4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

தொல்சீர் மானிடவியலாளரின் பார்வையில் சமயமும், சமய வாழ்வும் : ஒரு விபரண நோக்கு - ச.சசிதரன்

 

தொல்சீர் மானிடவியலாளரின் பார்வையில் சமயமும், சமய வாழ்வும் : ஒரு விபரண நோக்கு

.சசிதரன்

முதுநிலை விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்

ஆய்வுச்சுருக்கம்

சமயம்,சமய நம்பிக்கை,சமய வாழ்வு என்பன வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே தொடங்கி விட்டன என்பது மானிடவியலாளர்களின் ஆய்வு முடிவாக உள்ளது. எவ்வாறாயினும், மானிடவியற் புலத்தில் சமயத்தின் தோற்றப்பாட்டினை முதன்முதலாக ஆய்வு செய்பவராக E.B டைலர் காணப்படுகின்றார்.

அவர் படி மலர்ச்சி  வாதத்தின் ஊடாக சமய நம்பிக்கைகளை ஆய்வு செய்தார். இவரை அடுத்து வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு காரணங்களில் ஆய்வு செய்தனர். இதன் அக்கோட்பாட்டுச் சிந்தனைகள் வேறுபடுவனாகவே காணப்படுகின்றன. எவ்வாறாயினும் அக்கோட்பாடுகளை சமூக உறுதிப்பாட்டுக் கோட்பாடு  (Social – Solidarity Theory) விருப்பம்சார் சிந்தனைக் கோட்பாடு (Wish fuel Thinking Theory) (Intellectual Theory) என்ற வகைக்குள் அடக்கலாம்.

இவை மட்டுமன்றி சமயச்சிந்தனைகளின் ஆரம்பம், சமயத்தின் சமூகத் தொழிற்பாடுகள், சமயத்துக்கும் பண்பாட்டுக்குமான தொடர்பு, மனித மனதைக் கட்டமைப்பதில் மதத்தின் பங்கு என்பன பற்றியும் மானிடவியலாளர்கள் விரிவாக ஆய்வு செய்துள்ளனர். எனவே சமயச்சார்பின்மையாதல் பற்றிய கலந்துரையாடல் மேலோங்கி வரும் சமகாலத்தில் விஞ்ஞான பூர்வமான இக் கோட்பாடுகள் பற்றிய அறிதலும் அவசியமாகிறது.

திறவுச்சொற்கள்: (Key Words)

மானிடவியற்புலம், படிமலர்ச்சியல் வாதம், சமயவாழ்வு, சமயச்சார்பின்மையாதல்

1.            அறிமுகம்

1.1          ஒரு சுருக்க வரலாறு

அடிப்படையில் நாம் சமயம் தொடர்பான மானிடவியற் கோட்பாடுகளை மூன்று வகையாகப் பகுத்து நோக்கலாம்.

. சமூக உறுதிப்பாட்டுக் கோட்பாடு (Social – Solidarity Theory)

.விருப்பம்சார் சிந்தனைக் கோட்பாடு  (Wish fuel Thinking Theory)

. புலமைத்துவம்சார் அல்லது அறிதிறன் கோட்பாடு (Intellectual Theory)

இவற்றின் மத்தியில் முதலாவது கோட்பாடு , சமூக கட்டமைப்பயே பிரதானமாகவே வரித்துக் கொள்கிறது. அத்துடன் சமயத்தின் ஊடாக சமூகத்தின் அமைதியும், ஒருங்கிசைவும் பேணப்படுதல் அவசியம் எனவும் வலியுறுத்துகிறது. இதேவேளை இரண்டாவது கோட்பாட்டைப் பொறுத்தவரை அது தனிமனித வாழ்வியலின் உணர்ச்சிகளுக்கே முதன்மை அளிக்கிறது. அச்சம், தனிமை முதலான தனிமனித உணர்ச்சிகளை மடைமாற்றம் செய்து பதிலாக தன்னம்பிக்கை, அச்சமின்மை, நன்நோக்கு என்பவற்றை விருத்தி செய்ய வேண்டும் என்று இது விரும்புகிறது.

