4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மே, 2023

தமிழ் மொழி வளர்ச்சியில் சமணர்களின் பங்களிப்பு - இராசரத்தினம். கிருபாகரன்

 

தமிழ் மொழி வளர்ச்சியில் சமணர்களின் பங்களிப்பு

 

இராசரத்தினம். கிருபாகரன்

இளங்கலை மாணி (மெய்யியல்)

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

 

ஆய்வுச்சுருக்கம்

ஒவ்வொரு மொழியும் அதைப் பேசுகின்ற மக்களின் கருத்து மற்றும் பண்பாட்டிற்கு ஏற்ப வளர்ச்சியடைகின்றது. மக்களின் பண்பாடுகளும், கருத்துக்களும் பெரும்பாலும் அவர்கள் சார்ந்துள்ள சமயக் கொள்கையை ஒட்டியே அமைகின்றன. பண்டைக்காலத்தில் இலக்கியங்களை வளப்படுத்துவதில் சமயங்கள் முதன்மையானவையாக விளங்கின. சமயங்களின் வழியாக கொள்கைகள் வளர்ந்தன. இக் கொள்கைகள் அக்கால மக்களின் இலக்கியங்களிலே இடம்பெற்றன. இந்த முறைப்படியே தமிழ் மொழியும் பண்டைக் காலத்தில் சமயங்கள் சார்பாக வளர்ந்து வளம் பெற்றது. இந்தவகையில் தமிழ் மொழி வளர்ச்சியில் சமண சமயத்தின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் பிற சமயங்களின் தமிழ்ப்பணி பற்றித் தமிழ் இலக்கிய வரலாற்றில் விரிவான ஆராய்ச்சிகள் இடம்பெற்றுள்ள போதிலும் சமண சமயத்தாரின் தமிழ்ப் பணி பரந்தளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் இவ் ஆய்வுக்கட்டுரை சமணர்கள் தமிழுக்குச் செய்த பணிகளைப் பொது நிலையில் சுட்டிக் காட்டுவதுடன் தமிழ் இலக்கியங்களில் சமணர்கள் பற்றிப் பதிவாகியுள்ள செய்திகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சமண சமயத்தின் வாயிலாக தமிழ்மொழி அடைந்த வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

திறவுச் சொற்கள்: சமண சமயம், தமிழ்மொழி, தமிழ்ப்பணி, நூல்கள்  

அறிமுகம்

சமண சமயமானது அதிகளவில் சமயம் சார் சிந்தனைகளை முன் வைத்திருந்தாலும் கூட தமிழ் மொழி வளர்ச்சியல் தனது பங்களிப்பினை வழங்கத் தவறவில்லை என்றால் மிகையாகாது. தமிழை தாய் மொழியாகக் கொண்ட பிராமணர்கள் தமது நூல்களைப் புரியாத மொழியில் எழுதினார்கள். மக்கள் படித்தால் புனிதம் கெடும் என்றனர் பிறர் அதனைத் தீண்டக் கூடாது. வேதத்தைச் சூத்திரன் ஒருவன் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேணடுமென்றனர். ஆனால் சமணரும் பௌத்தரும் மக்களது பேச்சு மொழியில் தொடர்பு கொண்டனர். அந்தந்த நாட்டு மொழியைக் கற்று அவற்றில் நீதிநூல், சிற்றிலக்கியம், காவியம், இலக்கணம், நிகண்டு, புராணம் முதலியவற்றை இயற்றினர். அவற்றின் வழியே தமது கொள்கைகளைப் பரப்பினர். தமிழில் நீதி நூல்கள் பெருக அவர்களே காரணம். அவ்வாறே சிலம்பு, சிந்தாமணி, நீலகேசி முதலிய காப்பியங்களையும், சூடாமணி, பிங்கல நிகண்டுகளையும், ஸ்ரீபுராணம், சாந்திபுராணம் என்னும் புராணங்களையும், யாப்பருங்கலம், யாப்பருங்கலவிருத்தி, காரிகை, நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் இயற்றியுள்ளனர். சமணப் புலவர்கள் அனைவருக்கும் பொதுவான அறங்களை எடுத்துக் கூறினர் இதனால் சமணக் கொள்கைகள் அதிகம் பரவின.

