4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 நவம்பர், 2023

காற்றிலும் களத்திலும் விரியும் சிறகு - மைத்திரிஅன்பு

 

காற்றிலும் களத்திலும் விரியும் சிறகு

-    மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்.

கவிதை என்ற சொல் உடனடியாக உணர்த்துவது போலத் தோன்றும்   பொதுத்தன்மை. புகை மூட்டமான ஒரு உணர்வுதான். உண்மையில் அவ்வாறான நிரந்தரப் பொதுத்தன்மை எதுவும் கவிதை என்ற வடிவத்துக்குக் கிடையாது. அந்தந்தக் காலகட்டங்களில் அந்தந்த மொழியில் அவ்வபோது செயல்படும் போக்குகள் கவிதை என்பதன் இலக்கணத்தையும் வரையறையையும் நிர்ணயித்துச் செல்கின்றன

-         யுவன்சந்திரசேகர்.

 

            விஞர் சுதாகண்ணன், எனக்கு கல்லூரி காலம் முதலே கவிதையால் அறிமுகமானவர். தமிழார்வம் மிக்கவர். தழைக்காதுழைத்து தமிழாசிரியரானவர். விருப்பு வெறுப்பு இன்றிப் பழகும் பண்பாளர். உண்மைக்காக குரல் கொடுக்கும் பற்றாளர். இயல்பான இவர் குணங்கள் யாவுமே நிலங்கொத்தி பறவைஎனும் பெயரில் கவிதைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.


                கற்பனைத் திறன் வாய்த்த மொழியில் கவிதை உருப்பெற்றிருப்பினும், அதனூடான உண்மை மறுக்கமுடியாத ஒன்று. தத்துவ உண்மை, அறிவியல் உண்மை என்று உண்மைகள் வகைப்படுத்தப்பட்ட போதும், மறைக்கவும், கரைக்கவும் முடியாத ஒன்றாகவே படைப்புலகத் தளத்தில் உண்மையின் பங்களிப்பு சூரியனாய் சுட்டெரிப்பதை ‘மகத்துவச் சிந்தனை’ எனவும் ‘புலப்படாத நிகழ்வு’ எனவும் குறிப்பிடலாம். அவ்வகையில் இச்சிறுத் தொகுப்பு, ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரிய வாழ்க்கை அனுபவங்களின் நினைவாக வெளிப்படுகிறது. அவ்வாறு தன் செல்ல மகளின் மழலைமொழியில் தோற்றுப்போன தமிழை” (ப.22) ஒரு கவிதைக்குள் கவிஞர் படம் பிடித்துள்ளார். நாள்தோறும் எழுதிவரும் நாட்குறிப்புகள் துளியும் இலக்கிய அங்கிகாரத்துக்கு ஏற்றதன்றி, வெறுமனே சரிதையாகும் சூழலுக்கிடையில், கவிஞரிடம் மீதமிருந்த எழுதப்படாத நாட்குறிப்புகள் சில, நல்ல இலக்கியங்களாக விரிந்திருப்பதை வெளி வர மறுக்கும் பள்ளிப்பாட நினைவிலும்” (ப.29) ஆத்தாவூட்டுக் கனவின் கதையாடலிலும்” (ப.88) காணமுடிகிறது. அதிலும் பிறக்காத பெண்பிள்ளைக்கு ஏங்கி, பிறந்த ரெண்டும் பொம்பளபுள்ளையா போச்சேன்னு அழுது புலம்பும்” (ப.71) அனுபவப்பதிவு, கவிஞரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்ட உணர்வுகளுக்கு,கடத்தல்திறனையூட்டி, கவித்துவ தர்கத்துடன் வெளிப்பட்ட படைப்பாக - வாசக மனங்களுக்குள் சென்று சேர்ந்து - தனிமனித சிந்தனைத் தூண்டலுக்கும், சமூக மாற்றத்திற்கும் வழிவகைச் செய்கிறது. இவ்வகை படைப்பேஉண்மைபடைப்பும் கூட. இவ்வாறு இன்னும் இப்படைப்பு மகிழ்ச்சி, அன்பு, பாசம், கருணை, இறக்கம், காதல் என்னும் ஒரே மையத்தை நோக்கி சங்கமிக்கிறது.

                படைப்பு சார்ந்த போதானா முறையில், நேரடித்தன்மையும், உண்மையை நோக்கிய நேரடிச் சுட்டலும், குறியீடுகளைச் சார்ந்திராத வெளிப்பாடும் சிறு கவிதைகளுக்கான முக்கிய மார்க்கம், என்பதை கவிஞர் நன்குணர்ந்து, ஆட்களை ஏற்றிக்கொண்டு விரைகின்றன / தொழில் நிறுவன வாகனங்கள் / சக்கரத்தில் சிக்கிக்கொண்டு / மரணிக்கிறது விவசாயம் (ப.64) என்றவாறு - குறியீட்டுத் தன்மை அற்ற சொற்களாலும் செயல்களாலும் மிகச் சாதாரணமான - தினசரி விவகாரங்களை கவிதை மொழியில் பேசியுள்ளார். இதில், அவளுக்காகப் பேசத்தான் அவளாலும் முடியவில்லை” (ப.54) எனும் வரிகள் குறிப்பிடத்தக்கதாகிறது. நீள் கவிதைகளிலும் சொல்லல் எனும் உச்சத்தை எட்டும் ஒற்றைத் தருணம் நோக்கியே, அனைத்து வரிகளும் விரிகின்றன. கவித்துவம் வரிசையில் எதிரெதிராய் வரும் எறும்புகளின் சந்திப்பைப்போல, எழுதுபவனும் வாசகனும் கணநேரம் சந்தித்து விலகும் புள்ளியன்றி வேறில்லையது என்பதை, பாட்டியின் காதுகிழிய… கத்தும் சினையூசிபோட்டு பிறந்த கன்றுக்குட்டியின் குரலதிர்வு” (ப.79) நிரூபிக்கிறது. யுகயுகமாய் இதுவே வாசகனுக்குள் பேதத்தையும் அனுபவப் பிளவையும் இல்லாமலாக்க வல்லது. இதனால் கவிதை எப்பொழுதும் இறந்த காலத்தை ஏற்காத படைப்பாக சுழற்சியில் மிளிர்கிறது.

              


  புறவுலகில் முப்பட்டை அமைப்பாகப் பிரிந்து கிடக்கும் கால அமைப்பு கவிதைக்குள் அதேவிதமாகச் செயல்படுவதில்லை. ஆனாலும் “வளமானாலும் வறட்சியானாலும். / வயதுக்கேற்றபடி வருவார்கள்..” (ப.48); “பெதும்பையில் தொடங்கி / பேரிளம் பெண்ணாகியும் / மண்ணோடவே வாழும் / அவள் ஒரு / நிலங்கொத்திப் பறவை” (ப.78) என்கின்ற குறிப்பிட்ட சில கவிதைகளின் நிகழ்த்து கணம் சுட்டுப்பொருளாக காலப்பரப்பிற்கு பொருப்பேற்றுள்ளது. இன்னும் இதுபோன்ற சுட்டுப்பொருளில், ”அங்கிங்கெனாதபடி / எங்குமாய் அத்து மீறல்கள் / கண்டும் காணாமல் / மெளனமாய் / மீசை வைத்த பொம்மைகள்” (ப.44); “உணர்வுடனே அழைக்கின்றன / ஆடு மாடுகள் கூட / அம்மா” (ப.66); “புழுதி படிந்த சாலை / முண்டியடிக்கும் வாகனங்கள் / மூச்சுத் தினறும் மரங்கள்” (ப.67) பக்கத்திற்கு பக்கம் சிறுசிறு கவிதைகள், பல கணத்த நிகழ்காலச் சமூக நிகழ்வுகளை உணர்வாழம் மிக்க சொற்களால் காட்சிப்படுத்துகின்றன. இன்னும் இன்னும் என்னுரையில் கவிஞர் குறிப்பிட்டவாறு, குறுகிய வட்டத்தைவிட்டு வெளிப்பட்டு, சமூகப் பசிப்போக்கப் போர்த் தொடுக்கும் பெரு(ம்)அலையென தன் அடுத்தடுத்த படைப்புகளோடு, அவர் தடம் பதிக்கவேண்டுமென விரும்பி, வாழ்த்துகளுடன் வரவேற்போம்.

சுதா கண்ணன்,

நிலங்கொத்திப் பறவை

 

முதற்பதிப்பு - அக்டோபர் 2022

பக்கங்கள் 88

விலை75/-

ISBN : 978-81-940536-6-8

 

நறுமுகை வெளியீடு,

29/35, தேசூர்பாட்டை, செஞ்சி604 202

narumugaijir@gmail.com