4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூன், 2023

சித்தர் பாடல்களில் காயசித்தி - செல்வி சிவோகா சிவலிங்கம் (இலங்கை)

 

சித்தர் பாடல்களில் காயசித்தி 

 

செல்வி சிவோகா சிவலிங்கம்  

இலங்கை

முன்னுரை

   சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள் இந்திய சமூகத்தில் சாதிமுறை வலுப்பெறத் தொடங்கிய காலத்தில் சித்தர்கள் பலர் தோன்றினர். இவர்கள் கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி ஆகிய மூன்று வகையான சித்திகளை உடையவர்கள். கா.சுப்ரமணியபிள்ளை சித்தர்கள் பற்றி மேல்வருமாறு குறிப்பிடுகின்றார்.

 “சித்தர்களென்பார் பண்டைக் காலத்து அறிவருள் ஒருசாரார். அவர்கட்கு அறிவரென்றே பெயர் அமைந்திருக்கிறது. யோகம் பயின்று விரிந்த காட்சியுற்றுப் பொருட்களின் உண்மை இயல்புகளையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் அறிந்து அவர்கள் தமிழிலே மருத்துவநூல், மந்திரநூல், இரசவாதநூல், யோகநூல், ஞானநூல் என்றும் பலவகை இலக்கியங்களை உலகிற்கு ஈர்த்தனர்.

  சித்தர்கள் குறித்து சாமி.சிதம்பரனார் கூறும் கருத்தும் நோக்கத்தக்கது.“சித்தர்கள் என்றால் சாகாநிலை பெற்றவர்கள். அழியாத உடலைப் பெற்றவர்கள். உடம்பை அழிந்து போகாமல் காப்பாற்றும் வழியை அறிந்தவர்கள். “சித்” என்றால் அறிவு, சித்தத்தை உடையவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்பவர்கள் நமது நாட்டு பழம்பெரும் பேரறிவு படைத்த விஞ்ஞானிகள் ஆவர். இவர்கள் தமிழகத்து விஞ்ஞானிகள்”

  சித்தர்கள் இயற்கையின் ஆற்றல்களை வென்று பல நூற்றாண்டு; காலம் வாழ்ந்தனர். போகர் 7000 எனும் நூலில் “கமலமுனி” 4300 ஆண்டுகளும், “காளங்கிநாதர்” 3000 ஆண்டுகளும், “காலகண்டனார்” 1200 ஆண்டுகளும்  உயிர் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. இக் கருத்தானது ஆராய்ச்சிக்கு உரியதாக இருப்பினும் சித்தர்கள் சாதாரண மனிதர்களை விட நீண்டகாலம் உயிர்வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

 சித்தர்கள் நோய் ஏற்படாமல் தடுத்தல், நோயைக் குணப்படுத்தல், உடலை அழியாமல் பாதுகாத்தல் போன்றவை தொடர்பாக அதிக கவனம் செலுத்தினர். மனித சமுதாயமானது பிணி, நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நீண்ட காலம் வாழ்வது, சித்தர்களது நோக்கமாக இருந்தது. உடம்பை நீண்டகாலம் பாதுகாக்கும் நோக்கில் இரண்டு முறைகளைக் கையாண்டனர்.

01.          வாசிப்பயிற்சி (பிரணாயாமம் முதலியவை)

02.          கற்பங்களை உட்கொள்ளல்.

யோகம்

 உடலைக் காக்கின்ற யோகாசனப் பயிற்சியினைக் கண்டறிந்து அதை மக்களுக்கு எடுத்துக் கூறிய பெருமை சித்தர்களையே சாரும். இவர்கள் உடல் நலனைப் பேணவும், இறைவனுடன் இரண்டறக் கலக்கவும் யோகத்தைப் பயன்படுத்தினர். எனவே உடலின் வலிமையை அதிகரிக்கவும், உளத்திற்கு நலன் அளிக்கவும் யோகத்தைப் பயன்படுத்தலாம்.