இறுதியாக, புலமைத்துவம் சார் கோட்பாடுகள் சமூக மனிதர்கள் வெறும் புனைவுகள், நம்பிக்கைகளைத் தாண்டி, உலகத்தை உலக நடப்புக்களைப் புரிந்து கொள்ளல் அவசியம் என்றே எதிர்பார்கிறது. அதாவது , உலகம் பற்றிய உண்மையான , அறிவு பூர்வமான சமய வியாக்கியானங்களை இது முதன்மை படுத்துகிறது.

இனி ஒவ்வொரு கோட்பாட்டையும் சற்று விரிவாக விபரணப் பார்வையில் நோக்கலாம்.

1.2          சமூகக் கட்டொருமைப்பாட்டுக் கோட்பாடு

 

இக்கோட்பாடானது மானிடவியற் புலத்திலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈற்றிலே தொடங்கியது. இதன் வடிவம் செயற்பாட்டுவாதமாக அமைந்ததனால் இக் கோட்பாட்டின் சார்பு நிலைகள் ஊடாக சமூகத்தோடு இணைந்து விளக்க முற்பட்டது. இன்னும் தெளிவாகக் கூறுவதாயின் விசேட ஆடைகள் ஊடான வெளிப்பாடுகள், சமயப் பின்புலத்தைச் சித்திரிக்கும் கட்டிடக்கலை, பாடல்கள், நடனம், மந்திரம், துதிகள் இவை போன்ற குறியீடுகளை இக் கோட்பாடு சுட்டிக்காட்டி விளக்க முற்பட்து. இக்கோட்பாடானது, பிரெஞ்சு சமூகவியலாளரும் சமயத்தின் மூலவேர்களை ஆய்வு செய்தவருமான எமைல் டேர்க்கீமிற்கே அதிகம் கடன்பட்டுள்ளது. அவரே சமயத்தினூடாக சமூகம் எவ்வாறு ஒருங்கிசைவு பெற்றுத் திகழ்கிறது என்னும் கோட்பாட்டை முதலில் முன்வைத்தார். சமய நம்பிக்கைகளும், அனு~;டானங்களும், பெருமளவுக்குபுனிதம்”,”மாசுஆகிய எண்ணக்கருக்களுடன் தொடர்பு படுவதை எடுத்துக் காட்டினார்.

அத்துடன் அவுஸ்ரேலியப் பழங்குடி மக்களுடன் உடனுறைந்து , தகவல்களைத்திரட்டி, குலக்குறி என்னும் புதிய சமய சின்னத்தையும் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு குலக்குறி காணப்பட்டது. அது அந்த மக்கள் குழுமத்தைக் கட்டுப்படுத்தியது, ஒழுங்கமைத்து, ஒற்றுமையுணர்வு ஊட்டியது. அனைத்துக்கும் மேலாக சமூக ஸ்திரப்பாட்டைப் பாதுகாக்கும் வண்ணம் அந்த மக்களை அற வாழ்வு வாழத் தூண்டியது.

எமில் துர்க்கைம் (Emile Durkheim)

சமய வாழ்வு தொடர்பான ஆய்வுச்சிந்தனைகள் பற்றிக் கலந்துரையாடும் போது, எமில் டேர்க்கிமின் சிந்தனை முன்வைப்புகளை நாம் தவிரத்து விட இயலாது.

அவரது சிந்தனைகள்சமயவாழ்வின் ஆரம்ப வடிவங்கள் (The Elementary forms of the religions life”)  என்ற புத்தகத்திலே நிறைவாகக் காணலாம்.

அவர் சமூகத்தை விடவும் மிகவும் மேம்பட்ட ஸ்தானத்தை சமயத்துக்கு வழங்குகிறார். அவர் மக்களின் சமூகக் கட்டமைப்பினுள் மேற்கொண்ட ஆய்வாக அமைகிறது. தனது களப்பணிமூலம், அவர் சமய வாழ்வு தொடர்பான மிக ஆழமான கருத்துக்களை முன்வைக்கிறார்.

