4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

பாரதியார் பாடல்களில் இழையோடியுள்ள அத்வைத சிந்தனைகள் - செல்வி சிவோகா சிவலிங்கம், இலங்கை.

 

 

பாரதியார் பாடல்களில் இழையோடியுள்ள அத்வைத சிந்தனைகள்

செல்வி சிவோகா சிவலிங்கம்,

இலங்கை.

முன்னுரை     

இந்திய தத்துவ வரலாற்றில் ஆதிசங்கரர் முக்கிய இடத்தினைப் பெறுகின்றார். இவரது காலம் கி.பி 788 – 820. இவர் முப்பத்திரெண்டு வருடங்கள் வாழ்ந்தாலும் பல சாதனைகளைப் புரிந்துள்ளதுடன் தனது அத்வைத வேதாந்தத்தினூடாக பல தத்துவக் கருத்துக்களைக் கூறியுள்ளார். உண்மைக்குப் பொருள் இரண்டு அல்ல ஒன்றே என அத்வைத வேதாந்தம் பொருள் கொள்ளப்படுகின்றது. சங்கரர் பிரம்மம் மட்டுமே உண்மைப் பொருள் என்றும் ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றே என்றும் உலகம் ஒரு பொய்த்தோற்றம் என்றும் தனது வேதாந்தத்தினூடாக வலியுறுத்துகின்றார்.

பாரதி இந்திய சமூகத்துக்காகவும், தேசியத்துக்காகவும் பாடுபட்டவர். சமூக சிந்தனையாளராக மட்டுமன்றி இலக்கியவாதியாகவும் திகழ்கின்றார். இவரது படைப்புக்கள் பல்வேறுபட்ட ஆழ்ந்த சிந்தனைகளைப் புலப்படுத்துகின்றன. வேத உபநிடதங்களில் கூறப்பட்ட விடயங்களை இந்திய மக்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பலர் செயற்பட்டனர். அந்த வகையில் தயானந்த சரஸ்வதி ஆரியசமாஜத்தை நிறுவினார். இவ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலே பாரதி வாழ்ந்தார். இக்காலத்தில் ஆரியசமாஜமானது பல வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பியது. அத்தகைய தத்துவக் கருத்துக்களை பாரதி; தனது பாடல்களில் எடுத்துக் கூறினார்.

பாரதி உலகக் காட்சிகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கின்றார். பாரதியின் பாடல்களிலே சங்கரரது அத்வைத வேதாந்தம் பற்றிய சிந்தனைகளும் இழையோடியுள்ளதைக் காணமுடிகின்றது. சங்கரரது அத்வைதக் கருத்துக்களோடு தொடர்புடைய பல விடயங்களை பாரதி தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்

இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு

சேரும் ஐம்பூதத்து வியலுலகமைத்தாய்

அத்தனை யுலகமும் வர்ணக்களஞ்சிய

மாகப் பலபல நல்லழகுகள் சமைத்தாய்”

என்ற பாரதி பாடலினூடாக அவரது வேதாந்த சிந்தனை வெளிப்படுகின்றது.

பிரமம்

பாரதி சங்கரரின் அத்வைதம் பற்றிய மெய்யியற் சிந்தனையை தன்னுடைய மரண பயத்தை நீக்கப் பயன்படுத்தியுள்ளார். சங்கரரின் அத்வைதம் பிரம்மமே ஆன்மாக்களாகக் காட்சியளிப்பதாகக் கூறுகிறது. இதனைப் பாரதி ஏற்றுக்கொள்கின்றார்."ஆன்மா பிரம்மத்தினுடைய அம்சம். என்னை நான் பிரம்மமாக உணர்ந்து கொள்கிறேன்” இதை உணர்ந்தவர்க்கு மரண பயம் ஏற்படாது. இதனை கீழ்வரும் பாடலில் பாரதி வெளிப்படுத்தியுள்ளார்.

“ காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்: என்றன்

காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் -

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல

வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன்”

சங்கரர் பிரம்மமே உண்மையான பொருள் என்பதை தனது வேதாந்தத்தினூடாக வலியுறுத்துகின்றார். சங்கரரின் கருத்துப்படி பிரம்மமும் ஆன்மாவும் ஒன்றே இவர் பிரம்மத்தையே முதன்மைப்படுத்தினார். பாரதியின் பாடலிலும் ‘ஏகான்மவாதம்’ பற்றிய சிந்தனைகள் இழையோடியுள்ளன. அழகுத் தெய்வம் எனும் தலைப்பில் அமைந்த கீழ்வரும் பாடலில் இதனைக் காணக்கூடியதாக உள்ளது.

“ஏகமோ பொருளன்றி இரண்டாமோ? என்றேன்”

பாரதி ஈஸ்வர தத்துவத்திற்கு முதன்மை அளிக்க மறுக்கிறார். சுத்த அறிவு நிலையே பிரம்மம் எனக் கருதுகிறார். அத்வைதக் கோட்பாட்டின் படி பிரம்மம் மட்டும் உண்மை. பாரதி ஆப்த வாக்கியத்தினை தனது பாடலில் கையாண்டுள்ளார். உருவ வழிபாட்டினை எதிர் இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம் என்றான்

சங்கரர் அனைத்தும் பிரம்ம சொரூபமே, பலவாகத் தோற்றமளிக்கும் பொருட்கள் அனைத்தும் பிரம்ம சொரூபமே என்பதை வலியுறுத்துகின்றார். இக் கருத்தினைப் பாரதியும் ஏற்றுக் கொள்கின்றார். எனவே பிரம்மமே ஆன்மாக்களாகக் தோற்றமளிக்கின்றன என்பதில் இருவரும் ஒரே கருத்தினை உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

பாரதி கீழ்வரும் பாடலில் எல்லாமே பிரம்மம் என்பதை உணர்த்துகிறார். “ஏகம்சத்” என்ற ஒருமைவாதத்தினை வலியுறுத்தியுள்ளார். இப் பாடலில் அவச்சேதவாதம்,பிரதிவிம்பவாதம் என்பனவும் இடம்பெறுகின்றன.

அதுவே நீ என்பது முன்வேத வித்தான்

அதுவென்றால் எதுவென்று நான் அறையக்கேளாய்

அதுவென்றால் முன்நிற்கும் பொருளின்நாமம்

அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்

நீயும் அதுவன்றி பிறிதில்லை

என்கிறார். பல ஆயிரம் சாகைகளையுடைய வேதங்களின் அறிவுதான் பிரமம் என்று கருதுகிறார். ‘அறிவே தெய்வம் என்ற தலைப்பில் அமைந்த பாடலில் இவற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.

“ ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள்! பல்

லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமென்

டாமெனல் கேளீரோ? ||

  மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயக்கும் மதியிலிகாள்! – எத

னூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென்

றோதி யறியீரோ? ”

  சுத்த அறிவே சிவமென்று கூறுங்

சுருதிகள் கேளீரோ?  பல

பித்த மதங்களி லேதடு மாறிப்

பெருமை யழிவீரோ? ”

பிரமம் ஒன்றே என்பதைக் கீழ்வரும் பாடல்வரிகளின் மூலம் உணர்த்துகிறார் பாரதி. உயிர்கள் ஒவ்வொன்றிலும் உறையும் ஆன்மா ஒன்றே அதுவே பிரமம்.

  உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி

ஒளிர்ந்திடும் ஆன்மாமே - இங்கு,

கொள்ளற்கரிய பிரமமென் றேமறை

கூவுதல் கேளிரோ? ”

“ ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்

உணர்வெறும் வேதமெலாம் - என்றும்

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்

உணர்வெனக் கொள்வாயே”

பிரமம், ஜீவன் ஆகிய இரண்டும் ஒன்றே இது வரம்பற்றது. சர்வ வியாபகம் உடையது. உடல், மனம் முதலிய மாயைப் படைப்புக்களாகிய வரம்புக்குட்பட்ட உபாதிகளால் எல்லைக்குட்பட்டதாகத் தோன்றுகிறது. மேற்கூறப்பட்ட பிரமத்தினுடைய சர்வ வியாபகத் தன்மையை பாரதி கீழ்வரும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

“ மண்ணிலே வேலி போடலாம்

வானத்திலே வேலி போடலாமா? போடலாம்

மண்ணிலும் வானந்தானே நிரம்பியிருக்கிறது

மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா? ”

ஆன்மா

“நான்” என்ற தலைப்பில் அமைந்த பாரதியின் பாடலில் எங்கும் உள்ள ஆன்மாக்கள் பற்றிக் கூறுகிறார். பின் அத்தனை ஆன்மாக்களும் ஒன்றாகிய பிரம்மம் என்பதை உணர்த்துகிறார்.

“ நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்

ஆனபொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்

அறிவாய் விளங்குமுதற் சோதிநான்”

பிரம்மமே ஆன்மாக்களாக காட்சியளிக்கின்றன என்பதை தனது பாடல் மூலம் உணர்த்தியுள்ளார். அனைத்து உயிர்களையும் தெய்வத்தினுடைய அம்சமாகக் குறிப்பிடுகிறார்.

“ உயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப் பிறிவொன்றில்லை

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்”

காற்று கவிதையிலும் ஆன்மா பற்றிய கருத்தினை பாரதி கூறியுள்ளார். உயிர்ப் பொருட்கள் அனைத்தையும் காற்றின் அம்சமாகக் குறிப்பிடுகிறார். பூமியினுடைய மூச்சாகக் காற்றினைக் கூறுகிறார் உயிருக்கு அழிவில்லை என்பதையும் வலியுறுத்துகின்றார்.

“ காற்றே உயிர் அவன் உயிர்கன் அழிவதில்லை

சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.

மரணமில்லை, அகில உலகமும் உயிர் நிலையே”

உயிர்களை கண்கண்ட தெய்வம் என்றும் ஐம்பூதங்களின் தோற்றம் என்றும் கருதுகிறார். பிரம்மத்தினுடைய தோற்றமாகிய ஆன்மாக்கள் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்துகிறார்.

  உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்

நீ கண் கண்ட தெய்வம்

எல்லா விதிகளும் நின்னால் அமைவன

எல்லா விதிகளும் நின்னால் அழிவன…”

“ இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற

உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள்

இவையெல்லாம் நினது விளக்கம்”

உலகம்

‘உலகத்தை நோக்கி வினவுதல்‘ என்ற தலைப்பில் அமைந்த பாரதியின் பாடலில் அத்வைத சிந்தனையைக் காணமுடிகின்றது. சங்கரர் உலகத்தை தோற்றம் எனக் குறிப்பிடுகின்றார். இதனை ஒத்த கருத்தினை கீழ் வரும் பாடலில் காணலாம். பாரதியும் உலக இருப்பு வெறும் தோற்றம் எனக் குறிப்பிடுகிறார்.

“ நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம்

சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே! கேட்பதுவே, கருதுவதே நீங்க ளெல்லாம்

அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?”

அத்வைதத்தில் உலகம் பற்றிய கோட்பாடு கனவுலக வாதம் மூலம் முன்வைக்கப்படுகிறது. கனவுலகில் நனவு பற்றிய சிந்தனை இல்லாது இருப்பதோடு கனவுலகப்பசி, தாகம் என்பன அவ்வுலக உணவு, நீர் என்பவற்றால் நிறைவு செய்யப்படுகின்றன. கனவு காண்பவனால் துயக்கப்பட்ட கனவுலகம் விழித்துக்கொண்டதுடன் பொய்யென ஐயமுற உணர்கின்றான். இங்கு கனவு நிலையில் நனவுலகம் பொய்யாகின்றது. நனவு நிலையில் கனவுலகம் பொய்யாகின்றது.

பாரதி மானிட வாழ்க்கை, உலகம் என்பவற்றில் கனவுலக வாதத்தை பிரயோகிக்கிறார். ‘சுயசரிதை’ எனும் தலைப்பில் அமைந்த ‘கனவு’ பற்றிய பாடலில் இதனைக் காணமுடிகின்றது.

“ வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய

மறைவ லேர்ர்தம் உரைபிழை யன்றுகாண்…”

“உலகெலாமொர் பெருங்கன வஃதுளே

உண்டு றங்கி யிடர் செய்து செத்திடும்

கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்

கனவி லுங்கனவாகும்: இதனிடை…”

மாயை

பாரதியின் பாடலில் வரும் காட்சிப் பிழை என்பது விவர்த்த வாதத்தினைக் குறிக்கிறது. காட்சிப் பிழை ஏற்படுவதற்குக் காரணம் மாயை என்பதை உணர்த்துகிறார். பார்ப்பதில் ஏற்படுகின்ற குறைபாடுகளே ஒரு பொருளை வேறாகக் காணச் செய்கிறது. சிப்பியை வெள்ளியாகப் பார்த்தல், மரக் குற்றியை மகனாகக் காணுதல், கயிறைப் பாம்பாக காணுதல் போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடமுடியும்.

“ வானகமே, இளவெயிலே, மரஞ்செறிவே நீங்களெல்லாம்

கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப் போற் புதைந்தழிந்தே போனதனால்

நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?”

இதனூடாக “ஆன்மாக்கள் அவித்தையின்  காரணமாக ஒன்றை இன்னொன்றாக காணுகின்றன” என்ற அத்வைத சிந்தனை வெளிப்படுகிறது. இதுவே திரிவுக்காட்சி என்று கூறப்படுகிறது. உலகத்தைப் பொய் என்று உணர்த்துவதற்கு விவர்த்தவாதம் பயன்படுகிறது.

“ எல்லையற்ற அகண்டமான ஒரு பொருளை எல்லைக்குட்படுத்துவதும், வடிவமற்ற ஒன்றை உருவமுடையதாக்குவதும் மாயை” என்ற வேதாந்த கலைச்சொல் பாரதியார் கவிதைகளில் இடம்பெறுகிறது. ‘மாயையைப் பழித்தல்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதையில் மாயை என்ற கலைச்சொல்லினைக் காணமுடிகிறது.

“ உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?

மாயையே – மனத்

திண்மையுள்ளாரை நீ செய்வது

மொன்றுண்டோ! மாயையே!”

முத்தி

ஒருவர் தன்னைப் பிரமமாக உணர்ந்து கொள்வதே முத்திநிலை, இதுவே உயர்ந்த நிலை என்று சங்கரர் குறிப்பிடுகிறார். இதனைப் பாரதியும் தனது பாடலில் கூறியுள்ளார். பாரதியும் தன்னைப் பிரம்மமாகக் கொள்ளலே பேரின்பம் எனவும் ஏனைய இன்பங்கள் எல்லாம் மாயையில் வரும் இன்பம் எனவும் ஏற்றுக்கொள்கிறார்.

“ நீதரும் இன்பத்தை நேரேன்று கொள்வனோ

மாயையே – சிங்கம்

நாய்தரக் கொள்ளுமோ நல்லர

சாட்சியை – மாயையே!”

சங்கரர் உண்மைப் பொருள் ஒன்று எனக் குறிப்பிடுகிறார். பிரம்மமே ஆன்மாக்களாகக் காட்சியளிக்கின்றன என்பது சங்கரரின் கருத்து. “ஆன்மாவும், பிரமமும் ஒன்று என்பதை உணர்ந்த பின் எங்கிருப்பாய் மாயையே” என்று வினவுவதினூடாக சங்கரரின் கருத்தை பாரதி வெளிப்படுத்தியுள்ளதைக் காணலாம்.

“ இருமையழிந்த பின் எங்கிருப்பாய், அற்ப

மாயையே! – தெளிந்

தொருமை கண்டார் முன்னம் ஓடாது

நிற்பையோ – மாயையே”

பாரதி தன்னை பிரம்மமாக உணர்ந்து கொள்ளுதலை சித்தத்தெளிவு என்கிறார். சித்தத்தெளிவு ஏற்பட்ட பின்பு எத்தனைகோடி மாயை வந்தாலும் அவை வலுவிழந்துவிடும் என்பதை தனது கவிதையில் புலப்படுத்துகிறார்.

“ எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்

மாயையே – நீ

சித்தத் தெளிவெனுந் தீயின்முன்

நிற்பாயோ? – மாயையே ”

குயிற்பாட்டு என்னும் தலைப்பில் அமைந்த பாடலில் மாயை பற்றிக் கூறியுள்ளார்.

“ மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்

மாயைச் சொல் கூற மனந்தீயுற நின்றேன்”

குயிலும் குரங்கும் என்ற கவிதையிலும் மாயை பற்றிக் கூறப்பட்டுள்ளது.

“மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே

பாயும் விழிநீர் பாதைக்கு சிறியவுடல்” குயில் பாட்டில் “அறியாமைக்கு காரணம் உலகச் சிற்றின்பமே” என்று குறிப்பிடுகின்றார்.

‘சக்தி’ என்ற தலைப்பில் அமைந்த பாரதியின் பாடலில் அவித்தை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவித்தையே துன்பத்திற்கு காரணம் என்ற அத்வைத சிந்தனை இப்பாடலில் இடம்பெறுகிறது. அவித்தை நீங்கினால் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதை பாரதி உணர்த்துகிறார்.

“அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும்

நாம் அச்சங் கொண்டோம், தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்

நாம் துயர் கொண்டோம், தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்”

பாரதி அத்வைத நோக்கில் விடுதலை பற்றிக் குறிப்பிடுகிறார். சங்கரர் ஒன்றே பிரமம், இதை உணர்வதே முத்தி என்கிறார். பாரதியும் சுத்த அறிவு நிலைதான் விடுதலை என்பதை ஏற்றுக்கொள்கிறார். தன்னைப் பிரம்மமாக உணரும் கணமே விடுதலை சாத்தியம் என்பதைத் தனது பாடலில் புலப்படுத்தியுள்ளார். ஷசங்கு| என்ற தலைப்பில் அமைந்த கீழ்வரும் பாடலில் இக் கருத்துக்கள் காணப்படுகின்றன.

  செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்

சேந்திடலா மென்றே எண்ணியிருப்பார்

பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்

பேயுரை யாமென்றிங் ஊதடா சங்கு”

“இத்தரை மீதினி லேயிருந்த நாளினில்

இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்

சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்

தூயவ ராமென்றிங் ஊதடா சங்கு”

சங்கரர் ஆத்ம ஞானம் மூலம் முத்தியடையலாம் என்றும், ஞானமே நேரான முத்தியைத் தரக்கூடியது என்றும் குறிப்பிடுகிறார். பாரதி அத்வைத முத்தியை ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையை அடைய உடல் அழியத் தேவையில்லை என்கிறார்.

முடிவுரை

தேசவிடுதலை, பெண்விடுதலை மற்றும் பக்தி தொடர்பான விடயங்களை மட்டுமன்றி தத்துவ சிந்தனைகளையும் பாரதி தனது பாடல்களில் வெளிப்படுத்தினார். மேற்கூறப்பட்ட பாரதியார் பாடல்களை நோக்கும் போது அவற்றில் அத்வைதம் பற்றிய கருத்துக்களைக் காணமுடிகிறது. அவை பாரதி அத்வைத சிந்தனைகளில் கொண்டிருந்த பார்வையை வெளிப்படுத்துகின்றன.

பிரம்மம், ஆன்மா, உலகம், விடுதலை, அவித்தை போன்றவை பற்றி பாரதி கூறிய பாடல்களில் அத்வைத சிந்தனைகள் இழையோடியுள்ளன. ‘இயலுகின்ற ஐம்பொருட்கள் அனைத்தும் தெய்வம்’ என்று உயர்ந்த பிரமம் மட்டுமே உண்மை என்ற அத்வைத சிந்தனையை தனது பாடலில் புலப்படுத்தியுள்ளார். உலக உயிர்கள், உயிரற்றவை அனைத்தையும் பிரம்மத்தின் பிரதிபலிப்புக்களாக நோக்கினார். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமூக ஒருமைப்பாட்டினை நிலைநாட்டுவதற்குச் செயற்பட்ட பாரதி, மனிதநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் அத்வைத சிந்தனைகளையும் பாடல்களில் அமைத்துப் பாடியுள்ளார்.

உசாத்துணை நூல்கள்

1.   அருணன், 1994, முப்பெருங்கவிஞர்கள், 1994, அன்னம்(பி)லிட், சிவகங்கை.

2.   இராமநாதன். விதரு.1992, மகாகவி பாரதியார் கவிதைகள், ஸ்ரீ இந்து பப்ளிகே~ன்ஸ்.

3.   கைலாசபதி.க, 1992, இருமகாகவிகள், என்சிபி எச் பிரைவேட் லிமிடெட்.