4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மே, 2023

ஒடுக்கத்தூர் சப்தரிசீசுவரர் கோயில் - முனைவர் பீ. பெரியசாமி

 

ஒடுக்கத்தூர்  சப்தரிசீசுவரர் கோயில்

முனைவர் பீ. பெரியசாமி

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,

ஆரணி

அமைவிடம்

          ஒடுகத்தூர், வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு வட்டத்தில், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே வேலூர் 48 கிமீ; மேற்கே ஆம்பூர் 19 கிமீ; வடக்கே குடியாத்தம் 33 கிமீ; தெற்கே மேலரசம்பட்டு ஊராட்சி 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் குடியாத்தத்தில் உள்ளது.


ஒடுக்கத்தூர்  சப்திரிசீசுவரர் கோயில்

 

          கலிகாலம் இறுதிஅடையும்போது பொய், களவு, காமம் முதலிய தீயவையெல்லாம் மிகும். இத்தகைய காலத்தில் மக்களோடு வாழ்ந்து அவர்களைச் சீர்திருத்த இயலாது. அவர்களோடு சேர்ந்து வாழ்தலால் தங்களது தூய்மையும் கெடும் என்னும் கருத்தில் ஞானியர் தம்மை ஒடுக்கிக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் ஒடுங்கியது சப்தரிசிசுவரர் கோயிலாக விளங்கிற்று.

 

          இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோயில் வழிபாடு சிறப்புற நடைபெற்று வருகின்றது. கார்த்திகை விளக்கீடு, திருவாதிரை, தைப்பொங்கல் ஆகிய விழாக்கள் இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவக்கிரக வழிபாடு இங்குத் தனிப்பெரும் விதமாக நடைபெற்று வருகிறது.

ஒடுக்கத்துச் செறிவாய் (ஒடுக்கத்தூர்)

மூலவர் : சப்தரிஷீஸ்வர்

அம்பாள் : அபிதகுஜாம்பாள்


சப்த ரிஷிகள் : காச்யபர், அத்ரி, பரத்வாஜ், கௌதமர், வசிஷ்டர், வால்மீகி,அகத்தியர் ஆகியோர் வந்து வழிபட்டதால் மூலவருக்கு சப்தரிஷீஸ்வர் எனும் பெயரென்பர். இக்கோயில் 11ம் நூற்றாண்டில் கட்டப் பெற்ற கோவிலாகும். கோவிலிற்குள் வினாயகர், சப்தமாதர், அய்யனார்,காளி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதிகள் உள்ளன.


இத்தலத்திற்குரிய திருப்புகழ் பாடல் : ஒன்று : எண் : 987

தனத்தத் தத்தன தாத்த தத்தன

தனத்தத் தத்தன தாத்த தத்தன

தனத்தத் தத்தன தாத்த தத்தன …… தனதான

வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு

மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்

வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள …… வதனாலே

மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்

சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை

மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் …… மதியாதே

கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு

சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்

கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது …… கரிசாணி

கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு

பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்

கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை …… யொழியேனோ

அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை

நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்

அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன …… கிரிதோய்வாய்

அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்

சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்

அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி …… லுறைமாயன்

உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்

விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்

உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் …… மருகோனே

உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்

மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்

ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை …… பெருமாளே.

வழக்காடும் சொற்களில் பயின்றுள்ளதால் வஞ்சனைக்கு இடமான மருந்துகளையும் பச்சிலைகளையும் ஊட்டுகின்ற பயலினிகள். (ஆண்களைத் தம் பால்) வளைத்து இழுத்து, மன்மதனுடைய காம நூலில் கூறியுள்ள வஞ்சக வழிகளால் (தம்மிடம் வந்தவர்களின்) கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்க வல்லவர்கள். சுகத்தை அடைந்து வஞ்சிப்பவர்கள். ஊரில் தம்மைத் துதிப்பவர்களை மயக்கி சூது நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவர்கள். மதிப்பு வைக்காமலே கழுத்தைக் கட்டி, ஏமாற்றி, நட்பு காட்டிச் சிரித்து, பல்லில் (வெற்றிலை உண்ட) கறையைக் காட்டி, கையில் உண்டான பொருளைப் பிடுங்கி, அது ரத்தினக் கல்லானால் (அதன்) நிறம் முதலியனவற்றையும், (தங்கம் கிடைத்தால்) அதன் மாற்றறிய உரைத்துப் பார்க்க, குற்றம் இவைகளை அறிய உரைகல்லால் உரசி, கணக்குப் பார்த்து, காலம் கடத்தி, ஒரு சண்டை இட்டு, குழப்பம் உண்டு பண்ணும் விபசாரிகள். இந்த வேசிகளுடன் ஒருங்கே இணைந்து புக்கிருக்கும் பாழான புத்தியை நான் விலக்க மாட்டேனோ? நெருப்பு போன்ற கண்ணையும் பொய்யையும் சூதையும் கொண்ட, மடமை நிறைந்த அசுரர்களை நசுக்கிப் பொடியாகும்படி முறித்துத் தள்ளி, அந்தக் கணத்திலேயே அவர்களை அழித்து, குறப் பெண் வள்ளியின் அழகிய மார்பாகிய மலையைத் தழுவுவனே, தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு(*1) சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும், கடலில் (ஆதி சேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு (முனிவர் உருவில் வந்தபோது) (லக்ஷ்மியாகிய) மானின் இடத்தே பிறந்த அழகிய கொடி போன்ற சிறந்த குயில் அனைய வள்ளியின் மீது காதல் கொண்டு அவளை அணைந்த தோளை உடைய கருணைக் கடலே, உறிக்குள்ளே கையை நீட்டிய (வெண்ணெய் திருடிய) கண்ணனின் மருகனே, உண்மைப் பொருளைத் தெரிவிக்க (ருத்திர சன்மன் என்னும்) செட்டியாக(*2) பல சங்கப் புலவர்கள் கூறிய தமிழ்ப் பொருள்களை ஆராய்ந்து மதித்து, நிறைந்த நால்வகைக் கவிகளிலும்(*3) வல்ல கவிகளுடன் சேர்ந்து, ஒடுக்கத்து செறிவாய்(*4) என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