 யோகத்தின் மூலம் பிராணவாயுவை அடக்கி ஆளும் திறனைப் பெறலாம். இருதயநோய், காசநோய், ஆஸ்துமா போன்ற நோய்களைத் தடுக்க பிராணாயாமம் பயன்படுகின்றது. உயிர் வளியை முறைப்படுத்தும் பயிற்சியை மேற்க்கொண்டு, உடலின் தசைகளையும், உறுப்புக்களையும் முறையாக இயங்கச் செய்வதன் மூலம், நோய் வராமல் தடுக்கலாம் என்பது சித்தர் கொள்கை. இதனை திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

” ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்

காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே”

” புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்

உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே”

யோகத்திற்குப் பொறிகளின் அடக்கம் இன்றியமையாதது. எனவே அதற்கான பிராணயாம முறைகளையும், அட்டாங்க யோகமுறைகளையும் திருமூலர் விளக்கியுள்ளார். யோகசாதனையில் வெற்றி பெறுவோர் சாகாநிலை பெறுவர், காயசித்தி அடைவர். அட்டமாசித்திகள் மூலம் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

”தன்னுடலே காயசித்தி தேறிவிடில் வென்றிடலாம்”(541)

”காய சித்தி காப்ப உடல் அழியாமார்க்கம் காட்டுகிறேன்”

”உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவைக்

கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்

விருத்தரும் பாலராவர் மேனியும் சிவத்திடும்

அருள்தரித்த நாதர் பாதம் அண்ணல் பாதம் உண்மையே”

                 -சிவவாக்கியர்-

”ஒளிபடரும் குண்டலினியை உன்னி உணர்வால் எழுப்பிச்

சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம்”

               -பத்ரகிரியார்-

”நல்லவாசலைத் திறந்து ஞானவாசல் ஊடுபோய்

எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்பது இல்லையே”

              -சிவவாக்கியர்-

காயசித்தி உபாயம்

திருமந்திரத்தின் 3 ஆம் தந்திரத்தில் காயசித்தி உபாயம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

”உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேன்” (திருமந்திரம் – 725)

 மாயப்பையான இவ்வுடல் நோய் வாய்ப்பட்டு மயங்கி மாயாதிருக்கும் வகையும் கூறப்பட்டுள்ளது.

 ”காயப்பை ஒன்று சரக்குப்பை பலவுள

மாயப்பை யொன்றுண்டு மற்றுமோந் பையுண்டு

காயப்பைக்குள் நின்றகள்வன் புறப்பட்டால்

மாயப்பை மண்ணா மயங்கிய வாறே”  (திருமந்திரம் – 2122)

வேதையென்னும் வகார வித்தையால் உடல்  அழியாது பொன்போல் காயகற்பம் பெறும் என்கிறார்.

”வேதையா லுகமெலாம் வேதிக்க பரிசவேதி

ஓதைநீ ருலகுவப்ப உண்ணினீமா மேருவென்ன

பூதலத்த வர்க்குப்பஞ்ச பூததேகம் பொன்னாகும்

காதைய நல்ல கற்பங் காயசித்திக்குமாமே”

காயகற்பம்

 சித்தர்கள் “காயகற்பம்” எனும் மருந்தினை உட்கொண்டும் நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். காய கற்பம் என்பது உடல் அழியாது நிலைபேறு தரும் மருந்தாகும். நரை, திரை, மூப்பு போன்றவற்றை போக்கும் இயல்பு காயகற்பத்திற்கு உண்டு. இதனைச் சாகா மருந்து, அமுதம் என்றும் குறிப்பிடுவர். “மூப்பு எனப்படும் ஒரு மருந்தை உண்பதன் மூலம் காயகற்பம் எனும் அமுதம் சுரக்கும்” என்கிறார் சட்டமுனி.

”காலமெனும் கொடிதான கடும்பகையைக்

கற்பமென்னும் வாளினாற் கடிந்து

சாலப பிறப் பிறப்பினை நாம் கடந்தோம்

தற்பரங் கண்டோ மென்று ஆடாய் பாம்பே”

-               பாம்பாட்டிச் சித்தர்-

  உடலை பொன் போன்று ஆக்கக்கூடிய மருந்துகளை உட்கொண்டு, அதன் மூலம் உடலைப் பேண சித்தர்கள் முயற்சித்தனர். கற்ப மூலிகைகளை அல்லது உடலைப் பொன்னாக்கக் கூடிய இரச வாதப் பொருட்களைப் பயன்படுத்தியதுடன் உடலைக் கல்லாக ஆக்கும் உபாயத்தினையும் கையாண்டு ஆயுளை அதிகரிக்கச் செய்ய முயற்சித்தனர். மூலிகைகள், மருந்துப் பொருட்கள் பலவற்றை ஆராய்ந்து அவற்றுள் சிறந்த பயன்களை அழிக்கக் கூடிய கற்ப மூலிகைகள், கற்ப மருந்துகள் போன்றவற்றைப் பிரித்துக் கொண்டனர்.

இரசவாதம்

  மருந்துகளின் உயர்ந்த தரத்தினை கண்டறியும் இரசவாத முறையினை சித்தர்கள் கண்டறிந்தனர். சாதாரண உலோகமானது மருந்துகளின் கலவையினால் பொன்னாக மாறுகின்றது. இவ்வாறான மருந்துகளினால் மனித உடலையும் பொன்னாக்கலாம் என்று சித்தர்கள் நம்பினர். இவர்களது நோக்கம் உலோகத்தைப் பொன்னாக்குவதல்ல, உடலைக் கல்லாக்கி, உயிரை நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்வதாகும்.

”கற்பத்தை யுண்டால் காயமழியாது

கற்பத்தினாலே காணலாம் கலையை

கற்பத்தினாலே காணலாம் சோதியை

கற்பத்தினாலே காலையும் கட்டிடே

கட்டிட சித்தாம் காயப்பரீட்சை” -சட்டைமுனி-

காயகற்பத்தினை உண்டவர்களது உடல் நிலையை கோரக்கர் மேல்வரும் பாடலில்  குறிப்பிடுகிறார்.

”காலமதில் கடியரவம் விடமும் ஏறா

கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா

ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா

நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்”

”வேலணைய கத்திவாள் வெட்டுமேறா

விடந்தலை மேல் கொண்டவனும் விமலி

சீலமுடன் ஞானப் பால் தந்து காத்தே

ஈரெட்டாம் வயதுமெப் போதிருந்து வாழ்வாய்”

கற்ப மூலிகைகள்

  மூலிகை ஒன்றினை வேறொரு பொருளுடன் சேர்க்கும் போது, அம் மூலிகையானது புதிய ஆற்றலினைப் பெறுவதைக் கண்டறிந்த சித்தர்கள் பாடாணங்களையும், இரசங்களையும் கட்டினார்கள். போகர் கருநெல்லி, கருநொச்சி, தீபச்சோதி, உரோம விருட்சம், சாயாவிருட்சம், செம்பல்லி, செங்கள்ளி, செங்கற்றாழை, கற்செம்பு, வெண்தூதுவளை, சக்கரை வேம்பு முதலிய 45 கற்ப மூலிகைகளைக் குறிப்பிடுகின்றார்.

 திருமூலர் கரிசாலையையும், கோரக்கர் கஞ்சாவையும், இராமதேவர் வல்லாரைiயும், காலங்கிநாதர் கரத்தையையும் சிறந்த கற்ப மூலிகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றினைச் சஞ்சீவி மூலிகைகள் என அழைத்துள்ளனர். தன்வந்திரி வைத்திய நூலில,; ஷஷ நெல்லிக்காய், வல்லாரை, கையாண்தகரை, கற்றாழை, வில்வவேர், கீழ்க்காய்நெல்லி, கோரைக்கிழங்கு முதலிய கற்ப மூலிகைகளைக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஷஷஅகத்தியர் கற்ப முப்பு குரு நூல் 100” எனும் நூலில் சிவனார் வேம்பு, வேங்கைப்பட்டை போன்றவை கற்ப மூலிகைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ”இராமதேவர்200” என்ற நூலில் வெண்சாரை, வேம்பு, குருநெல்லி போன்றவையும் கற்பங்ககளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

  போகர் கற்ப மூலிகைகளைக் கறுப்பாக்கும் முறை, பாத்திகளில் வளர்க்கக்கூடிய கற்ப மூலிகைகள் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார்.

”வானான பாத்தியெல்லாம் வரிசை யாக்கி

வைக்கின்ற மூலிகைதான் கரிய சாலை

தேனான கரநீதை செருப்படையோ டோமம்

செப்பரிய வல்லாரை நீலிதானே”

”தானான கருவீழி கறுத்த வாழை

தக்கான கருநெல்லி, கருத்த நொச்சி

கானான கருவேம்பு கறுத்த வேலி

பானான அறுகீரை கருங் கடுக்காய்

பாங்கான கஞ்சாவும் மற்று மூலி

வேனான வேர்விரைகள் கொடிகள் கொம்பு

விதித்துவைத்துக் காய்த்த பின்பு விரையை வாங்கே”

   போகர் கற்ப மூலிகைகள் அறுபது, உபசரங்கள் அறுபது, இவற்றோடு பாதரசம், தங்கம் போன்றவற்றையும் சேர்த்து 122 என வகைப்படுத்துகின்றார்.

”மூலிகைக் கற்பமும் முயன்றது அறுபதும்

பாலி யுபரசம் பாங்காய் அறுபதும்

வாடிவிப சூதும் தங்கம் இரண்டும்

ஒலியொருநூற் றிபத் திரண்டே”

  திருமூலர் 108 கற்ப மூலிகைகள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

”அஞ்சகத் தில் அழி யாமல் காய்ந்தான்

மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டு…” (திருமூலர் ஞானம் 500)

அகத்தியர், குணவாடகத்தில் கரிசாலையை மருந்தாக்கி உண்டால் உடல் பொன்னாகும் எனக் குறிப்பிடுகின்றார்.