 ஏறத்தாழ இருபத்திரண்டு இலக்கிய நூல்களையும், இருபது இலக்கண நூல்களையும், பதினாறு அறநூல்களையும், நான்கு தர்கக் நூல்களையும், ஒன்பது இசை நூல்களையும், முப்பத்தைந்து பிற இலக்கிய நூல்களையும் தந்துள்ளனர். குறிப்பிட்ட சில நூல்கள் மறைந்தொழிந்துள்ளன. (தமிழரசு: 01.11.1974, தீபாவளி சிறப்பிதழ்) இந் நூல்களின் வாயிலாக தமது சமய அறக்கருத்துக்களை வலுப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யமடையச் செய்ததுடன் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பங்காற்றினர்.

 

உலகிலுள்ள அனைத்து சமயங்களும் தமது சமயத்தினை பரப்புவதற்கான கொள்கைகளை முன்வைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தன. இதன்வழியில் சிந்திக்கும் போது பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, விடுதலை, ஆன்மா போன்ற சமயம் சார் சிந்தனைகளை மாத்திரம் ஆராய்ச்சிக்கு எடுக்காமல் சமண சமயம் தமிழ்மொழி வளர்ச்சியில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதனை முன்வைப்பதாக இவ் ஆய்வு கட்டமைக்கப்பட்டுள்ளது.

 இந்தவகையில் இவ் ஆய்வானது சமண சமயம் தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டு ஓர் பண்புசார் ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'சமணர்கள் தமது சமயக் கொள்கைகளின் மூலம் மதம் பரப்புவதனை பிரதான நோக்கமாக கொண்டிருந்தாலும் தமிழ்மொழி வளர்ச்சியில் பெரிதும் செல்வாக்கு செலுத்தினர்' என்ற கருதுகோளின் அடிப்படையில் சமண சமயம் தமிழுக்குச் செய்த அரும் பணிகள் எவை? சமணர்கள் இயற்றிய இலக்கண நூல்கள், காப்பிய நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள், கேசி நூல்கள், புராணங்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் எத்தகைய தாகக்த்தினை ஏற்படுத்தியுள்ளன? தமிழ் இலக்கண, இலக்கியங்களில் சமணர்கள் பற்றி காணப்படும் குறிப்புக்கள் எவை? சமணர்கள் தமிழுக்குச் செய்த முன்னோடிப் பணிகள் யாவை? போன்ற வினாக்களை அடிப்படையாகக் கொண்டு சமண சமயம் தமிழ்மொழி வளர்ச்சியில் ஆற்றிய பங்களிப்புக்களை  முன்வைப்பதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

 சமணசமயம்

 இந்திய மெய்யியல் வரலாற்றில் வேத இலக்கியங்களை முற்றாக மறுத்து புதிய தத்துவங்களை முன்வைத்த சிரமனப் பிரிவுகளில் முதன்மையான தத்துவமாக ஜைனம் அல்லது சமணம் காணப்படுகின்றது. ஜைனம் என்னும் சொல் 'ஜின்' என்பதிலிருந்து பெறப்படுகின்றது. ஜின் என்பது 'வெற்றியடைய' என்னும் பொருள் கொண்ட சமஸ்கிருத வேர்ச் சொல்லாகிய 'ஜி' என்பதன்  அடியாகப் பிறந்தவன் 'வென்றவன்' அதாவது தன்னுடைய வல்லுணர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கித் தன்னையே வென்றவன் என்னும் பொருள்படும். அதாவது வாழ்வின் கட்டுக்களையும் துன்பங்களையும் மெய்யறிவாலும் ஒழுக்க வாழ்க்கையாலும் வென்றவர்கள் ஜின்னர் என்று அழைக்கப்பட்டனர்.

