4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 பிப்ரவரி, 2023

அறமென்னும் நீதி எத்தகையது...? - மைத்திரி அன்பு

 

     

அறமென்னும் நீதி எத்தகையது...?

 மைத்திரி அன்பு

காஞ்சிபுரம்

          அன்பு நீதிக்கு உயிருட்டும். நீதியைத் தூண்டும். நீதியைக் கண்டுபிடிக்கும். சீர்ப்படுத்தும். உயர்த்தும். அதைக்கடந்தும் நிற்கும். அன்பு நீதியை தவிர்ப்பதில்லை. மாறாக உறிஞ்சிக் கொள்வதுமில்லை. அவ்வாறே அன்பு நீதியை வேறொன்றால் இட்டு நிரப்புவதுமில்லை. வேறாக அதற்கு முதலிடம் தருகிறது. நீதி - அன்புக்கு குரல் கொடுக்கிறது. ஏனேனில் அன்பு, உண்மை, தர்ம சிந்தனை என்பவை நீதியின்றி ஒருபோதும் நிலைத்திருக்காது”                                        

                                                   - போப் ஜான்பால்

 

                            ‘அறம்’ என்ற சொல் ஆழ்ந்த, செறிந்த, நுணுக்கமான பொருள் உடையது. ஒழுக்க நெறிகளுக்கு உரிய விதிமுறைகளின் தொகுப்பாக ‘அறம்’ ன்னும் சொல் பொதுவாக வழங்கப்பெறுகிறது. ‘அறு’ என்னும் வினைச்சொல்லின் அடிப்படையில் உதித்ததே அறமாகும். அறு’ என்பதற்கு அறுத்துச்செல்’ வழியை உண்டாக்கு’ வழியை உருவாக்கும் முறை’ என்றெல்லாம் விரிவுப்படுத்தி பொருள் உரைக்கலாம். நீதி, கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம்’ என்னும் பரிமாணங்களிலும் அறம்’ என்ற சொல் வழங்கப்பெறுகிறது.

                            சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம்’ என்னும் சொல்லிற்கு, மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதி/ முழுநிறை, வடிவம் என்று பொருள் சொல்லப்படுகிறது. “பிறவிதோறும் மனிதனைப் பற்றிக்கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்”1 என்ற ஆன்மீக விளக்கம் இதற்குத் துணைநிற்கிறது. மேற்கண்ட அறம்’ குறித்த விளக்கங்களோடு அறமென்னும் நீதி எத்தகையது என்ற தேடலைச் சூழலியலோடு இனி ஆராயலாம்.

            முதலாவதாக நீதி’ என்பது எது?  அதை முழுமையாக விளக்க முடியுமா..? அல்லது அதனைப் புரிந்துகொள்வது எவ்வாறு..? நீதிக்கு எதாவது அடிப்படை நோக்கங்கள் இருக்கின்றதா..? மனித உரிமைக்கும் நீதிக்கும் மிகநெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா...? ன்னும் கேள்விகளுக்கு விடை தேடுவது அவசியமாகிறது.

நீதியின் வரையறைகள்

            பொதுவாக நீதியைப் பற்றிய கருத்துக்களைப் பலரும் பலவிதமாகக் குறிப்பிடுகின்றனர். மக்களும் அதைப் பல வழிகளில் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அதனடிப்படையில் நீதி’ எதனை அடிப்படையாகக் கொண்டது? மனித உரிமைக்கும் நீதிக்கும் என்ன தொடர்பு என்பதை தேடினால்...? கிடைக்கும் ஒரே பதில் நீதி’ பல்வேறு நீக்குப்போக்குகளைக் கொண்டது என்பதாகிறது. அதனால்தான் இன்று, இதுதான் நீதி’, இதுதான் அறம்’ என்று உறுதியாக வரையறுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இச்சூழல் ஒருபுறம் இருப்பினும், மற்றொரு புறம் - காலந்தோறும் இலக்கியங்கள் முதல் பல்வேறு அறிஞர்கள், சமயப் பொறையாளர்கள் என பலரும் நீதி’யை பல்வேறு பொருண்மைகளில் கையாண்டதற்கானச் சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றில் சில;

            பண்டையத் தமிழ் இலக்கியங்கள் அறம்’ என்ற சொல்லுக்கு ஒழுக்கம்’ என்று பொருள் கூற தொடங்கியதிலிருந்து, திருக்குறள்  “மனதளவில் குற்றம் நினைக்காத தூய்மை”; “பொறாமை, ஆசை, கோபம், கருஞ்சொல் ஆகியவற்றை அழித்தல்”; “உயிரினங்களை கொல்லாமல் அன்பு செலுத்துதல்”; “பழிப்புகளுக்கு ஆட்படாத இல்வாழ்க்கை”; “பிறர் மனைநோக்காமை – பேராண்மை”2 என்றெல்லாம் அறம்’ போதிக்கிறது. தேக்கருத்து, “நான்கு வரி வெண்பாக்கள் மூலம் வழிமொழிந்த நாலடியார்”3; “பகிர்ந்து உண்ணுதலை அறமாக போதித்த சிறுபஞ்சமூலம்”4 “ஏலாதி”5, “திருமந்திரம் முதல் தந்திரம்”6; “பயன் கருதாமல் பிறருக்கு செய்யும் நற்செயல்களை அறமாகச் சொன்ன சங்க இலக்கியங்கள்”7 “இன்னும் அறத்திற்கான அடிப்படைகளாக அன்பு, அருள், பரிவு, அறநெறி போன்றவற்றையும்; அன்பின் பயனாக இன்மைக்கும் மறுமைக்கும் இன்பம் சிறப்பு - செல்வம் ஆவது, இறந்த பிறகு உடன் வரும் பேறு, அளவிட முடியாத பயன்”8 என்றெல்லாம் இலக்கியங்கள் அறத்திற்கான விளக்கங்களை பல்வேறு கருத்துக்களாக தொடர்ந்து அடுக்கியுள்ளன.

 

அறிஞர்களும் சமயப் போதர்களும் சுட்டிய அறம்’

            இலக்கியங்கள் மூலம் வெளிப்பட்ட நீதிக்கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே, அறிஞர்கள் கூறும் அறம்’ குறித்த விளக்கங்களும், சமயங்கள் பின்பற்றும் கருத்தியல்களும் அமைந்திருக்கின்றன. சான்றாக, கிரேக்க தத்துவ ஞானிகளான பிளோட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோரின் கருத்துக்களைக் குறிப்பிடலாம். இவர்கள் “நல்ல பண்பின் முழு வடிவமே நீதி, ஒவ்வொரு பண்பும் நீதியிலிருந்துதான் தோன்றுகிறது. மனித உயிர்களின் மொத்த நடத்தையிலும் எது சரி? எது தவறு? என்ற கேள்விக்கு நீதியும் ஒழுக்கத்தைப்போல ஒரே பதிலைத்தான் கூறும்”9 என்கிறார்கள். அரிஸ்டாடில், “ஒட்டுமொத்த பண்பு என்பதே நீதிதான். அநீதி என்பது நீதி பண்பின் பகுதியல்ல. அதுதான் ஒட்டுமொத்தமான தீமை”10 என்கிறார். இவர்கள் தனிமனிதர்களிடையே உள்ள உறவும் சமூக உறவும் நீதியின் சரியான அடித்தளம் என்பதை வலியுறுத்துகின்றனர். இங்கு மனித உறவுகளுக்குள் ஒழுகும் ஒற்றுமை’ நீதியாகிறது. ஆனால், ரோமானியர்கள் இக்கருத்தை எதிர்த்து, சட்ட முறைமையோடு நீதியை இணைத்து, சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிவதுதான் நீதி’ என்கிறார்கள்.

 

சமயங்களின் பார்வையில் ‘நீதி’

