4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

மனித வாழ்வில் பேசும் பழமொழிகள் - முனைவர்.ஜெ.ஜெபா

 

 மனித வாழ்வில் பேசும் பழமொழிகள்

முனைவர்.ஜெ.ஜெபா

தமிழ் ஆசிரியை

செவந்த்-டே-அட்வென்டிஸ்ட் பள்ளி

விரிகோடு  629 165.

 

ஆய்வுச் சுருக்கம்

              மனித வாழ்க்கையில் புரிதலுக்குரிய ஒரு ஆயுதம் பழமொழி ஆகும். ஏடு அறியாத எழுத்து அறியாத மக்களிடையே பேசும் மொழியாக பழமொழிகள் விளங்குகின்றன. அவ்வாறு அமைந்த பழமொழிகள் பல்வேறு இன,மத,மொழி மற்றும் கலாச்சாரச் சூழல்களை உள்ளடக்கி அமைந்துள்ளன. மனிதனின்  பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பழமொழிகள் வாழ்வோடு நீங்காத இடம் பெற்று காணப்படுகின்றன. அன்றாட வாழ்வியல் சூழலில் நாட்டுப்புற மக்கள் தங்கள் வாழ்வு நிலைகளுக்கு ஏற்ப பழமொழிகளைப் பயன்படுத்துவதுண்டு .பழமொழிகள் பல்வேறு கருப்பொருட்களை மையமாகக் கொண்டு அமைகின்றன.

முக்கிய வார்த்தைகள்

              பிறப்பு,  வளர்ச்சி, பிரச்சனை,  உணர்ச்சி,  உறுப்புக்கள்

முன்னுரை

             உலகம் தோன்றி வளர்ச்சி அடைந்து மனிதன் பல்வேறு இனக்குழுக்களாக வாழத்தொடங்கிய காலத்திலிருந்து பழமொழிகளும் தோன்றி வளர்ந்துள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களும் தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்பவும், வாழ்வியல் முறைகளுக்கு ஏற்பவும், பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர். பழமொழிகள் என்பது மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். மேலும் இப்பழமொழிகள் மனிதனுக்கு நன்கு புரியும் படி சில செயல்களைப் பிற உயிரிகள் மூலமாகப் சொல்லிப் புரிய வைப்பதுமுண்டு.

பழமொழிகள்

பழமொழிகள் ஒரு வட்டாரத்தின் பின்புலத்தினயையும், வாழ்வியல் சூழல்களையும், பிரதிபலிப்பனவாக உள்ளன. இத்தகைய தன்மைகளை உடைய பழமொழிகள் உலகின் தொல்குடியினரிடையே பரவலாகப் பயன்படுத்துகின்றன.

“பழமொழிகள் அந்தந்தக் காலங்களில் பயிலப்பட்ட பகுதிகளின், கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை இவற்றின் வர்ணனையாக – வெளிப்பாடாகவே இருந்திருக்கின்றன” (பழமொழி நானூறு, ஞா.மாணிக்கவாசகன்) என்று மாணிக்கவாசகன் சுட்டுகிறார்.

மோலும் “பழமொழிகள் எம்மொழியிலும் அனுபவங்களின் சாரமாகப் போற்றப்படுகின்றன. பயிலப்படுகின்றன, பின்பற்றப்படுகின்றன” (பழமொழி நானூறு ஆர்.பொன்னம்மாள்) என்று ‘பழமொழி நானூறு’ குறிப்பிடுகின்றது.

மனிதனின் வளர் பருவங்களைக் குறித்த பழமொழிகள்

          மனிதனின் குழந்தை பருவம் தொடங்கி முதுமை பருவம் வரை அவன் நிகழும் பல நிகழ்வுகளைக் கருப்பொருள்களாகக் கொண்டு பழமொழிகள் பயின்று வந்துள்ளன. சிறியவயதில் அனுபவிக்க வேண்டும் என்று எழுதி வைப்பர்.ஆனால் பிள்ளைகளோ சொத்தை விரைவாக அனுபவிக்க வேண்டி முதியவர் எப்போது சாவார் தான் சந்தோஷமாக அனுபவிக்கலாம் என்று எண்ணுகின்ற சூழலில்,

                                     “எப்ப கிழவன் சாவான் கட்டில் ஒழியும்”

