4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 நவம்பர், 2023

தமிழ்ப் பண்பாட்டில் பௌத்த வரலாறு - முனைவர் நா.குமாரி

 

தமிழ்ப் பண்பாட்டில் பௌத்த வரலாறு

முனைவர் நா.குமாரி

  உதவிப்பேராசிரியர்,       

 தமிழ்த்துறை,

அக்சிலியம் கல்லூரி,

வேலூர் - 632006

 

இந்தியாவில் இந்து, இஸ்லாம், கிறித்துவம், ஜைனம், பௌத்தம், சீக்கியம், எனப் பல மதக் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் தொன்மை வாய்ந்ததும், சாதி பேதம் இன்றி மக்கள் அனைவரையும் அரவணைக்கும் வகையில் மதக் கொள்கைகள் அமைந்திருப்பதுமான மதம் புத்த மதமே ஆகும். இந்த முதலான மதங்களைப் போன்று புத்தர் தெய்வப்பிறயோ,  கடவுள் அவதாரமோ கிடையா என்கிறது  புத்த மதம். புத்தர் சாதாரணமான மனித பிறவியாவர். கௌதம் சாக்கிய முனியே தமக்கு முன்னர் வாழ்ந்த பல புத்தர்களும் கோட்பாட்டை போதித்திருக்கிறார்கள் என்று தமது சமய உரைகளில் குறிப்பிட்டுள்ளார். கி.மு. 2ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த புத்த மதம் கி.பி. 13 நூற்றாண்டுக்குப் பின் மறைய துவங்கியது. தமிழகத்தில் புத்த மத வரலாற்றையும் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவைகள் அதிகம்.

புத்தரின் வாழ்க்கைச் சூழல்

இந்திய வடகிழக்கு பகுதியில் உள்ள கபிலவஸ்து நகருக்கு அருகில் இருந்த லும்பின் வனத்தில் இந்திய- நேபாள எல்லைக்கு அருகில் நேபாளப் பகுதியில் கோரக்பூர் மாவட்டத்திற்கு வடக்கு திசையில் உள்ள இந்த இடம் இப்பொழுது படெயரா என்று அழைக்கப்படுகிறது என்று புத்தர் பிறந்த இடத்தைப் பற்றி லட்சுமிநரசு கூறுகிறார். அங்கு வாழ்ந்த சாக்கிய இனக் குழுவை சேர்ந்தோர் கபிலவஸ்து என்னும் பகுதியைச் சுழற்சி முறையில் ஆட்சி செய்து வந்தனர்.அச்சுழற்சி அடிப்படையில் சினவாகுவின் மகன் சுத்தோதனார் என்பவர் அரசு கட்டில் ஏறி இருந்த ஆண்டில் சுத்தோதனாருக்கும் அவருடைய மனைவி மாயாதேவிக்கும் கி.மு.  563 இல் வைகாசி பவுர்ணமி அன்று ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பதினாறாவது வயதில் அத்தை மகள் யசோதாவைத் திருமணம் செய்து கொண்டு ராகுலன் என்ற குழந்தையை ஈன்று தமது 29 வயது வரை இல்லற வாழ்வில் இன்பமாக வாழ்ந்தார்.

