4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூன், 2023

இரத்தினகிரி பாலமுருகன் கோயில் - முனைவர் பீ. பெரியசாமி

 

இரத்தினகிரி பாலமுருகன் கோயில்

முனைவர் பீ. பெரியசாமி

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,

ஆரணி

இக்கோயில் இரத்தினகிரிக் குன்றின் மீது கிழக்கு நோக்கியவாறு உள்ளது. இங்கு நான்கு கால வழிபாடு சோழியப் பிராமணரால் நடத்தப்படுகிறது. கிருத்திகைகள், சஷ்டி, கார்த்திகை விளக்கீடு முதலிய நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றன. இரத்தினகிரியில் "தமிழ் வழிபாடு' முறையை  நடைமுறைப்படுத்திய பெருமை அக்கோயிலை நிர்வகிக்கும் பாலமுருகனடிமை சுவாமிகளையே சாரும். இக்கோயிலுக்குள் சென்றால் கற்பக விநாயகரை வழிபடலாம். இம்மலைக்கோயிலில் எழுந்தருளித் திருவருள் புரியும் பாலமுருகப் பெருமானுக்கு, ஆடி மாதம் பெருவிழாச் சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமிகள் பாலமுருகப் பெருமானிடம் வந்து மெய்ஞானம் அடைந்தது. 1968ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20ஆம் நாள். அந்த நாள், ஆண்டுதோறும் நினைவு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.



இத்தலத்து ஊர் கீழ்மின்னல் என்னும் சிறிய கிராமம். இக்கிராமத்தின் அருகில் சிறிய மலை. இம்மலையே அழகன் முருகன் - பாலமுருகன் - அருள்மணக்கும் இரத்தினகிரியாகும். உள்ளொளிக் காட்டி உவப்பூட்டும் இரத்தினமாகப் பாலமுருகன் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார். நாடி வரும் அன்பர்கட்குத் துன்பத்தை அளித்தறியாத கந்த பெருமான், அண்மையில் நின்றருள வேண்டும் என்னும் நோக்கத்துடன், சாலையின் ஓரத்திலேயே கோலகிரியாகிய இரத்தினகிரியில் கோயில் கொண்டு அருளாட்சிப் புரிகின்றார்.

"இரத்தினம் புறக்கண்ணுக்கு ஒளியைத் தருவது. இரத்தினகிரி அகக் கண்ணுக்கு ஒளியைத் தருவது. இரத்தினகிரித் தலம், அகக்கண், புறக்கண் ஆகிய இருவகைக் கண்களுக்கும் பேரொளியை வழங்குகிறது''(புலவர் செந்துறை முத்து, முருகன் தலங்கள் 33, ப.88) என உரைப்பதன் மூலம் இத்தலத்தின் சிறப்பை அறியலாம். இத்தலம் பழமைச் சிறப்புடைய சமய ஈடுபாட்டுடைய தலமாகும். அருட் சிறப்பால் புகழ்ப்பெற்று விளங்கும் இத்தலம் சமயநெறிகளை  நடைமுறைப்படுத்தி வருகிறது.

இலக்கியத்தில் வாட்போக்கி எனப்படும் இரத்தினகிரி

ஆறுமுகப் பரம்பொருளின் ஐந்தாம் படை வீட்டுத் தலங்களுள் இரத்தினகிரித் தலமும் ஒன்று. குன்றுதோறும் நின்றாடும் குமரக் கடவுளின் திருத்தல வரிசையில் இரத்தினகிரித் தலம் தனியிடம் பெற்று விளங்குகிறது. உள்ளொளி காட்டி உவப்பூட்டும் இரத்தினமாக விளங்கும் இப்பாலமுருகன் கோயிலைப் பாலமுருகன் அடிமை சுவாமிகள் என்பவர் போற்றிப் பாதுகாத்து வருகின்றார்.

இத்தலம் 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட திருத்தலமாகும். இத்தலம் பாலமுருகனாலேயே பராமரிக்கப்பட்டு வருவதால், இத்தலத்தில் முருகன் அருள் மணமும், புகழ் மணமும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. பழமைச் சிறப்புடையதேயாயினும், அண்மைக் காலமாக அருட்சிறப்பால் புகழ்பெற்று விளங்குகின்றது. பழங்காலத்தில் இம்மலைத் தலத்தை  "மோர்க்குளத்து மலை' என்னும் பெயரால் வழங்கி வந்துள்ளனர். இத்தலத்திற்கு அருணகிரிநாதர் வந்து சென்றுள்ளதால் இக்கோயில் பாடல் பெற்ற தலமாகத் திகழ்கிறது. இத்தலம் பற்றி,

        "பக்தியால் யானுனைப் பலகாலும்

        பற்றியே மாதிருப் புகழ்பாடி

        முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்

        முத்தியே சேர்வதற் கருள்வாயே;

        உத்தமா தானசற் குணர்நேயா

        ஒப்பிலா மாமணிக் கிரிவாசா;

        வித்தகா ஞானசத் திநிபாதா

        வெற்றி வேலாயுதப் பெருமானே''

(தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ் உரை, .382)

இதன் வழி, பக்தியைப்  பூண்டு உன்னைப் பல நாட்கள் பற்றி சிறந்த உனது திருப்புகழ்களைப் பாடி, பெருவாழ்வாகிய முக்தி நிலை சேர்வதற்கு அருள்புரிவாயாக உத்தமனே என்றும் ஈகைக் குணம் உடைய நற்குணத்தவர்களுக்கு நேசனே, ஒப்பில்லாத சிறந்த மணிக்கிரி (இரத்தினகிரி) வாசனே என்றும் புகழ்வர்.  மேலும், வித்தகா ஞானப்பருவம் அடைந்தவர்க்கு அருளைச் சக்தியாய் பதிக்கின்றவனே; வெற்றி வேலாயுதத்தை ஏந்தும் பெருமானே என்று திருத்தலத்தையும் அதில் குடிக்கொண்டிருக்கும் முருகப் பெருமானையும் போற்றிப் புகழ்கிறார். தமிழ்க் கடவுளான முருகன் மற்ற இடங்களை விட அதிகமாக வேலூரில் கொண்டாடப்படுகிறான். அவன் புராணத்தை "ஸ்காந்தம்' என்னும் வடமொழி நூல் தாம் நமக்கு விளக்குகிறது. அதைத் தமிழாக்கம் செய்ய வேண்டி மெய்யடியார் கச்சியம்பதி கச்சியப்பர் கனவில் தோன்றிய இவ்வழகன்,  முதல் இரு அடிகளை எடுத்துக் கொடுத்து தமது புகழ் என்றென்றும் இந்த தென்னகத்தில் தழைத்தோங்கி நிற்க வழிவகுத்துக் கொண்டிருக்கிறார்.

கச்சியப்பர் பின்னர் வந்த முருகனடியார்கள் அனைவருக்கும் வழிகாட்டியாகக் கந்தபுராணத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். கந்தபுராணம் தலத்துக்குத் தலம் வேறுபட்டது அல்ல. பொதுவாகத் தல புராணங்கள் எல்லாமே பதினெண் புராணங்களிலிருந்து தோன்றிய பக்தி மணம் கமழும் கதைகள்தாம். ஆனால், தலத்திற்குத் தலம் வேறுபட்டதாகவும், கதை அம்சம் நிறைந்தவையாகவும் இருப்பது முருகன் புராணம் ஒன்றேதான்.  அவனுடைய அவதார மகிமை, அதன் அவசியம், அதன் சிறப்பு, அதன் முடிவு ஆகிய இந்நான்கு முக்கிய கூறுகளைத் தான் முருகன் கோயிலை வழிபடும்போதெல்லாம் அடியார் மனம் எண்ணிப் பார்த்துப் பரவசம் அடையும். அறுபடை வீடுகளில் காண்பவனும் அவன் சரிதையும் தான் இரத்தினகிரி பாலமுருகனுடையதும் ஆகும். வாட்போக்கியில் குடியிருக்கும் முருகப் பெருமானின் அழகிய தோற்றத்தையும் தலத்தையும் பன்னிருதிருமுறைகளில் ஒன்றான ஐந்தாம் திருமுறையில்,

        ""கால பாசம் பிடித்தெழு தூதுவர்

        பாலகர் விருத்தர் பழையா ரெனார்

        ஆல நிழல மர்ந்தவாட் போக்கியார்

        சீலமார்ந்தவர் செம்மை யுணிற்பரே''

(சிவ.வ.கண்ணப்பன், பன்னிரு திருமுறைத் திரட்டு, ப.40.)

ஆலமர நிழலில் அமர்ந்து இருப்பவரும் செம்மையுறக் காட்சியளிப்பவரும் வாட்போக்கியில் குடி கொண்டவனுமான முருகப் பெருமானே எனத் தலத்தையும் முருகனையும் இணைத்துப் பாடியுள்ளார் திருநாவுக்கரசு சுவாமிகள்.

அண்ட சராசரங்கள் அனைத்தும் பரிபாலனம்  செய்யும் பரமனின் செல்வக்குமாரன் இந்த இரத்தினகிரிக் கோயிலுக்கு வரும் அடியார்களின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து அவர்களை மனம் நெகிழச் செய்கிறான்.

ஒளியின் நிழலில் இரத்தினகிரி

இரத்தினகிரி என்றதும் இரத்தினத்தின் ஒளி கண்ணைப் பறிக்க ஒளிவீசும் மலையே  தோன்றுகிறது. மலையில் வாசம் செய்யும் மணி (சுப்பிரமணி)யும் ஒளி வீசுகிறது. இரத்தினமும் அதன் ஒளியும், கடலும் அதன் அலையும் போல இங்கே பேதம் இல்லை. அதுவே இது - இதுவே அது. முழுமை, பூர்ணமுழுமை, சச்சிதானந்தம் அதனால் எப்போதும் எங்கும் வியாபித்து நிற்கும் ப்ரும்மத்துக்கு நேரம்  காலம் எப்படி கிடையாதோ, அப்படியே ஒரு ஆகமம், நியமம், விதி, முறை, காலம் எதுவும் கிடையாது.

இத்தத்துவத்தை உணர்ந்து இறைவனுடைய திருவடியைப் பெற வாட்போக்கி எனப்படும் இரத்தினகிரியில் வீற்றிருக்கும் முருகனை வணங்கினால் இன்பம் பெற்றுத் துன்பங்களை நீக்கலாம் என அருணகிரியார் தம் திருப்புகழில் கூறுகையில்,

        "சுற்றகப டோடுபல சூதுவினை யான பல

        கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி

        சுற்றவிழ லானபழி ஷோடுகடல் மூழ்கிவரு துயர் மேவித்

        துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு

        செத்தை யென மூளுமொரு தீயில்மெழு கான வுடல்

        சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு பொறியாலே;

        எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை

        சித்தமலை காமுககு காநமசி வாயனொடு

        ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் பெருமாளே

(தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ் உரை, பா.348, பாகம்-2, ப.378.)

என்று இக்கோயிலுக்குச் சென்று வழிபடுபவருக்கு நிகழும் துன்பங்களைக் களையக்கூடிய மற்றும் மனதை சரி செய்யும் சிவபிரானோடு, இரத்தினகிரி எனப்படும் வாட்போக்கி தலத்தில் வாழும் முருகனே! என்றும் இளையவனே! தேவர் பெருமானே என்று திருவடியைப் பெற இவ்வாறெல்லாம் வேண்டுகிறார். இப்படி வேண்டும்போது இறைவனை அடைவதோடு, நற்பேற்றினையும் பெறலாம்.

