4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 பிப்ரவரி, 2023

மாணிக்கவாசகர் பக்தி இலக்கியங்களில் வெளிப்படும் நாட்டார் இசைமரபு - செல்வி சிவோகா சிவலிங்கம்,

 

மாணிக்கவாசகர் பக்தி இலக்கியங்களில் வெளிப்படும் நாட்டார் இசைமரபு

                                         செல்வி சிவோகா சிவலிங்கம்,

                                         இளங்கலை மாணி,

                                         மட்டக்களப்பு, இலங்கை.

                                              

 முன்னுரை

    இசை உள்ளத்திற்கு இதம் அளிப்பதுடன் உள்ளத்தில் இறை உணர்வையும் ஏற்படுத்தவல்லது. “மௌனம் முழுமையாக ஆழ்ந்துவிட்ட நிலையில் வெளிக்கொணர முடியாத உணர்வுகளை, கருத்துக்களை ஓரளவேனும் வெளிக்காட்டக் கூடிய ஊடகம் இசையாகும்” என அட்டஸ் குறிப்பிடுகின்றார்.

 நல்ல இசை என்பது இலகுவாக செவிவழி புகுந்து விடுகின்றது மிகுந்த சிரமத்துடன் தான் நினைவிலிருந்து மறைகின்றது” என்ற தோமஸ் பீக்சாம் கருத்து நாட்டார் இசைக்கும் பொருத்தமுடையது. வட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் “துன்பக்கடலை தாண்டும் போது தோணியாவது கீதம்” என்கிறார். இத்தகைய சிறப்புமிக்க இசையினை நாட்டார் இசை, கர்நாடக இசை எனப் பலவகைப்படுத்தலாம்.

  நாட்டுப்புறங்களில் வளர்ச்சி பெற்ற நாட்டார் இசை, அச்சமூகத்து மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக காணப்படுகின்றது. உயர்கலை அல்லது செம்மைப்படுத்தப்பட்ட கலை என்ற நிலையிலிருந்து ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற கலைகள் நாட்டார் கலைகளின் அம்சங்களை உள்வாங்கி பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்துள்ளன. நாட்டார் கலையின் பெருமைகள் அனைத்தும் நாட்டுப்புற மக்களையே சாரும். பக்தி ஒன்றே தன்னைப் பிறவிப் பிணியிலிருந்து நீக்க முடியும் என்ற நம்பிக்கை நாட்டுப்புறச் சமுதாயத்தினரிடம் காலம் காலமாக இருந்து வருகின்றது.

  இதனை நன்றாக உணர்ந்த மாணிக்கவாசகர் தமது பக்தி இலக்கியங்களில் நாட்டார் இசையைப் பயன்படுத்தியுள்ளார். இவருடைய பனுவல்களான திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையில் அடங்குகின்றன. பக்தி இசைமரபில் மாணிக்கவாசகரின்  இலக்கியங்கள் தனித்துவமான இடத்தினை வகிக்கின்றன. இதனை மேல்வரும் கருத்துக்கள் உறுதி செய்கின்றன. “ திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”  “எலும்பையும் உருக்கும் ஆற்றல் கொண்டது திருவாசகம்” 

 திருவாசகப் பாடல்களைப் பலர் பாராட்டியுள்ளனர். இராமலிங்க அடிகள் கீழ்வருமாறு சிறப்பித்துள்ளார். “  வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை,

 “நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

 தேன் கலந்து பால்கலந்து செழுங்களித்திஞ் சுவைகலந்தென்

 ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

  மாணிக்கவாசகரின் திருவாசகம் இசையைப் போற்றி, இறைவனை நினைத்து உருகிப் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். இளம் பெண்கள் ஆடிப்பாடும் விளையாட்டைக் கொண்டு நாட்டார் பாடல் அமைப்பில் பாடியுள்ளார். திருஅம்மானை, திருப்பொன்னூஞ்சல், திருக்கோத்தும்பி, திருத்தௌ;ளேணம், திருச்சாழல், திருபொன்னூஞ்சல், திருவெம்பாவை போன்றவற்றில் நாட்டார் இசை அம்சங்களைக் காணலாம்.

திருவம்மானை

 திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவம்மானையிலும் நாட்டார் இசை பற்றிய அம்சங்களைக் காணமுடிகிறது. மகளிர் விளையாடும் விளையாட்டுக்களில் ஒன்றாக அம்மானை ஆடலைக் குறிப்பிடலாம். இப்பகுதியில் 20 பாடல்கள் காணப்படுகின்றன. பாடல்கள் ஆறடித் தரவுக் கொச்சகக் கலிப்பாக்களால் அமைந்துள்ளன.

 கழற்சிக்காயைப் பயன்படுத்தியோ அல்லது வெள்ளி, பொன் போன்றவற்றால் செய்யப்பட்ட அம்மானைக் காயைப் பயன்படுத்தியோ இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட இளம் பெண்கள் ஆடுவதற்கு ஏற்ற பாடல்கள் அம்மானைப் பாடல்களாகும். மகளிர் மூவர் சேர்ந்து பாட்டுடைத் தலைவனது புகழையும், அழகையும், ஆற்றலையும், பிற சிறப்புக்களையும் வியந்து பாடிக் கொண்டு அம்மானை ஆடுவர். ஒருத்தி ஒன்று சொல்லுவதும் மற்றொருத்தி அது தொடர்பாக சந்தேகத்தை எழுப்புவதும், அடுத்தவர் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதுமாய் பாடல்களைப் பாடுவர். இப்பகுதி அம்மானை விளையாட்டில் சுவை நிரம்பியதாகும்.

  இச் சுவையில் ஈடுபாடு கொண்ட மாணிக்கவாசகர், இறைவன் அவருக்கு கொடுத்த பேரானந்தத்தை வெளிப்படுத்த திருவம்மானைப் பாடல்களை அமைத்துள்ளார். தன்னைச் சிறுமியாகப் பாவனை செய்து கொண்டு பாடியுள்ளார்.

“வாரீவந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்

தானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய

தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு

ஊன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து

தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த

வான் வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானை”(பாடல் - 4)

திருப்பொன்னூஞ்சல்

 “பொன்னூஞ்சல்” என்பது அழகிய ஊஞ்சல் அல்லது தெய்வச் சிறப்புடைய ஊஞ்சல் எனப் பொருள்படும். பொன்னூஞ்சற் பாடல்கள் தரவு கொச்சக் கலிப்பாவால் அமைந்துள்ளன. மகளிர் ஊஞ்சலில் அமர்ந்து இறைவனின் புகழைப் பாடிக் கொண்டு ஆடுவதாக திருவாசகப் பொன்னூஞ்சல் பகுதி அமைந்துள்ளது.

 இதனை “அருட்சக்தி இருந்தாடத் தாலாட்டு” என்றும் கூறுவர். ஊஞ்சலில் அருட்சக்தி வீற்றிருப்பதாகவும், மகளிர் அருட்சக்தியுடன் தலைவனது புகழைப் பாடுவதாகவும் கூறுவர். மகளிர் இறையருளோடு கலந்து சுத்திபெற இறைவன் புகழையும் சிறப்பையும் பாடும் போது நாட்டார் இசை வெளிப்படுவதைப் பாடல்களில் காணலாம்.

“சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாரா யணனறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு

ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருட்டாளிணை பாடி

போவார் வேற் கண்டிட வீர் பொன்னூஞ்சல் ஆடாமோ”(பாடல் - 1)

திருச்சாழல்

  திருச்சாழல் என்பது இருபகுதியினர் சேர்ந்து விளையாடும் விளையாட்டாகும். ஒருத்தி பாட்டுடைத் தலைவனது புகழையும், அழகையும், அணியையும் பற்றிக் கேட்க, அடுத்தவள் தோள்வீசி நின்று விடைகூறுவதாக அமையும் விளையாட்டாகும். இவ்விளையாட்டை “மகளிர் கைகொட்டிச் சிரித்து பேசும் விளையாட்டு” என்று மகாவித்துவான் ச.தண்டபாணிதேசிகர் கூறுகிறார்.

