4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2022

இணைய இதழியல் - முனைவர் நா.குமாரி

 

 

                                            

இணைய இதழியல்

 

                              முனைவர் நா.குமாரி

                             உதவிப்பேராசிரியர்,

                                   தமிழ்த்துறை

                              அக்சிலியம் கல்லூரி

                                      வேலூர்-6

 

முன்னுரை

           புதிய தொடர்பியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக உலகம் தொழில் மையத்தில் இருந்து தகவல் யுகமாக மாறி உள்ளது. உற்பத்தி பொருளாதாரத்திற்கு இணையாக சேவை பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.இதில் தகவலும் ஊடகங்களும் பிரதானமானவை.தொழில்புரட்சியைப் போலவே தகவல் நிகழ்த்த தொடங்கியுள்ளது .மனிதனின் அன்றாட செயல்பாடுகளில் ஊடகங்களின் குறுக்கீடு மிகுதி. புதிய தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் மனிதனின் வாழ்க்கைக்கு ஏற்ப பயன்படுகின்ற நிலையிலிருந்து விலகி ஊடகங்களுக்கு ஏற்ப மனித வாழ்க்கை என்ற நிலை உருவாகி உள்ளது.

          தகவல் தொடர்பியலில் (Communication)  இதழியல் ஒரு அடிப்படைத் தளம் .இதழியலை அச்சுவழி இதலியல், வானொலி இதழியல் ,தொலைக்காட்சி இதழியல் என ஊடகங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் போது அவ்வரிசையில் நவீன இதழியல் வகையாக இணைய இதழியல் தோன்றியுள்ளது.

          பொதுச் செய்திகளையும் கருத்துக்களையும் பொழுது போக்குகளையும் முறையாக ,நம்பகமான வகையில் பரப்பும் இதழியல் பணிகள் இணையம் (Internet) எனும் ஊடகத்தின் வழியே நிகழ்த்தப்படும் பொழுது இணைய இதழில் ஆகிறது.

         இணையத்தின் தோற்றத்திற்கு முன்னரே தகவல் தொடர்பியலின் வளர்ச்சியை அடையாளப்படுத்த படுகின்ற பல்வேறு ஊடகங்கள் தோன்றி வளர்ச்சி பெற்று உள்ளன என்றாலும்,அவ்வூடகங்கள் அனைத்தும் வழியேயும் பெற முடிகின்ற தகவல் தொடர்பு வசதிகள் முழுவதையும் ஒருங்கே பெற்று த்திகழும் இணையம் பன்முகப் பரிமாணத்தோடு திகழ்கிறது .எனவே தொடர்பியல் துறையில் இத்தொழில் நுட்பம் பெரும் கவனயீர்ப்பு பெற்றுள்ளது.

 

இதழியல் பணிகளில் இணையம்

 

               புதிய கணினி த்தொழில் நுட்பமும் மற்றும் அதன் விளைவான இணையமும் இதழியல் துறையிலும் அதன் பணிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன .இதனால் செய்தி சேகரிப்பு பக்க வடிவமைப்பு மற்றும் வெளியீட்டு நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.

                    செய்தி சேகரிப்பு பணியில் இணைய த்தொழில்நுட்பம் முக்கிய பங்குவகிக்கிறது .மின்னஞ்சல் மூலம் செய்திகளை விரைவாக செம்மையாக பரிமாறிக் கொள்ள முடிகிறது. அதிலும் குறிப்பாகப்படங்களை விரைவாகவும் தெளிவாகவும் இம்முறையில் அனுப்பவும் பெறவும் முடிகிறது. குரல் அரட்டை மூலம் உலகளாவிய நிலையில் உள்ள பிரமுகர்களுடன் உரையாற்றி பல செய்திகளை பெற முடிகிறது .உலகளாவிய பல இணையத்தளங்களின் மூலமும் செய்திகளையும் படங்களையும் உடனடியாக பெற முடிகிறது.

            இதழ்களின் பக்க வடிவமைப்பில் கணினி மற்றும் இணைய தொழில்நுட்பம் பெருமளவு பயன்பட்டு வருகிறது .உலகத்தரமான இதழ்களின் பக்க வடிவமைப்புகளை அவற்றின் இணையத்தளங்கள் மூலம் பார்க்க முடிவதால் பிற இதழ்கள் தங்களுடைய வடிவமைப்புகளை சீராக்கிக் கொள்ள முடிகிறது.

 

இணைய இதழியற் பண்புகள்

 

          பிற ஊடகங்கள்ஒவ்வொன்றிலும் பெறக்கூடிய தனிப்பட்ட வசதிகள் அனைத்தையும் ஒருங்கே இணையம் மூலம் பெற முடிகிறது .அவற்றை கீழ்க்கண்ட ஐந்து வகைகளில் விளக்கலாம்.

 

1 தேர்வுத் தன்மை

 

           துய்ப்போரின் தேர்வு தன்மையை இணைய இதழியல் முழுமையாக நிறைவு செய்கிறது .அதாவது இணைய இதழ்களை பார்வையிடும் ஒருவர் தனக்கு தேவையான செய்திகளை மட்டுமே பார்வையிட்டு அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் செய்திகளை பெறுவோரின்  நேரம் பெருமளவு மிச்சப்படுத்தப்படுகிறது .

 

 2. பரிமாற்றத் தன்மை

 

             இணையத்தளங்களின் பரிமாற்றத் தன்மை மற்றொரு குறிப்பிடத்தக்க பண்பாகும்.. இதழ்களைத் துய்ப்போர் தமது கருத்துக்களை உடனுக்குடன் இதழ் நிர்வாகத்தோடும்,சக பார்வையாளர்களோடும் பரிமாறிக் கொள்ள முடிகிறது .

 

    நிர்வாகமும் தம் செயல்பாடுகள் பற்றிய பின்னூட்ட க்கருத்துகளை உடனடியாகக்பெற முடிகிறது. துய்ப்போர்மற்றும் இதழ் நிர்வாகத்திடையே தொடர்பு எளிமைப் படுத்தப் படுவதால் இவ்விரண்டு நிலைகளுக்கும் இடையேயான உறவு வலுவடைகிறது.

 

    3.மக்கள் திரள் அழிப்பு 

 

              பிற இதழ்களில் ஊடகங்கள் நிலவியல் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளை அடைவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இணைய இதழ்களின் நவீன தொழில்நுட்பம் இத்தன்மையை அழிக்கிறது. .இணையத்தில் வெளிவரும் இதழ்கள் எவ்வித வேறுபாடுகளும் இன்றி உலகம் முழுவதும் சமகாலத்தில் சென்றடைகின்றன. இம் மக்கள் திரள் அழிப்பு (Demassification) இணைய இதழியலின் மற்றொரு தனி பண்பாகும் .

4.காலக் கட்டுப்பாடு அழிப்பு 

 

          ஊடக நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்ற காலத்தில் அல்லது நேரத்தில்தான் ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கத்தின் தகவலை பெற முடியும். சான்றாக,செய்தித்தாள்கள் காலைநேரம், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் நிகழ்ச்சிகளை வெளியிடுதல் ஆகிய செயல்பாடுகளை குறிப்பிடலாம். ஆனால் இணைய ஊடகம் இத்தகைய கால கட்டுப்பாட்டை தகர்த்துள்ளது....துய்ப்போருக்கு ஏதுவான எந்த நேரத்திலும் தேவையான தகவல்களைப் பெறமுடியும்.துய்ப்போரின் தகவல்பெரும் நேரத்தை ஊடக நிறுவனம் நிர்ணயித்தல் என்ற நிலைமாறி, துய்ப்போர் அவரவர் விரும்புகின்ற காலத்தை நிர்ணயிப்பது சாத்தியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முந்தைய கால இதழ்களையும் உடனடியாக திரைக்குக் கொண்டு வந்து பயனடைய முடிகிறது.

 

5. பன்முக ஊடகத் தன்மை 

          இணையமானது 

 

       தொலைத்தொடர்பு ஊடகங்களாக அஞ்சல் துறை தொலைபேசி தொலைநகல் மற்றும் மக்கள் தொடர்பு ஊடகங்களான வானொலி தொலைக்காட்சி பத்திரிகைகள் மற்றும் திரைப்படம் போன்ற அனைத்து ஊடகங்களின் சிறப்பு பண்புகளையும் ஒருங்கே பெற்று பன்முகத் தன்மையுடன் விளங்குகிறது. இணைய இதழில் பல்வேறு கூறுகளையும் தன்னுள் பெற்று திகழ்கிறது. இணையத்தின் மூலம் பெறப்படும் மின் அஞ்சல் குரல் அஞ்சல் மின்னட்டை குரல் அரட்டை இணைய தொலைபேசி மற்றும் ஒலி-ஒளி உத்திகள் ஆகிய அனைத்தும் இணைந்து இத்தகைய பன்முகத்தன்மைக்குக் காரணமாகின்றன.

 

தமிழ் இணையத் தளங்கள்

 

             தமிழின் முதல் இணைய தளமான கணியன்.டாட். காம் 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆறாம்திணை .டாட். காம், அம்பலம் டாட் காம் போன்ற இணைய இதழ்கள் உருவாக்கம் பெற்றன. இன்று இணையத்தில் எண்ணிலடங்கா தமிழ் இணையத்தளங்கள் உலகம் முழுவதுமான தமிழர்களை குறிவைத்து இயங்கி வருகின்றன. இணைய உலகில் தமிழ் மொழி உலக மொழிகள் உடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இத்துறையில் நாம் எந்த ஒரு ஐரோப்பிய நாட்டுக்கும் இணையாகவே இருக்கிறோம் என்கின்றனர் நிபுணர்கள்.

 

இணைய இதழ்களின் உள்ளடக்கமும் பண்புகளும்

 

         இணைய இதழ்களின் பொதுவான உள்ளடக்கங்களாக செய்திகள் ,கட்டுரைகள் ,கருத்துப்படங்கள் ,வினாவிடைகள், நேர்காணல்கள் ,ஜோதிடம், பரிசுப் போட்டிகள்கருத்துகணிப்புகள் ,மின்னஞ்சல் ,அரட்டை வாசகர் ,கருத்துக்கள், சிறுகதை ,கவிதை ,நகைச்சுவை த்துணுக்குகள் ,விளம்பரங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. இவற்றின் பண்புகள் பிற ஊடகங்களில் இடம்பெறும் இவை போன்ற பகுதிகளில் இருந்து சற்று வேறுபட்டவை.இப் பண்புகளை மூன்று வகைக்குள் அடக்கலாம்.

 

1.பொழுதுபோக்குத் தன்மை

 

        இணையத்தில் தகவல்கள் பெறும் நோக்குடன் வருவோரின் மனத்தை ச்சிறிது நிகழ்வு படுத்தும் நோக்குடன் இணைய இதழ்கள் பொழுதுபோக்குத்தன்மைக்கு அதிக இடம் அளிக்கின்றன.

 

2.விரைவு

 

    செய்திகளை வெளியிடுவது ,தேர்வு முடிவுகளை வெளியிடுவது ,வாசகர் ஊடகம் இடையேயான தகவல் தொடர்பு போன்ற கூறுகளில் ஊடகங்களைக் காட்டிலும் விரைவான சேவையை இணைய இதழ்கள் மூலம் பெற முடிகிறது .இணைய இதழ்கள் மீதான மக்களின் ஈர்ப்புக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

 

3. சுருக்கம்

 

     துய்ப்போர்நீண்ட நேரம் கணினி திரையின் முன்பு அமர்ந்து தகவல்களை பெறுவதில் உண்டாகும் சோர்வின் காரணமாக தகவல்கள் சுருக்கமாக அமைய வேண்டியது அவசியமாகிறது. எனவே செய்திகள் ,கதை ,கட்டுரை ,கவிதை போன்ற அனைத்தும்சுருங்கிய வடிவில் இருப்பது மிகவும் வேண்டப்படுகிறது .

 

   வர்க்கம் சார்ந்த உள்ளடக்க பண்புகள்

 

          ஒரு ஊடகத்தில் இடம்பெறும் உள்ளடக்க பகுதிகளை ஊடகத்தை நாடும் பயனீட்டாளர்களின் தன்மையைச் சார்ந்து அமையும் .இணையம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பான்மை மக்களைச் சென்றடையாதது ஊடகம்  .அதிவேகமாக வளர்ந்து வரும் ஊடகம் என்ற போதிலும் நடுத்தர வர்க்கத்துக்கு கீழே தான் அம்மக்களை எட்டுவதற்கு வெகுகாலம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழலிலேயே நாட்டின் பொருளாதார நிலை உள்ளது .தனிநபர் வருமானம் மாதமொன்றுக்கு 1300 ரூபாய்க்கும் குறைவாக இருப்பவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது உலக அளவிலான வறுமைக்கோடு வரையறை. 1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு எடுத்துள்ள கணக்கின் படி இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்களில் 87விழுக்காட்டினரதுபேரின் தனி நபர் வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 560 க்கும் குறைவு. இந்தியாவில் அனைத்து மக்களுக்குமான இணைய பயன்பாடு சாத்தியப்படுவது மிகவும் அரிதானது என்பதை இது உணர்த்துகிறது .

 

    தற்போது பொருளாதார அடிப்படையில் நடுத்தர உயர் நடுத்தர மற்றும் உயர்தர மக்களே இணையதளங்களை அதிகளவில் பார்வையிடுகின்றனர். அவர்களை ஈர்க்கும் வண்ணமாகவே இணைய இதழ்களின் உள்ளடக்கங்கள் விளங்குகின்றன .அவற்றில் இடம்பெறும் விளம்பரங்கள் இதற்கு சரியான சான்றுகளாக அமைகின்றன .இணைய இதழ்களின் தகவல் வெளியீட்டு உத்திகளான பக்கஅமைப்பு ,மொழிநடை ,படங்கள் போன்றவற்றிலும் இந்த வர்க்கம் சார்ந்த பண்புகள் வெளிப்படுகின்றன 

 

முடிவுரை

 

 இணையம் என்பது இருபதாம் நூற்றாண்டின் ராணுவ பயன்பாட்டிற்காக எதேச்சையாக பயன்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்பம். ஆனால் இத்தொழில்நுட்பம் 21ஆம் நூற்றாண்டின் தகவல் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது .பிற ஊடகத்துறைகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது மனிதர்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தகவல் தொடர்பு மேலும் துரிதப் படுத்தப் பட்டுள்ளது .அதற்கேற்பவே இணையத்தில் வலம் வரும் இதழ்களின் உள்ளடக்கப் பகுதிகளும் அமைகின்றன .இணையத்தால் ஊடகத்துறையின் பண்புகள் பெரிதும் மாற்றம் கண்டுள்ளன என்றாலும் ,இத்தொழில்நுட்பம் இந்திய மற்றும் தமிழ் சூழலில் அனைத்து மக்களையும் சென்று அடைவதில் கல்வி மற்றும் பொருளாதார தடைகள் இடையூறாக நிற்கின்றன. உயர்வகுப்பு மட்டுமே சென்றடையும் இணைய இதழ்களின் பண்பாடு அதற்கேற்பவே உள்ளது .தகவல் பெறும் உரிமை என்பது பொருளாதார வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பொதுவானது .இணைய தொழில்நுட்பம் பெருமளவு ஏற்படுத்தப்பட்டு அனைத்து விதமான மக்களையும் சென்றடையும் போது இணைய இதழ்களின் தன்மைகள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாக லாம். 

துணை நூல்கள்



  1. தமிழ் கம்ப்யூட்டர் -தமிழின் முதல் கணினி இதழ் சென்னை
  2. மணிமாறன், வ.யூனிகோடு 
  3. முரசு நெடுமாறன், அஞ்சல் வழி இணையம்
  4. சுந்தர், பா ,தமிழ்ப்பாவை