”பொற்றானைக் கையாந்தகரை பொன்னிறமாக்கும் உடலை”

காயகற்பங்களை உண்டாக்குகின்ற முறைகளையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அகத்தியர் பரிபூரணத்தில் கடுக்காயைக் கற்பமாகச் செய்யும் முறை காணப்படுகின்றது.

”ஆச்சென்று கடுக்காய்தான் வருஷமொன்று

அப்பனே அதன் முறையைச் சொல்லக் கேளு

வாச்சென்று கடுக்காயைத் தகர்த்துக் கொண்டு

வளமாக அமுரியிலே ஊறப் போட்டு

காச்சென்று மறுநாள் காயப் போட்டு

கணக்காய் பத்துமுறை சுத்தி செய்யே

சுத்திசெய்த கடுக்காய் தான் செங்கடுக்காயாச்சு

சுகமான கடுக்காய்தான் முறையைக் கேளு

பத்தியுடன் இடித்து வடிகட்டி மைந்தா

பாங்கான கரகமதில் பதனம் செய்து

கொள்ளடா காலையிலே வல்லாரை கொள்ளு….

பாசமுடன்நா முரைத்தபடியே கொண்டால்

பலிக்குமடா காயசித்தி யோகந்தானே”

  கடுக்காயை நறுக்கி, அமுரியில் ஊறவிட்டு காயவைக்க வேண்டும் இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். செங்கடுக்காய் ஆன பின்னர் இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் வல்லாரையையும் பகலில் சோறும், சிறு பயறும் சேர்த்து உட்கொள்ள வேண்டும். மாலையில் கடுக்காய் தூளை வெருகடி அளவு உண்ண வேண்டும். இதனைத் தொடர்ந்து உண்ண காயசித்தி கைகூடும்.

கரூவூரார்வாத காவியத்தில் திரிகடுக காயகற்பம் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது.

”கற்றாழைஞ் சொறெடுத்து விஸ்தாரமாய் வெருகடி

திரிகடுகு பொடி பண்ணி வெருகடி

தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே

பிரட்டியே தின்றுவரக் - காயம்

பிலக்கு மப்பா நரை திரை மாறும்

……. கோடிவய

திருப்பான் பதினா வயது போல்”

கற்றாழை சோறு வெருகடி அளவெடுத்து அதனுடன் திரிகடுகு சூரணத்தை வெருகடி அளவெடுத்து பிரட்டி உண்ண வேண்டும். நரை திரை மாறும், உடல் உறுதியாகும், என்றும் 16 வயது போல வாழலாம்.ஷஷதேன்கற்பம்|| என்ற முறையைப் போகர் 7000 இல் குறிப்பிடுகின்றார்.

”தானான பிள்ளையழச் சத்தங் கேட்டுத்

தயவுடனே பால் கொடுக்கும் தாயைப் போல

வேனான போகரிசி யிரக்கம் வைத்து

விருப்பமுடன் தானுரைக்கும் காயகற்பம்

பானான தேனனுவும் படிதா னெட்டுப்

பாங்காக வளத்துமொரு பாண்ட மிட்டு

கோனான மேல்மூடி சீலை செய்து

குறிப்புடனே பூமிக்குள் புதைத்திடாயே…..”

 மருந்து உட்கொள்ளல்

வயதுக்கேற்ப கற்ப மருந்துகளை உண்ணும் நாட்களைப் போகர் குறிப்பிடுகிறார்.

”ஆமென்ற வயதங்கே இருப தாகில்

ஆச்சரியங் கடுக்காயை இருபது நாள்கொள்

மூமென்ற வயதங்கே முப்பதாகில்

முயற்சியா யிருபத்து ஐந்து நாள்கொள் 

நாமென்ற வயதங்கே நாற்ப தாகில்

நலமாக முப்பது நாள் கடுக்காயுய் கொள்ளு….”

இருபது வயதுடையவர்கள் கடுக்காயை 20 நாட்களும், முப்பது வயதுடையவர்கள் 25 நாட்களும், நாற்பது வயது உடையவர்கள் கடுக்காயை 30 நாட்களும் ஐம்பது வயது உடையவர்கள் 35 நாட்களும் உட்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 பத்தியமுறை

காயகற்பம் உண்பவர்களுக்குரிய பத்திய முறைகளும் சித்தர் பாடல்களில் இடம்பெறுகின்றன.

