் உபயோகம், சவ அடக்க முறைகள் என்பவற்றை பின்பற்றிய நாகரிக வாழ்க்கை முறையை வாழ ஆரம்பித்தனர். இந்தப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களிடையே இந்து மதத்திற்குரிய வழிபாட்டு மரபுகளும் இருந்தன என்பதற்கு பல வகை சான்றுகள் உள்ளன. இம்மக்கள் மத்தியில் பௌத்தம் பரவிக்கொண்டது. இதனை இப்பண்பாட்டு மையங்களுடன் தொடர்புடைய தொல்லியல் ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அதாவது தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்கள் தமிழ்மொழி பேசுபவர்களாக இருந்தனர் என்பதைக் கொடுமணல், அழகன்குளம், விழுப்புரம், காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ள எழுத்துப்பொறித்த மட்பாண்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவை தமிழுக்கேயுரிய ,,,,, போன்ற எழுத்துக்களைக் கொண்டதால் இவற்றை தமிழ் அல்லது தமிழ்பிராமி என அழைத்தனர்.  இவ்வாறான மட்பாண்டச் சாதனங்கள் தமிழகத்தை அடுத்து இலங்கையில் அநூராதபுரம், பூநகரி, ஆனைக்கோட்டை, கந்தரோடை. வெல்லாவெளி போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. இந்த ஒற்றுமை தமிழகத்தைப் போன்று ஈழத்திலும் பெருங்கற்காலப்பாட்டு வழிவந்த தமிழ்மக்களின் ஒரு பிரிவினர் பௌத்த மதத்தைப் பின்பற்றி இருக்கலாம் என்பதற்குச் சான்றாகும்.

இவ்வாறு தமிழ் பௌத்தம் இலங்கையில் நிலவியது என்பதனைப் பல சான்றுகள் பறைசாற்றி நிற்கின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால், திருக்கோணமலை மாவட்டத்தில் மட்டும் 25 தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 16 கல்வெட்டுக்கள் பௌத்தத்துடன் தொடர்புடையன. திருகோணமலை கட்டுக்குளம் பற்றின் கிழக்கில் உள்ள பெரியகுளம் எனுமிடத்தில் உள்ள வெல்ஹம் விகாரையில்  கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு தமிழ் பௌத்த விகாரை பற்றிக் குறிப்பிடுகின்றது. கி.பி.2ஆம் நூற்றாண்டுக்குரிய இக்கல்வெட்டில் 'விகர', 'வூசிய' என வருகின்ற சொற்கள் முறையே பிராகிருதச் சொற்களான 'விஹார', 'வோஜிய' என்பதன் தமிழ் உச்சரிப்புக்களாகும். இது தமிழர்களால் அமைக்கப்பட்டு, வழிபடப்பட்ட பள்ளியாக இருந்திருக்கலாம் எனக் கருதமுடிகின்றது. இதனைப் பற்றி வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகையில் 'வேள்' எனப்படுவோர் சங்க கால தமிழகத்தின் பிரதான சிற்றரசர்கள் எனவும், இதில் தமிழ்மொழிக்குரிய சிறப்பெழுத்தான '' பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் வேள்கம என்பதை வேள்காமம் எனும் திராவிடச் சொல்லாகக் கருதலாம் எனக் குறிப்பிடுகின்றனர்.

அதேபோல் கிழக்கிலங்கையில் திருகோணமலை(சேருவெல) மற்றும் அம்பாறை (குடுவில்) மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதலாம் நூற்றாண்டுக்குரிய இரண்டு கல்வெட்டுக்கள் தமிழ்பௌத்தம் பற்றிய செய்திகளைத்  தந்துள்ளன. கிழக்கிலங்கையில் காணப்படுகின்ற பிராமிக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் மருமகன், பருமக(ன்), வேள், பூத(ன்), மள்ள(ன்), பத(பரதர்), நாகர் முதலான தமிழ்மொழிச் சொற்களும் தமிழ்மொழிக்குரிய சிறப்பெழுத்துக்களான ,,, என்பனவும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கிழங்கையில் பிராமிக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்ற பௌத்த மதத்திற்கு தானம் வழங்கப்பட்ட குகைகளின் பெயர்களும் இதற்கு சான்றாக அமைகின்றன. அதாவது சுடஸண, மநபடஸணே, மநோரமே, பியடஸணே, பிபாலி குஹ, புடலஜக, ஸமதபடே, சுபடிதிதே, பதிபண குதே, வயவரவே, இடசால குஹ ஆகிய பதங்கள் அத்தகைய குகைகளைக்குறிக்கின்றன. மேலும் அம்பாறை பாணமையிலுள்ள லைன்மலைக் கல்வெட்டு, மட்டக்களப்பு வேரோடிய மலைக் கல்வெட்டு, ஏறாவூர் பற்றில் காசிமோட்டை பகுதியில் கிடைத்த கல்வெட்டு, நீலப்பணிக்கன்மலையில் கிடைத்த கல்வெட்டு பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றி குறிப்பிடுகின்றன. பௌத்த தேரரர்களும் உபாஸகர்களும் சில சந்தர்பங்களில் உறவினர்களாகக் காணப்பட்டமைக்கு கிழக்கிலங்கைக் கல்வெட்டுக்களில் சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு ஈச்சிலம்பற்றையிலுள்ள கல்வெட்டு சிறந்த சான்றாகும். கிழக்கிழங்கையில் வெல்கம் விகாரையின் (ராஜராஜ பெரும்பள்ளி) வளர்ச்சிக்காகவும் நிர்வாகச் செயற்பாடுகளுக்காகவும் சோழர்கள் தானம் வழங்கியதை அங்கு கண்டுபடிக்கப்பட்ட 16 கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன.