சமணர் என்பதற்கு இன்பதுன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர், நட்பு, பகை அற்றவர், தன்னை இகழ்வாரை கோபித்தலும் புகழ்வாரைப் போற்றலும் இல்லாதவர், அன்பும் அருளும் நிறைந்தவர், இறப்பையும் பிறப்பையும் பொருட்படுத்தாமல் உலகில் நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்களின் எல்லாச் சுகங்களையும் துறந்தவர், அது மட்டுமன்றி ஐம்புலன்களையும் தன்வயப்படுத்தியவர், யான் எனது எனும் செருக்கினை அழித்தவர், எக்காரணத்தாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவர், ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காப்பவர் என்று விரிவான பொருள் கொள்ளலாம். இத்தகைய சமண தத்துவத்திற்கு முன்னோடிகளாக இருபத்திநான்கு தீர்த்தங்காரர்கள் விளங்குகின்றனர் என சமணம் கூறுகின்றது.

இவர்களுள் ரிஷபர், அஜித்நாதர், அரிஷ;நேமி, பார்ஷ;வநாதர், மகாவீரர் போன்றோர் அறியப்பட்டனர். இவர்களுள் மகாவீரர் தான் வரலாற்றிற்கு உட்பட்டவராகவும் சமய தத்துவம் தொடர்பில் ஆதாரபூர்வமான கருத்துக்களை கூறுபவராகவும் விளங்குகின்றார். மாவீரர் கி.மு ஆறாம் நூற்றாண்டில் மகதநாட்டில் வைசாலி எனும் இடத்தில் வாழ்ந்திருக்கிறார.; இது இன்று பீகாரில் பட்னாவுக்கு பதினெட்டு மைல் தொலைவில் உள்ள கிராமமாகும். இவர் சத்திரிய மரபில் ஆளுனர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சித்தாத்தர், தாய் திருசலா என்று அறியப்படுகிறது. இவர் யசோதை எனும் பெண்ணை மணந்து அனோஜா எனும் பெண் குழந்தைக்கு தந்தையாக இருந்ததாகவும் இவரது வரலாறு கூறுகிறது.

சமண தத்துவத்தின் சிறப்பு யாதெனில் வாழ்ககையைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறுவதாகும் விடுதலை அடைவதற்குரிய வழிகளுள் நல்லொழுக்கம் மிகவும் முக்கியமானதென்று சமணம் கூறுகின்றது. நல்லொழுக்கத்திலுள்ள ஐந்து பெரும் விரதங்களையும் துறவிகள் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லறத்தில் இருப்போர் அகிம்சை, உண்மை பேசுதல், திருடாமை ஆகிய மூன்றையாவது இறுக்கமாக கடைப்பிடித்தல் வேண்டும். இத்தகைய ஒழுக்க வாழ்க்கையாலும் மெய்யறிவாலும் பிறவியின் ஊற்றை அறிந்து கொண்டு இனியொரு பிறவி எடுக்காமல் முற்று முழுதாக அஜீவனிலிருந்து விலகுதல் விடுதலை எனக் குறிப்பிடுகின்றது. இத்தகைய சமய சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்து சமண சமயத்தை பரப்புவதே சமணர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அந்தவகையில் தமிழ் மொழியை கற்றது மட்டுமன்றி தமிழ் நூல்களைப் படைத்து அந்நூல்கள் வாயிலாக அறக்கருத்துக்களை முன்வைத்து தமிழ் மொழி வளர்ச்சியில் பங்காற்றியுள்ளனர்.  