1.   திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்டனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும். ஆழ்வாரின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, அவரது கவியின் ஈற்றடியில் வசப்பட்டு, காஞ்சியிலிருந்து வெளியேறியும் மீண்டும் குடியேறியும் செய்ததனால் பெருமாளுக்குச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது.

2.   மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் திருவிளையாடல் புராணம்.

3.   தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் இனிமை வாய்ந்தது,சித்திரம் கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் வர்ணனை மிக்கது.

சப்தரிஷிகளும் பூஜித்த ஒடுக்கத்தூர்

          புராண காலத்தில் இந்தத் தலம் ஒடுக்கத்துச் செறிவாய்என்று அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் அது மருவி இப்போது ஒடுக்கத்தூர்என்று அழைக்கப்படுகிறது. சடாரண்ய தளங்களுக்கு செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது. சிறிய கோவில்தான். ஆனால், கீர்த்தியில் பெரிய கோவில். ஆம். அருணகிரிநாதர் தனது பாதங்கள் நோக நடந்து வந்து சேவித்த ஈசன் இவர். இங்கு இருக்கும் முருகப் பெருமானை தனது சிங்கார தமிழால் பாடி இருக்கிறார் சுவாமிகள்.

         இந்த கோவிலுக்கு ராஜ கோபுரமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஈசனுக்கு எதிரில் நின்று அவரை தரிசிக்கும் போது, வலது பக்கம் திரும்பினால், அம்பிகையையும் தரிசிக்கலாம். இப்படியோர் அமைப்பு இருப்பது அபூர்வமானது. பிராகாரத்தில், அருணகிரிநாதரால் பாடப்பட்ட ஆறுமுகத்து எம்பிரான், ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறான்.

          சிவராத்திரி அன்று, சப்த ரிஷிகள் தனித் தனியாகவும் சேர்ந்தும் பூஜித்த இறைவனை பார்க்க செல்லும் பக்தர்கள் நிச்சயம் தரிசிக்க வேண்டிய மற்றொரு கோவிலும் இருக்கிறது. திருவலம்என்பது அந்தக் கோவிலின் திருப்பெயர். திருஞான சம்பந்தராலும், அருணகிரிப் பெருந்தகையாலும் போற்றிப் புகழப்பட்ட திருத்தலம் இது. வேலூரில் இருந்து பத்தொன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஆலயம். அம்மையும் அப்பனுமே உலகம் என்று அவர்களை சுற்றி வந்து, விநாயகர் கனி வாங்கினார் இல்லையா? அவரை அந்த வெற்றிக் களிப்புடனும், வெற்றிக் கனியுடனும் இங்கே தரிசிக்கலாம்.

          அர்ச்சகர் ஒருவர், இறைவனின் பூஜைக்காக அபிஷேக நீர் எடுத்து வரும்போது, ஓர் அரக்கன் அவருக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுத்தான். அர்ச்சகர் இறைவனிடம் முறையிட்டார். ஈசன் உடன் தனது வாகனமான நந்தியை அனுப்பி, அந்த அசுரனை அழித்தார்.

          இறைவனின் ஆணையை ஏற்று போருக்கு கிளம்பும் கோலத்தில், இறைவனுக்கு எதிர்திசையை நோக்கியபடி இருக்கும் நந்தியை இன்றும் கோவிலில் காணலாம். சிவானந்த மவுன குரு சுவாமிகளின் சமாதியும், கோவிலின்அருகிலேயே உள்ளது.வருகின்ற சிவராத்திரியில், சப்த ரிஷிகள் தனித்தனியாகவும், சேர்ந்தும் பூஜித்த இறைவனை கண்ணாரக்கண்டு மனமார போற்றி, கைலாயம் சென்று வந்த புண்ணியத்தைஅடைவோம்.