            தமிழ்நாட்டில் விழுதுவிட்ட சமயங்கள் நீதி’ என்பதை வெறும் ஒழுக்கமாக மட்டும் பார்க்காமல் அதையொரு மதக் கொள்கையாக பின்பற்றுகின்றன. சான்றாக, “நீதி என்பது கடவுளின் ஓர் அம்சம். தெய்வீகப் பண்பின் முழுச்சாரம். நீதி கடவுள் சித்தத்தின் பிரிக்கமுடியாத அம்சம். அது இயற்கையான ஒற்றுமை”11 என்று பழைய ஏற்பாடு குறிப்பிடுவதைச் சுட்டலாம். இயேசு கடவுளின் சாம்ராஜியம் குறித்து அறிவிக்கையில், “எங்கே நீதியும் சமாதானமும் சகோதரத்துவமும் அன்பும் நிலவுகிறதோ அதுவே கடவுளின் அரசு”12 என்கிறார். இதனையே “எனது சகோதரர்களின் மிகவும் ஏழையான ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதையே எனக்கும் செய்தவர்கள் ஆவீர்கள்”13 என்கிறது கிறிஸ்துவ சமயநூல். இங்கு நீதி’யை இஸ்லாமியப் பாரம்பரியம் இதயமாகப் பார்ப்பதை உணரலாம். இஸ்லாமியத்தின் தோற்றத்தை வைத்து மதிப்பிட்டால், ஒரு மத இயக்கமும், ஒரு சமுதாயப் புரட்சியுமாக அதனை உணரலாம். அதனால்தான் நபிகள் நீதியின்றி உண்மை, நிலைத்து நிற்க முடியாது என்று இடைவிடாமல் கூறியுள்ளார். பலவீனமானவர்களையும் வறுமையில் வாடுவோரையும் அடக்கி ஒடுக்கும் எந்த சமுதாயமும் இஸ்லாமிய சமுதாயமாக இருக்கமுடியாது. இதைத்தான், குர்ஆன் “சொல்லுங்கள் எனது இறைவன் நீதியோடு சேர்ந்திருக்கிறான். ஆம் அல்லாஹ் நீதியோடு செயல்படுகிறவரையே நேசிக்கிறார். நீதியான செயலைச் செய்யுங்கள். அது பக்திக்கு நெருக்கமானது”14 என்கிறது.  

 

இந்திய பாரம்பரியத்தில் ‘நீதி’

            இந்திய பாரம்பரியத்தில் நீதி’ என்னும் சொல் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும், நீதியின் உணர்வில் செயல்பட்பாரம்பரியமாக இந்திய பாரம்பரியம் இருந்திருப்பதை உணரலாம். காரணம் தர்மம்’ என்னும் கருத்தியலை இந்து சிந்தனையில்தான் பார்க்க முடிகிறது. இக்கருத்து உலகனைத்தும் ஒன்று’ என்பதாகும். இக்கருத்து சமுதாயத்தில் ஒற்றுமையும் உறுதியும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒருவன் வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கின்றானோ, அதற்கு இணையாக சமூகத்தில் வாழும் பிறரும் தம் கடமைகளைச் சரியாகச் செய்யவேண்டும் என்பது இந்து சமயத்தின் அடிப்படை வலியுறுத்தலாகிறது. சில கடமைகளை சரியாக மேற்கொண்டால்தான் உலகம் சரியான ஒழுங்கை அடையும், அதனால் மனித சமுதாயம் வளரும் என்று (அர்தா) (லோக, சங்கிரதா) இதன்வழி விளக்கப்படுகிறது. “எல்லா ஜீவன்களிடமும் நேரம் பூண்டு, அவற்றின் நலன்களைச் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் கடைப்பிடிப்பவன் எவனோ, அவனே ஒழுக்கம் அல்லது நேர்மை என்றால் என்னவென்று அறிந்தவனாவான்”15 என்று மகாபாரதம் முதலான இதிகாசங்கள் விவரிக்கின்றன.

 