அதேபோல வடமாகாணத்திலும் தமிழ் பௌத்தம் நிலவியது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஈழத்துப் பௌத்த மதவரலாற்றினைக் கூறும் பாளிநூல்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் வன்னிப் பகுதியுமடங்கிய அநுராதபுரத்தின் வடபகுதி முழுவதும் 'நாகதீபம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்நூல்களிற் பௌத்த மதத்தின் ஸ்தாபகரான கௌதம புத்தர் ஈழத்திற்கு இரண்டாவது தடைவ விஜயம் செய்தபோது இப்பகுதிக்கு விஜயம் செய்தது பற்றிய ஐதிகமும் உண்டு. பாளி இலக்கியமான மகாவம்சத்தில் பௌத்த மதத்தை பரப்ப இலங்கைக்கு அனுப்பட்ட துதுக்குழு, அரச மரக்கிளையோடு வந்திறங்கிய துறைமுகம் ஜம்புகோள பட்டினம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துறைமுக்திலிருந்து ஊர்வலமாக இக்குழு அநுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. இவ்விடத்திலேயே இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வண்ணம் திஸமஹாவிகாரை, பச்சினாராம ஆகிய கட்டடங்கள் தேவநம்பிதீசனால் கட்டப்பட்டன எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பின்னர் பௌத்த மதத்தை வடக்கே பரப்ப சிங்கள மன்னர்கள்; கி.பி.2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளிற் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கி.பி.14 ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்கள நூலாகிய நம்பொத்தவில் தமிழ் பட்டினத்தில் உள்ள பௌத்த வழிபாட்டிடங்களாகப் பின்வருவனவற்றை குறிப்பிடுகின்றது. நாககோவில் (நாகர்கோயில்), கதிறுகொடவிகாரய (கந்தரோடை), தெலிபொல (தெல்லிப்பழை), மல்லாகம (மல்லாகம்), மினிவன்கொமு விகாரய (வீமன்காமம்), தனிதிவயின (புங்குடுதீவு), காரதிவயின (காரைதீவு) ஆகிய குறிப்பிடப்பட்டுள்ளன. ;வ்விடங்களில் போல் பீரிஸ் மேற்கொண்ட மேலாய்வின் மூலம் பௌத்த அழிபாடுகள் பற்றி சான்றுகள் கந்தரோடை, உடுவில், தெல்லிபளை, மல்லாகம், சுன்னாகம், புத்தூர், சம்பில்துறை, நிலாவரை, வல்லிபுரம், மகியப்பிட்டி, புலோலி போன்ற இடங்களிற் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

1936 இல் வல்லிபுரத்திற் கிடைத்த பொன்னேட்டில் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற் புயங்குதிஸவினால் அமைக்கப்பெற்ற விகாரை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டூர் மாவட்டம் அமராவதிக்குரிய திராவிட சிற்ப மரபுகளுடன் அமைந்த வல்லிபுரம் புத்தர் சிலையானது வல்லிபுர இந்துக்கோயிலின் அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் காணப்படும் எழுத்துக்கள் தமிழ் பிராகிருத மொழியில், சாதவாகன மரபின் ஆட்சிக்காலத்திய ஆந்திரக் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்களோடு ஒத்தவையாக அமைந்துள்ளன.  1960 கந்தரோடை அகழ்வாய்வுகளில் பௌத்த விகாரைகளின் அழிபாடுகள் கிடைக்கபபெற்றுள்ளன. 1971 இல் கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் 'ததஹ' எனப்பட்ட பௌத்த துறவி ஒருவரின் பிச்சா பாத்திரத்தின் பாகத்தில் 'ததஹபத' அதாவது ததஹவின் பாத்திரம் என்ற கிறிஸ்வத சகாப்தத்திற்கு முற்பட்ட பிராமி வரிவடிவத்திலமைந்த குறிப்புக்கள் காணப்படுகின்றது.

