6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் - முனைவர் பீ. பெரியசாமி

 காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 

முனைவர் பீ. பெரியசாமி

இக்கோயில் பாலாற்றின் வடகரையில் காங்கேயநல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. பல்லவர்காலத்திய மூலவர் சிலை அமைந்துள்ளது. விஜயநகர ஆட்சி காலத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயிலில் ஐந்து நிலை இராஜகோபுரம் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மன்பாக மரத்தேர் வழங்கியதோடு 16கால் மண்டபத்தையும் திரு. ஏகாம்பர முதலியார் இக்கோயிலுக்கு திருப்பணியாக செய்துள்ளார். மேலும், திரு. மாணிக்க முதலியார் அவர்கள் பள்ளியறை, மடப்பள்ளி, சண்முகர் திருவுருவச்சிலை ஆகியவற்றை செய்தருளி திருப்பணியாற்றியுள்ளார். இக்கோயிலில் உள்ள மூலவர் செய்த காலமும் திருத்தணி பதியில் அமைந்துள்ள மூலவர் செய்த காலமும் ஒன்றே ஆகும். இத்தலம் நாரதர் வழிப்பட திருத்தலம்.

1929 ஆம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாஸ் பாகவதர் முன்வந்தார். 23.10.1929 அன்று மாலை 4 மணியளவில் இராஜகோபுர ஐந்தாம் நிலைப்பணியாற்றி வந்தவர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு அவரின் மற்றொரு மகனாரிய ஸ்ரீசைலவாசன் சென்றார். எதிர்பாராதவாறு அவர் அங்கிருந்து விழுந்து நினைவின்றி கிடந்தார். அப்போது மல்லையதாஸ் தன் மகனை முருகா என்றழைத்தவாறே கருவறைக்கு தூக்கிச் சென்றார். தன் குரு உபதேசித்த சடக்கர மந்திரத்தை ஓதினார். கூடியிருந்த பொதுமக்களும் சுப்பிரமணியரிடம் வேண்டினர். சிறிது நேரததில் குழந்தை பிழைத்துக் கொண்டது. சுப்பிரமணியரின் அருள் கண்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

இக்கோயிலின் வாயிலின் வலதுபுற கட்டிடத்தில் நந்தி, அன்னம், சிவலிங்கம், இரண்டு யானை. சர்பம் மனிதனை விழுங்குவது போன்ற காட்சி, மீன் உருவம் ஆகியன செதுக்கப்பட்டுள்ளன. இடது புறத்தில் சிவலிங்கம், மீன், ஐந்துதலை நாகத்தினுள் சிவலிங்கம், இரண்டு யானைகள் உள்ளிட்டவைகள் உள்ளன.

உள்ளே சென்றால் நேராக கொடிமரமும், சூரியன் சிலை வலப்புறமும் உள்ளனர். கொடி மரத்த்திற்கு அருகில் பலிபீடமும் அதனருகில் மயில்வாகனமும் உள்ளன. முலவர் சந்நிதானத்தின் முன்பாக வலப்புறம் விநாயகரும் இடப்புறம் தண்டாயுதபாணியும் வரவேற்கின்றனர்.  அடுத்து நாம் மூலவரை வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் திருக்கோலத்தில் தரிசனம் முடித்துவிட்டு வலம்வருமு்போது,  கருவறை அடுத்த உட்பிரகாரத்தில் முதலில் விநாயகரும் அவரைத் தொடர்ந்து விசாலாட்சி தாயார் சமுத விசுவநாதரை நாம் தரிசிக்கின்றோம். அவரைத் தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். அடுத்ததாக அருணகிரிநாதர் அருளாசி வழங்குகிறார். அடுத்த பிரகாரத்தில் முதலாவதாக திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் மண்டபத்தில் முருகர். வள்ளி, தெய்வானை, பாம்பன் சுவாமிகள், அம்பாள், சிவன், விநாயகர் ஆகியோர் உற்சவ திருஉருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து கட்டிடத்தில் சுவங்ஙின் மேற்பரப்பில் காணும்போது கந்தபுராணம் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் நாயன்மார்கள் சிலைகளும் அவற்றைத் தொடர்ந்து சண்முகர், பாம்பன் சுவாமிகள், சரஸ்வதி, லட்சுமி, விநாயகர், வீரபத்திரர், நாகலிங்கம், பைரவர், சந்திரர் ஆகியோர் அருளாசி வழங்குகின்றனர்.

 கோயிலிலிருந்து வெளியில் வந்தவுடன் எதிரில், திருமுருக கிருபானந்தவாரியாரின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. அதில் உள்ளே நுழைந்ததும் ஆறுமுகன் காட்சியளிக்கின்றார். வலதுபுறம் திருமுருக கிருபானந்தவாரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே சமாதியின் முன்பு வெண்கல  jிருவுருவச் சிலையும், சமாதியின்மீது ஸ்வஸ்திக், சிவலிங்கம், சட்கோணம் ஆகியவை உள்ளன. அதன் பின்புறம் திருமுருக கிருபானந்தவாரியாரின் அமர்ந்த கோலத்திலான கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. வலம் வந்து நிறைவு செய்யுமிடத்தில் சரவண பொய்கையில் திருமுருகப் பெருமான் கார்த்திகை பெண்களுடன் காட்சியளிக்கின்றார்.

நினைவு மண்டபத்தின் பின்பகுதியில் குருபலம் உணவுக்கூடம் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கலையரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்தில் மாசி விசாகத்தன்று லட்சதீப திருவிழா, கந்தசஷ்டி விழா, வள்ளி திருமணம், தெய்வானை திருமணம், ஆடி மாதம் பரணி, கிருத்திகை காவடி, தை கிருத்திகை, தைப்பூசம் காவடி போன்ற விழாக்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.


கருத்துகள் இல்லை: