4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மே, 2023

தன்னுணர்ச்சிப் பாடல்களின் தோற்றமும் கையறுநிலைப் பாடல்களும் - சி.ஜோதிலட்சுமி

 

தன்னுணர்ச்சிப் பாடல்களின்  தோற்றமும்  கையறுநிலைப் பாடல்களும்

                                                                    சி.ஜோதிலட்சுமி

                                                                           முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

                                                                           தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் துறை,

                                                                     தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),

                                                                     திருப்பத்தூர் மாவட்டம்.

                                                                     அலைபேசி எண்  -  9655754487

                                                                      மின்னஞ்சல் - jothilakshmic86@gmail.com

ஆய்வுச் சுருக்கம்

        சங்க இலக்கிய பாடல்களில் தங்களுடைய துன்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களின் வாயிலாக கையறுநிலைப் பாடல்கள் தோன்றுகின்றன. தன்னுணர்ச்சிப் பாடல்கள் தோன்றும் விதம், தன்னுணர்ச்சிப் பாடல்களின் வகைப்பாடுகள், புறநானூற்றுக் கையறுநிலைப் பாடல்களின் மூலம் புலவர்கள் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தையும், மன்னர்களை நெறிப்படுத்தும் அளவிற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தையும் நம்மால் காணமுடிகிறது. மேலும் புலவர்களுக்கும் வள்ளல்களுக்கும் இடையே உள்ள நட்புரிமையையும் அறிய முடிகிறது. 

கலைச் சொற்கள்

        தன்னுணர்ச்சி, கையறுநிலை, ஜிப்ஸி, லயரிக், காவியம், முல்லை, திங்கள், வெண்ணிலவு

முன்னுரை

            சங்க இலக்கியப்பாடல்களில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் அதிகமாக காணப்படுகிறது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல்கள் தனிப்பட்டோரின் சொந்த உணர்வுகளை வெளிப்படுத்தி அகப்பாடல்களினின்றும் ஏனைய புறப்பாடல்களினின்றும் வேறுபடுகின்றன. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புலவருக்கு எழுந்த தனிப்பட்ட எண்ணங்களைக் காட்டும் பாடல்கள் இவையென்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர். தன்னுணர்ச்சிப் பாடல்களிலிருந்து தான்  கையறுநிலைப் பாடல்கள் தோன்றியுள்ளன. இவற்றின் மூலம் புலவர்களுக்கும் வள்ளல்களுமிடையே உள்ள நட்பிணைப் பற்றி ஆராயும் விதமாக இக்கட்டுரை அமையவுள்ளது.

மேலை நாடுகளில் தன்னுணர்ச்சிப்பாடல்கள்

மேலைநாட்டு இலக்கியங்கள் அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடுகள் இல்லை. என்றாலும்  அப்பாடல்களின் உள்ளுணர்வின் அடிப்படையில் பல்வேறு பாகுபாடுகளைப் பெற்றிருக்கின்றன.

தன்னுணர்ச்சிப் பாடல்களை மேலைநாடுகளில்ஜிப்ஸிஎன்கிற நாடோடிக் கூட்டத்தார்லயர்என்ற இசைக்கருவி கொண்டு பாடிய பாடல்கள்லயரிக்என்று அழைக்கப்படுகின்றன. காலப்போக்கில் இவை பல்வேறு வடிவங்களாக  மாறியுள்ளன. மேலை நாட்டில் லயரிக் என்று சொல்லப்படுகின்ற பாடல்களே தன்னுணர்ச்சிப் பாடல்களாகும். யாழிசையோடும் பிற இசைக் கருவிகளோடும் இசைக்கப்பட்ட பாடல்களாகும்1  

தன்னுணர்ச்சியில் புறநானூற்றுக் கையறுநிலைப் பாடல்கள்

            புறநானூற்றுப் கையறுநிலைப் பாடல்கள் சிலவற்றில் மன்னர் தன்மானநிலை, புலவர் நட்புநிலை, பாரிமகளிரின் கையறுநிலை, ஆதிமந்தியின் ஆற்றாமை இன்னபிற வரலாற்றுச் செய்திகளை உணர்வுடனும் உணர்ச்சியுடனும் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதனைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்றழைப்பர்.

