4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூன், 2023

விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வினைத்திறனான கற்றல், கற்பித்தலில் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபங்கு -Mr. N.Koventhan1, Mrs. R.Thakshaayini2

 

விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வினைத்திறனான கற்றல், கற்பித்தலில் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபங்கு

 

Mr. N.Koventhan1, Mrs. R.Thakshaayini2

2Senior Lecturer in Education,

1,2Department of Education and  childcare,

Faculty of Arts and Culture,

Eastern university, Sri Lanka

1 koventhannadarasa@gmail.com

 

ஆய்வுச்சுருக்கம்

இலங்கையின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை ஆய்வுப் பிரதேசமாகக் கொண்டு அளவீட்டு ஆய்வாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. விசேட தேவையுடைய மாணவர்கள் தமது கற்றலில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காண்பதுடன் அவர்களது கற்றலை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபங்கை ஆராய்தல் எனும்  நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது. ஆய்வுப் பிரதேசமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் தெரிவுசெய்யப்பட்டது. இக்கல்வி வலயத்தில் விசேட  தேவையுடைய மாணவர்களைக் கொண்ட 10 பாடசாலைகள் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. இப் பத்து பாடசாலைகளிலிருந்து 10 அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையிலும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் 20 ஆசிரியர்களும், விசேட தேவையுடைய 50 மாணவர்களும், இம்மாணவர்களின் பெற்றோர்கள் 50 பேரும் எளிய எழுமாற்று மாதிரியின் அடிப்படையிலும் ஆய்வு மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து, அவதானம், நேர்காணல் எனும் ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுத் தரவுகள் சேகரிக்கப்பட்டன, பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு நோக்கங்களின் அடிப்படையில் பண்புரீதியானதும், அளவுரீதியானதுமான கலப்பு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வின் முடிவுகளாக இம்மாணவர்களின் கற்றலில் ஆசிரியர்களின் வினைத்திறனான கற்பித்தலின்  பங்களிப்பு குறைவாக இருப்பதற்கான காரணங்களாகப் ஆசிரியர்களுக்கு விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாள்வது பற்றிய தெளிவின்மை, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு போதிய பயிற்சிகளைப் பெற வசதிகள் இல்லாமை, இம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் முகாமைத்துவம் தொடர்பான கற்கை நெறிகளை தொடராமை, பெற்றோரின் ஆதரவு குறைவாக உள்ளமை, பாடசாலையில் பல்வேறு வகையான விசேட தேவையுடைய பிள்ளைகளை முகாமைத்துவப்படுத்தாமை போன்றன இனங்காணப்பட்டன, இம்மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்குத் தீர்வுகளாக அதிபர்கள் ஆசிரியர்களுக்கு வினைத்திறனான கற்றல், கற்பித்தலை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஆசிரியர்களுக்கு ஆசிரிய ஆலோசகர்கள் தகுந்த ஆலோசனைகள் வழங்குதல், பாடசாலையில் ஆசிரியர்களின் முகாமைத்துவ அறிவை வளர்க்கும் வகையில் செயற்றிட்டங்களை செய்தல், அதிபர் ஆசிரியர்களை மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றோருடன் மாணவர்களின்; கற்றல் தொடர்பில் கலந்துரையாட வைத்தல். போன்றன  விதந்துரைக்கப்பட்டுள்ளன.

அருஞ்சொற்பதங்கள்  

விசேட தேவையுடையோர், கற்றல், கற்பித்தல், வினைத்திறன், முகாமைத்துவம்

1.       ஆய்வு அறிமுகம்

1.1     அறிமுகம்

உடல், உள காரணிகளால் குறிப்பிட்டளவு அசௌகரியங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு சாதாரண வகுப்பறையின் ஊடாக கல்வி வழங்கப்படும் அதேவேளை மேலதிக கவனிப்பிற்கும் உட்படுத்தப்படுபவர்களை விசேட தேவை உடையவர்கள் என ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வரைவிலக்கணப்படுத்துகிறது. பாடசாலையில் விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் ஆசிரியர்களின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகவும், மகத்துவம் மிக்கதாகவும் காணப்படுகின்றது. பெற்றோர்கள் தம் பிள்ளைகளை புத்திஜீவிகளாக்கி சமூதாயத்திற்கு ஏற்ற சிறந்த பிரஜைகளாக்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் விடுகின்றனர்.

விசேட தேவையுடைய பிள்ளைகளிற்கு கல்வி வழங்குவதற்கென்று மட்டக்களப்பு மேற்;கு கல்வி வலயத்தில் பாடசாலைகள் இருப்பினும் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் வீதம் மிகக் குறைவாகவே உள்ளது ( பிரதேச செயலகத்தின் விசேட தேவையுடைய பிள்ளைகள் பற்றிய அறிக்கை 2018 ).

