4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 மார்ச், 2023

இந்து அறிவியலில் சித்த மருத்துவம் - செல்வி சிவோகா சிவலிங்கம்

 

இந்து அறிவியலில் சித்த மருத்துவம்

செல்வி சிவோகா சிவலிங்கம்

மட்டக்களப்பு, இலங்கை.

முன்னுரை

பகுத்தறிவு, பரிசோதனைகள் என்பவற்றின் மூலம் உண்மைகளைக் கண்டறிதல் அறிவியலாகும். இந்துமதமானது அறிவியலுடன் தொடர்புடையது. பண்டைய இந்துக்கள் வேளாண்மை, நீர்ப்பாசனம், போரியல், கலை, மருத்துவம், வானியல் போன்ற துறைகளில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவை இந்துக்களுக்கும் அறிவியலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பினை அறிய சான்றுகளாக அமைகின்றன. “மனித நலனையும் மனித முன்னேற்றத்தையும் இரண்டு தூண்கள் தாங்கியுள்ளன, ஒன்று சமய நோக்கு, மற்றது விஞ்ஞான நோக்கு” என்ற Miliken இன் கருத்துக்கமைய இந்து அறிவியல் மூலம் தோற்றம் பெற்ற சித்த மருத்துவமானது இந்துக்களின் நலனிலும் முன்னேற்றத்திலும் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

சித்த மருத்துவ நூல்கள்

தமிழ் வைத்தியமான சித்த மருத்துவத்தின் மூலங்களாக சித்தர்களின் மருத்துவ நூல்கள் அமைந்துள்ளன. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு மருத்துவ நூல்கள் இருந்துள்ளதை சூத்திரங்கள் மூலம் அறியமுடிகிறது. எனினும் குறிப்பிட்ட சில சித்த மருத்துவ நூல்களே கிடைத்துள்ளன. சித்த வைத்தியத்தின் பெயரில் பின்வரும்  மருத்துவ நூல்கள் அமைந்துள்ளன. அகத்தியர் ஞானம், வைத்திய சிந்தாமணி, செந்தூரம் 300, மணி 4000, வைத்தியம் 1500, வைத்தியம் 1600, நாடிசாஸ்திரம், குணவாடகம், வைத்தியக்கும்மி.

  திருமூலரின் திருமூலவைத்தியம் 600, திருமந்திரம் 1000, தேரையரின் தேரையர் தைலவர்க்கம், நோய் மருந்தளவை, மருந்து பாரதம், வைத்தியக் காப்பியம் போன்ற நூல்களும் போகரின் போகர் 7000, சிகிச்சை வெண்பா, மூப்புச்சூத்திரம் போன்றனவும், இராமதேவரின் வைத்திய சிந்தாமணி 700, வாதவைத்தியம் 400, செந்தூரச்சூத்திரம் 155 மற்றும் பாம்பாட்டிச் சித்தரின் சித்தர் ஆரூடசிந்து என்ற நூலும் சித்த மருத்துவம் பற்றியதாக அமைந்துள்ளன.

சித்த மருத்துவ முறைகள்

   சித்த மருத்துவ முறைகள் தேவ மருத்துவம், மானுட மருத்துவம், இராட்சத மருத்துவம் என 3 வகைப்படும். இராட்சத மருத்துவம் என்பது அறுவைச் சிகிச்சை முறை தொடர்பானதாகும். சித்த மருத்துவத்தில் ஆரம்ப காலம் முதல் அறுவைச் சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அகத்தியர் ரணவைத்தியம், அகத்தியர் ரண பெருநூல், சித்தர் அறுவை வைத்தியம் முதலிய சித்த மருத்துவ நூல்களில் அறுவைச் சிகிச்சை முறை பற்றிக் கூறப்பட்டுள்ளது. “அகத்தியர் சஸ்திராயிதவிதி” என்ற பெயரில் அமைந்த தொகுப்பொன்றில் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பற்றி அறியமுடிகிறது. 26 ஆயுதங்களில் “சஸ்திரம்” எனும் ஆயுதம் முதன்மையானது. இவ் ஆயுதம் கட்டி, பிளவை போன்றவற்றை அறுக்கப் பயன்பட்டுள்ளது.

“கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்

முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்

ஆழிக்கோலும் அடுத்த பிறையுடன்

தத்தரிக்கையுடன் பகைரை வாங்கியும்

முச்சலாகையொடு முனிமொழியோட்டும்

செப்புக்கீழையும் சீரிய சலாகையும்

வட்டகை தன்னுடன் வளர்பஞ்சமுகமும்

செப்புச் சலாகையும் கொம்பும் குடோரியும்

வெங்கலக் குழலும் ஈயச்சலாகையும்

சாயக் கோலும் கண்கத்தி தண்டும்

இவையிவை ஆயுதம் இருபத்தாறும்

சிவனவன் அருளால் திகழ் சத்திராயுதமே”