புத்தரின் பிறப்பு

சுத்தோதனாரின் மனைவி மாயாதேவி கருவுறும் காலத்தில் கனவு ஒன்றினைக் கண்டுள்ளார். சுமேதர் என்னும் பெயருடைய போதி சத்துவர் அவர் முன் தோன்றி இப்பூவுலகில் என் இறுதி பிறப்பை எடுக்க முடிவு செய்துள்ளேன் அதற்கு,  என் தாயாக இருக்க நீங்கள் சம்மதிப்பீர்களா ? என்றார் அதைக்கேட்ட மகா மாயா அது எனக்கு மிக்க மகிழ்ச்சியே என்றார். இவ்வாறு புத்தரின் முற்பிறப்பு கதை கூறப்படுவது அக்குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் சிறப்பை அறிந்த அசித்தர் என்பவர் குழந்தையைக் கண்டு ஆனந்தமடைந்து சுத்தோதனாரிடம் கூறுவதாவது இக்குழந்தையின் அங்க பாகக் கணிதப்படி வளர்ந்து உம்முடைய அரசுக்கு வருமாகில் உலக முழுமைக்கும் ஏக சக்கர அதிபதியாக இருக்கும் அவ்வகை அரசாங்கத்தை விரும்பாமல் துறவடையுமாகில் பூமிசை எங்கும் தர்மச் சக்கரத்தை உருட்டி மனுக்களின் தீவினைகளைப் போக்கிக் கொள்ளும்படியான ஞானப் போதனைகளைப் புகட்டிப் பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ளும் படியான வழிகளையுந்திரட்டி மூவுலகங் கொண்டாடும் உலக ரட்சகனாகிய சத்குருவாக விளங்கும் புத்தர் பிறப்பு வரலாற்றை பொறுத்தவரையில் பெரும்பாலோரின் கருத்துக்கள் ஒன்றாகவே காணப்படுவதால் உலகத்தில் பிறக்கும் மனிதர்களின் ஒரு சிலரே உலகத்துக்கு வழிகாட்டியாய் சிறந்து விளங்குவர் அந்த ஒரு சிலரின் முதன்மையானவராகப் புத்தர் கருதப்படுகிறார்.

முதல் பௌத்தர்கள்

1.புத்தம் சரணம் கச்சாமி

2.தம்மம் சரணம் கச்சாமி

3.சங்கம் சரணம் கச்சாமி

என்ற மூன்று மணிகளுள் முதல் இரண்டினைக் கூறிப் பௌத்த சமயத்தைத் தழுவியவர்களாக திரிபுஷன், பல்லகன் என்ற வணிகர்கள் குறிக்கப் பெறுகிறார்கள்.

புத்தர் உரைத்த அறம்

புத்தர் போதி ஞானம் பெற்ற பின்னர் அவரிடம் முதலில் சேர்ந்த சீடர் இருவர்.  இல்லறத்தைத்  தழுவிய திரிபுஷன், பல்லிகன் என்ற இரண்டு வணிகர்களே முதல் பௌத்தர்கள். இறுதியில் புத்தரே தீட்சை கொடுத்துப்  பிக்குவாக்கிய கடைசி சீடர் சுபத்திரர். இதன் பிறகு புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்தார்.

பௌத்த நெறி

பௌத்த நெறிகள் திருப்பிடகம் என அழைக்கப்படுகின்றன.  திரிபிடகம் என்றால் மூன்று வகுப்பு என்பது பொருள். பிடகத்தை பிடக்கு என்று தேவாரம் செப்புகிறது. புத்த பெருமான் தமது கருத்துக்களை அப்பொழுது பெருவழக்கில் இருந்த பாலி மொழியிலேயே கூறி வந்தார். புத்தர் மறைவிற்கு பிறகும் அவரது கருத்துக்கள் எழுதாக் கிளவிகளாக அவரது சீடர்களால் மனப்பாடம் செய்யப்பெற்று நிலையிலேயே வழக்கில் இருந்தன. இலங்கைத் தீவைக் கி.மு.29 முதல் 17 வரையில் அரசாண்ட. வட்டகாமினி அபயன் என்னும் அரசன் காலத்தில் தான் திருபிடகம் முதன் முதல் நூல் வடிவம் பெற்றதாக இலங்கை வரலாற்று நூலாக மகாவம்சம் கூறுகிறது.

பௌத்த மதத்தில் பின்னாளில் இரு பிரிவுகள் தோன்றின. புத்தருடைய பழியை கொள்கைகளைப் பின்பற்றி வரும் பௌத்தர்கள் தேரவாத பௌத்தர் அல்லது ஷீனயான பௌத்தர் என அழைக்கப் பெற்றனர்.

உயிர்கள் பிறக்கின்றன, மூப்படைகின்றன, நோய்வாய் படுகின்றன, பின் இறக்கின்றன இவ்வாறு மாறாமல் சுற்றிக் கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்தில் உயிர்கள் படும் துன்பத்தினை புத்தர் கண்டார். இத் துன்பத்திற்குரிய காரணங்கள் பன்னிரண்டினைக் கண்டறிந்து கூறினார். இதனை 12 நிதானங்கள் எனப் பௌத்தர் உரைப்பர். தமிழில் இதனைப் பன்னிரு சார்பு எனக் கூறுவர்.

"பேதமை, செய்கை, உணர்வே, அருவுரு,

வாயில், ஊறே, நுகர்வே,வேட்கை, பற்றே, பவமே, தோற்றம், வினைப் பயன்,

 இற்றென வகுத்த இயல்பீராலும்

பிறந்தோர் அறியீன் பெரும்பேறு அறிகுவர் அறியார் ஆயின்

ஆழ்நரகு அறிகுவர்"(மணி- 24:105-110)

எனச் சாத்தனார் குறிப்பிடுகிறார். மணிமேகலை காப்பியத்தில் இரண்டு இடங்களில் இக்கருத்தினை வலியுறுத்தி கூறுகின்றார் சாத்தனார். இப்பன்னிரண்டு காரணங்களும் ஒன்றிற்கொன்று சார்பாக அமைந்து உயிர்களின் துன்பத்திற்குக் காரணமாகி மூப்பு, பிணி, சாக்காட்டை விளைவிக்கின்றன என்பதை,

"பேதமை சார்வாச் செய்கை யாகும்

செய்கை சார்வா, உணர்ச்சியாகும்

 உணர்ச்சி சார்வா, அருவுருவாகும்

அருவுரு சார்வா, வாயிலாகும்

வாயில் சார்வா,  ஊறாகும்மே

ஊறு சார்ந்து, நுகர்ச்சியாகும்

வேட்கை சார்ந்து,  பற்றாகும்மே

பற்றிற் தோன்றும் கருமத்தொகுதி

கருமத்தொகுதி காரணமாக

வருமே , ஏனைவழிமுறைத் தோற்றம்

தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி, சாக்காடு,

அவலம், அரற்றுக் கவலை, கையாறெனத்

தவலில் துன்பம் தலைவரும் என்ப,

ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி"      (மணி- 30:104-118)

 எனச் சுட்டுகிறார் சாத்தனார். பேதமை முதலாக வரும் மேற்குறிப்பிடப் பெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம், முடிவில்லாத மண்டல முறையாகத் தொடர்ந்து வந்து பிறவிகளைச் சூழ்ந்து நிற்கும் என்கிறார் சாத்தனார்.

பௌத்தத்தில் நம்பிக்கை

பௌத்தத்தில் உன்னத இலக்கு நான்கு கூறுகளைக் கொண்டதாகும்.

1.    மன மாசுகளை ஒழித்து துக்கத்திலிருந்து பூரணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறுதல்.

2.    "தான்"  என்னும் தனி உணர்வை அறத்தெறிந்து அனைத்து உலகோடும் உயிர்களோடும் ஒன்றிணைதல்.

3.    உள்ளதை  உள்ளவாறு கண்டு மெய்ஞ்ஞானம் பெறுதல்.

4.    மெய்யறிவும், அன்பும், கருணையும் ஒருங்கிணைந்து உருவான புத்தசித்தம் பெறுதல்.

இந்த உன்னத இலக்கை அடைவதற்கான பாதை நீண்ட கடினமான பாதை. பாதையில் இடையூறுகளும் அநேகம், நமது குறைபாடுகளும் மிகப் பல. ஆகவே உன்னத இலக்கை அடைவதற்கான பாதையில் நாம் முன்னேறி செல்வதில் குழப்பங்களும், தடுமாற்றங்களும், ஏமாற்றங்களும் ஏற்படுகின்றன ..

 

 பௌத்தத்தில்,  நம்பிக்கை என்பது மற்ற மதப் பரம்பரைகளில் உள்ளதை போல அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் சோதித்து பார்த்து தேர்வு செய்வதற்கும் அப்பாற்பட்ட கண்மூடித்தனமான ஒரு சமயப் பற்றுதலும் நம்பிக்கையும் அல்ல. இவ்வுலகில் தோன்றிய மத போதகர்களில் புத்தர் ஒருவரே தாம் போதித்தவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தம்மை பின்பற்றுபவர்களையும், சீடர்களையும் கேட்டுக் கொண்டார். 

பௌத்தத்தில் நம்பிக்கை என்பது கீழ்க்காணும் மூன்று படிநிலைகளைக் கொண்டதாகும்.

1.    புத்தம், தம்மம், சங்கம் ஆகிய மும்மணிகளின் மேன்மைகளையும், சிறப்புகளையும், நற்பண்புகளையும், செயல் திறன்களையும் அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டு அவற்றை போற்றும் தெளிவான நம்பிக்கை

2.    மும்மணிகள் மேன்மை பண்புகளையும், சிறப்புகளையும் தெளிவாக புரிந்து கொண்டு அவற்றை நாமும் அடைய வேண்டும் என்று ஒருவர் கொள்ளும் பேரார்வத்துடன் கூடிய நம்பிக்கை.

3.    அறிவுப்பூர்வமான தெளிவான போற்றும் நம்பிக்கை, அந்த மேற்பண்புகளை அடைய வேண்டும் என்னும் பேரார்வத்துடன் கூடிய நம்பிக்கை ஆகிய இரண்டிலும் ஒருவர் நிலைபெற்று புத்த தன்மையை நோக்கி உயரும் போது, இலக்கை அடைந்தே தீர்வோம் என்று நம்பிக்கை உறுதி பெறுகின்றது.

அப்போது நம்பிக்கை அசைக்க முடியாததாகிறது. தம்மப்பாதையில் முன்னேறி இறுதி இலக்கை அடைவதில் வெற்றி காண்போம் என்று உறுதி பெற்ற நம்பிக்கையாகின்றது.

இந்த உறுதியான நம்பிக்கையோடு மும்மணிகளையும் சரணடைதல் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு சரணடையும் போது தான் ஒருவர் பௌத்தர் ஆகிறார்.

பௌத்த பிக்குகள்

பௌத்தப் பிக்கு, பிக்குணிகள்

பௌத்த கொள்கைகளை மக்களிடம் பரப்பியதோடு நில்லாமல், மக்களுக்குத் தொண்டு செய்யும் விதமாக மருத்துவம் பார்த்தால், ஊரை சுத்தம் செய்தல், கல்வி கற்றுக் கொடுத்தல், பசிப்பிணி போக்கல் முதலில் தொண்டுகளைச் செய்து வந்தனர்.

தமிழகத்தில் பௌத்த பிக்குகள்

தமிழ்நாட்டில் தமிழ் மொழிப் பேசும் பௌத்த புலவர்களும்,  பிக்குகளும்,  பிக்குணிகளும் இருந்த குறிப்புகளைத் தமிழ் இலக்கியங்களின் ஊடாகவும் வெளிநாட்டுக் குறிப்புகளின் ஊடாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது. தமிழ்நாட்டு பௌத்த பிக்குவான ஆசாரிய தம்மபாலர் என்பவர் பௌத்த திரிபிடகத்தில் சூத்திர பீடத்தில் உள்ள நூல்களில் சிலவற்றிற்கு பாலி மொழியில் உரை எழுதியுள்ளார்.

நற்றிணையில் 72 ஆம் பாடல் பாடியுள்ள இளம்போதியாரிலிருந்து காப்பியத்தில் இடம்பெறும் அறவண அடிகள், காப்பியம் இயற்றிய சீத்தலைச் சாத்தனார், சங்கமித்திரர், நாதகுத்தனார், ஆசாரிய புத்தத்த மகாதேரர், கணதாசர், வேணுதாசர், சுமதி, ஜோதிபாலா, புத்த மித்திரர், போதிதர்மர், ஆச்சாரிய திக்நாதர், தர்மபால ஆசாரியர், ஆசாரிய தர்மபால் , மாக்கோதை , தம்ம பாலர் புத்தி நந்தி,  சாரி புத்தர் பஜரபதி புத்தமத்திரர் பெருந்தேவனார் தீபங்கர தேரர், புத்தமித்திரர் ,மகாகாசபர் ,ஆனந்த தேரர்,  தம்ம கீர்த்தி, கவிராசராசர். காசபதேரர், சாரி புத்திரர் புத்தாத்தியர் என பல்வேறு இலக்கியங்களின் மூலம் தமிழ் பௌத்தப்பிக்குகள் பற்றிய குறிப்புகளைக்  காண முடிகின்றது

