4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

பொலநறுவைக் கால இந்து சமயமும் சோழர்களும் - திருமதி ருஜானி நிமலேஸ்வரன்

 

பொலநறுவைக் கால இந்து சமயமும் சோழர்களும்

 

திருமதி ருஜானி நிமலேஸ்வரன்

B.A (Hons), MLS

மட்டக்களப்பு, இலங்கை

nrujani@gmail.com

 

ஆய்வுச்சுருக்கம்

இந்து சமய நம்பிக்கைகள் இந்தியாவைப் போலவே இலங்கையிலும் தனித்துவமும் வரலாற்றுப் பழமையும் கொண்டவை. இலங்கை இந்திய உபகண்டத்தில் அமைந்துள்ளமையால் இங்கு நிகழும் இந்து சமய வளர்ச்சியில் இந்தியாவிற்கு முக்கிய பங்குண்டு. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படும் அரசியல், பண்பாட்டு மாற்றங்கள் இலங்கையிலும் அத்தகைய துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தின. அந்தவகையில் தமிழகத்தில் பல்லவர் காலத்தில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சி அதீத வளர்ச்சி கொண்ட காலமாக சோழர்காலம் காணப்படுகிறது. தமிழகத்து சைவசமய வரலாற்றில் சோழர் காலம் பொற்காலம் எனக்  கருதப்படுகிறது. சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் எல்லாம் இந்துசமயம் உன்னத வளர்ச்சி பெற்றிருந்தது. இவ்வகையில் இலங்கையில் சோழர்களின் ஆட்சி கி.பி 993 தொடக்கம் கி.பி 1070 வரையான காலமாகக் காணப்படுகின்றது.  இதனடிப்படையில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட சமய, கலாசார மறுமலர்ச்சியின் செல்வாக்கு இலங்கையிலும் ஏற்பட்டது.

சோழ மன்னனான 1ஆம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து அன்றைய தலைநகரமாக விளங்கிய அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வடபகுதியைக் கைப்பற்றினான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவையைத் தலைநகரமாக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கை மும்முடிச்சோழ மண்டலம் எனவும் சோழர்களின் தலைநகரமாகிய பொலநறுவை ஜனநாதமங்களம் எனவும் புலத்திய நகரம் எனவும் அழைக்கப்பட்டது.

தமிழகத்தைப் போன்று இலங்கையிலும் இந்துசமயம் கோயில்களை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. சோழர்கள் தமது சமூக, சமய, கலை நடவடிக்கைகளுக்காகவும் இலங்கையில் பல இந்துக்கோயில்களை உருவாக்கியதோடு கோயில் வழிபாட்டுமுறைகள், கோயில் சார்ந்த சமூக நடவடிக்கைகள் போன்றவற்றையும் பரப்பினர். இதனடிப்படையில் பொலநறுவைக் கால சைவசமய வளர்ச்சியில் சோழர்களின் செல்வாக்கினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

திறவுச் சொற்கள் - பொலநறுவைக்காலம், சோழர்கள், இந்துப்பண்பாட்டு அம்சங்கள், கோயில்கள்

அறிமுகம்

முதலாம் இராஜராஜனது ஆட்சிக் காலத்தில் இலங்கையின் வடபகுதியைச் சோழர்கள் கைப்பற்றிக் கொண்டனர். மாதோட்டம், பதவியா, திருகோணமலை ஆகிய இடங்களிலுள்ள சாசனங்கள் இலங்கையின் வடபகுதியில் இராஜராஜனின் ஆட்சி இடம்பெற்றமையினை வெளிப்படுத்துகின்றன. புலத்தி நகரமான பொலநறுவை ஜனநாதமங்கலம் என்னும் பெயர்பெற்று சோழர்களின் தலைமை நிர்வாக நிலையமாக விளங்கியது. இக்கால இந்து சமய வளர்ச்சியில் சோழ மன்னர்கள் மட்டுமன்றி சோழப்பிரதானிகளும், வணிகரும், படையாரும் பெரும் பங்காற்றியுள்ளமையினைக் காணலாம். தென்னிந்தியச் செல்வாக்கு முன்னொரு காலத்திலும் காணப்படாத அளவில் இலங்கையில் ஏற்பட்டது. தமிழகத்தில் வழக்கிலிருந்த ஆலய வழிபாட்டு நெறிகளையும், கட்டட சிற்ப முறைகளையும், இலக்கிய மரபுகளையும் சோழர்கள் இலங்கையிலும் ஏற்படுத்தினர்.