அதேபோல அண்மைக்கால ஆய்வுகளில் வேலணைப் பகுதியிலுள்ள சாட்டி, கும்புறுப்பிட்டி, காரைநகரிலுள்ள வேரப்பிட்டி, புங்குடுதீவிலுள்ள திகழி, நெடுந்தீவுலுள்ள வெடியரசன் கோட்டை போன்ற இடங்களில் பௌத்த மதத்தின் எச்சங்கள் கிடைத்துள்ளன. மேலும் அடங்காப்பற்று, வவுனியா பகுதியிலுள்ள பெரிய புளியங்குளம், எருப்பொத்தானை, வெடிக்கனாரிமலை ஆகிய இடங்களிலுள்ள கிறிஸ்தவ காலத்திற்கு முந்திய பிராமிக்கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன. அதேபோல உருத்திரபுரம், வவுனிக்குளம், துணுக்காய், குருந்தமரை, திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களிலும் பௌத்தமத வழிபாட்டிற்குரிய எச்சங்கள் கிடைத்துள்ளன. மாதோட்டத்தில் கிடைத்த கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குரிய 5ஆம் காசியப்பனின் இரு சிங்களக் கல்வெட்டுகள் இங்கே காணப்பட்ட இரு பௌத்த விகாரைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இதனைவிட இரு கல்வெட்டுக்கள் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் தமிழ்க் குடும்பத் தலைவனான விசாகனால் பௌத்த பிக்குகளுக்குக் குகைகள் சீரமைக்கப்பட்டும், மாடிப்படிகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்படுகின்றது. 

 இலங்கையில் பௌத்த மதம் தொடர்பான நம்பகரமான சான்றுகளாக பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இதுவரை சுமார் 2000 பிராமிக்கல்வெட்டுக்கள் இலங்கையில கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்திற்கு வந்ததாகக் கருதப்படும் இலங்கை பிராமி கல்வெட்டுக்கள் சங்க இலக்கியங்களோடு தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளோடும் தொடர்புடுத்தக்கூடிய ஆய், வேள், பருமக, பருமகள், மருமகள், சலஹ, பரத, உதி, உதிய, குடி போன்ற சமூகம் வம்ச பட்டப்பெயர்கள், தனிநபர் சார்ந்த பெயர்களும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன. இப்பெயர்களிற் பல பிராகிருத மயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இதற்குப் பௌத்த மதத்திற்கு மாறி, ஆதரவு கொடுத்த தமிழர்கள் அம்மத மொழியான பிராகிருதத்தைக் கல்வெட்டு மொழியாகப் பயன்படுத்தியது காரணமாகும். இதற்கு தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்கள் மட்பாண்ட எழுத்துக்கள் என்பவற்றிலுள்ள தமிழ் மற்றும் பிராகிருத தமிழ் மயப்படுத்தப்பட்ட பெயர்களிற்கிடையிலான ஒற்றுமை சிறந்த எடுத்தக்காட்டாகும்.

இலங்கையில் சேருவல என்ற இடத்தில் கிடைத்த கி.மு.2 ஆம் நூற்றாண்டிற்குரிய கல்வெட்டில் சுட குறிப்பிடப்பட்டுள்ள தமிழன், பௌத்த மதத்திற்கு தானம் அளித்ததாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் இதே காலகட்டத்திற்குரிய சில கல்வெட்டுக்களில் இச்சொல் ஆய், மாற போன்ற தமிழ்ப் பெயர்களுடன் வருகின்றது. இலங்கையின் வரலாற்றாசிரியரான நிக்கலஸ் இரண்டு கல்வெட்டுக்களில் பாரிந்த(ன்), இளைய பாரிந்த(ன்) ஆகிய ஆட்சியாளர்கள் பௌத்த மத ஆச்சிரமங்களுக்கு வழங்கிய நன்கொடைகள் சுட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குரிய, பதவியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டிற்குரியதாக கருதப்படும் சமஸ்கிருத மொழிச் சாசனம் ஒன்றில் வேளைக்காற படையினரில் ஒரு பகுதியினர் தமிழ் பௌத்தர்களாக இருந்த செய்தியினைச் சொல்கிறது.

மேலும் கி.மு.237 - கி.மு. 47 இற்கும் இடைப்பட்ட அநூராதபுர அரசியல் வரலாற்றை பார்க்கும் போது ஏறத்தாள 21 மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் 10 தமிழ் மன்னர்கள். அவர்கள் 82 வருடங்கள் 2 மாதங்கள் ஆட்சி புரிந்துள்ளனர். பௌத்தம் இலங்கையில் பரவிய பின்னர் பௌத்த சிங்களவரே ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்ற மரபு இருந்து வருகின்றது. இதனைப் பாளி இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. அந்த வகையில் இத்தமிழ் மன்னர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கலாம்.