இன்று கணனிக் கல்வியியல் மூன்று பாத்திரங்களை வகிக்கின்றது. ஒரு போதனையாளன், ஒரு கருவி, ஒரு போதனை பயனாளி இது இன்னும் விரிவடையும் என கல்வியியலாளர்கள் எதிர்வுகூறுகின்றனர் மேல் நாடுகளில் பாடப்புத்தகங்கள் இரண்டாம் நிலைக்கும் கற்றலில் கணனியில் இணையப்பயன்பாடு முதலாவதாகவும் மாறி வருகிறது. இவ் விடயம் விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் எவ்வாறு உள்ளது மற்றும் இதில் ஆசிரியர்களின்; முகாமைத்துவ வகிபங்கை அறியும் பொருட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

1.2     ஆய்விற்கான பின்னணி / நியாயத்துவம்

பிள்ளைகள் ஒரே தன்மையான ஆற்றல், அனுபவமுடையவர்களாக இருப்பதில்லை. ஒவ்வொரு மாணவரும் பல்வேறுபட்ட கற்றல் தேவையுடையவர்களாக காணப்படுவார்கள். இவர்கள் அனைவரையும் சீரான வழியில் நெறிப்படுத்துவது ஆசிரியரின் பொறுப்பாகும். வகுப்பறையில் மீத்திறன் மாணவர்கள், மெல்லக்கற்கும் மாணவர்கள், கற்றல் இடர்பாடுடைய மாணவர்கள் என பல வகையான மாணவர்கள் காணப்படுவார்கள். இவர்களின் கற்றல் பாங்கு, ஆற்றல், திறன், போன்றன ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாகும். இவர்கள் கற்றுக் கொள்வதில் வித்தியாசமான கற்றல் தேவையுடையவர்களாக காணப்படுவார்கள் (Anas and Nawastheen, 2019).

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கூடுதலான விசேட தேவையுடைய குடும்பங்கள் காணப்படுகின்றது (பிரதேச செயலகத்தின் விசேட தேவையுடைய குடும்பங்களின் கணக்கெடுப்பு அறிக்கை, 2018). இதில் விசேட தேவையுடைய பிள்ளைகளின் தொகையும் அதிகமாகவே காணப்படுகிறது.

உலகெங்கும் தொடர்ச்சியாக பரவிவரும் தொழிநுட்ப மாற்றம் கல்வியிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இன்று விசேட தேவையுடைய மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் கல்வியை மேம்படுத்தும் பிரதான கருவியாக கணனி, இணைய நூலகங்கள் என்பன பங்குகொள்கின்றது. இதன் தோற்றம் எவ்வாறு என்பதை பார்த்தால் நூல்கள் பல நூற்றாண்டுகளாக மனிதனின் கற்றல் செயற்பாட்டில் உதவி வந்தன. 17 ஆம் நூற்றாண்டில் கொமேனியஸ் எனும் ஐரோப்பிய அறிஞர் பாடநூலை கண்டுபிடித்தார். இதனால் அறிவை பரப்புவதில் ஆசிரியர்களிடம் இருந்த ஏகபோக உரிமை இல்லாதொழிந்தது. இதனால் எந்நேரமும் அறிவைப் பெறலாம் எனும் வாய்ப்புண்டாகியது.

எனினும் நூலை அச்சிடுவது, வெளியிடுவது, பாதுகாப்பது என்பது சிரமமானது. என உணரப்பட்டதனால் ஒரு பயனுள்ள மாற்று ஏற்பாட்டை நவீன தொழிநுட்பம் தந்தது. அதில் ஒன்றே கணனி, இணையம் இவ்விலத்திரனியல் ஊடகமானது அச்சிடப்பட்ட சொற்களுக்கும் அப்பால் ஒலி, நிறம், இடைத்தொர்பு வசதிகளையும் தருவதோடு விடயத்தை இணையத்தளத்தின் ஊடாக உலகெங்கும் வினியோகிக்கும் ஆற்றல் படைத்ததாகவும் மாறி வந்தது.

குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் அதிகபடியான விசேட தேவையுடைய மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாகவும், தங்கள் வேலைகளை சுயமாகச் செய்ய முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இம்மாணவர்களுக்கான வளங்களும் குறித்த ஆய்வுப்பிரதேசத்தில் அரிதாகவேயுள்ளது. இம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஒரு சில ஆசிரியர்கள் விசேட தேவைகள் தொடர்பான பட்டப்படிப்பினை மேற்கொள்வது குறைவாகவும் உள்ளதனால் வினைத்திறனாக கற்றல், கற்பித்தலை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்ற பாடசாலைகள், கல்வியை உயர்தரத்தில் வழங்குகின்றனவா? எதிர்காலத்தில் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கான வழிகள் எத்தகையன? இதில் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபங்கு சிறப்பாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதாக உள்ளது. இப்வாறான பிரச்சினைகளை பின்னணியாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

1.3 ஆய்வுப் பிரச்சினை

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்கள் கற்பதற்கான விசேட அலகுகள் நான்கு உருவாக்கப்பட்டுள்ள போதிலும் இம் மாணவர்களுக்கான விசேட தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். விசேட தேவையுடைய மாணவர்கள், குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கோ, கல்வியற் கல்லூரிகளுக்கோ செல்வது மிகக் குறைவாகவே உள்ளது. இது ஒரு பாரிய பிரச்சினையாகும்.