கோயில்கள்

இலங்கையில் சோழர்களினுடைய ஆட்சியில் முக்கிய தலைநகராகப் பொலநறுவை 77 ஆண்டுகள் ஆளப்பட்டது. இக்காலப்பகுதியில் படைவீரர்கள், வணிகக்குழுக்கள், பிராமணர்கள், கலைஞர்கள் போன்ற தென்னிந்திய சமூகத்தைச் சேர்ந்த இந்துசமயத்தினர் பலர் இங்கு வாழ்ந்தமையால் இவர்களின் வழிபாட்டுத் தேவையின் பொருட்டு பல இந்துக்கோயில்கள் அமைக்கப்பட்டன. சோழர்கள் அமைத்த பெருமளவிலான கோயில்கள் கூடுதலாக நகரங்களிலும், துறைமுகப்பட்டினங்களிலும் காணப்படுகின்றன. பதவியா, கந்தளாய், திருகோணமலை, மாதோட்டம், பொலநறுவை, குருணாகல் போன்ற இடங்களில் கோயில்கள் இருந்தமைக்கான சான்றுகள் பல காணப்படுகின்றன. இதுவரை மேற்க்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்படி பொலநறுவை இராசதானியில் மாத்திரம் 14 இந்துக்கோயில்களும் தொல்பொருட் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 2ம், 5ம், 6ம், சிவவாலயங்கள் சோழர்காலத்தவையாகும்.

இக்கோயில்களுள் காலத்தால் முற்பட்டதாக 2ஆம் சிவவாலயம் காணப்படுகின்றது. இதுவே ஓரளவு பூரணமாகப் பேணப்பட்டிருக்கும் கோயிலாகவும், சோழர்காலக் கட்டடக்கலையில் உன்னத வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பொலநறுவையிலுள்ள இந்துக்கோயில்களுள் சிறந்த கோயிலாகவும் காணப்படுகின்றது. இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச் சான்றுகளின்படி இக்கோயில் 1ஆம் இராஜராஜனின் மனைவியின் பெயரால் வானவன் மாதேவி ஈஸ்வரம் என அழைக்கப்படுகின்றது.

பொலநறுவையில் சோழர்காலக் கோயில்கள் என iயாளம் இடப்பட்ட 5ஆம் சிவாலயம் கி.பி 1908ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் பிரகாரத்தைச் சுற்றி 5 கோயில்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இரண்டு கோயில்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளைக் கொண்டு இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் இருப்பது விநாயகர் கோயிலெனவும், கிழக்கில் இருப்பது நடராஜமூர்த்தி கோயிலெனவும் கூறப்படுகிறது. சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்ட 5ஆம் சிவவாலயத்தில் பெருமளவிலான வெண்கலச்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலநறுவை சோழர்காலக் கோயில்களுள் 6ஆம் சிவாலயமும் முக்கியமானது. இவ்வாலயம் 5ஆம் சிவாலயம் போன்று பிரதான கர்ப்பக்கிரகம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இக்கோயிலின் அருகே பல வெண்கலச்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 6ஆம் சிவாலயத்தின் அழிபாடுகளுக்கிடையில் சோழர்காலக் கலைப்பாணியிலமைந்த நடராஜரின் வெண்கலப் படிமம் ஒன்றும், அக்காலத்திற்குரிய வரிவடிவங்களிலானஸ்ரீ ஆண்பிள்ளை பெருமாள்என்ற பெயர் பொறிக்கப்பட்ட மணியொன்று கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வடமத்திய மாகாணத்தில் ஆதகட, மதரிகிரிய போன்ற இடங்களில் சோழர்காலக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதை இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச்சான்றுகளைக் கொண்டு அறியமுடிகிறது. ஆதகட கிடைத்த கல்;வெட்டில் உத்தமசோழேஸ்வரம் என்னும் ஆலயம் கடவத்கோறளையில் அமைந்திருந்தமை பற்றி அறிய முடிகின்றது. இது இராஜராஜனுக்கு முன்பு அரசனாயிருந்த உத்தமசோழனின் பெயரால் அழைக்கப்படுகின்றது. சோழர்கள் மண்டலகிரி நகரத்தில் கவனம் செலுத்தியிருந்தனர. அங்கு பண்டித சோழ ஈஸ்வரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகருக்கு நித்தவிநோதபுரம் என்று ஒரு புதிய பெயரை இட்டிருந்தனர்  என்பது கல்வெட்டினால் அறியக்கிடக்கிறது. நித்தவினோதன் என்பது 1ஆம் இராஜராஜசோழனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்றாகும். இதேபோல் குருநாகல் மாவட்டத்தின் புதுமுகத்தலாவை என்ற இடத்திலுள்ள கல்வெட்டுக் குறிப்பின் படி அங்கு விக்கிரமசாலாமேக ஈஸ்வரம் என்னும் ஆலயம் அமைந்து இருந்தமை பற்றி அறிய முடிகின்றது.

