4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 டிசம்பர், 2023

பத்துப்பாட்டில் பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள் - முனைவர். வ. கலைஅரசி

 

பத்துப்பாட்டில் பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள்

முனைவர். வ. கலைஅரசி,

உதவிப்பேராசிரியர்,

பதிப்புத்துறை,

திராவிடப் பல்கலைக் கழகம்,

குப்பம், சித்தூர் – மாவட்டம்.

ஆந்திரபிரதேசம் – 517426

ஆய்வுச் சுருக்கம்

“இலக்கியம்“ என்பது மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது. மக்கள் தம் வாழ்க்கையில் கண்ட அனுபவத்தையும், உண்மைகளையும் வெளியிடுவது இலக்கியம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் அனுபவ அறிவும் கருவுலம் இலக்கியம். அந்த வகையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வின் பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகள் பிற்காலத்தில் நாகரீகப் பண்பாட்டுச் செயல்களாக மாறிவிட்டன. பழக்க வழக்கம் என்று வழங்கும் தொடர் இவ்விரு சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்”

என்ற ஔவையார் வெண்பாவில் 47 உறுப்பாகிய கை, நாக்கு மற்றும் அக உறுப்பாகிய “மனம்” இவற்றிற்குரிய பழக்கத்தை தெளிவுப்படுத்துகிறார். பொதுவாக ஒப்பு, கருணை, கொடை போன்ற பண்புகள் பிறப்பில் வருவன என்றும் வழக்கம் என்பது பலர் மேற்கொண்ட நடைமுறையில் அமைவது. சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் குறிப்பாக ஆற்றுப்படை நூல்களில் பழந்தமிழர் மேற்கொண்ட   பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கெண்டு இவ் ஆய்வு உள்ளது.

முன்னுரை

“பழக்க வழக்கம்” என்ற சொல் தமிழகத்து முதுமொழிகளுள் ஒன்று என்று கூறலாம். “வழக்கம்” என்பது “வழக்கு” என்ற சொல்லின் அடியாகத் தோன்றியது எனலாம். இத்தகைய சொல் வழக்கு முறையினை செய்யுள் வழக்கு, உலக  வழக்கு, இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வகைப்படுத்தி உள்ளனர்.

இதன் அடிப்படையில் வழங்கி வந்ததை “வழக்கு” என்றும் “பழகி” வந்ததை பழக்கம் எனவும் கூறலாம். ஆனால் பழக்கம், வழக்கம் இரண்டையும் ஒரு பொருள் குறித்த இரு சொற்களாகக் கருதி வழக்கத்திற்கு பழக்கம் என்றும் பழக்கத்திற்கு வழக்கம் என்றும் கூறி வருகின்றனர். பழக்கம் உயர்ந்ததாக இருந்தால் அதன் பலன் சிறந்ததாக இருக்கும். இதன் காரணமாக வந்த பழமொழி தான் “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது இன்றும் இப்பழமொழி வழக்கத்தில் உள்ளது. ஆதலால் இளமைப் பருவம் முதல் நன்னெறி நல்ல பழக்கங்கள் உடையவனாக இருத்தல் வேண்டும் என்பர். அத்தகைய குணமும், பழக்கமும் உள்ளவர்களே நற்செயல்களில் ஈடுபட்டு உயிர்க்கு உற்ற துணையாய் இருந்து அவர்கள் இன்பமாய் வாழ்க்கை வாழ்வர்.

முதலில் உயர்ந்தோரிடம் காணப்பட்ட நல்ல பழக்கங்கள் காலப்போக்கில் வழக்கங்களாக மாறிவிட்டன. மக்கள் பின்பற்றி வந்த பழக்கங்கள் சில ஏற்றுக் கொண்டு சில மாற்றங்களுடன் இன்றைய காலத்தில் நடைமுறையில் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டில் பழந்ததமிழர்கள் மேற்கொண்ட ஒரு சில பழக்கவழக்கங்களைக் காணலாம்.