சமயம் என்பது மக்களை பொறுத்தவரையில், இயற்கைக்கு மீறிய சக்திகளோடு மிக நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் இடமும் காலமும் புனிதமாகக் பகிர்ந்து கொள்ளப்படும் வாய்ப்பினை சமய வழிபாடு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

சமய வாழ்க்கையில் புனிதம், மாசு என்னும் பகுப்பு முக்கியமானது. சுதாரண விடயங்கள் கூட சமயத்தோடு தொடர்புபடும் போதில், புனிதத்தன்மையைப் பெற்று விடுகின்றன.

டேர்க்கீம் தனிநபர்களின் நெருக்கடிகளுக்கான ஒரு பதிலாக சமயத்தைக் கருதவில்லை, மாறாக சமூகக் கட்டமைப்பின் கண்கூடான பண்புருவத்தின் உச்சமான இலட்சியமாகக் கருதுகிறார்.சமயம் ஆனது ஓர் ஒத்திசைவான சமூக சக்தியைக் கொண்டது. சமய உண்மை, தத்துவம் என்பது அரூபமானது, அவற்றை புறவயமாக்கிப் பார்க்க இயலாது. மாறாக , அவை உண்மைத்தன்மை கொண்டது. என்பதுடன் அவை மக்களின் மனங்களிலே தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.  சமூக உறுதிப்பாடு, சமூக கட்டுப்பாடு, சமூக ஒருங்கிசைவு என்பவற்றுக்கும் சமய வாழ்வே ஊற்றாக உள்ளது என்கிறார்.

இந்தவகையில் சமயம் பற்றிய டேர்க்கிமின் ஆழமான ஆய்வு, இன்று வரையிலும் ஆய்வறிவாளர் மத்தியில் கணிப்புக்குரிய ஒன்றாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.

இவ்வாறு, சமூக உறுதிக் கோட்பாடானது மானிடவியலில் பலம் பெற்று திகழ்ந்தாலும் சில பிரச்சனைகளும் அதிலே இனங்காணப்படுகின்றன.

 

1.            டேர்க்கீம் முன்வைத்த புனிதம் - மாசு என்ற கருத்தியல் சார் வேறுபாடு உண்மையில் தமது களப்பணி முயற்சிகளில் கண்டறியப் படவில்லை என்கின்றனர் இனக்குழு வரைபாளர்கள்.

2.            சமயமானது, சமூகக் குழுக்களை ஒன்றுபடுத்தும் சாதனமாக இக்கோட்பாடு கூறிக்கொண்டாலும், யதார்த்தத்தின் , இனக்குழுக்கள், குடும்பங்கள், கிராமங்கள், அரசுகள் கூட இன்னும் சமயத்தின் பேரால் பிளவுண்டு கிடக்கின்றன என்ற யதார்தத்தை கவனிக்க அவர் தவறிவிட்டார்.

எவ்வாறாயினும,; மானிடவியல் , சமயவாழ்வுக்கான ஒரு கோட்பாட்டு மயமாக்கலை இது வழங்கியுள்ளது என்பதனை மறுப்பற்கில்லை.

1.3          விருப்பம்சார் சிந்தனைக் கோட்பாடு:

இக்கோட்பாட்டை முன்வைத்தவர்களைப் பொறுத்தவரை,“சமயம் என்பது மனிதர்களின் ஆழமான விசாரம், தீராத விரக்தி நிலை என்பற்றுக்கு ஓரளவு நோய்த்தடுப்பு முறையாகப் பணிபுரியும் திருப்தியான கருவியாகக் கருதப்படுகிறது.

கடவுளைப் பிரார்த்தித்து எமக்கான நல்வாழ்வை அளித்து இவ்வுலகு பற்றிய இருப்புக்கான விஞ்ஞானபூர்வமான உண்மையை நிறுவுவதும் சமயமே அல்லது எமது வாழ்வியலின் கவலைக்கு நிவாரணம் ஈட்டித் தந்து அதன் வழி நல்வாழ்வைக் கொணர்வதும் சமயம் என்றும் கூறிக்கொள்ளலாம்.

இக்கோட்பாடுகளுக்கும் ஒரு பழமைத்தன்மை வாய்ந்த கால்வழியுண்டு. சில எழுத்தாளர்கள் எம்மை ஐயப்பாடான விசாரத்தினுள் தள்ளி விடும் வகையான அவதானங்களை முன்வைத்து குறிப்பிடத்தக்கமன அழுத்தத்துக்கு வழி வகுத்துள்ளனர். முதலாம் நூற்றாண்டிலேயே இத்தகைய பேரிடர்கள் இடம் பெற்றுள்ளன. இது பற்றிய Hume(1957), Feuerbach(1873), Marks and Engles(1848) Malirowski (1925). ஆகியோரின்எழுத்துகள்குறிப்பிடத்தக்கன.

 

இக்கோட்பாட்டுக்கு பங்களிப்பு நல்கிய தொல்சீர் மானிடவியலாளர்களில் மலிவோஸ்கி (Malinowski 1884-1942) மிகுந்த முக்கியமானவர். அவர்தான், இத்துறையில் முதன் முதலாக களப்பணி மூலம் தகவல் சேகரித்து நேரடி அவதானம் மூலம் பரிசோதனையியல் சார் கோட்பாடுகளைக் கட்டியெழுப்பினார்.

அவரதுமந்திரம், விஞ்ஞானம,; மற்றும் மதம்” (1931) என்னும் நூல் இன்னும் பரவலாக வாசிக்கப்படுகிறது. மதம் பற்றிய அவரது கருதுகோளை அவரது வார்த்தைகளிலேயே எடுத்துரைப்பது சிறப்பாக அமையும்.

“Religion is not born out of speculation or reflection, still less out of illusion or misapprehension, but rather out of the real tragedies of human life, out of the conflict between human plans and realities.”

(B.Malinowski,1922)

இந்த விளக்கத்தின் மூலம் நாம் தற்போதைய நிலையிலும் புராதன சமயத்தின்(Primitive Religion)கட்டமைப்பினைப் புரிந்து கொள்ள முடியும். ஒப்பீட்டளவில் டைலர், வாழ்ந்து மடிந்து இவை இரண்டுக்குமிடையிலான வித்தியாசம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பதில் காண்பதன் ஊடாகபுராதன மனிதனை ஒரு வகையான பகுத்தறிவு மிக்க தத்துவஞானியாக (Rational Philosophy) கண்டறிந்தார். இதேவேளை பிறேஸர் சமயத்தை விட மந்திரம் பற்றிய பார்வையில் ஈடுபட்டு அதனை ஒரு வகையான போலி விஞ்ஞானமாக  (False Science)  இனங்கண்டார். இதே சந்தர்ப்பத்தில் Levy-Bruch என்னும் அறிஞர் புராதன சமயச் சிந்தனைகளின் புதிர்த்தன்மையான குணாம்சம், தர்க்கவாதத்துக்கு முந்திய நிலை இவற்றை மையப்படுத்திய மிக அற்புதமான ஊகங்களை முன்வைத்தார்.

எவ்வாறாயினும், இவர்களை விட திறந்த வெளியிலே மானிடவியல் துறையிலே முதல் நிலையான களப்பணி அனுபவங்களின் ஊடாக மிக விரிவான அறிதல்களை நோக்கி வாசகர்களை அழைக்க அவரால்தான் முடிந்தது. இதற்கு அப்பால் - உளவியல் தளம் சார்ந்ததாக கட்டமைக்கப்பட்டிருந்தது. எனினும் இக் கோட்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்தவராக சிக்கன் புரூட் காணப்படுகிறார்.இவர்களை பொறுத்வரையில் மனிதனின் சமய நம்பிக்கைகள் அவனது மனப்பிரமையில் இருந்தும் தோற்றம் பெறுகின்றன. மனிதன் பிறந்ததில் இருந்து அவனது துணையற்ற நிலைக்கு சமயம் ஓர் ஆற்றுப்படுத்தலாக அமைகிறது. மனிதனின் மிகப் பழமையான மிக உந்தல் தன்மை வாய்ந்த மாயைகள் இவற்றுக்கும் சமயமே தீர்வாக அமைகிறது என்கிறார்.(1964:25-47) புரூடைப் பொறுத்தவரை இக் குறிப்பிட்ட அம்சங்களை புறத்தே எறியும் உத்தி என்கிறார். இதுவும் இக் கோட்பாட்டாளர்களின் சிந்தனையும் மாறுபட்டனவாகவே உள்ளன. ஏனெனில், சமயம் பற்றிய பல கருதுகோள்கள் பலரும் விரும்பாத வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவை அச்சமூட்டும் பூதம், பிசாசு, ஆவிகளின் எஞ்சிய அம்சங்களைப் பூரணப் படுத்துவனவாக உள்ளன. இதனையே மானிடவியலாளரான பிரவுண் குறிப்பிட்டார்.“ஒருவரால் ஆழமாகச் சிந்திக்குமிடத்து சமயங்கள் அச்சம், கவலையிலிருந்தும் மக்களை விடுவிப்பதாககக் கூறிக் கொண்டாலும் சில வேளை அதே உணர்வுகளைக் கொண்டே துன்புறுத்துகின்றனஇது வித்தியாசமானதும் , சிந்திக்கத்தக்க கருதுகோளாக உள்ளது.