சோழராட்சிக் காலத்தில முக்கியமான இடங்களிலொன்றாக காணப்பட்ட பதவியா, ஸ்ரீபதி கிராமம்; என அழைக்கப்பட்டதோடு இங்கு 5 இந்துக்கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பதவியாவில் நீர்ப்பாசன வாய்க்காலுக்கு அருகாமையில் அமைந்திருந்த கோயில் அழிபாடுகளுக்கிடையே தாமரைச் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்ட தூண், நந்தி உருவத்தின் உடைந்த பாகங்கள் ஆகியன காணப்பட்டமையை இங்கு கிடைத்த கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.

கிழக்கிலங்கையில் கந்தளாய் பிரதேசத்திலும் சோழர்கள் இந்துக்கோயில்களை அமைப்பதிலும் பராமரிப்பதிலும் பெரிதும் ஆர்வம் காட்டியமையினைக் காணக்கூடியதாகவுள்ளது. இப்பிரதேசத்தில் பிராமணர்கள் குடியிருப்பாக சோழர்களது காலத்தில் கந்தளாய் இராஜராஜ சதுர்வேதிமங்கலம்  உருவாக்கப்பட்டதோடு இங்கு சிவாலயம் ஒன்றும் முத்தங்கை கோயில் என்னும் துர்க்கையின் ஆலயமொன்றும் அமைக்கப்பட்டது. இதனை இங்கு கிடைக்கப்பெற்ற சோழ இலங்கேஸ்வரனுடைய சாசனத்தில் வரும்நம்மூர் தண்டுகின்ற முத்தங்கைக் கோயில்மானிஎனுந் தொடரானது உணர்த்துகின்றது. அதாவது ஊரிலுள்ள குடியார்களிடமிருந்து இறைகடமைகளைச் சேகரிப்பதற்கென இராஜராஜசதுர்வேதி மங்கலத்துச் சபையார் தம்மூரிலுள்ள அம்மன் கோயிலைச் சேர்ந்த அந்தணனொருவனை நியமித்தனர் என்பதனூடாக உறுதிப்படுத்தப்படுகின்றது.

கிழக்கிலங்கையில் அமைக்கப்பட்ட முக்கியமான சோழர்காலக்; கோயில்களுள் ஒன்றான கிளிவெட்டி திருமங்களாய் சிவன் கோயில்; பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அழிவடைந்த நிலையில் காணப்படும் இப்பகுதிகளில் இதுவரை 5 தமிழ்க்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பொன், காசு, பசுக்களின் எண்ணிக்கை போன்றவற்றை குறிப்பிடுகின்றன. கருங்கற்களையும் செங்கட்டிகளையும் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தின் அமைப்பு, கலைமரபு, தூண்களின் வடிவமைப்பு என்பவை பொலன்னறுவை 2ஆம் சிவாலயத்தை நினைவுபடுத்துவதாகவும் ஆயினும் தோற்றத்தில் இக்கோயில் மிகப்பெரியதாக இருந்திருக்குமென்பதை கோயிலின் அழிபாடுகள் உறுதி செய்கின்றன என பேராசிரியர் புஸ்பரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

வடஇலங்கையில் சோழர்களினுடைய முக்கிய துறைமுகப்பட்டினமாக இருந்த மாதோட்டத்திலும் இந்துக்கோயில்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக இராஜராஜஈஸ்வரம், திருவிராமீஸ்வரம் போன்ற கோயில்கள் சோழர்காலக் கோயில்களாகும். 1ஆம் இராஜராஜசோழனின் பிரதிநிதியாக இருந்த தாழிக்குமரனால் இராஜராஜஈஸ்வரம் அமைக்கப்பட்டது. 1ஆம் இராஜராஜன் காலக் கல்வெட்டினூடாக இராஜராஜேஸ்வரம் கோயில் பற்றிய செய்திகளை அறியமுடிகிறது. இக்கல்வெட்டு மாதோட்டம் இராஜராஜபுரம் என அழைக்கப்பட்டதையும், இங்கு 1ஆம் இராஜராஜன் பெயரில் இராஜராஜேஸ்வரம் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றியும் அத்தலத்தில் நடைபெற்ற விழாக்கள் மற்றும் மாதோட்ட துறைமுகத்தின் அமைப்பு பற்றியும் குறிப்பிடுகிறது.