ஏன்ற பழமொழி பயன்படுத்தப்படுகின்றது. தலைவனுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து காப்பற்றுவதும் பெண்,அவனுக்கு நல்லவை வருவதற்குக் காரணமாக இருப்பதும் பெண் பெண்ணைப் போற்றி வாழ வேண்டும.இந்த சூழலில்,

                               “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் ஆண் குழந்தை என்றால் தனிமதிப்பு உண்டு. ஆண் குழந்தை உடல் குறையுடன் பிறந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு, ஆண் பிள்ளையால் வரவுதான் வருமென மகிழ்வார்கள். இச்சூழலில்,

                                      “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை தான் வேண்டும்”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் பிரச்சினையை மறைமுகமாக தூண்டிவிட்டுக் கொண்டு பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தூண்டி விட்டவரே முன்னால் சென்று நிற்கின்ற சூழலில்,

                                “பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுற கதை”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மனிதனின் வளர்பருவம் குறித்த பழமொழிகள் நாட்டுப்புறங்களில் அதிகமாக பேசப்படுகின்றது.

உடல் உறுப்புகள் குறித்த பழமொழிகள்

மனிதனின் உடலில் காணப்படும் உறுப்புகளைக் கருப்பொருளாகக் கொண்டு பழமொழிகள் பேசப்பட்டு வந்துள்ளன. பொதுவாக தலை,கண்,காது,வயிறு போன்ற மனிதனின் வெளியுறுப்புகளையும், உள்ளுறுப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு அதிகமாகப் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஓருவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட இருந்த பெரிய பிரச்சனையானது சிறிய தூசு போன்று அவனை விட்டு விலகி செல்லும் சூழலில்,

                         “தலை மேலே வந்தது தலைப்பாகையோடு போச்சு”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. ஊரில் ஒரு சிறிய தவறு செய்துவிட்டால் அதனைப் பெரியதாக்கி சொல்கின்ற சூழலில்,

                       “உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூட முடியாது”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. ஓருவன் மற்றவனிடம் நடந்த நிகழ்ச்சியை நேராக கூறாமல் அதனுடன் தேவையில்லாதவற்றைச் சேர்த்துச் சுற்றி வளைத்துக் கூறுகின்ற சூழலில்,

                              “தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டது போல”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது.

உணர்ச்சிகள் குறித்த பழமொழிகள்

எண்வகை மெய்ப்பாடுகளும் மனிதனுக்கு இயல்பானது. இவற்றில் கோபம், அழுகை, மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகள் மனிதனின் வாழ்வில் எப்போதும் இடையிடையே வந்து செல்வதாகும்.

பழங்காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே அடக்கி வைத்தார்கள். பெண்னடிமைத்தனம் அதிகமாகவே காணப்பட்டது. பெண்கள சிரிப்பதற்கும், அழுவதற்கும் உரிமை மறுக்கப்பட்டது. இத்தகைய சூழலில்,

                                           “பொம்பளை சிரிச்சா போச்சு

                                              புகையிலை விரிச்சா போச்சு”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. பெற்றோர் தன் பிள்ளைகளிடம் கொண்ட அளவற்ற அன்பினால் அவர்கள் தவறு செய்து விடக் கூடாது என்ற கண்டிப்புடன் வளர்க்கின்றனர். இத்தகைய சூழலில்,

                                                 “கோபமுள்ள இடத்தில் தான் குணமுண்டு”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அதனை விரைவாக முடிக்க வேண்டும் என்று நினைக்காமல், செயலை நன்கு ஆராய்ந்து பொறுமையாக செய்தால் வெற்றி பெறலாம். இதனை,

                                                     “பொறுத்தார் பூமி ஆள்வார்”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது. ஒருவன் சிறிய தவறைச் செய்யும் போது அதனைத் திருத்திக் கொள்ள அறிவுரைக் கூறினால் அதனைக் கேட்காது, செய்த தவறையே திரும்பவும் செய்கின்ற சூழலில்,

                          “ பிறவி குணத்தைப் பேய்க்குக் கொடுத்தாலும் மாறாது”

என்றப் பழமொழி மூலம் வலியுறுத்தப்படுகிறது. ஒருவனிடம் நெருங்கி பழகினால்தான் அவனது குணம் தெரியும் என்பதை உணர்த்துவதற்காக,

                         “கூட இருந்து பார்த்தா தான்தெரியும் குளிரும் பனியும்”

என்றப் பழமொழி; வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மனித உணர்வுகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல்வேறு சூழலில் பழமொழிகள் பேசப்பட்டு வந்துள்ளன.

