4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2022

வள்ளுவத்தில் வானவியல் - கணக்கியல் - தாவரவியல் சிந்தனைகள் - முனைவர் நா.குமாரி

 

வள்ளுவத்தில் வானவியல் - கணக்கியல் - தாவரவியல்    சிந்தனைகள்

 

                          முனைவர் நா.குமாரி

                          உதவிப்பேராசிரியர்

                          தமிழ்த்துறை

                          அக்சிலியம் கல்லூரி

                          வேலூர்-632006

9894224496

ஆய்வுச்சுருக்கம்

      வள்ளுவத்திற்குள் எல்லாம் இருக்கிறது என்று துணிவோடு கூறும் அளவிற்கு அறம், பொருள், இன்பம் என முப்பால் செய்திகளோடு பல்வேறு துறை பற்றிய செய்திகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தன்னுடைய நூலில் வள்ளுவர் பதிவு செய்துள்ள திறனை உணரும்போது அவரை ஒரு பல்கலைக்கழகமாக நம்மால் இன்று காண முடிகின்றது. அறிவியல், வானவியல், தாவரவியல், மருத்துவவியல், மேலாண்மையியல், சுற்றுச்சூழலியல், சட்டவியல், அரசியல், வேளாண்மையில், கல்வியியல், உளவியல், பொருளியல், வாழ்வியல் முதலான நிலைகளில் வள்ளுவரை அந்தந்த துறை சார்ந்த அறிஞராக அடையாளம் காணமுடியும். இன்று வளர்ந்து வரும்  தொழில்நுட்பச் சூழலுக்கேற்ற கருத்துக்கள் வள்ளுவத்தில் மிகுதி. மேற்சுட்டிய துறைகளில் வானவியல், கணக்கியல், தாவரவியல் ஆகிய மூன்று அறிவியல் துறை சார்ந்த செய்திகள் எவ்வாறு பதிவாகி இருக்கிறது என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்ட முனைகிறது. 

முன்னுரை

  நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற அறநூல் மட்டுமன்று வள்ளுவம். மொழி, இனம், நாடு கடந்து உயரிய சிந்தனைகளை முன் வைப்பதில் மற்ற நீதி நூல்களுக்கு வழிகாட்டியாய், முன்னோடியாய் விளங்குவது. மக்களை நெறிப்படுத்த தன் நூலில் வள்ளுவர் கருத்துக்களை மட்டும் அடுக்காமல் அதோடு பிற செய்திகளையும் இணைத்து தெளிவாகவும், ஆழமாகவும், எளிமையாகவும் தந்திருப்பது அவருடைய படைப்பாளுமையையும் பல்துறைப் புலமையையும் பறைசாற்றி நிற்கின்றது. 

 வள்ளுவத்தில் வானவியல் 

வள்ளுவத்தில் வானவியல் தொடர்பான செய்திகள் நுட்பமாக இடம்பெற்றுள்ளன அறுவாய், வளர்பிறை, தேய்பிறை, சந்திரகிரகணம் போன்ற வானவியல் தொடர்புடைய செய்திகளை வள்ளுவர் எடுத்துக்காட்டுகிறார். 

அறுமீன் 

வானவெளியில் உள்ள நட்சத்திரங்களில் ' அறுமீன்' என்னும் ஆறு நட்சத்திரக் கூட்டம் என்று உண்டு. இதனையே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று முன்னோர்கள் அழைத்தனர். இக்கூட்டத்தின் அருகில் சிவந்த ஒளியுடன் மின்னும் நட்சத்திரத்தை 'உரோகிணி' என்றழைப்பர். சங்கப் புலவர், பாலை பாடிய பெருங்கடுங்கோ நற்றிணையில்,

"அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்

 செல் சுடர் நெடுங்கொடி போல"  (நற்-202)

என்று கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை குறிப்பிடுவது இங்கு நினைத்தற்குரியது. சந்திரனும் உரோகிணியும் காதலன் நினைவுக்கு வர, தன் காதலியின் முகத்தை மதிக்கு ஒப்பிட்டு,

"மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்"(1116)

என நலம்புனைந்துரைத்தலில் பாடி மகிழ்கின்றான். முகமும் - மதியும் ஒன்று போலத் தோன்றுவதால் உரோகிணிக்குக்  குழப்பம் ஏற்படுகிறது.