1.4          புலமைத்துவக் கோட்பாடுகள்:

இக்கோட்பாடுகள் நவ-டைலரியம் (NEO – Tylorism)  எனவும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் மானிடவியல் புலத்தில் அதிலும் அது முறையியலுடன் கூடிய கற்கைப்புலமாக ஆக்கப்பட்ட பின்பு சர்வகலாசாலைப் பேராசிரியராக அமர்ந்து கொண்டு புராதன சமய சம்பிக்கைகளின் தோற்றப்பாட்டை விரிவாக ஆய்வு செய்தவர் டைலரே எனினும் பின்வந்த கால கட்டத்தில் டைலர் மிகத்தீவிரமாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த புலமைத்துவக் கோட்பாடுகள், சமயம் என்பது பெருமளவுக்கு உலகம், உலகு தழுவிய செயற்பாடுகள் அதனைப் புரிந்து கொள்ளல் என்பவற்றுக்கே முன்னுரிமை அளித்தன. திருமணம், குடும்ப வடிவம், மனித குலநாகரிகம், உணவு நாகரிகம் முதலானவற்றை E.B டைலர் ஒரு வகையான தட்டையான ஒற்றைப் பரிமாணக் கோட்பாட்டுப் (Uni Lineal Ebolutional Theory). பார்வைக் கூடாகவே கண்டு கொண்டார். அதன்படியே விளக்க முற்பட்டார.; இதனால் அவரை அறியாமலும் தவிர்க்க இயலாமலும் பிரபஞ்ச நிலைப்பட்ட பரவல் வாதத்தின் சிறைக்குள் அடைக்கப்பட்டுக் கொண்டதான மதீப்பீட்டுக்கு ஆளாகினார்.

ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும், வேட்டையாடல் மற்றும்  சேகரிப்பு யுகத்தில் அல்லது அதற்கு முந்திய வரலாற்றுக்கு முற்பட்ட யுகத்தில் ஓரளவு சார்ள்ஸ் டார்வின் (Darwin); கருத்துரைப்பதற்கு இணங்கமொழி, அறிவு, நுட்பம் அல்லது பகுத்தாயும் அறிவு, புலனறிவியல் என்பன விருத்தி பெற முன்பானஅரைப்பாக மனிதக் கணங்களிடையேஎவ்விதமாக டைலர் எடுத்துரைப்பதை அனுமானிப்பது போன்ற சமய நம்பிக்கை சடங்கியல் தழுவிய படிமலர்ச்சியில் கட்டங்கள் உலகமெல்லாமே ஒரே படித்தான கோலங்களில் அல்லது முறைமைகளில் கட்டமைக்கப்பட்டிருக்கும் என்பதாக புலமைத்துவம் சார் கோட்பாட்டாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.இதுவும் பிரச்சினைக்குரிய கேள்வியாகவே உள்ளது.