மேலும் பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர் இணைந்து செயற்படும் போக்கு குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் குறைவாகவே உள்ளது. ஆசிரியர்கள் முன்வந்தால் பெற்றோர்கள் முன்வருவது அரிது அத்துடன் பாடசாலையில் இருந்து இம் மாணவர்களின் வீடுகள் அதிக தூரத்தில் இருப்பதனால் ஆசிரியர்கள் இம்மாணவர்களின் வீடு தரிசித்தல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். என்பதை ஆய்வாளன் நேரடியாக இம் மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற போது அவதானிக்க முடிந்தது.

ஆசிரியர்கள் குறைவாக உள்ளமையினால் குறித்த பாடசாலைகளில் தனியாள் வேறுபாடுகளுக்கேற்ப கற்றல், கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை உள்ளது. இதில் கணனி வழிக்கற்பித்தலை மேற்கொள்வது ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. இன்றைய நிலையில் விசேட தேவையுடைய மாணவர்களின் சிறந்த வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வகுப்பறை முகாமைத்துவம் சரியானதாக இல்லை. இம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒரு சிலர் விசேட தேவைக் கல்வி தொடர்பான கற்கை நெறிகளை கற்காமலே கற்பிக்கின்றனர். இதனால் எந்த விசேட தேவையுடைய மாணவர்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய விளக்கம் இன்மையால் சாதாரன மாணவர்களுக்கு கற்பிப்பது போன்றே கற்பிக்கின்றனர். இதனால் இம் மாணவர்கள் கற்றலில் முன்னேறுவது குறைவாக உள்ளது. இவ்வாறான நிலை மிக முக்கியமான பிரச்சினையாக குறித்த ஆய்வுப்பிரதேசத்தில் காணப்படுகிறது.

ஆய்வுப் பிரச்சினைக் கூற்று

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின்; கற்றலை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் வினைத்திறனான கற்றல், கற்பித்தல் குறைவாக காணப்படுகின்றமையால் இம் மாணவர்கள்; பொருத்தமான கல்வியை பெறுவதி;ல் சிரமப்படுகின்றனர். (மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பான ஆய்வறிக்கை, 2019).

1.4 ஆய்வினது முக்கியத்துவம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட  தேவையுடைய பிள்ளைகளிற்கான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வினைத்திறனான கற்றல், கற்பித்தலானது குறைவாகவே காணப்படுகிறது. இவர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், எதிர்காலத்தில் இந்த ஆய்வுப்பரப்போடு தொடர்புபட்ட ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு ஆய்வின் நோக்கத்தை பூரணப்படுத்துவதற்கும், தரவுப் பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்கும் இவ்வாய்வு முக்கியம் பெறுகின்றது.

2.0 சார்பிலக்கிய மீளாய்வு

திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல், ஆகியவற்றை உள்ளடக்கியதே முகாமைத்துவம் (Stoner> 1996).

பொதுவாக சாதாரண மாணவர்களுக்கு தேவைப்படாத விசேட கவனம் மற்றும் குறிப்பிட்ட தேவைகள் அவசியமாக இருக்கும் மாணவர்களை விசேட தேவையுடைய மாணவர்கள் என்பர் (Ebony Howard, 2021).

Uzunboylu, H. & Özcan, D.  என்பவர்கள் 2019 ஆண்டு விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகளின் பகுப்பாய்வு எனும் தலைப்பில் துருக்கியில் செய்த ஆய்வில் ஆராய்ச்சியின் போக்குகளை வெளிப்படுத்துவதற்காக மற்ற அறிவியல் தரவுத்தளங்கள் ஆய்வு செய்யப்படலாம் கற்பித்தல் முறைகள் மற்றும் விசேட கல்வி பற்றி. மேலும் ஆராய்ச்சி அதிக கவனம் செலுத்தலாம் விசேட கல்வியில் கற்பித்தல் முறைகள் குறிப்பாக ஆசிரியர்கள் ஒரு வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தற்போதைய மற்றும் ஆதார அடிப்படையிலானவை என்ன சிறப்பு கல்வியில் கற்பித்தல் முறைகள். வெவ்வேறு உள்ளடக்க பகுப்பாய்வு அளவுகோல்கள் ஆராய்ச்சி மாதிரி, தலைப்பு, முறை மற்றும் எண் ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும்.

விசேட தேவைகளை கொண்ட மாணவர்கள் வகுப்பறை கற்றல் நடவடிக்கைகளில் பின்தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. எனவே ஆசிரியர்கள் கற்றலில் சிரமங்களை எதிர் கொள்கின்ற மாணவர்களைப் பற்றி அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும், கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபாட்டினை அதிகரிக்கவும் வேண்டும் (ளூயணலெஇ 2021).

கணினி, மாணவர்களை நவீன தொழில் நுட்பத்திற்கு பழக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புதுமையான, அறிவியல்பூர்வமான கற்றலுக்கும் மாணவர்களைத் தயார் செய்கிறது. ஆசிரியர் விரிவுரை மூலம் கற்பித்தலில் ஈடுபடாமல் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களையே கற்றுக் கொள்ள வைப்பது "கணினி வழிக் கற்பித்தல்” எனப்படும் (Shazny, 2021).

விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் செயல்பாட்டில் உதவ கணனி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நபர்களுக்கு சுயாதீனமாக செயல்பாடுகளைச் செய்வதில் சிக்கல் உள்ளது, மேலும் இதுபோன்ற மாணவர்களுக்கு உதவ ஆசிரியர்கள் தங்கள் கற்றல் செயல்முறைகளில் கணனியை இணைத்துக்கொள்வார்கள். இத்தகைய தொழில்நுட்பம் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அவர்களின் பணிகளைச் செய்வதற்கான திறனை மேம்படுத்த அதிக வாய்ப்புகளை வழங்குகிறது, மேலும் ஊனமுற்றோரின் கல்வியை ஊடாடுவதன் மூலம் மேம்படுத்துகிறது, இதனால் கருத்துகளை மிகவும் திறம்பட கற்பிக்க முடியும் கற்றல்/கல்வி செயல்பாட்டில் கணனி இருப்பதால், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் சமூக திறன்களை மேம்படுத்தவும், மேம்பட்ட வாழ்க்கை முறைகள் மூலம் சமூக தொடர்புகளில் ஈடுபடவும் உதவி பெறலாம். (வாக்கர், 2018).

3.0 ஆய்வு முறையியல்

ஆய்வு முறையியலானது, ஆய்வின் பொது நோக்கத்தையும், சிறப்பு நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு, ஆய்வு வினாக்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கு விடை காண்பதன் அடிப்படையில் ஓர் அளவு, பண்பு ரீதியான கலப்பு முறையிலான ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்; ஆய்வுப் பிரதேசம், மாதிரித் தெரிவு, தரவுப் பகுப்பாய்வு முறை போன்ற பல முக்கிய விடயங்களைக் கொண்டதாக அமைகிறது. ஆய்வுப் பிரதேச குடித்தொகையின் அடிப்படையில் எளிய எழுமாற்று மாதிரி, நோக்கமாதிரித் தெரிவுகள் இதில் இடம்பெறுகின்றன.

3.1 பொது நோக்கம்

விஷேட தேவையுடைய மாணவர்கள் கற்றலில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காண்பதுடன் அவர்களது கற்றலை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் வினைத்திறனான கற்பித்தல் வகிபங்கினை ஆராய்வதாகும்.

ஆய்வின் விசேட குறிக்கோள்கள்

1.             விசேட தேவையுள்ள பிள்ளைகளை இனங்காணல்

2.             விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்படும் வினைத்திறனான கற்றல், கற்பித்தல் செயன்முறைகளைக் கண்டறிதல்.

3.             மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட  தேவையுடைய மாணவர்கள் எதிர்நோக்கும் கற்றல், கற்பித்தல் பிரச்சினைகளைக் பகுத்;தறிதல்.

4.             மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வினைத்திறனான கற்றல், கற்பித்தலில் ஆசிரியர்களின் முகாமைத்துவ ஈடுபாட்டை இனங்காணல்.

5.             மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வினைத்திறனான கற்றல், கற்பித்தலில் ஆசிரியர்களின் முகாமைத்துவ ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் பரிந்துரைத்தல்.

3.2  ஆய்வின் மாதிரித் தெரிவு

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு விசேட தேவையுடைய மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும், இம்மாணவர்ளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களும், அதிபர்களும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அட்டவணை 01

ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள்

வகை                      அதிபர்கள்              ஆசிரியர்கள்          வி.தே.மாணவர்கள்              பெற்றோர்கள்

1AB- 02           02                                10                    11                    11

1C- 05             05                                19                    30                    30

II   -  02            02                                07                    12                    12

III -  01             01                                04                    07                    07

        மொத்தம்               10                              40                    60                    60

 

ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளில் உள்ள 10 அதிபர்களும்  நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். இப் 10 பாடசாலைகளில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்களுக்குக் கற்பிக்கும் 40 ஆசிரியர்களுள் 20 ஆசிரியர்கள் 2:1 என்பதன் படி எளிய எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். இப் 10 பாடசாலைகளில்  இனங்காணப்பட்ட விசேட  தேவையுடைய மாணவர்கள் ஒரு பாடசாலையில் 5 பேர் எனும் வீதத்தில் 10 பாடசாலைகளிலும் 50 மாணவர்கள் எளிய எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். இப் 10 பாடசாலைகளில்  இனங்காணப்பட்ட விசேட  தேவையுடைய மாணவர்களது பெற்றோர் ஒரு பாடசாலையில் 5 பேர் எனும் வீதத்தில் 10 பாடசாலைகளிலும் 50 பெற்றோர்கள் எளிய எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.