அறுவாய்

 மதியைப் பழித்து மங்கையின் முகத்தைப் போற்றிப்பாடும் காதலன்,

"அறுவாய் நிறைந்த அவர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து"(1117)

எனக் காதலியைப் புகழ்கிறான். வானவியலின் கருத்துப்படி விண்ணில் எரிகற்கள் சந்திரனின் மீது மோதுவதால் சந்திரனின் மேற்பரப்பு மேடும் பள்ளமுமாக காணப்படுவதாக ஆய்வுகள் உரைக்கின்றன. அவ்வாறு உண்டான பள்ளங்களை 'அறுவாய்' என்று அழைக்கிறார் வள்ளுவர். மேலும் சந்திரனில் காணப்படும் மறுக்களை,

 "குடிப்பிறந்தார் கண் விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து" (957)

 என உயர்குடிப் பிறந்தாரின் குற்றங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதையும் அறிய முடிகிறது.

வளர்பிறை - தேய்பிறை  

சந்திரன் தன்னைத்தான் சுற்றுவதோடு பூமியையும் சுற்றி வருகிறது. இச்சுழற்சியினால் சந்திரனில் ஒரு முகத்தை மட்டுமே நம்மால் பூமியில் இருந்தபடி காணமுடிகின்றது. சந்திர சுழற்சியில் சூரிய ஒளிபடுவதால் பிரதிபலிக்கும் நிலாப்பகுதி வளர்பிறையாகவும் அவ்வாறு இல்லாமல் அமைவதைத் தேய்பிறையாகவும் அறிவியல் எடுத்துக் கூறுகிறது. தலைவன் பிரிவால் வாடும் தலைவியின் பிரிவுத் துயரம் வளர்பிறையைப் போல வளர்வதாய்க்  காட்டுகின்றார். வானவியல் அறிஞரான வள்ளுவரும்,

" நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

 பின்நீர பேதையார் நட்பு" (782)

எனப் பாடுகின்றார். வளர்பிறை, தேய்பிறை பற்றிய அறிவியல் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை நட்போடும் ஒப்பிட்டு பாடியுள்ள வள்ளுவரின் திறம் தனித்துச் சுட்டத்தக்கது.

சந்திர கிரகணம்

சந்திரனைப் பூமி கடக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுகிறது. இதனைச் 'சந்திர கிரகணம்'என்கிறது அறிவியல். இவ்வறிவியல் உண்மைச் சந்திரனை ராகு என்னும் பாம்பு விழுங்குவதாக மக்களிடையே மாறுபட்ட கதையாகவும் வழக்கில் இருந்து வருகிறது. 'அலர் அறிவுறுத்தல்' என்னும் அதிகாரத்தில்,

" கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று (1146)

எனக் குறளில் தலைவனைக் கண்ட தலைவியை ஊரார் பழிப்பது சந்திரகிரகணம் போலப் பரவுவதாக வள்ளுவரால் எடுத்தாளப்படுவது குறிக்கத்தக்கது.

வள்ளுவதில் கணக்கியல் (0 முதல் 10 வரையிலான கணக்கியல் பதிவுகள்)

அறிவியலில் அரசியாக கருதப்படுவது கணிதம். கணிதம் இன்றி அறிவியல் இல்லை. அணுவும் இல்லை. விண்வெளிப்பயணம் இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் எழுத்தின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. எண்ணின் அடிப்படையில் அமைந்தவை என்று அறிஞர் வா.செ.  குழந்தைசாமி கூறுவது நினைத்தற்குரியது. சிந்தனையை மிகச் செறிவாக,

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு"  (392)

என இருவகையான நோக்கைக் கூறி அதில் ஒன்று நோய் செய்யும் நோக்கம் என்றும் மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் பார்வை என்கிறார்.

மூன்று என்ற கணக்கை வள்ளுவர்,

"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம்மூன்றும் உடைத்து"(1085)

என்கிறார். பெண்ணின் பார்வை எமனோ! கண்ணோ! பெண் மானோ! என்று மூன்றின் தன்மை உடையது என்று முப்பரிமாணத்தைக்  கூறுகிறார்.

நான்கு என்ற கணக்கில்,

 "முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேல்உண்கண் வேய்ந்தோ ளவட்கு"  (1113)

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிர் மேனி, முத்துப்பல், இயற்கை மனம்,வேல் போன்ற கண் என்று நால்வகை கணக்கைக் கூறுகின்றார்.

"கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள"  (1101)

என்ற குறளில் ஐந்து புலன்களாகிய இன்பம் பெண்ணிடத்தில் உண்டு. அவை கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், உற்றும் என்ற ஐவகை கணக்கைச் சுட்டிச் செல்கின்றார்.

