4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 டிசம்பர், 2023

இலக்கியத்தில் அறம் - முனைவர் த.நாகம்மாள்

 

இலக்கியத்தில்  அறம்

முனைவர் த.நாகம்மாள்

  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

அவினாசிலிங்கம் மனையியல்     மற்றும் மகளிர் உயர்கல்வி    நிறுவனம்,

                                    கோயம்புத்தூர். 641 043

                  அலைபேசி:7639093129     

                                  19764naga@gmail.com

ஆய்வுச்சுருக்கம்

            தனிமனிதன் தன் கடமைகளைத் தவறாது செய்வது அறமாகும் உலகம் போற்றும் உலக வாழ்வியல் நெறிகளை விழுமியங்களாகப் பின்பற்றிச் செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஒரு நாட்டின் சிறப்பிற்கு நற்சான்றுகளாய்த் திகழ்வன அந்த நாட்டில் தோன்றிய இலக்கியங்கள் ஆகும்.  நம் பண்டைய இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் இலக்கியம் அறத்தை உணர்த்துவதற்காக அமைந்தவை என்பது வெள்ளிடைமல்ல. சங்க இலக்கியத்துள்ளும் புறநானுறே அறமும், பொருளும் முதலான வாழ்க்கைக்கு இன்றியமையாத மறம், மானம், தேற்றம் முதலிய  நற்பண்புகளும், கடமையும்,  பெற்று காணப்பெறும் விளங்கியுள்ளன.  சங்க இலக்கியத்தில் எந்த நூலைப் பிரித்துப் பார்த்தாலும் சிறந்த சிந்தனைகள் மிளிர்வதையும், ஓங்கி வளர்ந்த நாகரிகத்தின் பிரதிபலிப்பையும் காணமுடிகின்றது. சமுதாயத்தில் குழுவாக வாழ்ந்த மனிதன் தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் தன்னைக் காத்துக்கொள்ளவும் இனக்குழு வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டான். ஒரு சமூகத்தின் பண்பாடும், பழம் பெருமையும் அவர்தம் இலக்கியங்கள் வாயிலாகவே உணரப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தை உள்ளதை உள்ளப்படியே காட்டும் படிமக் களங்கள், கண்ணாடிகள் எனும் சிறப்பிற்குரியது இத்தகைய சிறப்புக்களை கொண்ட சங்க இலக்கியமாகிய புறநானூறு உணர்த்துகிறது.

கலைச்சொற்கள்

அறம், இல்லம், ஈகைப்பண்பு, வாழ்வியல் அறன், அறக்கருத்துக்கள், ஒழுக்கம் நிலை,

முன்னுரை

அறக்கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைவது மனிதன் சிந்திக்கும் ஆற்றல் ஆகும். அக்காலத்தில் மனிதனின் தேவைகள் மிகவும் குறைவாக இருந்தமையால் செம்மைப்படுத்தப்பட்ட சமுதாயம் தேவைப்படவில்லை. மனிதனின் அக்கால வாழ்வை போராட்ட நிலை வாழ்க்கை  என்று குறிப்பிடலாம். மனிதனின் அறிவுச்கூர்மையும் தேடல் வேட்கையும் மென்மேலும் பெருகப்பெருக அவன் இரண்டாவது காலகட்டமாகிய விலங்குகளை வேட்டையாடும் தொழிலை மேற்கொண்டு வாழத் தொடங்கியவன்.  பண்டைய தமிழ்ச் சான்றோர்கள் அறத்தைக் கொள்கையாகவோ, கோட்பாடாகவோ போற்றவில்லை. சமயமாகவும் கருதவில்லை. அறத்தை வாழ்க்கை நெறியாகவே போற்றினார்கள்; வாழ்ந்தார்கள். க.பா. அறவாணன் அவர்கள், “மனிதனிடம் இருக்கும் மனம், அதனால் அவன் செய்யும் சிந்தனை, அவன் பேசும் பேச்சு, அவற்றால் விளையும் செயல் ஆகியவையே மனிதனை விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்குப் பிரித்துக் காட்டுவதோடு  இல்லாமல் உயர்த்துக்காட்டுகின்றன.” மனிதன் தனக்கென ஒரு தனி நியதி அறத்தை மேற்கொண்டு வாழவேண்டும். அத்தகைய அறவாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதனை, நமது சங்க இலக்கியப் பேழை என்று அழைக்கப்படும் புறநானூறு செம்மையுறச் செய்துள்ளது. இத்தகைய புறநானூற்றில் அறியப்படும் அறச் கருத்துக்களை ஆராய்ந்து நோக்குவது இக்கட்டுரையின் சிறப்பாகும்.