 கரு உற்பத்தி

  நாதம், விந்து என்பவை உடற்றோற்றத்திற்கு அவசியமானவை என்பதை சித்தமருத்துவம் கூறுகின்றது. கரு உற்பத்தி, கரு வளரும் முறை, கருத்தங்கக் கூடிய நாட்கள், கரு வளர்வதற்கு ஏற்ற மருந்துகள் போன்பவற்றையும் சித்த மருத்துவம் கூறுகின்றது. அசையும் தன்மையுள்ள விந்து பெண்ணின் சூலுடன் இணையும்போது கருக்கட்டப்படும். கருவானது கருப்பைச் சுவரிற் பதியப்பட்டு வளர்ச்சி அடையும். தாயின் மலம், சலம் போன்றவை உடலில் தேங்குவதினால் குருதியில் ரொக்ஸின் (Toxin) என்ற திரவம் சிசுவைப் பாதிக்கும் என இன்றைய மருத்துவ அறிவியல் கூறுகின்றது. இதனைத் திருமூலர் திருமந்திரப்பாடல் மூலம் விளக்கியுள்ளார்.

“மாதா உதிரம் மல்மிகில் மந்தனாம்

மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை

மாதா உதிரத்தில் வந்த குழவிற்கே” (திருமந்திரம் 481)

 மனிதனின் 23 சோடி நிறமூர்த்தங்களில்,  1 சோடி நிற மூர்த்தங்கள் இலிங்க நிறமூர்த்தங்களே இலிங்க நிர்ணயம் செய்வதாக விஞ்ஞானம் கூறுகின்றது. பெண்ணுக்குரிய நிறமூர்த்தம் (XX) என்றமைப்பிலும், ஆணுக்குரிய நிறமூர்த்தம் (XY) என்ற அமைப்பிலும் காணப்படும். ஆணிடமிருந்து வெளியேற்றப்படும் விந்துகளில் எது சூலை அடைந்து கருக்கட்டுகின்றதோ, அதனைக் கொண்டே இலிங்க நிர்ணயம் செய்யப்படும். X விந்து சூலை அடைந்தால் XX எனும் பெண் குழந்தையும், Y விந்து சூலை அடைந்தால்  XY எனும் ஆண் குழந்தையும் பிறக்கும்.

“ஆண் மிகில் ஆணாகும் பெண் மிகிற் பெண்ணாகும்

பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும்

தான்முகு மாகில் தரணி முழுதாகும்

பாணவ மிக்கிடிற் பாய்ந்தது மில்லையே” (திருமந்திரம் 478)                  

 பிறக்கும் குழந்தைகள் பெற்றோரின் இயல்புகளைப் பெற்றிருக்கும் என்பதை திருமூலர் குறிப்பிடுகின்றார்.

“ஏய் அங்கு அலந்த இருவர்தம் சாய்த்துப்

பாயும் கருவும் உருவாம் எனப்பல

காயம் கலந்து காணப் பதிந்தபின்

மாயம் கலந்த ஆனதே” (திருமந்திரம் 268)

 கரு வளர்ச்சி காலத்தை 10 மாதங்கள் என சித்த மருத்துவர் கூறுவர். திருமூலர் “உருவம் வளர்த்திடும்…”(485), “அறிகின்ற மூலத்தின்…”(452) ஆகிய பாடல்களில் கரு வளர்ச்சிக் காலம் பற்றிக் கூறியுள்ளார்.

உடலமைப்பு

 மனித உடலின் அமைப்பை சித்தர்கள் நுண்ணிய முறையில் அறிந்திருந்தனர். உடலைக் கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு பாகத்தையும், உறுப்புக்களையும் கூறி அவற்றின் எடைகளையும் குறிப்பிட்டுள்ளனர். ஆரம்ப காலங்களில் சித்த மருத்துவர் உடல் உறுப்புக்களின் அமைப்பு பற்றி அறிந்திருந்ததுடன், உடலில் அமைந்துள்ள நரம்புகளைப் பற்றியும் நரம்பு முடிவுறும் இடங்களையும் அறிந்திருந்தனர். அவ் இடங்களில் காயம் ஏற்படும் போது உண்டாகும் உயிராபத்துக்களையும், அவற்றைத் தடுக்கும் வகைகளையும் சித்தர்கள் தமது வர்ம நூலில் கூறியுள்ளனர்.மனித உடலில் அமிர்தம் உண்டென்றும் தலை முதல் பாதம் வரை சுழன்று வருகின்றது என்பதை சித்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்.

 மனித உடலானது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. பத்து வகையான வாயுக்கள் உடலில் செயற்படுகின்றன. இவற்றை தசவாயுக்கள் என சித்த மருத்துவர் குறிப்பிடுகின்றனர். பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய 10 வாயுக்களின் செயற்பாடுகள் பற்றி சித்த மருத்துவம் கூறுகின்றது. இவை பற்றிய கருத்துக்கள் இசை நுணுக்கப் பாடல்களில் இடம்பெறுவதன் மூலம் இந்து அறிவியலில் சித்த மருத்துவத்தின் பழமையையும் சிறப்பையும் அறியலாம்.