இரத்தினகிரியும் மண்டபப் பொலிவு

படிமண்டபத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் செல்வது மிகுந்த தெய்வீகப் பயணமாகும். அன்பர்கள் இடையில் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் உள்ளன. தென்பாகத்தில் கல்யாண மண்டபமும், வடக்கில் சொற்பொழிவு மண்டபமும் உள்ளன. இளைப்பாறு மண்டபங்கள் மலைக் கோயிலில் உள்ள முருகனின் இன்னருளைச் சுரப்பன. இம்மண்டபங்கள் கலைநயம் கொண்டதாகவும் பெருமையுடையதாகவும் விளங்குகின்றன. கிரிவலம் வரும் வழியில் படி மண்டபம் அமைந்துள்ளது.  உலகத்தில் நல்லோர்களைக் காத்தலின் பொருட்டு, சக்தி எடுத்த பல அவதாரத் தோற்றங்கள் இங்கு உள்ளன. இம்மண்டபத்தில் இடப்புறம் 16 கால் மண்டபமும், வெளிச்சுவரின் தென்மேற்கே சந்திரசேகர் திருக்கல்யாண மண்டபமும் இம்மண்டபத்தின் வலது பக்கத்தில் நீராழி மண்டபமும், வெளிச்சுவரின் தென்மேற்கே சந்திரசேகர திருக்கல்யாண மண்டபமும் காணப்படுகின்றன.  மண்டபத்தின் முகப்பில் குதிரைகள் ஓடுவது போல சிற்பங்கள் உள்ளன. வடக்குபுறமாக நடன மண்டபம் காணப்படுகிறது.  இம்மண்டபத்தில் விழாக் காலங்களில் மகளிர் நடனமாடுவர். அதன் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அமைந்திருக்கிறது.



இரத்தினகிரி கோயிலின் கருவறையமைப்பு

கருவறையில் பாலமுருகப் பெருமான் கரத்தில் வேலேந்தி, வள்ளி தெய்வானையுடன் காட்சியருகின்றார். அவருக்கு முன்னதாகக் கருவறையில் பெரிய வேல் ஒன்றும் காட்சியருளுகின்றது. கருவறையின் மேல் சுதைச் சிற்பங்களோடு அழகிய  கோபுரம் அமையப் பெற்றுள்ளது.



இக்கோயிலில் முருகன் இரு கோலங்களில் காட்சி தருகிறார். ஒன்று வள்ளி தெய்வானையுடன் உள்ள திருக்குாலம் மற்றொன்று குருகோலம் ஆகும். கிரானைட் கற்கலால் அமைக்கப்பட்ட தேரின் மீது சிலை நிறுவப்பட்டுள்ளது. சோழர்கால சிற்பக்கலை வடிவில் கற்பக்கிரகம் கிரானைட் கற்கலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. விநாயகருக்கு தரைப்பகுதியில் ஒன்றும் மலை உச்சியில் ஒன்றும் என இரு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் 14-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் கட்டப்பட்டு, 1980-ஆம் ஆண்டில் பாலமுருகனடிமை சுவாமிஎன்பவரால் புனரமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் அர்ச்சனைகள் அனைத்தும் தமிழில் செய்யப்படுகின்றன. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.



அமைவிடம்

இரத்தினகிரி. வேலூருக்கு 15 கிமீ முன்பாகவும் இத்தலம் கீழ்மின்னல் எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது.  மூலவர் பாலமுருகன். உற்சவர்: சண்முகர். அவரது சன்னிதி கல்லில் தேர் போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தல தீர்த்தமான ஆறுமுக தெப்பம், அறுங்கோண வடிவில் பிரம்மாண்டமான தெப்பக்குளம் கட்டுமாணப்பணியில் உள்ளது.