  பாடல்கள் “சாழலோ” என்று நிறைவு பெறுகின்றன. தரவுக் கொச்சகக் கலிப்பாவால் திருவாசக திருச்சாழல் பகுதி அமைந்துள்ளது. இறைவனுடைய அருட்சக்திகளை உயிர்களுக்கு எடுத்துக்கூற திருச்சாழலை அமைத்துள்ள மாணிக்கவாசகர் அதில் நாட்டார் இசையைப் பயன்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும். நாட்டார் இசையைக் கையாண்டுள்ளதனால் சாதாரண மக்களும் திருச்சாழலை விளங்கிக்கொள்ள முடிந்துள்ளது.

“ கோலால மாகிக் குரை கடல்வா யன்றெழுந்த

ஆலாலமுண்டான் அவன் சதுர்தா னென்னேடி

ஆலால முண்டலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட

மேலாய தேவரெல்லாம் விடுவர்காண் சாழலோ”(பாடல் - 8)

திருப்பூவல்லி

 பூவல்லி கொய்தல் என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுக்களில் ஒன்று. பூஞ்சோலையில் பூங்கொடியிலுள்ள பூக்களை இள மங்கையர் கூடிப் பாடிக் கொண்டு பூப்பறிப்பர். இசையோடு பறித்த பூக்களைத் தம் தலையிலும் தலைவன் தலையிலும் சூடுவர். மாணிக்கவாசகர் தன் கருத்துக்களை திருப்பூவல்லி எனும் பகுதியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள் தரவு கொச்சகக் கலிப்பாவில் அமைந்து நாட்டார் இசை அம்சங்களைப் பெற்றுள்ளன.

 பூவல்லியின் சந்த அமைப்பு மாணிக்கவாசகரைக் கவர, இறைவனது பெருமைகளைக் கூற அவர் திருப்பூவல்லியினை அமைத்துள்ளார். இப்பகுதியில் 20 பாடல்கள் காணப்படுகின்றன. பாடல்கள் இறுதியில் “பூவல்லி கொய்யாமோ” என்று அமைந்துள்ளன. இவ்வாறு நிறைவு பெறுவதினால் திருப்பூவல்லியில் நாட்டார் இசையின் சாயலைக் காணலாம்.

“ தேனோடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்

ஊனாடி நாடிவந்து உள்புகுந்தான் உலகர்முன்னே

நானாடி ஆபுநின்று ஓலமிட நடம்பயலும்

வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ(பாடல் - 5)

திருப்பொற்சுண்ணம்

  “திருப்பொற்சுண்ணம்” என்னும் பகுதியிலும் நாட்டார் இசை இடம்பெற்றுள்ளது. “இறைவனது சிலையை நீராட்டுவதற்கு தேவையான சுண்ணத்தை, உரலில் இட்டு இடிக்கும் போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடும் பாடல்களைக் கொண்டது திருப்பொற்சுண்ணப் பகுதியாகும்” இறைவனது எல்லையில்லாப் புகழை உலக்கைப்பாட்டாகப் பாடிக்கொண்டு மகளிர் இடிப்பார்கள். இப்பாடல்கள் வள்ளைப்பாட்டு, உலக்கைப்பாட்டு, உரல்பாட்டு, அவல்இடிப்பாட்டு போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

 பொற்சுண்ணம் என்னும் பெயரை முதன்முதலில் இலக்கியத்துறையில் மாணிக்கவாசகர் அறிமுகம் செய்துள்ளார். இது அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் என்னும் பாவகையைச் சேர்ந்த 20 பாடல்களைக் கொண்டுள்ள பகுதியாகும். விருத்தங்கள் வெண்தளைத் தழுவி அமைந்துள்ளன.

“ கைவளை, தோள்வளை என்பன ஒலிக்க, பக்தர் கூட்டம் சத்தமிட, கோடுகளையுடைய வளையல்கள் ஒலிக்க, தோள்கள், தலைகள், நெருங்கி அஞ்சலி செய்வோம், வையகம் உரலாக மகாமேருவை உலக்கை ஆக்கி உண்மை என்னும் மஞ்சளை இட்டு திருப்பெருந்துறையில் இருக்கும் இறைவனது திருவடிகளைப் பாடிப்பாடி செம்பொன் மயமான உலக்கையை வலக்கையிற் பிடித்து தலைவனாகிய சிவனது திருமுழுக்கின் பொருட்டு வாசனைப் பொடியை இடிப்போம்” இவ்வாறு பாடப்பட்டதே “திருப்பொற்சுண்ணம்” எனும் பகுதியாகும்.