4.0 தரவுப்பகுப்பாய்வும், வியாக்கியானமும், கலந்துரையாடலும்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வினைத்திறனான கற்றல், கற்பித்தலில் ஆசிரியர்களின் முகாமைத்துவ பங்களிப்பை அறியும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆய்வுக்கான தகவல்கள் வினாக்கொத்துக்கள், அவதானம், நேர்காணல் மூலம் திரட்டப்பட்டன. அந்த வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு; பகுப்பாய்வு செய்து அதனை வியாக்கியானமும், கலந்துரையாடலும் செய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

4.1 விசேட தேவையுள்ள பிள்ளைகளை இனங்காணல்



உரு 1 பாடசாலையில் விசேட தேவையுள்ள பிள்ளைகள்

பாடசாலையில் விசேட தேவையுடைய மாணவர்களின் எண்ணிக்கை, தொடர்பில் கேட்கப்பட்ட வினாவிற்கு மிக அதிகம் என 10% மான ஆசிரியர்களும், அதிகம் என 15% மான ஆசிரியர்களும், ஓரளவு என 20% மான ஆசிரியர்களும், குறைவு என 30% மான ஆசிரியர்களும், மிகக்குறைவு என 25% மான ஆசிரியர்களும் பதில்களை வழங்கினர். பகுப்பாய்வின்படி சாதாரண மாணவர்களை விட இம்மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. மேற்கொண்ட கலந்துரையாடலில் இதற்கான காரணங்களாக பெற்றோருக்கு இப் பிள்ளைகளின் கற்றல் தொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ளமை, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் சமூகம் தங்களையும், இப் பிள்ளைகளையும் தப்பான கண்னோட்டத்தில் பார்க்கும் என்பதற்காக பாடசாலைக்கு அனுப்பாமல் மறைத்து வைத்துள்ளனர் எனக்கூறினர். விசேட தேவையுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை 6247 ஆக அதிகரித்துள்ளபோதிலும் 292 விசேட தேவையுடைய பிள்ளைகளே பாடசாலைக் கல்வியை தொடர்கின்றனர் (Ketheeswaran, 2014). மேற்கூறிய ஆய்விலும் இம்மாணவர்கள் பாடசாலைக் கல்வியை தொடர்வது குறைவாகவே உள்ளது. எனவே ஆய்வாளனின் இத் தரவுப்பகுப்பாய்வை உறுதிப்படுத்துகின்றது.

4.2 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்படும் வினைத்திறனான கற்றல், கற்பித்தல் செயன்முறைகள்.


 

உரு 2 பாடசாலையின் வகுப்பறைச் சூழல்.

விசேட தேவையுடைய மாணவர்களின் கணனி வழிக்கற்றலுக்கான வகுப்பறைச் சூழல் தொடர்பாகப் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில், பொருத்தம் என 20% மான ஆசிரியர்களும், ஓரளவு என்று 15%மான ஆசிரியர்களும், குறைவு என 40% மான ஆசிரியர்களும், மிகக் குறைவு என 25% மான ஆசிரியர்களும் பதில்களை வழங்கியுள்ளனர். இதிலிருந்து இம்மாணவர்களின் கற்றலுக்கு பொருத்தமான வகுப்பறைச் சூழல் குறைவாகவே உள்ளது. அவதானம், கலந்துரையாடல் மூலம் வகுப்பறையில் அதிக மாணவர்கள் காணப்படுகின்றமை, கணனி வசதிகள் இல்லாமை, இடவசதி குறைவு, இம்மாணவர்களின் விசேட தன்மைக்கு ஏற்ப தளபாட வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் இம்மாணவர்களது கற்றலுக்கு பொருத்தமான வகுப்றை குறைவாக உள்ளது.

விசேட  தேவையுடைய மாணவர்களுக்கான வகுப்பறைச் சூழல் சிறந்த முறையில் இல்லை இதனால் இம்மாணவர்கள் கற்றலை சிறப்பாக மேற்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்;. வகுப்பறைச் சூழல் சிறப்பாக அமையும் போதுதான் விசேட தேவையுடைய மாணவர்கள் சிறப்பாக கற்றலை மேற்கொள்வார்கள் (பக்கீர் ஜஃபர்,2004). மேற்கூறிய ஆய்வு முடிவு ஆய்வாளனின் இந் ஆய்வை முன்னகர்த்திச்செல்வதற்கு உதவுகிறது.

4.3 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வினைத்திறனான கற்றல், கற்பித்தலில்  உள்ள பிரச்சினைகள்


 

உரு 3 மாணவர்களின் சுய கற்றல்.

விசேட தேவையுடைய மாணவர்கள் சுய வழிக்கற்றலில் ஈடுபடுவதுண்டா? என  ஆசிரியர்களிடம் கேட்கப்பட்ட வினாவுக்கு 25% மான ஆசிரியர்கள் நன்று எனவும், சுமார் 15% மான ஆசிரியர்கள் சராசரி எனவும், 40% மான ஆசிரியர்கள் குறைவு எனவும், 20% மான ஆசிரியர்கள் மிகக் குறைவு எனவும் பதிலளித்தனர். இதனால் சுய கற்றலில் ஈடுபடுவது குறைவு. என்ற முடிவிற்கு வரமுடியும். கலந்துரையாடலில்  சுய கற்றல் குறைவிற்கான காரணங்களாக ஆசிரியரின் உதவி தேவை, அடிப்படை எழுத்தறிவு குறைவு, அவர்களுக்கான அன்பு, காப்புத் தேவைகள் குறைவாக உள்ளது எனக்கூறினர். விசேட தேவையுடைய மாணவர்களிடையே காணப்படும் தாழ்வு மனப்பாங்குகள், பிறரில்  தங்கி நிற்கும் மனநிலை, முன்வரத் தயக்கம், கூச்சசுபாவம், ஞாபகசக்தி குறைவு, பாடசாலைக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்கமை போன்ற விடயங்கள் இம்மாணவர்களின் சுய கற்றலை குறைக்கின்றது (Angeaw and Upul Indika, 2011). எனவே மேற்கூறிய ஆய்வு முடிவு ஆய்வாளனின் இந் ஆய்வை முன்கொண்டு செல்வதற்கு உதவுகின்றது.