சாதிகள் குறித்த பழமொழிகள்

நம் நாட்டில் மக்களிடையே பல சாதி முறைகள் காணப்படுகின்றன. சாதிகளின் அடிப்படையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகளைக் கருப்பொருளாகக் கொண்டு பழமொழிகள் பேசப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டக் குலத்தில் பிறந்தவர்கள் தாழ்ந்த குணநலனுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை பழங்காலத்திலிருந்தே நாட்டுப் புற மக்களிடம் காணப்பட்டது. இந்த நம்பிக்கையை வலு சேர்ப்பதற்காக,

                                         “பனை நிழலும் பறையன் உறவும் சரி”

என்ற பழமொழி கையாளப்பட்டுள்ளது வெள்ளாளர் காலத்தைச் சார்ந்தவர்கள் பிறரிடம் சிறிது நேரமே நட்புக் கொண்டு அவர்களை மறந்து விடுகின்றார்கள் இத்தகைய சூழலில்,

                                        “வெள்ளாளன் உறவு வேலி மறைவு”

என்ற பழமொழியைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு சாதிகளைக் கொண்டு மனிதனின் பழக்க வழக்கங்களைப் பழமொழி மூலமாக அறிய முடிகிறது.

உறவு முறைகள் குறித்த பழமொழிகள்

ஆதிமனிதனிடமிருந்து ஒருவர் பின் ஒருவராக மனிதர்கள் தோன்றினர். இவர்கள் பெற்றோர், கணவன், மனைவி, குழந்தைகள், என்ற உறவுமுறைகளினால் பிணைக்கப்பட்டு ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இத்தகைய உறவு முறைகளினால் மனிதன் சமுதாயத்தோடும் ஒன்றித்து விடுகிறான்

ஒரு குழந்தையின் பண்பு தாயின் வளர்ப்பு முறையையும், தாயின் பண்பினையும் ஒட்டியே இருக்கும். என்பதனை,

                                          “தாயைப் போல பிள்ளை

                                             நூலைப் போல சோலை”

என்ற பழமொழி தாய் குழந்தையின் உறவை சித்தரிக்கிறது. பாசம் என்பது குறிப்பிட்ட வயது வரையில் தான் பாகப் பிரிவினை வரும் போது தம்பியே பகையாகலாம். அண்ணன் அன்னியன் ஆகலாம். எஞ்சிய பால் குடித்து வளர்த்த பையன் என்னையே எதிர்த்து நிற்கிறான் என்ற அண்ணன் குறை கூறும் அவலச் சூழலில்,

“ஆறு வயசில் அண்ணன் - தம்பி

பத்து வயசில் பங்காளி”

என்று அண்ணன் தம்பிகளிடையே எற்படும் கருத்து வேறுபாட்டைக் குறிப்பிடும் பழமொழியை நாம் காணமுடிகிறது.

குடும்பத்தலைவன் வேலை இல்லாமல் ஊரைச் சுற்றினால் அவனைத் தண்டச் சோறு என்பார்கள். ஒரு குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி செல்லும் தலைவன் பிறரை எதிர்பார்க்காது தன் உழைப்பையே நம்பி வாழ்வான் இச்சூழலில்,

“நிழலின் அருமை வெயிலில் சென்றால் தெரியும்”

என்ற பழமொழி வெயிலின் கொடுமையை சித்தரிக்கிறது. ஒரு காரியத்தைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் இருந்தால் அதனால் பலன் கிடைக்காது. இத்தன்மையை,

“கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு”

என்ற பழமொழி தெளிவுபடுத்துகிறது.

மிருகங்கள், பறவைகள் குறித்த பழமொழிகள்

பழமொழிகள் வீட்டு விலங்குகள் மற்றும் காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள இவற்றோடு தொடர்புடையதாகவும் பேசப்படுகின்றன. பழமொழிகள் சார்புடைய உண்மைகளை உணர்த்துகின்றன.

நல்ல குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டும் என்று கருதுவது இயல்பு. பெண்ணுக்கு அழகில்லாவிட்டாலும் பண்பு இருக்க வேண்டும் என்று கருதி நற்பண்பு நிறைந்த குடும்பத்தையே விரும்புகின்றனர். இதனை,

“குரங்கானாலும் குலத்திலே கொள்ள வேண்டும்”

என்ற பழமொழி குலத்தினை சித்தரிக்கிறது. ஓருவனுடைய குணத்தை மாற்ற எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அவன் பிறவி குணம் மாறவே செய்யாது இந்நிலையில்,

“நாயைக் கழுவி நடுகட்டையில் வைச்சாலும்

அது கிடக்குமாம் குப்பைக் குழியிலே”

என்ற பழமொழி பயன்படுத்தப்படுகின்றது.