“தேனக மாமலர்க் கொன்றை பாடிச்

சிவபுரம் பாடித் திருச்சடை மேல்

வானக மாமதிப் பிள்ளை பாடி

மால்விடை பாடி வலக்கை யேந்தும்

ஊனக மாமழுச் சூலம் பாடி

உம்பரும் இம்பரும் உய்யவன்று

போகை மாக நஞ் சுண்டல் பாடிப்

போற்றிச்சுண்ணம் இடித்து நாமே” ( பாடல் - 17)

திருக்கோத்தும்பி

 திருவாசகத்தின் பத்தாவது பகுதியாக “திருக்கோத்தும்பி” அமைந்துள்ளது. இப் பகுதியானது இறைவனைப் போற்றும் வகையில் அமைந்திருப்பதுடன் நாட்டார் இசை நிரம்பியதாகவும் காணப்படுகின்றது. நாலடி தரவுக் கொச்சக் கலிப்பா எனும் பாவகையில் அமைந்துள்ளது.

“ தும்பி பறத்தல்” என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுக்களில் ஒன்றாகும். மலர்களில் தேன் உண்டு களிப்புற்ற ராசா வண்டானது, மகிழ்ச்சியை தேன் நிறைந்த மலரைச் சுற்றித் திரிந்து வெளிப்படுத்தும், அதுபோலவே இளம் பருவ பெண்கள் மகிழ்ச்சியோடு ஒருவருக் கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு சுற்றி விளையாடுவர். இவ்வாறு விளையாடும் பொழுது பாடல்களைப் பாடுவது வழக்கம்.

 மாணிக்கவாசகர் தமக்கு கிடைத்த சிவபோதத்தை வண்டாக உருவகித்து மனக்கலக்கம் நீங்க வண்டினை இறைவனிடம் தூதனுப்புகிறார். இதனை “உயர் போதமொரு வண்டாகச் சித்த விகாரத் தூது செப்பிவிடல் கோத்தும்பி” என திருவாசகவுண்மைப் புலப்படுத்துகின்றது. எனவே இப்பகுதியை வண்டுவிடுதூது என்றும் கருதலாம். வண்டினைத் தூதனுப்புவது போலப் பாடப்படுவதனால் திருக்கோத்தும்பியில் நாட்டார் இசையின் பிரதிபலிப்புக்களைக் காணமுடிகிறது.

 சீர்காழித் தாண்டவராயர் “ திருக்கோத்தும்பி” பற்றி பின்வருமாறு கூறுகிறார். “சிவானுபவம் பெற்ற அடியவர்கள் ‘எனக்கு கிடைத்தது, உனக்கு கிடைத்தது’ என்று ஒருவருக்கொருவர் மடிபிடித்துக் கொண்டு வண்டு சுழல்வது போலச் சுற்றும் விளையாட்டு” என்கிறார்.

“நானார் என் னுள்ளம் ஆர் ஞானங்களார் என்னை யாரறிவா

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனா ருடை தலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றுதாய் கோத்தும்பி”(பாடல் -2)

திருத்தெள்ளேணம்

  “திருத்தெள்ளேணம்” எனும் திருவாசகப் பகுதி நாட்டார் இசையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருவாசக உரையாசிரியர் திரு.கா.சுப்ரமணியப்பிள்ளை 

“திருத்தொள்ளேணம் என்பதை மணலை இட்டுத் தௌ;ளிக் கொட்டி விளையாடும் விளையாட்டைக் குறிக்கும் என்கிறார்” இப்பகுதியில் அமைந்துள்ள பாடல்கள் “ தெள்ளேணம் கொட்டாமோ” என நிறைவுறுவதைக் காணலாம். நாலடி தரவுக் கொச்சகக் கலிப்பாவினால் பாடல்கள் அமைந்துள்ளன.

“ தெள்ளேணம்” என்பது ஒரு வகையான பறையைக் குறிக்கும். பருவ மகளிர் பலர் சேர்ந்து தமக்குப் பிடித்த இசைப் பாடலைப் பாடிக்கொண்டு சிறுபறை கொட்டி விளையாடுவர். இவ்விளையாட்டில் பாடுதலும், பாடல் சீருக்கேற்ப தாளத்துடன் , பறையைக் கொட்டுதலும் இடம்பெறும்.    