மேலும் மாதோட்டத்தில் காணப்பட்ட மற்றுமொரு ஆலயமாக திருவிராமேஸ்வரம் காணப்படுகிறது. இக்கோயிலும் பூரணமாக அழிந்துள்ள நிலையிலும் இங்கு கிடைத்த இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு திருவிராமீஸ்வரம் என்னும் கோயில் சோழராட்சிக் காலத்தில் மாதோட்டத்தில் சிறந்து விளங்கியிருந்ததை எடுத்துக்காட்டுகிறது. இத்;தகைய சான்றுகளைக் கொண்டு நோக்கும் போது பொலநறுவையில்  சோழர் ஆட்சியில் பல இந்துக்கோயில்கள் அமைக்கப்பட்டு இந்துப்பண்பாடு வளர்த்தெடுக்கப்பட்டதை அறியமுடிகிறது.

சிற்பக் கலை

பொலநறுவைக் கால கோயில்களில் பெருமளவிலான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மூலஸ்தானத்திலும், மண்டபங்களிலும், பரிவார தேவர் கோட்டங்களிலும் நிறுவப்பட்ட விக்கிரகங்களுள் சிவன், உமாதேவியார், மகாவிஸ்ணு, கணபதி, குமாரக்கடவுள் ஆகியோரின் படிமங்கள் குறிப்பிடத்தக்கன. கர்ப்பக்கிரகம், மண்டபங்கள் ஆகியவற்றிலும், விமானங்களிலும் வெளிப்புறமாக அமைக்கப்பட்ட விக்கிரகங்களுள் தேவ கணங்கள், சிவ கணங்கள், நாகர், யக்ஸர், முனிவர்கள் முதலானோரின் உருவங்கள்; அடங்கும்.

இக்காலப் பகுதியில் அமைக்கப்பட்ட கற்சிற்பங்களில் ஆசனக் கோலத்து விநாயகர், நான்கு கரங்கள் பொருந்திய ஸ்தானக விஸ்ணு, ஸ்தானக நிலையிலுள்ள அம்மன் படிமம், நந்தி, சப்தமாதர், சிவலிங்கம், சரஸ்வதி, வராகி போன்ற பல படிமங்கள் முதலாம் சிவாலயம், ஐந்தாம் சிவாலயம், ஆறாம் சிவாலயம், ஏழாம் சிவாலயம் போன்றவற்றில் அழிபாடுகளிடையே காணப்பெற்றன.

பொலநறுவை கோயில்கள் அமைந்துள்ள இடங்களில் 1907, 1908, 1960 ஆகிய ஆண்டுகளில் தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்ட போது நடராஜர், சிவகாமி சமேத நடராஜர், உமாதேவி, வீரபத்திரர், அர்த்தநாரீஸ்வரர், சோமஸ்கந்த வடிவங்கள், காரைக்காலம்மையார், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார், சம்பந்தர், மகாவிஸ்ணு, பூiசைகளிற் பயன்படுத்தப்படும் பொருட்களான தாம்பாளம், முக்காலி, கிண்ணம், மணி, சங்கு போன்ற பல வெண்கலப்படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.

கோயில் நிர்வாகமுறை

தென்னிந்தியக் கோயில்களைப் போல இலங்கையிலுள்ள கோயில்களிலும் கோயில் நிர்வாக முறை சோழர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்நது. இதனால் கோயில்களில் முறையாக பூசைகளும் உற்சவங்களும் இடம்பெற வேண்டும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. பன்மாகேஸ்வரர் என்ற சிவனடியார் கூட்டம் தானதருமங்களையும், கோயில் விவகாரங்களையும் மேற்பார்வை செய்வதினை மரபுவழி உரிமையாகப் பெற்றிருந்தனர். மூலஸ்தானத்தில் ஆராதனை முதலான கருமங்களைப் புரிய அந்தணர்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனர். கோயிற் பணிகளைச் செய்ய பரிசாரகர் என்னும் பணிமக்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.வானவன் மாதேவீஸ்வரத்தில் மாணிக்கம் என்ற பட்டம் பெற்ற தேவரடியார்கள் காணப்பட்டனர். கோயில்களில் விளக்கெரிப்பதற்கு சோழ பல்லவரையன் என்னும் பிரதானி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தான்.