மணிமேகலை

தமிழகத்தில் தவமகளாய்த் தோன்றி தொண்டு உள்ளத்தால் தமிழ் மக்கள் தொழுது போற்றும் பெருமகளாய் வளர்ந்த பெருமைக்குரியவள் மணிமேகலை.  கொடுக்கக் கொடுக்கக் குறையாததாயும்,  அருள அருள வரும் வரும் அருளமுதமாகவும் அமைந்துள்ள அமுதசுரபி வழி வாரி வாரி வழங்கிய அருள் ஞான வள்ளல்.

உலக மக்களுக்குரிய இன்றியமையாத அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதுதான் மாபெரும் அறம் என்பதை,

"அறம் எனப்படுவது யாது" எனக் கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க்கெல்லாம்

 உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல் "

இவ்வாறு மணிமேகலை காப்பியம் எடுத்துரைக்கின்றது.

இளமையில் துறவு மேற்கொண்ட அறப்பெருஞ்செல்வி தான் மணிமேகலை.

துறத்தல் என்பதே அரிது. அதுவும் இளமையில் துறவு வாழ்க்கை என்பது கத்தியின் மீது நடத்தல் போன்றது.

" பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும்,

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்"

என மணிமேகலை காப்பியம் எடுத்துரைக்கின்றது. பௌத்தத்தை பின்பற்றும்போது அன்பு நெறியை எடுத்துரைக்கின்றது.

உலக வாழ்க்கையில் பௌத்தம்

நாணம் இல்லாதவனுக்கு, காக்கைப் போலத் துணிந்தவனுக்கு, பிற நிந்தனைகள் செய்பவனுக்கு, அகந்தை உள்ளவனுக்கு , பகட்டு வாழ்க்கை வாழ்பவனுக்கு, தீயவனுக்கு இவ்வுலக வாழ்க்கை எளிதாக இருக்கும். இவ்வுலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்னும் உண்மையை மக்கள் உணர்ந்துவிட்டால் உயிர் உள்ளவை எல்லாம் பிற உயிரைக் கொல்வதை விட்டு விடும்.  கொலை செய்பவனின் கதி கொடூரமானது. அறிவோடும் விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் முழுதுணர் ஞானம் என்னும் மேலாண் நிலையினை அடைவர். நிலையான பாறை,  புயல் காற்றுக்கும் அசையாமல் இருப்பது போல மெய் உணர்வு பெற்ற ஞானிகள் புகழ்ச்சிக்கும், நிகழ்ச்சிக்கும் மயங்குவது இல்லை.

தொகுப்புரை

வெற்றி பகைமையை வளர்க்கிறது. தோல்வி கண்டவன் துயரத்துடன் வாழ்கிறான். வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாதவர்கள் மன அமைதியுடன் வாழ்கிறார்கள். பௌத்தம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னும் மக்கள் பலர் துறவியாக விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். முன்பு எப்போதும் இல்லாததைவிட துறவிகளுக்கான அவசியம் சிறப்பாக இருக்கிறது இருந்தும் அளிப்பும் மிக விரைவாக உயர்ந்து கொண்டிருக்கவில்லை. அதே நேரத்தில், பௌத்தத்தை பற்றி மிகவும் அறிவுடைய மற்றும் மிகத் திறமையான பாமர பின்பற்றாளர்கள் பலர் இருக்கிறார்கள் என்று நாம் அனைவரும் வரலாற்று அடிப்படையில் நன்கு அறிவோம்.