சமணர்களின் தமிழ்ப் பணி

சமணர்களின் தமிழ்ப் பணி மிகச் சிறப்புடையதாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ் மீது சமணர்கள் காட்டிய அக்கறை மிகப் பெரியது. இவர்கள் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழிலே கொண்டு வந்து தமிழிலே புதுமை படைத்தார்கள். சமணர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியினை பேராசிரியர். கு. அறவாணன் அவர்கள் இலக்கணப் பணி, இலக்கியப் பணி, அற இலக்கியப் பணி, உரைப் பணி என நான்கு வகைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்தியம்பிய கால்டுவெல் துரை மகனார் தம் நூலில் 'சமண சமயம் தழிழகத்தில் சிறப்புற்று விளங்கியது அரசியலில் அல்ல கல்வித்துறையிலும் அறிவுத்துறையிலுமேயாகும். உண்மையில் அவர்களின் காலமே தமிழ் நாகரீகத்தின் பொற்காலம்' எனப் போற்றியுள்ளார்.

தமிழுக்கு நிலையான தொண்டு செய்தோரில் குறிப்பிடத்தக்கோராக சமணர்கள் திகழ்கின்றனர். அவர்கள் தொடாத துறையில்லையென்று சுருங்கச் சொல்லலாம். நீதி நூல்களையும், சிறு நூல்களையும், இலக்கண நூல்களையும், காவியங்களையும், நிகண்டுகளையும் எழுதியதோடு பழைய நூல்கட்குச் சிறந்த உரைகளையும் வகுத்துள்ளனர். 

 2018ம் ஆண்டில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் புகைப்பட ஆவணப் பிரிவு புதுச்சேரியில் காணப்படும் சயமத் தளங்களைக் கொண்ட புகைப்படத் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. இதன்முலம் எண்பத்திரண்டு சமணர் துணைத்தளங்கள் உட்பட நானூற்று அறுபத்து நான்கு சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சமணர்களின் கட்டடக்கலை, கலாசாரம், பண்பாடு என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு சமணர்கள் ஆற்றிய பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சங்கங்களின் வாயிலாக சமணர்களின் தமிழ்ப் பணி

 பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் என்ற செய்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் சமணர்களும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் என்பது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கும். சமணத் துறவிகள் திரமிள சங்கம் (தமிழ சங்கம்) என்ற ஒன்றை உருவாக்கித் தமிழ்ப்பணி ஆற்றினர். இச்சங்கத்தைத் திராவிட சங்கம் என்றும் கூறுவர். பழங்காலத்தில் சமணத் துறவிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் சமண சங்கமானது நந்திகணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டது. இதனை,

 'கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமணா

சுகனநந்தியும் குணகநந்தியும் திவணநந்தியும் மொழிகொளா

ஆகன நந்தியர்'

 என்றும்,

 'சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர்

கந்துசேனனும் கனகசேனனும் முதலாகிய பெயர்கொளா'

 என்றும் சம்பந்தர் நிறுவியுள்ளார்.

 இவற்றுள் நந்தி கணம் புகழ் மிக்கது. கி.பி. 470இல் மதுரையில் நந்தி கணத்தை இரண்டாகப் பிரித்துப் புதிய பிரிவுக்குத் திராவிட கணம் என்று பெயரிட்டு வச்சிர நந்தி நிறுவினார். இவர்களில் யட்சி, ஆர்யாங்கனை, சந்தியார் என்னும் பெண் துறவிகளும் இருந்தனர். இவர்கள் ஊர்தோறும் சென்று தமிழ்ப் பணி புரிந்தனர். வச்சிரநந்தி நிறுவிய இச் சங்கமும் பாண்டியர்கள் அமைத்த தமிழ்ச் சங்கமும் ஒன்று என்றும், வேறு என்றும் இரு வேறு கருத்துகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலவி வருகின்றன.

சங்க காலத்தில் சமணர்களின் தமிழ்ப்பணி

 சங்க காலத்தில் நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் போனற் புலவர்கள் அறியப்படுகின்றனர்.    இவர் நற்றிணையில் முந்நூற்று எண்பத்திரண்டு ஆம் செய்யுளை இயற்றி உள்ளார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் நிகண்டு நூல் ஒன்றை எழுதினார் என்றும் மானின் கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் (ஊன்றுகோல்) கொண்டார் என்றும் கூறுவர். இக்காரணங்களினால் இப்புலவர் நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டார் என்று பின்னத்தூர் .நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார். 

ஆனால், மயிலை. சீனி.வேங்கடசாமி என்ற அறிஞர் இக்கருத்தைப் பின்வருமாறு மறுத்துரைக்கிறார். நிகண்டு நூல் எழுதியமையால் இப்புலவர் நிகண்டனார் என்று அழைக்கப்படவில்லை. நிகண்டன் என்றால் சமண சமயத்தவர் என்பது பொருள். அதுபோல் இப்புலவருக்குக் கலைக்கோட்டுத் தண்டம் என்ற பெயரும் மான் கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் கொண்டமையால் ஏற்பட்ட பெயர் அன்று. கலைக்கோட்டுத் தண்டம் என்பது ஓர் ஊரின் பெயர். எனவே இவ் அறிஞர் கருத்தின்படி இப்புலவர் கலைக்கோட்டுத் தண்டம் என்ற ஊரைச் சார்ந்த சமண சமய நிகண்டவாதி என்பது புலனாகின்றது.

 உலோச்சனார் என்பவரும் சங்க காலப் புலவர் ஆவார். சங்க நூல்களில் இவர் பாடிய பாடல்கள் முப்பத்தைந்து இடம் பெற்றுள்ளன. அவற்றில் நற்றிணையில் இருபது பாடல்கள், குறுந்தொகையில் நான்கு பாடல்கள், அகநானூற்றில் எட்டு பாடல்கள், புறநானூற்றில் மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. சமணர்கள் துறவு மேற்கொள்வதற்கு முன் தீட்சை பெறுவது வழக்கம். அப்பொழுது உண்ணா நோன்பிருந்து தலைமுடியைக் கையினால் பிடுங்கி நீக்குவர். இச்சடங்கை, லோச்சு என்று சமணர்கள் குறிப்பிடுவர். இப்பெயர் உலோச்சு என்று தமிழில் வழங்கியது. இச்சடங்கை இப்புலவர் மேற்கொண்டார். எனவே இவர் உலோச்சன் என்று அழைக்கப்பட்டார். மரியாதைப் பன்மை விகுதியான 'ஆர்' சேர்த்;து உலோச்சனார் என்று இப்புலவர் அழைக்கப்பட்டார். எனவே இவரும் சமண சமயத்தவர் என்பது புலனாகின்றது.

புதினெண்கீழ்க் கணக்கிலடங்கிய திணைமாலை நூற்றைம்பதைப் பாடிய புலவர் ஏலாதி ஆசிரியராகிய கணிமேதாவியாரேயாவர். நாலடியாருக்கு அதிகாரம் வகுத்த பெருமை பதுமனார் என்னும் சமணரைச் சாரும். இன்னும் சங்க நூல்களில் காணப்படும் பல பாக்கள் சமணர்களால் எழுதப்பட்டவை என்ற கருத்தும் நிலவுகின்றது.

 அற நூல்கள் வாயிலாக சமணர்களின் தமிழ்ப் பணி

சமணர்கள் தமிழில் அற நூல்களைத் தோற்றுவித்து தமிழர்கள் மத்தியில் அறக்கருத்துக்களை பரவலடையச் செய்தனர். அந்தவகையில் திருக்குறளிலும் சமண சமய செல்வாக்கு காணப்படுகின்றது. தமிழிலுள்ள நீதி நூல்களில் தலைசிறந்தது திருக்குறளாகும். திருவள்ளுவரது சமயம் இன்னதெனத் துணிய இயலவில்லை என்றாலும் சமணர்கள் போற்றிய கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, கள்ளாமை முதலிய அறங்கள் வள்ளுவரால் கூறப்பட்டுள்ளன. புலாலையும் கள்ளையும் பண்டைச் சான்றோர் கண்டிக்கவில்லை. சமண சமயச் செல்வாக்கினாலேயே இத்தகைய கொள்கைகள் வேரூன்றின எனலாம். எனவே சமண சமயக் கொள்கைகள் சிலவற்றை வள்ளுவர் ஏற்றுக்கொண்டார் என்றால் தவறாகாது. இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கும் போது வள்ளுவத்தை வளப்படுத்தியதில் சமண சமயத்துக்கும் பங்குண்டு எனலாம்.

வள்ளுவத்துக்கு அடுத்த நிலையில் போற்றப்படும் அறநூல் நானூறு வெண்பாக்களையுடைய நாலடியாராகும். இந்நூலைச் சமண முனிவர் பலர் எழுதினர் என கூறப்படுகின்றது. இதன்கண் சமண சமயத்தின் கொள்கைகள் அழகாக வலியுறுத்தப்படுகின்றன. திருவள்ளுவர்போலவே எல்லார்க்கும் ஒத்த அடிப்படை அறங்களை இந்நூலும் கூறுகின்றது. மேலும் தமிழில் வழங்கும் சிறந்த பழமொழிகளில் நானூற்றினைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வெண்பாவைப்பாடி நானூறு வெண்பாக்களடங்கிய பழமொழி நானூறு என்ற நூலை முன்றுறை அரையனார் என்ற சமணப் பெரியார் இயற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

 

கணிமேதாவியார் என்னும் புலவர் ஏலாதி என்ற நூலை இயற்றியுள்ளார். இந்நூலின் செய்யுள் ஒவ்வொன்றிலும் ஆறு அறங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வாசிரியர் சமணர் என்பது இதிலுள்ள வாழ்த்துச் செய்யுளால் அறிய முடியும். ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து அறங்களைக் கூறும் நீதி நூல் சிறுபஞ்சமூலமாகும். இதன் ஆசான் கணிமேதாவியாரின் மாணாக்கர் காரியாசான் ஆவார். இந்நூலின் வாழ்த்துச் செய்யுள் அருகனைப் போற்றுவதால் காரியாசான் அருக சமயத்தார் என்பதனை அறியலாம். இருநூற்று இருபத்தாறு வெண்பாக்களைக் கொண்டு விளங்கும் அறநெறிச்சாரம் எனும் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார். இவர் பாடிய 'தாமரைப் பூவின்மேற் சென்றான் புகழடியை நாவாற்றுதித்து', 'சிவன்றானும் நின்று கால் சீக்கும் நிழல் திகழும் பிண்டிக்கீழ்', 'நின்றமுக்குடையான் வேந்து' என்னும் தொடர்களால் இவர் சமணர் என்பது புலனாகின்றது. எனவே சமணரால் தமிழில் அறநூல்கள் பல்கின என்றுணரலாம்.  

இலக்கண நூல்களின் வாயிலாக சமணர்களின் தமிழ்ப் பணி

தமிழிலுள்ள மிகப்பழைமையான நூல் தொல்காப்பியமாகும். இதுவே தமிழரின் நாகரிகப் பழைமையையும் பெருமையையும் காட்டி நிற்கின்றது. தொல்காப்பியரைச் சிலர் சமணர் என்பர். இது நிறுவப்படுமானால் சமணரின் தொண்டு மேலும் உயர்ந்து விடும். தொல்காப்பியத்திற்கு முதன் முதல் உரையை எழுதியவர் இளம்பூரணர் என்ற சமணராவார். இவரைத் தொடர்ந்து பல உரையாசிரியர்கள் உரையெழுதியுள்ளனர். பிற்கால உரையாசிரியர்கள் அனைவரும் இவரைப் பெரிதும் மதித்தனர் என்பதனை அவர்களின் உரைகளால் அறியமுடிகின்றது. யாப்பருங்கலக் காரிகைக்கு இளம்பூரணாரின் மாணவராகிய குணசாகரர் அரிய உரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 தொல்காப்பியத்திற்குப் பிறகு மொழியில் தோன்றிய மாற்றங்களையெல்லாம் உள்ளடக்கி கி.பி.13 ஆம் நூற்றாண்டில் நன்னூலை இயற்றிய பெருமை சமணராகிய பவணந்தியைச் சாரும். சின்னூல் என வழங்கும் நேமிநாதம் குணவீர பண்டிதர் என்ற சமணருடைய படைப்பாக உள்ளது. தொல்காப்பியத்திற் கூறப்படும் அகப்பொருள் கருத்துக்களை எளிமைப்படுத்தி எழுதப்பட்ட நூலே நம்பியகப் பொருளாகும். இதன் ஆசிரியர் நாற்கவிராசநம்பியென்னும் சமணராவார். தொல்காப்பியருக்குப் பிறகு யாப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பாவினங்கள் பல உருவாகின. அவைகளையெல்லாம் தழுவிய புது யாப்பு நூல் தேவையென்றுணர்ந்து அமிர்த சாகரர் என்னும் சமணர் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகையென்னும் இரு நூல்களை இயற்றியருளினார். இதன்வழியின் இலக்கண வளர்ச்சியிலும் சமணர்கள் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் நிகண்டுகளை முதலில் தோற்றிய பெருமையும் சமணரையே சேரும். திவாகர நிகண்டும், சூடாமணி நிகண்டும், பிங்கல நிகண்டும் சமணப் பெரியார்களே இயற்றியுள்ளனர்.

காப்பியங்கள் மற்றும் கேசி நூல்கள் வாயிலாக சமணர்களின் தமிழ்ப் பணி

நிகண்டு நூல்களை முதன் முதலில் சமணர்கள் இயற்றியது போலவே காப்பியங்களையும் அச்சமயத்தவர் தான் முதன் முதலில் எழுதியுள்ளனர். ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், வளையாபதி, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று காப்பியங்களையும் சமணர்களே படைத்துள்ளனர். ஐம்பெருங்காப்பியங்களில் தலை சிறந்து விளங்கும் சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள் சமண நெறியாளரென்பதே பலர் கருத்தாக உள்ளது. சமணக் கொள்கைகள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழரது நாகரிகத்தை உலகறியச் செய்யும் இம் முதற்காப்பியத்தைத் தந்த பெருமை சமணத்துக்கேயுரியது. விருத்தயாப்பிலெழுந்த முதற்காப்பியமான சீவக சிந்தாமணி கம்பருக்கும், சேக்கிழாருக்கும் முன்னோடியாக விளங்கியுள்ளது.  ஐம்பெருங்காப்பியங்களிலொன்றான பல்வேறு சந்தங்களைத் தன்னகத்தே கொண்ட ஒப்பில்லாப் பேரிலக்கியமான சீவகசிந்தாமணி தமிழுக்குக் கிடைத்த அருஞ் செல்வமாக திகழ்கின்றது. 

அதுபோல ஐஞ்சிறு காப்பியங்களாகிய சூளாமணி, நீலகேசி, யசோதா காவியம், நாக குமார காவியம், உதயண குமார காவியம் ஆகியவற்றை எழுதியவர்களும் சமணர்களே. உதயணன் கதை என்று கூறப்படும் பெருங்கதையும் கொங்குவேளிர் என்ற சமணர் இயற்றியதே ஆகும். சிலப்பதிகாரம் போலவே ஆசிரிய யாப்பால் அமைந்த இந்நூல் பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவும் அமைந்த நூலாகும். ஐம்பெருங்காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் பௌத்த நூல்களாக கொள்ளப்படுகின்றன. சமணரது புராணங்களில் மணிப்பிரவாள நடையிலமைந்த ஸ்ரீ புராணம் தீர்த்தங்காரர்களின் வரலாற்றைக் கூறுகின்றது. வாமானாச்சாரியரின் மேருமந்தர புராணம் பன்னிரண்டு சருக்கங்களை விபரிப்பதாக அமைந்துள்ளது.  

சமணர், பௌத்தர்களிடையே சமயப் பூசல்கள் ஏற்பட்டன. அதனால் அவர்கள் தம்முள் சொற்போர் புரிந்தனர். ஒருவரை ஒருவர் எதிர்த்தும் கண்டித்தும் நூல்கள் இயற்றினர். இவை கேசி நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி என்பவை அவ்வகையில் எழுந்த நூல்கள் ஆகும். இவற்றுள் நீலகேசி மட்டுமே கிடைத்துள்ளது. ஏனைய இரண்டு நூல்களும் கிடைக்கவில்லை. அவை இரண்டும் சமணர்கள் இயற்றியன என்றும், பௌத்தர்கள் இயற்றியன என்றும் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இச் சான்றுகள் வழியில் சமணர் தமிழ் மொழிக்குச் செய்த பணியின் அளவினை நன்குணரலாம்.

முடிவுரை

தமிழ்மொழி வழியாகச் சமண சமயக் கருத்துகளை மக்களிடம் பரப்பும் முயற்சியில் சமணர்கள் ஈடுபட்டார்கள். இதன் பொருட்டுத் தமிழைக் கற்கத் தொடங்கிய அவர்கள் புதிய இலக்கண நூல்களையும் காப்பிய நூல்களையும் நிகண்டு நூல்களையும், அறநூல்களையும் உருவாக்கினர். பிற சமயத்தார் செய்த தமிழ்ப் பணியைக் காட்டிலும் இவர்களின் பங்களிப்பு சிறப்புடையதாகும். தமிழ் இலக்கியங்களில் பரவலாகச் சமணர்கள் பற்றிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன. சைவ, சமண சமயங்களுக்கிடையே சமயப் போர் நிகழ்ந்த வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமணர்கள் தாம் படைத்த நூல்களின் வாயிலாக சமண சமயத்தில் காணப்படும் அறப் போதனைகளை மக்கள் மத்தியில் விதைத்து சமண சமயத்தின் பக்கம் அவர்களை ஈர்ப்பதனையே பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர். சமணர்களது நோக்கம் சமயத்தை பரப்புவதாக இருந்தாலும் அவர்களது நூல்கள் அவர்களின் தமிழ் புலமையினை காட்டி நிற்கின்றது. சமணர்களின் படைப்புக்கள் பரந்துபட்டவையாக காணப்படுகின்றன. இவர்கள் சமண சமய கொள்கைகளை நூல்களில் வலிந்து திணிக்காமல் இலக்கியங்களின் போக்குடன் கூறிச் சென்றுள்ளமை சிறப்புக்குரியதாகும். சங்க காலத்திலிருந்தே சமணர்கள் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளமை ஆய்வின் மூலம் அறிய முடிகின்றது. ஆரம்ப காலம் தொட்டே தமிழ்மொழி வளர்ச்சியில் சமயங்கள் பெரும்பங்காற்றியுள்ளன. அந்த வகையில் சமண சமயத்தவர்களின் பங்களிப்பும் மேன்மையானதாக அமைந்துள்ளது.

உசாத்துணைகள்

1.    கிருஷ;ணராஜா, சோ. (2005) இந்திய மெய்யியல்: கொழும்பு, கௌரி அச்சகம்.

2.    தட்சிணாமூர்த்தி, . (1973) தமிழர் நாகரிகமும் பண்பாடும்: தஞ்சாவூர், திருவள்ளுவர் அச்சகம்.

3. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் (1978) வரலாறு (இந்திய நாகரிகம் 02): சென்னை, லலிதா பப்ளிக்கேஷன்.

4.  தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, (1983) தமிழ் நாட்டு வரலாறு சங்ககாலம் - வாழ்வியல்: சென்னை, திருமால் பதிப்பகம்.

5.   Bhattacharya, B. (1976) Jain Philosophy: New Delhi, Munshiram Manoharlal.

 

6.   Dundas, Paul (1992) The Jains: Londan and New York, Taylor & Francis group.

 

7.   Jain, c. (1974) Fundamentals of Jainism: Meerut, Nirvan Bharti.