மரம்,தெய்வம்,மழை குறித்த பழமொழிகள்

நாட்டுப்புற மக்கள் மழை, மரம் போன்றவற்றைத் தெய்வமாக வழிபட்டனர். இவற்றைத் தவிர சிறு தெய்வங்களையும், பெருந் தெய்வங்களையும், இறந்தவர்களையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். சிறுக சிறுக சேமித்தால் ஒரு பெருந்தொகையை ஈட்டி விடலாம். இதனால் சேமிப்பு பழக்கமும், விடமுயற்சியும் வளரும் இதனை,

“பைய பையத் தின்றால் பனையையும் தின்னலாம்”

என்ற பழமொழி பொறுமையை கூறுகிறது. முதுமைப் பருவத்தில் முதியவர்கள் செய்யும் செயலை ஏளனமாக சொல்லக் கூடாது. எல்லோருமே முதுமை பருவத்தை அடையக் கூடியவர்கள். இளமை என்;பது நிலையானது அல்ல. இச்சூழலில்,

“ஒணந்த ஒலை விழும் போது பச்சை ஒலை சிரிக்குமாம்”

ஏன்ற பழமொழி அறிவுறுத்துகிறது. தெய்வம் நினைத்தால் யாருக்கும் எதுவும் எப்போதும் வேண்டுமென்றாலும் கொடுக்கும்.தெய்வத்தால் ஆகாதது எதுவுமே இல்லை. ஊலகில் வாழும் அனைவரும் தெய்வத்தால் அருள் செய்யப் பெற்றவர்கள் இதனை,

“கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக் கிட்டு கொடுக்குமாம்”

என்றப் பழமொழி பயன்படுத்தப்படுகிறது. சில மனிதர்கள் அறிவுரைகள் கூறினாலும் திருந்தாமல் செய்த தவறையே செய்வார்கள். இச்சூழலில்,

“விடிய விடிய மழை பெய்தாலும் ஒட்டாஞ்

      சுள்ளி சுருங்காது”

ஏன்ற பழமொழி இவ்வாறு மரம், மழை, தெய்வம் இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு பழமொழிகள் பேசப்படுகின்றன.

கல்வி குறித்த பழமொழிகள்

கல்வியானது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும் பழங்கால சான்றோர்கள் கல்வியைப் போற்றியும், மதித்தும் வாழ்ந்தார்கள். எவருக்கும் அழிவில்லாத செல்வம் கல்வியே ஆகும். அதைத் தவிர மற்ற எதுவும் அத்தகைய சிறப்புடையது அல்ல. இதனை,

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை”

என்னும் திருக்குறளால் அறிய முடிகிறது. கல்வி என்பது பரந்த விரிந்த கடல் போன்றது. இக்கடலில் நாம் கற்றது சிறிதளவேயாகும். கற்கக் கற்க அறியாமை விலகிச் சென்று விடும் இந்தச் சூழலில்,

                                “கற்றது கைம்மண்ணளவு

                                             கல்லாதது உலகளவு”

என்ற பழமொழி கல்வியை உணர்த்துகிறது. இவ்வாறு கல்வியைக் கருப்பொருளாகக் கொண்டு பழமொழிகள் பேசப்பட்டுள்ளன.

முடிவுரை

பழமொழிகள் அறிவிற்கு வளம் சேர்க்கின்றன. மனித வாழ்கையில் காணப்படும் உயிர்ப்பண்பும்,அறிவுப் பண்பும் பழமொழிகளில் கருவாக அமைகின்றது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் வாழ்வில் அமையும் உறவு முறை, உணர்வுகள் போன்றவையும் மரம், மழை, தெய்வம், விலங்கு, பறவை போன்றவற்றையும் மையப் பொருளாகக் கொண்டு பழமொழிகள் பல்வேறு சூழலில் பேசப்பட்டு வந்துள்ளன.

துணை நூற் பட்டியல்

1 வரதராசனார்.மு,  திருக்குறள், திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், 54,டி.டி.கே – சாலை, சென்னை -600 018, பதிப்பு – 1959,

2 இராச மாணிக்கம் பிள்ளை.ம, பழமொழி நானூறு, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி – 6.