பண்பாட்டு - இடை ஆய்வுகளும் (Cross cultural Studies)  சமயத்தளம் தழுவிய மானிடவியலில் பயன்படுத்தும் நிலையில் டைலர் அனுமானிப்பது போல ஆவியுலகவாதம், பல்லிறைலாதம், ஏக இறைவாதம் என்றவாறு சமயம் , சயமநம்பிக்கை பரிணாம் உற்றிருக்குமோ என்பது தர்க்கத்துக்குரிய வினா. இன்று ஏக இறைவாத வழிபாட்டுக்குள் வந்து சேர்ந்திருக்கும் மதக்குழுவினர் வரலாற்றின் தொடக்க நிலையில் மிகச்சிறிய சிலைகளை மட்டுமன்றி அவற்றை விடத்தாழ்ந்த திரு~;டிகளான கல், மரம், மண்குவியல், மரக்கிளைகள்,விலங்குகளையும் வழிபாட்டமைக்கு சான்றுகளுண்டு குறை~pயர் காலத்திலே, ஏக குறைவாதம் பரிணாமம் அடைய முன்பு, உயிர்ப் பொருள் வழிபாட்டுவாதமும், சடப்பொருள் வழிபாட்டுவாதமும் நிலவியதாக அறியப்படுகிறது.

இதனைவிட எண்ணிலாத மனிதக் கற்பனைக் களஞ்சியங்களாக அமைந்த பண்டைய கிரேக்கிய மத வழிபாட்டு முறைகள் பற்றியும், அவற்றுக்கு பின்புலமாக அமைந்த தொன்மங்கள், தொல்மனிதனின் உளவியல், அதிபௌதீக நம்பிக்கை மரபுகள் அதீத பாலியல் உந்தல் பற்றியும் நவமானிடவியல் கோட்பாடுகள் வித்தியாசமான கருதுகோள்களை முன்வைக்கின்றன.

இதனைவிட, தொல்பழங்குடிகள் தொடக்கம் தற்காலம் வரையிலும் தொடரும்சடங்கியல் வன்மம்தொடர்பிலும் பல கருத்துக்களை மானிடவியற் கோட்பாடுகள் எடுத்துரைக்கின்றன. சமயச்சடங்குகள் அவற்றின் குறியீட்டுமுறை, நிகழ்த்து முறை என்பன சடங்கியல் மாற்றுதல் ஊடாக இயங்குவதாக மானிடவியலாளர்கள் கருதுவர். சடங்கியல் வன்மம் என்பது எழுந்தமானதான நிகழ்வு அல்ல. அவை சமய நம்பிக்கையின் அதிஉச்சமான கருத்தியல் வடிவத்தோடு இணைந்ததாகவே மாந்தரின் மனவெளியில் அரூபமாக வடிவம் பெற்று கொள்கின்றன. எனவே, அவை திட்டமிடப்பட்ட இலக்குடன் கூடியது என்று கூறலாம்.

மனிதகுல வரலாறு முழுமையும் சமயச்சடங்குகள் சமூகவியல் கோட்பாட்டை உறுதிப்படுத்தும் வலுவான உபகரணமாகச் செயற்பட்டு வந்துள்ளன. சடங்கியல் வன்மமானது புனிதம் மிக்கதான கருத்தியல் வழிபாட்டாளர்கள் காது குத்துதல்,தீச்சட்டி ஏந்துதல், உயிர்ப்பலியிடல், ஆணிச் செருப்பில் நடத்தல், மண்சோறுண்ணல் என்பன பிரத்தியட்சமான சடங்குசார் சடங்கு வன்மங்களாக திகழ்கின்றன. இதன் பின்னால் உணர்வு கடந்த உச்சகட்டப் பக்தியும், பூரண சரணாகதி நிலையும் புலப்படுகின்றன.

எமில் துர்க்கைம் இத்தகைய சடங்குகளில் நிகழும் வினையாற்றலைகூட்டாகப் பொங்கி எழுதல்என்கிறார். இத்தகைய சடங்குகள் மூலம் மக்களால் அதிக பட்ச ஒத்திசைவும், ஒருமைப்பாடும் பேணப்படுகிறது. அதேவேளை ஒருவகையில் உடல்மனோபலம் அதிகரிக்கிறது.