”யோகமாம் புளியுப்பு எண்ணெய் சுண்ணம்

உரிசையா மாங்கிசங்கள் மச்சமாகா

மோகமா மோரொடு கடுகு உள்ளி

முதிரான காரமொடு புணர்ச்சியோடு

பேரான நித்திரையும் சோம்பல் தள்ளி

வாகமாம் வாசிதனை மறித்துக் கொண்டு

மறவாமல் இரவு பகல் மனது உன்னே”      - போகர் -

புளி, உப்பு, எண்ணைவகை, மோர், கடுகு. உள்ளி, மது, மங்கை, மாமிசம் உண்ணல், அதிக காரமும், பெருங்காயமும், நேரம் தவறி உறங்குதல், சோம்பல் போன்றவற்றை நீக்க வேண்டும்.

 உடலைப் பேணும் வழிமுறைகள்

 சித்தர்கள் நோய் உடலைத் தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகளைக் கூறினர்.

“ கஞ்சாப்புகை பிடியாதே – வெறி

காட்டி மயங்கி கட்குடி யாதே

அஞ்சவுயிர் மடியாதே பக்தி

அற்றவஞ் ஞானத்தினால் படியாதே” (கடுவெளிச்சித்தர்)

தேரையர் பாடலிலும் உடலைப் பாதுகாப்பதற்கான பல வழிமுறைகள் காணப்படுகின்றன.

“ புத்தி யதற்குப் பொருந்துந் தெளிவளிக்கும்

சுத்த நரம்பிற் றூம்மையுறும் - பித்தொழியும்

தால வழி வாதபித்தந் தந்த நிலை மன்னுமதி

காலை விழிப் பின் குணத்தைக் காண்”       -தேரையர்-  

அதிகாலையில் எழும்புவதால் சுறுசுறுப்பு, புத்தி தெளிவு, சுத்த நரம்பின் துவாரத்தில் நிறைந்திருக்கும் நீர் களங்களில்லாமல் சுத்தமாக இருக்கும். பயித்திய கோபம் நீங்கும், வாத, பித்த, கபங்கள் தத்தம் நிலையில் பொருந்தி இருக்கும்.

 முடிவுரை

 சித்தர் பாடல்களில் காணப்படும் காயசித்தி பற்றி நோக்கும் போது, உடலினை நீண்ட காலம் அழியாமல் பாதுகாப்பதை நோக்காகக் கொண்ட சித்தர்கள், பல வழி முறைகளைப் பின்பற்றியுள்ளனர். அவற்றுள் யோகம் - வாசிப்பயிற்சியில் ஈடுபடுதல், காயகற்பம் உட்கொள்ளுதல்  போன்றவை முதன்மையானவையாகும்.

 யோகம் குறித்து திருமூலர், தனது திருமந்திரத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். சித்தர்கள் காயசித்தி அடைய  மூப்பு எனப்படும் உப்புக்கள், பாதரசம், கந்தகம் போன்றவற்றையும் குறிப்பாக கற்ப மூலிகைகளையும் பயன்படுத்திக் கொண்டதுடன், மருந்துகளை உட்கொள்ளும் ஒழுங்கு முறைகள், பத்திய முறைகள் மற்றும் உடல் நலனைப் பேணுவதற்கான பிற வழிமுறைகள் போன்றவற்றையும் வகுத்திருந்தனர்.

 உலோகங்களை சேர்க்கும் போது உண்டாகும் இரசாயன மாற்றங்களைப் பற்றிய அறிவினை சித்தர்கள் , பெற்றிருந்ததுடன் அதனை உடலைப் பொன்போல ஆக்கப் பயன்படுத்தியமை சிறப்பம்சமாகும்.

“….. The   Transmutation of base Metals into gold was but a secondary   Aim of the Siddhars”

 - Siddhar’s Science of Longevity and Kalpa Medicine-

உசாத்துணை

01.           பசுமலையரசு. மு, 2006, “செந்தமிழும் சித்த மருத்துவமும்”, சீதை பதிப்பகம்.

02.           பாலசுந்தரம். இ, 1990, “இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள்”, நாட்டார் வழக்கியல்                      கழகம், யாழ்ப்பாணம்.

03.           பேரின்பன். தேவ, 2006, “தமிழர்தத்துவம்”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

04.           சிற்சபை, 1981, (5ஆம் உலக தமிழ் மாநாடு – கட்டுரை – தமிழ் மருத்துவ மாண்பு).

05.           ராமநாதன். அரு, 1959, “சித்தர் பாடல்கள்”, பிரேமா ஆர்ட் பிரிண்டர்ஸ்.

06.               http://www.siththarkal.com

07.               http://www.kagapujandar.com

08.               http://www.noitamilchat.com