நவநீத கிருஸ்ணபாரதியார் ‘திரு’ என்பது தெய்வத்தையும், ‘தெள்’ என்பது தெளிந்த ஓசையையும் ‘ஏணம்’ என்பது மானையும் குறிக்கும் என்கிறார்.

  சிவனது புகழ்கள் பலவற்றை பாடல்கள் மூலம் திருத்தௌ;ளேணத்தில் மாணிக்கவாசகர் வெளிப்படுத்தியுள்ளார். இறைவனது குணம், நலம், ஆடல், பாடல் முதலியவற்றை புகழ்ந்து மகளிர் தெள்ளேணம் கொட்டுவர்.

“ கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்

புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி

நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்து நெஞ்சம்

சினவேற்கண் நீர்மல்கத் தௌ;ளேணம் கொட்டாமோ”( பாடல்-10)

திருவுந்தியார்

   “திருவுந்தியார்” எனும் பகுதியிலும் மாணிக்கவாசகர் நாட்டார் இசையைக் கையாண்டுள்ளார். “உந்திபற” என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுக்களில் மறைந்த போன விளையாட்டாகும். “கைகளிரண்டையும் மேலே தூக்கி இருபுறமும் நீட்டி வானத்தில் பறப்பது போல இருகால்களை சேர்த்து பெருவிரல் நுனியில் நின்றுகொண்டு மகளிர் பாடி ஆடும் ஓர் ஆட்டமே உந்திபறத்தல்” ஆகும்.

 திருவாசகத்திலுள்ள திருவந்தியார் எனும் பகுதியில் கலித்தாழிசையில் அமைந்த 20 பாடல்கள் காணப்படுகின்றன. ஜி.வரதராஜர் உந்திபறத்தல் எனும் விளையாட்டில் “பொருளமைத்து உந்திபற என்று முடியும் பாட்டுக்களைப் பாடுவார்” என்று குறிப்பிடுகிறார். இதனை கா. சுப்பிரமணியப்பிள்ளை “கறங்கு போலக் கையில் நின்று மேலொன்றை எறிந்து விளையாடும் விளையாட்டு” என்கிறார்.

“ வளைந்தது வில் விளைந்தது பூசல்

உளைந்தன முப்புரம் உந்தீபற

ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற”(பாடல்-1)

“பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட

கோலச் சடையற்கே உந்தீபற

குமரன்றன் தாதைக்கே உந்தீபற”(பாடல்-17)

“தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்

ஈரைந்தும் இயற்றவா றுந்தீபற

இருபதும் இற்றதென் றுந்தீபற”(பாடல்-19)

திருவெம்பாவை

  திருவாசகத்தின் 7ஆம் பகுதியாக  திருவெம்பாவை அமைந்துள்ளது. திருவெம்பாவை பாடல்கள்  “பாவாய்” என முடிவதைக் காணலாம். ஓவ்வொரு பாடலிலும் 4 சீர்கள் கொண்ட 8 அடிகள் காணப்படுகின்றன. வெண்டளையால் அமைந்த தரவுக் கொச்சக் கலிப்பாக்களில் பாடல்கள் அமைந்துள்ளன.

பாவை நோம்பிற்காக இளம் பருவக் கன்னியர் நீராடச் செல்வர், வைகறைப் பொழுதில் நீராடச் செல்லும் போது தம் தோழியரை “உன் இல்லத்தின் கதவம் திறவாய்” என்று அழைக்கின்றனர். “கோயிலுக்கு வா என்றழைத்து உடன் செல்கின்றனர்” அவ்வாறு தோழிகளை அழைத்துச் செல்லும் போது பக்தி உணர்வுடன் பாடிய பாடல்கள் பாவைப் பாடல்கள் ஆகும்.

“காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோழை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலமாடி

வேதப் பொருள்பாடி அப் பொருளா மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ் கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி யாடேலே ரெம்பாவாய்”(பாடல் -14)

இசைக்கருவிகள்

 மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் நாட்டார் இசைக்கருவிகளைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெறுகின்றன. சங்கு, சிலம்பு, முரசு, பறை, துடி போன்ற இசைக் கருவிகளின் பெயர்கள் திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவெம்பாவையில் நாட்டார் இசைக்கருவி பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

“கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு”

“முன்பால் முழங்கும் முரசியம்பாய்……”

“நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்…..”

