4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

பார் போற்றும் பாரதி - பேரா.முனைவர் பி.அனுராதா

 பார் போற்றும் பாரதி

 நீடு துயில் நீக்க வந்த பாடு நிலாவே....

நல்ல வேளை நீ இன்று இல்லை...

பார் போற்றும் பாரதியே!!!

நீர் போற்றிய பெண்மை

தேர் ஏற்றித் தொழும் நாளை எண்ணித் தொலைக்கிறது நித்தமும்....

ஏர்பூட்டிய கைகளில் 

மண் இருப்பதில் வியப்பில்லை...

வாயில் போட்டது

தான் விசித்திரம்...

தனியொருவனின் உணவு தாராளமாய்க் களவாடப் படக் காரணமாய் இங்கே

கதியற்று நிற்கிறோம்...

உன் மீசையின் 

முறுக்கு கொஞ்சம் தளர்ந்த  பிரதிகளாய் நாங்கள்....

உன் மீசையின் 

முறுக்கு கொஞ்சம் தளர்ந்த  பிரதிகளாய் நாங்கள்....

துரியோதனர்களை தூக்கிப்பிடித்துக் கொண்டாட....

பாஞ்சாலி பரிதவிக்க...

உன் மீசை முடியொன்றை தானமாய்க் கொடு

உன் மீசை முடியொன்றை தானமாய்க் கொடு

கொஞ்சமாவது 

கோபம் வரட்டும்...

சாதிகள் இல்லையென சாதிப்(போர் )....

நீதி தேடித் தொலைந்தே

போனவர்கள்...

வயிற்றுப் பிழைப்பிற்காய் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்...

ஓய்ந்திருந்தே ஒழிந்து போன பிள்ளைகள்...

காலை மாலை கையற்றுப் பேசியே தொலைக்கிற இளமை....

எத்தனை கோடி இன்பம் ....

நிற்பன நடக்கிறது

நடப்பன பறக்கிறது....

முரணில் முனகியே வாழ்ந்துவிட்டுப் போகிறோம்....

வீழ்ந்தேனென நினையாமலே.....

மார்தட்டிச் சொல்கிறோம் வீழ்வேனென்று நினைத்தாயோ....

வீணாய்ச் சொல்லிவிட்டாய்

ரௌத்திரம் பழக...

உனக்கென்ன உத்தமனே

நாங்கள் இருக்கிறோம் நிம்மதியாய் நித்திரை கொள்...

நித்தமும்மைத் தொழுதிடுவோம்

நிச்சயமாய் நினைத்திடுவோம்...

நீ கண்ட கனவுதனை

குழி தோண்டிப் புதைத்திட்டோம்....

பத்திரமாய் பாதுகாக்க....

பரம்பரைக்கும் எடுத்துச் செல்ல...

மறுபிறவி உண்டாயின்

மறந்தும் பிறந்திடாதே....

உன் விழித்தீயைக் கொஞ்சம் அணைத்துவிட்டுப் போய்விடலாம் எங்கள் கண்ணீர்த் துளிகள்....

அப்படியே இருந்துவிடு

அங்கேயே தங்கிடு....

அடுத்த கட்சி ஆரம்பிக்க ஆலோசனை கேட்டிடலாம்...

ஆளுக்கொரு கூறு உனைக்கூடப் போட்டிடலாம்....

ஐந்தாயிரம் சம்பளத்தில் ஆசிரியராக்கிடலாம்...

ஆர்ப்பாட்டம் செய்தாயென சிறைச்சேதம் செய்திடலாம்...

அவதூறு பேசினதாய் 

அங்கலாய்ப்பும் வந்திடலாம்....

மறந்தும் பிறவாதே....

நீடு துயில் 

நீக்காதே...

மறந்தும் 

பிறவாதே மாணிக்கமே....

 

பேரா.முனைவர் பி.அனுராதா