4.4 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வினைத்திறனான கற்றல், கற்பித்தல் ஆசிரியர்களின் முகாமைத்துவ ஈடுபாடு.



உரு 4 ஆசிரியர்களின் ஒத்துழைப்பு.

விசேட தேவையுடைய மாணவர்கள், ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனரா? என கேட்கப்பட்ட வினாவிற்கு மிக அதிகம் என 10% மான ஆசிரியர்களும், அதிகம் என 15% மான ஆசிரியர்களும், ஓரளவு என 20% மான ஆசிரியர்களும், குறைவு என 30% மான ஆசிரியர்களும், மிகக்குறைவு என 25% மான ஆசிரியர்களும் பதில்களை வழங்கினர். பகுப்பாய்வின்படி மாணவர்களது ஒத்துழைப்பு குறைவாகவே காணப்படுகின்றது. கலந்துரையாடலின் படி ஆ ஒத்துழைப்பு குறைவதற்கான காரணங்களாக பெற்றோர்களின் கவனம் இன்மை, ஆசிரியருடன் தொடர்பாடல் குறைவு, விசேட தேவையுடைய பிள்ளைகளை கவனிப்பது குறைவு, பெற்றோர் வறுமை காரணமாக தூர இடங்களுக்கு தொழிலுக்கு செல்கின்றமை போன்றவற்றை முன்வைத்தனர்.

பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் அக்கறை குறைவு, பெற்றோர் பிரிந்து வாழுதல், பெற்றோரின் கல்வி மட்டம் குறைந்த தன்மை, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளமை போன்ற காரணங்களால் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டிற்கு பெற்றோரால் ஒத்துழைப்புகள் கூடுதலாக வழங்க முடியாமல் உள்ளனர் (சோபா, 2013). மேற்கூறிய ஆய்வு முடிவுடன் விசேட தேவையுடைய மாணவர்களின்  பெற்றோரின் ஒத்துழைப்பு என்னும் விடயத்தில் காணப்பட்ட முடிவுகள் ஆய்வாளனின் இந்த ஆய்வை மேலும் மெருகூட்டுவதாக அமைகிறது.

4.5 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வினைத்திறனான கற்றல், கற்பித்தல் ஆசிரியர்களின் முகாமைத்துவ ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கையும், ஆலோசனையும்

 


உரு 5 ஆசிரியர்களின் ஈடுபாடு

விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் ஆசிரியர்களின் ஈடுபாடு உள்ளதா? எனக் பெற்றோரிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு மிகச் சிறப்பாக என 10% மான பெற்றோரும், சிறப்பானது என 10% மான பெற்றோரும், திருப்தியாக என 20% மான பெற்றோரும், குறைவாக என 40% மான பெற்றோரும், மிகக் குறைவாக என 20% மான பெற்றோரும் பதில் வழங்கினர். ஆகவே ஆசிரியர்களின் ஈடுபாடு குறைவாக உள்ளது. மேற்கொண்ட கலந்துரையாடலில் இதற்கான காரணமாக ஆசிரியர்கள் அதிகாலையில் வேலைக்கு செல்கின்றமை, கணனி வசதிகள் இல்லாமை பாடசாலையிலிருந்து  வீடு அதிக தூரத்தில் உள்ளமை போன்ற காரணங்களால் இம் மாணவர்களின் கற்றலில் ஆசிரியர்களின் ஈடுபாடு குறைகின்றது. ஆசிரியர்கள், வலயக்கல்வி அதிகாரிகள், சமூக அமைப்புக்கள் இணைந்து பெற்றோருக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் இம்மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் ஈடுபாட்டை அதிகரிக்க முடியும் (Borito citi, 2018).

5.0 முடிவுகளும், விதப்புரைகளும்

       ஆய்வுக்குட்படுத்திய பாடசாலைகளில் வினைத்திறனான கற்றல், கற்பித்தலில் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபங்கு குறைவாவே உள்ளது.

       இம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல் செயன்முறை குறைவாகவே உள்ளது.

       ஆய்வுக்குட்படுத்திய பாடசாலைகளில் குறிப்பாக பார்வைக் குறைபாடுடை பிள்ளைகள், கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகள், மெல்லக் கற்கும் பிள்ளைகள், உடல் குறைபாடுடைய பிள்ளைகள் காணப்படுகின்றனர்.

       ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலைகளில்; வகுப்பறை முகாமைத்துவம் இம்மாணவர்களின் கணனி வழிக்கற்றல், கற்பித்தலுக்கு பொருத்தமானதாக இல்லை.

       ஆய்வுக்குட்படுத்திய பாடசாலைகளில் இம்மாணவர்கள் கிரகித்தல், மனனம் செய்தல்,  பிரச்சினை தீர்த்தல், பகுத்தல், தொகுத்தல், முதலிய செயற்பாடுகளில் குறைந்த மட்டத்தில் உள்ளனர்.