ஆறு என்கிற எண்ணைப் பொருட்பாலில்,

"படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு" (381)

என்றும், ஏழு என்கின்ற கணக்கை அவர் வயின் வதும்பல் எனும் அதிகாரத்தில்,

"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

 ஒருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு" (1269)

என்ற குறளில் காணலாம். தலைவன் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் தலைவிக்கு ஒருநாள் ஏழுநாள் போல கழியும் என்கிறார்.

 எட்டு எனும் எண் கடவுள் வாழ்த்தில்,

"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை" (9)

என்று இடம் பெற்றுள்ளதை அறியலாம். கேட்காத செவி, பார்க்காத கண் முதலியன போல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர் தலைகளை பயனற்றவை என்கிறார்.

"பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

 நல்லார் தொடர்கை விடல்" (450)

என்ற குறளில் 10 என்கிற எண்ணைப்  பதிவு செய்து காட்டுவதை காணலாம்.

வள்ளுவத்தில் தாவரவியல்

வானவியல்,கணக்கியல் தகவல்களை உரிய இடத்தில் எடுத்தாண்டு இருப்பதை போன்று கொடி,புதல், மரம், மலர் முதலிய தாவரவியல் தொடர்பான செய்திகளையும் உரிய இடத்தில் வள்ளுவர் தெளிவாக சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பு.

வள்ளிக்கொடி

"ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரித் தற்று"(1304)

என்ற குறளில் கொடி வகையுள் ஒன்றான வள்ளிக் கொடியை குறிப்பிடுகிறார்.

தலைவியின் வாட்டத்தைத் தணித்து ஊடலைப் போக்காமல் அதனை வளர்த்துச் செல்லும் தலைவனின் செயல் வாடிய கொடியைக்  கிழங்கோடு  வெட்டி வீழ்த்துவது போன்றது என்கிறார். வறண்ட காலங்களில் வள்ளிக் கொடியின் இலைகள் மற்றும் அதனுடைய கிழங்குகள் உயிர்த்தன்மையுடன் இருந்து சிறிது மழை பெய்தாலும் மறுபடி தழைத்துப் புதுக்கொடியாகப் படரும் என்பதால் இக்கொடியை வாடா வள்ளி என அழைப்பதும் உண்டு.

புதல்

சிறு செடி வகையுமில்லாமல் பெரு மாவகையும் இன்றி இளைத்துப் பருந்து இருக்கும் செடி வகைகளைப் புதல் எனல் மரபு. இவற்றின் மீது பிற கொடியினங்களும் படர்ந்து அடர்த்தியான இடத்தை உண்டாக்கும். அடர்த்தியான இடத்திற்குப்  பின் மறைந்து நின்று வேடர்கள் வேட்டையாடுவது, தவ வேடத்தை பூண்டு துறவிபோல் காட்சியளித்து அறமில்லாச் செயல்களைப் புரியும் தன்மைக்கு உவமையாக்குவதை,

"தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று"(274)

என்ற குறளின் மூலம் அறிவதோடு 'புதல்' என்ற செடி வகையை வள்ளுவர் இனம் காட்டுவதையும் உணரமுடிகிறது.

மரம்

வள்ளுவர் தரும் அடைமொழிகள் வாழ்க்கையின் உயரிய விழுமங்களுடன் பொருத்தி வரும் அதே சூழலில் தாவரவியல் கருத்துக்களுடன் பொருத்தி நிற்பது வள்ளுவரை தாவரவியல் அறிவு நிரம்பியவராக அடையாளப்படுத்துகிறது.

மருந்துமரம்

 "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

 பெருந்தகை யான்கண் படின்"(217)

என்னும் குறளில் இடம்பெறும் மருந்து மரம் என்பதற்கு வேம்பு , ஆல், அத்தி, அரசு, முருங்கை, வாழை போன்ற மரங்களை சான்றுகளாகக் கூறலாம். இம்மரங்களின் அனைத்து உறுப்புகளும் மருந்தாகப் பயன்படும் தகுதி மிக்கவை.

நச்சு மரம்

மருந்து மரத்திற்கு நேர் எதிராக எத்தகைய பயனும் தராத தீமை பயக்கக்கூடிய நச்சு மரங்களை,

 "நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று" (1008)

என்ற குறளில் உவமையாக்கிக் காட்டுகிறார்.

வற்றல் மரம்

அன்பில்லா வாழ்க்கை ஆக்கம் அற்றது என்பதை வன்பாற்கண் வளர்ந்த வற்றல் மரத்தை உவமையாக்கி விளக்குகிறார்.