4ஆம் அக்கபோதி மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் பொத்தகுட்டன் என்பவர் அக்கபோதியின் முதலமைச்சராகவும் ஆலோசகராகவும் இருந்தார். அத்துடன் பொத்தசாத்தன், மகாகந்தன் ஆகிய இருவரும் மன்னனின் முக்கிய அமைச்சர்களாயிருந்தனர் என சூளவம்சம் கூறுகின்றது. இவர்கள் தமிழர்களாக இருந்தும் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் எனவும் பொத்தகுட்டன் 'மாடடம்பிய' எனும் பிரிவேனாவைக் கட்டுவித்து அபேவௌ வாவியையும் புக்ககல்ல என்ற ஊரையும் நித்தில வீதி எனும் ஊரையும் காணிக்கையாகக் கொடுத்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இனால் கனிசமான தமிழர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றி, அதற்கு பணிசெய்தனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சம் ஒரு தனவந்தர் இரண்டு இடங்களில் விகாரைகளைக் கட்டுவதற்காக மூன்று கிராமங்களைத் தேர்ந்தெடுத்தார் எனவும் பொத்தசாத்தன் என்னும் மதிநுட்பமுடைய சேனாதிபதி ஜேதவன விகாரையில் மன்னனின் பெயரில் பிரிவேனா ஒன்றைக் கட்டிமுடித்தார் எனவும் மகாகந்தன் எனும் தமிழ்த்தலைவரும் தனது பெயரில் பிரிவேனா ஒன்றைக் கட்டியெழுப்பினார் எனவும் கூறுகிறது. இவையாவும் தமிழர்கள் பௌத்தத்தை ஆதரித்தமையே எடுத்துக்காட்டுகின்றது எனலாம்.

இவ்வாறான இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகள் தமிழர்கள் மத்தியில் பௌத்த சமயம் பரவிய, தமிழ் பண்பாட்டு வாழ்வியல் வளர்ச்சிப்படுத்தப்பட்டது என்பதனை வெளிப்படுத்துகின்றன.

 பிற்பட்ட காலத்தில் மொழியடிப்படையில் சிங்கள மொழி பேசிய மக்களை பௌத்த மதத்ததுடன் தொடர்புபடுத்தியதைப் போல், தமிழ் மொழி பேசிய மக்களை அப்படி அடையாளப்படுத்த முடியாமல் போயிற்று.

மற்றையது சிங்கள தேரர்களின் தலமையில் செயற்பட்ட, பெரும் சொத்துடை நிறுவனமான பௌத்த சங்கம், பௌத்த சிங்களப்பண்பாட்டினைத் தொடர்ந்து பேணி வளர்த்து வந்துள்ளது. இது போன்ற அமைப்புகள் தமிழ் பௌத்தர்கள் மத்தியில் தோன்றித் தனித்துவமாக அதனை வளர்த்தெடுக்க முடியாமற் போயிற்று. அதனால் தமிழ் பௌத்தம் நிலைபெற முடியாமற் போயிற்று.

தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், அவ்வாட்சியாளர்களின் இலங்கை மீதான படையெடுப்புக்களும் மற்றும் பக்தி இயங்கங்கத்தின் செயற்பாடுகளும் இலங்கையில் தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கு அடியிட்டன. அதனால் தமிழ் பௌத்தர்கள் மீண்டும் இந்து சமயத்தை தழுவிக்கொண்டனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

பௌத்தம் எவ்வித பேதமும் இல்லாமல் மக்கள் மத்தியில் பரப்பபட்டதனால், கனிசமான தமிழர்கள் அதனைத்தழுவிக்கொண்டனர். அப்பரவலினால் திராவிட பண்பாட்டுடன் பௌத்த பண்பாடு கலந்து, புதிய அம்சங்களுடன் கூடிய வாழ்வியலை தோற்றுவித்தது. இன்று பௌத்த சிங்களவர்களிடையே காணப்படுகின்ற பண்பாட்பாட்டின் பல வாழ்வியல் கூறுகள் தமிழ் பண்பாட்டினைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை நூல்கள்

1.     புஸ்பரட்ணம்,., 2002, தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டையக்கால மதமும் கலையும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை.

2.     சிற்றம்பலம்,சி.., 1993, யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.

3.     பத்மநாதன்,சி., 2006. இலங்கைத் தமிழ் சாசனங்கள் (கி.பி.700 - 1300). இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.

4.     கிருஸ்ணராசா.செ.,2012, இலங்கை பண்பாட்டு பரிணாமத்தின் அடிப்படைகள் (கி.பி. 1500 வரை), கொழும்பு.

5.     குணசிங்கம் முருகர்., 2008, இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு (கி.மு300 கி.பி 2000), எம் வி வெளியீடு தென் ஆசியவியல் மையம் - சிட்னி.

6.     இந்திரபாலா, கா.,2006, இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம், சென்னை.