அறம்  சொற்பொருள் விளக்கம்

          அறம்” -  என்ற சொல்லுக்குப் பல்வேறு நூல்கள்  பொருள்களைத் தருகின்றன. அறம் பற்றிய சொல்லுக்கு,

·         தருமம்

·          புண்ணியம்

·         அறச்சாலை

·         தருமதேவதை

·          யமன்

·         தகுதியானது

·         சமயம்

·          ஞானம்

·          நோன்பு

·         இன்பம்

·          தீப்பயன்

·         கடமை

·         கற்பு

·         இல்லறம்

·         துறவறம்

·         அறக்கடவுள்

இலக்கண நூல்களில் அறம்

          தொல்காப்பியம் தமிழ்மொழியில் சிறந்த இலக்கண நூல். தமிழ் மொழியின் இலக்கணத்தைச் செம்மையாகக் கூறுவதுடன் அறக்கருத்துக்களையும் விளக்குகின்றது. தலைவன் தலைவியின் வாழ்வியல் அறன் வழிப்பட்டதாய் அமைய வேண்டும் என்பதனை,

                        காமஞ் சான்ற கடைக் கோட் காலை
                   ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
                   அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
                   சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

என்றும்,

அன்பே அறனே இன்பம் நாணொடு”

 என்று    அறக்கருத்துக்கள்      கூறப்பட்டுள்ளன.

அறத்தின் சிறப்பு

அறம் கொண்டு வாழ்பவர் வாழ்க்கையானது எப்போதும் சீரும் சிறப்புமாகத் திகழும். அறம் வாழ்வினை மேன்மையடையச் செய்கின்றது. மக்களாகப் பிறந்த அனைவருமே உயர்வாக மதிக்கப்படுவதில்லை. அறவழி வாழ்பவர்களே உயர்ந்தவர்கள் என மதிக்கப்படுகின்றனர். எனவே எந்தச் சூழ்நிலையிலும் அறவழி தவறாது வாழ்ந்து உயர்வு பெறுவோம். 

                             “அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
                             மறத்தலின் ஊங்கில்லை கேடு”

ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மயக்கத்தான் மறத்தலின் மேம்பட்ட கேடும் இல்லை. என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

அறத்தின் வழி பெருமை

அக்கால மக்கள் தானமும் தவமும் இயற்றி தரணியில் தமிழை போற்றி உண்மை பேசி பொய்மை ஒழித்து வீரத்துடன் விளங்கினார்கள் மனதில் உரம் நிறைந்த உன்னத வாழ்வினை வாழ்ந்தார்கள். இதற்கு சான்றாக முல்லைக்கு தேர்கொடுத்த பாரியும் ஈதலே இன்பம் என வாழ்ந்த இளையான் குடிமாறநாயனார் போன்றவர்கள் வரலாறு சான்றாகும்.

அறத்தின் நன்மை

அறத்தினால் வாழ்வுக்கு நன்மை விளையும். மனிதனுடைய மலர்ச்சிக்கு பயனை தரும் ஒழுக்கம் மிகவும் பயனுடையதாகும். இவ்வுலகில் ஒருவனுக்கு அறம் செய்வதை காட்டிலும் மிகுந்த செல்வம் இல்லை. அறமானது அறிவு வரும்போது காக்கும் அழியாத துணையாகும். அறம் மனிதனின் ஆயுள் காலத்தை கூட்டும். ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மயக்கத்தான் மறத்தலின் மேம்பட்ட கேடும் இல்லை. இதனை வள்ளுவர்,

“அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
              மறத்தலின் ஊங்கில்லை கேடு”

என்று குறிப்பிடுகிறார்

இலக்கியத்தில் அறம்

            இராமாயணத்தில் தசரதன் கைகேயிக்கு இரு வரங்களை அளித்தமை, ‘வாய்மையும். இராமன் தந்தை சொல்லை ஏற்றுக் காட்டுக்கு செல்வது ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்றதையும், சீதை இராமனுடன் காட்டுக்குச் செல்வது, ‘கற்புடைமை’ யையும்,  நம்மால் காண முடிகிறது. இவ்வாறு அறம் உரைப்பதற்கு காரணம், இவை மனதில் ஆழப்பதிந்து நிற்கும் என்பதே இதற்குச் சான்று.

அறநெறி

அறம் செய்வதற்குக் காலம் நேரம் பார்க்க வேண்டியதில்லை என்பது வள்ளுவரின் ஆழமான கருத்தாக இருந்திருக்கின்றது.