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று" (78)

பாறைகளின் நடுவில் விழுந்த விதைகள் அங்கு வளர்கின்றன. இவ்வாறு வளரும் மரங்கள் மண்ணில் வளரும் மரங்களைக் காட்டிலும் வளர்ச்சி குன்றியே காணப்படும். உண்மையை நுட்பமாக அறிந்த வள்ளுவர் அன்பு இல்லாமல் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பாதையின் நடுவே வளர்ந்து வளர்ச்சி குன்றி ஏதோ மரம் என்ற அளவில் இருக்கிறது எனக் கருதும் அளவுக்கு உயிரோடு இருக்கிற மரத்தை உவமையாக்குவது நினைத்து வியத்தற்குரியது

 மலர்

தமிழில் மலர் மொக்காக இருந்து நன்கு மலர்ந்து விரிந்து காயும் வரையிலான பல நிலைகளைச் சுட்டும் பல சொற்கள் உள்ளன.அரும்பு, மொக்கு, முகை, போது, மலர், அலர், வீ ,செம்மல் என்பன. மலரின் இருப்பருவ நிலைகளின்  தொடர்ச்சியைத் தெளிவாக அறிந்திருந்த வள்ளுவர் அதன் வளர்ச்சியை நோயுடன் ஒப்பிட்டு,

"காலை அரும்பி பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்"  (1227)

என்ற குறளில் ஊக்கமுடைமையின் ஆக்கம் பற்றி கூறும் வள்ளுவர் நீர்வாழ் தாவரங்களை நினைவுபடுத்துவது சுட்டத்தக்கது.

"கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று"  (1313)

 

"அனிச்சம் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்" (1120)

 

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து" (90)

இக்குறட்பாக்களில் கோட்டுப்பூ, அனிச்சம் ஆகிய மலர்களை சுட்டிக்காட்டுகிறார். மலர்களில் அன்றலர்ந்த அன்றே வாடும் தன்மை உடையது கோட்டுப்பூ. கார்மேகம் வந்து காற்றில் ஈரத்தன்மை மிகும் பொழுது அனிச்சமலர் வாடுவது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட தாவரவியல் உண்மை. அம்மலரை முகர்ந்து பார்க்கும் மூச்சுக்காற்றில் உள்ள ஈரத்தன்மையால் அது வாடுகிறது. எனவே மேகம் கருக்க அனிச்சம் வாடுவதைப் போலவே வந்த விருந்தினரும் வாடுவர் என வள்ளுவர் கூறும் கருத்து முற்றிலும் அறிவியல் சார்புடையது எனலாம். குறளில் நெருஞ்சி என்ற மற்றொரு தாவர வகையையும் எடுத்துக்காட்டுவது சுட்டத்தக்கது.       

காழில் கனி

அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக திராட்சை, மாதுளை போன்ற கனிகள் விதையில்லாமல் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்றைய இமாலய வளர்ச்சி எனக் கருதி இச்சிந்தனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் சுட்டியிருப்பது நினைத்து வியப்பதற்குரியது.

"தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

 காமத்துக் காழில் கனி"(1191)

என்ற குறளில் விதையில்லா கனிகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. மென்மையும் இனிமையும் உள்ள கனி உண்ணும் போது அதனுடைய சிறு விதை கூட தடையாக இருக்கக்கூடும். இனிமையைக் கொடுக்கும். அதைப்போல தலைவன் தலைவி சந்திப்பில் எத்தகைய சிறு தடையும் இருத்தல் கூடாது என்பதை வலியுறுத்தக் காழில் கனியை உவமையாக்குகிறார்.

தொகுப்புரை

மேற்தொகுத்த தகவல்கள் வள்ளுவரை வானவியல்,கணக்கியல், தாவரவியல் துறை சார்ந்த செய்திகளை தெளிவாக நுட்பமாக உணர்ந்த அறிவியல் அறிஞராக அர்த்தப்படுத்திக் காட்டுகின்றன. காதல், நட்பு, வாழ்வியல் செய்திகளை அறிவியல் கூறுகளோடு இணைத்துத் தரும் படைப்பாளுமையையும் வள்ளுவரிடம் காணமுடிகின்றது. கட்டுரையில் தொகுத்தளித்த 3 துறைகளைப் பற்றிய செய்திகளை வள்ளுவத்தில் இன்னும் விரிவாக ஆராய்ந்து தனித் தனிக்  கட்டுரைகளாக அமைக்க இடமும் உண்டு.

துணை நூல்கள்

1.டாக்டர்.வா.செ.குழந்தைசாமி,அறிவியல் தமிழ், பாரதி பதிப்பகம், சென்னை - 17

2.நற்றிணை, கழக வெளியீடு, சென்னை.

3.திருவள்ளுவர், திருக்குறள்,பாரிநிலையம், சென்னை.