முடிவுரை

                சமயம் பற்றிய மானிடவியற் கோட்பாடுகள் அடிப்படையில் பன்மைத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. இத்தகைய பன்மைத்துவப் பண்பானது, சமூகக் கட்டமைப்புகள் , மனித சிந்தனைகள் , மனித உணர்ச்சிகள் அல்லது அவர்களின் அறிதிறனுக்கு ஏற்ப வேறுபடலாம்.

எவ்வாறாயினும்,மானிடவியலின் தொடக்க காலத்தில் இருந்து மிகக் கூர்மையான, தெளிவான கருத்துகோள்களோ தனித்த அம்சங்களோ, காண முடியாத நிலை உள்ளது.

சில கோட்பாடுகள் மானிடவியலுக்கே சொந்தமானவையாகத் தோற்றுகின்றன. ஆனால், பல கோட்பாடுகளோ வேறு துறைகளில் இருந்தும் இரவல் பெறப்பட்டனவாக உள்ளன. மனிதப்பண்பியல், படிமலர்ச்சியல் வாதம், பண்பாட்டிடை ஒப்பீட்டு ஆய்வு முதலான ஆரம்ப காலக்கோட்பாடுகளை இங்கே சுட்டிக்காட்டலாம். இவை சமய உணர்வுகளோடு தொடர்புபட்ட மனித சிந்தனையையும் , நடத்தையையும் ஆய்வு செய்கின்றன.

எவ்வாறாயினும், எமது கட்டுரையின் பகுப்பாய்வின் பிரகாரம், மூன்று மேலதிக கோட்பாடுகள் ஆழமான சிந்தனைகளை முன்வைக்கின்றன. அவை சமூகக்கட்டொருமை பாட்டுக் கோட்பாடுகள், விரும்பு நிலைச்சிந்தனைக்கோட்பாடுகள், மற்றும் புலமைத்துவக் கோட்பாடுகள் என்பனவாகும்.

இவற்றுள் முதலாவது கோட்பாடான சமூகக் கட்டொருமைக் கோட்பாடானது, சமயச் சிந்தனைகளின் அடித்தளமாக சமூகம் திகழ்வதை வலியுறுத்துகிறது. அத்துடன் சமயத்தின் மூலம் எவ்வகையிலும் சமூக ஒருமைப்பாடும் ஸ்தாபிக்கப்படுகின்றன என்பதனை நன்கு விளங்கப்படுத்துகின்றன.

இரண்டாவது கோட்பாடானது, சமயம் பற்றிய தனிமனித உணர்வுகளைப் பிரதான காரணியாக வகித்துக் கொண்டு அது பற்றிப்பகுப்பாய்வு செய்கிறது. அத்துடன், சமயத்தின் வாயிலாக எவ்வாறு தனிமனிதர்களின் எதிர்மறையான எண்ணப்பாடுகள் மடைமாற்றம் செய்யப்படுகின்றன என்பது பற்றி விளக்கம் தருகிறது. எடுத்துக்காட்டாக அச்சம், தனிமை முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

இறுதியாகப் புலமைத்துவக்கோட்பாடுகள் ஆனவை, மனிதர்கள் தாம் வாழும் உலகம், அதன் இயக்கம் பற்றிக் கிரகித்துக் கொள்வதற்கு எந்தவகையில் சமயம் உதவுகிறது என்கிற பார்வைப் புலத்தை எடுத்துக் கொள்கிறது.

எனவே, மனிதனைப்பற்றிய விஞ்ஞானமாக மானிடவியல், விளங்கும் நிலையில், சமூக நிறுவனங்களில் தவிர்க்க முடியாத சமய நடத்தை, சமய நம்பிக்கைகள், சமய விழுமியங்கள்; சடங்குகள் பற்றி நாம் அடிப்படையான ஒரு புரிதலைப் பெற்றுக் கொள்வதற்கு மேலே பகுப்பாய்வு செய்த கோட்பாடுகள் ஓரளவு துணை புரிகின்றன.

எவ்வாறாயினும், எண்ணங்களின் வடிவமாக சுருக்கமாக உள்ள நிலையில் அவற்றின் விளக்கப்பாடுகளிலும், வியாக்கியானங்களிலும் சில மட்டுப்பாடுகள் காணப்படுதல் இயல்பே ஆகும்.

இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோற்றம் பெற்று மேற்கிளம்பிய வியாக்கியானிப்புவாத மானிடவியல், (Interpritative Anthropology, Maxist Anthropology, Psychological Anthropology, Feminist Anthropology, Post- Modern Anthropology) மார்க்சீய மானிடவியல், உளவியல் சார் மானிடவியல், பெண்ணிய மானிடவியல், பின்நவீனத்துவ மானடவியல் முதலான நவீன கற்கைப் புலன்களின் சமயம் தொடர்பான வாத விவாதங்கள் இன்னும் ஆழமானவையாக உள்ளன. அவற்றை தனித்து நோக்க வேண்டிய அவசியமுண்டு.

இறுதியாக, இன்றைய நவீன உலகில், கருவிகளால் ஆளப்படும், செயற்கை நுண்ணறிவு மேலோங்கிய உலகில் சமயச்சார்பின்மையாதல் (Secularization)  பற்றிய பரவலான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும். சமூக நிலைமையின் மத்தியிலும் கூட சமய நம்பிக்கையும், சமயவாழ்வியலும், சடங்கியலும் தவிர்க்க இயலாத தோற்றப்பாடுகளாக, சமுதாயத் தேவைகளாக அமைவுற்றிருப்பதனை இத்தகைய மானிடவியற் கோட்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன என்று கூறிக் கொள்ளலாம்.

உசாத்துணை - தமிழ்நூல்கள்

1.பரமசிவன், தொ.2001 பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

2.பாரதி, பக்தவத்சல 1999(1990) பண்பாட்டு மானிடவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

3.பாரதி, பக்தவத்சல,2002 தமிழர் மானிடவியல், பதுவை மொழியியல், பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி.

4.பாரதி, பக்தவத்சல பாரதி.2020 பண்டைத்தமிழ்ப் பண்பாடு, மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம், யுத்த நந்தம் அடையாளம் பதிப்பகம்.

5.சசிதரன்..2020 “சமூகவியல் மானிடவியல் நோக்கில் சமயம்”“கிழக்கொளி கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர் சங்க வெளியீடு,வந்தாறுமூலை.

6.சசிதரன்,.2023 மார்ச்,“தெய்வமாடற் சடங்கு பற்றிய முன்னைய ஆய்வுகள், ஒரு மானிடவியற் பார்வை,“இலக்கியச்சுடர்பன்னாட்டுத் தொல்லியல் கலை, இலக்கியப் பண்பாட்டுத் தொல்லியல் கலை, இலக்கியப் பண்பாட்டு இணைய இதழ், வேலூர் தமிழ்நாடு.

ஆங்கில நூல்கள்:

1.Alcorta, C.S,. and Richard Sosis 2013 Ritual, Religious, and Violence: An
evolutionary perspective, Oxford online publication.


2.Evans-Pritchard, E.E.1968. Theories of Primitive religion.

3. Atran, Scott. 2002. In Gods We Trust,New  york: Oxford University press.

Barrett, Justin. 2000. ExploringNatural Foundations of Religion" Trends in Cognitive Sciences

 

4.Freud. Sigmund, 1964.(1927). The Feature of an Illution. Garden City, Colo: Westview Press.

 

5.Durheime, Emile. 1912. The Elementory Fomes of the Religios Life.


5.Hume, David. 1954. The Natural Historyof religions. Standford, Calif Standford University press

6. La Barre, Weston, 1972. The GhostDance: Origins of Religion. New York:Dell

7. Malinowski,B. - 1958 [1925)Magic, Science., Religion. Garden City,N,y: Doubleday.

8. Marks, Karl, and F, Engels. 1957. on Religion. Moscow progress

9.Rappaport, Roy. 1999. Ritual andReligion in Re Making of Humanity,Cambridge: Cambridge University press.

10. Saler, Benson. 2000 [1993]. Conceptualizing Religion. Leiden: Brill.

11. Tylor. E.B. 1979 [1871). "Animism",In William Lessa and Evon Vogt (eds.)
Reader in Comparative Religion. New York.Harper and Row, pp. 9-19.

12. Wallace, Anthony. E.C. 1966. Religion;An Anthropological View. New York;
Random,