பாலமுருகனடிமை

60 வருடங்களுக்கு முன்னால் இக்கோவில் அத்துணைப் பிரசித்தியில்லை ; வசதிகளும் இல்லாதிருந்தது. 1960ல் முருகன் தன்னுடைய திருவிளையாடல் மூலம் அவரைத் தேர்ந்தெடுத்தான்.  ஆம்.. அவ்வருடம் ஒரு அரசு ஊழியர் படியேறி முருகனைத் தரிசிக்கப் போனார். அர்ச்சகரிடம் கற்பூரம் காட்டச் சொன்னார்; அர்ச்சகர் கற்பூரம் இல்லையென்று சொல்ல  ஊதுபத்தியாவது காட்டுங்கள்என்றார் பக்தர். அதுவும் இல்லையென அர்ச்சகர் சொல்ல முருகா ..  உனக்கே இக்கதியா?” என்று புலம்பி மூர்ச்சையுற்றார் பக்தர். முருகன் அவர் உள்ளத்துள் பிரசன்னமானார்.. அவரை ஆட்கொண்டார்.. பின்னர் எழுந்தமர்ந்த அவர்..பின்னால் பாலமுருகனடிமை என்றழைக்கப்பட்டவர்..  கோவில் திருப்பணியே இனி முதல் பணிஎன்று மணலில் எழுதிக்காட்டினார்..    அன்று முதல் பேசுவதையே நிறுத்தி விட்டார். தன் அரசுப் பணி துறந்து .. இறைபணியில் புகுந்தார்.. அவரது முயற்சியால் முருகன் தனக்கென்று ஒரு கோவில் அமைத்துக் கொண்டான்.



கந்தசஷ்டி

இங்குள்ள மூலவர்  பாலமுருகன் என்பதனால் இங்கு கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடப்பது இல்லை. இரவில் அர்த்தஜாம பூஜையில் அவருக்குப் பாலை நிவேதனமாகப் படைக்கின்றனர்.

துர்க்கை

கோவிலின் அடிவாரத்தில் துர்க்கைக்குத் தனிக் கோவில் உள்ளது. நூற்றுச் சொச்ச படிகள் ஏறிச் சென்றால் முருகன் கோவிலை அடைந்து விடலாம். மோட்டார் வாகனங்கள் மேலேறிச் செல்லவும் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

கற்பக விநாயகர்

மலையில் உள்ள கோவிலினுள் கற்பக விநாயகர் சன்னிதி உள்ளது. வராஹிக்கு தனிச் சன்னிதி உள்ளது.

இரத்தினகிரி” – என்ற சொல் என்பது

1.        அடைக்கலம்

2.        எனது அனுபவம்

3.        அதுவே ஒரு மகத்தான உண்மை.

குழந்தை பாக்கியம் அருளும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஒரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார்.  அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். 

அதன்படி அப்பெண் பக்தை, விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார்.  இச்சம்பவம் நிகழ்ந்த   சில  தினங்களிலேயே  அப்பெண்  கருவுற்றார்.  அதன் பின்னரே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் என அறிந்து கொண்டார் அந்த பெண். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம் இதுவாகும். 

இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் காட்சி தருகிறார்.  இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். குழந்தை பாக்கியம் தரும் மிக புண்ணியமான தலதமாக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் இன்று கருதப்படுகிறது. 

மாலை மலர்30 Nov 2020 6:48 AM (Updated: 30 Nov 2020 6:48 AM)

கோயிலின் சிறப்புகள்

இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நெய்வேத்தியம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் இவை அனைத்தும் ஆறு என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நாளில் முருகனுக்கும் அன்னாபிஷேகம் செய்வது இந்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மட்டுமே. சிவனிலிருந்து தோன்றிய சிவ அம்சமாதலால் முருகனுக்கும் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஆடி கிருத்திகை அன்று முருகன் ஊர் பெயருக்கேற்ப ரத்தினங்களால் ஆன ஆடை அணிந்து காட்சி தருவது சிறப்பாகும்.

பலன்கள்

 இத்தலத்தில் உள்ள வராஹி அம்மனை வளர்பிறை பஞ்சமியில், வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபமேற்றி வேண்டினால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

 காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

நேர்த்திக்கடன்

முருகனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

பாலமுருகனின் சேவடி தொழுது அனைத்து வளமும் நலமும் பெறுவோம்.