அந்தணர் மற்றும் வேள்வி செய்தல்

முதல், இடை, கடை என முச்சங்கங்கள் தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் அந்தணர்கள் பலர் தமிழகத்தில் குடியேற்றியுள்ளனர். அவர்கள் வேதங்களைக கற்று வேள்விகளைச் செய்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. அது மட்டுமன்று வடமொழியிலிருந்து வேதகொள்கைகள் பல தமிழ்நாட்டில் பரவி இருந்தன.

திருமுருகாற்றுப்படையில் அந்தணர்கள் மந்திரங்களை வேதத்தில் விளம்பும் முறை பிறழாமல் வேள்விகளைச் செய்து கொண்டிருந்தனர் என்பன,

“மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தனர் வேள்வி ஓரக்கும்மே”  (திருமுருகு – பா-19)

என்ற பாடல் மூலம் அறியலாம்.

இன்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் கோவில்களிலும், அந்தணர்களே மந்திரங்களை வடமொழியில் தான் செய்கின்றனர். இருந்தாலும் தமிழகத்தில் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் ஒரு சில கோயில்களில் வடமொழி அதுவும், அந்தணர்கள் தான் அர்ச்சகராகவும் இருக்கின்றனர்.

மக்கள் தம்மை மீறிய ஒரு சக்தி உண்டு என்று நம்பினர். அதனால் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் முதலில் இறைவனை வணங்கியே தொடங்கினர். பாணர்கள் தங்கள் தொழிலாகிய இசைப் பாடுவதற்கு முன் கடவுள் வாழ்த்தைப் பாடிய பின்னரே பாடத் தொடங்குவர். நாள்தோறும் காலையில் கடவுளைப் பாடுதலையே தம் கடமையாகக் கொண்டிருந்ததை பின் வரும் பாடல் மூலம் அறியலாம்.

“பாடின பாணிக்கேற்ப நாடொறும்

களிறு வழங்கதர்க் கானத் தல்கி

இலைமின் மராந்த எவ்வந்தாங்கி

வலை வலந்தன்ன மென்னிழன் மருங்கிற்

காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைய  (பொருந – பா – 48 – 52)

பாணர்கள் அரசவையில் கூட மன்னனை வாழ்த்துவதற்கு முன் கடவுள் வணக்கம் பாடிய பின்னரே மன்னரைப் புகழ்ந்து பாடுவதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.

புலவர்களுக்கு மதிப்பு கொடுத்தல்

சங்க காலத்தில், புலவர்களுக்கு பெருமதிப்பு கொடுத்தனர். மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் புலவர்களை மதித்து போற்றும் பழக்கம் இருந்தன. அவர்கள் எந்த மரபைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் மதிக்கப்பட்டனர். புலவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு சிறப்பு இருந்தது.

                “பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்

                காலி னேழடிப் பின்சென்று கோலின்

                தாசகளைத் தேறென் நேற்று வீறுபெறு” (பொருந – 165 -167)

என்ற வரிகள் மன்னர் புலவர்களுக்கு மிக உயரிய விருந்தினை அளித்து அவர்களை நன்கு உபசரித்து பொன்னும் பொருளும் மற்ற பிறவகை வாழக்கைக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்தனர். நான்கு குதிரைகள் பூட்டிய தேரினைப் பரிசாக அளிப்பது பண்டைக் காலத்து மன்னர்களின் பழக்கமாக இருந்தது இதனை

“வளைகண்ன்ன வாலுளைப் புரவி

துணைபுணர் தொழில் நால்குடன் பூட்டி” (பெரும் – 488 -489)

என்ற பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

காக்கைக்கு உணவு வைக்கும் பழக்கம்

தமிழரின் பழக்கங்களுள் மிக முக்கியமான ஒன்று காக்கைக்கு சோறு வைப்பது அதாவது பெண்கள் உணவு சமைத்தபின் உண்பதற்கு முன் முதலில் காகத்திற்கு உணவு வைப்பர். அந்த பழக்கமானது இன்றும் நடைமுறையில் உள்ளன. விரத நாட்கள் பண்டிகை நாட்களில் காகத்தை இறந்த முன்னோர்களின் வடிவமாகக் கருதுகின்றனர். இன்றும் முன்னோர்க்களுக்கு திதி கொடுக்கும் போதும், அமாவாசை தினத் தன்றும் முதலில் காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் இன்றும் தொடர்ந்து வருகிறது. சங்க இலக்கியங்களிலும் இரத்தம் கலந்த சோற்றைக் காக்கைக்கு பலியாகக் கொடுத்தனர். அந்த உணவை கருங்காக்கைகளும் உண்டன என்பதை,

“கூடு கெழிஇய குடிவயினான்

செஞ்சோற்றை பலிமாந்திய

கருங் காக்கை” – பொருந் – 180 -182.

பொருநாற்றுப்படை பாடல் வரிகள் பண்டைய தமிழரின் பழக்கத்தை தெரியப்படுத்துகிறது.

நாகத்தை வணங்கும் வழக்கம்

நாகப்பாம்பை வணங்கும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தே உள்ளது. அந்த வழக்கம் இன்றும் உள்ளன. இன்றும் பல கோயில்களில் நாக கன்னிகள் நாக தேவதைகள் கற்களால் ஆன உருவங்களை வைத்து வழிபாடு செய்கின்றனர். கூத்தர்கள் தாம் செல்லுகின்ற வழியில் பாம்புகள் மறைந்து கிடக்கும் பள்ளங்கள் இருந்தன. விறலியர்கள் அந்தப் பாம்புகளைத் தொழுது வணங்கி வாழ்த்தினர் என்பதை,

“கரந்து பாம்பு ஒருங்கும் பயம்பு மாருளவே

குறிக்கொண்டு மரங்கொட்டி நோக்கிச்

செறிதொடி விறலியர் கைதொழுஉய் பழக்க” (மலை – 199 – 201)

அடிகளால் அறியலாம். இந்த வழக்கம் குறிப்பிட்ட நாகப் பாம்பை வணங்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. அது மட்டுமன்று புற்றுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்வது இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

வெறியாட்டு நிகழ்ந்தும் பழக்கம்

தெய்வ வழிபாடுகளில் முக்கியமான ஒன்று வெறியாட்டு. இந்த வெறியாட்டு நிகழ்ச்சியை நடத்துபவனை “வேலன்” என்பர். தம்முடைய புதல்விக்கு நேர்ந்த துன்பத்திற்கு காரணம்ம தெய்வம் எனக் குறியின் மூலம் அறிந்த பெற்றோர், அந்தக் காலத்தில் தெய்வத்திற்கு வழிபாடுகளை நிகழ்த்துவர். அதில் குறிப்பிடத்தக்கது “வேலன் வெறியாட்டு” என்பது இது முருகக் கடவுளை வழிபடுவதற்குரிய நிகழ்ச்சி இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வெறியர்களம் என்பர். இது பெருபாலும் வீட்டின் முற்றத்தில் நடைபெறும். முற்றத்தில் நறுமணல் பரப்பி ஒரு புறம் முருகனுக்குரிய சேவற்கொடி நட்டு அதற்கு பூவும், பொட்டும், மாலையும் சூட்டி, நறுமணப்புகை காட்டி முருகப் பெருமானை எழுந்தருளச் செய்வான் இதனை,

“அருங்கடி வேலன் முருகொடு வளைஇ

அரிக்கூடு இன்னியம் கறங்க நேர் நிறுத்தக்

கார் மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்

சீர்மிகு நெடுவேள் பேணித் தழுஉப் பிணையூட்

மன்றுதொறும் நின்ற குரவை சேரிதொறும்”( மலை – 278 – 282)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம். இனிய இசைக் கருவிகளை முழக்கி முருகக் கடவுளை முன்னிலைப்படுத்துகிறான். மிகுதியான அச்சத்தை தரும் தோற்றம் உடையவனாகிய வெறியாடுபவன் முருகனையும், தம்மிடம் வந்தோரையும் தன் வயப்படுத்துகிறான். குறிஞ்சி மலர்கள் பெரும்பாலும் கார்காலத்தில் பூக்கும் சிறப்புடையது. அத்தகைய குறிஞ்சி மலர்கள் கடம்ப மரத்தில் சூட்டி முருகனை வழிபடுகிறான்.

“வேலன் தைஇய வெறியர் களனும்”  (திருமுரு – பா – 222.)

என்ற பாடல் வரிகளில் “வெறியாட்டு களம்” பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளதை அறியலாம்.   

பருத்தி ஆடையும், பட்டாடையும் அணியும் பழக்கம்

பண்டைய தமிழக மக்கள் பருத்தி நூலினால் நெய்யப்பட்ட ஆடையையும், பட்டு இழைகளால் நெய்யப்பட்ட ஆடையையும் அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். என்பதை,

“ஆவி அன்ன அவற்றூற் கலிங்கம்

இரும்மேர் ஒக்கவெர்டு ஒருங்குஉடன் உடீஇ” (பெரும் – 469 – 470)

வரிகள் மூலம் அறியலாம், மேலும்

“புகைமுகந் தன்ன மாசுஇல் தூஉடை” (திருமுருகு – 138)

தூய்மையான மெல்லியதான, மிக நுண்ணிய ஆடைகள் அணிந்துள்ளனர்.

இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் சட்டை அணியும் பழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது. இது முதன் முதலில் வேற்று நாட்டினராகிய “யவனர்கள்” நான் முதன் முதலில் அணிந்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வணிகத்தில் பொருட்டு சென்ற வம்பலர்களும் சட்டை அணியத் தொடங்கினர். இவர்கள் தமது உடையில் “சுரிகை” எனப்படும் குறுவாளினை சேர்த்துக் கட்டி இருந்தனர். தமது தோளில் யானைக் கொம்பினால் செய்யப்பட்ட பிடியினையுடைய நெடுவாளையும் தொங்கும்படி கச்சினால் தோளில் கட்டி உள்ளனர். இதனை.

“எல்லிடைக கழிவுதர்க்கு ஏமம்ஆக

………………… ………………

உடம் பிடித்தடக்கை ஓடா வம்பலர்” ( பெரும் – பா – 66 – 76)

என்ற தொடர் மூலம்  சட்டை அணியும் பழக்கம் இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

உணவுமுறை பழக்கம்

மனிதன் கூடி வாழும் தன்மையுடையவன். அதனால் அவனுடைய உணவுப் பழக்கம் நிலம் சார்ந்ததாகவும், உடல் மற்றும் தட்பவெப்பம், தொழில் சார்ந்தாகவும் உள்ளது. பொருளாதாரம் சிறிது இருந்தால் காய்கறி, உணவையும் சற்று உயர்ந்து இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் திருவிழா மற்றும் கிராமத்து விழாக்களில் பொழுது மாமிசத்தை உணவாக உட்கொள்வது வழக்கம்.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களின் மூலம் புளியங்கறி, கருவாடு, நெல், வரகு, தினைச்சோறு வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி, சுட்டமீன், இறைச்சி, நண்டு கலவை, மாதுளங்காய் மற்றும் மாவடு ஊறுகாய் போன்றவற்றைத் தமிழர்கள் உணவாக உட்கொண்டதை பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.

“வாராது சுட்டவாடு ஊன் புழுக்கல்” (பெரும் – 101)

“குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி

அவரை வான்புழுக்கி அட்டி பயில்வுற்று

இன்சுவை மூரல் பெறுதுவீர்” (பெரும் – 193 -194.)

இன்றும் நமது உணவுகளில் கருவாடு, வரகுச்சோறு பருப்புக் குழம்பு போன்றவை இடம் பெறுகின்றன.

அக்காலத்து மக்கள் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிப் புரிந்து வாழ்ந்தனர். மன்னனைப் படிப் பரிசில் பெற்றுச் சென்ற புலவரகள் கூட மன்னன் கொடுத்த பொருளை தமக்கென வைத்துக் கொள்ளாமல் எல்லாருக்கும் கொடுத்து அதாவது பகுத்துண்டு வாழும் பண்புடையவராக இருந்துள்ளனர்.

வழிச் செல்பவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அவர்களைக் காப்பாற்றுவதற்கும், உதவிப் புரிவதற்கும் மன்னர்கள் காவலர்களை நியமித்து இருந்தனர். காட்டு வழியிலும் ஊர்களின் வாயிலாக செல்லும் மக்கள் ஆங்கங்கே வாழும் மக்கள் உதவிப் புரிந்தனர் என்பதை பெரும்பானாற்றுப்படை மற்றும் வேறு பல நூல்களிலும் காணமுடிகிறது. அதுமட்டுமின்றி காட்டில் வாழும் கானவர் அவர்களுக்கு உணவு முதலியன கொடுத்து உதவி உள்ளனர். புதியதாய் வருபவர்களுக்கு வழி அறியும் வகையில் பல வழிகள் கூடும் சந்திப்புக்களைக் கண்டறிந்து நேர் வழிக்கு அடையாளமாக ஊகம் புல்லை முடிந்து வைப்பது வழக்கமாயிருந்தது என்பதை,

“தொன்று ஒழுகுமரபின் நும்மருப்பு இருத்தும்

பண்டுறன் அறியாய் புலம்பெயர புதுவிர்” (பெரும் – 391 -392)

என்ற தொடர் மூலம் அடுத்தவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மையை அறிகிறோம்.

முடிவுரை

பண்டைத் தமிழர்கள் நெருங்கி வாழ்ந்துள்ளனர். தாம் வாழ்ந்த இடங்களுக்கு ஏற்ப நிலத்தைப் பிரித்து அதற்குரிய தெய்வங்களை வழிபட்டு உள்ளனர். அந்தந்த நிலப்பகுதிக்கு ஏற்ற வகையில் தங்கள் பழக்க வழக்கங்கள் அதாவது உணவு முறை, புலவர்களுக்கு மதிப்பு அளிக்கும் பழக்கம், வெறியாட்டு நிகழ்த்துவது, நாகத்தை தெய்வமாகக் கருதி வணக்கும் பழக்கம், காகத்திற்கு உணவு வைத்தல் போன்ற பல பழக்கங்கள் கொண்டிருந்தனர் என்பதை பத்துப்பாடல்களில் சான்றுகள் மூலம் அறிந்தோம் அது மட்டுமல்ல அன்றைய பழக்கங்கள் பல இன்றும் நடைமுறையில் வழக்கமாக மாறி நம் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறோம்.

அடிக்குறிப்பு

1.     திருமுருகாற்றுப்படை – பா – 193

2.     பொருநராற்றுப்படை – பா – 48

3.     பெரும்பாணாற்றுப்படை – பா – 488 – 489.

4.     சீ. வசந்தா – காப்பியங்களில் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் – பா – 11

5.     மலைபடுகடாம் – பா – 199 – 201.

6.     மேலது – பா – 278 – 282.

7.     பட்டினப்பாலை – பா – 246 – 249

8.     பெரும் பாணாற்றுப்படை – பா – 391 – 392.

9.     மேலது – பா – 193 – 194

10.   பெரும் பாணாற்றுப்படை – பா – 469 – 470

11.   மேலது – பா – 66 – 76.