4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 டிசம்பர், 2022

சுப்ரமணிய பாரதியாரை (பாரதி) அறிவோம் - முனைவர் பீ. பெரியசாமி

 

சுப்ரமணிய பாரதியாரை  (பாரதி)  அறிவோம்

முனைவர் பீ. பெரியசாமி

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

 

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

 பாரதியின் நினைவலைகளைப் போற்றும் விதமாக அவரின் நாடகம் தங்கள் பார்வைக்கு….

ஜகத் சித்திரம் (சிறு நாடகம்)

காட்சி  - ஒன்று

இடம் - மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்.

நேரம் - நடுப்பகல்.

காக்கை யரசன் -- (கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த தெப்பமண்டபத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு சூர்யனை நோக்கிச் சொல்லுகிறான்:)

 “எங்கோ வாழ்! நீல மலைகள் நிரம்ப அழகியன. வானம் அழகியது. வான்வெளி இனிது. வான வெளியை மருவிய நின்னொளி இனியவற்றுள் எல்லாம் இனிது.

‘எங்கே,’ ‘எங்கோ,’ எனவும்; அன்றி ‘கிலுகிலு கிலுகிலு’ எனவும்; ‘கிக்கீ; கிக்கீ’ என்றும்; ‘கேக்க,’ ‘கேக்க’ ‘கேட்க, கேட்க’ எனவும்; ‘கெக்கெக்கே’ -- ‘குக்குக் குக்குக் குக்குக் குக்குக குக்கூவே!’ என்றும்; ‘கீச்கீச், கீச்கீச்,’ ‘கிசு, கிசு, கிசுகீச்’ என்றும்; ‘ரங்க, ரங்க’ -- என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும் குயில்களும், கிளிகளும், குலவுபல ஜாதிப் புட்களும் இனிய பூங்குர லுடையன. எனினும், இத்தனையின்பத் தினிடையே, உயிர்க் குலத்தின் உளத்தே மாத்திரம் இன்ப முறவில்லை. இஃதென்னே! -- காக்கா! காக்கா; எங்கோவாழ்!”

இனதக் கேட்டு, மற்றப் பக்ஷிகளெல்லாம் கத்துகின்றன. “ஆம், ஆம், ஆமாம், ஆமாம். ஆமாமடா! ஆமாமடா! ஆமாம். எங்கோ வாழ். எங்கோ வாழ். நன்றாக உரைத்தாய். மனந்தான் சத்துரு. வேறு நமக்குப் பகையே கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு, நம்மை வேரறுக்கிறது. அடுத்துக் கெடுக்கிறது.

மனந்தான் பகை.

அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டையாடுவோம் வாருங்கள்.”

காட்சி  - இரண்டு

வானுலகம் -- இந்திர சபை

தேவேந்திரன் கொலுவீற்றிருக்கிறான்.

தேவ சேவகன்:  தேவ தேவா!

இந்திரன்:  சொல்.

தேவ சேவகன்:  வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார். தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்.

இந்திரன்: வருக.

(நாரதர் பாடிக்கொண்டு வருகிறார்).

“நாராயண, நாராயண, நாராயண, ஹரி, ஹரி, நாராயண, நாராயண”

இந்திரன்: நாரதரே! நாராயணன் எங்கிருக்கிறான்?

நாரதர்: நீ அவனைப் பார்த்தது கிடையாதோ?

இந்திரன்:  கிடையாது.

நாரதர்: ஸர்வ பூதங்களிலும் இருக்கிறான்.

இந்திரன்: நரகத்திலிருக்கிறானா?

நாரதர்:  ஆம்.

இந்திரன்: துன்பத்தி லிருக்கிறானா?

நாரதர்: ஆம்.

இந்திரன்: மரணத்திலிருக்கிறானா?

நாரதர்: ஆம்.

இந்திரன்: உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந் தத்தின் துணிவு யாது?

நாரதர்:  எல்லா வஸ்துக்களும், எல்லா லோகங்களும், எல்லா நிலைமைகளும், எல்லாத் தன்மைகளும், எல்லா சக்திகளும், எல்லா ரூபங்களும், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.

இந்திரன்:  நீரும் கழுதையும் சமானந்தானா?

நாரதர்:  ஆம்.

இந்திரன்: அமிருத பானமும், விஷபானமும் சமானமா?

நாரதர்: ஆம்.

இந்திரன்: சாதுவும், துஷ்டனும் சமானமா?

நாரதர்: ஆம்.

இந்திரன்: அசுரர்களும், தேவர்களும் சமானமா?

நாரதர்: ஆம்.

இந்திரன்: ஞானமும், அஞ்ஞானமும் சமானமா?

நாரதர்:  ஆம்.

இந்திரன்: சுகமும், துக்கமும் சமானமா?

நாரதர்:  ஆம்.

இந்திரன்: அதெப்படி?

நாரதர்:  சர்வம் விஷ்ணுமயம் ஜகத் -- (பாடுகிறார்) நாராயண, நாராயண, நாராயண, நாராயண.

காட்சி - மூன்று

இடம்:  மண்ணுலகத்தில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு காளி கோயிலுக் கெதிரே சோலையில்.

கிளி பாடுகிறது:  தைர்யா, தைர்யா, தைர்யா -- தன்மனப் பகையைக் கொன்று தமோ குணத்தை வென்று உள்ளக் கவலை யறுத்து ஊக்கந் தோளிற் பொறுத்து மனதில் மகிழ்ச்சி கொண்டு மயக்க மெலாம் விண்டு சந்தோஷத்தைப் பூண்டு தைர்யா, ஹுக்கும், ஹுக்கும்! ஹுக்கும், ஹுக்கும்! ஆமடா, தோழா! ஆமாமடா, எங்கோவா, எங்கோவா! தைர்யா, தைர்யா, தைர்யா!

குயில்கள்:  சபாஷ்! சபாஷ்! சபாஷ்!

குருவிகள்: ‘டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்’, ‘டிர்ர்ர்ர்’

நாகணவாய்:  ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ,

குருவிகள்: சிவ, சிவ, சிவ, சிவ, சிவசிவா, சிவசிவா, சிவசிவா.

காக்கை: எங்கோ வாழ்! எங்கோ வாழ்!

கிளி:  கேளீர், தோழர்களே! இவ்வுலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை.

காக்கை: அக்கா! அக்கா! காவு! காவு!

குருவி: கொட்டடா! கொட்டடா! கொட்டடா!

கிளி:  ஹுக்குக்கூ!

கிளி:  காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை.

அணிற் பிள்ளை:  ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும்.

பசுமாடு:  வெயிலைப்போல் அழகான பதார்த்தம் வேறில்லை.

அணில்: பசுவே, இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்குப் புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே உன் கண்ணைப் போல் அழகிய பொருள் பிறிதொன்றில்லை.

நாகணவாய்: டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை.

எருமை மாடு: பக்ஷி ஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும், ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே? இதன் காரணம் யாது?

நாகணவாய்: டுபுக்! வெயில் காற்று, ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக்காட்டிலும் எங்களுக்கதிகம். எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனிதஜாதியார்களுக்குள் இருப்பதைக்காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சு மொழிகளுமாகக் காலங்கழிக்கிறோம். இருந்தாலும், கிளியரசு சொல்லியதுபோல், காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம் வாருங்கள். அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.

மற்றப் பக்ஷிகள்:  வாருங்கள், வாருங்கள், வாருங்கள் துயரத்தை அழிப்போம், கவலையைப் பழிப்போம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்.

காட்சி - நான்கு

இடம்: கடற்கரை.

நேரம்:  நள்ளிரவு; முழுநிலாப் பொழுது.

இரண்டு பாம்புகள் ஒரு பாலத்தடியே இருட் புதரினின்றும் வெளிப்பட்டு நிலா வீசி ஒளிதரும் மணல்மீது வருகின்றன.

ஆண் பாம்பு: உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது. உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில்பட்ட புழுவைப் போலே துடித்துக் கொண்டிருக்கிறது.

பெண் பாம்பு:  உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது. உன்னால் என் மனம் தழலிற்பட்ட புழுவைப்போல் இடையறாது துடிக்கிறது.

ஆண் பாம்பு:  நான் உன்னைப் பகைக்கிறேன்.

பெண் பாம்பு: -- நான் உன்னை விரோதிக்கிறேன்.

ஆண் பாம்பு:  நான் உன்னைக் கொல்லப்போகிறேன்.

பெண் பாம்பு: நான் உன்னைக் கொல்லப்போகிறேன்.

ஒன்றையொன்று கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன.

காட்சி  - ஐந்து

இடம் - கடற்கரை

தேவதத்தன் என்ற மனித இளைஞன்: -- நிலா இனியது. நீல வான் இனியது. தெண்டிரைக் கடலின் சீர், ஒலி இனிய; உலகம் நல்லது. கடவுள் ஒளிப்பொருள். அறிவு கடவுள்; அதனிலை மோக்ஷம். விடுதலைப் பட்டேன். அசுரரை வென்றேன். நானே கடவுள். கடவுளே நான். காத லின்பத்தாற் கடவுள் நிலை பெற்றேன்.

பார்வை

1.     https://www.itstamil.com/subramanya-bharathi.html

2.     https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5._%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)