4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

சுமந்தவள் - முனைவர் செ.நீதி

 

சுமந்தவள்

 

முனைவர் செ.நீதி

உதவிப்பேராசிரியர்

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தஞ்சாவூர்.

9789039431

Email:neethiselva26@gmail.com

 

ஏடி பாக்கியம்! நீ பாக்கியமா நெனச்சப் புள்ள எப்படியிருக்கு?. என்னத்த சொல்ல.சொல்லி சொல்லி அழ இறைவன் கொடுத்த புள்ள. நீ செய்த பாவம் புள்ளையாப் பொறந்திருக்குன்னு ஊரெல்லாம் பேசுறாளுவ. நான் என்ன செஞ்சன்னு கொலசாமிக்கிட்டப் பல தடவக் கேட்டுப்பாத்திட்டேன் அவன் வாய்திறந்து ஒத்த வார்த்த சொல்லல.ஆனா இவளுவ  அடுக்கி அடுக்கி சொல்றாளுவ வீட்டுக் சோகத்த பேசுறாளுவ,.அவளுவ வீட்டுக் கதைய பேசுற நாளு தூரமில்ல என்பத அவளுவ அறியல.

எப்படி  இருந்த புள்ள , ராஜா.

வாழ வேண்டிய புள்ள,

என் புள்ள நிலத்துல காலவச்சா நிலமகளும் பூரிப்பாள்.!

மண்வெட்டி எடுத்தான்னா ஆத்தோர மரமெல்லாம் ஆவலாய்ப் பார்த்து நிற்கும்!

கோழ பாத்தான்னா ஒரு குளமே வெட்டிடுவான்.

அவன் தண்ணீர்  பாய்ச்ச வந்துட்டா, நீரெல்லாம் துள்ளிக் குதிக்கும் ஆனந்தமா!

பயிரெல்லாம் சேத்துல  கூத்தாடும்.

உழச்சி  உழச்சி   உசந்து நின்ன புள்ள.

சின்ன  வயசுலயே சிங்காரமா வீட்டைக்கட்டி அழகுப்பாத்தப்புள்ள.

அப்பா, அம்மா மேல உசுர வச்சப் புள்ள.

கெட்டப் பேர மருந்துக்கும் வாங்குனது இல்ல.நல்லப்புள்ளன்னு ஊரே மெச்ச வாழ்ந்தப்புள்ள.

இன்னக்கி எம் புள்ள வாழ்கையை தலைகீழா மாத்திப்புட்டான் எங் கொல சாமி ஐயனாரு.நாளும் ஐயன் ஐயன்னு நான் அழச்சேன்.என்ன அவன் ஐயோன்னு பதைப் பதைக்க வச்சிப்புட்டான்.

‘கல்லடிப் பட்டாளும் கண்ணடிப்படக்கூடாதுன்னு’ சொல்வாங்கக் .கண்ணடிப் பட்டுடிச்சே.என் கண்ணும் சாரச் சாரயாய்  கண்ணீர் வடிச்சி கோரமா போயிருச்சே!

ஏன் சோகம்  தெரிந்தும் எப்படியிருக்கேன்னு கேக்குறியே  கமலம்.

அக்கா,தங்கச்சிய கரையேத்த அக்கரைக்குப் போறேன்னச்சி.வேண்டாம்பா பிழைக்க சொந்த நிலமிருக்கு இதவச்சிப் பாத்துக்கலாம்.சாதி சனம் இல்லாத வேற தேசம் வேணான்னு நானும்,அவரும் சொல்லாத நாளில்ல.

இல்லம்மா, நிறைய சம்பாதிக்கணும் போயிட்டுவறேன்னு உடல் உள்ள சுகத்தோட எல்லைத் தாண்டி போனப்புள்ள.

என்புள்ள நல்லா இருக்கணுன்னு வேண்டாத சாமி இல்ல.

நல்லா இருக்கேன்னு நாளும் தகவல் சொன்ன புள்ள. நாலுநாளா தகவல் இல்ல பெத்த வயிறு துடிச்சத யாரிடமும் சொல்ல வாயில்ல.

நாலுநாளு, நாலு மாசமாச்சி  தகவல் இல்ல.

ஏப்பா  என்  புள்ளையப்  பத்தி ஏதும் தெரிஞ்சச்சான்னுக்  கேட்காத ஆளு  இல்ல.

எம் புள்ளையப் பத்தி கேட்ட செய்தி  ஈயத்தக் காதுலக் காச்சி  ஊத்துனமாதிரி  இருந்துச்சி.

ஏன் நெஞ்சம் அடஞ்ச துக்கம் கண்ணகி,சீத அடஞ்ச துக்கத்தவிடப்  பெருசாச்சி.

கையும் காலும் தனித்தனிய விழுத்த போர்க்களமாச்சி;

 மதுரையை எரித்த ஒட்டுமொத்த நெருப்பையும் ஏன் வயித்துலக் கட்டுன மாதிரி  இருந்துச்சி.