“முரசெறிந்து மாம்பெரும் கருணையின் முழங்கி….”

“துடி கொள் நேரிடையாள்”                                               

“சங்கு” எனும் இசைக் கருவியைப் பற்றிய குறிப்புக்களைக் கீழ்வரும் பாடல் வரிகளில் காணலாம்.

“சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை

தழைப்பன”

“இயம்பின சங்கம் இயம்பும்

வெண்சங்கு”

பறை பற்றிய குறிப்பு கீழ்வரும் பாடலில் இடம்பெற்றுள்ளது.

“பெருந்துறைக் கோன் முன்பால்

முழங்கும் முரசியம்பாய, அன்பால்

பிறவிப்பகை கறங்கப் பேரின்பத்

தோங்கும் பருமிக்க நாதப்பறை”       

திருவாசகத்தில் சிலம்பொலி பற்றிய குறிப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

“மேனிகாட்டி என்னைப் பணி கொண்டாய்

வாதவூரினில் வந்தினி தருளிப்

பாதச் சிலம்பொலி காட்டிய”  

கீர்த்தித் திருவகவல்

 “கீர்த்தித் திருவகவல்” திருவாசகத்தின் ஒரு பகுதியாகும். இது இறைவனது கீர்த்திகளைப்பாடும் அகவற்பாட்டு வடிவில் அமைந்துள்ளது. மேற்கூறப்பட்ட சிலம்பு, பறை போன்ற இசைக் கருவிகள் இப்பாடற் பகுதிகளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். திருச்சதகம் என்னும் பகுதி இசைப்பாடல்களுக்கு என இயற்றப்பட்டதாகும்.

முடிவுரை

 சிறப்புமிக்க திருவாசகப் பகுதிகள் நாட்டார் இசை மரபை அதிகம் பின்பற்றியுள்ளதைக் காணலாம். இதற்குச் சான்றுகளாக திருவாசகப் பாடல்களும், அவற்றில் காணப்படும் நாட்டார் இசைக் கருவிகள் பற்றிய குறிப்புக்களும் அமைகின்றன.

 தொகுத்து நோக்குமிடத்து, உரையாடல் வடிவில் அமைந்த தன்மையிலும் ஊஞ்சல் பாடல்களாகவும் தூதுப் பாடல்களாகவும் விளையாட்டுப் பாடல்களாகவும் அமைந்த வடிவிலும் கேள்விக்குப் பதில் உரைப்பதாய் அமைந்த விதத்திலும் கூட்டுப் பணிகளின் போது மகளிரால் பாடப்படும் தன்மையிலும் கன்னிப் பெண்கள் பலர் சேர்ந்து இசைக்கும் பாங்கிலும் உடலை அசைத்து நாட்டார் இசைக் கருவிகளால் இசை எழுப்பி பாடி ஆடுவதாய் அமைந்த வகையிலும் மற்றும் பாமரர் நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் பறைசாற்றுவதாய் அமைந்த தன்மையிலும் மாணிக்கவாசகர் பக்தி இலக்கியங்களில் நாட்டார் இசைமரபானது வெளிப்படுவதைக் காணலாம்.

உசாத்துணை நூல்கள்

01.           அறந்தை மணியன், 2004, தமிழ் இசை மரபு, கலைஞன் பதிப்பகம்.

02.           அப்புத்துரை.சி, 2003, திருவாசக அமுதம், பண்டிதர் சி. அப்புத்துரை பவளவிழாச் சபை.

03.           அரங்க.இராமலிங்கம், வேல்காரத்;திகேசு, 2004, திருவாசக ஆய்வுமாலை, கங்காராணி பதிப்பகம்.

04.           அண்ணாமலை.மு, 2000, திருவாசகம் தெளிவுரை, குமரன் பதிப்பகம், சென்னை.

05.           கதிரேசச் செட்டியார்.மு, 1953, திருவாசகம் - திருவெம்பாவை, பாண்டியன் அச்சகம், சிதம்பரம்.

06.           http://inioru.com

07.           http://www.shivam.org

08.           http://www.keetru.com

09.           http://temple.dinamalar.com