6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஜனவரி, 2024

பாரதியார் எடுத்துரைக்கும் இறை - முனைவர் பீ. பெரியசாமி

 

பாரதியார் எடுத்துரைக்கும் இறை

முனைவர் பீ. பெரியசாமி,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,

ஆரணி, திருவண்ணாமலை- 632317,

மின்னஞ்சல்:periyaswamydeva@gmail.com, கைபேசி:9345315385,

முன்னுரை

உறவுகளும் கடவுளும் வேறல்ல! பாரதி உண்ணும் சோறு பருகும் நீர் மெல்லும் வெற்றிலை அனைத்தும் கண்ணன் எனக் கருதுபவன் அதனால் கண்ணனைத் தோழனாகவும் தாயாகவும் தந்தையாகவும் அரசனாகவும் சீடனாகவும் சற்குருவாகவும் குழந்தையாகவும் விளையாட்டுப் பிள்ளையாகவும் காதலனாகவும் காதலியாகவும் குலதெய்வமாகவும் ஏன் சேவகளாகவும் பாடமுடிந்த்து பாரதியால்! கண்ணன் பாட்டு காட்டுவது உறவுகளும் கடவுளும் வேறல்ல என்ற அத்வைத நிலையையே ஆகும் யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே என்பது கண்ணன் பாட்டின் கருத்தாகும். அட விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவுபராசக்தியே! ஏதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் இறைவனின் எங்கும் பரவிய நிலையைப் பாடுகிறார். ஆன்மாவின் பாச விடுதலை இறைமையை அறிந்து ஆன்மாக்கள் பாசத்தில் சிக்குண்டு துன்பத்தில் உழல்கின்றன. அதாவது உயிர்கள் தமது இறைத்தன்மையை உணர்ந்து  இன்புறாமல் பாசத்தால் துன்புறுகின்றன என்பது பாரதியின்  கருத்தாகும். எனவே தன்னையுணர்ந்து புலன்களுக்கு அடிமையாகிவிடாது மீண்டால் இன்பம் கிட்டும் என்கிறார். இதனை தன்னைத் தானாளும் தன்மை நாள் பெற்றிடில் எல்லாப் பயன்களும் தாமே எய்தும் என்கிறார் மேலும் விட்டுவிடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே! என்ற பாடல்வரிகள் பாசமாகிய சிறையிலிருந்து விடுதலையாக வேண்டுகின்றன. மேலும், ஆதுபோன்ற பாரதியின் இறைநிலைக் கருத்துக்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.

சிவசக்தி

இறைநிலையைப் பலர் இயற்கை ஐம்பூதங்கள் செயற்கையின் சக்தி உயிர்த்தீ அறிவு ஈசன் அன்பு சோதி காளி இன்பம் துன்பம் என்றெல்லாம் சொன்னாலும் தான் இறைநிலையின் திருவடிக்கே சரண்புக விழைகிறார் தன்னை அமரர் நிலைக்கு ஆக்குமாறு இறைவனை வேண்டுகிறார். தனக்கு இற்த மாநிலம் பயனுற வாழ்வதற்கான அனைத்து வல்லமைகளையும் தருமாறு கேட்கிறார். இறைநிலையைப் பாரதியார் சிவசக்தியாகக் கண்டு அதன் நிலையைப் பின்வருமாறு விளக்குகிறார்.

துன்ப மிலாத நிலையே சக்தி

தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி.

அன்பு கனிந்த கனிவே சக்தி

ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி

இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி

எண்ணத் திருக்கும் எரியே சக்தி

முன்புநிற் கின்ற தொழிலே சக்தி

முக்தி நிலையின் முடிவே சக்தி

சோம்பர் கடுக்கும் துணிவே சக்தி

சொல்லில் விளங்கும் சுடரே சக்தி

தீம்பழந் தன்னில் சுவையே சக்தி

தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி

ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி

உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 21. சக்தி)

இதன் உட்பொருளை நாம் உணர்கையில் பாரதியின் எண்ணத் தெளிவை அறியலாம்ஃ

இறைநிலையின் பரப்பு

இறைநிலையின் பரப்பு எல்லையும் கிரிவும் அற்றது அது எவ்வகையான பற்றும் அற்றது கண்ணுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும் இருக்கும் இயல்புடையது வெட்டவெளியாகவும் அறிவாகவும் வேறுபல சக்திகளைக் கொடுப்பதாகவும் அமைவது இதனை.

எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்

இல்லையுள தென்ற்றிஞர் என்றும்மய லெய்துவதாய்

(பாரதியார் கவிதைகள், ஞானப் பாடல்கள், 11. பரமசிவ வெள்ளம்,3)

இறைநிலையின் படிநிலை

உலகம் இன்பமயமானது அதில் உள்ள அனைத்தும் இறைநிலையாலேயே ஏற்பட்டது என்பதை மின அழகாக விளக்கி இறைநிலையின் படிநிலையையும் சுட்டிச் செல்கிறார்.

சித்தினை அசித்துடன் இணைத்தாய்அங்கு

சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்

அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய

மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்

முக்தியென் றொருநிலை சமைத்தாய்அங்கு

முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்

பக்தியென் றொருநிலை வகுத்தாய்

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 9. இறைவா! இறைவா!, 1-4)

இறைநிலையால்(1) ஐம்பூதங்கள்(2) உருவாகி உலகு(3) ஆக்கப்பட்டு அதில் நல்லழகுகள்(4) (மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்) படைக்கப்பட்டு அதன் உச்சகட்டமாக முக்தி(5) என்ற நிலையை வைத்து அதை உணர்வதற்கான உணர்வு(6) என்னும் நிலை ஆகிய உணர்வை மேலோங்கச் செய்ய பக்தி(7) என்னும் நிலை ஆகிய ஏழு படிநிலைகளில்நம் வாழ்வை இறைவன் நடத்துவதாகப் பாரதி குறிப்பிடுகிறார்.

இறைநிலையே வான்

இறைநிலையைக் காளியாகக் கொண்டு அதுவே வானாக ஆகியிருப்பதை

விண்டு ரைக்க அறிய அரியதாய்

விரிந்த வான் வெளியெனநின்றனை

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை

அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை

மண்ட லத்தை அணுவணு வாக்கினால்

வருவ தெத்தனை அத்தனை யோசனை

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 34. மாசக்தி, 1)

எனக் குறிப்பிட்டு மனிதனின் யோசனை எல்லையும் எண்ணிக்கையும் அற்றது அற்த யோசனை எவ்வளவு தூரம் எப்படிச் செல்லுகிறதோ அப்படியே அவரின் வாழ்க்கையும் அமையும் எனகிறார்.

புலன் வெற்றி

இறைநிலையை அடைவதற்கு ஆசை அறுத்தலும் புலன்களை வெற்றி கொள்ளலும் பயன் எண்ணாமல் உழைத்தலும் பக்தி செய்து பிழைத்தலும் அடிப்படையானதை உணர்ந்து தான் அந்நிலையை அடைந்துவிட்டதாக அவரே குறிப்பிடுகிறார்.

இந்திரி யங்களை வென்று விட்டேன்

எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்

பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 28.மாசக்தி,2-3)

என்கிறார் ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள் ஈசனோடாயினும் ஆசையறுமின்கள் என்று சொன்ன திருமூலரின் வாக்கு இங்கு எண்ணத்தக்கது.

நெஞ்சிற்கு அறிவுறுத்தல்

இறைநிலையை அடைவதற்கு மனம் செம்மைப்பட வேண்டும். எப்படியெல்லாம் மனதைச் செம்மைப்படுத்தலாம் என்று சித்தர்கள் கூறியிருக்கின்றனர் எந்த அளவிற்குச் செம்மைப்பட வேண்டும் என்று பாரதி பின்வருமாறு கூறுகிறார்.