       கேள்வித் தாள்களைத் தயாரிக்க, விடைத் தாள்களை மதிப்பிட மற்றும் தேர்வு முடிவுகளைப் பகுத்தறிய கணனி பயன்படுத்தப்படுவது குறைவாக உள்ளது.

       ஆய்வுக்குட்படுத்திய பாடசாலைகளில் இம்மாணவர்களின் கற்றல் நிலை குறைவாக உள்ளது. இம்மாணவர்களை சாதாரண மாணவர்களுடன் ஒப்பிடும் பொழுது குறுகிய நேரத்தில் களைப்படைந்து விடுவர். போசாக்கு இல்லாத காரணத்தினால் நீண்ட நேர கற்றல் செயற்பாட்டில் இவர்களால் ஈடுபடமுடிவதில்லை.

       ஆய்வுக்குட்படுத்திய பாடசாலைகளில் விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலுக்கு ஆசிரியர்கள் முகாமைத்துவ பங்களிப்பு வழங்குவது குறைவாகவே காணப்படுகிறது. இது வரைக்கும் எந்தவொரு செயற்றிட்டங்களும் இம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கு குறித்த பாடசாலைகளில் நடைபெறவில்லை.

       இம் மாணவர்களின் பெற்றோரின் கல்வி மட்டம் குறைவாக உள்ளதனால் இம் மாணவர்களுக்கு வீட்டில் கல்வி கற்றுக்கொடுப்பது சவாலாக உள்ளது.

       குறித்த ஆய்வுப்பிரதேசத்தில் இம்மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வது குறைவு.

       ஆய்வுக்குட்படுத்திய பாடசாலைகளில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்கள் இப் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் விழிப்புணர்வு அற்றவர்களாகவும், இப்பிள்ளைகள் விசேட தேவையுடையவர்களாக காணப்படுவதால் இவர்கள் பாடசாலைக்கு சென்று எதையும் சாதிக்கமாட்டார்கள் என்துடன் தங்களுக்கு பணச்செலவுதான் அதிகரிக்கும் என்பதால்  தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும்; காணப்படுகின்றனர்.

       ஆய்வுக்குட்படுத்திய பாடசாலைகளில் பெற்றோர்கள் இம்மாணவர்களுக்கு பொருத்தமான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைவாகவே காணப்படுகிறது.

விதப்புரைகள்

       இம் மாணவர்களின் விசேட தன்மைக்கு ஏற்ப அவர்களை இனங்காணல் வேண்டும். ஆசிரியர்கள் விசேட தேவையுடை மாணவர்களின் கற்றலுக்கு உதவ வேண்டும், குறிப்பாக பெற்றோர்களும் இப் பிள்ளைகளை சரியான முறையில் இனங்கண்டு அவர்களை கையாள வேண்டும். பிரதேசத்திற்கு பொறுப்பான சமூக சேவை அதிகாரி விசேட தேவையுடை பிள்ளைகளை இனங்கண்டு பாடசாலையில் சேர்ப்பதற்கான வழிவகைகளை பெற்றோருக்கு செய்து கொடுத்தல் வேண்டும்.

       குறிபிட்ட கால அளவில் இப்பிரச்சனையைத் தீர்க்க ஆசிரியரை அதிகளவில் கற்பித்தலில் ஈடுபடச் செய்விப்பதே கணினி வழிக் கற்பித்தலின் அடிப்படை நோக்கமாகும். ஆசிரியர் மாணவர் மற்றும் கணினி ஆகிய மூன்றும் இணைந்து செயல்படும்போதே கணினி வழிக் கல்வி சிறப்பாக அமையும்.

       தொழிநூட்ப முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் இடத்தினை பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், கணினி மென்பொருள் மற்றும் இணையப்பாவனை என்பன இன்று பிள்ளைகளின் கற்றல் உபகரணங்களாக மாறியுள்ளன (Greenfield Suzuki, 1998).

       கணினி வழிக் கற்றலுக்கு மாணவரை அதிகமாகக் ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

       மாணவர்கள் அவர்களின் நோக்கங்களை அடைவதற்கு ஏற்ற அனுபவங்களைக் கொடுக்கிறது. மீளக் கற்றலுக்கு கணினியின் பயன்பாடு மிக முக்கியம்.

       விசேட தேவையுடைய மாணவர்களுக்கேற்ப வகுப்பறைச் சூழல் அமைக்கப்பட வேண்டும். அதற்குப் பாடசாலையின் உதவியுடன் பெற்றோர், கல்வி அதிகாரிகளின் உதவிகளைப் பெற வழிவகுத்தல் அவசியம். இம்மாணவர்களின் விசேட நிலையை ஆசிரியர் உணர்ந்து பொருத்தமான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

       இம் மாணவர்களின் விசேட தன்மைக்கு ஏற்ப அவர்ளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை தேர்ச்சிகளை விசேட தேவை உடையவர்ளுக்கு ஏற்ற விதத்தில் நெகிழ்ச்சி தன்மை உடையதாக பிரத்தியேகமாக தயாரித்தல்.

       ஆசிரியர் பாட, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இம்மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்

       மேலும் பயிற்றப்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர்களை நியமித்தல். விசேட செயற்றிட்டங்களை மேற்கொண்டு இம்மாணவர்களின் கற்றலை உறுதிப்படுத்தல். அதிபர் சிறந்த முறையில் மேற்பார்வை செய்தல் வேண்டும்.

       செயல்நிலை ஆய்வுகளில் ஆசிரியர் ஈடுபட்டு இம்மாணவர்கள் கற்றலில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு பரிகார கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

       இம்மாணவர்களுக்கான பயிற்சிப் பாசறைகள், ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

       விசேட தேவையுடைய பிள்ளைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவை பலப்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் அருகில் உள்ள பாடசாலையில் இம்மாணவர்களை சேர்ப்பதற்கு வலயக் கல்வி அலுவலகம் உதவி புரிதல் வேண்டும்.

       விசேட தேவைக்கல்வியுடன் தொடர்புபட்ட பல்கலைக்கழக, கல்வியற் கல்லூரி விரிவுரையாளர்களை அழைத்து பெற்றோர்களுக்கு செயலமர்வுகள் நடாத்துதல்.

       1994 இல் வெளியிடப்பட்ட சலமன்கா அறிக்கையை முறையாக பின்பற்றுதல் வேண்டும், விசேட தேவையுடைய மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு காணப்படும் வாய்ப்பினை ஆசிரியர்கள் பெற்றோருக்கு தெளிவுபடுத்தல்.

       ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் தொடர்பில் இம்மாணவர்களது நிலைமைகளை பெற்றோருக்கு எடுத்துக்காட்டல் வேண்டும், மாலை நேர வகுப்புக்களை நடாத்துதல் வேண்டும்.

       இம்மாணவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும்.

       திட்டமிடப்பட்ட கற்பித்தலுக்குத் (Programmed Instruction) தயாரிக்கப்பட்ட பாடப் பொருள்களையே மென்பொருளாக மாற்றி கணினியைப் பயன்படுத்தி மாணவர் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். அதற்கு மாணவர் கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்ற வேண்டும்.

       விசேட தேவையுடைய மாணவர்கள் செய்த சாதனைகளை எடுத்துக் கூறுதல், பாடசாலைக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்தல், இப் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர், அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பெற்றோரின் மனநிலையில்; படிப்படியாக மாற்றத்தைக் கொண்டு வருதல் வேண்டும்.

       வகுப்பறைக் கற்றலில் தனிப்பட்ட மாணவனின் கற்றலை விட அனைத்து மாணவரின் கற்றலுக்கே முக்கியத்துவம் தரப்படும். கணினி வழிக் கற்றலில் ஒவ்வொரு தனிப்பட்ட மாணவனும் அவருக்குத் தேவையான நேரத்தைப் பயன்படுத்தி, பாடப் பொருள்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள விட வேண்டும்.

       இப் பிள்ளைகளது குடும்பத்துடன் பாடசாலை, நெருக்கமான உறவை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை தொடர்ச்சியாக வழங்குதல், பிற இடங்களில் இயங்கும் விசேட தேவையுடைய பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளுடன் பெற்றோர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல். போன்ற பல விழிப்புணர்வுகளை செய்வதன் மூலம் பெற்றோரின் ஈடுபாடும் அதிகரிப்பதுடன் இம்மாணவர்களின் கற்றலும் அதிகரிக்கும்.

References:

   Anas, P. L.,& Nawastheen, F. M. (2019). Teachers’ perception towards in fulfilling

            diverse  learners  needs  in  the  classroom  teaching-learning  process.  South  Eastern  

            University International  Arts  Research  Symposium-2019,

             http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4170.

Caplan, G. (1974). Support systems and community mentel helth: lectures on consept 

            Development. Behavioral Publications, New York.

Dempsey, I., & Dunst, J. (2004). Helpgiving styles and parent empowerment in families with

             a young child with a disability. Journal of Intellectual & Developmental

             Disability, 29:1, 40-51. https://doi.org/10.1080/13668250410001662874.

Desforges, C., & Abouchaar, A. (2003). The impact of parental involvement, parental  

             support and family education on pupil achievemet, (No. 433). Nottingham, 

             England: DfES. http://relationalschools.org/2017/08/12.

Noor, A. 2015, Parental involvement in special education challenges faced to involving in  

              education, university of Karachi, Pakistan.

Rodriguez, R. J., Blatz, E. T., & Elbaum, B. (2014). Parents views of schools involvement

                  efforts. Exceptional Children81(1), 79 - 95.

                  https://doi.org/10.1177/0014402914532232.Shazny, S. H. M. (2021). Challenges faced by students with special needs and learning 

              opportunities for them. Muallim Journal of Social Sciences and Humanities5(1),

              74-83. https://doi.org/10.33306/mjssh/113.

Sinnaththambi, M. (2008). Paadasalaiyum Samoohamum. Kumaran   Puththaha Illam,

              Colombo.

Ysseldyke, J., E. & Algozzine, R. (1994). Special Education a Practical Ppproach for 

             Teachers, (3rd ed.). Houghton  Mifflin College Div.