 மனித உடலை ஒரு சக்தி இயங்கவைக்கின்றது. ஐம்பூதங்களினால் ஆக்கப்பட்ட இவ் உடல், ஐம்பூதங்களில் மாறுபாடுகள் ஏற்படும் போது வெவ்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதனைச் சட்டமுனியின் பாடல் மூலம் அறியலாம்.

“அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்திலுள்ளதே அண்டம்”

 பருவங்கள் மாறும் போது உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படுவதை அறிந்த சித்தர்கள் அம்மை, வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படும் காலத்தை முன்னரே எடுத்துக் கூறினர்.

செங்குருதிக் கலங்கள்,மண்ணீரல், ஈரல் முதலியவற்றில் அழிக்கப்படுகின்றன. பின் இவை பிலிரூபின், பிளவீடின் என்னும் இரு மஞ்சள் நிறமான கழிவுப் பொருட்களுடன் வெளியேற்றப்படுகின்றன. இவ் உடற் செயற்பாட்டினை பாம்பாட்டிச் சித்தர் பாடல் கூறுகின்றது.

“மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்

மல்கும் புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோல் என்றும்

சலக்குழிக்குள்ளே நாற்றம் சுரந்து சேறென்றும்

தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடுபாம்பே”

 நாடிப்பரிசோதனை

 “நாடி காண்பான் நமனறிவான்” என்பது முதுமொழி. நாடிகளுக்கும் உடல்நலன், உளநலன் என்பவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சித்த மருத்துவத்தில் வாத, பித்த, கப நாடிகளின் மூலம் நோயினை அறிந்து கொண்டனர். பித்த நாடியின் இயக்கம் தவளை குதிப்பது போலவும் கபநாடியின் இயக்கம் பாம்பு ஊர்வது போலவும் வாத நாடியின் இயக்கம் கோழியின் நடை போலவும் இருக்கும் என சித்த மருத்துவர் கருதுவர். இதனை கீழ்வரும் பாடல் மூலம் அறியலாம்.

“இல்லையே வாதம் எழில்நடை கோழியாம்

எல்லையே பித்தம் எழுப்பும் தவளை போல்

ஒல்லையே ஐயம் ஊர்ந்திடும் பாம்பு போல

அல்லையே கண்டிங் கறிந்தவர் சித்தரே”

 குதிச்சந்து, காமியம், உந்தி, நடுமார்பு, காது, நடுமூக்கு, தொண்டை, கரம், புருவம், உச்சி ஆகிய 10 இடங்களில் நாடித்துடிப்பினை தொட்டு உணரலாம் என திருமூலர் தனது பாடலில் குறிப்பிடுகிறார்.

“தாதுமுறை கேள்தனித்த குதிச்சந்து

ஓதுரு காமியம் உந்தி நடுமார்பு

காது நடுமூக்கு கண்டம் கரம் புருவம்

போதுறு உச்சிபுகல் பத்தும் பார்த்திடே”

 மணிக்கட்டில் நாடித்துடிப்பானது இலகுவாகத் தொட்டு உணரப்படுகின்றது. மணிக்கட்டில் நாடிபார்க்கும் போது வாத நாடியை சுட்டுவிரலிலும் பித்த நாடியை நடு விரலிலும் கப நாடியை மோதிர விரலிலும் உணரமுடியும். நாடிகளினுடைய அளவுகள், நாடிப்பரிசோதனை முறைகள் பற்றியும் திருமூலர் கூறியுள்ளார்.

“வழங்கிய வாதம் மாத்திரை ஒன்றாகின்

தழங்கிய பித்தம் தன்னில் அரைவாசி

அழங்கு கபந்தான் அடங்கியே காலோடில்

விழுங்கிய சீவதற்கு பிசகொன்றும் இல்லையே”

 ஆண்களுக்கு வலக்கரத்திலும் பெண்களுக்கு இடக்கரத்திலும் நாடிபார்க்கப்படும். சித்தர்கள் நாடி பற்றிய அறிவினை வர்ம பரிகாரத்தை மேற்கொள்ளப் பயன்படுத்தியுள்ளனர். சரகர் சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை ஆகிய ஆயர்வேத மூல நூல்களில், நாடி சாஸ்திரம் பற்றிக் கூறப்படவில்லை. நாடி பார்க்கும் முறையை சித்தர்கள் அறிமுகப்படுத்தியதாகவும் ஆரம்பத்தில் சித்தமருத்துவத்தோடு வளர்ச்சி அடைந்து பின்னர் ஆயுர்வேத வைத்தியத்திலும் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 வாதம், பித்தம், கபம்

 சித்த மருத்துவம் வாதம், பித்தம், கபம் ஆகிய உயிர்த்தாதுக்களில் முக்கிய கவனம் செலுத்துகின்றது. வாதம் என்பது நரம்புத் தொகுதியின் தொழிற்பாடுடன் தொடர்புடைய காரணியாகவும் பித்தத்தை உடலில் நடைபெறும் அனுசேபச் செயற்பாடுகளுடன் (Metabolic Actions) தொடர்பான ஒரு காரணியாகவும் கபத்தினை உடலமைப்புடன் (Structure of the body) தொடர்பான காரணியாகவும் கருதலாம். உடலின் ஆரோக்கியத்திற்கு இம் மூன்று காரணிகளின் சமநிலை அவசியமாகும். மனித உயிர் வாழ்க்கைக்கு இம் மூன்று காரணிகளும் அவசியம் என்பதை Western Medicine ஏற்றுக்கொள்கிறது. முத்தனிமங்களின் சமநிலை குலையும் போது நோய்கள் ஏற்படுகின்றன.

“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

வளி முதலா எண்ணிய மூன்று” (திருக்குறள் 941)                        

 இம் முத்தனிமங்கள் வெண்குருதி, இரத்தம், தசை. கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, உயிர் அணுக்கள் ஆகிய சப்த தாதுக்களை இயக்குகின்றன. வாதம், பித்தம், கபம் ஆகிய உயிர்த்தாதுக்கள் (Humours) 4:2:1 எனும் விகிதத்தில் இயங்குகின்றன. இவற்றின் அளவுகள் மாறுபடும் போது நோய் ஏற்படுகின்றது. சித்தமருத்துவர் முத்தனிமங்களுள் ஒன்று அளவுக்கு மீறி உயர்ந்தால் குறைப்பர், முத்தனிமங்களுள் ஒன்று குறைந்திருந்தால் உயர்த்துவர்.

 முத்தனிமங்கள் அமையும் இடத்தினை சித்த மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வாதம், பாதம் முதல் தொப்பூழ் வரையிலும், பித்தம் உந்தியிலிருந்து கழுத்து வரையிலும், சிலேத்துமம் கழுத்திலிருந்து உச்சி வரையிலும் காணப்படும். வுhதம,; நரம்பு மண்டலத்தையும் பித்தம், பித்த நீரையும் சிலேத்துமம், சவாசப்பையையும் குறிக்கின்றன. எனவே சித்தமருத்துவத்தின் படி நோய்கள் ஏற்படும் போது முத்தனிமங்களின் நிலைகள் அவதானிக்கப்பட வேண்டியவையாகும்.

“வாதமலாது மேனிகெடாது – வாளாபித்தத்

தீதலாது சித்தம் கெடாது – சிலேத்துமத்தின்

போதலாது விக்க லெழாது – குடல்தன்னில்

சீதமெழாது சுரமும் வராது” (யூகிமுனி)

 உடல் வெப்பம் குறைந்திருந்தால் வாதம் எனவும் உடல் வெப்பம் அதிகமானால் பித்தம் எனவும் உடல் குளிர்ந்திருந்தால் சிலேத்துமம் எனவும் கண்டறிவர். குழந்தைப் பருவத்தில் சிலேத்துமம் மிகுதியாகவும் வாலிபப் பருவத்தில் பித்தம் மிகுதியாகவும். வயோதிபப் பருவத்தில் வாதம் மிகுதியாகவும் இருக்கும்.

   நோய்கள்

  சித்த மருத்துவத்தில் 4448 நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந் நோய்களை கண்நோய்கள் - 96, குஸ்ட நோய்கள் - 18, பாண்டுவகை -05, சன்னி -13, சயம் -96, குன்மநோய்கள் -08 என வகைப்படுத்தியுள்ளனர். நோய்களை இனங்காணும் வகையிலும் அவற்றை வகைப்படுத்தும் முறையிலும் இந்து அறிவியலில் சித்தமருத்துவம் முக்கியம் பெறுகிறது.

“நாமப்பா அப்படியே நிசமாய்ச் சொன்னோம்

நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டே”(அகத்தியர் வைத்திய காவியம் -1500)

  இன்று பெருந்தொகையானோரைப் பாதிப்படையச் செய்துள்ள நீரிழிவு நோயின் அறிகுறிகளைச் சித்தர்கள் நன்கு அறிந்துள்ளனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகக் கூறப்படுகிறது. அச் சிறுநீரினை எடுத்து காய்ச்சிப் பார்க்கும்போது பாணிபோல் ஆகும் தன்மை, சிறுநீரில் இனிப்புச்சுவை இருத்தல், சிறுநீரில் ஈ ,எறும்பு மொய்த்தல் இவை காணப்படும் போது நீரிழிவு நோய் உண்டென அறியப்படும். இதனை வைத்திய சிந்தாமணி எனும் நூல் குறிப்பிடுகிறது.