கண்ணீரு வெள்ளமா ஓடிச்சி அணக்கட்ட யாருமில்ல.சொந்த பந்தமுன்னு சுத்திச்சுத்தி வந்தவங்க.நீ யாரம்மான்னு  கேட்காம தூரமா போயிட்டாங்க.

ஏன் புள்ளையப் பத்திக் கேட்ட செய்தி; பித்தனா சித்தனா காட்டுக்குள்ள சுத்துறான்னு.

வழிமாறிப் போனப்புள்ள என்னபாடுப் படுதோன்னு துடிச்சி துண்டுத் துண்டா போன உள்ளத்த ஒட்ட ஒரு நாதி இல்ல.

எப்படியோ எம்புள்ள  என் கண்ணு முன்ன வந்து  நின்னுடுச்சி வத்தலும் தொத்தலுமா.

என்னப்பா நடந்திச்சுன்னு கேட்டேன் .ஏதேதோ சொன்ன புள்ள

பித்தனா திரிஞ்சதுக்குக் காரணம் இன்ன வர சொல்லலயே.

அம்மா அம்மான்னு ஆசையா அழச்சப்புள்ள. என்ன ஏன் பெத்தேன்னு என்னென்னவோ தினம் சொல்லி திட்டுவதும்.பின்ன அம்மா புத்திகெட்டுப் பேசிட்டேன் புத்தியில் வைக்காதன்னு தினந்தோறும் நடக்கும் வாடிக்கையாச்சி.

தலைவலிக்குக் காச்சலுக்கு வைத்தியருக்கிட்ட போன நான்.எம் புள்ள சித்தம் குழம்பியதுக்கு வைத்தியரு இருக்காருன்னு அறியாது போனேன் நான்.

எம்புள்ள ஒரு நேரம் அமைதியா இருந்தச்சி ,ஒரு நேரம் சிரிசச்சி,ஒரு நேரம் பக்கம் பக்கமா பேசுனச்சி, வேலைக்குப் போனா வேல நிரந்தரமில்ல.பலப் பிரச்சனையச் சுமந்துகிட்டு வந்தச்சி. சொந்த  நிலத்துலயும் நிலைத்த நிற்க முடியல.

கண்ணு,மூக்கு, காதுவச்சி ஊரெல்லாம் பேசிட,வெளியுலக மிரட்டலுக்கு அஞ்சி என் புள்ள மூளையில முடங்கிடுச்சி.

வேண்டாத சாமியில்ல.எங்க பக்கம் சாமி வந்து நிக்கலன்னு துடிச்சி நின்னப்ப.ஒரு சாமி வழிக்காட்ட வைத்தியருக்கிட்ட போனோம்.நோய் முழுமையா தீரல.

மகுடிக்கு ஆடிய பாம்பு போல மருந்துல ஓடினது எம் புள்ள வாழ்க்கை

தீரும் நோய் வந்தாலே துடிச்சிபோயிடுவேன்னு தெரிஞ்ச,ஆத்தா.தீராத நோய் தந்தா.என் புள்ள துடிக்கிறத பாக்கவா இந்த கண் தந்தான்னு அவள திட்டாத நாளில்ல.நாளும் திட்டுனன்.

நாய்; கூட ஏன் துயரக்; கண்டு என்னோடு குரைச்சச்சி.அந்த ஆத்தா ஏன் கொற தீர்க்கல.

மருந்தால ஏன் புள்ள நோய் கொறஞ்சாலும் அப்பப்ப தலைக்காட்டிடுச்சி.

கல்யாணம் கட்டினா சரியாயிடுன்னுப் புத்திப் புலம்பியது .பெண் தேடினா,

நாலுபய, ஊருக்கு வொல வச்சப்பயலுவோ, கதைக்கதையாக் கட்டிவிட்டானுவ.

கொத்துக் கொத்தா கத சொன்னானுவ.

எழுதி அச்சடிச்சி அடிக்கி எண்ணிப் பாத்தா பத்து நாவலு ஆயிடும்.சாகித்ய அகாதமி விருது பெறும் நூல் வரிசையில் முன் வரிசையில் நின்னுடும்.அந்த மாதிரி கத கட்டுற பயலுவ.

கஞ்சிக்குப்  பொண்டாட்டிய  நம்பி  நிக்கிற பயலுவ.

தட்டித் தட்டிப் போன கல்யாணம் தடுத்து நின்றாலும்  நிற்காமல் நடந்தச்சி.

கொண்டவள் பேயின் மறுவுருவம்.பட்டத் துன்பம் போதாதென்று. ஈட்டியை வைத்துக் குத்துவது போன்று நாளும் வார்த்தையால் குத்திடுவாள் ஏன் புள்ள துடிக்கிறத பாக்கவே என்ன அந்த கொல சாமி உயிரோட வச்சிருக்கான்.