            உள்ளத்தின் உணர்ச்சி வெளியீடாக ஒலிப்பது தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்றும், சிறந்த தலைமக்களின்  வாழ்க்கையை வரலாறு போல் காட்டுவதைக் காவியம் என்றும், நீதியை வழுவாது விளக்குவது நீதிநூல் என்றும், எள்ளல்பொருள் பற்றிய நகைச்சுவையாய்  வருவதை அங்கதம் என்றும், முல்லை நில நிகழ்ச்சியை முன்னிருத்தும் பாடலை முல்லைப்பாட்டு என்றும் மெய்யுணர்வுப் பற்றிய பாடல் பிரதிபலிப்புப் பாடல் என்றும் பக்தியை இயம்பும் பாடலைப் பக்திப் பாடல்கள் என்றும்2 வகைப்படுத்தி விளக்கியுள்ளன என்பார் மு.

            இவற்றுள் முன்னோர் கண்ட மரபுகளை ஒட்டியே பாகுபாடுகளாகக் காணப்படுகின்றன. அதே சமயம் அறிவியல் நெறியில் அமையும் பாகுபாடுகளும்  உண்டு. “இலக்கியத்தில் உள்ள உணர்ச்சி அனுபவங்கள் ஐந்து வகைப்படும் என்றும் அவற்றை ஒட்டி இலக்கியத்தை ஐந்து வகைகளாகப் பகுக்கலாம் என்றும் வின்செஸ்டர்3கூறுவர். அவையாவன வருமாறு,

1.   தனி ஒருவரின் சொந்த அனுபவம் பற்றிய இலக்கியம்

பாடிய புலவனின் சொந்த வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து இது பிறக்கும் புறநானூற்றிலுள்ள தன்னுணர்ச்சிப் பாடல்கள் முதல் தனிப் பாடல் திரட்டிலில் உள்ள புலவனின் அனுபவப் பாடல்கள் வரையில் உள்ளவை இந்த வகைக்கு எடுத்துக்காட்டாகும்.

2.   மனிதனின் பொதுவான அனுபவம் பற்றிய இலக்கியம்

மனிதரின் வாழ்க்கையில் பலர்க்கும் பொதுவாக உள்ள  அனுபவம் பற்றியது இவ்வகை  சிலப்பதிகாரம் முதலான காவியங்களிலும் கலம்பகம் முதலான நூல்களிலும் இதனைக் காணலாம்.

3.   தனிமனிதர்களும் மற்றவர்க்கும் அல்லது சமுதாயத்திற்கும் உள்ள உறவின் அனுபவம்

புறநானூறு முதலான நூல்களில் புலவர் அரசரை வாழ்த்தியும், நன்றி கூறியும், பாடுவதையும்,  உலகை வியந்தும், வெறுத்தும் பாடுவனவும்  இவ்வகையில் அடங்கும்

4.   இயற்கையோடு அமையும் உறவின் அனுபவம் பற்றிய இலக்கியம்

      இயற்கை அழகில் ஈடுபட்டுப் பாடுவதையும் இயற்கையை வெறுத்தும் சினந்தும் பாடுவனவும் இவ்வகையின,

5.    உலகில் இல்லாத புதுமைகளைக் கற்பனையில் கண்ட அனுபவம் பற்றிய இலக்கியம்.

புலவர் உணர்ச்சிவயமாகித் தாம் கலந்துப் பாடியவை ஒன்றியப்பாட்டு எனவும், பிறருடைய  அனுபவத்தைப் பற்றின்றி உணர்த்தும் வகையில் பாடியவை ஒன்றாபாட்டு என்று பாகுபாடு செய்துள்ளனர். தன்னுணர்ச்சிப் பாடல்களும் பக்திப் பாடல்களும் முன்னைய வகையைச் சார்ந்தவை. எடுத்துரைப் பாடல்களும் காவியங்களும் பின்னயை வகையைச் சார்ந்தவை நாடகத்தில் புலவர் பற்றின்றி நின்றும் நாடக மாந்தரின் உணர்ச்சிகளை ஒன்றி வாய்ப்பாட்டால் கூறுவதால் இருவகையும் கலந்த கலப்பினைக் காணலாம் நாடகம் பொருளால் ஒன்றா இலக்கியமாகவும் உள்ளது எனலாம்.

புலவர்  தாம் கலந்து ஒன்றிப்பாடுதல் தாம் கலவாமல் பற்றின்றிப் பாடுதல் என்ற இரண்டும் தனித்தனியே  இல்லை. இரண்டும் ஓரளவு கலந்தே அமைகின்றன என்று கூறலாம். புலவரின் உணர்ச்சியும் மன நிலையும் கலவாமல் எந்த இலக்கியமும் அமைவதில்லை. எனினும் புலவரின் சொந்த உணர்ச்சி தன்னுணர்ச்சிப் பாடல்கள்,  பக்திப் பாடல்கள், கையறுநிலைப் பாடல்கள் ஆகியவற்றின் மிகுந்துக் காணப்படும். ஆகையால் அவை ஒன்றிய பாடல்கள்  என்று கூறலாம். ஒன்றியப் பாடல்கள் புலவரின் உணர்ச்சி மிகுந்து காணப்படும். காவியம்,  நாடகம் முதலியவற்றில் புலவரின் சொந்த உணர்ச்சியைக் கொட்டி எழுத முடியாது. எனினும் குறைவான உணர்ச்சியைப் புகுத்தி எழுத வாய்ப்புண்டு  எனவே இவை ஒன்றாப் பாடல்கள் என்று கூறலாம்.

தன்னுணர்ச்சியை  வெளியிடுதலே நோக்கமாக உடைய புலவர்கள் கற்பனையில் மிகுதியாக ஈடுபட்டு விடுகிறார்கள் என்றும் பொருளின் உண்மைகளைவிடத் தம் மனநிலைகளையே பெரிதும் மதிக்கின்றனர்.

              தன்னுணர்ச்சிப் பாடல்களே மிகவும் பழமையான இலக்கிய வகையாகும் இன்றும் இவை பெருவழக்கிலும் மிகவும் தூயதாகவும் விளங்குகின்றது என்பர். வின்செஸ்டர் அதே நேரத்தில், தன்னுணர்ச்சிப் பாடல்கள் தொடக்க காலத்தில் தனி ஒருவரின் உணர்ச்சி வெளிபாடாக  அமையாமல் ஒரு கூட்டத்தினரின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்தது என்பர் ஹட்சன்.

            புறநானூற்றில் உள்ள பாடல்களில் பெரும்பான்மையானவை புலவரின் சொந்த உணர்ச்சியைப் பற்றியவையாக  உள்ளன. ஔவையார், கபிலர் முதலான  புலவர்கள்  தம் உள்ளத்து உணர்ச்சிகளையே பாடியுள்ளமையால்  சுவை ஒன்றிய பாடல்கள் என்பதில்  ஐயமில்லை தன்னுணர்ச்சிப் பாடல்களைப் புறத்திணையிலும் அகத்திணையிலும் காணலாம்.

கையறுநிலையில் பாடிய புலவர்கள்

            கடையெழு வள்ளல்கள் எழுவருள் ஒருவன் பாரி. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் தனக்கு உரிய முந்நூறு ஊர்களையும் பரிசிலர்க்கு வழங்கியவன். வளமிக்க  பறம்புமலைக்குத் தலைவன். பாடல்கள் பாடுவதில் வல்லவரான பாரியின் புதல்வியர் இருவருக்குத்  தந்தையாக விளங்கியவன். பாரி தான் ஆண்ட பறம்புமலையை மூவேந்தர்களின்  வஞ்சகத்தால் இழந்தான். இவரது நண்பர் கபிலர். பாரி  மாய்ந்தப் பின்னர் அவர்தம் மகளிரை உரிய இடத்தில் சேர்ப்பிக்க இருங்கோவேளிடம் வேண்டியதும் வேள் மறுத்ததும் தமிழக வரலாறு பகரும். கபிலர் என்ற பெயர் இருக்கும் வரை பாரியையும், பாரி மகளிரையும் இணைத்தே பார்க்கக்  கூடிய பெருமை தமிழ் இலக்கியத்தில் நிலைத்து விட்டது.

புறநானூற்றில்  பாரி பாடிய பாடல்கள் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. அவன் பாடல்கள் இயற்றும் வல்லவனாக இருந்திருக்கலாம். அதனால்தான் அவனுடைய மகளிர் பாடல் இயற்றும் வல்லமை பெற்றுள்ளதை அறிய முடிகிறது. இது பாரியின் பெருமைக்கு மேலும்  பெருமை சேர்ப்பதாக உள்ளது.

  அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவின்

   எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்

   இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்

   வென்றெரி முரசின் வேந்தர்எம்

   குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே4

பாரி மகளிர் இருவரும் தன் தந்தை மாய்ந்த பின்னர் இரவு நேரத்தில்  வெண்ணிலவைப்  பார்க்கின்றனர்.  அவர்கள்  தந்தையொடு அமர்ந்து வெண்ணிலவைப் பார்த்து மகிழ்ந்த மகிழ்ச்சியை நினைக்கின்றனர்.  ஆனால் தற்போது இருக்கும் நிலை  வேறு,

கடந்த நிலவு நாளின் நாங்கள் இருவரும் தந்தையுடன் உடையவராக இருந்தோம். எங்கள் பறம்பு மலையைப் பகைவர்கள் எவரும் கொள்ளவில்லை . ஆனால் இப்போதோ எங்கள் மலையைப் பிறர் கொண்டனர். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம். அதை அறியதா எங்கள் துன்பத்தை அறியாத வெண்ணிலவு மட்டும் வந்துக் கொண்டிருக்கிறது. என்று சோகம் ததும்ப கையறுநிலையில் தன்னுணர்ச்சித் தோன்றப் பாடுகின்றனர்.

அவலச்சுலையை அள்ளித் தருகின்ற தன்னுணர்ச்சிப் பாடல்கள்

கோப்பெருஞ்சோழன் பெத்தியார் நட்பு

            புலவர்கள் தங்களை ஆதரித்த புரவலர்கள்களின் இறப்பை பாடும்போது ஏற்படுகின்ற அவலச்சுவையை எடுத்துக் கூறும் விதமாக,

            அன்னோனை இழந்த இவ்வுலகம்

           என்னாவது கொல்  அளியதுதானே5

என்று பொத்தியார் கோப்பெருஞ்சோழன் இறந்தபோது மக்களின் நிலைஇனி என்னாகுமோ என்று தன்னுடைய துயரத்தை வெளிப்படுத்தும் நிலையினை வெளிப்படுத்தியுள்ளார்.

பெருஞ்சாத்தன் குடவாயிற் கீரத்தனார் நட்பு

            பெருஞ்சாத்தன் இறந்தபோது குடவாயிற் கீரத்தனார் புலவர் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் பாடல்,

            இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

           நல்யாழ் மருப்பின் மெல்லிய வாங்கி

           பாணன் சூடான் பாடிணி அணியாள்

           ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

           வல்வேல் சாத்தன் மாய்ந்தபின்றை

           முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே6

இப்பாடலில் இயற்கையாக மலரக் கூடிய முல்லைக் கொடியைப் பார்த்து தன்னுடைய மனக் குறையை கூறுவதாக அமைந்துள்ளது.

 

 

அதியமான் ஔவையார் நட்பு

            ஔவையார் அதியமான் இறந்தபோது தன்னுடைய அனுபவங்களையெல்லாம் பாட்டாக  வடித்தச் செய்தியினை,

            சிறியகட் பெறினே எமக்குஈயும் மன்னே!

          பெரியகட் பெறினே

          யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே7

என்று  அதியமான் இறந்தபோது தான் இழந்த பொருள்களையெல்லாம் வரிசைப்படுத்தி இனி இந்த பொழுது எப்படி கழியுமோ என்று தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

ஆய் அண்டிரன் நட்பு

          முடமோசியார் ஆய் அண்டிரன் இறந்தபோது  அவர் அளித்த கொடைச்சிறப்பினை நினைத்து வேதனைப்படுவதை வெளிப்படுத்தும் பாடல்,

          இம்மை செய்தது மறுமைக்கு  ஆம்எனும்

            அறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும்8

   இப்பாடலின் மூலம் ஆய்அண்டிரன வழங்கிய கொடைப்பொருள்களின் பெருமையை உணர்த்தும் தன்னுணர்ச்சியை அறிய முடிகிறது.

            இதுபோன்ற பல்வேறு தன்னுணர்ச்சிப்பாடல்களை புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிந்துக் கொள்ள உதவியாக சங்க இலக்கியம் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

நிறைவாக

 சங்க இலக்கியப் பாடல்களின் மூலம் தன்னுணர்ச்சிப் பாடல்களின் வாயிலாக கையறுநிலைப் பாடல்களை அறியமுடிகிறது. தன்னுடைய உணர்வுகள்  மிகுதியாகும் போதும் தனக்குத் துன்பம் எற்படும்போதும் யாரும் தனக்கு உதவிசெய்ய முன்வராதபோது   கையறுநிலைப் பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்கள் மூலம் தன்னுணர்ச்சிப் பாடல்கள் தோன்றும் விதத்தையும் அதன் வகைகளையும் புலவர்களின் அறிவுத் திறத்தையும் வள்ளல்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயுள்ள உறவுநிலைகளையும்  தெளிவாக அறிந்துக் கொள்ள முடிகிறது.

அடிக்குறிப்புகள்   

1.    ஜெகதீசன் இரா புறநானூறு ஆயவுக்கோவை தொகுதி மூன்று ப – 98

2.    வரதராசனார் மு இலக்கியமரபு ப – 29

3.    ஞானமூர்த்தி தா.ஏ அவல வீரர்கள் ப- 9

4.    மாணிக்கவாசகன் ஞா புறநானூறு மூலமும் உரையும் ப – 159

5.    மேலது ப – 304

6.    மேலது ப – 334

7.    மேலது ப – 324

8.    மேலது ப – 182