பேதை நெஞ்சே

எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை

முன்னர்நம திச்சையினாற் பிறந் தோமில்லை

முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை

மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே

வையகத்மில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்

பின்னையொரு கவலையுமிங் கில்லை நாளும்

பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 27. பேதை நெஞ்சே, 1)

என்று தன் நெஞ்சிற்குப் பாரதி அறிவுறுத்துகிறார்

சிந்தை தெளிந்த செயல்

மனதால் நினைத்தல் மொழியால் பேசுதல் ஐம்புலன்களால் செய்தல் என்ற மூன்றின் வெளிப்பாடுகளும் சிந்தையினிலேயே தெளிவுடையதாக இருத்தல் வேண்டும் என் மனதில் தோன்றுவதை நினைக்கிறேன் பேசுகிறேன் செய்கிறேன் என்ற நிலையிலிருச்து உயர்ச்து நாம் நினைப்பதும் பேசுவதும் அறிவு விழிப்பு நிலையில் அறிந்து இறைநிலை நோக்கிய பயணத்திலேயே அமைய வேண்டும் பாரதாரும் தான் சிந்தனை தெளிந்து விட்டதாகவும் இறைவனின் திருவடிக்கே தன்னை அர்ப்பணம் செய்வதாகவும் மனிதப்பிறப்பினால் அடையக் கூடிய பல பயன்களின் வகை தெரிந்து வாழ வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றார்.

சிந்தனை தெளிந் தேனினி யுன்றன்

திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்

வந்தி ருந்து பலபய னாகும்

வகைதெ ரிந்துகொள் வாழி யடி! நீ

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 36. காளிக்குச் சமர்ப்பணம், 3-4)

என்கிறார்.

இறை இன்பமே பேரின்பம்

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் அதன் அசைவுகளும் நம் அறிவும் நமது அசைவுகளும் எல்லாம் இறைநிலையே ஆகும். இறைநிலை தரும் ஆனந்தம் எல்லையற்றது பேரின்பவயமானது இதை

ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்

அறிவுமலள் மேனியிலோர் சைகை - அவர்

ஆனந்தத்தி மெல்லை யற்ற பொய்கை

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 38. மாகாளியின் புகழ், 6)

என்கிறார்.

அறிவே தெய்வம்

தெய்வம் என்பது ஒன்று தான். ஆனால் தெய்வத்தைப் பலவகையாகப் பிரித்து அவற்றைத் தேடி அலைபவர்கள் அறிவில்லாதவன் என்று கூறி அறிவு ஒன்றே தெய்வம் என்பதை உணர வேண்டும் என்கிறார்ஃ இறைவனைப் பல்வேறு வகைகளாகப் பிரித்து வணங்கும் மயக்கநிலையில் உள்ள அறிவில்லாதவர்கள் எல்லாம் அறிவொன்றே தெய்வம் என்பதை ஓத வேண்டும் என்கிறார்.

ஆயிரத் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள்பல்

லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்

டாமெனல் கேளீரோ?

(பாரதியார் கவிதைகள், ஞானப் பாடல்கள், 10. அறிவே தெய்வம், 1-2)

என்று கூறுவதிலிருந்து பாரதியார் சமயம் கடந்த சிந்தனையாளராக விளங்கி அறிவை உணர்ந்த மிகச் சிறந்த ஆன்மிகவாதியாக்க் காட்சியளிக்கிறார்.

 இவ்வுலகில் ஆதியாக விளங்கும் சிவனும் சொதியான சக்தியும் அங்கும் இங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் ஒன்று தான். அதுவன்றி ஒரு பொருமில்லை இற்த உண்மையை ஆராய்ந்து தெளிந்தால் துயரமெல்லாம் போய்விடும் இதை அறிகிற அறிவே பரமஞானம் என்கிறார் பாரதி.

