4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 டிசம்பர், 2022

கலம்பகமும் நந்திக்கலம்பகமும் - கு. தாரணி

 

லம்பகமும் நந்திக்கலம்பகமும்

கு. தாரணி,

ஆய்வியல் நிறைஞர்,

இலக்கியத்துறை,

தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்.

முன்னுரை

            தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய கலம்பகம் பற்றியும், கலம்பகத்தின் இலக்கணம் மற்றும் நூலமைப்பு பற்றியும் கலம்பக நூல்களுள் முதன்மை நூலாக விளங்கக்கூடிய நந்திக்கலம்பகம் பற்றிய செய்தியினையும், நந்திக்கலம்பகத்தின் சுருக்கத்தினைப் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.

சிற்றிலக்கியம்

            சிற்றிலக்கியம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ குறைந்து வருவது சிற்றிலக்கியம் ஆகும்.

இதற்கு இலக்கணமாகத் தண்டியலங்காரம் கூறுவது,

                        அறம்முதல் நான்கினும் குறைபாடு உடையது

                     காப்பியம் என்று கருதப்படுமே....”                                               (தண்டி – 10)

மேலும் முத்துவீரியம் இதனை,

அறமுத னான்கினுங் குறைபா டுடையது

  காப்பிய மென்று கருதப்படுமே.”                                              (மு.வீ-1267)                                                                                                           

                                                                       

காப்பியத்திற்கு இவ்வாறு இலக்கணங்கள் கூறப்படுகின்றது. காப்பியத்திற்குச் சிறப்பு இலக்கணமாகச் சுவாமிநாதம் கூறுவது

சொன்னவற்றிற் குறையிலுமாம், அறம்ஆதி நான்காய்ச்....     (சு.நா – 164) என்பதாகும்.

            சிற்றிலக்கியம் சிறிய இலக்கியம் எனப் பொருள்படுகிறது. சிற்றிலக்கியம் அளவில் அதாவது, பாடல் எண்ணிக்கையிலோ அல்லது அடிகளின் எண்ணிக்கையிலோ சுருங்கியதாக அமைகிறது. அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியே அமைகிறது. (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டும் அமைகின்றன). பாடப்பெறும் கடவுள், மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கிக் கூறப்பட்டிருக்கும்.

            சிற்றிலக்கியம் என்பதனுள் தொண்ணூற்றாறு வகையான இலக்கியங்கள் காணப்படுகின்றன என்று பொதுவாகக் கூறும் வழக்கம் உள்ளது. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்று கி.பி பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல் என்ற பாட்டியல் நூல் கூறுகிறது. இந்நூல்,

வானவர் ஏத்தும் மறையோர் முதலிய

  மக்களின் நோர்க்குத் தக்க தன்மையின்

  பிள்ளைக் கவிமுதல் புராணம்...”                                                 (பிர.– 1)

என்று இந்நூல் கூறுகிறது.

            (பிள்ளைக் கவி = பிள்ளைத் தமிழ் என்ற இலக்கியம்; தொகை = எண்ணிக்கை).

            அதாவது, பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியம் முதலாகப் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறு வகைப்பட்டது பிரபந்தம் என்பது இதன் பொருள் ஆகும். வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியிலும் தொண்ணூற்றாறு இலக்கிய வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.“சிவந்தெழுந்த பல்லவன் உலாஎன்ற நூலை இயற்றிய படிக்காசுப் புலவர் அந்நூலில்,

            தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான்”

என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றால், சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு என்று கூறப்படும் பொதுவான மரபு இருந்துள்ளது என்று தெரிகிறது.

கலம்பகம் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள்

            சங்க கால இலக்கியங்களுள் ஒன்றான உருத்திரங்கண்ணனாரால் இயற்றப்பட்ட பெரும்பாணாற்றுப்படையில் கலம்பகம் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

பல்பூஅ மிடைந்த படலைக் கண்ணி.”                                          (பெரும் – 174)

  (பல் பல; பூ பூக்கள்; மிடைந்து கலந்து)

என்று ஓர் அடி உள்ளது. இதற்கு பலவாகிய பூக்களால் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை (அ) பல பூக்களைக் கலந்து கட்டிய மாலை ஆகையால் கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார்.

            இப்பொழுதும் நாம் பல வகையான பூக்களைச் சேர்த்துக் கலந்து கட்டிய மாலையைக் கதம்பம் என்கிறோம். இதுவே ‘கலம்பகம்’ என்று வழங்கப்பட்டது எனலாம்.

களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்து                   

அலங்கலந் தொடையல்                                                                              (திரு.பள்ளி – 5)

என்று தொண்டரடிப் பொடியாழ்வார் தம் திருப்பள்ளியெழுச்சியில் வாக்கால் பன்னிறமுடைய, பன் மணமுடைய ஒரு மாலை கலம்பகம் என்று கூறுகிறார்.

            இலக்கண விளக்கப் பாட்டியல் கலம்பக இலக்கணத்தை

                      ஒருபோகு வெண்பாக் கலித்திறை உறமுன்...”      என  812ம் பாடலில்

கூறுகிறது.

            அகப்பொருள், புறப்பொருள் துறைகள், பாக்கள், பாக்களின் இனங்கள், மக்களில் பல்வகை இனங்கள், அவர்களின் தொழில்கள், அவர்களின் பண்புகள் இவை அனைத்தும் கலந்து அகத்தே வைத்திருப்பதனால் இதற்குக் கலம்பகம் என்னும் பெயர் பொருந்தி வருவதாக இலக்கண விளக்கப் பாட்டியல் கூறுகிறது. மூலமொருபோகு வெண்பாக் கலித்துறை ...” கலந்து பாடுவதே கலம்பகம் என்று நவநீதப் பாட்டியல் கலம்பகத்திற்கு வரையறை கூறுகிறது.

                         சொல்லிய கலம்பகஞ் சொல்லி லொருபோகு...” என பன்னிரு பாட்டியல் 213ம்

 பாடல் கூறுகிறது. பிரபந்த திரட்டு கலம்பகத்தினைப் பற்றி

                          வாகுதவம் வண்டமனை வண்பாண் மதங்குநல்...” என 32ம் பாடல் கூறுகிறது.

பிரபந்த மரபியல் கலம்பகத்தின் உறுப்புகளாக ஆர்புயம் தவம்மதங்கு அம்மானை காலம்...” 4 வது பாடலில் கூறுகிறது.   முத்துவீரியம் கலம்பகம் பற்றிவெண்பாக் கலித்துறை யோடொரு போகு...” 1041ம் பாடலில் கூறுகிறது.

கலம்பகம் சொல்லமைப்பு

கலம்பகம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டு அமைப்பு ஆகும். கலம்பு + அகம் = கலம்பகம் என்றும், கலம் + பகம் = கலம்பகம் என்றும் இவ்வாறு இருவழிகளில் கலம்பகம் என்னும் சொல்லைப் பிரிக்கலாம். பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே உள்ளே  கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகிறது என்பது முதல்வகைப் பிரிப்பிற்கான விளக்ககமாகும்.

            கலம் என்றால் பன்னிரண்டு என்று பொருள், பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கு பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும். எனவே,

                        12 + 6 = 18

            இந்த இலக்கிய வகையில்  பதினெட்டு உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது என்பது இரண்டாம் வகைப் பிரிப்பிற்கான விளக்கமாகும்.

            பல்வேறு பூக்களால் ஆன மாலையைக் கதம்பம் என்கிறோம். அதுபோலப் பல்வேறு உறுப்புக்களைக் கலந்து இயற்றிய நூல் கலம்பகம் என்று அழைக்கப்படுகிறது.

கலம்பக உறுப்புகள்

            கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகளாகக் குறிப்பிடப்படுபவை,

புயம், அம்மானை, ஊசல், யமகம், களி, மறம், சித்து, காலம், மதங்கி, வண்டு, கொண்டல், மருள், சம்பிரதம், தவம், பாண், ஊர்(குடி), தழை, இரங்கல் என இவை அனைத்தும் கலம்பகத்தின் உறுப்புகள் ஆகும்.

அகத்துறை, புறத்துறை உறுப்புகள்

            கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகள் பல தொல்காப்பிய அகத்திணை மற்றும் புறத்திணை பற்றிய குறிப்புகளில் சுட்டப்பட்டுள்ளன. இக்கலம்பக உறுப்புகள் அகத்துறை சார்ந்தவை என்றும் புறத்துறை சார்ந்தவை என்றும் இருவகையாகப் பகுக்கப்படுகின்றன.

அகத்துறை உறுப்புகள்

அம்மானை, ஊசல்,காலம்,வண்டு,கைக்கிளை,பாண்,தழை, இரங்கல், குறம், தூது

என்ற பத்தும் தொல்காப்பிய அகத்துறை சார்ந்தவை.

புறத்துறை உறுப்புகள்

இனி, மறம், புயம் என்று இவை மூன்றும் தொல்காப்பியப் புறத்துறை சார்ந்தவை.

இருபதிற்கும் மேற்பட்ட கலம்பக உறுப்புகள்

            கலம்பக இலக்கிய வகையின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களான பிரபந்த மரபியல், சிதம்பர மரபியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை ஆகியவை கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகளைச் சுட்டுகின்றன. ஆனால், இந்நூல்கள் சுட்டும் உறுப்புகளிடையே வேறுபாடுகள் காணப்படுகிறன.

            எனவே, அவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் கலம்பக உறுப்புகளாக இருபது உறுப்புகள் உள்ளமை புலனாகின்றது. அவை பின்வருமாறு,

            புயம், அம்மானை, ஊசல், களி, மறம், சித்து, காலம், மதங்கி, வண்டு, மேகம், சம்பிரதம், தவம், பாண், கைக்கிளை, ஊர், தழை, இரங்கல், தூது, குறம், தென்றல் என்று இருபதிற்கும் மேற்பட்ட கலம்பக உறுப்புகள் நமக்கு கிடைக்கின்றன.

கலம்பக நூலமைப்பு

கடவுளர்க்கு 100, முனிவர்க்கு 95, அரசர்க்கு 90, அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு -        50, வேளாளர்க்கு 30 என்னும் அளவில் கலம்பகப் பாடல்கள் அமைந்திருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இந்த அளவுகளை மீறியும் கலம்பகங்கள் பாடப்பட்டுள்ளன. நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால், அரசர் மீது பாடப்படும் கலம்பக நூல் 90 பாடல்கள் உடையதாக இருக்கவேண்டும். இதில் உள்ள அதிகப்படியான 54 பாடல்கல் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

கலம்பக நூலமைப்பு பற்றிப் பன்னிரு பாட்டியல், இலக்கண விளக்கம், பிரபந்த திரட்டு  போன்ற நூல்கள் கூறுகின்றன.

நந்திக் கலம்பகம் பற்றிய குறிப்பு

            கலம்பக இலக்கிய வகையில் முதல் நூல் நந்திக் கலம்பகம் ஆகும். இந்நூலின் காலம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் தெள்ளாறெறிந்த மூன்றாம் நந்திவர்மன் ஆவான். இந்நூலைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நந்திக் கலம்பகத்தினைத் தொடர்ந்து பல கலம்பக நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூலில் காஞ்சி, மல்லை (மகாபலிபுரம்), மயிலை (மயிலாப்பூர்), ஆகிய நகரங்கள் பற்றி சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளன.

நந்திக் கலம்பகத்தின் சுருக்கம்

            மூன்றாம் நந்திவர்மனின் தம்பி, நாட்டைத் தான் அடைய விரும்பினான். அணண்ணுக்குத் தமிழ்க் கவிதையின் மீதான ஆர்வத்தையும் விருப்பினையும் பயன்படுத்தி, புதுமையான இக்கலம்பகத்தைப் புலவர் ஒருவரால் பாடவைத்து, ஒரு பாடலை மட்டும் நந்திவர்மன் கேட்குமாறு செய்தான். அதன் சுவை அறிந்து நந்திவர்மன், மீதிப் பாக்களையும் கேட்கும் வெறிகொண்டவன் ஆனான். ஆனால் சந்தனக் கட்டைச் சிதை மேல் இருத்தி ஒவ்வொரு பாடலையும் கேட்கலாம் எனவும், பாடல் முடிந்தவுடன் சிதை மூட்டி எரிக்கப்படவேண்டும் எனவும் தம்பியின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு 99 பாடல்களையும் நந்திவர்மன் கேட்டான். பாடல் முடிந்தவுடன் சிதை தீப்பற்றி எரிந்தது. '100'ஆம் பாடலான இறுதிப் பாடலையும் கேட்க விரும்பினால், சிதையிலேயே நீ தங்க வேண்டும். நீ அதிலிருக்கும் போதே தீ சூழ்ந்து கொண்டு உன்னை எரித்துவிடும். 100வது பாடலையும் நீ கேக்க இசைகிறாயா?  என்றான் தம்பி.

            கவியார்வத்தில் இருந்த நந்திவர்மன் சிதை எரிவது பற்றிய கவலையில்லை; நான் நூறாவது பாடலைக் கேட்டே தீருவேன்என்றான்.

அந்த நூறாவது பாடல்,

வானுறு மதியைஅடைந்தது உன் வதனம்

 வையகம் அடைந்த்துன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்த உன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்

செந்தழல் புகுந்த்து உன் மேனி

யானும் என் கவியும் எவ்விடம் புகுவேம்

நந்தியே நந்தியா படனே.”                                                ( நந்.க. 100)

 என்பதாகும்.

            இக்கவிதையின் அழகைச் சுவைத்தவாறு கீழே இறங்காது சிதையிலேயே மெய் மறந்திருந்தான் நந்திவர்மன். சுற்றிச் சூழ்ந்த தீ, அவனைப் பற்றி எரித்தது எனக் கதை முடிகின்றது. இந்நூலின் முதற்பாட்டின் பகுதியை இரவில் தெருவில் பாடினான் ஒருவன் கேட்ட நந்தி, முழுதும் சொல்ல மறுத்த அவன்; தன்னை இன்னான் என்று அறிந்து கொள்ளாமல் இருக்கச் சுவரின் இருபக்கம் இருந்து, சுவரின் துளை ஒன்று இட்டு அதன் வழியாகச் சுவரின் மறுபக்கமிருந்த நந்திக்கு மீதிப்பாடலை உரைத்தான் என்றும் ஒரு கதையுண்டு.

பொள்ளா நுழைவழி தலைநீட்டும் புலவன்....” -                      (தொ. . ச)

என்ற பாடல், நந்திக் கலம்பகம் கேட்டு உயிர் துறந்த செய்தியை நாட்டுக்கு அறிவிக்கிறது.

கலம்பகத்தால் நந்தி மாண்ட கதை நாடறியும்.”

என்பதனால் இந்த அரிய செயல் அப்பொழுது நாடு முழுவதும் பேசப்பட்டுள்ளது என அறிகின்றோம்.

            நந்திக் கலம்பகப் பாடல்களில் சிலவற்றை மிகைப் பாடல்கள்என்று பிரித்துள்ளனர். ஆனால், எல்லாப் பாடல்களும் சுவை மிகுந்தவையே என்பர் சுவைஞர்கள். கற்கண்டில் எப்பகுதியிலிருந்தும் இனிப்பைத்தவிர வேறு எதுவும் வராதது போல, நந்திக் கலம்பகத்தின் எல்லாப் பாடல்களுமே சுவைக் கட்டிகள், மிகைப் பாடல்கள் என்று எதையும் விட வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது.

தமிழைத் தவிர, இப்படியொரு சந்தமும், பொருளும் பின்னிக் கிடக்கும் கவிதைகள் வடிவுபெற முடியுமா எனக் கற்போர்க்கு ஐயம் விளைகிறது. இது போன்ற சுவை மிக்க கவிதைகள் கொட்டிக் கிடக்கும் நூல் நந்திக் கலம்பகம் ஆகும்.

முடிவுரை

            சிற்றிலக்கியம் தொண்ணூற்றாறு வகையுண்டு, அவற்றுள் கலம்பகம் பற்றியும் கலம்பக நூல்களின் இலக்கண அமைப்பு மற்றும் நூலமைப்பு பற்றியும் கலம்பக நூல்களின் முதன்மையான நூலான நந்திக் கலம்பகம் பற்றிய குறிப்பும் நந்திக் கலம்பகத்தின் சுருக்கம் குறித்தும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

துணை நூல்கள்

 

1)    இளவரசு.சோம                                                      இலக்கணவரலாறு,

மெய்யப்பன் பதிப்பகம்,

சிதம்பரம்.

2)    சந்திரசேகரன்.இரா                                   தமிழ்ச்சிற்றிலக்கியங்கள்,

சாரதாபதிப்பகம்

சென்னை 2012

3)  சுப்பிரமணியன்..வே                                       தமிழ்இலக்கணநூல்கள்,

மெய்யப்பன்பதிப்பகம்,

சிதம்பரம் 2007.

4)    சிற்பி.பாலசுப்பிரமணியம்                        புதிய தமிழ் இலக்கியவரலாறு

(தொகுதி II),

சாகித்யா அகாதெமி,

புதுதில்லி 2013.