நானும் நாலு வார்த்தப் படிச்சவ தான்.ஒளவை சொன்ன கொவ்வைத் தமிழைக்; கொத்தாகப் படிக்கல.ஆனா ஒன்னு ரெண்டு படிச்சிருக்கேன்.

“பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானாள்

 ஏத்தாலும் கூடி இருக்கலாம் - சற்றேனும்

 ஏறு மாறாக இருப்பாளே யாமாகில்

 கூறாமல் சந்நியாசம் கொள்”

என்று சொன்னமாதிரியான மனைவியோடு  மெள்ளவும்,சொல்லவும்,,தள்ளவும் முடியாத வாழ்க்கை வாழுறான்.

அங்கத்த அங்க அங்கமா வெட்டிப் போட்ட மாதிரியான துயரத்த எம் புள்ளக்கிக் கொடுத்து வேடிக்கப் பாக்குறான் அந்த ஐயனாரு.

ஒத்தப் புள்ள பெத்தேன்.கண்ணுல வச்சிக் காத்தேன் உலகத்துத் துன்பத்தையெல்லாம் எம் புள்ளைக்கே கொடுத்துப்புட்டான் அந்த ஐயனாரு.

இவ்வளவு சோகத்தையும் சுமத்துக்கிட்டு தப்பான முடிவெடுக்காம தப்பித்து வாழுது எம் புள்ள.

உழச்சப் புள்ள உசருமுன்னு சாமி சொல்லிச்சி.இந்த உலகம் சொல்லிச்சி. இப்படி உருமாறி நிக்கு முன்னு யாரும் சொல்லல.

இப்படித்தான் ஏன் புள்ள வாழ்க்க போகுது கமலம்.

ஏன் வருத்தத்த சொல்லி அழ சாமி இருக்கோ? இல்லையோ?

நீ இருக்கப் பாரு அது தான் என் நெஞ்சுக்கு ஆறுதலா இருக்கு.

வருந்தாதேடி பாக்கியம்! நீயா இருக்க இத்தனையும் தாய்குற நானா இருந்த தாங்காம போயிருப்பேன்.

‘பெட்டையா பொறந்திட்டாக்

கட்டையில ஏத்துற வர துயரம்தான்’

எல்லாருக்கும் தான்  சோகத்தத் தந்தான் ஆனா வொனக்குக் கொஞ்சம் கூடத் தந்துட்டான்.

‘விதிச்சவன் விதித்ததை

வயிறு பசிச்சவன் மாதிரி ஏத்துக்க வேண்டியது தான்’

படைச்சவன் கையில கிடைச்ச பொம்ம நாமெல்லாம்,;அவன் ஆட்டினால் நாமெல்லாம் ஆடித்தான் ஆகவேண்டும்.

வொம் புள்ள அவன் துயரத்தத் தாங்கிடுவான் .நீ வருந்துறதப் பார்த்தா தாங்கவும் மாட்டான். கண் கொண்டு தூங்கவும் மாட்டான்.

ஏ கமலம் ஏன் புள்ளைக்கிட்ட ஒரு நாளும் வருத்தப்பட்டுப் பேசுறது  இல்லடி.

சிரிப்பே வராதபடி அந்த ஆண்டவன் படைச்சாலும் நான் ஏன் புள்ளைக்காகச் சிரிக்கிறத கத்துக்கிட்டேன்.

என் மொகத்துல ஆனந்தத்தப் பாக்க நெனக்கிற எம் புள்ள வாழ்க்கையில் எப்ப அந்த ஆண்டவன் ஆனந்தத்தத் தருவான்னு பாக்குறத்துக்குத் தான் இந்த உசுரு இன்னும் இந்த உடல்ல இருக்கு.

எங் கொல சாமிக்கிட்ட எம் புள்ளைய நல்லா வாழவையின்னு வேண்டாத நாளில்ல.

நாளைக்கும் போறேன் எப்ப எம் புள்ளைய நல்லா வைப்பன்னு கேக்க.

சரம் சரமா துன்பத்தக் கொடுத்தியே!எப்ப சரம் சரமா இன்பத்தக் கொடுப்பேன்னு கேக்க.

எம் புள்ளக்கி துணையா  இருப்பியான்னு கேக்க.

கண்ண மூடியே வச்சிருக்கியே !எப்ப கண்ணைத்திறந்து எம் புள்ளையப் பாக்கப் போறேன்னு கேக்க.

நீயும் வரியா கமலம்.

நீ கூப்பிட்டு என்னக்கி நான் வரலேன்னு சொல்லியிருக்கேன்.

நானு அந்த ஐயன  நாலு  வார்த்த கேக்கிறேன்.

நீ மொதல்ல சாப்பிடு வொனக்குப் புடிச்ச புளி கொழம்பு வச்சிருக்கேன்.

சோறு கண்டு நாளானவள் போல் அள்ளி அள்ளி ஆவலாய்  சாப்பிட்டாள்.