                      “அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது

                    பொன்னுங்கால் பொன்றாத் துணை”

இந்த அறத்தின் நெறிப்படி  தனி மனித வாழ்வில் பிரதிப்பலி;க்கின்றது. அறம், பொருள்> இன்பம்> வீடு அடைதல் நூற்பயனே” என்பது நம் இலக்கணம். பொருளும்> இன்பமும் நூற்பயன் என்றாலும்> அவை அறநெறியில்  அமைய வேண்டும் என்பதே கருத்தாகும். சிலப்பதிகாரம்> மணிமேகலை> கம்பராமாயணம்> பெரியபுராணம் போன்றவை அறத்தைக் குறித்து உணர்த்தும் நூல்களாக உள்ளன.

அறம் குறித்த பதிவு –( தொல்காப்பியம்)

               மனித வாழ்க்கையின் பல்வேறு இயல்புகளையும் உலகப் பொருள்களையும் நுட்பமாக ஆராய்ந்த புலவர் இவற்றை இரண்டு வகையாகப் பகுத்துள்ளனர். அகம், புறம். அகம் என்பது ஒருவனும் ஒருத்தியும் தம் உள்ளத்தால் உணரக்கூடிய உணர்வும், அதன் பயனாகிய இன்ப அனுபவமுமாகும். புறம் என்பது புறத்தார்க்குப் புலனாகக்கூடிய அறஞ்செய்தலும், மறஞ் செய்தலும், அவற்றின் பயனுமாகும். இப்பாகுபாட்டினை அடைப்படையாகக் கொண்டே தமிழின் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.

வள்ளுவத்தின் அறம்

அதியமான் அஞ்சி எவ்வாற அறம் செய்து வாழ்ந்தான் என்பதனைப் புறப்பாடல் கல்வெட்டு போல் பதிவு செய்துள்ளது நமக்கு அகச்சான்றாய் அமைகின்றது.

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு”           

என்ற குறளைப் போல் அதியன் உள்ளூரில் பழுத்த பயன்மரம் போன்று வாழ்ந்தான் என்ற வாழ்வியல் இலக்கியமாய்ப் புறநானூறு புலப்படுத்துவது தெளிவாகிறது. உலகப்புகழ் பெற்ற இலக்கியமான திருக்குறளானது இரண்டடிகளில் மக்களுக்குத் தேவையான அனைத்து நெறிகளையும் கூறியுள்ளமை சிறப்புக்குரியதாகும். ஒழுக்கத்தோடு வாழ்வோருக்கு எப்படியெல்லாம் வழிவகை இருக்கின்றன என்று வகுத்தும், தொகுத்தும் தெளிவாகச் சொல்லப்பட்ட கருத்துக்களே அறத்துப்பாலில் இடம் பெறுகின்றன.

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்”

என்று அறம் பற்றித் திருக்குறள் எடுத்தியம்புகின்றது.

முடிவுரை

நமது முன்னோர்கள் உலகுக்கு முன்னுதாரணமாக அறவழியில் நடந்து காட்டினார்கள். நாமும் அவ்வழியை பின்பற்றி அறத்தின் வழி நடந்து “யாதுமூரே யாவரும் கேளீர்” என்று இந்த உலகின் மூத்த குடிகளாக வாழ்ந்து பிறரையும் வாழ்வித்து வாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோமாக. அன்றைய காலத்து மக்களின் வாழ்வியலும் இன்றைய காலத்து மக்கள் வாழ்வியலும் வெகுவாக மாறி விட்டது. காலமாற்றம் மக்களை அறத்தில் இருந்து வெகுவாக விலக செய்து விட்டது. பொய்மையை போற்றி வாழும் போலியான வாழ்வினை இன்றுள்ள மனிதர்கள் வாழ்வது நமது பெருமை மிக்க தமிழ் குடிக்கு நாம் செய்யும் அவதூறாகும். மனிதன் தன் வாழ்வில் அறத்தினைக் கடைப்பிடிப்பது இன்றியமையாததாகும். ஒழுக்கமுள்ள வாழ்வினை வாழ்ந்து வாழ்வில் வளம்பெற அறப்பண்புகளை நம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் கூறிய அறக்கருத்துக்களை அறநூல்களிலிருந்து கற்று வாழ்வில் நலம்பெறுவோமாக.

பார்வை  &  துணைநூல்கள்:

1.     க.த. திருநாவுக்கரசு – திருக்குறள் நீதி இலக்கியம்

2.     அறவாணன்-2011,அறஇலக்கிய களஞ்சியம், தமிழ்க்கோட்டம் பப்ளிகேஷன், சென்னை

3.     தொல்காப்பியம்

4.     அகநானூறு

5.     புறநானூறு