4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஏப்ரல், 2023

வள்ளுவரின் பல்துறைப் பார்வை - திருமதி.சி.விஜயலெட்சுமி

 

வள்ளுவரின் பல்துறைப் பார்வை

திருமதி.சி.விஜயலெட்சுமி எம்.ஏ., எம்.பில்.,

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

சைவபானு சத்திரிய கல்லூரி,

அருப்புக்கோட்டை.

ஆய்வுச்சுருக்கம்

         இந்திய தத்துவ மரபு நால்வகை உறுதிப் பொருள்களை மனித வாழ்வின் பயனாகக் கருதுகின்றது.  அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். இவற்றை மனிதன் தன் வாழ்வில் கடை பிடிப்பதற்கு எளிமையான வழியைக் கூறும் நூலே திருக்குறள். பல செம்மையான கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்நூலில் வள்ளுவர், அவர் வாழ்ந்த காலம் மற்றும் அதற்கு முந்தைய காலத்திலும் பல சான்றோர்கள் பல நூல்களை இயற்றியுள்ளனர் என்றும் அவற்றை மனிதன் கற்று, அதன்படி நடந்து வாழ்வில் மேன்மையுற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  “வள்ளுவரின் பல்துறைப் பார்வை” எனும் இக்கட்டுரை, நூல், பனுவல், அறம், உரைசான்ற நூல், நுண்ணிய நூல், நிரம்பிய நூல், இலங்கு நூல் என்று பல துறை நூல்களைப் பற்றியும், நூலோர், நூல்வல்லன் என்னும் பதத்தை பல இடங்களில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள விதத்தையும், அதன் பொருளையும் ஆய்வு செய்கிறது.

முன்னுரை

            மனிதன் தான் தோன்றிய காலம் முதல் தன் உணர்வுகளையும், மனக்கருத்துகளையும், தனது வாழ்வின் அனுபவங்களையும், பிறரிடமிருந்து தாம் கற்றறிந்ததையும், தனக்குப் பின்வரும் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் எழுத்துருவமாக்கி பதிவு செய்து வந்தான்.  இவையே பிற்காலத்தில் நூல்களாக உருவெடுத்தன.  நூல்களின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

“நூலி னியல்பே நுவலி னோரிரு

பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்

நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி

ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ

டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்

என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை

விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே”  (நன்னூல் – 4) *1

          ஒரு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் அளவிற்கு தமிழ் இனம் அறிவு வளர்ச்சி  பெற்றிருந்தது.

மலைப்பாறைகள், களிமண், இரும்புத்தகடுகள், செப்புத்தகடுகள், மரப்பலகைகள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றில் எழுதி வந்த மனிதன், படிப்படியாக அறிவியல் முன்னேற்றம் பெற்று எழுதுவதற்குக் காகிதத்தைப் பயன்படுத்தினான்.  அச்சு இயந்திரங்களின் உதவியால் நூல்கள் அச்சுரு பெற்றன.  நூல்களைப் பலபிரதிகள் எடுப்பதற்கும் அவை உதவின.  தற்போதைய நாகரீக மனிதன் மின்னூலின் மூலம் இணையதளத்திலேயே புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து வாசிக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளான்.  இவ்வாறு காலங்கள் பல கடந்து, நூல்களின் உருவாக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தனது கருத்துகளை எழுத்துவடிவில் உலகோர் அறியும் வண்ணம் ஒருநூலாக வடிவமைக்கும் முயற்சி மட்டும் மனிதனிடம் இன்றளவும் இருந்து கொண்டே உள்ளது.

நூலாசிரியர் - திருவள்ளுவர்

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”  (பாரதியார்) *2

“திருவள்ளுவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சீரிய கொள்கை பிறந்த பெருந்தமிழ்க்குடியில் தோன்றியவர்.  அவர் நெஞ்சம் சாதி, மதம், நிறம், மொழி, நாடு முதலிய சிறுமை கட்டுகளில் படிந்து கிடக்கவில்லை.  அவர் நெஞ்சில் பரந்த உலகே படிந்து கிடந்தது. அது திருக்குறள் என்னும் நூலாக உருக்கொண்டது” (திரு.வி.க- திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு    ப-956)*3 திருக்குறளில் கூறப்படும் கருத்துகள் காலங்கடந்தவை.  சுமார் 2050 ஆண்டுகளுக்கு பிறகும் அதன் கருத்துகள் புதுமை மிகுந்ததாகவும், அதைக் கற்போருக்கு ஊக்கம் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளன.  “தமிழ் மொழி என்றொரு மொழி உலகில் இருப்பதை உணர்த்தியது திருக்குறள் தான். திருக்குறள் தோன்றியதால் தமிழுக்குப் பெருமை” என்று (ச.வே- சுப்பிரமணியன் - திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு  ப-956)*4 புகழாரம் சூட்டுகிறார். இத்தகைய பெருமை வாய்ந்த திருக்குறளில், திருவள்ளுவர் பல இடங்களில் பலவிதமான நூல்கள் குறித்து கூறியுள்ளார்.  மேலும், நூலோர், நூல்வல்லன் என்னும் பதத்தையும் பயன்படுத்தி உள்ளார்.

அறநூல்கள்

மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்கமுறைகளின் தொகுதியே அறம் ஆகும்.  அறக்கருத்துகளைக் கூறக் கூடிய நூல்கள் திருவள்ளுவரின் காலத்திலேயே பல இருந்திருக்கின்றன என்பதை நாம் திருக்குறளின் வழியே அறியலாம்.

                                    “புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்

                                    அறம் கூறும் ஆக்கம் தரும்”   (குறள் - புறங்கூறாமை – 183)

            பிறனைக் காணாத வழி இகழ்ந்து உரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்தலின், அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். இங்கு அறம் என்னும் சொல், பலஅறநூல்களைக் குறிக்கிறது.

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

                                    வேண்டும் பனுவல் துணிவு”   (குறள் - நீத்தார்பெருமை – 21)

தமக்குரிய ஒழுக்கத்தின் கண் நின்று துறந்தாரது பெருமையை, விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமிது என விரும்பும் நூல்களது துணிவு.  இங்கு பனுவல் என்னும் பதம் அறநூல்களையே குறிக்கிறது. 

                                    “பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்

                                    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் - கொல்லாமை – 322)

            உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுந்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், அறநூலுடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம். இக்குறட்பாவில் நூலோர் என்பது பல அறநூல்களை இயற்றியவர்கள் என்னும் பொருளில் வந்துள்ளது.

மனுநீதி நூல்கள்

            ஒரு நாட்டை ஆளும் மன்னன், அமைச்சன், ஒற்றன், படைவீரன், மக்கள், அரண், கொடை போன்றவை எங்ஙனம் இருக்க வேண்டும் என்பதை கூறுவதே மனுநீதி நூல்கள் ஆகும். திருவள்ளுவர், திருக்குறளில் மனுநீதியைக் கூறியதோடு, பல மனுநூல்கள் இருந்தன என்றும் கூறியுள்ளார். 

                                    “ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்

                                    தெற்றென்க மன்னவன் கண்”  (குறள் - ஒற்றாடல் - 581)

\       ஒற்றும், புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இரண்டனையும், அரசன் தன் இரண்டு கண்களாகக் கருத வேண்டும்.  இங்கு, உரை சான்றநூல் என்பதற்கு முறையமைந்தநூல் என்று மணக்குடவரும், மனுநீதி நூல் என்று பரிதியாரும் உரை எழுதுகின்றனர்.

                                    “மதிநுட்பம் நூலோடு உடையார்க் கதிநுட்பம்

                                    யாஉள முன்நிற் பவை”   (குறள் - அமைச்சு – 636)

    இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூல் அறிவோடு உடையராய அமைச்சருக்கு, மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பனயாவை உள? இக்குறட்பாவில் நூலோடு என்னும் சொல்லில் வரும் நூல் என்பதற்கு – பிறநூல்களை படிப்பதால் உண்டாகும் செயற்கை அறிவு என்று பொருள் கூறுகிறார் பரிமேலழகர். 

                                    நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

                                    வென்றி வினைஉரைப்பான் பண்பு”   (குறள் - தூது – 683)

 

            வேலையுடைய வேற்று அரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது, நீதி நூலை உணர்ந்த அமைச்சரிடைத்தான் அந்நூல் வல்லன் ஆதல்.  இங்கு நூலாருள் என்பது பலநூல்களையும் கற்றறிந்த அமைச்சர்களையும், நூல்வல்லன் என்பது அவ்வமைச்சர்களை விட பல நூல்களையும் கற்றுத் தெளிந்த தூதுவனின் அறிவையும் குறிப்பதாக உள்ளது.

மருத்துவ நூல்கள்

            நோய்களை குணப்படுத்தும் கலையுடன் கூடிய அறிவியலே மருத்துவம் ஆகும்.  நோய்கள் மற்றும் பல்வேறு மருத்துவம் சார்ந்த படிப்புகளும், மருத்துவ நூல்களும் இக்காலகட்டத்தில் பல உள்ளன.  திருவள்ளுவரின் காலத்திலும், நோய் குறித்தும், மருத்துவம் குறித்தும் பல நூல்கள் இருந்திருக்க வேண்டும்.

                                    “மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

                                    வளிமுதலா எண்ணி மூன்று”  (குறள் - மருந்து – 941)

            உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவினவன்றி அதனின் மிகுமாயினும், குறையுமாயினும், ஆயுள் வேதமுடையாரால் வாதம் முதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவனுக்குத் துன்பம் செய்யும்.  இக்குறட்பாவில் நூலோர் என்னும் சொல்லுக்கு ஆயுள் வேதத்தைக் கற்றவர்கள் என்று பொருள்.  எனவே மருத்துவம் குறித்த நூல்கள் “ஆயுள் வேதம்” என்று அழைக்கப்பட்டன என்பது தெளிவாகிறது.

பல்துறை நூல்கள்

திருக்குறளில் வேறு துறைகளைச் சார்ந்த, பல அறிவுடைய நூல்களையும் வள்ளுவர் கூறியுள்ளார்.