நீதி’யின் வகைபாடும் சட்ட திட்டங்களும்

            அறம் என்னும் நீதி குறித்த நம் உள்ளுணர்வுகளையும், அவற்றின் வகைமைகளை அறிவதன் வழியே – நீதி என்பது பொதுநீதி, பங்கீட்டு நீதி, ஒருவருக்கொருவரான நீதி (தனித்தநீதி), சட்டநீதி, சமூகநீதி என்று வகைப்படுத்தப் பட்டிருப்பதையும் அறியலாம். இதில் பொதுநீதி தனிமனிதனுக்கும், சமூகத்துக்குமான உறவைக் குறிக்கிறது. இதில் தனிமனிதனைக் காட்டிலும் சமூகம் முக்கியத்துவம் பெறும். தனிமனிதர்களால் சமூகம் சீரழிந்துவிடக் கூடாது என்பதில் இது அதிக கவனம் செலுத்துகிறது. இந்த பொது நீதியானது சட்டத்தின் மூலமே சமூகத்துக்கு வருகிறது. சட்டம் தனிமனிதனை தனிமனிதர் என்றும்; சமுதாயத்தின் உறுப்பினர் என்றும் ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டவல்லது. இதுதான் சட்டத்தின் தலையாய கடமை. இச்சட்டம் பல்வேறு கொள்கைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சட்டக்கொள்கைகளும் இயற்கையாகவும், மனித இயல்பிலிருந்து சமூகத்தின் உருவாக்கத்தாலும் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் இயற்கை சட்டம் பரிபூணரத்தன்மைக் கொண்டதாக, தனக்குத்தானே செயல்படும் ஆற்றல் மிக்கதாக உலகம் தழுவி ஏற்கப்படும் தன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால் இயற்றப்படும் சட்டங்கள் அதற்கு எதிர்நிலையில் உள்ளன. இதனால், சில நேரங்களில் ‘நீதி’ அநீதிகளாகவும் மாறுகிறது. காரணம், காலத்திற்கேற்ப வெவ்வேறு இடங்களில் உள்ள சமூக அமைப்புகளுக்கு ஏற்ப, நீதி மாற்றமடைகிறது. இருந்தும் சட்டம் அவசியமானதாகிறது. சட்டங்கள் இல்லாமல் எந்தச் சமூகமும் உயிர் வாழ்வது கடினம். சுதந்திர தேசத்தில் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் தந்து, அவற்றை பாதுக்காக்கும் தலையாயப் பணியையும் சட்டங்கள் நிறைவேற்றுகின்றன. இப்பணி ஒரு நுட்பமான பணியாகும். இதற்கு தொலைநோக்கு பார்வை அவசியம். ஏனெனில் எந்த ஒரு சமூகமும் தன் குடிமக்கள் மீது அதிகப்படியான சட்டங்களை திணிக்கக் கூடாது. குறிப்பாகச் சொல்வதானால், சமுதாய மக்களின் இயல்புக்கு விரோதமான சட்டங்களை  சமுதாயத்தின் மீது சுமத்தக்கூடாது. இங்குதான் நீதியும் சட்டமும் நெருங்கிய தொடர்பு கொள்கின்றன. அதேநேரத்தில் மக்கள் நீதி, சட்ட நீதியாவது கிடையாது. சமூக அநீதிகளைக் கண்டித்துப் பேசுவோரும் எழுதுவோரும் இன்று மிரட்டப்படுவதையும், தண்டிக்கப்படுவதையும் இதற்கானச் சான்றாகக் கொள்ளலாம்.

            நீதி காக்கப்பட்ட வேண்டிய பொருண்மையாயின், இங்கு ஏன் இத்தனைக் கொடுரங்கள் நடக்கின்றன? இங்கு ஏன் இன்னும் பசியால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன? இங்கிருக்கும் மக்கள் ஏன் இன்னும் பரம ஏழைகளாக இருக்கிறார்கள்? அவர்கள் சோம்பேறிகள் என்பதாலா....? இல்லை சமத்துவமின்னையாளா...? இதற்கெல்லாம் தக்க பதிலாவது, சமுதாயத்தில் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் மரபுவழி வந்த மனப்போக்குகள், நம் சமூக வாழ்வின் மீது ஆச்சிச்செலுத்தும் சட்டம்’ ஆகியன அநீதியானவை என்பது தானா... இங்கு நீதி எதுவென்று அறிப்பது எத்தனை அவசியமோ..? அதேபோல அநீதிகளை கண்டிப்பதும் மிக அவசியமாகப்படுகிறது.

 

சட்டமுறைமையில் அறமென்னும் நீதியாவது?

            நீதியை வலியுறுத்தக்கூடிய அரசு நிறுவனமாக சட்டம் இருக்கிறது. சட்டம் உண்மையில் ஒரு நிறுவன அமைப்பு முறையால், ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் கொண்டு இயங்குகிறது. குறிப்பிட்ட செயல் அல்லது செயல் தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை சட்டம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இது அதன் தனித்தன்மையாகும். சட்டத்தின் தோற்றம் மனித குலத்தின் தொன்மைச் சமூக வாழ்க்கைக் காலத்தின் தோற்றத்தோடு தொடர்புடையது. சமூகமாகத் திரண்ட மனிதர்களிடம் ஏற்பட்ட வகுப்பு வேறுபாட்டால் தோன்றிய அரசு எனும் நிறுவனத்தின் தோற்றத்தோடு, சட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. இன்னதைச் செய் மற்றும் இன்னதைச் செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும் அதனை ஒப்பாத அல்லது மீறுகிற எவரையும் தண்டிக்கிற அதிகாரமும் சட்டத்தின் இரு முதன்மைக் கூறுகளாகின்றன. இதன்படி அரசின் தோற்றக் காலமே சட்டத்தின் தோற்றக்காலமாக இருக்கிறது.

            அறம் என்பது மனிதவாழ்வின் விழுமியங்களை உருவாக்குவதும் கற்பிப்பதுவுமான கருத்தோட்டம். அதன் மற்றொரு வடிவமே சட்டம்’. திருடுதல் கெடுநடத்தை என்று அறம் போதிக்கிறது. திருடினால் தண்டனை உண்டு என்று சட்டம் எச்சரிக்கிறது. உயிர்களைக் கொல்லுதல் பாவம் என்று அறம் கருணையோடு கற்பிக்கிறது. கொலை தண்டிக்கத்தக்கது என்று சட்டம் மிரட்டுகிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே சட்டமும் அறமும் என்று கருதுவதற்கு இக்கருத்தியலே அடிப்படையாகும். தமிழ்நாட்டின் மிகப்பழைய சட்டம் ஒழுங்குக் குலைவுக் காலமான களப்பிரர் காலத்தில் நீதியிலக்கியங்களாகத் தோற்றம் பெற்றன ன்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆக, நீதி ஒரு செயல் அல்லது செயல் தவிர்ப்பால் பாதிப்புற்றவர் மேல் வினைபுரியக் கூடியது என்பதை அறியலாம். சட்டம் அச்செயல் அல்லது செயல் தவிர்ப்பைப் புரிந்தவரின் மீது வினைபுரிவதாற்கான அமைவாகிறது.  சட்டத்தின் வரம்பு நீதியின் வரம்போடு ஒப்பிடுகையில் குறுகியது. நீதியின் நோக்கத்தோடு ஒப்பிடுகையில் சட்டத்தின் நோக்கம் எளிமையானது.

            எனவே, அறமெனும் நீதி அன்பாலானது. அதனால் ஒருவரோடு ஒருவரை நாம் அன்பால் பிணைக்கவேண்டும். அப்போதுதான் உலகம் உண்மையான மனித குடும்பமாக மாறும். எல்லா மனித உறவுகளையும் மிக ஆழமாக ஊடுருவி இருக்கும் சக்தி அன்பாகும். அதுதான் எல்லா ஒழுக்கத்துக்கும் முதன்மையாதும்; முழுமையானதுமாகும். நீதியின் அடிப்படையும் அன்பே. சிலநேரத்தில் அன்பு நீதியையும் கடந்துச்செல்லும் ஆற்றல் பெற்றதாகிறது. அதனால் நீதி முழுமையடைகிறது. அன்பில்லாத நீதி வறண்டது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு நீதியைவிட அடிப்படை தேவையாக இருப்பது அன்புதான்.

 

அடிக்குறிப்புகள்

(1)  திருக்குறள்., நீதி இலக்கியம்., .23 / (2)  கு.எண்கள்.34;35;321;49;148. / (3) நாலடியார்., பா..181 /

(4)  சிறுபஞ்சமூலம்., பா..6:3 / (5) ஏலாதி., பா..9 /  (6) திருமந்திரம்., முதல் மந்திரம்., பா..252 /

(7)  புறம்.பா..45:7; .பத்து., பா..22:4 / (8) நா...5; சிறு..மூ.35; கு..76, 39, 31, 32; நாலடி.17, 38; கு..103 / (9) (அரு.ராமநாதன்., சிந்தனையாளர் பிளேட்டோ.,.82 / (10) (கிருஷ்ணன் பாலா., சிந்தனையாளர் அரிஸ்டாட்டில்., .68 / (11)  சேவியர்., கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு., .124 / (12) .பொ.மி..18 / (13) சேவியர்., மேலது., .231 / (14) குர்.ஆன்.,7:2,49:9,5:8 / (15) மகாபாரதம்.,(12.524.4)