“நீரே அழியும் நாளிகை தோறும்

நிரம்பக்கலயம் தனிலிட்டு

காரே இணங்கும் சூழலாலே

காய்ச்சிப் பார்த்தால் பாணியதாய்

நேராய் அதுவும் இனித்திருக்கும்

நீரும் தரையில் விட்டாக்கால்

சீராய் எறும்பு ஈ மெய்க்கும்

செய்யுங் குணங்கள் செப்பக்கேள்”

  மருந்துகள்

 சித்த மருத்துவத்தில் உடலில் ஏற்படும் நோயைக் குணப்படுத்தவும், உள நோயைப் போக்கவும், நோய் வராமல் தடுக்கவும் மருந்துகளை பயன்படுத்தியுள்ளதை திருமூலர் பாடல் மூலம் அறியமுடிகிறது.

“மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும்

மறுப்பது உள நோய் மருந்தெனலாகும்

மறுப்பது நோயை வராதிருக்க

மறுப்பது சாவை மருந்தெனலாகும்”

 காயகற்பம்

  சித்தர்கள் ‘காயகற்பம்’ எனும் மருந்தினை தயாரித்து நீண்டகாலம் வாழ உட்கொண்டனர். இக் காயகற்ப மருந்தானது உடலில் ஏற்படும் நரை, திரை, மூப்பு போன்றவற்றை போக்கும் இயல்புடையது. காயகற்பத்தின் மூலம் சாகா நிலையை அடையலாம் என்பதை பாம்பாட்டிச் சித்தர் பின்வரும் பாடல் மூலம் குறிப்பிடுகின்றார்.

“காலமென்னும் கொடிதான கடும் பகையைக்

கற்பமென்னும் வாளினாற் கடிந்து

சாலப் பிறப்பினை நாம் கடிந்தோம்

தற்பரங் கண்டோமென்று ஆடாய் பாம்பே”

மருந்து தயாரிப்பு

 ஒரு மருந்தையே பல்வேறு நோய்களுக்கும் அனுபானங்களை மாற்றிக் கொடுக்கும் முறை சித்த மருத்துவத்திற்கே சிறப்பானது. சித்தமருத்துவத்தில் மருந்துகளை வழங்கும் போது தேன், பழச்சாறு போன்ற அனுபானங்களையும் சேர்த்துக் கொடுப்பது சிறந்தது என வைத்தியர் காவியம் 1500 கூறுகின்றது.

“ஊட்டா அனுபானத் துறையோடோக்கு”

 மருந்துகள் தயாரிப்பின் போது அப்பொருட்களின் பஞ்சபூத வகைப்படி முறையாகச் சேர்த்து செய்யப்படும் மருந்துகளே சிறந்த மருந்துகளாகும். சித்த மருத்துவச் செய்கையில் நசுக்கல், கசக்கல், பிழிதல் முதலான 38 வகையான முறைகள் இடம்பெறுகின்றன.

பஸ்பம்

  உலோக வகைகளை மருந்தாக மாற்றுகின்ற இரசாயன முறையினை சித்த மருத்துவத்தில் கையாண்டுள்ளனர். இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு முதலிய நவலோகங்களையும் முத்து. பவளம், மணி முதலிய நவமணிகளையும் விரம், பூரம் முதலிய நவராசானங்களையும் பஸ்பமாக்கும் முறை (calcine Powder) சித்தமருத்துவத்தில் மேற்கொள்ளப்படுகிறது. சித்த மருத்துவ முறைப்படி இம் முறையினை குறுகிய நேரத்தில் குறைந்த செலவில் செய்யலாம். ஆங்கில மருத்துவத்தில் பஸ்பமாக்க விலை உயர்ந்த எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.   இதனால் பிற மருத்துவங்களில் பஸ்பமாக்கும் செயற்பாடானது, சித்த மருத்துவ முறையைப் பின்பற்றி மேற்க்கொள்ளப்படுகிறது.

சுத்தி செய்தல்

  உலோகங்களையும் தாதுவகைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பஸ்பம், செந்தூரம், திராவகம் முதலிய பலவகையான மருந்துகள் சித்த மருத்துவத்தில் வழங்கப்படுகின்றன. இதனால் சித்த மருத்துவம் தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. பாசான முறைகளைக்  தேன் முதலானவற்றில் கலந்து கொடுத்து வாரரோகம், சன்னிவாதம் போன்ற நோய்களை சித்த மருத்துவத்தில் குணமாக்கப்படுகின்றது. “மருந்துகள் தயாரிக்கும் போது சுத்தி செய்து பயன்படுத்தல் வேண்டும்’’ எனும் விதி சித்த மருத்துவத்தில் காணப்படுகின்றது. பாடானங்கள் சுத்தி செய்து பயன்படுத்தப்படும். பொன்னை பசுபமாக்க மூலிகைச் சாற்றில் சுத்தி செய்யப்படுகிறது. சுக்கினை தோலை நீக்கிப் பயன்படுத்துவர்.

  இஞ்சிச்சாறு, சுரசம். ஆடாதோடைக் குடிநீர் போன்றவை கால வயதிற்குள் சுய இயல்புகளை இழப்பவை. இவை கெடாமல் இருக்க பாண்டவைப்பு முறையைக் கையாள்வர். உலோகப் பாடானங்களுக்கு வைப்பு முறையாகச் சரக்குகளை உபயோகித்துள்ளனர். அவற்றிலம் சுத்தி முறையைக் கையாண்டனர்.

இரசம்

  சித்த மருத்துவத்தில், இரசத்தைக் கட்டி தயாரிக்கப்பட்ட இரசமணி மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. இரசக் குளிகை, சூதக் குளிகை, ககனக் குளிகை போன்றவை இரசமணியைக் குறிக்கும். சித்தர்களே, வட இந்திய மருத்துவத்திற்கு இரசத்தை அறிமுகம் செய்ததாகக் கூறப்படுகிறது. திருமூலர் சொரூபமணி, சூக்குமமணி, கமலினி, காமினி, சித்திமணி, யோகினி, விண்ணேகி, பரிசமணி போன்ற எட்டு வகையான ரச மணிகளைக் குறிப்பிடுகிறார். இவற்றுள் சொரூபமணியே சிறந்ததாகும்.

 மூலிகைகள்

  சித்த மருத்துவத்தில்  மூலிகைகள், இரும்பு, செம்பு, பொன் போன்ற தாதுப் பொருட்கள், இரசம், பாடாணம், உப்புச்சாறு போன்றவற்றைக் கொண்ட தயாரிக்கப்பட்ட ஒளடதமும் வழங்கப்படும். அத்துடன் ஏறத்தாழ 250000 மூலிகைகள் மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சித்த மருத்துவம் பக்கவிளைவுகள் (Side Effect) அல்லது பின்விளைவு (Reaction) அற்ற மருத்துவமாக அமைந்துள்ளது. மூலிகைகளினுடைய வேர், சாறு, விதை, பட்டை போன்றவற்றை மருந்துகளாக சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர். இன்றைய தாவரவியலில் இனங்காணமுடியாத மூலிகைப் பெயர்களும் சித்த மருத்துவ நூல்களில் காணப்படுகின்றன. இதன் மூலம் சித்தர்கள் தாவரவியல் அறிவியலில் சிறந்து விளங்கியுள்ளதை அறியமுடிகின்றது.

  பஞ்ச பூதங்களின் இயல்புகளுக்கு ஏற்ப அமையும் மூலிகைகளின் இயற் குணங்கள், அவற்றின் செயற்பாடுகள் என்பவற்றை சித்த மருத்துவம் குணபாடம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். விலங்கியல் பற்றிய அறிவையும் சித்த மருத்தவர் பெற்றிருந்துள்ளனர். மிருகங்களின் சதை, இரத்தம், பால், பித்தம், கொம்பு முதலியவற்றை மருந்துகளாகப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் விலங்குகளின் இயல்புகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் அறிந்து அவ் அறிவினை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளதை அறியமுடிகின்றது.

  சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மஞ்சள், கீழாநெல்லி போன்ற மருந்துப் பொருட்கள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சியில், மேலை நாட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். கீழாநெல்லி, மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்தாகும். இதனது மருத்துவக் குணத்தை அறிந்த மேல்நாட்டவர் கீழாநெல்லியை மாத்திரையில் தயாரித்துள்ளனர். மேல்நாட்டவர் ஆய்வு செய்து அறிந்துகொண்ட இவ் உண்மையை சித்த மருத்துவத்தில் 7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. 

 ஆவாரை நாவல், கடலழிஞ்சில், மருதம்பட்டை, கோஸ்டம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயத்தினை நீரிழிவு நோய்க்கான மருந்தாக ஷஷதேரையர்கசாயம்நூறு|| எனும் நூலில் குறிப்பிடப்படுகிறது. இன்றைய ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நீரிழிவு நோய்க்கான மருந்துகளால் புதிய பல நோய்கள் ஏற்படுகின்றன.

“ஆவிரங் கொன்றை நாவல்

அலைகடல் முத்தம் கோட்டம்

மேவிய மருதந் தோலும்

விரைந்துடன் ஒக்கக் கொண்டு…”(தேரையர்கசாயம் நூறு)

பத்தியம் காத்தல்

  மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் உணவு, குளிப்பு, முழுக்கு முதலியவற்றை தகுந்தமுறையில் அமைத்துப் பத்தியங் கொள்ளும் வழக்கம் சித்த மருத்துவத்தில் உண்டு. இரச பாடாணங்களை மருந்துகளாக உட்கொள்ளும் போது கடும் பத்தியம் மேற்க்கொள்வர். பத்திய உணவு வகைகளைப் பற்றி “பதார்த்த குண சிந்தாமணி” எனும் நூல் கூறுகின்றது. புளி, உப்பு, மாப்பண்டம், இறைச்சி, தயிர், காரம், பெண்போகம் ஆகியவை நீக்கப்பட வேண்டும் என அகத்தியர் காவியம் 1500 - 673 ஆம் பாடல் கூறுகின்றது.