                                    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

                                    உண்மை அறிவே மிகும்”  (குறள் - ஊழ் - 373)

 

பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், அவனுக்குப் பின்னும் தன் ஊழானாகிய பேதைமை உணர்வே மேற்படும். இங்கு நுண்ணியநூல் என்பது பல துறை நூல்களைக் குறிக்கிறது.

                                    “அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய

                             நூல் இன்றிக் கோட்டி கொளல்”  (குறள் - கல்லாமை – 401)

 

     அரங்கினை இழையாது வட்டாடினாற் போலும், தான் நிரம்புவதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின் கண் ஒன்றனைச் சொல்லுதலைப் போன்றது. இங்கு நிரம்பிய நூல் என்பது தன் அறிவு நிரம்புவதற்கு ஏதுவாகிய பல துறை நூல்கள் என்னும் பொருளில் வருகிறது.

                                    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

                                    கற்றாரோ டேனை யவர்”  (குறள் - கல்லாமை – 410)

 

            விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மை உடையர் அத்துணை தீமை உடையர்.  விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.  இக்குறட்பாவில் இலங்கு நூல் என்பதற்கு விளங்கிய பல துறைநூல் என்றுபொருள்.

                                    “பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்

                                    தெப்பால்நூ லோர்க்கும் துணிவு” (குறள் - பொச்சாவாமை–533)

 

   பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழ் உடைமை இல்லை; அவ்வின்மை நீதி நூல் உடையார்க்கே அன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது.  இங்கு நூலோர் என்பதற்கு உலகத்தில் உள்ள எவ்வகைப்பட்ட நூல்களையும் கற்றவர் என்பது பொருளாகும்.

                                    “வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

                                    நுண்அவை அஞ்சு பவர்க்கு” (குறள் - அவைஅஞ்சாமை – 726)

    வன்கண்மையுடையவர் அல்லாதவர்க்கு வாளொடுஎன்ன இயைபு உண்டு? அது போல நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலொடு என்ன இயைபு உண்டு?  இக்குறட்பாவில், அஞ்சுபவன் என்பதற்கு நூல்களைக் கற்காதவன் என்று பொருள் கூறுவதன் மூலம் மனத்திட்பத்தை உண்டாக்கும் நூல்கள் இருந்தன என்று அறியலாம்.

                                    “பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்

                             தஞ்சும் அவன்கற்ற நூல்” (குறள் - அவைஅஞ்சாமை – 727)

                                                                                                                                                                                                       

            எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடிபிடித்த கூர்வாளை ஒக்கும், சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்றநூல்.  இக்குறளில் கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பு குறையும் என்கிறார் வள்ளுவர்.

                                    நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

                                    பண்புடை யாளர் தொடர்பு”  (குறள் - நட்பு – 783)

 

            நற்குணமுடைய மக்கள் தம்முட் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் செய்தல் போல நூற் பொருள் கற்குந் தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலை தரும்.  இக்குறட்பாவில் நூலானது கற்ககற்க கற்பவருக்கு இன்பம் தரும் என்று நூலின் பெருமையைக் கூறியள்ளார் வள்ளுவர்.

முடிவுரை

            திருக்குறள் ஓர் அறநூலாக இருப்பினும், வள்ளுவர் தம் நூலில் அறநூல்கள், மனுநீதி நூல்கள், மருத்துவ நூல்கள் மற்றும் பலதுறைப்பட்ட நூல்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் திருக்குறள் உருவானகாலத்தில் பலவகையான நூல்கள் இருந்துள்ளன என்பதையும் நூலோர், நூல்வல்லன் என்று குறிப்பிடுவதன் மூலம் அந்நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களும் இருந்துள்ளனர் என்பதையும், கற்றறிந்தவர்களே சமுதாயத்தில் மதிக்கத்தகுந்தவர்கள் என்பதையும், கல்வி கற்றல் மனிதனுக்கு இன்றியமையாதது என்பதையும் வள்ளுவர் வலியுறுத்தியுள்ள தன்மையை நம்மால் நன்கு அறிய முடிகிறது. மேலும் வள்ளுவரின் பல்துறை சார்ந்த அறிவாற்றலும் நன்கு வெளிப்படுகிறது.

பார்வைநூல்கள்

1. பவணந்திமுனிவர், நன்னூல்,  பாயிரவியல் – பொதுப்பாயிரம்.

2. பாரதியார், பாரதியார்கவிதைகள், (தேசியகீதங்கள், தமிழ்நாடு- 7.

3. கி. வா. ஜகந்நாதன் (2014)- மூன்றாம்பதிப்பு,  திருக்குறள்ஆராய்ச்சிப் பதிப்பு,ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்,– கோவை -641 020. தமிழ்நாடு, இந்தியா.

4. கி. வா. ஜகந்நாதன் (2014)- மூன்றாம்பதிப்பு,  திருக்குறள்ஆராய்ச்சிப் பதிப்பு,ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்,– கோவை -641 020. தமிழ்நாடு, இந்தியா.