ஊர்மக்கள் செலுத்த வேண்டிய இறை கடமைகளையும் பிறவற்றையும் சேகரிப்பதற்கென தண்டுவான் என்ற ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமையினை சாசனங்கள் வாயிலாக அறியலாம். கோயில்களில் சேவை செய்வதற்கென அந்தணர், கம்மாளர், வாத்தியக்காரர் போன்றோரை கோயில் வளாகத்திற்கு அண்மையிலுள்ள இடங்களில் குடியமர்த்தினார்கள். கந்தளாய்ப் பிரமதேயம் போன்ற புதிய அக்கிரகாரங்கள் அமைக்கப்பெற்றன.

இந்து இலக்கியங்கள்

வேதம், வேதாங்கம், சோதிடம் முதலியவற்றிலே பாண்டித்தியம் பெற்ற பிராமணர்கள் மூலம் சமஸ்கிருத மொழியிலுள்ள இலக்கியங்கள் பொலநறுவைக் காலத்தில் செல்வாக்குப் பெற்றன. அர்த்தசாஸ்திரம், யுத்தார்வணம் போன்ற நூல்கள் பொலநறுவைக் காலத்தில் இலங்கையில் செல்வாக்குப் பெற்றிருந்தமையினைக் காணலாம். நிசங்கமல்லனுடைய சாசனங்கள் பொலநறுவைக் காலத்து அரசியலில் அர்த்த சாஸ்திரம் பெற்றிருந்த செல்வாக்கைப் பிரதிபலிக்கின்றன.கண்டக சோதனா, தர்மாதிகரணம் என்னும் நீதிமன்றங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும் பொலநறுவைக் காலத்தில் நுPதிபரிபாலனம் பற்றி ஒரு சிறந்த நூலாக மனுதர்மசாஸ்திரம் கருதப்பட்டது.

நிறைவாக

இலங்கையில்; சோழராட்சியின் போது இந்துசமயம் அரசமதமென்ற அந்தஸ்தைப் பெற்று இந்துக்கோயில்களும் பண்பாடும் இலங்கையில் ஆழமாக வேரூன்றியது. 1ஆம் விஜயபாகு மன்னனால்; இலங்கையிலிருந்து சோழராட்சி விடுவிக்கப்பட்டு சுதேச சிங்கள் மன்னர்களின் ஆட்சி மீண்டும் நிலைநிறுத்தப்பட்ட போதும் சோழர்களினால் உருவாக்கப்பட்ட இந்துக்கோயில்கள், பிராமணக்குடியிருப்புக்கள், தமிழ்ப்படைவீரர்கள், நிர்வாகிகளின் செல்வாக்கு திராவிடக் கட்டக்கலை மரபுகள் போன்றன முன்பு போலவே தொடர்ந்தும் நீடித்தன. அதுமட்டுமன்றி சோழர்காலத்தில் குடியமர்த்தப்பட்ட வணிக கணங்கள், படைவீரர்கள், பிராமணர்கள், கலைஞர்கள் சோழராட்சியைத் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியதால் இவர்களுடைய தேவைகளின் பொருட்டும் இந்துசமயம் ஆதரிக்கப்பட்டது.

உசாத்துணை நூல்கள்

  1. பத்மநாதன்,சி., (2018), “இலங்கையில் இந்து சமயம்”, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
  2. பத்மநாதன்,சி., (2000), “இலங்கையில் இந்து கலாசாரம் - பகுதி 1”, இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
  3. சிற்றம்பலம்,சி.., (1996), “ஈழத்து இந்துசமய வரலாறு”, யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளியீடு,திருநெல்வேலி.
  4. அனித்தா,., (2018), “பொலன்னறுவைக்கால சிங்கள மன்னராட்சியில் இந்துசமயம் தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும் - தொகுதி 1”, சென்னை.
  5. இந்திரபாலா,கா., (1970), “இலங்கையில் திராவிடக்கட்டடக்கலை”, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.