“நீக்கிடு புளிகசப்பு நீக்கினால் மெத்தாநன்று

போக்கிலே கொள்வீராகில் வெறுப்பது வெகுநாள் செல்லும்”

மருந்துகளின் கால அளவு

சித்த மருந்துகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் உட்கொள்ள வேண்டும். தாவரச் சாற்றிலுள்ள அணுக்களின் காலத்தை சித்தர்கள் வரையறுத்துள்ளனர். காலம் மாறும் போது மருந்துகளின் வலு குறைந்து, பிற பொருட்களுடன் சேருகின்றன. இதனால் மருந்துகளில் புதிய குணங்கள் தோன்றி உடலில் தீய விளைவுகளை ஏற்படுத்தும். மருந்தின் காலத்தை வயது என்று வரையறுத்துள்ளனர். குணபாட நூலில் சாறு, சுரசம், குடிநீர் ஆகியவற்றின் வயது ஒரு சாமம் எனக் கூறப்பட்டுள்ளது.

“பேகிடு சுரசங் கற்கங் கியாழம் பெலனாமொடு சாமம்

பின்திரி வடகம் சூரணம் வாந்தி மேலேனது திரிதிங்கள்

ஆறு கிருதம் லேசியம் அதன் பலன் அறு திங்கள்……”

அளவைகள்

சித்த மருத்துவர் வயதிற்கு ஏற்ப மருந்துகளின் அளவைத் தீர்மானிப்பர். அளவு அதிகரிக்கும் போது மருந்து விசமாகி உடலைக் கெடுக்கும் எனக் கருதினர். உதாரணமாக வாலிபருக்கு ஒருவேளைக்கு 1 வரானெடை அல்லது 60 உளுந்து நிறை அளவுடைய மருந்தினை வழங்கினர். சித்த மருத்துவத்தில் பல அளவைகளைப் பயன்படுத்துவர். பல்வேறு முகத்தலளவைகள், நிறுத்தலளவைகள் உபயோகிக்கப்பட்டள்ளன.

முகத்தலளவை –   360 நெல் - 1 சோடு, 5 சோடு – 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு, 2 உழக்கு – 1 உரி

8 நாழி – 1 குறுணி, 2 குறுணி – 1 பதக்கு

நிறுத்தலளவை -   1 அணு – 1 திலம், 2 திலம் - 1 காகிணி

4 காகிணி -1 விரகி, 2 விரகி – 1 விதளம்

4 விரகி – 1குஞ்சம், 2 குன்றி – 1 மாவும்

நலம் பேணும் ஆலோசனைகள்

  சித்த மருத்துவத்தில் உடலைப் பேண வேண்டிய முறை பற்றியும் கூறப்பட்டுள்ளது. உடலின் வளர்ச்சிக்கு உணவு அவசியம் என்பதை வலியுறுத்திய சித்தமருத்துவம் உணவுக் கட்டுப்பாட்டு முறைகளையும் கூறுகின்றது. அளவு அறிந்து உண்ணல், உடலுக்குத் தேவையான அளவிலும் குறைந்த அளவு உண்ணல் போன்றவை உணவுக் கட்டுப்பாடு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. உடலின் ஆரோக்கியத்திற்கு உளநலனும் அவசியமாகும் “A sound mind in a sound body”, “Healthy mind and Healthy body”  போன்ற பழமொழிகள் சித்த மருத்துவத்தின் கருத்தை வெளிப்படுத்துகின்றன.

  உடலும் உளமும் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குபவையாகும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் உளத்தை பாதிக்கும். உளநிலையின்; மாற்றங்கள் உடலில் நோயை ஏற்படுத்தும். சித்தர்கள் பாடல்களில் உளமருத்துவக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மனக்கிளர்ச்சி, துன்பம், கோபம், பொறாமை, பகைமை போன்ற மன உணர்வுகளினால் நோய்கள் ஏற்படுவதை அறிவியல் ஏற்றுள்ளது. இரத்தக்கொதிப்பு, இரத்த அழுத்தம், மூச்சடைப்பு, நீரிழிவு, குடற்புண் போன்ற நோய்களுக்கு உள அழுத்தங்களும் காரணங்களாக அமைகின்றன. இதை உணர்ந்த சித்தர்கள் கோபமின்றி வாழ்வதற்கான அறிவுரைகளைத் தமது பாடல்களில் கூறியுள்ளனர்.

 அன்றாட நடத்தைகள், உணவுப் பழக்கங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கினை  வகிக்கின்றன. இதனைச் சித்தர்கள் நன்கு அறிந்துள்ளனர். அதிகாலை வேளையில் எழும்புவதன் மூலம் சுறுசுறுப்புத் தன்மை, தெளிவான மனநிலை, தீய எண்ணங்கள் ஏற்படாமை, வாதம், பித்தம், கபம் போன்றவை சீரான நிலையில் இருத்தல் போன்ற நன்மைகளைப் பெற முடியும் என்பதை மேல்வரும் தேரையர் பாடல் மூலம் அறியலாம்.

“புத்தி யாததற்குப் பொருந்தும் தெளிவளிக்கும்

சுத்த நரம்பினற்ற றூய்மையுறும் பித்தொழியும்

தாலவழி வாதபித்தந் தந்தநிலை மன்னுமதி

காலைவிழிப் பின் குணத்தைக் காண்”

 போதைப் பொருட்களின் பாவனையால் உடலில்  பாதிப்புக்கள் ஏற்பட்டு அதனால் பல கொடிய நோய்களும் ஏற்படுகின்றன. போதைப் பொருட்களிலுள்ள நச்சுத் தன்மையான பதார்த்தங்கள் நரம்புத் தொகுதியைப் பாதிக்கின்றன. புகைப் பிடிப்பதனால் Nicotine எனும் பதார்த்தம் சுவாசக் குழாய்களின் சுவர்களைப் பாதிப்பதோடு சுவாசப் புற்று நோய் ஏற்படவும் காரணமாக அமைகின்றது. புகைத்தலால் வளிமாசடைதல், இருதய நோய்கள் ஏற்படுதல், குறைபாடுடைய குழந்தைகள் பிறத்தல் போன்ற தீய விழைவுகள் ஏற்படுகின்றன. இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க, சித்தர்கள் தமது பாடல்களில் அறிவுரை மருத்துவக் கருத்துக்களையும் கூறியுள்ளனர்.

“கஞ்சாப்புகை பிடியாதே – வெறி

காட்டி மயங்கி கட்குடி யாதே

அஞ்சவுயிர் மடியாதே பக்தி

அற்றவஞ் ஞானத்தினூல் படியாதே” (கடுவெளிச்சித்தர்)

முடிவுரை

  இந்துப் பண்பாட்டின் ஒரு அம்சமாக வளர்ந்த அறிவியல் சித்த மருத்துவமாகும். மேல் நாட்டு மருத்துவம் இந்தியாவில் செல்வாக்கு பெறுவதற்கு முன்னர் இந்துக்களுக்குரிய சிறப்பான மருத்துவமாக சித்த மருத்துவம் விளங்கியுள்ளது. இந்துக்களோடு வளர்ச்சி பெற்று வந்த இம் மருத்துவ அறிவியலானது இன்றும் நிலைபெற்றுள்ளது. குழந்தைகளுக்குரிய நோய், சிகிச்சை, குழந்தை வளர்ப்பு முதலிய விடயங்களைப் பால மருத்துவம் என்ற பகுதியில் சித்த மருத்துவம் கூறுகின்றது. விசமுறிவு வைத்தியமும் சித்த மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். சித்த மருத்துவத்தில் ஆராயப்படுகின்ற நோய்கள், மருத்துவ முறைகள், நாடிப் பரிசோதனை, பயன்படுத்தப்படும் மூலிகைகள், நோய்களுக்கான மருந்துகள், மருந்து தயாரிக்கும் முறைகள், சுத்தி முறைகள், மருந்துகளுக்கான அளவை முறைகள், உடல் உள நலனைப் பேணுவதற்கான வழிமுறைகள், தியானம், யோகப்பயிற்சி  முதலான நோய் தடுப்பு முறைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே சித்த மருத்துவமானது, இந்து அறிவியலில் போற்றப்படுகின்றது.

 உசாத்துணை

1.             இராமச்சந்திரன்.எஸ்.பி, 2000, ஷஷஉயிர் காக்கும் சித்த மருத்துவம், தாமரை நூலகம் 7, என்.ஜி.ஓ காலனி,வடபழனி, சென்னை 600026.

2.             ஈஸ்வரி.ஏ.ஆர்,2009, இந்திய மருத்துவம், அறிவுப்பதிப்பகம்.

3.             பாலசுந்தரம்.இ,1990, இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள், நாட்டார் வழக்கியல் கழகம், யாழ்ப்பாணம்.

4.             மகாலட்சுமி.சி, 2003, சித்த மருத்துவ விளக்கம், நர்மதா வெளியீடு.

5.             மாத்தளை சோமு, 2005, வியக்கவைக்கும் தமிழர் அறிவியல், உதகம் (உலகத் தமிழாய்வுக் கழகம்)

6.             உலகத் தமிழ் மாநாடு விழா மலர்,( கட்டுரை- ஷஷ திருமூலர் அருளிய மருத்துவத் திருமந்திரம் எண்ணாயிரம்|| கட்டுரை ஆசிரியர்- சண்முகவேலன்.ஆ) 1963, சென்னை.

7.             உலகத் தமிழ் மாநாடு விழா மலர்,( கட்டுரை- ஷஷ சித்த மருத்துவத்தின் வயது சுத்தி முறை ஆய்வு|| கட்டுரை ஆசிரியர்- சிதம்பரம்.சி) 1963, சென்னை.

8.             உலகத் தமிழ் மாநாடு விழா மலர்,( கட்டுரை- ஷஷ சித்த  மருத்துவத்தில் வர்ம பரிகாரம்|| கட்டுரை ஆசிரியர்- தேவசகாய ஆசான்) 1963, சென்னை.

9.        http://www.kanavy.com

10.       http://www.tamilkalanjiyam.com