அவை யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று

ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்இந்த

அறிவு தான் பரமஞான மாகும்

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 38. மாகாளியின் புகழ், 10)

நான்குமறை தீர்ப்பு

உலகில் இறைநிலையை நம்பியவர்கள் யாரும் கெடுவதில்லை என்பதே நான்குமறைகளின் தீர்ப்பாகக் கூறுகிறார்.

நம்பினார் கெடுவ தில்லை நான்கு மறைத் தீர்ப்பு

(பாரதியார் கவிதைகள், தோத்திரப் பாடல்கள், 41. தேசமுத்துமாரி, 7)

என்பதிலிருந்து பாரதியின் தன் நம்பிக்கையும் இறைப்பற்றும் உள்ள உறுதியும் உணர முடிகின்றன இறைவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டால் நாம் விரும்பியதெல்லாம் பெறலாம் என்கிறார். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திலும் இறைநிலையைப் பார்த்து இன்பமடைந்தவர் பாரதி என்பது அவரின் காக்கைச் சிறகினிலே நந்த லாலா உள்ளிட்ட அவரது பாடல்கள் மூலம் தெளியலாம்.

பரமநிலை எய்தும் வழி

இறைநிலையை அடைவதற்கு வயது செல்வம் தோற்றம் ஆகியவை ஒரு தடையே கிடையாது அதை அடைதற்கு முனிவர்கள் போன்று காவித் துணிகளைக் கட்டிக்கொள்வதோ சடைமுடி வைத்துக்கொள்வதோ தேவையற்றது மனதை ஒருநிலைப்படுத்தி பாவித்தல் ஒன்றே போதும் இதை

காவித் துணிவேண்டா கற்றைச் சடை வேண்டா

பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே

(பாரதியார் கவிதைகள், ஞானப் பாடல்கள், 11. பரமசிவ வெள்ளம், 20)

என்று குறிப்பிடுகிறார் மேலும் அறைவனை அடைய சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதுமில்லை தோத்திரங்களும் இல்லை நம் உள்ளத்தால் நினைத்தாலே போதும் என்று இறையின் உண்மை நிலையை உணர்த்துகிறார்.

முடிவுரை

உலகும் கடவுளும் வேறல்ல! எல்லாப் பொருளிலும் இறை கலந்துள்ளது என்பதை காக்கையின் கருமை மரத்தின் பசுமை கேட்கும் ஒலி தீயின் சூடு அனைத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டேன் எனக்கூறுகிறார். பகை நடுவினில் அன்புறுவான் நம் பரமன் வாழ்கின்றான் பாரதியின் உள்ளத்தில் அத்வைதம் நீங்கா இடம் பெற்றிருந்தது அதனால்தான் தன் வசன கவிதையிலும் இதே கருத்தைப் பதிவு செய்கிறார். வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகைமலர் இவை ஒரு பொருளின் பல தோற்றம் உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று இந்த ஒன்றின் பெயர் தான் தானே தெய்வம் அமுதம் இறவாது என எல்லாப்பொருளிலும் இறைமை கலந்துள்ளமையை விவரிக்கிறார். அது மட்டுமல்ல எல்லாக்கடவுளரும் ஒன்றே என ஒற்றுமைப்படுத்துகின்றார். ஆத்திசூடி இளம்பிறையணிந்து மோனத்திருக்கும் முழுவெண்மேனியனாகிய சிவன் கருநிறம் கொண்டு கடல்மிசை கிடப்போனாகிய திருமால் முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் ஏசுவின் தந்தை எனப் பலவாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே அதன் இயல்பு ஒளியுறும் அறிவே! அதனியல் கண்டார் அல்லலை அகற்றினார் என்கிறார். இதனையே திருமூலரும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனுமாம் என்றார். இவ்வாறு பாரதி பல்வேறு இறைநிலைக் கருத்துக்களைத் தம் படைப்பில் படைத்துக் காட்டியுள்ளார்.

பார்வை நூல்

1.    பாரதியார் கவிதைகள், பூம்புகார் பிரசுரம், நான்காம் பதிப்பு,சென்னை-81 1984.

கருத்துகள் இல்லை: